திவாகர் மனதில் நடந்த ரசாயன மாற்றங்கள் எதையும் அவன் அறியவில்லை. எதிரெதிர் துருவங்களாய் சண்டையிட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தபோதிலும், தன்னையறியாமலேயே அவள்மீது மையல் கொண்டிருந்தான் அவன்.
அவளது சிரிப்பும் பேச்சும் பிடித்திருந்தது அவனுக்கு. மற்ற பெண்களில் இதுவரை பார்த்திராத அறிவும் தெளிவும் அவனை அசரவைத்தது. இப்போதெல்லாம் அவன் கண்களுக்குப் பேரழகாய்த் தெரிந்தாள் அவள். தினமும் அவளுடன் புதுப்புது இடங்களுக்குச் செல்வதையும், அவளுடன் நேரம் செலவிடுவதையும் அவனே எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தான்.
வானதியும் இவனது மாற்றங்கள் எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. தனது தந்தையின் நண்பர்களையும் சக விவசாயிகளையும் பார்த்துப் பேசி வந்ததிலேயே மூன்று நாட்கள் ஓடியிருந்தன. ஆய்வாளர் அழகேசன் அவரது விசாரணையையும் முழுமூச்சில் நடத்திக் கொண்டிருந்தார்.
அன்றும் அதுபோலவே வெளியே கிளம்பியபோது, காருக்குள் ஏறச் சென்ற வானதியைத் தடுத்தான் திவாகர்.
“பைக்ல போலாமா? எனக்கு பைக் ஓட்ட கத்துக் குடுப்பியா?”
அவள் திகைத்தாலும், மறுப்பாகத் தலையசைத்தாள்.
“நீ ஓட்டப் பழகறேன்னு சொல்லி எங்கண்ணன் பைக்கை உடைக்கறதுக்கா? அதுமேல பூ விழுந்தாலே எங்கண்ணா பதறுவான். அதையெல்லாம் உன்னை நம்பிக் குடுக்க முடியாது. வேணும்னா வேற பைக்கை வாங்கிட்டுவா. அப்ப வேணா பாக்கலாம்!”
இருவரும் கார் அருகில் நின்று தர்க்கம் செய்துகொண்டிருப்பதை முன்னறையிலிருந்து பார்த்த வேதாசலம், “என்னம்மா..? என்ன வேணும்?” என்றபடி வெளியே வந்தார்.
“எனக்கு எதுவும் வேணாம் மாமா. உங்க பையனுக்குத் தான் புது பைக் வேணுமாமா…”
விஷமச் சிரிப்புடன் அவள் சொல்ல, திவாகர் அவளை முறைத்துவிட்டு, அப்பாவைப் பார்த்துத் திணறினான்.
அவரோ, “அவ்ளோதான? நம்ம மணியண்ணன் காரேஜுக்குப் போங்க. நான் சொன்னேன்னு சொல்லி எந்த வண்டியை வேணா எடுத்துக்கங்க” என்று இலகுவாகச் சொல்லிவிட்டுச் செல்ல, திவாகர் ஆச்சரியப்பட்டுப்போனான்.
அவர் கூறிய இடத்துக்குச் சென்றனர் இருவரும். உபயோகப்படுத்திய செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் விற்கும் இடம் அது எனத் தெரிந்துகொண்டான் திவாகர். பைக்குகளின் அணிவகுப்பைப் பார்த்தவன், ஆர்வமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தான். வானதி அந்தக் கடையின் மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
ஆன்லைனில் ஓட்டுனர் உரிமத்திற்கான பயிற்சிப் பதிவை அவர் மூலமாகச் செய்தாள் அவள். அதை முடித்துவிட்டு அவனிடம் திரும்ப, அவனோ ஒரு வெண்ணிற ராயல் என்ஃபீல்ட் பைக்கின் அருகில் நின்று அதை ரசித்துக்கொண்டிருந்தான்.
“ப்ச்.. ஹெவி பைக் எல்லாம் வேணாம். பேசிக் மாடல் எதாவது எடு.”
வானதி அதட்ட, அவனோ வைத்த கண் வாங்காமல் வெள்ளைக் குதிரை போலிருந்த அந்த வாகனத்தின் மீதே கருத்தாக இருந்தான்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் 300சிசி கனரக எஞ்சின் கொண்ட அந்த பைக்கைத் தான் எடுப்பேனென அவன் எடுத்துவர, வானதிக்கு தலைவலிக்கத் தொடங்கியது.
அவனை முறைத்தபடியே கிளம்பினாள் அவள். சிவகங்கை நகரத்துத் தெருக்களில் பயணப்படத் தொடங்கியது அந்த வெண்புரவி.
முதலில் எது எது எங்கே இருக்கிறதென ஒரு முன்னுரை விளக்கம் கொடுத்தவள், பின் அவனுக்கு தலைக் கவசத்தை மாட்டிவிட்டு, முதல் கியரிலேயே மெல்ல வண்டியை நிலைப்படுத்தி ஆடாமல் ஓட்டப் பழக்கினாள் அவனை. முப்பதுக்கு மிகாத வேகத்தில் அந்த புல்லட் வண்டியில் செல்வது அவளுக்கே வெட்கமாகத்தான் இருந்தது. இருப்பினும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு படிப்பித்துக் கொண்டு பின்னால் அமர்ந்திருந்தாள் அவள்.
சிறிது நேரம் அவள் கூறியபடியே ஓட்டியவன் , சரியாக சொன்ன இடங்களில் எல்லாம் ப்ரேக் பிடித்து, கியரை ஏற்றி, இறக்கி, வேகத்தைக் கூட்டி, குறைத்து, க்ளட்சுக்கும் ப்ரேக்குக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு சரியாகப் பயன்படுத்திடத் தொடங்கினான்.
அவனுக்கே ஏதோ சாதித்துவிட்டது போல் சிலாகிப்பாக இருந்தது. வாய்க்கொள்ளாப் புன்னகையுடன் அவளைக் கண்ணாடிமூலம் பார்க்க, அவளோ உதட்டைச் சுழித்துப் பழிப்புக் காட்டிவிட்டு, “ரோட்டைப் பாத்து ஓட்டு” என்று அவன் ஆர்வத்தில் தண்ணீர் தெளித்தாள்.
ஆனால் அவளுக்குமே பெருமையாகத் தான் இருந்தது. சொன்னதை உடனே கற்றுக்கொண்டதும், இதுவரை ஒரு தவறும் செய்யாமல் அழகாக வண்டியைச் செலுத்துவதும், அவள் கூறுவது தவிர்த்து வேறெதையும் பண்ணாமல் நேர்த்தியாக இருப்பதும் அவனிடம் பிடித்திருந்தது.
அமெரிக்க சாலைகளில் பயணித்த தாக்கத்தால் இடது பக்கம் செல்வது மட்டும் இன்னும் பழக்கப்படவில்லை அவனுக்கு. அடிக்கடி சாலையின் நடுவே தன்னிச்சையாக வந்துவிடும் பைக்கை, வானதியின் அதட்டலும் நினைவூட்டலும் மீண்டும் ஓரத்துக்குக் கொண்டுசெல்லும்.
இரண்டாம் கியரில், முப்பதில் அவர்கள் சென்றுகொண்டிருக்க, திடீரென அவர்களை முந்திக்கொண்டு நான்கைந்து பைக்குகள் சென்றன. பலமாக ஒலியெழுப்பியும், ஓவெனக் கூச்சலிட்டபடியும் அவர்கள் கடந்துசெல்ல, ஒருகணம் திவாகர் திடுக்கிட்டு, வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து லேசாக ஆட்டினான். மறுகணமே சுதாரித்து நிலைப்படுத்திக் கொண்டாலும், அவன் தடுமாறியதைக் கண்ட அந்த பைக்காரர்கள் நக்கலாகச் சிரித்துவிட்டு, வானதியைப் பார்த்துக் கண்ணடிக்க வேறு செய்தனர்.
“பைக் ஒஸ்தியா இருந்து என்ன பிரயோசனம்?? ஓட்டத் தெரியாதவனா இருக்கான்டா..”
அதன் இரட்டை அர்த்தங்கள் திவாகருக்குப் புரியவில்லை. வானதிக்குப் புரிந்தாலும் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
“எங்ககூட வர்றியா கண்ணு?? நாங்க எப்டி ஓட்டுறோம்னு பாரேன்.!!”
ஒருவன் அவளை இப்படி அழைக்க, மற்ற ஆண்கள் எகத்தாளமாகச் சிரித்தனர். இப்படியே சிறிதுநேரம் வம்பிழுத்துவிட்டு, அவர்கள் சற்றே வேகமெடுக்க, வானதியின் துவண்ட முகத்தை கண்ணாடி வழியாகக் கண்டான் திவாகர்.
“ஏன் வானதி.. அடுத்தது மூணாவது கியர் தான?”
“ம்ம்.. ஆமா..”
குரலில் அழுகை தெரிந்தது அவனுக்கு. அதைக் காட்டாமலிருக்க அவள்படும் சிரமமும் புரிந்தது.
“மூணாவது கியர்ல எவ்ளோ ஸ்பீடுன்னு சொன்ன?”
“அறுபது”
“ஓ..அப்ப நாலாவதுன்னா எண்பதுதானே?”
அவன் எதற்காகக் கேட்கிறான் என்று ஒருகணம் புரியவில்லை அவளுக்கு. ஆனால் மறுகணமே கியரை மாற்றி வேகத்தைக் கூட்டி, நாலாவது கியருக்குப் போக, வானதி அதிர்ந்தாள். தன் தவறை உணர்ந்து நொந்துகொண்டவள், “திவா.. ப்ளீஸ்.. வேணாம், ஸ்லோ பண்ணு. அவனுக கிடக்கறானுக, எங்கயாச்சும் புளியமரத்துல முட்டிக்கட்டும்! நீ அமைதியா இரு.. ப்ளீஸ்..” எனக் கெஞ்சத் தொடங்கினாள்.
