Skip to content
Home » Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-13

Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-13

வயல்வெளியைப் பார்க்க வந்த இடத்தில் கருங்கற்கள் வைத்து ப்ளாட் பிரித்திருந்த தரிசு நிலத்தைப் பார்த்து மனம் கலங்கி நின்றாள் வானதி.

“ஏதோ வயக்காடுன்னு சொன்ன? வெறும் பொட்டல்காடா இருக்கு??”

திவாகர் நகைப்புடன் கேட்க, அதற்குக் கோபப்படக் கூட முடியவில்லை அவளால். ஒரே வருடத்தில் இப்படி மாறிப்போயிருக்கும் விவசாய நிலங்களைக் கண்டு நெஞ்சு பதைத்தது அவளுக்கு. விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என நாளொரு மேனியும் கூறிவளர்த்த குடும்பத்தைச் சேர்ந்தவளால், பசுமை கொஞ்சும் வயல்கள் யாவும் காணாமல் போய்விட்ட சோகத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. திவாகரின் அளவுக்கு அவள் நேசித்தவை இந்த பச்சை வயல்கள் தானே!

கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள் அவள். திவாகர் வெய்யிலுக்கு ஒதுக்கமாய் ஒரு வேப்பமரத்தடியில் போய் நின்றுகொண்டான். சிறிது நேரம் பேசிவிட்டு அவனிடம் வந்து நின்றாள் அவள். முகம் களையிழந்து வாடியிருந்தது.

குடும்பத்தை இழந்த அன்று கொண்ட அதே சோகத்துடன் இருக்கிறாளேவயல்கள் அழிந்ததற்கா இத்தனை வருத்தம்?’

கையை நீட்டி அவனுக்கு நிலத்தைக் காட்டினாள் அவள்.

“அங்கே, பச்சையாத் தெரியுதே… அதுதான் நம்ம வயல். பக்கத்துலயே கால்வாயும் இருக்கு. பம்ப்செட்டும் இருக்கு. மீதி நிலமெல்லாமும் ஊர்க்காரங்க சிலரோடதுதான். வயல்ல வேலைபாக்க, மதகுப்பட்டியில இருந்து ஆளுங்க வருவாங்க. அறுவடையப்போ சுடலைமாடசாமிக்கு படையல் போட்டு, கிடா வெட்டுவோம்.

எல்லாரும் சேர்ந்து, விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கணும்னு, அப்பாதான் ஆரம்பிச்சு வச்சார். அண்ணன் அதுக்கெல்லாம் போகவே மாட்டான். ஆனா ராப்பகல் பாக்காம வயல்ல எதையாவது செஞ்சுட்டே இருப்பான்.

போன வருஷம் கடலைக்காய் போட்டிருந்தோம். அப்ப தென்னை நார் வாங்கிட்டு வந்து, வயல் முழுக்க போட்டுவிட்டான். அப்பா திட்டுனாரு, பூச்சி பிடிச்சிடும்னு. ஆனா, அவனோட யோசனையால தான், அடிக்கற வெய்யிலுக்கு வயல்ல தண்ணி வத்திப் போகாம, குறைஞ்ச பாசனத்துலயே நிறைஞ்ச மகசூல் பாக்க முடிஞ்சுது.

அண்ணனுக்கு பயங்கர அறிவு. அதையெல்லாம் மண்ணை உயர்த்த பயன்படுத்தணும்னு ஆர்வம். பயங்கர energetic. துறுத்துறுன்னு எதையாச்சும் செஞ்சுட்டே இருப்பான். உனக்குத் தான் தெரி–“

சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டு தன்னையே தலையில் தட்டிக்கொண்டாள் அவள். அவள் கூறுவதை பாதி புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்த திவாகர், சட்டென இவள் நிறுத்தவும் கேள்வியாக ஏறிட்டான்.

நிறுத்திய பேச்சை அப்படியே விட்டுவிட்டு , அவனை அழைத்துக்கொண்டு வயலுக்கருகில் சென்றாள். காலணியைக் கழற்றிவிட்டு, வயலுக்குள் இறங்கி, கம்பநாற்றுக்களை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தாள் அவள். மூன்று நாட்களாக ஈரம் காணாமல் லேசாகப் பிளவு விட்டிருந்த நிலத்தைக் கவனித்தவள், கவலையான முகத்துடன் வரப்பில் அமர்ந்தாள்.

“ஏதோ சொல்லிட்டு இருந்தியே..?”

திவாகர் மெல்லக் கேட்க, அவளோ, “ம்ம்.. அதுதான்… விவசாய சங்கம் ஆரம்பிச்சாங்கல்ல? செயலாளரா எங்க ஊர் பள்ளிக்கூட ஹெச்எம் தான் இருந்தாரு. அதான், அவர்கிட்ட போன் பண்ணிக் கேட்டேன். வீட்டுக்கு வந்தா விவரமா பேசலாம்னு சொன்னார்.  போகலாமா?” எனக் கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் முன்னால் நடந்தாள்.

‘என்ன சொல்ல வந்தாள்..?’ என்ற யோசனையுடனே பின்தொடர்ந்து நடந்தான் அவனும். வெய்யிலில் நடந்ததால் உச்சந்தலையில் சூடேற, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு. தாகமும் பயங்கரமாக எடுத்தது. வழிநெடுகிலும் வீடோ கடையோ எதுவுமே இல்லாமல் போக, கால்கள் தள்ளாடித் துவண்டான் அவன்.

முழங்காலைப் பிடித்துக்கொண்டு அவன் குனிந்து மூச்சுவாங்க, வானதி ஏளனமாகப் பார்த்தாள் அவனை.

“என்ன சார்… எங்க ஊரு க்ளைமேட் ரொம்பப் பிடிச்சிருக்கா உங்களுக்கு?”

பதில்கூட சொல்ல முடியாமல் கையால் சைகை காட்டினான் அவன். அவன் சிரமத்தில் இருப்பதை உணர்ந்தவள் மறுநொடியே தீவிரமாகி, அவனை பாதையோரம் இருந்த கல்லில் அமர வைத்து, கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தந்தாள்.

வேகமாக அவன் அதை வாயில் கவிழ்க்கப் போக, அதைத் தடுத்து, “கொஞ்ச கொஞ்சமாக் குடி. இல்லைன்னா தாகம் அடங்காது. ஏன்னா, சின்ன பாட்டில் தான் இது. ஊருக்குள்ள போறவரைக்கும் தேவைப்படும்” என்று குடிக்க வைத்தாள் அவள்.

தனது துப்பட்டாவால் உருமால் போலச் செய்து, அவனது தலைக்குக் கட்டிவிட்டாள்.

“ஊருக்குள்ள போகறவரை கட்டிக்கோ. தலைக்கு வெய்யில் படாம இருந்தாலே சமாளிச்சிடலாம். இனிமேலாச்சும், சொல்றதைக் கொஞ்சம் கேட்கப் பாரு”

திவாகர் கொஞ்சம் ஆசுவாசமானதும் எழுந்து நிற்க, வானதியும் எழுந்து முன்னால் நடந்தாள்.

“உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன கேட்டாங்க என்னைப் பத்தி?”

அமைதியை மாற்றுவதற்காகத் திடீரெனக் கேட்டான் அவன். அவள் சட்டெனத் திகைத்து, பின் திரும்பி, “உலகத்தில எல்லாரும் உன்னைப் பத்தி மட்டும் தான் பேசுவாங்கனு நினைச்சுக்கிட்டயா?” என்றாள் வேகமாக.

“நான் அப்டி ஒண்ணும் நினைக்கல. நீங்க பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன். அதான் கேட்டேன்..”

மாட்டிக்கொண்ட திகைப்பில் விழித்தாள் அவள். பின் தலையை மறுப்பாக அசைத்துவிட்டு, “ஒண்ணும் இல்ல” என்றுவிட்டு நடையின் வேகத்தைக் கூட்டினாள்.

திவாகர் அவளை வாயடைக்கச் செய்துவிட்ட வெற்றிக் களிப்புடன், “நான் கெஸ் பண்றேன்.. என்னைப் பாத்து, செம்ம ஸ்மார்ட், ஹேன்சம், ஹாட்னு ஏதாவது சொல்லியிருப்பாங்க” என்றான் குறும்பு குழைத்த குரலில்.

வானதியும் அவனுக்கு ஈடான நக்கலுடன், “ஆமாமா… அடுத்த ஹ்ரித்திக் ரோஷன் நீதான்னு கூட சொன்னாங்க!” என்க, அவன் பலமாகச் சிரித்தான்.

“உண்மையிலயே என்னைப் பத்தி அந்த மாதிரி எதுவும் சொல்லலைன்னு சொல்லேன் பாக்கலாம்!”

அவள் பதில் பேசாமல் இன்னும் வேகமாக நடந்து ஊருக்குள் நுழைந்தாள். திவாகர் தனது தலைக்கட்டை அவிழ்த்து வானதியிடம் நீட்ட, அவனைப் பார்க்காமல் துப்பட்டாவை வாங்கி நேர்த்தியாக அணிந்துகொண்டு, ஆசிரியரின் வீட்டுக் கதவைத் தட்டினாள் அவள்.

“வாம்மா வானி.. நல்ல இருக்கியா? அவிக ஃபோன் பண்ணி சொன்னாக, நீ வருவ, இருத்தி வையின்னு. உள்ள வாம்மா. வாங்க தம்பி..”

அந்தப் பெண்மணி தலைமையாசிரியரின் மனைவியாக இருக்கவேண்டுமென ஊகித்தான் அவன். இருவருக்கும் பானகம் கொண்டுவந்து கொடுத்தார் அவர். வெய்யிலுக்கு அந்த பானகம் அமுதமாக இறங்க, ஒரே மிடக்கில் அதைக் குடித்து முடித்தான் திவாகர். வானதி அவனை முறைக்க, அந்தப் பெண்மணியோ, “தம்பிக்கு ரொம்ப தாகம் போல.. இன்னொரு கிளாஸ் கொண்டு வரட்டா?” எனக் கேட்டு, அவள் மறுத்தும் கேளாமல் கொண்டுவந்தார்.

அதற்குள்ளாரவே தலைமையாசிரியர் வந்துவிட, வானதி மரியாதையோடு எழுந்து நின்றாள்.

“வாம்மா வானி.. சாரிம்மா, காலைல வர முடில.. ஸ்கூல்ல வேலை இருந்தது..”

“ஐயோ, பரவால்ல சார்… ஒரு முக்கியமான விஷயமா பேசணும்.. அதான். உங்களை தொந்தரவு பண்ண வேண்டியதா போச்சு”

“லஞ்ச் ப்ரேக் தானம்மா இது. எனக்கென்ன தொந்தரவு? சொல்லும்மா.. என்ன விஷயம்?”

“ஏன் சார் நம்ம ஊர் வயலெல்லாம் வெறிச்சோடிப் போயிருக்கு…? அப்பாவோட நிலத்தைத் தவிர எதுலயுமே பயிர் செய்யல?”

பெருமூச்சு ஒன்றை விட்டவர், “அப்பா உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என வினவ, வானதி இல்லையெனத் தலையசைத்தாள்.

“தினமும் ஃபோன் பேசுவோம். ஆனா அப்பா எதுவுமே சொன்னதில்லையே…? எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்குன்னு தான் எப்பவும் சொல்லுவாரு சார்..”

“உன்கிட்ட ஏன் சொல்லலைன்னு புரியுது. உன்னையும் கஷ்டப்படுத்த வேணாம்னு நினைச்சிருப்பார். நஞ்சேசனும் விக்னேஷும், ஊருக்காக நிறையவே கஷ்டப்பட்டாக. எப்பவுமே சாகுபடி அப்ப வர்ற லாபத்தை, விவசாய சங்கத்தில சமமா பிரிச்சிக்கிட்டாக. எத்தனையோ குடும்பம் நஷ்டப்பட்டு கடன்ல மூழ்கித் தவிச்சிட்டு இருந்தப்ப, அவிகதான் காப்பாத்தினாக.

என்னவோ தெரியல, போன வருஷ நடவுல, உங்க காட்டுல மட்டும் தான் விளைச்சல் நல்லபடியா இருந்தது. மத்த காட்டுல எல்லாமே அரைகுறை தான். அத்தோட நிக்காம, அடுத்து அந்த மண்ணுல எது போட்டாலும் விளையல. விக்னேஷ்கிட்ட இதையெல்லாம் மத்த விவசாயிக சொன்னப்போ, அவன் ஏதேதோ மெசின் எல்லாம் கொண்டுவந்து, மண் பரிசோதனை, தண்ணி பரிசோதனைன்னு நிறைய பண்ணினான். என்ன கண்டுபிடிச்சானோ, எங்ககிட்ட எதுவுமே சொல்லலை. அடிக்கடி சிவகங்கை வேளாண்மை இயக்க ஆபிசுக்கு உங்கப்பாவும் அண்ணாவும் போயிட்டு வருவாக.

விவசாய சங்கத்து மூலமா, மறுபடி நடவு செய்யறதுக்காக, போயும் போயும் மலையப்பன் கிட்ட அஞ்சு லட்சம் கடன் வாங்கி, கூட்டு விவசாயமா ஆரம்பிச்சாக… ஆறு மாசத்துக்கு முன்ன. ஆனா அப்பவும், விக்கியோட முயற்சி எதுவும் உதவல. உங்க வயல் மட்டும் தான் செழிச்சது. அதுனாலவே காட்டுக்காரங்க மத்தியில சண்டையும் பிரிவும் வந்தது. உங்களைத் தவிர, மத்தவிக நிலத்தை வித்துட்டாக. ஊரை விட்டும் போயிட்டாக. கடன் மொத்தமும் உங்கப்பா தலையில விழுந்துடுச்சு.

ஒரு பக்கம் விவசாயத்து வேலைக்கு ஆள் பற்றாக்குறை. இன்னொரு பக்கம் கடன். ரொம்பவே சிரமப்பட்டாங்க, ஆனா எதையுமே வெளிய காட்டிக்கலை ரெண்டு பேரும். முடிஞ்சவரைக்கும் எல்லாருக்கும் உதவி செஞ்சாக. பணங்காசு தந்ததுல தொடங்கி, கூட இருந்து நம்பிக்கை குடுத்தது வரை. உங்க அப்பாவும் அண்ணனும் ரொம்ப நல்லவிகம்மா.”

வானதி முழுவதையும் கேட்டுக் கண்கள் பனிக்க அமர்ந்திருந்தாள்.

அதிசயமாக, திவாகரின் கண்களும் குளமாகியிருந்தன.

3 thoughts on “Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *