Skip to content
Home » MM 5

MM 5

சர்ப்ரைசும் ஷாக்கும் குடுக்குறதுல வாழ்க்கைய மிஞ்சுன மெஜிசியன் யாருமில்லனு சொல்லலாம்… ரொம்ப ஸ்மூத்தா வாழ்க்கை போகுதுனு க்ளவுட் நைன்ல இருக்குறப்ப சடன்னா ஒரு ஸ்பீட் ப்ரேக்கரைப் போட்டு உலுக்கி எடுத்துடும்… நிதானமான ஸ்பீட்ல போனவங்க சுதாரிச்சுப்பாங்க… ஆனா என்னை மாதிரி ஹைஸ்பீட்ல போனவங்க சறுக்கி விழுந்து மூஞ்சி முகரைய எல்லாம் உடைச்சுப்பாங்க… அந்த நேரத்துல உண்டாகுற வலிய விட, ஐயோ எல்லாரும் பாக்க விழுந்தோமேங்கிற அவமானம் தான் ரொம்ப கொடுமையானது… அந்த அவமானத்தோட கடைசி துளி நம்ம இந்த உலகத்துல நடமாடுற வரைக்கும் நம்ம மனசோட ஏதோ ஒரு ஓரத்துல விடாப்பிடியா ஒட்டிக்கிட்டிருக்கும், விளம்பரத்துல வர்றது போல தொண்ணூத்து ஒன்பது சதவிகித கிருமிகள் ஒழிஞ்சதுக்கு அப்புறமும் நமக்கு ஆட்டம் காட்டுற ஒரே ஒரு கிருமி மாதிரி… சோ எதை வேணாலும் நம்புங்க.. ஆனா வாழ்க்கை ஸ்மூத்தா ஜாலியா போகுதுனு மட்டும் மிதப்புல இருந்துடாதிங்க.. எப்ப வேணாலும் இந்த நிலமை மாறலாம்ங்கிற எச்சரிக்கை உணர்வோட வாழப் பழகிக்கோங்க… Survivial of the fittestனு ஒரு ரூல் உண்டு, அந்த ரூலை ஃபாலோ பண்ணணும்னா இந்த எச்சரிக்கையுணர்வு ரொம்ப அவசியம்”

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

மேகவர்ஷிணி இணையத்தில் ஆர்டர் செய்த செர்ரி தக்காளி விதைகள் அடங்கிய கவரை கீரை விதைகள் கவர்களிலிருந்து பிரித்து எடுத்தாள்.

அவளது மாடி தோட்டத்தில் போட்ட விதைகள் எல்லாம் முளை விட்டிருந்தன. அவளும் மோகனரங்கமும் கண்ணும் கருத்துமாக அரசாங்கம் கொடுத்த விளக்கக்குறிப்பிலிருந்த முறைகளைப் படித்து விதைகளை நட்டு வைத்திருந்தனர். அதன் பலனாக எந்த விதையும் சோடை போகாமல் முளைத்து விட்டன.

எதேச்சையாக மேகவர்ஷிணி இணையத்தில் உலாவியபோது விதவிதமான தக்காளி வகைகள் பற்றிய குறிப்புகளை ஒரு ‘நர்சரி இணையதளத்தில்’ பார்க்க நேரிட்டது.

குட்டி குட்டியாய் செர்ரி பழங்களைப் போல, குட்டி பூசணிக்காய் வடிவத்தில் என வித்தியாசமான தக்காளிகளின் படங்களைப் பார்த்ததும் ஆர்வம் கிளர்ந்தெழ உடனே விதைகளை ஆர்டர் செய்துவிட்டாள் அவள்.

அதை தான் க்ரோ பேக்கில் நட்டு வைக்க எடுத்துக் கொண்டிருந்தாள். அந்நேரத்தில் அவளது மொபைல் இசைத்தது. அழைத்தவள் அவளது தோழி ரம்யா. உடனே அழைப்பை ஏற்றவள் “சொல்லுங்க வி.ஜே ரம்யா… என்ன விசயம்?” என கேட்க

“மேகா உன் ஆளு எங்க சேனல் ஸ்டூடியோல இருக்கான்டி” என்றாள் ரம்யா பரபரப்பாக.

தமிழ் யூடியூபில் கொடிகட்டிப் பறக்கும் சேனலான ‘ஃப்ரண்ட்வுட்’ யூடியூப் சேனலில் பகுதிநேர ‘வீடியோ ஜாக்கியாகப்’ பணியாற்றுகிறாள் அவள்.

ஒரு நொடி மேகவர்ஷிணிக்கே அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் என்று புரியவில்லை.

“என்னடி சொல்லுற? யாரைச் சொல்லுற நீ?”

“க்ளவுட்மேன் முகில்… அவன் எங்க சேனல் ஸ்டூடியோவுக்கு வந்திருக்கான்… இன்னைக்கு நான் அவனை இண்டர்வியூ எடுக்கப்போறேன்… அவனோட தீவிர விசிறிகளும் இன்னும் கொஞ்சநேரத்துல ஸ்டூயோவுக்கு வரப்போறாங்க… திடும்னு கூப்பிட்டு எங்க அட்மின் இதைச் சொன்னதும் எனக்கே ஷாக் தான்… உடனே உனக்குக் கால் பண்ணுனேன்”

முகிலனின் பெயரைக் கேட்டதும் மேகவர்ஷிணியையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவனை நேரில் பார்த்து உரையாட வேண்டும் என்பது அவளது கனவு.

உரையாடுவது கனவு என்று சொல்வதை விடவும் அவனோடு நேரம் செலவளிக்கும் ஆசை என்று கூறலாம். இது என்ன விசித்திர ஆசை என்று அவளது தந்தை ஒரு முறை கண்டிப்புப்பார்வையோடு கடந்தபோதும் மேகவர்ஷிணியால் அந்த ஆசையை மறக்க முடியவில்லை.

“ரம்ஸ் ரம்ஸ்! நீ தான் பெரிய வி.ஜே ஆச்சே… எப்பிடியாச்சும் உன் அட்மின் கிட்ட பேசி முகிலை பாக்க எனக்குச் சான்ஸ் வாங்கி குடுடி.. என் செல்ல ரம்ஸ்ல நீ” என்று ரம்யாவை தாஜா செய்ய ஆரம்பித்தாள் அவள்.

“ரொம்ப கொஞ்சாத… இன்னைக்கு அவனோட ஃபேன்ஸ் வர்றாங்கனு சொன்னேன்ல… அதுல கொஞ்சபேரால வர முடியாத சிச்சுவேசன்.. அதுக்கும் சேர்த்து ஆளுங்களை ஏற்பாடு பண்ணுங்கனு அட்மின் சொல்லிட்டார்… அதுல ஒரு ஆளா உன்னை நான் ஸ்டூடியோக்குள்ள அழைச்சிட்டுப் போயிடுறேன்… ஆனா ஒன்னு, உன்னால இந்த இண்டர்வியூல பிரச்சனை எதுவும் வந்துடக்கூடாது… உனக்கு அவன் மேல ஒரு கண்ணுனு எனக்குத் தெரியும்… அதை எல்லாம் இங்க ட்ரை பண்ணி என் வேலைக்கு வேட்டு வைக்கமாட்டேன்னு நீ ப்ராமிஸ் பண்ணு… உனக்கு ஐ.டியோட பாஸ் அனுப்புறேன்” என்றாள் ரம்யா கறாராக.

ஆயிரம் முறை சத்தியம் செய்து தன்னால் எந்தப் பிரச்சனையும் வராதென உறுதியளித்தாள் மேகவர்ஷிணி.

சிறிது நேரத்தில் அவளது மின்னஞ்சலுக்கு ‘ஃப்ரண்ட்வுட்’ சேனலின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இருந்து நேர்க்காணலில் பார்வையாளராகக் கலந்துகொள்வதற்கான நுழைவு அனுமதி வந்து சேர்ந்தது.

உடனே வாட்சப்பில் ரம்யாவுக்கு நன்றி சொன்னவள் தக்காளி விதைகளை நட்டு வைக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுத் தந்தையைத் தேடி ஹாலுக்கு ஓடி வந்தாள்.

மோகனரங்கம் முகம் பிரகாசிக்க வந்து நின்ற மகளை என்னவென ஏறிட அவளோ “இன்னைக்கு நான் ஃப்ரண்ட்வுட் யூடியூப் சேனல் ஸ்டூடியோக்குப் போறேன்பா… அங்க முகில் வந்திருக்கானாம்” என்றாள் மூச்சிரைக்க.

மகளை ஒரு நொடி கூர்ந்து நோக்கியவர் “சரிம்மா… ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் வீட்டுக்கு வந்துடணும்” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

மேகவர்ஷிணி பரபரப்பும் ஆர்வமும் ஒன்றாய் சேர்ந்த வினோத உணர்வுடன் தயரானாள்.

ஏதோ ஒரு வீடியோவில் முகிலன் தனக்கு மேஜிக் மிண்ட் வண்ணம் மிகவும் பிடிக்குமென கூறியிருந்தான். அந்த நிறத்தில் ஒரு காட்டன் குர்தியும் டெனிம் கேப்ரியும் அணிந்து கூந்தலை அலை அலையாகத் தோளில் பரவவிட்டவள் மேக்கப்பில் அதிக நேரம் செலவளிக்க விரும்பவில்லை.

மொபைலை மட்டும் எடுத்துக்கொண்டு தந்தையிடம் விடைபெற்றவள் ரேபிடோ ஆட்டோ மூலம் வேளச்சேரியிலிருக்கும் ஃப்ரண்ட்வுட் சேனலின் அலுவலகத்தை அடைந்தாள்.

அங்கே போனதும் ரம்யா வந்து மேகவர்ஷிணியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டாள்.

நிகழ்ச்சிக்குரிய ஸ்டூடியோவுக்குள் அவள் பார்வையாளர்களுடன் அமர வேண்டிய இடத்தைக் காட்டினாள்.

“உன் கிட்ட மைக் வந்தா மட்டும் தான் நீ பேசணும்… எதுவும் காண்ட்ரோவெர்சியா பேசிடாத ஆத்தா… அந்தாளோட டேமேஜ் ஆன இமேஜை சரி பண்ணவும், அவன் மேல வந்த அலிகேசன் பொய்னு ப்ரூவ் பண்ணவும் எதிக்கல் ஹேக்கரோட வந்திருக்கான்… அதெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் ஆடியன்சை அவன் கிட்ட பேச விடுவோம்… எல்லாத்தையும் மண்டைல ஏத்திக்க”

ரம்யா சொன்ன அனைத்துக்கும் தலையை ஆட்டியவள் பார்வையாளர் வரிசையில் அமரும் வரை அமைதியாக இருந்தாள். ஆனால் ஸ்டூடியோவுக்குள் ராமுடன் நுழைந்த முகிலனைக் கண்டதும் அவளது கண்களில் நட்சத்திரங்கள் மின்ன ஆரம்பித்தன. வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா உருண்டைக்குப் பதிலாக எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கத் துவங்கின.

அவன் சிறிய மேடையில் சென்று அமர்ந்து புன்னகைத்தபோது உடலில் இருந்து அவளது ஜீவன் மட்டும் பிரிந்து அந்தரத்தில் மிதந்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிட்டு மீண்டும் உடலுக்குள் புகுந்த உணர்வு!

முதுகில் கூட ஏதோ குறுகுறுப்பு! ஒருவேளை எனக்கு இறகு முளைத்துவிட்டதா எனத் திரும்பிப் பார்த்து உறுதி செய்துகொண்டாள் மேகவர்ஷிணி.

முப்பத்திரண்டு பற்கள் மின்ன தனது பார்வையை மேடையில் இருந்தவன் மீது திருப்பினாள் அவள்.

ரம்யா கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவதூறான பழியால் தானும் தனது குடும்பமும் அடைந்த இன்னல்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை பற்றியெல்லாம் அவன் பக்குவமாகப் பேசியபோது கமெண்டில் தன்னுடன் சில நேரங்களில் விளையாட்டாகப் பேசியவனா இவன் என்று மேகவர்ஷிணிக்கே ஆச்சரியம்!

“இப்பவும் என் மேல சிலருக்கு வெறுப்பு இருக்கு… அதுக்கான காரணம் என்னனு இப்ப வரைக்கும் எனக்குப் புரியல… அவங்க எல்லாருக்கும் இந்த டீப் ஃபேக் வீடியோ என்னைக் கிண்டல் பண்ணி கொண்டாடுறதுக்கான வாய்ப்பா போயிடுச்சு… இதுல என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டவங்க என்னோட பேரண்ட்ஸ்… ஒரு இண்டிமசி வீடியோ லீக் ஆச்சுனா அது சம்பந்தப்பட்டவங்களை ரொம்ப பாதிக்கும்… சம்பந்தமே இல்லாம அந்த வீடியோவால பாதிக்கப்பட்டவன் நான்”

சொல்லும்போதே அவனது முகம் மாறியது. குரல் கூட கம்மிப்போனது.

மேகவர்ஷிணியின் கைகள் அவனை அணைத்து ஆறுதல் சொல்லத் துடித்தன. அடுத்த நொடியே யாருமறியாவண்ணம் நறுக்கென தலையில் குட்டிக்கொண்டாள் அவள்.

“அடச்சீ! உன் மனசு என்ன மானங்கெட்டு யோசிக்குது?” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.

“இப்ப நீங்க ப்ராப்ளம் குடுத்த அதிர்ச்சில இருந்து வெளிய வந்துட்டிங்களா?”

கண்களில் கனிவோடு ரம்யா கேட்க இல்லையென மறுத்தவனின் முகம் கல்லாய் இறுகியது. கண்கள் கூட கலங்கின.

தலையை அவசரமாகக் குனிந்துகொண்டவன் நிமிர்ந்தபோது அவனது இதழில் சிரிப்பொன்று ஒட்டியிருந்தது! ஜீவனற்ற புன்னகை அது! எனக்குள் நொறுங்கிக்கொண்டிருக்கும் அமைதியை ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறேன், மீண்டும் உடைத்துவிடாதீர்கள் என்று வேண்டிக்கொள்ளும் மன்றாடல் சிரிப்பு அது!

ரம்யாவுக்கே ஒரு நொடி மனம் கனத்துப்போனது.

சமாளித்துக்கொண்டவன் பேச ஆரம்பித்தான்.

“என்னால அவ்ளோ ஈசியா இதை மறக்க முடியும்னு தோணல… அதுக்காக சிம்பதி க்ரியேட் பண்ணவும் நான் இங்க வரல… என் மேல தப்பு இல்ல… அந்த வீடியோ டீப் ஃபேக் டெக்னாலஜில மாடிஃபை பண்ணப்பட்டதுனு நான் நிரூபிச்சிட்டேன்… அதை டெக்னாலஜிக்கலா ஹேக்கர் ஒருத்தர் விளக்குவார்”

பிரபல எதிக்கல் ஹேக்கர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவரும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் அங்கே சலசலப்பு எழுந்தது. அதை மீறி ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தின் அபாயத்தை விளக்கியவர் அதில் ஒருவரை இன்னொருவர் போல சித்தரிப்பது எவ்வளவு எளிது என்பதையும் கூறினார்.

எங்கே தொழில்நுட்பரீதியில் விளக்கினால் வக்கிர உள்ளங்கள் அதை பெண்களுக்கு எதிராகவும், தங்களுக்குப் பிடிக்காத ஆண்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்ளுமோ என்ற கவலையில் அதை மட்டும் அவர் செய்யவில்லை.

அவர் பேசி முடித்ததும் முகிலனின் கண்களில் நிம்மதி தெரிந்தது.

“இதை மீறியும் என்னை அசிங்கமா ட்ரால் பண்ணுறவங்க தாராளமா பண்ணிக்கலாம்… ஆனா ப்ளீஸ், அந்த வீடியோல இருக்குற பொண்ணோட லைஃபை பத்தி கொஞ்சம் யோசிச்சிட்டு ட்ரால் பண்ணுங்க… நான் ஒரு ப்ளேபாய் கேசனோவானு என் மேல எக்கச்சக்க அலிகேசன்ஸ் உண்டு… அதுல்லாம் பொண்ணுங்க கூட நான் ஜோவியலா பேசுறதால தான்… உண்மைய சொல்லணும்னா இந்த டீப் ஃபேக் சம்பவத்துக்கு அப்புறமா எனக்குப் பொண்ணுங்க கிட்ட சாதாரணமா பேசக் கூட தயக்கமா இருக்கு… ஒரு ஆபாச வீடியோவால பொண்ணுங்க எந்தளவுக்கு மனவுளைச்சலுக்கு ஆளாவாங்களோ அதே மனவுளைச்சல் எனக்கும் இருக்கு… உண்மைய சொல்லணும்னா என்னால ஒரு பொண்ணை இயல்பான காதலோட பாக்க முடியுமாங்கிறதே சந்தேகமா இருக்கு… எல்லா சோசியல் மீடியாலயும் ஆபாச வீடியோவ ட்ரால் பண்ணுற போஸ்டுக்குக் கீழ ‘லிங் ப்ளீஸ்’னு கமெண்ட் பண்ணுறவங்க உங்களைப் பாதிக்கப்பட்டவங்க இடத்துல வச்சு ஒரு நிமிசம் யோசிச்சுப் பாருங்க… உங்களுக்கு அந்த கமெண்டை போடுறதுக்கான தைரியம் வராது… யாரோ ஒருத்தன் எவளோ ஒருத்தி பாதிக்கப்படுறா, நம்மளோட ஐஞ்சு நிமிச சந்தோசத்துக்கு அந்த வீடியோவ பாத்துக்கலாம்னு நினைக்குற மெண்டாலிட்டி ரொம்ப ஆபத்தானது”

முகிலன் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட மேகவர்ஷிணியின் காதுகளில் “என்னால ஒரு பொண்ணை இயல்பான காதலோட பாக்க முடியுமாங்கிறதே சந்தேகமா இருக்கு” என்ற அவனுடைய வேதனை நிரம்பிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்தன.

அவனது வார்த்தைகள் அவளுக்குள் எப்போதுமே மாற்றத்தை ஏற்படுத்தும். அன்னையும் தமக்கையும் கண் முன்னே இறந்த வேதனையால் அவள் எடுத்த தற்கொலை முடிவை மாற்ற வைத்தவை அவனது வார்த்தைகள்!

அவளும் மோகனரங்கமும் இன்று வாழும் இயல்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைந்தவை அவனது வார்த்தைகள்!

தனக்குள் புதையப்போன உற்சாகமும் துடிப்புமான மேகவர்ஷிணியை மடிய விடாமல் காத்து உயிர்ப்புடன் நடமாட வைத்தவை அவனது வார்த்தைகள்!

அப்படிப்பட்டவன் இப்போது வேதனையின் உச்சத்தில் உதிர்த்த வார்த்தைகளும் மேகவர்ஷிணிக்குள் அவன் மீதிருந்த அபிமானத்தையும், இச்சம்பவத்தின் விளைவால் அவன் மீதுண்டான கரிசனத்தையும் காதலாக உருமாற்ற ஆரம்பித்தன.

அவனது தயக்கத்தை உடைத்து அவனுக்குள் இயல்பான காதலை விதைக்கும் அவா அவளுக்குள் எழுந்தது.

காதல் என்ற உணர்வு விசித்திரமானது. துளிர்த்த கணமே இராட்சசத்தனமாக உருவெடுத்து உள்ளத்தை வியாபித்து புத்தியை ஸ்தம்பிக்க வைத்துவிடும் அளவுக்கு வீரியமானதும் கூட!

முகிலனிடம் பார்வையாளர்கள் துள்ளலாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க மேகவர்ஷிணியின் விழிகளோ முகிலனின் முகபாவனையையே கவனித்துக்கொண்டிருந்தன.

சரியாக மைக் அவளது கைக்கு வந்து சேர்ந்ததும் ஒரு தீர்மானத்தோடு எழுந்தாள் மேகவர்ஷிணி.

“ஹாய் முகில்” சினேகமாகச் சிரித்தாள். பதிலுக்கு அவனிடமும் சிரிப்பு.

“நான் உன்னோட பயங்கரமான ஃபேன்… உன் சேனலுக்கு மட்டுமில்ல… முகில்ங்கிற தனி மனுசனுக்கும் தான்… நீ என் லைஃப்ல கொண்டு வந்த மாற்றம் எப்பிடிப்பட்டதுனு எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டும் தான் தெரியும்… சூனியமா இருந்த லைஃபை நானும் என் அப்பாவும் மறுபடி நம்பிக்கையுமா வாழுறதுக்கு நீ தான் காரணம் முகில்… உன்னோட பிரச்சனை உனக்குள்ள உருவாக்கியிருக்குற அதிர்ச்சி ரொம்ப பெருசுனு புரியுது… அந்த அதிர்ச்சிய ஒரேயடியா போக்கடிச்சு உன்னைப் பழைய முகிலா மாத்துறதுக்கான சான்ஸை எனக்குக் குடுப்பியா?”

கண்களில் ஆர்வம் மின்ன அவள் கேட்க முகிலனுக்கோ யாரென்றே தெரியாத ஒரு பெண் தன்னிடம் இத்துணை உரிமையாக ஒருமையில் பேசுகிற திகைப்பு! அவனுக்கு இருக்கும் எத்தனையோ விசிறிகளில் ஒருத்தி என ஒதுக்கிவிடாமல் வலுக்கட்டாயமாகத் தன்னைப் பார்க்க வைத்தாள் அவள், அவளுடைய திருத்தமான வார்த்தைகளால்!

அவள் என்ன தான் சொல்ல வருகிறாள் என்று கேட்போமே என்ற எண்ணத்தில் மத்திமமாகத் தலையசைத்தான் அவன்.

மேகவர்ஷிணி பின்னர் அதிகமாக யோசிக்கவில்லை. பளீர் புன்னகையுடன் அவனை நேருக்கு நேராகப் பார்த்து “ஐ லவ் யூ முகில்… என் மனசு ஃபுல்லா இப்ப நிரம்பியிருக்குற லவ்வை உனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி அதை நீ ஃபீல் பண்ணுறதை லைஃப் லாங் உன் கூட இருந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு… நீ கொஞ்சநேரம் முன்னாடி சொன்னியே, என்னால ஒரு பொண்ணைக் காதலோட பாக்க முடியுமானு சந்தேகமா இருக்குனு… அந்த வார்த்தைய பொய்யாக்கணும்னு எனக்குள்ள ஏதோ ஒன்னு துடிக்குது முகில்… ஐ திங் ஐ அம் மேட்லி இன் லவ் வித் யூ” என்றாள் அழுத்தமாக.

ஒட்டுமொத்த ஃப்ரண்ட்வுட் ஸ்டூடியோவும் அமைதியில் உறைந்து போனது, முகிலனும் தான்!

15 thoughts on “MM 5”

 1. M. Sarathi Rio

  மேகத்தின் மோனம்..!
  (அத்தியாயம் – 5)

  ஓ மை காட்..! ஓ மை காட்..! ஃப்ரண்டவுட் ஸ்டூடியோ மட்டும்
  இல்லைங்க, நாங்களும் தான் மேகா சொன்னதைக் கேட்டு..
  “ஷாக் அடிக்குது ஷோனா.. ..
  நீ சொன்னதை கேட்டு தானா..
  ஹார்ட் அடிக்குது தானா…..
  நீ முகிலோட வானா….”

  அப்படித்தான் பாடத் தோணுது.
  முகில், ஒரு சின்ன டீப் ஃபேக் வீடியோ போதுமா உன்னோட டோட்டல் கேரியரையே முடக்கிப்போட…? அத்தனை வீக்கானவனா நீ…? இந்த சோக மூஞ்சி குமாரை எங்களுக்குப் பிடிக்கலை. சோ.. பழைய க்ளவுட்மேனா நீ வரணும்ன்னா..
  அதுக்கு இந்த சுட்டிப்பெண் மேகா தான் சரி…! சீக்கிரம் கட்டிக்கோ…
  அப்புறம் ஒட்டிக்கோ…!

  CRVS (or) CRVS 2797

 2. Avatar

  Super sis semma epi 👌👍😍 eppdi pattunu love a sollitaley 😳😳😳 mukil and ku eagerly waiting sis

 3. Avatar

  இவளே தான் வலிய போய் கல்யாணம் பண்ணிக் கேட்கிறாளா?

 4. Avatar
  Anupama Ravichandran

  👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

 5. Avatar

  ஆத்தாடி அவளோட ஃப்ரெண்டு உள்ள கூட்டிகிட்டு வரும்போது எதுவும் ஏடாகூடமா பேச வேண்டாம்னு அத்தனை தடவை எச்சரிச்சும் இவ என்ன இப்படி கேட்டுப்புட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *