Skip to content
Home » MM 1

MM 1

ஒவ்வொரு நாளும் காலைல முழிச்சதும் நான் செக் பண்ணுற முதல் விசயம் என்னோட இன்ஸ்டா ஐ.பி… காலங்காத்தாலயே இன்ஸ்டால போய் இட்லியா அவிக்கப்போறனு நீங்க கேக்கலாம்… என்னை மாதிரி சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சருக்கு இன்ஸ்டா தான் மதர் ஹோம்… ரீல்ஸ் போடுறது, வ்ளாகுக்கு எடுத்த இமேஜசை போஸ்ட் பண்ணுறதுனு அங்கயே டேரா போடுறப்ப ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஆகுது எனக்கு…. இல்லனா ஐபில வந்த மெசெஜை பாத்து டைம் பாஸ் பண்ணலாம்.. இப்பலாம் எனக்கு ஐபில நிறைய லவ் ப்ரபோஸல்ஸ் வருது… ஒவ்வொன்னையும் பாக்குறப்ப ஆக்சிடோசின் ஜிவ்வுனு உடம்புல பரவும் பாருங்க… அதுலாம் வேற லெவல் ஃபீல்.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

கத்ரா, ரீசி மாவட்டம், ஜம்மு காஷ்மீர்….

திரிகூட மலைச்சிகரங்களின் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அச்சிறு நகரத்தில் சீறிப் பாய்ந்தோடும் செனாப் ஆற்றின் கரையோரத்தில் நின்று படகில் செல்பவர்களையும், ‘ரிவர் ராஃப்டிங்’ எனப்படும் ரப்பர் படகு சாகசத்தில் ஈடுபடும் கூட்டத்தினரையும் இலக்கின்றி வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

முன்நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேஜ் ஆறிக்கொண்டிருந்த காயத்தின் அடையாளமாக, அவளது அழகு வதனத்திற்கு வைத்த திருஷ்டி பொட்டாக உறுத்திக்கொண்டிருந்தது.

கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது. எதிரே ஓடிக்கொண்டிருக்கும் செனாப் நதியை விட அவளுக்குள் விரக்தியும் வெறுமையும் பிரவாகமாகப் பாய்ந்தோய்டிக்கொண்டிருந்தன.

சிறு சிறு சிராய்ப்புகளோடு சிவந்திருந்த செவிமடல்களில் ஒரு மாதத்திற்கு நடந்த துயரத்தின் போது உண்டான கூச்சல்களும், மக்களின் உயிர்ப்பய அலறல்களும், சடசடவென துப்பாக்கி குண்டுகள் பொழிந்த சத்தமும் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

நதியைப் பார்த்த விழிகள் சற்றே உயர்ந்து திரிகூட மலைச்சிகரங்களில் புள்ளியாய் தெரிந்த வைஷ்ணோதேவி கோவிலை நோக்கின.

“உன்னைப் பாக்கணும்னு தானே ஆசையா வந்தோம்… நாலு பேரா வந்தவங்களை இப்பிடி ரெண்டு பேரா திரும்பிப் போகவைக்குறியே… எங்க மேல அப்பிடி என்ன கோவம் உனக்கு?” என்று மனம் வைஷ்ணோதேவியிடம் இறைஞ்சியது.

சரியாக இருபத்தைந்து நாட்களுக்கு முன்னர் ஷிவ்கோரி குகைக்குச் சென்றுவிட்டு வைஷ்ணோதேவியைத் தரிசிக்க பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த மக்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் படுகாயமுற்ற முப்பத்து மூன்று பேரில் நம் மேகவர்ஷிணியும் அவளது தந்தையும் அடக்கம்.

மருத்துவ சிகிச்சை மற்றும் இளம்வயதின் காரணமாக அவள் குணமடைந்துவிட்டாள். ஆனால் அவளது தந்தை மோகனரங்கத்துக்கு அப்படி உடனே குணமாகிவிடவில்லை.

மருத்துவமனையின் இன்னும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவரை அங்கேயே விட்டுவிட்டு அவள் மட்டும் செனாப் ஆற்றங்கரைக்கு வந்து நின்றாள். சரியாக முப்பது நாட்களுக்கு முன்னர் இதே ஆற்றங்கரையில் நால்வராக நின்ற நினைவு அவளை வாட்டியது.

கூடவே ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் நடந்த துயரச் சம்பவத்தின் முடிவில் “மேகாஆஆஆஆஆ” என்று இரு ஜீவன்கள் அலறியபடியே உயிரை விட்டது திரைப்படக்காட்சியாய் கண் முன் விரிய மெல்லிய விம்மல் எழுந்தது மேகா என்ற மேகவர்ஷிணியிடம்.

விம்மியபடியே தன் முன்னே ஆர்ப்பரித்து ஓடும் செனாப் நதியைப் பார்த்தவளுக்கு நதிநீரில் பிம்பமாகத் தெரிந்தன மூன்று முகங்கள். அவளது தாயார் சரஸ்வதி, தமக்கை அனுக்ரஹா, தந்தை மோகனரங்கத்தின் முகங்களே அவை!

மூன்றாவதாகத் தெரிந்த தந்தையின் முகத்திடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டியவள் விம்மியபடியே தனது உடலைச் செனாப் நதிக்கு அர்ப்பணிக்கத் துணிந்த நேரத்தில் அவளது கவனத்தைப் பிய்த்துத் தன் பக்கம் இழுக்க துள்ளலாக எழுந்தது ஒரு இளைஞனின் குரல்.

“ஃபைனலி நம்ம கத்ரா வந்துட்டோம் காம்ரேட்ஸ்… எவ்ளோ அழகுல்ல இந்த செனாப் ரிவர்? கொஞ்சநாளுக்கு முன்னாடி தீவிரவாத தாக்குதலால நிலைகுலைஞ்ச பகுதி இது… இப்ப பாருங்க மக்கள் மறுபடியும் போட்டிங், ரிவர் ராஃப்டிங்னு இயல்பான வாழ்க்கையோட்டத்துல கலக்க ஆரம்பிச்சிட்டாங்க… இவ்ளோ தாங்க வாழ்க்கை… நமக்கு நடக்குற ஒவ்வொரு இழப்பும் ஏதோ ஒரு அனுபவத்தைக் குடுத்துட்டுப் போகும்… நம்மை விட்டு விலகிப்போனவங்க நமக்குனு சில கூடுதல் பொறுப்புகளைக் குடுத்துட்டுப் போயிடுவாங்க… அதை செய்யுறதுக்கு நம்ம திடமா இருக்கணும் தானே? எங்க அம்மா அடிக்கடி ஒன்னு சொல்லுவாங்க… ஜனனமும் மரணமும் தலைவிதிப்படி நடந்து தான் தீரும், அதுக்காக சம்பந்தப்பட்டவங்க வாழ்க்கை முடிஞ்சு போயிடாது… இன்னும் கூடுதல் பொறுப்போட வாழ்க்கைய சீரமைச்சு வாழவேண்டிய பொறுப்பு, கூட இருக்குறவங்களை நல்லபடியா வாழவைக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவங்களுக்கு இருக்கு… அதை உணர்ந்து மனசை திடமாக்கிக்கணும்… இதோ தீவிரவாதத்தால பத்து உயிர் போனதுக்கு அப்புறமும் இயல்பா வாழணும்னு பிடிவாதமா இருக்காங்களே இந்த மக்களை மாதிரி… எல்லாரோட வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் காம்ரேட்ஸ்… அதை தெரிஞ்சிக்காம அந்த வாழ்க்கைய வேஸ்ட் பண்ணுறது ரொம்ப தப்பு… கிட்டத்தட்ட சுயநலமும் கூட… கடவுள் குடுத்த இந்த வாழ்க்கையோட நோக்கமும் அர்த்தமும் நிறைவேறுற வரைக்கும் நம்ம வாழணும்… ஸ்ட்ராங்கா, செமய்யா வாழணும்… நம்ம கூட இருக்குறவங்களைச் சந்தோசப்படுத்திப் பாத்து வாழணும்… அர்த்தமாயிந்தா காம்ரேட்ஸ்?”

மேகவர்ஷிணியைத் தடுத்து நிறுத்தியது அவன் பேசிய நீண்ட பிரசங்கம். திரும்பிப் பார்த்தாள்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனின் முகம் காணக் கிடைத்தது.

பழுப்பு வண்ண ஜாக்கெட், வெண்ணிற டீசர்ட், ஜீன்ஸ் அணிந்த இளைஞன் ஒருவன் கையில் செல்பி ஸ்டிக்கோடு நின்று வ்ளாக் ஒன்றை படம்பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தான்.

“இங்க வர்றதுக்கு முன்னாடி டெரர் அட்டாக் நடந்த இடத்தைப் பாத்துட்டு தான் வந்தேன்… கிட்டத்தட்ட பத்து பேரோட உயிரைக் குடிச்ச அந்தப் பள்ளத்தாக்கைப் பாத்ததும் போன் சில்லிங் காம்ரேட்ஸ்… எதிர்பாக்காம விபத்தா நேருற மரணம் ரொம்ப குரூரமானது… அந்தக் குரூரத்தை அனுபவிச்சு இறந்த பத்து உயிருக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க… அந்தக் குரூரத்துல இருந்து தப்பிச்சு இன்னும் முப்பத்து மூனு பேர் ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க… அவங்களுக்காக அவங்க ஃபேமிலிக்காகவும் வேண்டிக்கோங்க… எங்கம்மா கூட்டுப்பிரார்த்தனை பண்ணுனா கடவுள் உடனே அதுக்கு மனசு இரங்குவார்னு சொல்லுவாங்க… அதுவும் அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு வேண்டுனா இன்ஸ்டண்டா அவரோட பார்வை பாதிக்கப்பட்டவங்க மேல திரும்புமாம்… அந்தக் கடவுள் இறந்தவங்களுக்கு அமைதியையும், உயிர் பிழைச்சவங்களுக்கு வாழ்க்கைய எதிர்கொள்ளுற தைரியத்தையும் குடுக்கட்டும்”

யாரென்றே தெரியாத அந்த இளைஞனின் பேச்சு நதிநீரில் கலந்துவிடும் முடிவோடு இருந்த மேகவர்ஷிணியைத் தடுத்தது.

“அம்மாவும் அனுவும் அப்பாவோட பொறுப்பை என் கிட்ட விட்டுட்டுப் போயிருக்காங்க… இப்ப நான் செத்துப்போகணும்னு நினைச்சது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்… என் பொறுப்பைத் தட்டிக் கழிக்க பாத்திருக்கேனே… நானும் இறந்துட்டா அப்பா தனியா நின்னுடுவார்… யாருமே இல்லாத தனிமைய அவருக்குக் குடுத்துட்டுப் போக நினைச்சேனே, ச்சே நான் எவ்ளோ பெரிய சுயநலவாதி?”

தன்னைத் தானே நொந்து கொண்டவள் மனம் கனத்தாலும் தலை மீது சுமத்தப்பட்டப் பொறுப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் தந்தையைக் காண கிளம்பினாள்.

கிளம்பும் முன்னர் வ்ளாகுக்காகப் பேசிக்கொண்டிருந்த அவ்விளைஞனை நன்றியோடு பார்த்தாள்.

பரிச்சயமான முகம் தான் அவனுடையது. இன்ஸ்டாக்ராம், யூடியூப், முகப்புத்தகம் என எதை எடுத்தாலும் “ஹலோ காம்ரேட்ஸ்” என்று துள்ளலான முகமனுடன் ஊர் சுற்றிக் காட்டும் அவனது முகம் ரீல்ஸ்கள், ஷார்ட்ஸ்களில் அடிக்கடி வருவதை அவளும் பாத்திருக்கிறாள்.

சில நேரங்களில் ஒவ்வொரு ஊராகச் சுற்றிக் காட்டுவான். சில நேரங்களிலோ களைகொத்தி, செடிகளுடன் அக்மார்க் தோட்டக்காரனாக மண்ணைத் தோண்டிக்கொண்டு ‘கார்டன் வ்ளாக்’ எடுத்துக்கொண்டிருப்பான்.

விசித்திரப்பிறவி என மேகவர்ஷிணி அவனை நினைத்ததுண்டு. கூடவே கமெண்டுகளில் குவியும் ‘ப்ரபோசல்களுக்கு’ அவன் பதிலளிக்கும் விதத்தை வைத்து ‘மினி கேசனோவா’ என்று உதட்டைச் சுழித்ததும் உண்டு.

ஆனால் இன்றைய பேச்சின் மூலம் அவனுக்குள்ளும் முதிர்ச்சியான மனிதன் ஒளிந்திருப்பதைக் கண்டவள் “தேங்க்ஸ் க்ளவுட்மேன்” என்று மனதுக்குள் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

‘தி க்ளவுட்மேன்’ இது தான் அவனது யூடியூப் சேனலின் பெயர். அவனுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அடைமொழியும் அதுவே.

தனது பேச்சு ஒரு பெண்ணின் தற்கொலை முடிவை மாற்றியதை அறியாதவனாக மும்முரமாக செனாப் நதியை வ்ளாகுக்காகப் படம்பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தான் அவன்.

சில நிமிடங்களில் நவீன கேமராவோடு ஒரு இளைஞன் “முகில் அந்தப் பக்கம் நிறைய கலர்ஃபுல்லான ஹையாசிந்த் ஃப்ளவர்ஸ் வளக்குறாங்கடா… அதை ஷூட் பண்ணலாம்… கம் ஆன் க்விக்” என்று ஆர்வத்தோடு சொல்லவும் முகத்தில் பிரகாசம் கூட அவனோடு கிளம்பினான் ‘க்ளவுட்மேன்’ எனப்படும் முகிலன்.

மேகவர்ஷிணி எண்ணியதைப் போல இருபத்தாறு வயதே ஆன இளைஞன். தமிழகத்தில் தலைசிறந்த ‘ட்ராவல் வ்ளாகர்கள்’ மற்றும் ‘கார்டன் வ்ளாகர்களில்’ முதலிடத்தில் இருப்பவன்.

மலைகளின் ராணியான உதகமண்டலத்தில் பிறந்தவனுக்குச் சிறு வயதிலிருந்தே மலர்களின் மீது பிரேமை உண்டு. விதவிதமான மலர்ச்செடிகளை வளர்ப்பது அவனுடைய பொழுதுபோக்காக இருந்தது.

தோட்டக்கலையைப் பட்டப்படிப்பாகத் தொடர எண்ணியவனைப் பொறியியல் படிப்பைத் தொடர வற்புறுத்தியவர் அவனுடைய தந்தை பாரிவேந்தன். மத்திய அரசுப்பணியிலிருந்தவருக்கு மகன் இலை தழையை அள்ளி, மண்ணைக் கிளறுவதில் உடன்பாடு இல்லை. விளைவு தமிழகத்தில் இலட்சோப லட்ச இளைஞர்களைப் போல பொறியியல் படித்தான் முகிலன்.

கணினி மென்பொருள் மொழிகள் பற்றிய தனிப்பட்ட கோர்ஸ்கள் எதையும் விட்டுவைக்காமல் மகனைப் படிக்கவைத்தார் பாரிவேந்தன். அவனும் கடனே என்று படித்தான். இரு ஆண்டுகள் வேலைக்கும் போனான்.

நல்ல சம்பளம் தான். ஆனால் உலகையே புரட்டிப்போட்ட பெருந்தொற்று அவனது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டதில் தொழில்நுட்ப வேலையை விட்டுவிட்டு ‘கார்டன் வ்ளாகிங்’ எனப்படும் தோட்டங்களை பற்றிய வ்ளாகுகளை எடுக்கத் தொடங்கினான்.

அதில் பாரிவேந்தனுக்கு உடன்பாடு இல்லை.

“இப்பிடி மண்ணுல புரளுறதுக்காகவா இவனை இவ்ளோ தூரம் படிக்க வச்சேன்? என் சர்க்கிள்ல இருக்குறவங்க எல்லாரும் உங்க மகன் முழுநேர தோட்டக்காரன் ஆகிட்டான் போலனு கிண்டல் பண்ணுறாங்க ரஞ்சனா” என்று தாயாரிடம் தந்தை பொருமியதை எல்லாம் அவன் செவிமடுத்தால் தானே!

விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு ஃபெர்ன் ஹில் பகுதியில் அத்தனை ஆண்டுகள் வாடகைக்கு இருந்த ப்ரிட்டிஷ் பாணி வீட்டை விலைக்கு வாங்கிய பாரிவேந்தனுக்கு, வீட்டைச் சுற்றிலும் புல்தரையாகக் கிடந்த இடத்தை மலர்களுக்கான நந்தவனமாகவும், செடி கொடிகள் வளர்க்கும் பசுமை குடில் பரிசோதனை மையமாகவும் மைந்தன் மாற்றியதில் வருத்தம் எதுவுமில்லை தான்.

ஆனால் யூடியூபும், செடி கொடிகளும் மட்டும் வாழ்க்கை ஆகிவிடாதே! இந்த அவசர உலகத்தில் பணம் வருவதற்கான வழிகள் எல்லாம் அவ்வபோது மாறிக்கொண்டே இருக்கும். மக்களுக்குத் திடுமென ஐ.டி வேலையில் மோகம் வந்தபோது அனைவரும் அதை நோக்கி படையெடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் அது தணிந்த பிற்பாடு திடுமென முளைத்தது யூடியூபில் தலை காட்டி சம்பாதிக்கும் மோகம். இதற்கும் பிரகாசமான எதிர்காலம் இருக்குமென அறுதியிட்டுச் சொல்ல முடியாதே! என்றைய தினம் யூடியூபர்கள், வ்ளார்கள் மீதான மக்களின் ஆர்வம் வடிகிறதோ அன்று மைந்தனைப் போன்ற ‘சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள்’ வருவாய்க்கு என்ன செய்வார்கள் என்று பாரிவேந்தன் யோசித்தார்.

அவரது மைந்தன் அவரை விட புத்திசாலி என நிரூபித்தான். யூடியூபில் ‘கார்டன் வ்ளாகராக’ மட்டுமே இருந்தவன் பெருந்தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியதும் ‘ட்ராவல் வ்ளாகர்’ அவதாரம் எடுத்தான்.

முந்தையதை விட பிந்தைய வ்ளாகுகள் அதிக பார்வை பெறவும் உற்சாகமாகப் புதுபுது இடங்களுக்குச் சென்று சுவாரசியமான வ்ளாகுகளைப் படம்பிடித்து இளைஞர்கள் மத்தியில் பேசப்படலானான் முகிலன்.

கிடைத்த வருவாயை மற்ற ‘சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்களைப்’ போல கார், ஆடம்பர சுற்றுலா என வீணடிக்காமல் அவன் வசித்து வந்த ஃபெர்ன் ஹில் பகுதியில் இன்னொரு வீட்டை வாங்கி ‘ஹோம் ஸ்டே’வாக மாற்றினான்.

யூடியூப் கைவிட்டாலும் கைவசம் தொழில் இருக்கவேண்டும் என்பதில் அவன் கவனமாக இருந்தான்.

அவனது ‘பக்கெட் லிஸ்ட்’டில் உள்ள ஆசைகளில் ‘ஹோம் ஸ்டேவை’ விரிவாக்குவது, வருவாய் தரக்கூடிய பழத்தோட்டம் ஒன்றை வாங்குவது போன்றவையும் அடக்கம்.

இத்தகைய கனவுகளின் பின்னே ஓடினாலும் சிடுமூஞ்சியாக இல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாக அனுபவிக்கும் சராசரி இளைஞனே நம் முகிலன்.

அவனுக்கு ஏற்ற நண்பனாகக் கிடைத்த ராமுக்கு புகைப்படக்கலை மற்றும் வீடியோ எடுப்பதில் ஆர்வமும் அறிவும் அதிகம். எனவே அவனைப் படப்பிடிப்புக்கான ஒளிப்பதிவாளனாகத் தன்னுடன் வைத்துக்கொண்டான் முகிலன்.

புகைப்படக்கலை பற்றிய தொழில்நுட்பங்கள் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் ‘டெக் வ்ளாகராக’ ராம் ஒரு பக்கம் ஜொலித்தான்.

நல்ல நண்பர்கள் சேர்ந்தே வளர்வார்கள் அல்லவா! அப்படிப்பட்டவர்கள் முகிலனும் ராமும். இருவரும் த்ரில்லை விரும்பும் ரகம்.

இருபத்தைந்து நாட்களுக்கு முன்னர் தீவிரவாதத்தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்து வ்ளாக் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வேறு யாருக்கும் வருமா?

ரஞ்சனா எச்சரித்து தான் இருவரையும் அனுப்பி வைத்தார்.

இதோ இருவரும் காஷ்மீர் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ரீசி மாவட்டத்தின் ஒவ்வொரு மூலையையும் வ்ளாக் ஆக்கி தனது சப்ஸ்க்ரைபர்களின் கண்ணுக்கு விருந்தாக அளித்துவிட்டான் முகிலன்.

இனி பாக்கி இருப்பது காஷ்மீரில் பிரத்தியேகமாக வளர்கிற மலர்ச்செடிகளைச் சேகரித்து எடுத்துச் செல்வது மட்டுமே. முகிலனின் நந்தவனத்தில் இல்லாத பூக்களே இல்லை என ஃபெர்ன் ஹில் வாசிகள் பேசவேண்டாமா!

எங்கே பயணித்தாலும் அந்தப் பிராந்தியத்தில் வளரும் மலர்ச்செடி ரகங்களைச் சேகரித்து அதைத் தனது நந்தவனத்தில் வளர்ப்பதில் முகிலனுக்கு அலாதி பிரியம்.

இப்போது அவனும் ராமும் ஓடுவது ஹையாசிந்த் எனப்படும் நறுமண அலங்கார மலர்வகைக்கான கிழங்கை வாங்குவதற்கு தான்.

ராமும் அவனும் போன இடத்தில் தரையெங்கும் ஹையாசிந்கள் செழித்து வளர்ந்திருந்தன.

ஆகாயநீலவண்ணம், மஞ்சள், லைலக், க்ரிம்சன் சிவப்பு என ஒவ்வொரு நிறமும் மனதைப் பறித்தது. அதன் நறுமணம் அங்கிருந்த காற்றில் ஆக்சிஜனோடு சரிநிகர் சமானமாகக் கலந்துவிட்டிருந்தது.

அவற்றை அழகுக்காக வளர்ப்பதாகச் சொன்னார் காஷ்மீரி மனிதர் ஒருவர்.

“இது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்த பூ… இதுக்கு வணிக பயன்பாடும் உண்டு… சமவெளிகள்ல இருக்குற ஆறு குளங்கள்ல வளருற ஆகாய தாமரை பூவும் இதுவும் பாக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்” என்று விளக்கமளித்தவரிடம் சில மலர்களையும் கிழங்குகளையும் வாங்கிக்கொண்டான் முகிலன்.

அவரிடம் அனுமதி பெற்றுவிட்டு முழங்கால் உயரத்துக்கு வளர்ந்து நின்ற ஹையாசிந்த் செடிகளை ‘கார்டன் வ்ளாகுக்காக’ படம் பிடிக்க ஆரம்பித்தார்கள் அவனும் ராமும்.

“ஹலோ காம்ரேட்ஸ்… இவர் நம்ம ஃப்ரெண்ட் வனிஷ் கவுல்… இது இவரோட தோட்டம் தான்… இந்த ஃப்ளவர்சை ஹையாசிந்த்னு சொல்லுவாங்க… இதோட வாசம் இங்க இருக்குற காத்தை ஹோல் சேலுக்கு வாங்கிடுச்சுனு சொல்லலாம்… அவ்ளோ ஃப்ரெஷ்ஷான ஃப்ராக்ரன்ஸ்… இவ்ளோ லவ்லியான ஃப்ளார் நம்ம தோட்டத்துல இல்லனா நல்லா இருக்குமா? வனிஷ் ப்ரோ கிட்ட இந்தச் செடிக்கான கிழங்குகளை வாங்கிட்டு நானும் ராமும் ரீசில இருந்து இன்னும் கொஞ்சநேரத்துல கிளம்பிடுவோம்… அதுக்கு முன்னாடி இந்த ப்ளூ கலர் ஃப்ளார் எல்லா காம்ரேட்சுக்கும் டெடிகேட் பண்ணுறேன்… நம்ம க்ளவுட் ஃபேமிலிங்கிற தோட்டத்துல நீங்க எல்லாரும் இந்த ஃப்ளார் மாதிரி எப்பவும் மலர்ந்து மணம் வீசணும்… அப்புறம் இந்த க்ரிம்சன் ரெட் கலர் ஃப்ளார்சை தினமும் எனக்கு ஐ.பில லவ் டார்ச்சர் குடுக்குற லவ்லி கேர்ள்சுக்கு டெடிகேட் பண்ணுறேன்… ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ரெட் ரோஸ் வாங்குறதை விட இப்பிடி மொத்தமா குடுத்துட்டா பெஸ்ட்னு தோணுச்சு… லவ் யூ ஆல்… சீக்கிரமே இந்த ஹையாசிந்த் கிழங்கை நம்ம கார்டன்ல வளக்குறதுக்கான வ்ளாகோட உங்களை மீட் பண்ணுறேன்… நான் உங்க க்ளவுட்மேன்… இது தி க்ளவுட்மேன் சேனல்… ஸ்டே டியூண்ட்”

நண்பர்களிடம் உரையாடுவது போல வ்ளாகை எடுத்து முடித்துவிட்டு இருவரும் வனிஷ் கவுலிடம் ஹையாசிந்த் மலர்க்கிழங்குகளை வாங்கிக்கொண்டார்கள். முகிலன் அவரிடம் அதை நட்டு வைப்பதற்கான பக்குவம், அதற்கு எம்மாதிரியான சீதோஷ்ணம் தேவைப்படும் போன்ற விபரங்களைக் கேட்டுக்கொண்டான்.

ராமுடன் அவன் ரீசியை விட்டுக் கிளம்பியபோது அவனது வார்த்தைகளின் வலிமையால் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்ட மேகவர்ஷிணி அவளது தந்தையின் உடலில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மருத்துவர் கூறுவதை ஆனந்தக்கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்தாள்.

முகிலன் மட்டும் செனாப் நதிக்கரைக்கு வராமல் போயிருந்தால் இந்த சந்தோசத்தை அவள் அனுபவித்திருப்பாளா? இந்நேரம் அவளே ஜலசமாதி அடைந்திருப்பாளே! மேகவர்ஷிணியின் உள்ளம் முகிலனை நன்றியோடு நினைத்துக்கொண்டது ஆயிரமாவது முறையாக!

46 thoughts on “MM 1”

  1. Avatar

   Excellent start dear. Neraya theriyaatha vishayam kathaila include pannrathula best da nee. Keep up the good work 👌👌👌👍👍👍

 1. M. Sarathi Rio

  மேகத்தின் மோனம்..!
  (அத்தியாயம் – 1)

  ஓ மை காட்…! எடுத்தவுடனே தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட முப்பத்துமூணு பேர், அதில் தாயையும், தமக்கையையும் இழந்த நாயகி, தந்தை இன்னும் மருத்துவ கண்காணிப்பில், அதைத் தவிர
  தற்கொலை புரியும் எண்ணத்தோடு நதிக்கரையில் காத்திருக்கும் நாயகி… என்று
  அதிரடியான சோக காட்சிகளோடு ஸ்டார்ட் பண்ணாலும், நம்ம ஹீரோவோட பாஸிடீவ் அப்ரோச்சிங் ஸ்பீச்சால அந்த எண்ணத்தையே கை விட்டு தன்
  கடமையை ஆற்ற மீண்டும் துணிவோடு களமிறங்கும் நாயகின்னு… முதல் அத்தியாயமே வழக்கமான அட்டகாசத்தோடு ஆரம்பிச்சிருக்காங்க.

  இதுல என்னவொரு கோஇன்ஸிடன்ட்ஸ்ன்னா
  நாயகன் பெயர் முகிலன்,
  நாயகி பெயரும் மேகவர்ஷிணி
  அதாவது ரெண்டுபேரோட பேருமே மேகத்தை தான் குறிக்குது. மேகம்ன்னாலே பூமியின் தாகத்தை தீர்க்க மழையைத்தானே கொண்டு வரும். இதுல நாயகியோட பேரோட வர்ஷிணிங்கிற பேரும் இணைஞ்சு மழையையும் குறிக்குது. வெரி நைஸ் எபி.

  CRVS (or) CRVS 2797

  1. ஆமா… எதேச்சையா கேக்குற சில வார்த்தைகள் நமக்குத் தைரியத்தை குடுக்கும்… அப்பிடி தான் முகிலோட வார்த்தை மேகாவ காப்பாத்திருக்கு

 2. Avatar

  சாகணும்னு போன பொண்ணுக்கு இப்படி ஒரு பாசிட்டிவ்வான வார்த்தைகளை கேட்க நேர்ந்தது கடவுளோட செயல்தான். ஒரு பொண்ணோட உயிரை காப்பாற்ற செய்தது மட்டுமல்லாமல் அவளை பெத்த வரையும் மறைமுகமா காப்பாற்றின பெருமை முகிலனை தான் சேரும். ஆனால் இது எதுவுமே அவனுக்கே தெரியாமல் நடந்தது அப்படிங்கறது தான் இதுல விசேஷம்.

 3. Avatar

  அருமையான ஆரம்பம்!!… வார்த்தைகள் எவ்வளவு வல்லமையானது??… நல்ல வேளை புரிஞ்சு மனசை மாத்திக்கிட்டா!!… இன்ட்ரஸ்டிங் எபி கா!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *