தன் நெஞ்சிலுள்ள காதலெல்லாம் வார்த்தையால் சொல்லாமல் அவளுக்காய் புரிந்திராதா என்று ஏங்கினான் அவன். கோர்வையாகப் பேச வராது அவனுக்கு. எனவே தன் நிலையைத் தெளிவாக அவளிடம் விளக்க முடியவில்லை; வார்த்தைகள் சரியாக வரவில்லை. இத்தனை நாளும் ஏதேதோ திட்டமிட்டு, இன்று சொல்லப்போன நேரத்தில் இப்படி ஆகிடவும் துவண்டிருந்தான்.
வார்த்தையின்றித் தன் காதலை உணர்த்த முடிவெடுத்து, அதற்காகவே அருகில் நெருங்கி வந்திருந்தான் அவன்.
ஆனால் வானதியின் மனநிலையில் அது அவ்வளவு நல்ல முடிவாக இல்லை. பொதுவாகவே அவளுக்கு, ஈட்டியால் குத்துவதுபோல் இதயத்தைக் காயப்படுத்திவிட்டுப் பின் முத்தமிட்டு அதை மூடி மறைக்கும் முட்டாள் ஆணாதிக்க வழக்கங்கள் பிடிப்பதில்லை. அதிலும் அவன் அலைவரிசை போல ஏற்றியும் இறக்கியும் விளையாடிட அவள் மனமொன்றும் மென்பொறி அல்லவே..
எனவே உச்சகட்ட வெறுப்பில் இருந்தாள் அவள். அவனது நெருக்கம் அவளை இன்னும் வாட்ட, கண்ணீர் துளிர்த்துக் கொதித்தது விழிகளில். அவனது முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் திரும்பிகொண்டு, “இப்ப விடலைன்னா, நான் கத்திடுவேன்… மாமாகிட்ட சொல்லிடுவேன்” என மிரட்டினாள்.
“கூப்புடேன் உங்க மாமாவை.. நானும் நியாயத்தைக் கேக்கறேன்! என் பொண்டாட்டியை நான் தொட்டா என்ன குத்தம்னு?”
அவள் ஏளனமாகச் சிரித்தாள்.
“பொண்டாட்டியா? நடந்ததை ஒரு கல்யாணமாவே நீ மதிக்கல. என்னை ஒரு மனுஷியாவே மதிக்கல. இத்தனைநாள் இல்லாம, இப்ப மட்டும் உறவு கொண்டாட வந்துட்டியோ?”
“ம்ம்.. ஆமா.. உறவுதான்.. கொண்டாடத்தான்..”
பேசிகொண்டே ஒரு கையால் அவள் கன்னங்களை அழுத்தி உதடுகளைக் குவித்தான். அவன் செய்கை புரிந்தும் புரியாத வானதியோ கோபத்துக்கும் அழுகைக்கும் இடையே தத்தளித்தாள்.
ஒரு உத்வேகத்துடன் முகத்துக்கு நேரே அவன் நெருங்க, வானதிக்கு மூச்சு இருமடங்காகியது. அவளது பதற்றத்தை ரசனையாக அனுபவித்தபடியே முத்தமிட வந்தான் திவாகர்.
பளார்!
அவளது வலது கையின் ரேகைகள் அவன் கன்னத்தில் பதிந்திருந்தன. அதிர்ச்சியால் இரண்டடி பின்னால் நகர்ந்தான் அவன்.
தன்னை விடுவித்துக் கொண்டவளின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது.
யாரை உள்ளுக்குள் வைத்து அணு அணுவாய்க் காதலித்துக் கொண்டிருந்தாளோ, அவனையே இன்று அடித்தாகிவிட்டது. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அவள் காதலுக்கு இன்றோடு முடிந்து போய்விட்டது.
மன்னிப்பு ஏதேனும் கேட்டுவிட உதடு துடித்தாலும், இதற்கு மேல் அவனிடம் பேசிட எதுவுமில்லை என்றாகிட, வேகமாக அறையிலிருந்து வெளியேறினாள் அவள்.
திவாகருக்கு அதிர்ச்சியும் வேதனையும் சமமாக இருந்தது. அவள் அடித்ததைவிட, தன் பக்க நியாயத்தைக் கேட்கக் கூட அவள் விரும்பாததுதான் வலித்தது. கன்னத்தை வருடியபடி பால்கனியின் பிரம்பு நாற்காலியில் தஞ்சமடைந்து தன் வாழ்க்கையை எண்ணி வருந்திப்போனான் அவன்.
_______________________________
இரவில் கூடத்து நாற்காலியில் புத்தகத்துடன் அமர்ந்தே தூங்கியெழுந்தவள், மறுநாள் காலையில் அவன் எழும் முன்பே எழுந்து தயாராகிக் கிளம்பிவிட்டாள். திவாகர் எழுந்தபோது, அறைக்குள் அவள் இருக்கும் அறிகுறியே தெரியாமல் இருக்க, வேகமாக எழுந்து அவளைத் தேடிக்கொண்டு வெளியே வந்தான்.
“என்ன தம்பி… வானதி சொன்னா, இன்னிக்கு ஏதோ வெள்ளனவே போகணுமாமே… நீ லேட்டா எழுந்திருக்க? வானதி தனியே கிளம்பிப் போயிட்டாப்பா..”
மீனாட்சி அவனுக்கு விபரம் கூறியபடியே காலை உணவு எடுத்து வைக்க, சாப்பிடப் பிடிக்காமல் மீண்டும் அறைக்குள் வந்து படுத்துக்கொண்டான் அவன். கைபேசியில் ரூபாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, அதையும் திறக்கப் பிடிக்காது அணைத்துவைத்தான்.
வானதியும் அவனைவிட மோசமான நிலையில் இருந்தாள். மனமே செல்லவில்லை கேள்வித்தாளில். கண்களை யோசிக்க மூடினாலே, கண் முன்னால் அடிவாங்கி அதிர்ந்து நின்ற திவாகரின் முகமே நிழலாடியது. அவனை நினைத்ததும் கண்ணீரும் பெருகியது. கண்களை மூடித் திறந்து கண்ணீரைக் காயவிட்டு, கவனத்தைக் குவித்து, எவ்வளவோ முயன்று அவன் முகத்தை அகற்றி, இறுதியில் தன் குடும்பத்தை நினைத்துக்கொண்டு பரீட்சையில் கவனமானாள் அவள். ஒருவாறாக அப்பாவின், அண்ணனின் நினைவுடனே பரீட்சையை எழுதி முடித்தாள். தானிருக்கும் நிலையில் இதுவரை எழுத முடிந்ததே பெரிதெனத் தோன்றிட, தொங்கிய முகத்துடன் தேர்வறையிலிருந்து வெளியேறினாள்.
இரண்டுமணி அளவில் சோர்வாகத் தேர்வு மையத்திலிருந்து வெளியே நடந்துவந்தவள், இம்முறை வாசலருகே நின்றிருந்தவனைக் கண்டு திகைத்தாள். முகத்தில் இறுக்கத்துடன் கார் மீது சாய்ந்து நின்றிருந்தான் அவன். அவன்தான் ஓட்டி வந்தான் என்பதற்கு அடையாளமாய் விரலில் சாவியின் வளையம் மாட்டியிருந்தது. வானதியைப் பார்த்தவன் எதுவும் கூறாமல் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.
அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல முற்பட, அவள் வழியில் தடையாகக் காரின் கதவைத் திறந்து மறித்தான். அவள் விக்கித்து நிற்க, கண்ணலேயே காரில் ஏறும்படி சைகை காட்டிவிட்டு, ஓட்டுனர் சீட்டில் ஏறியமர்ந்தான் அவன். நடுசாலையில் சண்டையிடத் தோன்றாமல், அவனுடன் காரில் அமர்ந்தவள், ஜன்னல்புறமே பார்வையைப் பதித்தாள்.
வானதிக்குத் தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. அவனருகில் இருப்பதே அவள் மனதை இம்சிக்க, கண்ணீர் எட்டிப்பார்த்தது விழிகளில்.
அவள் கண்கள் கரிப்பதை கடைக்கண்ணால் பார்த்தான் திவாகர்.
“என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல. நேராப் பாத்து வண்டியை ஓட்டு.”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்டா தான் என்ன?”
“Not if choose not to. So shut up.”
அவள் இப்படிக் கோபப்படும் அளவிற்கு நாம் என்ன செய்தோமெனப் புரியாத திவாகர் எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.
அடிக்கடி வலப்பக்கத்துக்கு வந்து வந்து மீண்டும் இடதுபக்கத்துக்கு வண்டியைச் செலுத்தும் அவனை சலிப்புடன் பார்த்தாள் அவள்.
“Keep left. It’s India”
“I know.”
“Then freakin’ act like it!”
சடாரென ப்ரேக்கடித்து சாலையோரம் வண்டியை நிறுத்தினான் அவன்.
“என்னதான் உன் பிரச்சனை? ஏன் என்னை வாட்டி வதைக்கற? உன் வேலைக்காரன்னு நினைச்சியா என்னைய?”
காட்டுத்தனமாக அவன் கத்த, சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டுக் காரிலிருந்து கீழிறங்கினாள் அவள். காரைச் சுற்றிவந்து அவனது பக்கக் கதவைத் திறந்தவள், கண்ணாலேயே ‘இறங்கு’ என்க, அவனும் ஆத்திர மூச்சுக்களுடன் இறங்கினான்.
அவள் ஏதாவது சண்டையிடுவாள், கத்துவாள்.. நாமும் கத்திவிடலாம் என்ற எண்ணத்துடன் தயாராகிக்கொண்டான் அவன்.
அவளோ, அவன் இறங்கிய மறுநொடியே ஓட்டுனர் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பிக்கொண்டு தன் வழியில் விரைய, விக்கித்து நின்றான் திவாகர்.
நட்டாற்றில் தவிக்கவிட்டு அவள் சென்றுவிட, உச்சிவெய்யில் உச்சந்தலையைப் பதம்பார்க்க, தொண்டை உலர்ந்து தாகமெடுக்க, அனைத்தும் சேர்ந்து அவள் மேல் ஆத்திரமாய் இறங்கியது மனதினுள்.
எங்கே செல்வது, யாரிடம் கேட்பது என ஒன்றும் புரியவில்லை. கையில் கைபேசியோ, பணப்பையோ எதுவுமே இல்லை. அனைத்துமே காரின் டேஷ்போர்டில் குடியேறியிருந்தன.
சுற்றிலும் மனிதர்களும், கடைகளும், கட்டிடங்களும் இருந்தாலும், தன் சொந்த ஊரிலேயே இடம் தெரியாமல் தொலைந்து நிற்பது அவனுக்கே அவமானமாக இருந்தது.
தெய்வாதீனமாக, சிறிது நேரத்தில் அந்த வழியாக ஆய்வாளர் அழகேசனின் கார் வர, இவனை அடையாளம் கண்டுகொண்டவர் வண்டியை நிறுத்தினார்.
“என்ன சார்.. நடுரோட்டில நிக்கறீங்க? வேண்டுதலா?”
அவன் தலையை மட்டும் அஷ்டகோணத்தில் ஆட்டினான். கண்கள் சூரிய வெப்பத்தால் சிவந்து போய் இருந்தன. தொண்டை வறண்டதால் பேச்சும் வரவில்லை அவனுக்கு. அவனது நிலையைக் கண்டவர் கார் கதவைத் திறந்துவிட்டு, அவனை ஏற்றிக்கொண்டார்.
காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன், மடமடவென அதைக் குடித்து முடித்தான். மூச்சுக்களையும் வேகவேகமாக விட்டான். அழகேசனும் கரிசனமானார்.
“உங்க வீட்டுல இறக்கிவிட்டா போதுமா சார்?”
சரியெனத் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, கண்களை மூடி சீட்டில் சாய்ந்தான் அவன். ஐந்து நிமிடங்கள் மட்டுமே தனியாக நின்றிருந்தாலும், அதுவே அவனைப் பலமாக பாதித்திருக்க, வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும் ஆய்வாளரிடம் நன்றி சொல்லிவிட்டு இறங்கி விறுவிறுவென அம்மாவிடம் சென்றான் அவன்.
வியர்வையும், பெருமூச்சுமாய் இதுவரை பார்த்திரா வண்ணம் அவன் வீட்டுக்குள் வர, மீனாட்சி சில கணங்கள் திகைத்துப்போனார்.
“திவா…? என்னடா ஆச்சு? ஏன் தனியா வர்ற? வானி எங்கே?”
அப்போதும் தன்னைக் கவனிக்காமல் வானதியைக் கேட்கும் தாயின் மீது கோபம் அதிகரித்தது அவனுக்கு.
“யாரும்மா அந்தப் பிசாசு?? எதுக்காக என் தலைல அவளைக் கட்டினீங்க? எனக்கு ஏன் இந்த தண்டனை? நான் கேட்டனா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு?? கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத மனுசங்களுக்கு மத்தியில… நாடகம் மாதிரி கல்யாணம் நடத்தி.. மரியாதையோ அன்போ எதுவுமே இல்லாத மரப்பாச்சி பொம்மையாட்டம் ஒருத்தியை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து–“
அன்னை மீனாட்சி கண்ணீருடன் தூணைப் பிடித்துக்கொண்டு தரையில் சரிவதைக் கண்டு அவனது வாக்கியம் பாதியில் நின்றது.
“ம்மா? என்னம்மா ஆச்சு?”
“டேய் திவா… என்னைய, அப்பாவ, எவ்ளோ வேணா திட்டிக்க; தப்பாப் பேசிக்க… ஆனா அந்த மகராசியை ஒண்ணும் சொல்லிடாதப்பா. அவங்க குடும்பத்துக்கு நாம காலாகாலத்துக்கும் கடன்பட்டுருக்கோம்ப்பா..”
கண்ணீருடன் அந்தத் தலைமுறை மறந்த கதையை அவர் கூறத் தொடங்கினார்….
Interesting😍