அத்தியாயம்-25
இரவு முழுவதும் சத்ரியனின் பங்களா ஒரு விதமான அசாதாரண அமைதியில் மூழ்கியிருந்தது.
காலை வரை ரத்த வாசனையால் கனத்திருந்த ஹால், இப்போது முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கருப்பு மார்பிள் தரையில் இருந்த சிவப்பு தடங்கள் அழிக்கப்பட்டிருந்தது.
வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஷ்ரத்தாவுக்கு மட்டும் இன்னும் அந்த இடத்தில் முழுவதும் ரத்த வாடை வீசுவது போலவே இருந்தது.
அவள் ஹாலின் மூலையில் நின்றபடி கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு சத்தத்திற்கும் உடம்பு திடுக்கிட்டது.
அந்த நேரம் வெளியே காரின் சத்தம் கேட்டது.
ஷ்ரத்தாவின் இதயம் சட்டென அதிகப்படியாக துடித்தது. சில விநாடிகளில் கதவு திறந்து சத்ரியன் உள்ளே வந்தான்.
மேல்சட்டை இல்லாமல் இருந்த உடலில், பேண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது.
அவன் அருகே வந்தவுடனே ஷ்ரத்தாவுக்கு மீண்டும் அதே இரத்த வாசனை மூக்கை தாக்கியது.
அவள் அறியாமலே இரண்டு அடி பின்னே பயத்தில் நகர்ந்தாள். அடுத்து தன்னை மாய்த்திடுவானோ என்ற மரண பயம்.
அதை கவனித்த சத்ரியன் மெதுவாக அவளை பார்த்தான்.
அந்த பார்வையில் கோபமில்லை. ஆனால் ஏதோ தேடல் இருந்தது.
“இந்த வீடியோ…” என்று அவன் நேராக விஷயத்திற்கு வந்தான்.
ஷ்ரத்தா அமைதியாக நின்றாள்.
“எப்ப உனக்கு கிடைச்சது?” என்றான். அவள் பதில் சொல்லவில்லை.
இவளை அதட்டவும் வழியின்றி பெருமூச்சை விடுத்து, “உன்னை யாராவது கான்டெக் பண்ணாங்களா?” என்றான் அதற்கும் அமைதி.
சத்ரியனுக்கு பூப்போன்ற பெண்ணிடம் கனிவாக பேச வரவில்லை. “ஏய் நான் தான் உங்கப்பாவை கொன்றேன்னு நீ நம்பறியா?” என்று அவன் இம்முறை நேராக கேட்டான்.
ஷ்ரத்தாவின் தொண்டை உலர்ந்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
ஏனெனில் சத்ரியன் தன் தந்தையை கொல்ல நினைத்தது உண்மை. அதை அவனே ஒத்துக்கொண்டான்.
ஆனால் அவன் கண்களில் பார்த்த போது, ‘நான் தான் கொன்றேன்’ என்று சொல்கிறவன். நிஜமாகவே சத்ரியன் கொன்றால் அதை இவளிடம் சொல்லிட அவனுக்கு தயக்கமும் இல்லை. அதுவே அவளை இன்னும் குழப்பியது. சத்ரியன் மெதுவாக மூச்சை இழுத்தான்.
“சோ…” என்று உதட்டை ஈரப்படுத்தி.
“உன்னை யாரோ அணுகியிருக்காங்க.” என்றான் உறுதியாக. ஷ்ரத்தா புருவம் சுருக்கினாள்.
“என்னை கொல்ல யாருக்காவது மோட்டிவ் இருக்கும். ஆனா… உன்னை இதுல நுழைச்சி, உன்னையும் என்னையும் குழப்பற அளவுக்கு கேம் ஆடுறான்னா.. அவனுக்கு நம்ம இருவருக்குமான கண்ணாம்பூச்சி ஆட்டம் தெரியுது. அதோட அவனுக்கு தேவை என் உயிர் மட்டும் தான்.” என்று பாதியில் நிறுத்தினான்.
அவன் கண்கள் மெதுவாக இருண்டது. அடுத்த நொடி யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து டீபாயில் போட்டான்.
அதோடு அருகே இருந்த கத்தியையும் வைத்தான்.
யோகேஷ் உடனே பதறினான்.
“பாஸ்…” என்றான். வினோத் கூட அதிர்ச்சியாக பார்த்தான்.
ஷ்ரத்தாவோ அங்கேயே உறைந்து நின்றாள். சத்ரியன் அமைதியாக அவளை பார்த்தான். “எடுத்துக்கோ… யாருக்காகவோ நீ என்னை சாகடிக்க வேண்டாம். உனக்கு என்னை கொல்ல ஆசையா இருந்தா கில் மீ” என்றான். “எ… என்ன?” என்று அவள் திகைத்தாள்.
“உனக்கு நான் தான் உங்கப்பாவை கொன்றேன்னு என் மேல அவநம்பிக்கை இருந்து அந்த எவனோ ஒருத்தன் மீது நம்பிக்கை இருந்தா ஜஸ்ட் கில் மீ ஷ்ரத்தா” என்று துப்பாக்கியை நோக்கி தலையசைத்தான்.
“சுடு.” அந்த ஒரு வார்த்தையில் ஹாலே அமைதியாகிவிட்டது.
யோகேஷ் வேகமாக முன்னே வந்தான். “பாஸ் இது வேண்டாத விஷப்பரீட்சை.” என்றான்.
“பின்னாடி போ.” என்று சத்ரியனுக்கே உரிய குரலில் கட்டளையிட்டான். அந்த தாழ்ந்த குரலே இன்னும் பயங்கரமாக இருந்தது.
ஷ்ரத்தாவின் கைகள் நடுங்கியது.
அவள் மெதுவாக துப்பாக்கியை பார்த்தாள். அந்த குளிர்ந்த கருப்பு ஆயுதம். அவளை அச்சுருத்தியது
“எடுத்துக்கோன்னு சொன்னேன்.” என்றான் சத்ரியன். ஷ்ரத்தா மெதுவாக குனிந்து துப்பாக்கியை எடுத்தாள். கைகள் முழுக்க நடுக்கம். அவள் சத்ரியனை நோக்கி உயர்த்தினாள்.
யோகேஷ் முகம் இறுகியது. வினோத் மூச்சே விடவில்லை. ஆனால் சத்ரியன் மட்டும் அசையாமல் நின்றான். அவன் பார்வை மட்டும் அவளது கண்களில் இருந்தது.
“சுடு.” என்றான் மீண்டும். ஷ்ரத்தாவின் விரல் ட்ரிகரை தொட்டது.
அவள் மனதில் திடீரென சில நிமிடங்களுக்கு முன் யோகேஷ் கூறிய வார்த்தைகள் ஒலித்தது.
‘என்னை விடு… நான் போறேன்.’ என்று சற்று முன்பு கத்தியது நினைவுக்கு வந்தது.
யோகேஷ் அவளை தடுத்தான். கூடுதலாக ‘பாஸ் எந்த பொண்ணையும் வீட்டுக்கு போர்ஸ் செய்து கூட்டிட்டு வந்ததில்லை. உங்களை பாதுகாப்புக்காக தான் இங்க வச்சிருக்கார். அவர் ஆசைக்காக உங்களை தொட்டது கூட இல்லை. உங்கப்பா விஷயத்தையும் கண்டுபிடிக்க முயற்சி பண்றார் மேடம். அவருக்கு அவரை காப்பாற்றியவரை கொன்ற திவாகரை யார் கொன்றானு தெரிந்துக்கவும் கொல்லவும் துடிப்பா இருக்கார். நீங்களா அவரை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. நீங்க சொன்ன மாதிரி அவர் மெத்தையை அலங்கரிக்க மாடல் அழகிகள் ஆயிரம் பேர் வரிசையில வருவாங்க. பணம் தந்தா மகிழ்விச்சிட்டு போகப்போறாங்க. யோசித்து பாருங்க.. பாஸ் அவர் உயிரை பொருட்படுத்தாம தேடி வந்தது உங்களை தான் அதுவும் இரண்டு முறை’ என்று கூறினான்.
ஷ்ரத்தாவின் மூச்சு கனத்தது.
அவள் துப்பாக்கியை பிடித்தபடியே யோகேஷை பார்த்தாள்.
உண்மையிலேயே யாரோ வேறொருவர் வெளியேயிருந்து இருவரிடமும் ஆட்டம் ஆடுகிறானா? அந்த எண்ணம் உதிக்க, அவளது கை மெதுவாக கீழிறங்கியது.
சில விநாடிகளில் துப்பாக்கி அவள் விரலிலிருந்து நழுவி தரையில் விழுந்தது. சத்ரியன் அமைதியாக அவளை பார்த்தான்.
அந்த பார்வையில் வெற்றி இல்லை. ஆறுதல் இல்லை.
ஏதோ கனமான ஒன்று மட்டும் இருந்தது. முன்பு கொல்வதற்கு தயாராகி சுட்டும் முடித்தாள். இன்று அருகேயிருந்தாலும் அஞ்சுகின்றாள்.
ஷ்ரத்தா கண்களை மூடி கொண்டாள். ”எனக்கு எதுவும் புரியலை…” என்றாள் உடைந்த குரலில். சத்ரியன் மெதுவாக அருகே வந்தான். அவள் உடனே பின்னே நகர்ந்தாள். அவன் நின்றுவிட்டான்.
அதை கவனித்த யோகேஷ் மனதிற்குள் பெருமூச்சு விட்டான்.
சத்ரியன் மெதுவாக, “சாப்பிட்டு தூங்கு. எதையும் யோசிக்காத.” என்றான்.
அவ்வளவுதான் சொல்லிவிட்டு அவன் திரும்பி அவனது அறைக்கு சென்றான். ஷ்ரத்தா அங்கேயே நின்றாள். அவன் படிகளில் ஏறும் சத்தம் மட்டும் கேட்டது.
அந்த இரவு சத்ரியனால் தூங்க முடியவில்லை. அவன் அறை முழுவதும் மங்கலான இருளில் மூழ்கியிருந்தது. ஏசியின் குளிர் கூட உடலுக்குள் எரியும் வலியை குறைக்கவில்லை. வயிற்று காயம் துடித்தது. ஆனால் அதைவிட அவன் மனசு அவளிடம் சிக்கியிருந்தது.
படுக்கையில் சாய்ந்து கண்களை மூடியவனுக்கு, முதல் நாள் ஷ்ரத்தாவை பார்த்ததை நினைவுக்கு கொண்டு வந்தான்.
அன்று வினோத் தவறாக கடத்தி கொண்டு வந்த பெண். கோபத்திலும் பயத்திலும் நடுங்கிய குரலில், எல்லா பொருட்களையும் பூனை தப்பிக்க முயன்று எல்லாவற்றையும் உருட்டி தள்ளியது போல நகர்ந்து உடைத்திட, நிற்க வைத்து கத்தியதும் மானை போல மிரண்டாள். அவனை பார்த்து பயந்து கொண்டே, அதே நேரத்தில் அவனை திட்டிய ஒரே பெண்.
அவன் பெயர் கேட்டாலே நடுங்குறவர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால் அவள் பயந்தபடியே தன்னை எதிர்த்து பேசினாள்.
வெளியே எரிச்சலோடு கத்தி விட்டாலும், தன்னை சிறைக்கு செல்லாமல் வாதாடி வெளியே கொண்டு வர வாதாடிய திவாகர் மகளை கண்டு, அவளுக்கு ஆபத்து நேராமல் அனுப்பவே நினைத்தான்.
அடுத்து உயிருக்கு பயந்து அவனது பாரில் மூச்சிரைக்க வந்து நின்றதும், எங்கே அவ்விடத்திலிருந்து காப்பாற்றினால், தன்னை கட்டம் கட்டும் எதிராளிக்கு அவளை வைத்து என்னை சீண்டும் எண்ணம் வந்துவிடுமோ என்று செத்தா சாவுடி என்று பந்தை உருட்டிவிட்டான். ஆனால் அப்படி இறந்தால் யார் சாகடித்தார் என்று தேடி அவனை கொன்றுவிட கூறி புது ஆட்டத்தை போட்டு உயிரை காப்பாற்ற முனைந்தான். ஏனோ அப்பொழுதே அவளை காத்திடும் எண்ணம் நெஞ்சில் புகுந்துவிட்டது. அத்துடன் திவாகர் இறப்பை போலவே இவளையும் யாரோ சாகடிக்க நினைப்பதாக உள்ளுணர்வு கூற யோகேஷை காத்திட அனுப்பிவிட்டான்.
இதில் கல்லூரியில் கார்டியன் என்று போட்டும் அவளை யாரோ சங்கடப்படுத்துவதை யோகேஷ் மூலமாக அறிந்து, சென்றவனுக்கு ஆச்சரியம். ஏனோ வெறித்தனமாக அவளது சீனியரை அடித்து துவைத்த பின்னரே தன் உயிரை மீட்ட உணர்வு.
அதெல்லாம் அவனது அதிகார போதையை சற்றும் குறைத்திடாமல் காத்திடும் வழியென்று எண்ணியிருக்க, மாறாக அவள் வீடு தேடி வந்து அன்று ‘உனக்கெல்லாம் பணத்துக்கு வர்றவ தான் படுப்பா. அதை தாண்டி உனக்காக யார் நெருங்கி வருவா. அன்பு செலுத்துவா?’ என்றது போல கேள்வியை வீசிட, ‘யாரும் வரவேண்டாம். அவ தான் மெத்தையை ‘அலங்கரிக்க வேண்டுமென ஈகோ எழுந்தது. அன்றிலிருந்து பெண் போதையை நாடாமல் தவிர்த்தான். அது கடினமாக இருக்குமென எண்ணியதற்கு பதிலாக இலகுவானதாக அமைந்தது
ஒவ்வொரு நாளும் ஷ்ரத்தா தான் அவன் முன் வந்து அவளது மென்மையான கரத்தால் தீண்டுவது போல பிரம்மை உண்டானது. சொல்லப்போனால் நாளாக நாளாக, பட்டினி இருந்த சிங்கமாக இருந்தவனுக்கு அவளை தேடி வரும் ஆசையும் உண்டானது.
பதினெட்டு கூட ஆகவில்லை என்றது புத்திக்கு உரைத்ததும் தான், காத்திருந்தான். பிறந்தநாளன்று அவளை சந்திக்க ஆசைப்பட்டு சென்றதும், அவள் வெறுக்க அவளிடமே துப்பாக்கியை நீட்டி சுட தந்தான். அவள் கையால் இறந்தால் அவளுக்கான பிறந்த நாளுக்கு பரிசாக இருக்குமென்று கூட சீண்டினான். சத்ரியனுக்கு தெரியும் அவளால் சரியாக துப்பாக்கியை ஏந்தி நிற்கவே தெரியாது தடுமாறுவாள். இதில் தோட்டா எல்லாம் சரிப்பார்த்து சுடுவாளா? அப்படியும் மீறி சுட்டு, அவ்விடமும் களோபரத்தை கொண்டு வேடிக்கை சம்பவத்தை நிகழ்த்தினான்.
இதில் தன்னை யாரோ அழிக்க மெனக்கெடுவதை அறிந்தான்.
அதையெல்லாம் தாண்டி மரண பயத்தை கூட தூக்கி போட்டு, இரவு அவளை தேடி அவளிடம் வந்து அவளை ரசிக்க மனம் அந்தளவு பித்தாக்கிவிட்டது.
அதோடு துப்பாக்கி குண்டு வயிற்றில் இருந்தபோது, அழுதபடி ஷாலை கிழித்து கட்டியவளை காண அவள் மடியில் சரிந்து மரணிப்பதில் சுகமாக எண்ணினான். ‘சத்ரியன்… கண்ணை திறந்து பாரு…’
அந்த பதட்டமான குரல் காதில் ஒலித்தது. அவன் உதட்டோரம் தெரியாமல் ஒரு சிரிப்பு வந்தது.
இந்த பத்து வருடத்தில்… அவன் யாரென அறிந்து பயப்படும் பெண்கள் நிறைய, அவன் யாரென அறியாது ஆசைப்பட்ட பெண்களும் இருந்தார்கள்.
ஆனால்… அவனுக்காக துடித்த பெண்? இதுவரை இல்லை. இவள் மட்டுமே இவன் யாரென்று அறிந்தும் பயப்படாமல் நேருக்கு நேராக நின்று அவனை எதிர்த்து ஆர்வத்தை தூண்டி ரசிக்க வைக்கின்றாள்.
சத்ரியன் மெதுவாக நெஞ்சை அழுத்திப் பிடித்தான்.
அங்கே ஏதோ புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது. இவளொருத்தி வந்துவிட்டாளென இனிய அவஸ்தையுடன் அறிவுறுத்தியது.
அது ஆபத்தானது என்றாலும் அதை தடுத்து நிறுத்த அவனுக்கே விருப்பமில்லை.
ஷ்ரத்தா விரும்பினால் அவளை அள்ளிக்கொள்ளும் ஆசை இருந்தது. ஆனால் அதை தாண்டி இன்று அவளிடம் கண்ட விஷயம் உடலை தாண்டி வேறென்று அவளிடம் பார்க்க துவங்கினான்.
ஏதோவொன்று இதயத்தை தாக்குவதை சத்ரியன் அறிந்துவிட்டான்.
ஷ்ரத்தாவுமே நான் ஏன் அவனை சுடலை. பாவம் பார்க்கறேனா… அவனுக்கா…? ஒரு உயிரை துச்சமா சாகடிச்சிட்டு சலனமேயில்லாம கடந்து போறவன் மேல இரக்கம் வருமா? இல்லை இது இரக்கம் இல்லை. அவன் பார்வை என் நெஞ்சை துளைக்குது. யாரோ ஒருவனுக்காக சாகறதுக்கு உன் கையில சாகறேன்னு துப்பாக்கியை தூக்கி போட்டு நிற்கறான். இவன் என் அப்பாவை கொன்றிருக்க மாட்டான். அப்ப வேற யாரோ இருக்காங்க. ஒன்னு சத்ரியன் இறப்பை என் மூலமா நடத்த நினைக்கறவன். அந்த எக்ஸ் பத்தி சத்ரியனிடம் சொல்லலாமா? என்று யோசித்து சத்ரியன் அறை வரை வந்தாள்.
ஆனால் அவளால் கதவை தட்டும் நேரம் அச்சமும் உண்டானது.
-தொடரும்.

Sharadha u should tell the truth about x . Then only he can save from ur enemy. Very intresting sis. Love impact whooever. Don like chatriyan also.
Super sis nice epi 👍👌😍 endha chathriyan nallavana ketavana🙄 endha shratha kandipa avan kita ellathaiyum sollanum parpom 🧐🤔
I think vinotha irrukumo
Apo chathriyan nijamavr shratha va love pana start panitan shratha panla aana avaluku etho oru ithu Iruku atha love nu solla mudiyathu papom eppadi kandu pidikiranu
Interesting waiting for nxt epi
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 25)
அட ராமா ! பேசாமல் சத்ரியன் கிட்டப் போய் யாரோ ஒருத்தன் அவள் மூலமா அவனை கொல்ல தூண்டறாங்க என்கிற விஷயத்தை சொல்றதை விட்டுட்டு, இவ எதுக்கு இன்னும் அந்த பாரத்தை தன் மண்டையிலயும் மனசுலயும் போட்டு குழப்பிக்கணும்ங்கிறேன்.
அவன் கிட்ட சொன்னாலாவது யாரு, என்ன, எப்படின்னு சீக்கிரம் கண்டு பிடிப்பான் தானே…? வெறும் வாய் சவாடல் தான் இந்த ஷ்ரத்தாவுக்கு.
😴😴😴
CRVS (or) CRVS2797
Super super super super super super super super interesting
superb!!!
Very interesting