ஆனால் அதற்குள்ளாகவே திவாகர் அவர்களை நெருங்கியிருந்தான். மனதுக்குள் சற்றே படபடவென இருந்தாலும், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கோபம் முன்னிற்க, வேகமாக முறுக்கிச் சென்று அவர்களை வழிமறித்து பைக்கை சடாரென நிறுத்தினான் அவன். கியரைக் குறைக்காமல் ப்ரேக்கடித்ததால் வண்டி ஒரு ஈனஸ்வரத்துடன் உயிரை விட்டது. அதையும் கண்டு நகைத்தனர் அந்த தடியன்கள்.
“த்தோடா.. பைக்கையே ஓட்டத் தெரியல.. நம்மமுன்னால நிக்கிறான் பாரேன்..”
“சம்பவம் செஞ்சு ரொம்ப நாள் ஆச்சுல்ல.. பொருளை எடு மாப்ள!!”
திவாகரை இறங்க விடாமல் தடுத்துப் பிடித்தாள் வானதி.
“திவா.. நான் சொல்றத கேளு.. வேணாம்.”
அவனோ அவள் கையை கவனமாக விலக்கிவிட்டு, ஹெல்மெட்டைக் கழற்றியபடி பைக்கிலிருந்து இறங்கினான். எது வந்தாலும் சமாளிக்கத் தயாராக இருந்தான் அவன்.
ஆனால் எதிர் கும்பலில் இருந்த விவரமறிந்த ஒருவன், அவன் முகத்தைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையாகக் கத்தினான்.
“டேய்.. முத்துப்பட்டி பெரியய்யா மகன்டா!!”
சட்டென மற்றவர்களும் கலவரமாகிவிட்டனர். வண்டியிலிருந்து இறங்கி, வேட்டியைத் தளர்த்திவிட்டு, கை கட்டி நின்றனர் அனைவரும்.
“யாருன்னு தெரியாம.. வம்பு பண்ணிட்டோம்.. மன்னிச்சிருங்கண்ணா.. மன்னிச்சிருங்கம்மா..”
பெருமூச்சு விட்டாள் வானதி. தங்களைக் காத்த மாமாவின் செல்வாக்குக்கு மானசீக நன்றியைத் தெரிவித்தவள், திவாகரை அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
இருப்பினும் செல்லும் வழியில், ‘இவன் அடித்திருப்பானா, அடி வாங்கியிருப்பானா’ என்ற ஆராய்ச்சி மனதில் நிகழத் தொடங்க, தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள்.
‘இவனாவது, அடிப்பதாவது! அமெரிக்காவில் பர்கர், பிட்சா எனத் தின்று பஞ்சு போல உடம்பை வளர்த்திருப்பான்.. சிவகங்கை சீமைக்காரர்களின் அரிவாள் வீச்சை இவன் எப்படி சமாளித்திருப்பான்!? ‘
“என்ன சிரிக்கற?”
சட்டென அவன் கேட்கவும் திகைத்துச் சிவந்தாள் வானதி. பின் கோபத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு, “ப்ச்.. நேராப் பாத்து வண்டிய ஓட்டு. பெரிய சண்டியரு.. சண்டைக்கு வலியப் போறாரு.. அவனுக அடிச்சு மண்டையப் பொளந்துருந்தா தெரியும்!!” என்று அதட்ட, அவன் தனக்குள் சிரித்துகொண்டு வண்டியைச் செலுத்தினான் திவாகர்.
சிவகங்கை வேளாண்மை இயக்க அலுவலகத்தில் வந்து நின்றது பைக். இருவரும் உள்ளே சென்று, காரியதரிசி ஒருவரிடம் விபரம் கூறினர். அவர் அவர்களைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, நிர்வாக அதிகாரியிடம் பேசச் சென்றார். அங்கே ஓரத்திலிருந்த மரபெஞ்ச்சில் இருவரும் அமர, திடீரென வானதிக்கு மிக அருகில் வந்து அமர்ந்தான் ஒருவன்.
வானதி சற்றே திகைத்து திவாகரின் பக்கம் நகர, திவாகரும் அவனை வினோதமாகப் பார்க்க, அந்த ஆளோ,
“உங்களுக்கு தேவையானது என்கிட்ட இருக்கு. என் கூட வந்தா உங்களுக்கு அது கிடைக்கும்” என்றுவிட்டு, வேகமாக எழுந்து வெளியேறினான்.
வானதியும் திவாகரும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர்.
Interesting😍😍
💜💜💜💜💜
ithu tha dhiva love thana avalukaga sandai poda la pora . ipo vanthavan ena evidence vachi irukan therilaye