தங்கள் அறையில் பக்கவாட்டில் இருந்த மேசையினருகில் இரண்டு நாற்காலிகள் போட்டு, வானதியும் திவாகரும் அமர்ந்து, வேம்பத்தூர் வீட்டிலிருந்து எடுத்து வந்த கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
சட்டென எதையோ பார்த்து அவள் அதிர்ச்சியாக மூச்சிழுக்க, திவாகர் கரிசனமாகத் திரும்பினான்.
“என்னாச்சு?”
அண்ணனும் அப்பாவும் பயிர் நாற்றுக்களைப் பிடித்துக்கொண்டு வயலில் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அனேகமாக இதுதான் விகடனில் பிரசுரமான படமாக இருக்கவேண்டும் எனக் கண்டுகொண்டான் திவாகர்.
“நான் யோசிச்ச கோணம் ஏன் தப்பா இருக்கக்கூடாது? ஏன் அப்பாவைக் குறிவைச்சு நடக்காம, அண்ணனைக் குறிவச்சு இந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது? அப்பாவுக்கு அடுத்தபடியா அவன்தான் வயலைப் பாத்துக்கிட்டான். கொஞ்சம் அவசரக்காரன் தான். ஆனா யாருக்குமே கெடுதல் நினைச்சதில்ல அவன்…”
மீண்டும் அவள் கண்கலங்க, திவாகர் செய்வதறியாது பார்த்திருக்க, நல்லவேளையாக ஹரிணி உரத்த குரலில் அவர்களை அழைத்தவாறே வந்தாள்.
“அண்ணா..! அண்ணி..! அம்மா சாப்பிட வரச் சொன்னாங்க!”
அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள் அவள். சரியாக ஹரிணி வரும்போது புன்னகை முகத்துடன் எழுந்து அவளுடன் சென்றாள். திவாகரும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் பின்தொடர்ந்தான்.
சாப்பாட்டு மேசைக்கு வந்தபோது, “என்னம்மா வானி..? திவாகரையே கிச்சனுக்கு வரவழைச்சு காபி போட வச்சிட்டியாமே…?” எனக் கிண்டலாக பானு வினவ, வானதியும் ஹரிணியும் சிரித்தனர். வேதாசலம் கூடப் புன்னகைக்க, திவாகர்தான் விளக்கெண்ணெய் குடித்தது போல் முழித்தான்.
“வருஷத்துக்கு ஒருதரம் ஒருமாசம் வந்து தங்குவாக, எதுக்கு சிரமம் குடுக்கணும்னு நாங்க யாரும் எந்த வேலையும் சொல்றதில்லை… அதுனாலவே சோம்பேறித்தனம் வந்துடுச்சு போல!”
இரு மகன்களையும் பொதுவாகவே அவர் குறிப்பிட்டாலும், அப்பாவின் பேச்சு தன்னையே நேராகச் சுடுவதுபோல இருந்தது திவாகருக்கு.
“சும்மா இருங்களேன்.. என் புள்ளைக அறிவாளிக. அதுனாலதான், வெளிநாட்டுல போயி வேலை பாக்குறாக. அவிகளுக்கு செய்யாம, யாருக்கு நான் செய்யப் போறேன்?”
மீனாட்சி பதவிசாகக் கேட்க, வேதாசலம் கண்ணால் சிரித்தபடி அமைதியானார்.
“ஆனாலும், சொந்தமா டீ, காபி கூட போடத் தெரியாம இருக்கறதெல்லாம் ஓவர்மா! என்னை அப்படி விட்டுருவீங்களா நீங்க?”
சரியான இடத்தில் கேள்வி கேட்ட ஹரிணியைப் பெருமையாகப் பார்த்தாள் வானதி.
“அதான் அத்தை, நம்ம மனசுல இருக்க இந்த பேதம் தான் காரணம்.. பொண்ணுங்க முன்னேறாமப் போறதுக்கு. ஆணும் பெண்ணும் சமம்னு நினைச்சிருந்தா, ரெண்டு பேருக்குமே தான இதையெல்லாம் கத்துக் கொடுக்கணும்? மகனை helplessஆ வளர்க்கறது ஒண்ணும் நல்ல விஷயம் இல்லையே அத்தை!?”
வானதியின் வார்த்தைகளில் இருந்த நிதர்சனம் அனைவருக்குமே புரிந்தது. திவாகர் முதல் முறையாக, கண்களில் மரியாதையுடன் அவளைப் பார்த்தான்.
________________________________
மறுநாள் வேம்பத்தூரில், காலை முதலே நோன்பு வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தனர். சீக்கிரமே எழுந்ததால் திவாகர் தூக்கக் கலக்கத்தில் நின்றிருந்தான். அவ்வப்போது எழும் கொட்டாவிகளை அப்பா அறியாமல் மறைப்பதே அவனது வேலையாக இருந்தது.
வானதி கண்ணீர்மல்க சடங்குகளைச் செய்தாள். இறுதியில், பால் செம்பில் வசம்பை அவள் போட, அவள் மீது தீர்த்தம் தெளித்துவிட்டு, பால் செம்பை எடுத்து, திவாகரின் கையில் தந்தார் சடங்கு செய்த புரோகிதர்.
“மகன் முறையில, நீங்க தான் தம்பி போய் பால் தெளிச்சிட்டு வரணும். போங்க தம்பி”
அவன் திருதிருவென விழிக்க, நான்கைந்து ஆண்கள் அவனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றனர். வாசலுக்கு வந்ததும் செருப்பை அணியப் போனவனைப் பதறிப் போய்த் தடுத்தார் பாட்டியம்மாள்.
“வெறுங்காலோட தான் போகணும்ப்பா”
வாய்க்குள் முனகிக்கொண்டு, வேண்டாவெறுப்பாக வெறுங்காலில் நடக்கத் தொடங்கினான் அவன். இடுகாடு வரையிலுமே கல்லும் மண்ணும் அவன் காலைப் பதம்பார்க்க, தனக்கு எதற்கு இந்தத் தண்டனைகள் என்று நொந்தபடியே நடந்தான்.
அவனது எரிச்சலை மறைக்கவெல்லாம் பெரிதாக முயலவில்லை அவன். இருப்பினும், இறந்தவருக்கான மரியாதையாக நினைத்து, பேசாமல் நடந்தான்.
இடுகாட்டிற்கு வந்து, ஒரு நடுகல்லை நட்டுவைத்து, அதன்மீது பாலையும் தண்ணீரையும் ஊற்றி, பூக்களையும் போட்டு வழிபட்டுவிட்டு, வீடு திரும்பினர் ஆண்கள். திவாகர் பசியினாலும் களைப்பினாலும் துவண்டிருந்தான். ஆனால் இம்முறை யாரையும் எதிர்பாராமல், தலைமுழுகிவிட்டு வந்ததுமே தானாகக் கிச்சனுக்குள் சென்று, காபி போட்டு எடுத்துக்கொண்டு அறையோரம் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
அப்பாவைத் தேடினால் அவர் எப்போதோ கிளம்பிவிட்டிருந்தார். வானதி வெளி முற்றத்தில் நான்கைந்து பேருடன் பேசிக்கொண்டிருந்தாள். இவன் காபியுடன் அமர்ந்திருந்ததைக் கண்டு சில பெண்கள் தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். ஆனால் அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன்பாட்டில் கைபேசியைப் பார்த்தபடியே இருந்தான் அவன்.
தன்னருகில் யாரோ வந்து அமர்வதை உணர்ந்து திரும்பினான் அவன். அவன் வயதையொத்த வாலிபன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
“ஹைய் ப்ரோ.. நான் வானதி ஃப்ரெண்ட். சென்னைல இருந்து வரேன்”
‘இருந்துட்டுப் போ..’
தலையை மட்டும் ஏற்பாக அசைத்தான் திவாகர்.
“நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டோம். அதான், கன்சோல் பண்றதுக்காக நாங்கள்லாம் வந்தோம்”
“ஓ..”
போலி ஆச்சரியத்துடன் அவன் சொல்வது வந்தவனுக்கும் புரிந்தது. அவன் வெளிப்படையாகப் புன்னகைத்தான்.
“உங்களை அமெரிக்கானு சொன்னாங்க. அங்க எங்கே?”
“நியூயார்க்.”
“செம ப்ரோ.. அப்போ வானதியையும் கூட்டிட்டுப் போய்டுவீங்களா?”
‘உனக்கு என்ன தான்டா வேணும்??’
“இன்னும் டிசைட் பண்ணல.”
அவன் குரலில் கொஞ்சம் கூட பற்றுதல் இல்லாமல் சொல்ல, வந்தவன் உதட்டைச் சுழித்தான்.
“வானதி ரொம்ப நல்ல பொண்ணு ப்ரோ.. செம்மையா படிப்பா. அவ வாழ்க்கை இப்டி வீணாகிடுச்சேன்னு தான்…”
இப்போது திவாகர் உண்மையாகவே முறைக்க, சென்னைக்காரன் அவசரமாக விளக்கமளித்தான்.
“உங்களை சொல்லல ப்ரோ. அவளுக்கு பொதுவாவே லவ், மேரஜ், இது எதுலயும் இன்ட்ரெஸ்ட் கிடையாது. ஓயாம படிச்சிட்டே இருப்பா. இப்பக்கூட, prelimsல 400க்கு 280மார்க். எங்க கோச்சிங் சென்டர்ல ஃபர்ஸ்ட் மார்க். தமிழ்நாட்டோட டாப் டென் மார்க்ல அவளும் ஒண்ணு. இப்ப மெயின்ஸ்க்கு அப்ளை பண்ணறதைப் பத்திக் கேட்டா, இப்போதைக்கு முடியாதுன்னு சொல்றா. அதான் கஷ்டமா இருக்கு ப்ரோ. நல்ல டேலண்ட்… இப்டி வேஸ்ட்டா போகலாமா?”
