அவனது கேள்வியில் சட்டெனத் திடுக்கிட்டாள் அவள்.
“என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறயா? மாமாவை நான் எதுக்கு சந்தேகப்படணும்? நாற்பது வருஷ நட்பு அது. அதைப்போய் நான் ஏன் களங்கப்படுத்தணும்?”
அவன் பின்வாங்கினாலும், “அ.. அப்றம் ஏன்… அவர்கிட்ட உண்மையை சொல்லாம..?” என்றான் சன்னமாக.
“அட, அதுதான் உனக்குப் பிரச்சனையா? மாமா நெறய இடத்துக்குப் போயிட்டு வர்றவரு. மாமாகிட்ட எல்லா விவரமும் சொன்னா, அவருக்கே தெரியாம அவர் போற இடங்கள்ல அதைப் பேசறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதன்மூலமா, தெரியக் கூடாத யாருக்காவது இதெல்லாம் தெரியவரும். நாம இதுவரை எல்லாத்தையும் ரகசியமாத் தான் செஞ்சிட்டு இருக்கோம். அதுனால நம்மைத் தவிர யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.”
அவளது நுட்பமான சிந்தனை பிடித்திருந்தாலும், அடுத்ததாக மனதில் வந்தது மற்றொரு கேள்வி.
“அப்ப.. என்னை மட்டும்.. எப்படி நம்பி… எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போற?”
கண்ணில் வலியோடு அவனை ஒருகணம் பார்த்தாள் அவள்.
“மத்தாப்பூ.. உனக்கு எப்போ, எங்கே போகணும்னாலும் நான் உன்னோடத் தான் வருவேன். எப்பவும் என்னை விட்டுட்டுப் போயிடாத… உன் கூட நானும் நிழல் மாதிரி வருவேன்!”
மறுகணமே பார்வையை மாற்றிக்கொண்டு, “நீயெல்லாம் அவ்ளோ வொர்த் இல்ல. வெளியே யார்கிட்டவும் பேசியே நான் பாத்ததில்லை. நீ வீட்டை விட்டு வெளியே வர்றதே என்கூட தான். உன்னை சஸ்பெக்ட் லிஸ்ட்ல வச்சா, அது சந்தேகத்துக்கே அவமானம்!” என்றுவிட்டு, தனது மடிக்கணினியில் மூழ்கிப்போனாள் அவள்.
மூக்குடைப்பு இம்முறை பலமாக இருக்க, வாய்க்குள் அவளைத் திட்டிக்கொண்டு, பால்கனிக்குச் சென்று பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான் அவன்.
‘பெரிய்ய ஷெர்லாக் ஹோம்ஸ் தங்கச்சி!!! இன்வெஸ்டிகேஷன் பண்றாங்க! உன்னை மதிச்சு உன் கூட சுத்துறனே, என்னை சொல்லணும்!
டேய் திவா! உனக்கு இதெல்லாம் தேவையா? ஒரு வில்லேஜ் மாங்கா… அவ போய் உன்னை இப்டி மூக்கை உடைக்கறாளே!’
அவளது சென்னை வாசமும், ஐஏஎஸ் படிப்பும் நினைவு வர, அவசரமாக எண்ணங்களைத் தடைபோட்டான் அவன்.
பால்கனியிலிருந்து தோட்டத்தைப் பார்த்தவாறே சிறிதுநேரம் நின்றிருந்தவன், அறைக்குள் செல்போன் சிணுங்கும் சத்தம்கேட்டு வேகமாக வந்து தனது கைபேசியை எடுத்துப்பார்த்தான்.
அது அடிக்கவில்லை. வானதியின் கைபேசி தான் அடித்துக்கொண்டிருந்தது.
அதை எடுக்காமல் என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தால், மேசையில் தலை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள் அவள். தூங்கும்போதும் எதையோ யோசிக்கும் பாவனையில் இருந்த அவளது முகத்தை ஒருகணம் அசிரத்தையாக ரசித்தவன், அவளது கைபேசியைக் கையில் எடுத்தான்; அனிச்சையாக சைலண்ட்டிலும் போட்டான்.
யாரெனப் பார்த்தபோது புது எண்ணாக இருந்தது. எடுக்கலாமா வேண்டாமா என அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே அணைப்புத் துண்டிக்கப்பட, சரியெனக் கைபேசியை வைத்துவிட்டு நகர்ந்தான் அவன்.
ஆனால் அவன் நகர்ந்த மறுகணமே அது மறுபடி சத்தமாக அடிக்க, இம்முறை வானதியே விழித்துவிட்டாள். முகத்தைக் கையால் துடைத்துக்கொண்டு, கைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள் அவள்.
“ஹலோ..?”
