அத்தியாயம்-3
வானதி..
அவள் வாழ்க்கையை வெறுத்திருந்தாள். துக்கமென்பது வாழ்க்கையில் ஒரு
படி என்பது புரிந்தவளுக்குக்கூட அது பேரிடியாய் இறங்கியிருந்தது.
காலை அவள் கிளம்பியபோது மனதில் இருந்த உற்சாகமும் மகிழ்வும்
அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.
இரண்டு மணி நேரமாய் ரயில்நிலையத்தில் காத்திருந்தபோதே மனதில்
கலக்கங்கள் தோன்றிட, அம்மா, அப்பா, அண்ணன் என மூவரின்
கைபேசியிலும் தொடர்பு கிடைக்காமல் போக, இருட்டத் தொடங்கிய
நேரத்தில் அங்கே நிற்கப் பிடிக்காமல் பேருந்தும் ஆட்டோவுமாக மாறிமாறிப்
பிடித்து, ஊருக்குள் வந்து இறுக்கமான மனநிலையுடன் வீட்டை
அடைந்தவளை வரவேற்றதோ பூட்டியிருந்த கதவு.
பக்கத்து வீட்டில் கேட்கையில் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி எங்கோ
போய்விட்டதாகச் சொல்ல, அப்பாவின் வாட்ஸாப் எண்ணில் கடைசி
உபயோக நேரம் ஐந்துமணி எனக் காட்டிட, ஏதோ அசம்பாவிதமெனத்
தெரிவித்தது அடிமனது.
அவளது கலக்கத்தைப் பார்த்த பக்கத்துவீட்டு அண்ணன் அவருக்குத்
தெரிந்தவர்கள், அங்கே, இங்கேயென விசாரிக்கத் தொடங்க, அவ்வீட்டுப்
பாட்டி அவளை அமரவைத்து சாப்பிடவும் குடிக்கவும் தந்தார். ஆயினும்
குடும்பத்தினரைப் பற்றி எதுவும் தெரியாதபோது உணவு இறங்கவில்லை.
எதிர்பார்ப்போடு அவள் பார்த்திருக்க, பேயறைந்ததுபோன்ற அதிர்வுடன்
அந்த அண்ணன் திரும்பிவரவும் இவளுக்கு நெஞ்சைப் பிசைந்தது.
“சரியாத் தெரியல… எதுக்கும் பயப்பட வேணாம்.. சும்மா சந்தேகத்துக்காகத்
தான்…” என இழுத்தபடியே அவளை அழைத்துக்கொண்டு வேம்பத்தூர்
காவல் நிலையத்துக்குச் செல்ல, அப்போதே கைகள் நடுக்கமெடுக்கத்
தொடங்கியது அவளுக்கு.
அங்கிருந்த ஆய்வாளர், “ஹைவேஸ்ல ஒரு ஆக்ஸிடெண்ட் கேசு. அம்மா,
அப்பா, பையன். ஸ்ப்பாட் அவுட்டு. பாடியை சிவகங்கை ஜிஹெச்சுக்கு
கொண்டு போயிருக்காங்க. அடையாளம் பாத்து வாங்கிக்கங்க” என்க, அது
தன் குடும்பமாக இருக்கக்கூடாது என வேண்டாத தெய்வமில்லை வானதி.
மனதினுள் மட்டுமன்றி, உதட்டிலும்கூட அம்மா சொல்லும் துக்கநிவர்த்தி
ஸ்தோத்திரமும், மார்க்கண்டேய மந்திரமும் குடியேறியிருக்க, அதன்
அர்த்தங்கள் ஏதும் இன்றுவரை புரியாவிட்டாலும், எதாவது அற்புதம்
நடந்துவிடாதா என்ற பிரயாசையுடன் கைகளைக் குவித்துக்
கண்ணீர்மல்கப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே பரிதாபமான பார்வையோடு
காரை செலுத்தினார் அந்த அண்ணன். இந்த சின்னப் பெண்ணுக்கு
அத்தகைய துன்பம் நேரக்கூடாதென்று அவரது மனமும் அனிச்சையாக
வேண்டிக்கொண்டது.
முக்கால் மணி நேரம் பயத்தோடு பிரயாணம் செய்து சிவகங்கை அரசு
மருத்துவமனையின் பிணவறையை அடைய, அங்கே தன் கண்ணெதிரில்
சவமாய்க் கிடந்த தந்தையை முதலில் பார்த்த கணத்திலேயே உள்ளே
செத்துவிட்டாள் வானதி.
கண்ணீர்கூட வராமல், அடுத்து அம்மாவையும் அண்ணனையும் ஏறிட்டவள்,
தூங்குவதுபோலவே கண்களை மூடிக்கொண்டிருந்த அண்ணனின்
கன்னத்தைத் தடவினாள்.
“விக்கி… விக்னேஷ்… வானதி வந்திருக்கேன்..” அவன் காதுக்கு மட்டும்
கேட்கும்படி கிசுகிசுத்தாள் அவள்.
அவன் ஏன் தன் குரல் கேட்ட பின்னரும் எழவில்லை எனப் புரியவில்லை
அவளுக்கு.
நடப்பது எதையுமே அவளது மூளை நம்ப மறுத்தது. பிரம்மை பிடித்ததுபோல்
கண்களை அகல விரித்தபடியே கால்போன போக்கில் அவள் நடக்க,
கையிலிருந்த கைபேசி நழுவி கான்கிரீட் தரையில் விழுந்து காயம்பட்டது.
நில்லாமல் நடந்துகொண்டே இருந்தாள் அவள். சுற்றிலும்
ஆம்புலன்ஸ்களும், அபாய ஒலிகளும், அழுகுரல்களும், அவசர இரைச்சலும்
அவளைத் தீண்ட முயன்று தோற்றன. அவளுடன் வந்த பக்கத்துவீட்டு
ஆள்தான் பத்திரமாய் அவளை ஓரிடத்தில் அமரவைத்து, கைபேசியை
எடுத்துக் கையில் திணித்தார்.
பிணவறை ஊழியர் வந்து, “ஆக்ஸிடெண்ட் கேசுப்பா… போஸ்ட்மார்ட்டம்
பண்ணனும். காலைல வந்து பாடிங்களை வாங்கிக்க” என்று அவரிடம் கூற,
தன் குடும்பத்தை அஃறிணையில் விளித்த அந்த ஊழியரை அனல்கக்கும்
பார்வையால் எரித்துவிடுவதுபோல் பார்க்க, அவளது ஆவேசத்தில் அந்த
நபர் இரண்டடி பின்வாங்கினார்.
மீண்டும் பிரம்மை நிலைக்கு வந்தவள் கால்களைக் கட்டிக்கொண்டு
கல்லில் அமர்ந்துகொண்டு, காட்டிய பேப்பர்களில் கையெழுத்திட்டுத் தர,
குடும்பத்தாரின் உடமைகள் இருந்த பையை வாங்கிக்கொண்டு, அவளை
காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்தார் அந்த அண்ணன்.
வேரற்ற மரம்போல வீட்டு வாசலில் விழுந்தவளை வீதியிலிருந்தோர்
அனைவருமே ஓடிவந்து தாங்கிக்கொண்டனர். பக்கத்து வீட்டினர் அவளைத்
தங்கள் வீட்டுக்கு அழைக்க, சைகையாலும் வெறித்த பார்வையாலும்
மறுத்துவிட்டு, ராத்திரி முழுதும் தங்கள் வீட்டுத் திண்ணையிலேயே
அமர்ந்திருந்தவளைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடிந்தது அவர்களால்.
யாருமே அணுகமுடியாத, இந்த உலகத்தோடே சேராத ஒரு நிலையில் அவள்
ஆழ்ந்திருக்க, அவளுக்காக அனைத்தையும் செய்தனர் அண்டை வீட்டார்.
சடங்குகள், சாமியானா பந்தல்கள், சுற்றத்தாருக்கு செய்திகள் என்று
எல்லாவற்றையும் பக்கத்து வீட்டு அண்ணன் பார்த்துக்கொள்ள, அந்த
வீட்டுப் பாட்டியம்மாள் அவளை எப்படியாவது அழவைக்க பிரயத்தனப்
பட்டுக்கொண்டிருந்தார்.
நீர்மாலை, எட்டுக்கட்டு என்று சாங்கியங்கள் அனைத்தும் குறையின்றி
நடந்தன. இயந்திரம் போல அவர்கள் சொன்னதைச் செய்தாள் அவள்.
ஊர்ப்பெண்கள் எல்லாரும் ஒப்பாரி வைக்க , இவளோ தனக்கும் இதற்கும்
சம்பந்தமில்லாதது போல் படிக்கட்டோடு சாய்ந்து அமர்ந்து
நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதைப் போலப்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
சத்தமிட்டு அழவில்லை என்றாலும், நேற்று இரவு தொடங்கிய விழிநீர்
அருவி இன்னமும் நிற்காமல் ஊற்றிக்கொண்டுதான் இருந்தது.
யாரோ பெரிய மனிதர் வருகிறார் என சலசலப்பு ஏற்பட்டபோது சற்றே
கவனம் திருப்பி யாரெனப் பார்த்தாள் அவள்.
உள்ளே வந்தவர் வேதாசலம்.
வேதாசலம் மாமாவைப் பார்த்ததும் நிழல்கண்ட மான் போல ஒரு நிம்மதி
மனதோரம் வந்திட, அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தவனைப் பார்த்ததும்
மூச்சு ஒருகணம் நின்றது.
இருபது வருடங்களாகக் கனவில் மட்டுமே கொஞ்சிக்கொண்டிருந்த அந்த
முகம்… குழந்தைச் சாயலெல்லாம் மாறிப்போய்… பெரியவனாய்…
ஆணாய்…
மனதினுள் இதுவரை இருக்கிறதென்றே தெரியாத உணர்வுகள் எல்லாம்
எங்கிருந்தோ அடித்துவர, விழிகளில் ஏக்கமும், கலக்கமும் போட்டிபோட,
அவனை எதிர்பார்த்து எழுந்தாள் அவள்.
என்ன செய்வான்… என்ன பேசுவான்… அழுவானா… அணைத்துக்கொண்டு
ஆறுதல் கூறுவானா… மனதின் வலிகளை எல்லாம் தன் குரலால்
ஆற்றுவானா…?
அவனோ ஒரே வார்த்தையில் அவள் இதயத்தை உடைத்தான்.
“தெரியலப்பா.. சரியா ஞாபகமில்ல.”
இத்துணை துக்கத்திலும் யாருடைய முகத்தைக் கலங்கரை விளக்கம்போல
எதிர்பார்த்துக் காத்திருந்தாளோ, யாரை ஆறுதல் என நம்பியிருந்தாளோ,
அவன் அந்நியமாகிவிட, தன்னைத் தெரியவில்லை என்று கூறிவிட,
அதற்குமேல் வாழ்க்கையில் தோற்க எதுவுமே இல்லை என்றாகிப்
போய்விட, நடைபிணமாய் ஆகிப்போனாள் வானதி.
என்ன நடக்கிறதென்று உணராமல் வெற்றுவெளியை வெறித்தபடி அவள்
இருக்க, அவனும் இடைவெளியுடன் நிற்க, அதற்குள் ஏதேதோ ஆகிவிட,
யார்யாரோ வந்துவிட, படபடவென அங்கே நடந்தேறியது ஒரு அவசரக்
கல்யாணம்.
யாருடன் ஊர்மெச்ச மாலை சூட்டி மணம்புரிய வேண்டி ஆண்டாண்டு
காலமாய்க் கனாக்கள் கண்டுகொண்டிருந்தாளோ, அவன்தான்
மணாளனாக வந்திருந்தான். அந்தமட்டில் அவள் பிரார்த்தனை
பலித்துத்தான் இருந்தது. ஆனால், அதில் விதி நடத்திய கொடூரமான
சூழ்ச்சியோ…
“இதை ஜஸ்ட் ஒரு எமெர்ஜன்சின்னு நினைச்சுக்கோ”
இழப்பதற்கு இனியொன்றுமில்லை என ஒவ்வொரு முறை
நினைக்கும்போதும், வாழ்க்கை ஏதேனுமொரு அச்சாணியைப்
பிடுங்கிப்போட்டுவிட்டுச் செல்கிறது; வேதனைகளைப் பரிசுபோல
அள்ளித்தந்து செல்கிறது.
அதை நினைத்தபோது வறண்ட புன்னகை ஒன்று அரும்பியது அவளது
உதட்டோரம்.
வேதாசலம் மாமா அவளுக்கு ஆறுதல்கூறியது எதுவும் அவள் செவிகளைத்
தாண்டவில்லை. முடிவில்லா ஒரு சூன்யத்தின் இரைச்சல்தான் காதுக்குள்
ஓங்கரித்தது.
கழுத்தில் தாலிக்கயிற்றின் கனம் அழுத்த, அந்த பாரத்தை இந்த நேரத்தில்
தாங்க இயலாமல் மீண்டும் படிக்கட்டில் சரிந்தாள் அவள். தன்னைக்
காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு திருமணம் செய்துவைத்த
பெரியவர்கள் வெளியே செல்ல, வாழ்க்கை தந்ததாக நினைத்தவனோ
அறைக்குள் இருப்புக்கொள்ளாமல் நடக்க, அவனது முகத்தை நிமிர்ந்து
ஒருதரம் பார்த்தாள் வானதி.
“என்னிக்குமே உன்னைய விட்டுட்டு நான் போயிட மாட்டேன்டி மத்தாப்பூ!!
நாம பெரியவங்களானதும், உன்னைய அந்த மலைமேல இருக்கற முருகன்
கோயிலுல வச்சு கட்டிக்குவேன் நானு…”
புதுவெள்ளம் போல விழிநீர் பெருக்கெடுக்க, தடுக்கவோ துடைக்கவோ
மனமின்றி, நெஞ்சின் வலியை மட்டும் உணர்ந்தபடி அமர்ந்துகொண்டாள்
அவள்.
என்னென்னவோ நினைப்புகள் மனதுக்குள் அலைபாய்ந்து
கொண்டிருந்தன. நான்காவது பிணமாக நாமும் ஏன் செத்துவிடக் கூடாது,
வேலை மிச்சமல்லவா என்றெல்லாம் கூடத் தோன்றியது.
சட்டென நிமிர்ந்தாள் அவள். அந்த எண்ணம் தோன்றிய வேகத்திலேயே
அதை வேரோடு பெயர்த்தெறிந்தாள்.
‘சாகப்போவதில்லை நான்! அம்மா பாசம்கொட்டி வளர்த்த இந்த உடல்
எந்தவொரு காரணமுமின்றிச் சாயாது மண்ணில்! அப்பா அறிவூட்டி
வளர்த்த இந்த மனது அத்தனை சீக்கிரத்தில் மாயாது! அண்ணனின்
அன்பும் அர்ப்பணிப்பும் ஒருக்காலும் வீணாகாது! அவர்களுக்காக
வாழ்வேன் நான்… என் நினைவுகளில் வாழும் அம்மாவும் அப்பாவும்
அண்ணனும் போதும் எனக்கு…’
அங்கே, அவள் பார்வைவீசித் திரும்பிய அதே நேரம், திவாகர் இவள்புறம்
திரும்பி ஏமாற்றத்தை உணர்ந்து நொந்துகொண்டிருந்தான்.
- Madhu_dr_cool
SO interesting epi nice
Nice epi👍👍👍😍