“என்னை என்ன பண்ண சொல்றீங்க?”
“நீங்க அவகிட்ட பேசுங்க ப்ரோ. ஹஸ்பண்ட் வேற. நீங்க சொன்னா அவ கேப்பா தான?”
‘ஆமா.. கேட்டுட்டுத் தான் மறுவேலை பார்ப்பா…’
“ம்ம்.. பேசிப் பாக்கலாம்”
பொதுப்படையாக அவன் சொல்லி வைக்க, அதற்கே முகம் மலர்ந்து அவன் கையைப் பிடித்துக் குலுக்கினான் அந்த வாலிபன். அவன் விடைபெற்றுச் செல்ல, அனிச்சையாக வானதியைத் திரும்பிப் பார்த்தான் திவாகர்.
மூன்று நாட்களுக்கு முன், இதே போல் அவளைப் பார்த்த ஞாபகம் வர, தானாக ஒரு வறண்ட புன்னகை அரும்பியது உதட்டில்.
‘என் விதி எப்படியெல்லாம் மாறிவிட்டது..? நேரம்!’
வானதி தன் சென்னை நண்பர்களுக்கு பழரசம் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். அதில் சில இளம்பெண்கள் திவாகரைக் காட்டி எதையோ கேட்க, சட்டெனச் சிவந்து, பின் அதை மறைத்தாள் வானதி. கையை மறுப்பாக அசைத்துவிட்டு, அவர்களிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.
தூரத்திலிருந்து அதையெல்லாம் பார்த்திருந்தான் அவனும்.
மதியத்துக்கு மேல் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட, வானதியும் திவாகரும் மட்டுமே தனித்திருந்தனர் வீட்டில். கூடத்தைத் தூய்மைப்படுத்திவிட்டு, சாமியறையில் விளக்கேற்றிவிட்டு, தனக்கு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள் அவள்.
“எப்ப வீட்டுக்குக் கிளம்பறோம்?”
திவாகர் சிறுபிள்ளை போலக் கேட்க, வானதி ஆயாசமாகப் பார்த்தாள்.
“வீட்டுக்குள்ளாரவே உட்கார்ந்து இருக்கத் தான் இஷ்டம்னா, எப்டி அமெரிக்கா வரைக்கும் போனே நீ?? வந்தது, நமக்கு கேஸ்ல எதாவது லீட் கிடைக்குமான்னு பாக்கத்தான்.”
“கேசா??”
அதிர்ச்சி குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது அவனிடம்.
‘இவள் இருபத்தி நான்கு மணி நேரமும் அதைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருப்பாளோ??’
“ம்ம். தலைக்கு எதாவது தொப்பியை மாட்டிட்டு, கிளம்பி வா. வெய்யில் உருக்கிடும்”
நக்கலாகச் சொல்லிவிட்டு, அவள் முன்னே செல்ல, ‘வெய்யில் தானே.. சமாளிப்போம்’ என நினைத்து, அவளுடன் கிளம்பினான் அவனும். வீட்டைப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்க, “இப்ப… எங்க.. போறோம்?” என வினவினான் அவன்.
“எங்க காட்டைப் பாக்கறதுக்கு”
“காட்டுக்கா??”
“அட, காடுன்னா சிங்கம்புலி இருக்கற காடில்ல. வயக்காடு.”
“அது தெரியுது. இந்த வெய்யில்ல.. எதுக்காக.. காட்டுக்கு?”
“வெய்யில் பார்த்தெல்லாம் விவசாயி வயல்ல இறங்காம இருக்கறதில்லையே சார்!? உங்களுக்கு ஏசி ஹோட்டல்ல பிரியாணி சாப்பிடணும்னா, இங்க உச்சி வெய்யில்ல கழனியில இறங்கி வேலை பார்த்தா தானே வரும்?”
அதற்குமேல் பேசத் தைரியமில்லை அவனுக்கு. மௌனமாகவே அவளோடு நடந்தான்.
வயல்பகுதிக்கு வந்தபோது, வானதியே எதிர்பாராததுபோல், அங்கே நிலங்களில் எல்லாம் கருங்கற்கள் நடப்பட்டிருந்தன. அவர்கள் வயல் மட்டும் பசுமையாக இருந்தது. ஆனால் மற்ற நிலங்கள் எல்லாம் பாலைவனமாய் மாறியிருக்கக் கண்டு, மனம் கலங்கி நின்றாள் அவள்.
“இங்க என்ன நடந்தது?? மத்த நிலத்துக்காரங்க எங்கே??”
interesting
💜💜💜💜
Super😍