Skip to content
Home » MM 3

MM 3

‘நீ இப்பிடி தான் இருந்தாகணும், நான் சொல்லுறதை கேக்கணும்’ இப்பிடி யாராச்சும் சொன்னா முதல்ல அவங்களை என்னோட ப்ரையாரிட்டி லிஸ்ட்ல இருந்து இறக்கிவிட்டிருவேன்… சிலரை ஸ்ட்ரைக் அவுட் பண்ணி தூக்கி வீசுன வரலாறும் உண்டு… என்னால எல்லாரையும் சந்தோசப்படுத்த முடியாதுங்கிற ஹார்ஷ் ரியாலிட்டிய நான் எப்பவோ புரிஞ்சிக்கிட்டேன்… and I’m not born to please everyone around me… என்னோட ஸ்டைல்ல எனக்கான கனவுகளை அடைஞ்சு எனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்க விரும்புறேன்… அதுல யாரோட தலையீட்டையும் நான் அனுமதிக்குறதில்ல.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

முகிலன் வாழ்த்து சொன்னதில் உற்சாகமான மேகவர்ஷிணி தேர்வை நன்றாகவே எழுதி முடித்தாள். கல்லூரிகளில் தேர்வு முடிந்ததும் விடப்படுகிற விடுமுறைகள் மாதக்கணக்கில் எல்லாம் நீள்வதில்லை.

இருப்பினும் கிடைத்த விடுமுறை நாட்களை எல்லாம் எப்படி கழிப்பதென்ற மலைப்பு அவளுக்கு. மோகனரங்கம் தன்னைப்போல புத்தகங்களில் உலகை மறக்க மகளுக்கு அழைப்பு விடுத்தார்.

“புக்கா? அதுல்லாம் டூ ஓல்ட் ஃபேஷன்… ஆல்ரெடி நான் புக் ரீடிங் ஆப் வச்சிருக்கேன்… அதுல டெய்லி ரெண்டு கதை கேக்குறானாக்கும்… முகிலோட சேனல்ல ஒரு புரொமோ கோட் குடுத்தான்… அதனால ஃபிப்டீன் பர்சென்டேஜ் டிஸ்கவுண்ட் வேற… எனக்கு அது போதும்… நீ புதுசா ஏதாச்சும் சொல்லுப்பா”

“அப்ப உங்க மாமா வீட்டுக்குப் போய் பத்து நாள் இருந்துட்டு வர்றியா?”

“மாமா வீடா? ஜெயில்னு சொல்லுப்பா… அங்க போனா காலையில ஆறு மணிக்கே முழிக்கணும், தலையை விரிச்சுப் போடக்கூடாது… நைட்டி போடக்கூடாதுனு அத்தை ஆயிரம் ரூல்ஸ் போடுவாங்க… எனக்குச் செட் ஆகாதுப்பா”

“அப்ப சித்தி வீடு?”

“உன்னைத் தனியா விட்டுட்டு நான் எங்கயும் போகமாட்டேன்பா… வேற ஏதாச்சும் வழி சொல்லு”

மகளின் மனநிலையை உணர்ந்தவர் என்ன செய்யலாமென யோசித்துவிட்டுப் பிற்பாடு சொல்வதாகக் கூறவும் அப்போதைக்கு அமைதியானாள் மேகவர்ஷிணி.

திருவான்மியூரில் இருக்கும் அரசு நூலகத்திற்கு புத்தகங்கள் எடுக்கப் போனவர் தனது சக வாசக நண்பரிடம் மகளுக்கு விடுமுறை நாட்களில் பொழுது போகவில்லை என்று கூறி உபாயம் கேட்கவும் அவரும் மேகவர்ஷிணியின் தற்போதைய கார்டன் வ்ளாக் ஆர்வத்துக்கு ஏற்றபடி ஒரு வழியொன்றைக் கூறினார்.

“தமிழ்நாடு கவர்மெண்டோட ஹார்ட்டிகல்சர் டிப்பார்ட்மெண்ட் வருசா வருசம் மாடித்தோட்டம் கிட் மானிய விலைல குடுப்பாங்க மோகன் சார்… ஜஸ்ட் டூ ஹண்ட்ரெட் அண்ட் ட்வெண்டி ஃபைவ் ருபீஸ் குடுத்தா போதும்… ஒரு ஆதார் நம்பருக்கு ரெண்டு கிட் வாங்கிக்கலாம்… உங்க பொண்ணுக்குச் செடி வளர்ப்புல ஆர்வம், அது சம்பந்தப்பட்ட வ்ளாக்ஸ் எல்லாம் பாக்குறானு சொன்னிங்களே… அவளை ஹார்ட்டிகல்சர் டிப்பார்ட்மெண்டோட சைட்ல அப்ளை பண்ணச் சொல்லுங்க… கண்டிப்பா கிட் கிடைக்கும்… இல்லனா ஹார்ட்டிகல்சர் ஆபிசுக்கு நேர்ல போய் அப்ளை பண்ணி கிட் வாங்கிக்கலாம்”

மகளிடம் அதைச் சொன்னதும் குதூகலித்துப்போனாள்.

“திருவான்மியூர் ஆபிசுக்கு எதுக்கு அலையணும்பா? நான் ஆன்லைன்ல அப்ளை பண்ணுறேன்… எப்ப கிட் வருதோ வரட்டும்” என்று சொல்லிவிட்டாள்.

“இதுல என்ன அலைச்சல் இருக்கு? நம்ம ரெண்டு பேரோட ஆதார் கார்டையும் வச்சு அப்ளை பண்ணி கையோட வாங்கிட்டு வந்துடுவோம்டா” என்ற மோகனரங்கம் சொன்னபடி மகளை அழைத்துச் சென்று விண்ணப்பிக்க வைத்து காய்கறித்தோட்டம் மற்றும் மூலிகைத்தோட்டத்துக்கான கிட்கள் நான்கை வாங்கிவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்கள் புக்லெட்டிலுள்ள விவரங்களைப் படித்து க்ரோ பேக்குகள் எனப்படும் செடிகளை வளர்ப்பதற்கான பைகளில் தென்னைநார்க்கட்டிகளை எடுத்து வைத்தார்கள் தந்தையும் மகளும்.

பொதுவாக மாடித்தோட்டங்களில் மண்ணிற்கு பதிலாக இம்மாதிரியான தென்னைநார்க்கட்டிகளில் தான் செடி வளர்ப்பது வழக்கம். அதற்கு தண்ணீரை வெகு நேரம் பிடித்துவைத்துக்கொள்ளும் தன்மை உண்டு.

பார்ப்பதற்கு செங்கல் போல இருக்கும் தென்னைநார்க்கட்டிகளை தண்ணீரில் ஊறவைத்தால் அவை மண் போன்ற பதத்திற்கு வரும். பின்னர் அவற்றை க்ரோ பேக்குகளில் நிரப்பி நமக்கு வேண்டிய விதைகளை அந்தப் பேக்குகளில் நட்டு வைத்து தோட்டத்தில் செடி வளர்ப்பதை போல வளர்க்கலாம்.

இந்த வேலைகளை எல்லாம் செய்வதில் மோகனரங்கமும் மேகவர்ஷிணியும் மும்முரமாகிவிட்டதால் ஒரு நாள் முழுவதும் முகிலனின் யூடியூப் சேனலைப் பார்க்கவில்லை அவள்.

மறுநாள் விடியலில் மொட்டை மாடியில் கோகோபீட் எனப்படும் தென்னைநார்ப்பொடி நிரம்பிய க்ரோ பேக்குகளைப் பார்வையிட்டபடி அவனது சேனலை நோட்டமிட்டவள் முந்தைய நாளிரவு அவன் பதிவேற்றியிருந்த வீடியோவுக்குப் பதிலாக கிரிப்டோ கரென்சி பற்றிய வீடியோ ஒன்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.

“என்னாச்சு இவனுக்கு? க்ரிப்டோ கரன்சி இன்வெஸ்ட்மெண்டுக்கு ஸ்பான்சர் ஆட் பண்ணுறானா?” என்று சந்தேகமாகத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டு பிற வீடியோக்களைப் பார்வையிடலாமென தேடியவளுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

முகிலனின் ‘தி க்ளவுட்மேன்’ யூடியூப் சேனலில் வேறு எந்த வீடியோக்களும் இல்லை. ஒருவேளை சேனல் ஹேக் ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் எழவும் அவசரமாக செய்தி தொலைக்காட்சி சேனல்களைத் தேடிப் பார்த்தாள்.

அதில் தமிழகத்தின் பிரபலமான யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் முடக்கிவிட்டு அவற்றில் க்ரிப்டோ கரன்சி மற்றும் ஈத்ரியம் பற்றிய வீடியோவை பதிவேற்றியிருப்பதாகவும் இது குறித்து யூடியூபுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

எப்படியும் இந்த ஹேக்கிங்கிலிருந்து சேனல்களை மீட்டு பழையபடி அவர்களின் வீடியோக்களையும் ‘ரெஸ்டோர்’ செய்வதற்கு இருபத்து நான்கு மணிநேரம் அவகாசம் தேவைப்படுமென செய்தியில் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் மேகாவின் முகம் வாடிப்போய்விட பாதிக்கப்பட்ட முகிலனோ உதகமண்டலத்தில் உச்சபட்ச கோபத்திலும் இயலாமையிலும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனது கடுகடு முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி தோசை விள்ளலை விழுங்கினார் பாரிவேந்தன். அவனிடம் நேரடியாகப் பேசாமல் ரஞ்சனாவிடம் ஜாடையாகப் பேச ஆரம்பித்தார்.

“இன்ஜினியரிங் படிச்சு என்ன பிரயோஜனம் ரஞ்சு? ஹேக்கரால கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பாஸ்வேர்ட் வைக்க தெரியல சிலருக்கு… தமிழ்நாட்டுல பெரிய யூடியூபர்னு பேரு… ஆனா பாஸ்வேர்டை கோட்டை விட்டுட்டான் பாரு… இதுக்குத் தான் இன்ஜினியரிங்கை நல்லா படிச்சிருக்கணும்னு தலைதலையா அடிச்சுக்கிட்டேன்”

இருந்த தலைவலியில் தந்தையின் கிண்டலும் சேர்ந்துகொள்ள அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்துவிட்டு எழுந்தான் அவன்.

“ஹேக்கர்ஸ் ஒன்னும் பாஸ்வேர்டை வச்சு நம்ம அக்கவுண்டை ஹேக் பண்ணமாட்டாங்க… அவங்க ஹேக் பண்ணுறது நம்மளோட லாகின் செஷனை… எப்பவுமே நம்ம மொபைல்ல ஜிமெயில், ஃபேஸ்புக் எல்லாம் லாகின்ல இருக்கும்… அதை தான் லாகின் செஷன்னு சொல்லுவாங்க… அந்த செஷனை ஹேக் பண்ணி நம்ம அக்கவுண்டுக்குள்ள புகுந்து திருட்டு வேலை பாப்பாங்க ஹேக்கர்ஸ்… அதனால தான் வித்தியாசமான இடத்துல நம்ம அக்கவுண்ட் லாகின் ஆகுதுனு நோட்டிபிகேசன் வந்தா உடனே பாஸ்வேர்டை மாத்த சொல்லுறாங்க… இதுல்லாம் இன்ஜினியரிங்ல நான் கத்துக்கல… என் இத்தனை வருசம் யூடியூப் அனுபவம் எனக்குக் கத்துக் குடுத்த விஷயம் இதுல்லாம்… சொல்லும்மா இவர் கிட்ட”

கடுப்புடன் உரைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவன் சிறுபிள்ளையிலிருந்து ஆசையாய் உருவாக்கிய அவனுடைய நந்தவனத்துக்குள் புகுந்துகொண்டான்.

அங்கில்லாத மலர்களே இல்லை எனலாம். புது விருந்தியாளியாக காஷ்மீரிலிருந்து வந்த ஹையாசிந்தில் ஆரம்பித்த மணம் வீசும் பியோனி மலர்கள், பல்வண்ண ஆர்கிட்கள், டேலியாக்கள், வகை வகையான ரோஜாக்கள் என கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் மலர்கள் அங்கே செழித்து வளர்ந்திருந்தன.

ஆர்கிட்கள் மற்றும் சில மலர்களை மட்டும் ‘பாலி ஹவுசில்’ வளர்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.

பச்சை வண்ண ஆடையில் வண்ண வண்ண மலர்களால் அலங்காரத்தையல் இருந்தால் பார்ப்பதற்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் அல்லவா! அதே குளிர்ச்சியைத் தரவல்லது முகிலனின் அந்த நந்தவனம். அதற்கு ‘ஈடன்’ என்று பெயரும் வைத்திருந்தான் அவன்.

அவனது சந்தோசத்தையும் துக்கத்தையும் மலர்களுடன் பகிர்ந்துகொள்வான். அன்னையிடம் வருத்தத்தைக் காட்டினால் அவரும் வருந்துவார். தந்தையோ யூடியூபர் ஆனதால் தான் இந்த நிலையென இடித்துரைக்க கிடைத்த வாய்ப்பாக அவனது சோகத்தைப் பயன்படுத்திக்கொள்வார்.

எனவே தான் வழக்கம் போல மலர்கள் மணம் பரப்பும் ஈடனுக்குள் வந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

அவனது இரண்டு சேனல்களையும் ஹேக்கர்கள் முடக்கியது கை கால்களை முடக்கியது போன்ற உணர்வைக் கொடுத்தது முகிலனுக்கு. யூடியூபுக்கு மின்னஞ்சல் அனுப்பியாயிற்று. இருப்பினும் பழைய வீடியோக்கள் அனைத்தும் சேதாரமின்றி திரும்புமா என்ற பதபதைப்பு அவனுக்குள்.

அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக பாரிவேந்தனின் குத்தல் பேச்சுகள் அமைய தந்தையை எதிர்த்தும் பேச முடியாமல் அதே நேரம் அவரது வார்த்தை கணைகளைத் தாங்கிக்கொள்ளவும் முடியாமல் தவித்தவனுக்கு இம்மலர்களைத் தவிர வேறு யாரால் தான் அடைக்கலமும் ஆறுதலும் கொடுத்து விடமுடியும்?

பாலிஹவுசின் வாயிலில் சிறிய முக்காலி ஒன்றை போட்டு கண் மூடி அமர்ந்தவனின் கவனத்தை மொபைலில் வந்த நோட்டிபிகேசன் சத்தங்கள் களைத்தன.

எப்போதும் அந்தச் சத்தம் கேட்டதும் அவசரமாக எடுத்து பதிலளிப்பவனுக்கு இப்போதோ கொஞ்சம் அமைதியாக இருந்தால் தேவலை என்ற மனநிலை.

கடந்த சில மாதங்களாகவே அவனுக்குத் தொடர்ந்து ஒரு சாராரிடமிருந்து வந்து கொண்டிருந்த அழுத்தமும் மிரட்டலும் இந்த ஹேக்கிங் ஏன் அவர்களின் சதியாக இருக்கக்கூடாதென்ற சந்தேகத்தை விதைத்திருந்தது.

ஒருவேளை அவர்கள் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாதென அனைத்து முன்னணி சேனல்களையும் ஹேக் செய்திருப்பார்களோ? ஒருபக்கம் மூளை இவ்வாறு யோசித்தாலும் இன்னொரு பக்கம் தன்னைப் பழிவாங்க இத்தனை சேனல்களை ஹேக் செய்வார்களா என்று தர்க்கரீதியானப் பிழையைக் கண்டுபிடித்து வாதிட்டது.

ராம் தான் சேனலை மீட்பதற்காக யூடியூபிடம் போராடிக்கொண்டிருந்தான். அவன் மற்ற சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர்களிடம் பேசியவரை இது உலகளவில் அனைத்து மொழி யூடியூப் சேனல்களையும் பாதித்த பிரச்சனை எனத் தெரியவந்தது.

எப்படியும் சேனல் மீண்டும்விடுமென அவனும் தன் பங்குக்கு ஆறுதல் கூறினான்.

இரு இளைஞர்களின் தவிப்பைப் போக்கும்படியாக ‘தி க்ளவுட்மேன்’ யூடியூப் சேனல் ஹேக்கர்கள் வசமிருந்து மீட்கப்பட்டது. யூடியூப் அவர்களின் அனைத்து வீடியோக்களையும் மீட்டுக் கொடுத்துவிட்டது. அவர்களோடு சேர்ந்து ஏனைய பிரபல யூடியூபர்களின் சேனல்களும் மீட்கப்பட்டன.

ராமும் முகிலனும் இதை சந்தோசமாகக் குடும்பத்தினரிடம் கூறி கொண்டாடியபோது தான் முகிலனுக்கு எதிரான உண்மையான பழிவாங்கும் படலம் அவனது சேனலில் ஆரம்பித்தது.

ஆம்! அவனது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றிலிருந்த ‘ரான்சம்வேர்’ அவனது மடிக்கணினியில் இருந்துகொண்டு சரியாக யூடியூப் சேனலை லாகின் செய்தபோது அந்த செஷனை ஹேக் செய்தது.

அதை அனுப்பிவைத்த ஹேக்கர் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் மார்ஃபிங் செய்த ஆபாச வீடியோ ஒன்றை ‘தி க்ளவுட்மேன்’ யூடியூப் சேனலில் பதிவேற்றினான்.

அதில் இளம்பெண் ஒருத்தியோடு முகிலன் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதாவது டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக அந்த வீடியோவிலிருந்த ஆணுக்குப் பதிலாக முகிலனின் முகம் அதில் வந்துவிட தமிழகத்தின் முதன்மையான யூடியூப் சேனல் என்பதால் உடனடியாக பார்வைகளும் எகிற தொடங்கின.

இவையெல்லாம் வெறும் அரை மணி நேரத்தில் அரங்கேறிவிட ராம் சுதாரித்து அந்த வீடியோவை ப்ரைவேட் வீடியோவாகப் போடுவதற்குள் பல்லாயிரம் பார்வைகளும், பகிர்வுகளும் கூடவே பதிவிறக்கங்களும் நடந்தேறியிருந்தன.

எப்போதடா முகிலன் சிக்குவான் என காத்திருந்த ‘ட்ரால் யூடியூபர்கள்’ இந்த வீடியோவைக் காட்டி அவனை காமக்கொடூரனாகச் சித்தரித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தால் நீங்கள் விரும்பப்படும் பிரபலம் ஆகும்போதே உங்களுக்குத் தெரியாமல் வெறுப்புகளைச் சம்பாதித்துவிடுவீர்கள்! அதற்கு பெரிதாகக் காரணம் ஒன்றும் தேவையில்லை.

அப்படி தான் முகிலனுக்கும் எண்ணற்ற ‘ஹேட்டர்கள்’ இருந்தார்கள். அவர்களுக்கு முகிலனின் சேனலில் பதிவேறிய ஆபாச வீடியோ பதிவு கொண்டாட்டமாகப் போய்விட்டது.

போதாக்குறைக்கு வீடியோவிலிருந்த பெண் தற்கொலைக்கு வேறு முயன்றுவிட காவல்துறை முகிலனைக் கைது செய்தது.

அவனது தரப்பு நியாயம் என்னவென விளக்கமளிக்க கூட அவனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

போராடியும் சிலருக்குக் கிடைக்காத வாழ்க்கையும், பிரபலத்துவமும், வருவாயும் சுலபத்தில் முகிலன் என்ற யூடியூபருக்குக் கிடைத்துவிட்டதாகவே பலருக்கு எண்ணம். அந்த எண்ணம் காவல்துறைக்கும் இருக்குமே!

இளம்வயதில் ஒருவன் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சராக ஜெயித்து பொருளாதாரரீதியில் முன்னேறுகிறான் என்றால் அவனை வசைமாரி பொழியும் சமூக வலைதள பயனர்களின் மனநிலையில் தான் பொதுமக்களும் அவனைப் பார்த்தார்கள்.

ரஞ்சனாவும் பாரிவேந்தனும் இதை எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மகனை காவல்துறையினர் கைது செய்து இழுத்துச் சென்ற காட்சியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அழக் கூட தோன்றவில்லை ரஞ்சனாவுக்கு.

பாரிவேந்தன் மனைவியைப் பார்ப்பாரா? மகனை காப்பாற்ற போவாரா? ராம் தான் அவர்களுக்குச் சட்ட ஆலோசனை தருகிற பிரபல வழக்கறிஞர் மனுவேந்தனைச் சந்திக்க ஓடினான்.

அவன் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த முகிலனுக்கோ இந்த அனுபவம் பேரதிர்ச்சியாக அமைந்தது.

வேறு எதுவும் புகாரில் அவன் கைது செய்யப்பட்டிருந்தால் இத்துணை தூரம் அதிர்ந்திருக்க மாட்டான். இளம்பெண்ணொருத்தியோடு நெருக்கமாக இருந்த தருணத்தை வீடியோ எடுத்து அதை தனது சேனலில் பதிவேற்றியதாகச் சாட்டப்பட்ட குற்றம் அவனை நிலைகுலைந்து போகவைத்துவிட்டது.

கடந்த இரு நாட்களாகச் சேனல் ஹேக் செய்யப்பட்டபோதிருந்தே கடும் மனவுளைச்சலுக்கு ஆளானவன் சேனல் மீண்டுவிட்டதென ஆசுவாசமுறும் முன்னர் மாபெரும் பழிக்கு ஆளாகிவிட்டானே!

காவல்துறையினர் அவனைக் கைது செய்தபோதே மூளை மரத்துப்போன உணர்வு!

வேறு எந்தப் பழியையும் துடைத்துவிடலாம்! கடந்தும் விடலாம்! ஆனால் இது பெண்ணொருத்தியோடு சம்பந்தப்பட்ட விவகாரமாயிற்றே! அத்துணை எளிதில் மறக்க முடியாத சம்பவம்! ஊடகங்கள் அதை மறக்கவும் விடாது!

தன் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோருக்கு இனி என்ன பதில் சொல்வதென பரிதவித்தபடியே காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டான் முகிலன்.

அதே நேரம் சமூக வலைதளங்களில் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பதை அவனது ரசிகையான மேகவர்ஷிணியும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது மனம் ஏனோ முகிலன் மீது தவறு இருக்குமென நம்பத் தயங்கியது.

“அவன் கமெண்ட் செக்சன்லயே பொண்ணுங்க கிட்ட கடலை போடுவான் ப்ரோ… இப்ப லவ் பண்ணுனவளைக் கூட்டிட்டுப் போய் மஜா பண்ணிருக்கான்… அதை வீடியோவும் எடுத்திருக்கான் பாரு”

“இவளுங்களும் இந்த மாதிரி ஏமாத்துக்காரனைத் தான் தேடி தேடி போய் விழுவாளுங்க… நல்ல பசங்க எல்லாரையும் கழட்டி விட்டிருவாளுங்க… அதான் கூட்டிட்டுப் போய் சிறப்பா செஞ்சு விட்டுட்டான்”

“கொஞ்சம் வெள்ளைத்தோலா ஒருத்தன் வந்துட்டான்னதும் அவனை க்ரஷ், ப்ரஷ்னு தலைல தூக்கி வச்சு ஆடுனாளுங்க… இந்தா வச்சுட்டான்ல ஆப்பு”

“அவன் என்னமோ பண்ணிட்டுப் போறான் ப்ரோ.. எனக்கு நீ வீடியோ லிங் அனுப்பு… வீக்கெண்ட் வருது… டைம்பாசுக்கு அந்த வீடியோ தேவைப்படுது”

இப்படியாக மனதிலுள்ள வக்கிரங்களை முகிலன் மீதும், இளம்பெண்கள் மீதும் கொட்டி குதூகலித்தார்கள் மனோவியாதி படைத்த இளைஞர்கள் சிலர்.

மேகாவுக்கோ கோபம்!

“ஒரு பையன் ஓப்பனா ஒரு பொண்ணு கிட்ட ஃப்ளர்ட் பண்ணுனான்னா அவன் கேரக்டர் மோசமா இருக்கும்னு இவனுங்க எப்பிடி சொல்லலாம்? இங்க வந்து வீடியோ லிங் கேக்குறவன், இது தான் சாக்குனு  பொண்ணுங்களை அசிங்கமா பேசி தன்னோட கையாலாகாத்தனத்தை மறைக்குறவனுங்களை விட முகில் ஆயிரம் மடங்கு நல்லவன்பா… மனசுல வக்கிரத்தை வச்சுக்கிட்டு ஒழுக்கச்சீலன் மாதிரி நடிக்குற இவனுங்களை விட அவன் ஒன்னும் கேவலமானவன் இல்ல… எதுவும் தப்பு நடந்திருக்கும்” என்று மோகனரங்கத்திடம் கவலையும் கோபமுமாக அவனுக்காகப் பரிந்து பேசினாள் அவள்.

“அந்தப் பையன் மேல தப்பு இல்லனா கண்டிப்பா வெளிய வந்துடுவான்மா” என்று ஆறுதல் சொன்னதோடு மோகனரங்கம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

மேகவர்ஷிணியோ முகிலன் எந்தப் பிரச்சனையுமின்றி காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்துவிடவேண்டுமென கடவுளிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

18 thoughts on “MM 3”

 1. Kalidevi

  Going good epi interesting. Oru police first ena ethunu visarikanum oru video vantha udane arrest panringa aana avan kitta ena achi nu keka matingla

 2. M. Sarathi Rio

  மேகத்தின் மோனம்..!
  (அத்தியாயம் – 3)

  அட சே..! இந்த உலகத்துல முட்டி மோதி கஷ்டப்பட்டு உழைச்சு மேல வந்தாக் கூட, அதுக்கும் ஒரு விலையை நிர்ணயம் செய்வாங்க போலயிருக்கு. தவிர, என்ன தான்
  தம்மடிச்சு மேல வந்தாலும், காலைப் புடிச்சு இழுக்கன்னே.. கீழே நாலுபேரு நிப்பாங்க போல. அதுவும் நம்ம உழைப்பால மேல வந்தாக் கூட, நாலு பேரு வயித்தெரிச்சல்ல நம்மளை பொசுக்கி எடுத்துடுவாங்க போல.

  இந்த சமூக வலைத்தளங்களே இப்படித்தான் போல. அதுவே தூக்கி நிறுத்தவும் செய்யும், காலு கீழே போட்டு மிதிக்கவும் செய்யும்.

  ம்.. இதையெல்லாம் கடந்து முகில் மீண்டு வருவானா….. வரணும்…!

  CRVS (or) CRVS 2797

 3. Avatar

  பாவம் முகில், எல்லா இடத்திலும் வன்மம் பிடிச்சவங்க சூழ் உலகு

 4. Avatar

  எல்லாரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வன்மத்தை கக்கிடுவாங்க இந்த மாதிரி நேரத்துல🤷‍♀️!!… எப்படி முகிலன் இதுல இருந்து வெளில வரப் போறானோ!!???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *