“நான் அமெரிக்கா போகப் போறதில்ல.”
தெளிவான யோசனையுடன் தான் அவ்வார்த்தைகளை சொல்லியிருந்தான் அவன். அதைக் கேட்ட கணத்தில் அப்படியே உறைந்து நின்றாள் அவள்.
சலனமின்றித் தலையசைத்துவிட்டு, “ஓ..” என்றுமட்டும் அவள் சொல்ல, அதை அவள் நம்பவில்லை என்பது நன்றாகவே புரிந்தது அவனுக்கு. பால்கனியிலிருந்து அறைக்குள் வந்தவன், “உன் மேல அனுதாபப்பட்டு, பரிதாபப்பட்டு, பாவப்பட்டெல்லாம் நான் இதை சொல்லல வானி. எனக்கு இங்கயே இருக்கணும் போல இருக்கு. ஊருலயே, உன் கூடவே…” என்றான் உருக்கமாக.
எதுவும் பேசாமல் தரையைப் பார்த்தபடியே அவள் நின்றாள்.
“இதுவரை நான் அமெரிக்கா கிளம்பறதுக்கு யோசிச்சதே இல்ல. ஃபர்ஸ்ட் டைமா, எல்லாரையும் விட்டுட்டு அங்க போறதுக்கு தயங்கறேன். எனக்குப் போக விருப்பமில்ல. ஆனா ஒருவேளை நான் இங்க இருந்தா உன்னோட நிம்மதி கெடும்னு நீ நினைச்சன்னா, நான் போயிடறேன். நான் இருக்கவா, போகவா?”
பதிலுக்காக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன். அவளோ தன் கால் பெருவிரலை விட்டு விழிகளை அகற்றாமல் நின்றாள். அதற்குமேல் பதில் வராதென நினைத்து அவன் விலகப்போகும் நேரம்…
“இங்கயே இருந்துடு திவா.”
சொல்லிவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து அவள் புன்முறுவல் பூக்க, தன் செவிகளை நம்பமாட்டாமல் அவன் விழி விரித்துப் பார்க்க, சட்டெனக் கன்னத்தில் சிவப்பேறவும் அதை மறைத்தபடி வெளியே ஓடினாள் அவள்.
அவளது சிரிப்பைக் கண்ணுக்குள் சிறைசெய்தவன், அதில் தான் அடைந்த பேரின்பத்தை நினைத்துப் புன்னகைத்தான். தன் மடிக்கணினியில் தனது நிறுவனத்திற்குக் கடிதமெழுத ஆரம்பித்தான் அவன்.
வானதிக்கோ தன் கால் தரையில் படாத உணர்வு!
நமக்காக, நம்மோடு இருப்பதற்காக, அமெரிக்கா வேண்டாமென்றுவிட்டானே!
அப்படியென்றால்… நம்மை விட்டுப் போகமாட்டான் நம் திவா! அவனது மனதிலும் நமக்கு ஒரு இடம் உள்ளது!!
அந்த எண்ணம் அவளை இன்னும் சிவக்கச்செய்ய, தூணில் முகத்தை மறைத்துக்கொண்டு சிரித்தாள் அவள். பின்னால் வந்த ஹரிணி அவளது தோளைத் தட்டி என்னவென வினவ, அவளையும் கட்டிக்கொண்டு புன்னகைத்தாள்.
நாட்கள் சக்கரையாய் நகர, திவாகர் தன் மனதைப் புரிந்துக்கொண்டதாலும், அவளை அவசரப்பட்டு புண்படுத்திவிடக் கூடாதென்ற கவனத்தாலும், அவளுக்குரிய இடைவெளியைத் தந்து, தன் அமைதியான ஆதரவை மட்டும் ஒரு நண்பனாகத் தந்துகொண்டிருந்தான்.
சில தினங்களில், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அவளது மனு ஏற்கப்பட்டு மதுரையைத் தேர்வு மையமாக அறிவித்திருந்த கடிதமும் வந்து சேர்ந்தது. இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சிப் பணித் தேர்வுகள் தொடங்கப்போவதை, வீட்டில் நிலவிய ஒரு அழுத்தமான சூழலே சொன்னது.
அந்த அழுத்தத்தை நீக்கவும், ஒரு மாறுபாடு வரவைக்கவும், கோகுலாஷ்டமி வந்தது. இம்முறை வீட்டில் பூஜை நடத்த வேண்டுமென மீனாட்சியும் பானுவும் ஆரம்பித்தனர்.
“நம்ம வீட்டுல இந்த வருஷமாச்சும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாம் அத்தை. எங்க வீட்டுல வருஷம் தவறாம நாங்க கொண்டாடுவோம்.”
பானு அன்று காலை உணவின் போது கூறிட, மீனாட்சி அனுமதிக்காக வேதாசலத்தை நோக்கினார். அவரோ அலட்சியமாகக் கையசைத்துவிட்டு, “சின்னக் குழந்தைங்க யாராச்சும் இருந்தா இதெல்லாம் கொண்டாடலாம், எல்லாரும் தான் வளர்ந்தாச்சே! மருமகளுங்களாச்சும் பேரன் பேத்தின்னு சீக்கிரமா எடுத்துத் தரட்டும்… அப்பறம் பார்க்கலாம்” என்றிட, பானுக்கும் வானதிக்கும் முகம் சுருங்கியது, வெவ்வேறு காரணங்களினால்.
கணவன் எங்கோ தூரதேசத்தில் இருக்கும்போது பிள்ளைச் செல்வத்தை எங்ஙணம் நினைப்பதென்று பானு மருக, அருகிலேயே தன்னவன் இருந்தும் உறவும் உரிமையும் கிடைக்காத சோகத்தில் வானி உருகினாள். அனைவரும் அமைதியாகிவிட, அந்த சோக சூழல் பொறுக்காத வேதாசலம், வானதியிடம் திரும்பினார்.
“ஏன்ம்மா? கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடணுமா?”
அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும், பானுவிற்காகத் தலையசைத்தாள் அவள்.
“எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். பானு அக்காவும் வீட்டை மிஸ் பண்ணாம இருப்பாங்க. குழந்தை தானே, ஹரிணி இருக்கையில வேற யாரு வேணும்?”
ஹரிணி பெருமிதத்துடன் புன்னகைக்க, அவள் கன்னத்தில் தட்டிய பானு, “ஐயைய.. உனக்கெல்லாம் கிருஷ்ணர் வேஷமா?? வேணும்னா அவர் மேய்ச்ச மாடு வேஷம் வேணா போடலாம்” என்றிட, சிரித்துப் புரையேறியது வானதிக்கு.
ஒருவழியாக அவர் ஒப்புக்கொள்ள, வழிபாட்டில் அனைவரும் மும்முரமாக, திவாகரை அங்குமிங்கும் விரட்டி வேலை வாங்கினர் மகளிர் நால்வரும். கண்ணன் பாதத்தை அரிசிமாவில் வரைவது, தூண்களில் தோரணங்கள் கட்டுவது, பூஜைக்காக மாவிலைகள் பறிப்பது என மாறிமாறிச் செய்து களைத்துப்போனான் அவனும். வானதி குங்கும நிறத்தில் புடவை கட்டிக்கொண்டு அளவான அலங்காரத்தில் வர, பானுவும் ஹரிணியும் கூட அலங்கரித்துத் தயாராகினர்.
மாலை ஐந்தரைக்கு சாமியறையில் விளக்கேற்றி வழிபாடு தொடங்க, வானதியைப் பாடுமாறு நச்சரித்தனர் ஹரிணியும் பானுவும்.
“அட.. எனக்கு இந்த பூஜை, மந்திரம், பாட்டு எதுவும் தெரியாது! எனக்குத் தெரிஞ்சது ஒரே கண்ணன் பாட்டு, அதுவும் சினிமாப் பாட்டு.”
“பரவாயில்லை அண்ணி… பாடுங்க. உங்க குரலுக்கு எல்லாமே அழகாத் தான் இருக்கும்..”
விடாமல் அவர்கள் கேட்கவும், வேறு வழியின்றி அவளும் செவிசாய்த்தாள்.
“சரி… பாடறேன்.”
அனைவரும் ஆர்வமாக அமைதியாகினர்.
வானதி லேசாகத் தொண்டையை செருமிக்கொண்டாள்.
அலைபாயுதே கண்ணா
என் மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா…..
அழகாக அவள் ஆலாபனைகளைப் பிடிக்க, மீனாட்சியும் பானுமதியும் கண்களை மூடி, மெய்மறந்து அவள் பாடலில் லயித்திருந்தனர். ஹரிணியின் அருகில் நின்றிருந்த திவாகர் வியப்பாக அவளைப் பார்த்தபடி, அனிச்சையாக விரலில் தாளமிட்டுக்கொண்டு நின்றிருந்தான்.
நிலைபெயராது சிலை போலவே நின்று,
நிலைபெயராது.. சிலை போலவே நின்று,
நேரமாவ தறியாமலே –மிக வினோதமான முரளீதரா
என் மனம் அலைபாயுதே… கண்ணா…
இனிமையான குரலும், அழகான சந்தமும் இதமாகத் தவழ்ந்து வர, அவளுக்குள் இன்னும் எத்தனை திறமைகளோ என வியந்தபடியே கண்கொட்டாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
தெளிந்தநிலவு பட்டப் பகல்போல் எரியுதே,
திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே!!
கனிந்த உன் வே…ணுகானம் காற்றில் வருகுதே!!
கண்கள்சொருகி ஒருவிதமாய் வருகுதே…
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா!!
பாட்டில் மூழ்கிவிட்டதன் அடையாளமாய், முகத்தில் ஆயிரமாயிரம் பாவனைகள் காட்டினாள் அவள். காதலால் கசிந்துத்துருகித் துன்பமுற்று வாடிடும் ஒரு அபலை போல அவள் ஏங்க, அவளது ஏக்கத்தின் கூறுகளைப் பாட்டிலும் வடியவிட, கேட்டவர்களுக்கு என்ன புரிந்ததோ தெரிந்ததோ, திவாகருக்கு ஏதோ உள்ளே சென்று உறுத்தியது.
கதறி மனமுருகி நான் அழைக்கவோ,
இதர மாதருடன் நீ களிக்கவோ?
இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ??
காதலனின் பாராமுகம் கண்டு ஊடல் செய்யும் பசலையுற்ற காதலியாக அவள் தன்னைப் பாவித்து சண்டையிட்டாள் பாட்டில். அவளது ஆவேசத்தையும் கோபத்தையும் கண்டு திகைத்தான் அவன். ஏதோ தன்னிடமே சண்டையிடுவது போல் ஒரு மனப்பிரம்மை தோன்றியது அவனுக்கு. இப்போது அவள் கண்ணிலிருந்து கண்ணீரும் கொட்ட, கண்களை மூடி ரசித்துக்கொண்டிருந்த மற்றவர்கள் யாரும் அதைக் கவனித்திடவில்லை. கண்கொட்டாமல் வானதியையே பார்த்திருந்தவனின் கண்ணில் மட்டுமே அது சிக்கியது.
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே கண்ணா.. என் மனம் மிக அலைபாயுதே…
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா… ஆ..ஆ..
மென்மையாக ஆலாபனையை இழுத்து சுருதியுடன் முடித்து மூச்சிழுத்தாள் அவள். யாரும் பார்க்கும் முன் கண்களைத் துடைத்தபடி நிமிர்ந்தவள், அவளையே பார்த்துக்கொண்டு நின்ற திவாகரின் பார்வையைச் சந்தித்ததும் ஒருகணம் தடுமாறினாள்.
ஆனாலும் அவனைத் திமிராகப் பார்த்துவிட்டு, பூஜைத் தட்டைக் கையில் எடுத்தபடி எழுந்தாள். அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். பூஜை முடிந்ததும் மீனாட்சி அனைவருக்கும் பிரசாதம் தந்தார். வானதி திருநீறும் குங்குமமும் கொடுத்தாள்.
அவனிடம் அவள் வரும் முன் மீனாட்சி வந்துவிட, நைவேத்யத்தை வாங்கி வாயில் திணித்துக்கொண்டான் அவன். வானதி வந்தபோது கையில் பிரசாதம் இருப்பதைக் காட்டி, நீயே வைத்துவிடு என்பதுபோல் நெற்றியை நீட்ட, அப்போது சரியாக வேதாசலம் வந்துவிட்டார். வானதியிடம் தனக்குத் திருநீறு எடுத்துக்கொண்டு, அவரே திவாகருக்கும் பட்டை போட்டுவிட்டு நகர, வானதி சிரிப்பை அடக்கிக்கொண்டு நகர்ந்தாள்.
‘வடை போச்சே’ எக்ஸ்ப்ரெஷனுடன் நின்றான் திவாகர்!
நடந்ததை பானுமதியும் கவனித்துவிட்டாள். அடக்கிய சிரிப்புடன் அவனிடம், “என்ன தம்பி.. என்ன ஆச்சு?” எனக் கேட்க, அவன் ஆட்டுத் திருடன் போல் விழித்தான்.
இரவு உணவின் போது ஹரிணியிடம் பேசிக்கொண்டே வானதி அமர்ந்திருக்க, அவனோ அவளுடன் பேச முடியாமல் தவித்தான்.
சட்டென அவனது கைபேசி அடிக்க, எடுத்துப் பார்த்தவனின் முகம் மாறியது.
அழகேசன் அழைத்திருந்தார்.
Interesting👍
💜💜💜💜💜