“…”
“ஆமா, வானதிதான். நீங்க?”
“…”
“ஓ.. ஓ.. ஓகே சார். யெஸ்.. இப்பவே வர்றேன்..”
“…”
“ஸ்யூர். தேங்க்ஸ்.”
கைபேசியை வைத்துவிட்டு, பால்கனி வாசலில் நின்றிருந்த திவாகரிடம் திரும்பினாள் அவள்.
“க்ரைம் ப்ராஞ்ச்ல இருந்து கூப்பிட்டாங்க. நம்மகிட்ட பேசணுமாம்.”
“நம்மகிட்ட இல்ல. உன்கிட்ட.”
முன்பு பெற்ற மூக்குடைப்பு ஞாபகத்தில் இருந்ததால் குரோதத்துடன் கூறினான் அவன்.
பட்டென்று அவன் எடுத்தெறிந்து பேசவும் கண் கலங்கியவள், அவனறியாமல் அதை மறைத்தபடி, “ஓகே.. நானே போயிக்கறேன்” என்றுவிட்டுக் கோபமாக வெளியேறினாள்.
அவள் பதிலுக்கு ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்தான் போலும்… அமைதியாக அவள் சென்றுவிடவும் இவனுக்கு உறுத்தலாக இருந்தது.
ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அம்மா மீனாட்சி வேகமாக உள்ளே வந்து, “என்னடா? பொம்பளைப் புள்ளைய தனியா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகச் சொன்னயாமே? கூடப் போறதுக்கு என்னடா உனக்கு?” என படபடக்க, ‘இதுதான் உன் ராஜ தந்திரமா..?’ என மனதில் அவளை முறைத்தபடியே, முகத்தைக் சுழித்துவிட்டு, “உங்க மருமகளை நான் ஒண்ணும் துரத்தி விடல. அவளாத் தான் கிளம்பினா..” என விளக்கமளிக்கத் தொடங்கினான்.
ஆனால் மீனாட்சி அவனைக் கவனிக்காமல் முறைத்துவிட்டு நகர, முனகிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு தயாரானான் அவன்.
வானதியும் அறைக்குள் வந்து முகம் கழுவித் தலைவாரத் தொடங்க, கண்ணாடி முன்னால் நின்றிருந்தவளின் பின்னால் சென்று நின்றான்.
“எங்கிட்ட பேச தைரியம் இல்லாம, அம்மாகிட்ட சொல்லி பயமுறுத்தறியா?”
சட்டென அவன் வந்து நின்றதும் படபடப்பானவள், தலையைத் தாழ்த்தியபடியே, “நான் உன்னை மாட்டிவிடவெல்லாம் சொல்லல. நான் தனியாப் போறேன்னுதான் சொன்னேன்.. அதுக்கு அவங்க கோபப்பட்டா, நான் ஒண்ணும் பண்ண முடியாது” என்றாள் வெறுமையாக.
திவாகர் அத்தோடு விட்டிருக்கலாம்.
விடாமல் திமிராக, “பொய். உனக்கு பயம். தனியா போக பயம். அதனாலதான் அம்மாகிட்ட சொல்லி என்னை கூட வர வைக்கற.” என்றான் அவன்.
ஏற்கனவே அவன் பேசியதில் மனமுடைந்து இருந்த வானதியின் கோபம், இப்போது கொதிநிலையை அடைய, கையிலிருந்த சீப்பை ஆவேசமாக வீசியெறிந்தாள் அவள்.
“Who the hell do you think you are? விட்டுட்டுப் போனல்ல? அப்படியே போக வேண்டியதுதான? எதுக்குத் திரும்ப என் வாழ்க்கையில வந்த? ஏன் என்னை சித்திரவதை பண்ற? உன்னால ஈஸியா மறக்க முடிஞ்சா, என்னாலயும் முடியும்னு நினைச்சியா?”
உச்சக்கட்டக் கோபத்தினால் கண்கள் சிவந்து கண்ணீர் பெருக்கெடுக்க, முகத்தைக் கையினால் மூடிக்கொண்டு அவள் அழுது குலைய, திவாகர் அதிர்ந்துபோய் செயலற்று நின்றான்.
“I..I’m sorry… I didn’t.. I don’t..”
“Get lost! Leave me alone!”
அவசரமாக அறையை விட்டு வெளியேறினான் அவன். மூச்சுக்களை நீளமாக இழுத்து விட்டவன், யார் மீது என்ன தவறெனப் புரியாமல் யோசனையில் ஆழ்ந்தான்.
‘இருந்தாலும்… நாம் கொஞ்சம் அதிகமாகத் தான் பேசிவிட்டோமோ..?
ப்ச், அவள்தானே சிறுபிள்ளை போல அம்மாவிடம் கோள்சொன்னாள்?
நீ வர முடியாது என்று கூறியதால்தானே அம்மாவிடம் போனாள்?
அட, அவள் தானே நானெல்லாம் மதிப்பே இல்லாதவன் என்று சொன்னாள்?
அவள் உன்னை சந்தேகிக்கவில்லை என்பதை அவளது பாணியில் கூறியிருப்பாள்… நீ தான் தவறாகப் புரிந்துகொண்டிருப்பாய் திவா..
எது?? அவள் குரலில் தெரிந்த திமிர், என் கற்பனையா? என்னைக் கண்டது முதலே அவள் ஏதோ விதத்தில் என்னை அவமானப் படுத்திக்கொண்டு தான் இருக்கிறாள். இன்றும் அப்படித் தான் செய்தாள்.
உனக்குத் தெரியாததைக் கற்றுத்தரத் தானே நினைத்தாள் அவள்? குடும்பத்தை இழந்துவிட்ட, உன்னை நம்பி வந்த, உன் பெற்றோரின் மதிப்பைப் பெற்ற பெண்ணை, நீ துன்புறுத்தலாமா?
அட, அவள் பேசியதைப் போலத் தானே நானும் பேசினேன்?? நான் பேசியது தவறென்றால், அவள் கூறியதும் தவறு தான்.’
ஒருவழியாக இந்த சிந்தனையை முடித்துவிட்டு, வாசலுக்குச் செல்ல, அதற்குள் காரில் ஏறியிருந்தாள் வானதி. இவனும் ஓடிவந்து அவளுடன் ஏறிக்கொண்டான். வழியில் எந்த உரையாடலும் இன்றி, அமைதியாகவே நீண்டது பயணம், அவ்வப்போது எழுந்த ஹாரன் சத்தத்தைத் தவிர.
சிவகங்கை ஸ்டேஷனுக்குச் சென்று வழி விசாரித்துக்கொண்டு குற்றப்பிரிவு போலீசாரின் அலுவலகத்தை அடைந்தபோது மணி மூன்று பத்து. யாரிடம் கேட்பது எனப் பார்த்தபடி அவள் நின்றபோதே, “வானதி..?” என்றவாறு வெளியில் வந்தார் ஒரு ஆய்வாளர்.
காக்கிச் சீருடை கனகச்சிதமாக உடலோடு பொருந்தியிருக்க, அதற்கேற்ற கம்பீரத்துடன் இருந்த அந்தக் காவலருக்கு, முப்பது வயதுக்குக் குறைவாகத் தான் இருக்கும். பளபளப்பில் கண்ணாடியே தோற்றுவிடுமளவு சுத்தமாகத் துடைக்கப்பட்ட கருநிற பூட்ஸும், தோள்பட்டையில் மின்னும் இரண்டு நட்சத்திரங்களும், இடுப்பில் கைத்துப்பாக்கியும், மார்பில் பதக்கங்களுமாய், சினிமாவில் வரும் கதாநாயகன் போல இருந்தார் அவர்.
உடையின் இறுக்கத்துக்கு நேர்மாறான சினேகமான புன்னகையோடு வானதியிடம் கையை நீட்டினார் அவர்.
“இன்ஸ்பெக்டர் அழகேசன், க்ரைம் ப்ராஞ்ச். உங்க கேசுக்காக ஸ்பெஷல் டெபுடேஷன்.”
திவாகர் அந்தக் காவல் அதிகாரியின் ஆளை விழுங்கும் ஆளுமையில் சற்றே திகைத்து நிற்க, வானதியும் அதே பிரம்மிப்பான புன்னகையுடன் அவர் கையைப் பிடித்து நாகரீகமாய் இரண்டு முறை குலுக்கினாள்.
“வானதி நஞ்சேசன். வேம்பத்தூர். “
தன் பெயரையும் ஊரையும் திருமணமான பின்னும் அவள் மாற்றிக்கொள்ளாமல் இருந்தது திவாகரை ஏதோ செய்தது. இரண்டடி தள்ளி நின்றே அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனை அழகேசன் கேள்வியாகத் திரும்பிப் பார்க்க, அவன் தன்னை எப்படி அறிமுகம் செய்து கொள்வதென்ற குழப்பத்தோடே வானதியையும் அழகேசனையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றான். அங்கு நிற்கவே ஏதோ போல் இருந்தது அவனுக்கு.
வானதியே, “வேதாசலம் ஐயாவோட பையன் இவர்” என்க, தலையை அங்கீகரிப்பாக அசைத்தார் அழகேசன்.
திவாகர் அதில் இறுக்கமானான்.
‘அப்ப உனக்கு நான் யார்?’