Skip to content
Home » Post Climax (போஸ்ட் க்ளைமேக்ஸ்)

Post Climax (போஸ்ட் க்ளைமேக்ஸ்)

சாலை ஓரமாக மயங்கி கிடந்த பிரத்தியங்கராவை காப்பாற்றிய மக்கள், அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, காவல் துறையிடமும் சொல்லியிருந்தனர். அதன் மூலம் எளிதாக பிரத்தியங்கராவை கண்டு பிடித்தனர் காவல்துறையினர்.

மணியரசுவும் சௌந்தர்யாவும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து மகளை பார்த்தனர்.

பிரத்தியங்கராவிற்கு எதுவுமே நினைவில் இல்லை. தந்தையும் தாயும் தன்னை கொல்லி மலையில் விட்டு சென்றது மட்டும் தான் அவளுக்கு நினைவு இருந்தது. ஒன்றரை மாத நினைவுகள் துளி கூட அவளிடம் இல்லை.

“பிரத்து நீ நல்லா இருக்க தானே‌…?” என மணியரசும் சௌந்தர்யாவும் மாற்றி மாற்றி கேட்டு மாய்ந்து போனார்கள்.

ஏதோ அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்து, அதனால் தற்காலிகமாக நினைவுகளை எல்லாம் பிரத்தியங்கரா மறந்து விட்டாள் என்று மருத்துவர்கள் கூறினர்.

பிரத்தியரங்கராவின் உடலை பரிசோதித்ததில் வேறு எந்த பிரச்சனைகளும் இல்லாது இருக்க, வழக்கை முடித்துக் கொண்டு மணியரசு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்னை வந்தடைந்தார்.

பிரத்தியங்கரா சென்னை வந்ததும் கார்த்திக் அவளின் வீட்டு வாசலில் வந்து நின்றான்.

மணியரசு பிரச்சனை எதுவும் செய்யாமல் கிளம்ப சொன்னார். ஆனாலும் அவன் கத்திக் கொண்டிருந்தான்.

தனக்கு என்ன தேவை என்று தெரியாத நபர்களிடம் இது தான் பிரச்சனை; அவர்களுக்கு வேண்டியதை கொடுத்தாலும் மனம் வெளி வேசத்திற்கு கொட்டு கட்டி ஆடும்!

“கார்த்திக் இப்போ எதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்க?” என்று அழுத்தமாக கேட்டாள் பிரத்தியங்கரா.

“லவ் பண்ணிட்டு கலட்டி விட்டுட்டு போகலாம்னு பாக்குறியா?” என்று பிரத்தியங்கராவை அவமான படுத்துவது போல கேட்டான் கார்த்திக்.

திருமணத்தை நிறுத்த சொல்லி சொன்னதும் மறந்து போய் இருந்தது பிரத்தியங்கராவிற்கு!

நெற்றியில் கையை வைத்து யோசித்தாள் பிரத்தியங்கரா.

“பிரத்தியங்கராவுக்கு உடம்பு முடியலை. இப்போ நீ கிளம்பு பா. அப்பறம் பேசிக்கலாம்.” என்று மகளின் நல் வாழ்வை மனதில் வைத்து பல்லை கடித்துக் கொண்டு சொன்னார் மணியரசு.

“ஒரு நிமிசம் அப்பா…” என்ற பிரத்தியங்கரா,

“நடுவுல இந்த ஒரு மாசத்துல எதாச்சும் நடந்துச்சா அப்பா?” என்று மணியரசுவிடம் கேட்டாள் பிரத்தியங்கரா.

“என்ன டி எதுவுமே தெரியாதது போல நடிக்கிற? நீ தானே கல்யாணத்தை நிறுத்த சொன்ன…” என்று கேலியாக கேட்டான் கார்த்திக்.

சிறிது நேரம் யோசித்தாள் பிரத்தியங்கரா.

எப்படி யோசித்தாலும் இவனோடெல்லாம் வாழவே முடியாது என்று தோன்றியது பிரத்தியங்கராவிற்கு.

“அப்போ என்ன சொன்னேன்னு எனக்கு நியாகம் இல்லை கார்த்திக். ஆனா இப்போ சொல்லுறேன். உன்னை மாதிரி ஒருத்தனை லவ் பண்ணினேன்னு வெளிய சொன்னதுக்கே எனக்கு உடம்பெல்லாம் கூசுது‌‌. தயவு செஞ்சி என் கண்ணு முன்னாடி வந்திடாத. எப்பவுமே நான் பொறுமையா இருக்க மாட்டேன்.” என்றவள் மணியரசுவை பார்த்து,

“கார்த்திக் வெளிய போனதும், வீட்டை நல்லா சுத்தம் பண்ண சொல்லுங்க.” என்று கட்டளை போல சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

செல்லும் பிரத்தியங்கராவையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

முன்பு போல படபடவென பேசும், பயம் கொள்ளும் பிரத்தியங்கரா இப்பொழுது இல்லை. அவளின் பார்வையும் பேச்சும் அத்தனை தெளிவாய் இருந்தன. ஒரு சில நேரங்களில் மணியரசுவிற்கு இது தன் பெண் தானா என்று கூட தோன்றும். பின்பு நாடி சோதிடர் சொன்னது நினைவிற்கு வந்து அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

“என்ன கார்த்திக் வெளிய கிளம்புறியா?” என்று இப்பொழுது கேலியாக கேட்டார் மணியரசு‌.

அவமானத்தில் வெட்கி தலைகுனிந்து சென்றான் கார்த்திக். அதற்கு பின்பு பிரத்தியங்கராவின் பக்கமே அவன் தலைவைத்து படுக்காதது போல மணியரசு பார்த்துக் கொண்டார்.

“ஏன்மா பிரத்தியங்கரா கொல்லி மலையில என்ன நடந்துச்சுனு உனக்கு நிஜமாவே நியாகம் இல்லையா மா?” என ஒரு முறை கேட்டு பார்த்தார் மணியரசு.

எவ்வளவு யோசித்தாலும் பிரத்தியங்கராவிற்கு எதுவுமே நினைவில் வரவில்லை.

மீண்டும் ஒரு முறை பிரத்தியங்கராவை மருத்தவர்களிடம் அழைத்து சென்றார் மணியரசு.

பிரத்தியங்கராவின் அன்றாட அலுவல்கள் செய்யவோ, அல்லது மூளையிலோ எவ்வித பாதிப்பும் இல்லை என அவர்களும் சொல்லிவிட அப்பொழுது தான் மணியரசுவிற்கு நிம்மதி.

“பிரத்தியங்கரா கல்யாணம் நின்னுடுச்சுனா ஊருக்குள்ள எல்லாரும் தப்பா பேசுவாங்க. சீக்கிரமே அவளுக்கு நல்லதா ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.” என்று வந்தார் சௌந்தர்யா.

இப்பொழுதாவது மகளுக்கு தன் சொந்தத்தில் ஒரு மகனை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவரை விட விடவில்லை.

“அம்மா கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? எனக்கு எப்ப தோணுதோ அப்ப செஞ்சிப்பேன். அதுவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” என்று அசட்டையாக சௌந்தர்யாவின் பேச்சை ஒதுக்கி தள்ளினாள் பிரத்தியங்கரா.

“பாருங்களேன் இவளை‌…” என சௌந்தர்யா, மணியரசுவிடம் குற்ற பத்திரிக்கை வாசிக்க,

“இப்போ தான் அவ சரியாகி வந்துருக்கா. அதுக்குள்ள அதையும் இதையும் பேசி பெருசா எதுவும் கிளப்பி விடாத.” என‌ அதை தூசி போல தட்டிவிட்டார் மணியரசு.

பிரத்தியங்கராவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சௌந்தர்யா. ஆனால், பிரத்தியங்கராவிற்கு வீட்டிலே இருக்க முடியவில்லை. எதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு.

நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்பொழுது வசதி இல்லாத மாணவிகளுக்கு வகுப்புகளை எடுத்தாள். ஏதோ நற்பணி போல இருக்கவும் சௌந்தர்யா எதுவும் சொல்லவில்லை.

நாளடைவில் அதுவே மிகவும் பிடித்து போனது பிரத்தியங்கராவிற்கு. முன்பு செய்து கொண்டிருந்ததையே பெரிய அளவில் செய்ய ஆரம்பித்தாள்.

பெரிய பெரிய ஸ்பான்ஷர்களை பிடித்து, இன்னமும் ஆட்களை சேர்த்து கொண்டு, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வேலையை செய்து கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா. அப்படியே அவள் செய்யும் வேலை பெண்களுக்கான தேவைகள், அடிப்படை சுகாதார வசதிகளை செய்து தருதல், சட்ட உதவிகளை செய்வது என்று நீண்டு கொண்டே போனது.

பல வருடங்கள் கழித்து…

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறிய பிரத்தியங்கரா, தன் கணவன் ராஜீவோடு சந்தோசமாக கொல்லி மலைக்கு வந்தாள்.

ராஜீவை நலத்திட்ட பணிகள் செய்யும் இடத்தில் தான் கண்டாள். கண்டது காதல் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பழகி பார்த்து இருவருக்கும் பிடித்து, நடைமுறைக்கு சரியாக வருமா என பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சௌந்தர்யாவால் முன்பு போல மகளை அதட்டி உருட்ட முடியவில்லை. அவளின் பார்வையிலே தெரியும் ஒருவித அழுத்தம், அவள் சொல்வதை தவிர வேறு ஒன்று செய்ய விடாது மற்றவர்களை!

குடும்பத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பெண்கள் வளர்ச்சிக்கும் பிரத்தியங்கரா கொடுக்க, ராஜீவிற்கு அதில் பிரச்சனை எல்லாம் இல்லை. வேலை நேரம் போக மீதம் நேரம் இருந்தால் அவனுமே பிரத்தியங்கராவோடு சேர்ந்து சேவைகளை செய்வான். அப்படியாக தான் இருவரும் தங்கள் குழந்தைகளோடு கொல்லிமலைக்கு வந்தனர்.

சேவைக்கு சேவை செய்வது போலவும் ஆயிற்று, மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து போல இருக்கும் என ராஜீவ் தான் சொல்லி இருந்தான்.

மலைவாழ் பெண்களுக்கு சுகாதரம் மற்றும் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்வதற்கான கேம்ப் அது.

எப்படியோ ஒரு வழியாக மீண்டும் கொல்லி மலைக்கு வந்தாள் பிரத்தியங்கரா. செல்லும் அவளையே கொல்லிமலையின் எல்லையில் இருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தாள் வனபத்திரகாளி.

தவறான மனிதர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, அவர்களின் பாவங்களுக்கும் உடன் நிற்க வேண்டிய சூழ்நிலையாகிற்று வனபத்திரகாளிக்கு. எப்பொழுது அந்த சத்தியம் உடைந்ததோ, அப்பொழுதில் இருந்தே தான் செய்த செயல்களுக்கு பிராயச்சித்தமாக, கொல்லி மலையின் எல்லையில் நின்று காவல் புரிகிறாள் வனபத்திரகாளி.

வேறு வேறு இடங்களில் கேம்ப் போட்டார்கள். அங்கெல்லாம் பிரத்தியங்கரா செல்ல, ஐந்து வயது சர்வேஸ்வரனையும் ஒரு வயது அமுதினியையும் ராஜீவ் பார்த்துக் கொண்டான்.

மாலையில் ஹோட்டல் ரூமிற்கு பிரத்தியங்கரா திரும்பியதும் குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தனர்.

கேம்ப் முடிந்ததும் இரண்டு நாட்கள் குடும்பமாக கொல்லி மலையை சுற்றி பார்க்க முடிவு செய்தனர் ராஜீவும் பிரத்தியங்கராவும்.

மலையில் கார் ஓட்டுவதற்கென ராஜீவ் ஒரு ஆளை ஏற்பாடு செய்திருந்தான். வந்திருந்தது சாட்சாத் சக்திவேல் தான்.

“பாப்பா எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? என்னை நியாபகம் இருக்கா?” என்று கேட்டார் சக்திவேல். அவரை யாரென்றே தெரியவில்லை பிரத்தியங்கராவிற்கு.

“என்ன பாப்பா… என்னை மறந்துட்டீங்களா? நீங்க இங்க வந்து முன்னாடி தங்கியிருந்தப்போ நான் தானே உங்களுக்கு கார் ஓட்டினேன்.” என்று சக்திவேல் தகவல்களை சொல்ல, அப்பொழுதும் நினைவிற்கு வரவில்லை பிரத்தியங்கராவிற்கு.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரை எடுத்தார் சக்திவேல்.

முதலில் அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்றவர்கள், பின்பு அருகிலே இருந்த ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு சென்றனர்.

படிகளில் இறங்கும் பொழுதே, ஏற்கனவே இங்கே வந்து சென்ற நியாபகங்கள் கனவு போல் எட்டி பார்த்தன பிரத்தியங்கராவிற்கு.

எது நிஜம் எது கனவு என புரியாமலே நடந்த பிரத்தியங்கரா, கீழே விழ போக, அவளை பிடித்த சக்திவேல், “பாத்து பாப்பா. இந்த பக்கம் போகாதீங்க. அது ரொம்ப ஆபத்தான இடம். நீங்க காணாம போனப்போ, இந்த இடத்துல இரண்டு டெட் பாடி கிடந்துச்சு. அதுவும் பூஜையெல்லாம் பண்ணிருப்பாங்க போல. அப்பல இருந்து இந்த பக்கம் யாரும் போறது இல்லை.” என்று எச்சரித்தார் சக்திவேல்.

பிரத்தியங்கரா சக்திவேல் சொன்ன இடத்தை திரும்பி பார்த்தாள்.

கொடிய இரவும், ஏதேதோ மந்திரங்களும், ஓம குண்டமும், யாரோ ஆயுதத்தை ஓங்குவது போலவும் கண் முன்னே காட்சிகளாக வந்து போயின பிரத்தியங்கராவிற்கு.

“ஆஆஆஆஆ…” என்று பயத்தில் கத்தி விட்டாள் பிரத்தியங்கரா.

“என்னாச்சு பிரதி?” என்று அவளிடம் ஓடிவந்தான் ராஜீவ்.

பயந்து போய் இருந்த பிரத்தியங்கராவால் எதுவுமே சொல்ல முடியவில்லை.

“ரா…ராஜீவ் இங்க இருந்து போகலாம்…” என்றாள் பிரத்தியங்கரா.

ராஜீவ் பலமுறை கேட்டும் பிரத்தியங்கரா சொல்லாததால், அவளை அழைத்துக் கொண்டு விடுதிக்கே வந்துவிட்டனர்.

“எதுக்கும் நீங்க எட்டுக்கை அம்மனை ஒருக்கா தரிசிச்சிட்டு ஊருக்கு போங்கமா… நல்லதே நடக்கும்.” என சக்திவேல் சொல்லிவிட்டு சென்றார்.

பயந்து போய் இருந்த பிரத்தியங்கராவிற்கு கோவிலுக்கு சென்றால் தேவலாம் என்று இருந்தது. எனவே அடுத்த நாள் அனைவரும் எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலின் வாசலில் கால் வைக்கும் பொழுதே பிரத்தியங்கராவிற்கு உடல் சிலிர்த்துக் கொண்டது.

என்னமோ நேசம் வைத்த ஒருவரை பல வருடமாக பிரிந்த வலி அவளை வந்து தாக்கியது. ஏன் அப்படி என பிரித்தியங்கராவிற்கு புரியவில்லை.

எட்டுக்கை அம்மனை காண காண, மனதிற்குள் சொல்ல முடியாத வலியும், நிம்மதியும் சந்தோஷமும் ஒன்றாக தாக்கியது பிரத்தியங்கராவை. வினோதமான அந்த உணர்வை அவளால் விளங்கி கொள்ள முடியவில்லை.

அமுதினி அழுது கொண்டே இருக்க, அவளை மடியில் கிடத்தி தட்டி கொடுத்து கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா.

“பிரதி கிளம்பலாமா?” என்று வந்தான் ராஜீவ்.

“கொஞ்ச நேரம் ராஜீவ்.” என்றாள் பிரத்தியங்கரா.

அங்கிருந்து எழுந்து செல்லவே மனம் வரவில்லை அவளுக்கு.

“என் போன் சார்ஜ் காலியாக போகுது. நான் கீழ கார்ல போயி இருக்கேன். நீ வந்திடறியா?” என ராஜீவ் கேட்க, சம்மதமாய் தலையசைத்தாள் பிரத்தியங்கரா.

அமுதினியை தட்டிக் கொடுத்துக் கொண்டே, அவளையும் அறியாமல் கண்ணயர்ந்தாள் பிரத்தியங்கரா.

கண்ணை திறந்தால், கையில் அமுதினியோடு திக்குதெரியாத காட்டில் தனியாக நின்று கொண்டிருந்தாள். எங்கு போவதென்று தெரியவில்லை. எல்லா பக்கங்களில் இருந்தும் மிருகங்களின் குரல் கேட்பது போல் இருக்க, அமுதினியை இறுக பிடித்துக் கொண்டு, கலங்கி போனாள் பிரத்தியங்கரா.

அப்பொழுது, “பிரத்தியங்கரா…” என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது.

“உனக்காக நான் இருக்கிறேன். கவலை கொள்ளாதே…” என்று அந்த குரல் சொன்னது.

அந்த குரல் கேட்ட நொடி கனவில் இருந்து விழித்துக் கொண்டாள் பிரத்தியங்கரா. அப்பொழுதே, அவள் இதுவரை மறந்து போன அத்தனை நியாபகங்களும் அவளுக்குள் வந்து சேர்ந்தது.

பிரத்தியங்கரா கண்களில் நீர் வடிய பார்க்க, அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த கொல்லி, அமுதினியின் தலையை பாசமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“அமுதா…” என்று பிரத்தியங்கராவின் குரல் அவளையறியாமலே வந்தது.

“எதற்காகவும் பயப்படாதே பிரத்தியங்கரா. நான் இருக்கிறேன்!” என்று புன்னகையோடு வாக்குறுதி கொடுத்தாள் கொல்லி.

அந்த சமயம் பார்த்து பிரத்தியங்கராவின் போன் அடிக்க, அதை பார்த்துவிட்டு, திரும்பி பார்க்க, அங்கே கொல்லி தற்பொழுது இல்லை.

பிரத்தியங்கரா புரிந்து கொண்டாள். கொல்லி எப்பொழுதும் அவளுடனே இருப்பாள் என்பது உணர்ந்தும் கொண்டாள்.

ராஜீவ் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்றாள் பிரத்தியங்கரா.

“பிரதி மழை வர்ற போல இருக்கு. சீக்கிரம் வர்றியா?” என்று கேட்டான் ராஜீவ்.

இதற்கு மேலும் இங்கேயே இருக்க முடியாது என புரிந்து கொண்டாள் பிரத்தியங்கரா.

“இதோ வர்றேன் ராஜீவ்.” என்ற பிரத்தியங்கரா, அமுதினியை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அதே சமயம் மழையும் பெய்ய ஆரம்பித்தது.

பிரத்தியங்கரா பொறுமையாய் ஒவ்வொரு படியாய் இறங்கி வந்தாள். அவள் வருவதற்காக காத்திருந்தான் ராஜீவ்.

தூரத்தில் அவளை கண்டதும் தானாக அவனுக்கு புன்னகை வந்தது. பிரத்தியங்கராவிற்கும் தான்.

பிரத்தியங்கராவை கண்ட ராஜீவ் ஒரு நொடி தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தான். ஏனெனில் பிரத்தியங்கராவிற்கு பின்னால் வேகமாக மழை பெய்து கொண்டு இருந்தது. ஆனால் அவளின் மீது ஒரு துளி கூட படவில்லை. அதை தான் கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே இருந்தான்.

ராஜீவ் பார்த்துக் கொண்டு இருக்கையிலே, வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள் பிரத்தியங்கரா.

“போகலாமா ராஜீவ்…” என பிரத்தியங்கரா கேட்க, கார் புறப்பட தயாரானது.

இறுதியாக ஒரு முறை வந்த பாதையை திரும்பி பார்த்தாள் பிரத்தியங்கரா. அங்கே கொல்லி நின்று கொண்டிருந்தாள். மனமாற அவளை பார்த்து புன்னகைத்தாள் பிரத்தியங்கரா.

இன்று மட்டும் அல்லாது என்றுமே உன்னுடன் நான் துணையிருப்பேன் என்பதாக புன்னகைத்தாள் கொல்லி.

இன்று மட்டும் அல்ல என்றுமே கொல்லி பிரத்தியங்கராவையும் அவள் குடும்பத்தாரையும் காத்து நிற்பதோடு மட்டும் அல்லாது, அவளை உண்மையான பக்தியோடு வணங்குபவர்களையும் காத்து அருள் புரிவாள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுவோமாக!!!

முற்றும்.

4 thoughts on “Post Climax (போஸ்ட் க்ளைமேக்ஸ்)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *