The leader-21
அத்தியாயம்-21
“ச..சத்.சத்ரியன் சா..சார்” என்று ஷ்ரத்தாவின் குரலே நடுங்கியது.
சத்ரியனின் கையை பார்த்தாள். தோட்டா முழுவதுமாக துளைக்கவில்லை. அருகில் இருந்த அலங்கார கண்ணாடி நொறுங்கியதில் பறந்த கண்ணாடி சில்லும், தோட்டாவின் உரசலும் சேர்ந்து அவனது முன்கையில் ஆழமாக கிழித்திருந்தது.
செங்குருதி விரல்களை தாண்டி சொட்டியது.
அவள் தான் பயந்து போனாள். முதல் முறை துப்பாக்கி சுட்டு குருதி வழிவதை நேரில் பார்க்கின்றாளே.! முன்பு துப்பாக்கி தோட்டா கண்ணாடியை தகர்த்தெறிந்தது. இன்று சத்ரியனின் மீதல்லவா உரசிட, அவனோ அதை சாதாரண கீறல் போல பார்த்தான்.
ரத்தம் அவ்விடத்தை சொட்டிக்கொண்டிருக்க, “அச்சோ” என்று ஷ்ரத்தா அவசரமாக தனது கர்ச்சீப்பை எடுத்து அவன் கையை பிடித்து கட்ட முயன்றாள்.
அந்த நொடி கூட அவள் விரல்கள் நடுங்கியது. “கொஞ்சம் ஆடாம நில்லு… ரத்தம் வருது…” என்றவள் அவனது கையை இழுத்து கட்ட முயற்சிக்க, சத்ரியன் அவளையே பார்த்தபடி சிரித்தான்.
அந்த சூழ்நிலைக்கு பொருந்தாத சிரிப்பு. ஷ்ரத்தாவுக்கு கோபம் உண்டாக “எதுக்கு சிரிக்கற?” என்று பதறியபடி கடிந்தாள்.
“இதுக்கே இப்படி துடிக்கறியா ஷ்ரத்தா?” என்று சிரிப்பு குறையாமல் கேட்டவன், திடீரென தனது சட்டையின் கீழ் பட்டன்களை கழற்றினான்.
“ஹேய்… என்ன பண்ற?” என்று அவள் தடுக்க முனையும் முன்பே, அவன் சட்டையை விலக்கினான்.
ஷ்ரத்தாவின் மூச்சே நின்றது.
வயிற்றின் வலது பக்கத்தில், தோலுக்குள் பதிந்திருந்த சிறிய புல்லட். அதை சுற்றி ரத்தம் ஊற்றாக கசிய துவங்கியது.
“பு..புல்லட்.. வயிற்றுல இருக்கு” என்று அவள் இரண்டடி பின்னே நகர்ந்து தடுமாறினாள்.
“இப்ப சொல்லு… லேசான கண்ணாடி சில் குத்தியதுக்கு இந்த அழுகை பதட்டம்னா… இந்த துப்பாக்கி குண்டு பதிந்திருக்கே. இதுக்கு மயங்கி விழுந்துடாத. அப்பறம் டாக்டர் படிக்கறதுக்கு அர்த்தமேயில்லாம போயிடும்.
ரத்தம் கண்டு பயப்படாத. இதெல்லாம் கொஞ்சம் தான்” என்று அமைதியாக கூறினான்.
அவனது குரலில் வலி இல்லை.
அதுவே ஷ்ரத்தாவை அதிகமாக பயமுறுத்தியது. “ஹாஸ்பிடல் போகணும்.. இல்லை.. உயிர் போயிடும் டா முட்டாள்” என்றாள் உடனே.
சத்ரியனோ கீழே கிடந்த தனது கூர்மையான கத்தியை எடுத்தான். துப்பாக்கியுடன் அதுவும் உடன்பிறப்பு போல வைத்திருப்பான். தேவைக்கு ஏற்ப, யாரை எதில் அழிக்க தோன்றுமோ அதற்கு ஏற்றார் போல துப்பாக்கியாலோ, அல்லது கத்தியாலோ மரணத்தை பரிசளிக்க வைத்திருப்பது.
சத்ரியன் அந்த கத்தியை எடுத்து வயிற்றில் குண்டை எடுக்க முனைந்தான். “ஏய்! என்ன பண்ண போற? இடியட்” என்று அவள் அலறினாள்.
“கத்தாத… பார்த்தா தெரியலை புல்லட்டை ரிமூவ் பண்ணப் போறேன்.” என்று பற்களை கடித்தான். அடுத்த நொடி கத்தியின் முனையை காயத்தின் அருகே அழுத்தினான்.
“அச்சோ.. வேண்டாம்! மருத்துவரோட உதவியால தான் புல்லட்டை எடுக்கணும்.” என்று ஷ்ரத்தா அவன் கையை பிடிக்க முயன்றாள்.
“அப்ப நீ எடு” என்று கேலியாக கூறினான்.
“நான் பஸ்ட் இயர் படிக்கற ஸ்டுடண்ட். நான் இன்னும் சர்ஜரிலாம் பண்ணியதில்லை.” என்றாள்.
சத்ரியனோ “அப்ப நடப்பதை வேடிக்கை மட்டும் பாரு.” என்று அவளது கையை தள்ளிவிட்டான்.
சத்ரியன் கத்தியால் புல்லட்டை எடுக்க முயல, வலியில் நரம்புகள் புடைத்தன. கழுத்து இறுகியது.
வலியை அடக்க உதட்டை கடித்தபடி, கத்தியை உள்ளே செலுத்தினான். ஷ்ரத்தாவால் அதையெல்லாம் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
“போதும்… ப்ளீஸ்… டாக்டரிடம் போய் ட்ரீட்மென்ட் பார்க்கலாம்” என்று கண்ணீரோடு கெஞ்சினாள்.
சில விநாடிகளில் ‘பச்.’ என்று சத்தமிட்டவன், ரத்தத்தோடு புல்லட்டை வெளியே தூக்கி எறிந்தான். அதன்பின்னே பெருமூச்சை வெளியிட்டான். உடனே ‘குபுக்’கென ரத்தம் வேகமாக வெளியேறியது. ஷ்ரத்தா திகைத்தாள்.
“சத்ரியன்” என்று அவள் தன்னையும் மறந்து அவனை பிடித்தாள். அவளது கைகளில் அவன் ரத்தம் ஒட்டியது.
உடனே தனது சுடிதார் ஷாலை கழற்றி, அவன் இடுப்பை சுற்றி இறுக்கமாக கட்டினாள்.
“ஆட்டோ… ஆட்டோ!” என்று பதறி சாலையை நோக்கி கையை அசைத்தாள். ஒரு ஆட்டோ அவசரத்திற்கு நின்றது.
“ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் போங்க” என்று அழுதாள்.
“ஹாஸ்பிடல் எதுவும் வேண்டாம். என்னோட வீட்டுக்கு போ.” என்று சத்ரியன் கட்டளையிட்டான்.
“இல்ல இவ்ளோ ரத்தம் போகுது. இது ஆபத்து ஹாஸ்பிடல் தான் பெட்டர்” என்று அழுதபடி கூற,
“நான் சொன்னதை கேளுடி.” என்று கர்ஜித்தான்.
ஆட்டோ டிரைவர் கூட பயந்து அவனை பார்த்தான். கண்ணாடி சில் குத்தியதாக நினைத்து தான் ஆட்டோ அவனையும் ஷ்ரத்தாவையும் ஏற்றியது. ஆனால் புல்லட் என்றதும் குழம்பினான்.
ஷ்ரத்தா பதறியபடி, “உனக்கு ரத்தம் நிறைய போகுது… இதே அளவு போனா செத்துடுவ” என்றாள்.
“இந்த சத்ரியனுக்கு மரண வாசல் ஒன்னும் புதுசுயில்லை. என் வீட்டுக்கு போ டிரைவர்..” என்று மீண்டும் கூறியவன் கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை அவன் முன்னே தூக்கி போட்டான்.
துப்பாக்கி தோட்டா ரத்தமென்று பயந்த ஆட்டோக்காரன் யாரென அறியாது போலீஸ் கேஸ் வரும் சார். இறங்குங்க என்று கூற நினைத்தான்
தங்க மோதிரத்தை கண்டதும் ஆட்டோ நகர, சத்ரியனும் திடீரென ஆட்டோவில் சாய்ந்தான்.
அவனது கண்கள் சற்று மங்கியது.
“சத்ரியன்.” என்று அவள் தோளை பிடிக்க, அரைமயக்கத்தில் இருந்த சத்ரியன் முழுவதுமாக அவள் மேல் சரிந்தான்.
அவனது உடல் எடை முழுவதும் அவளை அழுத்தியது. “சத்ரியன்… ஹேய்… கண்ணை திறந்து பாரு மேன்” என்று அவள் துடித்தாள்.
ஆட்டோவிலேயே அவனை தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சத்ரியன் கூறியது போலவே அவனது வீட்டுக்கே செல்ல டிரைவருக்கு பணித்தாள். எங்கே மருத்துவமனை என்று சென்று அங்கே யாரேனும் இவனை மீண்டும் கொல்ல முயன்றால்? எதற்கு வம்பென நினைத்தாள்.
அந்த பயணம் முழுவதும்,
சத்ரியன் ரத்தம், ஷ்ரத்தா கைகளில் இதமாக உறைந்தது.
ஆட்டோ டிரைவர் சத்ரியன் வீட்டில் நுழைய, படைகள் சூழ்ந்தது போல யோகேஷ் ஒருபுறம், வினோத் மறுபுறம் என்று ஓடிவந்தார்கள்.
அதன்பின் சத்ரியன் சிகிச்சை அவர்கள் முன்னிலையில் அவரது ஆஸ்தான மருத்துவரால் சிகிச்சை ஆரம்பமானது. மருத்துவ உடையணிந்த டாக்டர்ஸ் கூடுதலாக வந்தனர். அதற்கு தோதாக நர்ஸ் ட்ரேவில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களோடு தயாராகினார்கள். ரத்தமும் தேவைக்கு செலுத்தப்பட்டு, வீட்டிலேயே உடனடியாக மருத்துவமனை போல மாறியது. ஷ்ரத்தாவுக்கு அதையெல்லாம் காண வினோதமாக இருந்தது.
சத்ரியன் கண்களை திறந்த போது
மங்கலான மஞ்சள் விளக்கு. அவனது அகன்ற அறை. அவனுக்கு பிடித்த கருப்பு மரச்சாமான்கள், கனமான திரைகள், ஏசியின் குளிர்,
மருந்துவாசனையோடு கலந்த மணம் என்று சத்ரியன் மெதுவாக கண் விழித்தான்.
“பாஸ்..” என்று யோகேஷ் அருகே வந்தான். வினோத் ஆழ்ந்த மூச்சுவிட்டான்.
“ஓகேவா பாஸ்?” என்றார்கள் இருவரும். சத்ரியன் மெதுவாக தலையசைத்தான்.
அவன் பார்வை, அவர்கள் இருவரை தாண்டி,
அறையின் மூலையில் நின்ற ஷ்ரத்தாவை தேடி சென்றது.
அவள் அழுததால் கண்கள் வீங்கி இருந்தது.
சத்ரியன் வயிற்றில் ரத்தம் வெளியேறியதால் அவளது ஷாலை கட்டிவிட்டதால். தற்போது, ஷால் இல்லாமல், அவசரத்தில் பதட்டத்தில் அழுது ஒய்ந்து இருக்க சீர்குலைந்த தோற்றமாக காணப்பட்டாள்.
சத்ரியன் கண் திறந்து பார்த்ததும், போன உயிர் திரும்பி வந்தது போல நிம்மதியடைந்தவள், அவன் காணவும் உடனே முகத்தை திருப்பினாள்.
சத்ரியன் மெதுவாக, ‘எல்லாரும் வெளியே போங்க’ என்பது போல பார்வை பார்த்தான்.
வினோத் தயங்கினான். “பாஸ் இப்ப தான் புல்லட் ரிமூவ் பண்ணி டாக்டர் மேற்பார்வையில் இருக்கிங்க” என்று நினைவுப்படுத்தினான்.
“தெரியும்.. கெட் அவுட்” என்றவன் குரல் சற்றே கடினமானது.
இருவரும் வெளியேறினர்.
அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது.
சில விநாடிகள் கழித்து, ஷ்ரத்தா அழுகை இல்லாமல் தன்னை பார்வையிடவும், “அப்பவே சாக விட்டிருக்கலாமே. ஏன் காப்பாத்தின?” என்றான் சத்ரியன்.
ஷ்ரத்தா சட்டென அவனை பார்த்தாள். அவளுக்கும் அது தான் புரியவில்லை. ஆனால் அவனிடம் காட்டிக் கொண்டால் ஆடுவானே…!
தொண்டையை செருமி “அப்படி தான் நினைச்சேன்… செத்து போகட்டும்னு நினைச்சேன்” என்றாள் உடைந்த குரலில். “ஆனா முடியலை.” என்று கூற தொண்டை அடைத்தது ஷ்ரத்தாவிற்கு.
ஏனோ தேவையற்று கண்ணீர் வேறு வழிய, அதை துடைத்தபடி, “நான் டாக்டர் படிக்க வந்தது உயிரை காப்பாத்த… சாகடிக்க இல்லை…” என்றாள்.
“ஓ… டாக்டர் படிக்கறதால..” என்று சிரிக்க முயன்றான் சத்ரியன். ஆனால் சுருக்கென தையலிட்ட இடம் குத்தியது.
“எங்கப்பாவை நீ கொன்றிருப்பியோனு நினைச்சேன்… இன்னும் நினைக்கறேன்… ஆனா… அந்த நேரம்… என்னால உன்னை சாகடிக்க முடியலை…” என்று
அவள் தன் தலையை தாங்கி பிடித்தாள்.
ஷ்ரத்தாவோ சத்ரியனை கண்டு, “எனக்கே என் மேல கோபமா இருக்கு… எங்கப்பாவை கொன்றியா இல்லையானு தெரியாது. ஆனா உன்னால நிறைய பேர் செத்திருக்காங்க. அதுக்காகவாது உன்னை சாகடிக்க விட்டிருக்கலாம். உன்னை போய் காப்பாத்திட்டேனேனு வருத்தமா இருக்கு.” என்றதும்
சத்ரியன் அமைதியாக அவளை பார்த்தான்.
”நான் உன்னை கொன்னிருந்தா… உன்னோட எதிரிகள் சந்தோஷப்பட்டிருப்பாங்கள்ல.” என்று அழுத சுவடை துடைத்து கேட்க, சத்ரியன் ஆமோதிப்பது போல சிரித்தான்.
மெதுவான, ஆழமான சிரிப்பு.
பிறகு அவன் பார்வை…
மெதுவாக ஷ்ரத்தாவை வருடியது.
அவளது பயந்து வாடிய முகம்,
அழுததால் சிவந்த மூக்கு, இன்னமும் பயம் களையாததால்
நடுங்கும் உதடு, ஷால் இல்லாததால், பதட்டத்தில் மூடியிருந்த நெஞ்சுப்பகுதி அவளது அதிகப்படியான சுவத்தால் ஏறியிறங்கி துடித்தது.
அவளது விரல்கள் நடுக்கத்தை மறைக்க, அவளணிந்த உடையை இறுக பற்றினாள். அந்த உடை முழுக்க அவனது ரத்தம் காய்ந்திருந்தது. அவனுக்கு அது இதமாக இருந்தது.
“பதினெட்டு வயசு முடிஞ்சதும்..” என்று மெதுவாக ஆரம்பித்தான்.
ஷ்ரத்தா புருவம் சுருக்கினாள்.
“நாட்டை யார் ஆண்டா நல்லாயிருக்கும்னு யோசிக்கற அளவுக்கு வளர்ந்துட்ட போல.” என்று தேவையற்று அவன் பார்வை மீண்டும் அவளிடம் நிலைத்தது.
“ஆனா, இந்த கண்ணு… இந்த கோபம்… இந்த நடுக்கம்…” என்று அடுக்கியபடி இடது கையால்
அவள் முகத்தில் உள்ள பதட்டத்தை சுட்டிக்காட்டி, சற்றே சாய்ந்திருந்த தேகத்தை முன்னே நகர்த்தி, “இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்கு.” என்றான்.
ஷ்ரத்தா கோபத்தில் பின்னே நகர்ந்து கையை கட்டி நின்றாள்.
“கிண்டல் பண்ணறதை நிறுத்தறியா. எந்த மாதிரி நிலையிலா என்ன பேசற” என்று கோபத்தை காட்ட, சத்ரியனோ கேட்கவில்லை.
“உன் உதடு துடிக்குது.. ஆனாலும் என்னை எதிர்த்து பேசற.” என்றவன் சிரித்தான்.
“உன் இதயம் பயப்படுது.. உன் செஸ்ட் அப்டவுன்னு மூச்சு விடுது. என்னால உனக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்குனு தெரிந்தும், எந்த நம்பிக்கையில என்ன காப்பாத்தற? ஷ்ரத்தா… உனக்கு என்னமோ ஆகிடுச்சு. என்னை பார்த்து ரசிக்க ஆரம்பிச்சிட்டியா?” என்றான்.
“ஷட் அப்.. கண்ணெதிரில் ரத்தத்துல மிதக்கற சாகட்டும் விட முடியலை. ஜஸ்ட் பிழைக்க வச்சிட்டேன். எனக்கொன்னும் ஆகலை. உன்னை மாதிரி நான் மிருகம் இல்லை. சாதாரண மனுஷி. அதனால காப்பாத்தி தொலைச்சிட்டேன்” என்று கத்தினாள். ஷ்ரத்தாவுக்கும் மனதிற்குள் இதே எண்ணம் ஓடியது. தந்தை இறப்புக்கு இவன் காரணமாக இருந்தால் சாக விட்டிருக்க வேண்டும். ஆனால் ஏன் காப்பாற்றி விட்டோமே ஏன் எதனால்? தனக்கு என்னானது? இதையே அவள் மனம் கேட்க, தற்போது அதையே சத்ரியன் கேட்டதும் கோபம் ஆறாக மாறியது.
“நீ என்னை பார்த்து பேசற பார்வை கூட மாறிடுச்சு ஷ்ரத்தா.. எனக்கு கண்ணாடி சில் குத்தி கையில ரத்தம் வந்ததுக்கே பதறின, அழுத. புல்லட் வயிற்றில் பட்டதை பார்த்து, உன் உயிரே போனது போல துடிச்சிட்ட ஷ்ரத்தா. அதெல்லாம் நான் ரசித்தேன்” என்றவன் மெது
வாக கண்களை மூடினான்.
ஷ்ரத்தாவோ இந்த பதட்டம், அழுகை, ஏதோ தன் உயிரே போன உணர்வெல்லாம் ஏன் தனக்கு உண்டானது என்று விழித்து அதிர்த்தாள்.
-தொடரும்.

தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 21)
ஆனா, பட்டபகல்ல இவன் ஏன் இவளை ஃபாலோ பண்ணிட்டு தன்னந்தனியா வந்தான்..? இவனோட செக்குரீட்டி கார்ட்ஸ் என்ன ஆனாங்க ? இப்படியா பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறாரா, இல்லையான்னு கூட கண்டுக்காமல் இருப்பாங்க?
ஆனா, ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சின்சியரா லவ் பண்றாங்களோன்னு தோணுது.
😴😴😴
CRVS (or) CRVS2797
Interesting 👌👌👌👌👌👌
Wow sema twist. Wonderful. What’s going on between them? Very intresting sis.
Interesting super super super super super super super super super super super super
Super sis nice epi 👍👌 aana eppdi thaniya vandhan evan eppovumey yaaravudhu kooda varuvaanga ella endha yokesh kooda pinnadiye suthuvaaney en yaarumey eppo varala🧐🤔
Therinje ivan safe illama vanthu irukan athuvum day time la just miss illana kandipa uyira poi irukum shratha yen intha alavuku thudikira avanukaga athaum ipo tha yosikura avan ena da na shratha pathu rasikiran onume Puriyala ye sisy
செம சூப்பர்