The leader-28
அத்தியாயம்-28
ஷ்ரத்தாவுக்கு யோகேஷ் பேசிவிட்டு சென்றதும், நகர்ந்ததும் அவளுமே யோசித்தாள்.
உண்மையில் சத்ரியன் தன் பின்னால் திரிய வேண்டிய அவசியமேயில்லை.
அவளே அவனுடன் இருந்த சில அழகிகளை பார்த்திருக்கின்றாளே, நல்ல வனப்பான உடல்வாகும், பாலில் முக்கி எடுத்த நிறமும், ஏன் ஒரு முறை பாலிவுட் அழகி கூட இங்கு வந்துவிட்டு சென்றதை வினோத் உரைத்திருந்தார்.
அப்படியிருக்க தான் எல்லாம் அவனுக்கு சர்வ சாதாரணம். தனது பேச்சிற்காக தன்னை வீழ்த்த நினைக்கின்றான் என்றால், அவளை கட்டாயப்படுத்தி புணர்ந்தாலும் இங்கே தனக்காக கேள்விக் கேட்க ஆளில்லை. அப்படியிருக்க தன்னை பாதுகாத்து, தனக்கு நிழலாக பாடிகார்ட்ஸை அனுப்பி, உயிரை காப்பாற்றி, தன் நலனை விரும்புவது எதற்காக?
அத்துடன் சாதாரண வாழ்வில் முழ்கியிருந்த தனது நிலை, ஏன் இத்தகைய வாழ்வுக்கு மாறியது. இதெல்லாம் காலத்தின் கட்டாயமா? அல்லது கடவுளின் திருவிளையாட்டா?
சத்ரியனுக்கும் தனக்கும் இதற்கு முன், முன் ஜென்மத்தில் விட்டக்குறை தொட்டக்குறை இருக்குமோ? என்று முன் ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாதவளே அதை பற்றி சிந்தித்தாள்.
ஒன்று மட்டும் யோகேஷால் இன்று தெளிவானது. சத்ரியன் கெட்டதே ஆனாலும் பலவிதமான பணிகளை கண் பார்வையில் கச்சிதமாக முடிக்கின்றான். அப்படியிருக்க அவன் தனித்து வந்தால் உயிரை மாய்க்க படைகள் உண்டு. அதைமீறி அவளை காண தனியாக வந்தது அதிசயமே.
இதில் அந்த எக்ஸ் தன்னை பேசி சரிக்கட்டி, சத்ரியனை கொல்ல துடித்திருப்பதும் புரிந்தது.
எக்ஸ் யாராக இருக்கும்? என்று யோசிக்க, அங்கே கல்லூரியில் ஒருவன் ரத்த வாந்தி எடுத்து மயங்கி சரியவும், கூட்டம் அலைமோதியது.
ஏதோ சாப்பிட்டது ஒத்துக்கலை.” என்று சத்தம் கேட்டது. உடனடியாக மருத்துவமும் பார்க்கப்பட அழைத்து செல்லவும், யோகேஷ் ‘இன்னிக்கு காலேஜ் வந்தது போதும் மேம்.” என்று அழைக்க, ஷ்ரத்தா இருந்த மனநிலைக்கு கனிமொழியிடம் கூறிவிட்டு யோகேஷுடன் சென்றாள்.
காரில் ஏறியப்பின்னரே, யோகேஷுக்கு சத்ரியன் அழைப்பு வந்தது.
“காலேஜில இருந்து கிளம்பிட்டியா? இல்லையா? அவ வரலைன்னு ஆர்க்கியூமெண்ட் பண்ணறாளா ” என்று கர்ஜனை.
“பாஸ்… உடனே புறப்பட்டுட்டோம் மேடத்துக்கு எதுவும் கேட்கலை. அவங்க குழப்பமான மனநிலையில் இருக்கவும் கூட வந்துட்டாங்க.” என்றான்.
“குட். சிட்டுவேஷன் அவளா உணர்ந்து தெளியட்டும்” என்றான்.
“நோ பாஸ். அவங்களுக்கு அந்த இன்சிடெண்ட் அவங்களை டார்கெட் செய்ததுன்னே தெரியலை” என்றான்.
“என்ன சிட்டுவேஷன்? என்ன டார்கெட்?” என்று ஷ்ரத்தா கேட்க, யோகேஷோ “அந்த ஸ்டூடண்ட் சாப்பிட்டதுல பாய்ஸன் மிக்ஸ் ஆகியிருக்கு மேம். அது உங்களை சாகடிக்க போடப்பட்ட திட்டமா இருக்கலாம். அதனால தான் உடனே மூவ் ஆகறோம்” என்று கூறினான்.
ஷ்ரத்தாவுக்கு பகீரென்றது. இதென்ன தன்னை கொல்ல யார் துடிப்பது.? தனக்கு தான் யாருமில்லையே. தனக்கு யார் எதிரி. தலைப்பாரமாக உணர இருக்கையில் சாய்ந்தாள். தன்னால் அந்த ஸ்டுடண்ட் உயிர் பாதிக்க கூடாது. பிழைத்திட வேண்டுமென்ற வேண்டுதலையும் வைத்தாள்.
ஏதோ அழுத்தங்கள் அவளை விழுங்க, நிலைக் கொள்ளாமல் தவித்தாள்.
சத்ரியனின் பங்களாவிற்கு வந்தப்பிறகும் அறைக்குள் சுருண்டுவிட்டாள்.
சூரிய ஒளி மெதுவாக மறைந்து கொண்டிருந்தது. பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே ஆரஞ்சு நிற வெளிச்சம் உள்ளே விழுந்து ஹாலை பாதி இருளாக்கி வைத்திருந்தது.
ஹாலுக்குள் வந்தவள் சுற்றி பார்த்தாள். சத்ரியன் அங்கேயே நின்றிருந்தான். யாரோடு போனில் பேசிக்கொண்டிருந்தான்.
அவளை பார்த்ததும், ஒரு நொடி அவன் பார்வை மாறியது.
பிறகு அமைதியாக போன் காலை துண்டித்தான்.
ஷ்ரத்தா அவனை நோக்கி வேகமாக நடந்தாள்.
“அந்த ஸ்டூடண்ட் உயிர் பிழைச்சிட்டானா?” என்று பயத்துடன் கேட்டாள்.
அவள் வாக்கியம் முடியும் முன்பே,
“நானே அவனை கொன்றுயிருக்கும்.” என்று சாதாரணமாக கூறினான்.
“ஏ..ஏன்?” என்றாள். இன்னமும் நடுக்கம் குறையாமல்.
“பின்ன.. சீனியர்னு ஒரு பையனை போட்டு அத்தனை அடி அடிச்சேன். இவன் அங்கிருந்து அதை பார்த்தும் இப்படி ஆரம்பிச்சா?” என்று அனலாக பேசினான்.
“அந்த ஸ்டூடண்ட் ஜானா?” என்று அதிர்ந்தாள்.
“இல்லை” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு ஒரு உயிரோடு விளையாடுகின்றானே என்ற கோபத்துடன், “வேற யாரு” என்று சத்ரியன் முன்னே வந்து நின்றாள்.
“உப்ஸ்… என்னடி பிரச்சனை உனக்கு? முன்ன முன்ன வந்து இம்சை தர்ற ” என்றான்.
“அய்யோ அங்க இருந்தவன் யாரு. நீயே கொன்றுயிருக்கணும்னு சொன்ன. பின்ன எக்ஸா?” என்றாள்.
“ஆங்.. எக்ஸ் ஓய் இஸட் எல்லாம் சேர்த்துக்கோ.” என்றான்.
“உன்னிடம் கேட்டேன் பாரு” என்று வினோத் இருக்குமிடம் வந்து, “அண்ணா அது யாரு?” என்றாள்.
வினோத் சத்ரியனை பார்வையிட, “அவரை பார்க்காதிங்க. என்னை பார்த்து சொல்லுங்க” என்று கேட்க, சத்ரியன் இளக்காரமாய் சிரித்தான்.
என்னிடம் வேலை செய்பவன் உன்னிடம் என் அனுமதியின்றி கூறுவானா என்ற எகத்தாளம் வழிந்தது.
ஷ்ரத்தா சத்ரியன் முன் வந்து மண்டியிட்டு”ப்ளீஸ் யாருனு சொல்லு. இல்லை வினோத் அண்ணாவையாவது சொல்ல விடு” என்று கெஞ்சவும், சிகரெட்டை புகைத்தவன், “மண்டியிட்டா… அழகான கனிகள் கண்ணுக்கு விருந்தளிக்கு.” என்றதும் விசுக்கென எழுந்தாள். அவளது உடை லோ-நெக் என்பதால் சத்ரியன் பார்வையில் தன் முன்னழுகு மேனி பார்வை பொருளாக மாறிட அசூசை அடைந்தாள்.
“வினோத்… பாவம் சின்ன பொண்ணு.. நீயே யார்னு சொல்லி தொலை” என்று புகைப் புகைப்பதில் தீவிரமானான்.
வினோத் சத்ரியன் பாஸிடமிருந்து சொல்வதற்கு அனுமதி வந்ததும், “இதுக்கு முன்ன சீனியர் ஜான் உங்களிடம் வம்பு பண்ணினார். அதே டைம்ல நிரோஷ்னு ஒருத்தன் உங்களை லவ் பண்ணுவதா சுத்தினான் நினைவிருக்கா மேம்” என்றதும், “எஸ்.. நிரோஷ்” என்றதும், “அவனே தான் மேம். உங்களுக்கு வந்த உணவை யோகேஷுக்கு கீழே உள்ள பாடிகார்ட்ஸ் டேஸ்ட் பண்ண, தட்டுடன் வந்தப்ப, நீங்க அந்த புட்டே வேண்டாம்னு சொல்லிட்டிங்க.
யோகேஷ் அதை ரிட்டர்ன் சொல்லிட்டான். அந்த நேரம் இந்த நிரோஷ், அவனாவே அதை வாங்கி ஷ்ரத்தாவுக்கு ஆர்டர் செய்த உணவு நான் வேஸ்ட் பண்ணாம சாப்பிடறேன்னு வாங்கி திண்ணுயிருக்கான். அடுத்து அவஸ்தைபட்டிருப்பான்.” என்று சிரிக்காமல் சொல்ல வினோத் கஷ்டப்பட்டான்.
“இப்ப எப்படி இருக்கான்?” என்று கேட்க “இன்னும் கிரிடிகல் கண்டிஷன்ல தான் இருக்கான் மேம்” என்றான் வினோத்.
“நான்.. நான் நிரோஷை பார்க்கணும்” என்று ஷ்ரத்தா சத்ரியன் பக்கம் திரும்பி உரைத்தாள்.
சத்ரியனோ உடனடியாக “நோ அது தேவையில்லாத ஆணி.” என்று சாதாரணமாக உரைத்தான். அதில் கட்டளை இருந்தது.
“எனக்கு அவனை பார்க்கணும்.” என்றாள்.
“நோ.” என்றான் சத்ரியன்.
ஷ்ரத்தா புருவம் சுருங்கியது. அவளால் இந்த நிலையில் உள்ளவனை அவள் காண கூடாதா என்ற கோபம்.
“ஏன் ஏன் போக கூடாது!” என்று சத்ரியனிடம் வாதம் செய்ய,
“நோன்னா நோ. வினோத் யோகேஷ் மரமண்டைக்கு சொல்லி புரியவை” என்றுதும் அவளை இன்னும் கோபப்படுத்தியது.
“எனக்கு போகணும்.”
“முடியாது.”
“அவன் என்னால தான் சாகற நிலையில் இருக்கான்.”
“முடியாது அவன் தான் இன்னும் சாகலையே.” என்றான் அலட்சியமாக.
ஷ்ரத்தாவின்
அவனது அலட்சியத்தை உடைத்திடவே “நான் போவேன்.” என்றாள்.
அந்த நொடி சத்ரியன் வேகமாக திரும்பினான்.
“சொன்னா புரியாதாடி!” என்றவன் குரல் ஹால் முழுக்க அதிர்ந்தது. இதில் அவளது கூந்தலை கொத்தாக பிடித்திட வலி தாளயியலாமல் ஷ்ரத்தா முகம் சுணங்கியது.
சுவரில் இருந்த கண்ணாடி கூட அதிர்ந்தது போல இருந்தது.
ஷ்ரத்தாவை விடுவித்தவன் புகைப்பதில் தீவிரமாக, ஷ்ரத்தா உறைந்து நின்றாள். சத்ரியன் இப்படி கத்துவதைக் கேட்டதே இல்லை. இதில் தன் சிகையை பற்றி வலிக்க வைத்திடவும் மிரண்டாள்.
சத்ரியன் மூச்சை இழுத்தான்.
ஒரு வேகத்தில் திரும்பியதால் வயிற்று காயம் சுருக்கென வலித்தது. அவனறியாமல் கையை லேசாக வயிற்றில் வைத்தான்.
அதிலேயே சத்ரியன் வலியை புரிந்துக் கொண்டாள் அடிவயிற்றிலிருந்து கத்தியிருக்க வலிக்காமல் போகுமா?! அதனால் தான் தன்னை துன்புறுத்திவிட்டானா?
ஆனால் அந்த வலியை விட அவன் முகத்தில் வேறு ஏதோ இருந்தது.
கோபமா? பயமா? அவளுக்கே புரியவில்லை.
“நீ வெளியே போன இடத்துல தான் உன்னை கொல்ல சாப்பாட்டுல கை வைக்கறாங்க.” என்று பற்களை கடித்தான்.
அவன் குரல் இம்முறை மெதுவாக இருந்தது. ஆனால் இன்னும் பயமாய். “உனக்காக வாங்கி சாப்பிட்டவன்… ஐசியூல கிடக்கறான்” ஷ்ரத்தாவின் கண்கள் உடனே கலங்கியது.
சத்ரியன் அவளை நேராக பார்த்தான். “இப்பவும் போகணுமா? இல்லை அவனை லவ் கிவ்வு ஏதாவது பண்ணறியா?” என்றதும் அந்த கேள்வி அவளை அங்கேயே உடைத்தது.
‘எந்த நேரத்தில் என்ன பேசுகின்றான்?’ என்ற கோபமும் வந்தது.
“நிரோஷ்… என்னால தான் சாக கிடக்கறான்.” என்று அழுதாள்.
சத்ரியனோ “அதனால தான் சொல்றேன். நீ இப்ப வெளிய போக வேண்டாம்.” அவன் இம்முறை மெதுவாக. ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக சொன்னான்.
அது வெறும் கட்டளையா?
இல்லை பயமா?
அவளுக்கு புரியவில்லை.
அவளால் அங்கே இன்னும் நின்று போரட முடியவில்லை. திரும்பி வேகமாக அறைக்கே ஓடினாள்.
அடுத்த நொடி கட்டிலில் விழுந்தாள். மனம் முழுக்க குழப்பம் கோபம், பயம், தன்னால் தானே என்ற குற்ற உணர்வு. அனைத்தும் ஒன்றாக கலந்திருந்தது.
தலையை இரு கைகளாலும் பிடித்தாள். “என்னிடம் யாராவது நெருங்கினா, ஏன் இப்படி ஆகுது.”
அவள் முகத்தை தலையணையில் புதைத்து அழுதாள்.
சத்ரியன் இங்கிருந்து வெளியே செல்வதற்கு கட்டிலில் சொகுசு மெத்தையில் படுத்து அழுவட்டும் என்று விட்டான்.
மாலை கதவு தட்டப்பட்டது.
வினோத் தான் “மேம் டீ சாப்பிட வாங்க.” என்று அழைத்தான்.
“வேண்டாம்.” என்று மறுத்தாள்.
சத்ரியனோ ‘விட்டு தள்ளு’ என்று கூறிட அங்கே ஷ்ரத்தாவை தாங்கிட மற்றவர் இல்லை.
இரவு யோகேஷ் வந்து “மேம்… கொஞ்சம் போல சாப்பிடுங்க.” என்றான்
“ஒன்னும் வேண்டாம். அங்க ஒருத்தன் என்னால சாகற நிலையில் இருக்கான். என்னால எப்படி சோறை விழுங்க முடியும். நான் ஒன்னும் உங்க சத்ரியன் மாதிரி மிருகம் இல்லை” என்று நடுக்கத்துடன் கத்துவது டைனிங் டேபிளில் போர்க் வைத்து மாமிசத்தை வெட்டி சுவைத்தனுக்கு நன்றாகவே கேட்டது. இன்றே ஷ்ரத்தாவை சமாதானம் செய்ய சத்ரியனுக்கும் விருப்பமில்லை எத்தனை முறை அடிப்பணிந்து அவனாக செல்வதென்ற ஈகோ. அத்துடன் அவனுக்கு கெஞ்சுவதும் பிடிக்காத ஒன்று என்பதால் மாத்திரையை விழுங்கி உறங்குவதற்கு சென்றான். இரவெல்லாம் உறங்காமல் பசியுடன் கண்ணயர்ந்தாள் ஷ்ரத்தா.
அடுத்த நாள் காலை விடியல் பிறந்தப் பின்னும் கதவு திறக்கவில்லை. கல்லூரிக்கு கிளம்பவும் இல்லை. சத்ரியன் வாசல் தாண்ட அனுமதி தரவில்லையே. அதுவே ஷ்ரத்தாவுக்கு இன்னும் கோபத்தை தந்தது. இப்பொழுது அவளுக்கு சிறை வாழ்க்கை போல தோன்றியது. அன்று முழுக்க சத்ரியன் வினோத் யோகேஷ் என்று யாரும் அவளது அறை பக்கமே செல்லவில்லை. அவளாக வரட்டுமென சத்ரியன் ஆணையிட்டுயிருந்தான். ஷ்ரத்தாவும் வீம்புக்காகவோ அல்லது நிஜமாகவே தன்னால் ஒரு உயிர் அல்லாடுவதை எண்ணியதாலோ, சோற்று பருக்கையை தீண்டவும் வெளியே வரவும் இல்லை.
இரண்டாவது நாள் மாலை ஷ்ரத்தா கதவு மெதுவாக தட்டப்பட்டது.
“மேம்…” யோகேஷின் குரல். ஷ்ரத்தா திரும்பவே இல்லை. அவன் மீண்டும் மெதுவாக, “நிரோஷ் உயிர் பிழைச்சிட்டான். பாஸ் உங்களிடம் விஷயத்தை கன்வே பண்ண சொன்னார்” என்றான்.
அடுத்த நொடி ஷ்ரத்தா சட்டென திரும்பினாள்.
“நி..நிஜமா…? பொய் சொல்லலையே. அவன் உயிர் பிழைச்சிட்டானா?” என்று தெளிவுப்படுத்திட நினைத்தாள்.
“ம்ம்ம். நார்மல் வார்டுக்கு மாற இரண்டு நாள் ஆகலாம். பட் உயிர் பிழைச்சிட்டான்” என்றான்.ஸ
இரண்டு நாட்களாக மார்பில் சிக்கியிருந்த மூச்சு வெளியேறியது போல உணர்ந்தாள். கண்களில் நீர் நிரம்பியது. முதல்முறையாக ஒருவன் இறப்புக்கு தான் காரணமாக இருந்திடுவோமோ என்ற அச்சம் விலகியது.
அடுத்த சில நிமிடங்களில்,
அறைக்குள் சில ஆட்கள் வந்தனர்.
பெரிய புரஜெக்டர், சவுண்ட் சிஸ்டம், கேமரா, லேப்டாப் என்று வைத்தனர்.
ஷ்ரத்தா புரியாமல் பார்த்தாள்.
அந்த நேரம் கதவோரமாக சத்ரியன் நின்றிருந்தான். “நீ காலேஜ் போக முடியாது. சோ… நீ இருக்கற இடத்துல பாடம் நடத்தப்படும். முதல்ல பாடம் நடத்தறவங்களை இங்க வந்து டீச் பண்ண சொல்லிட நினைச்சேன். ஆனா அதுவும் ரிஸ்கா தோனுச்சு…. சாப்பாடு வரும் ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டு தொலைக்கணும். இல்லைன்னு வை… உன்னை ஒன் சைடா லவ் பண்ணின நிரோஷ் என் கையால சாவான். இல்லை என் மூலமா யாராவது சாகடிப்பாங்க. எண்ணெய் சட்டைக்கு பயந்து அடுப்புல விழுந்த கதையா மாறிடும்.
சோ.. சமத்தா சாப்பிடு” என்று வெளியேறினான்.
ஷ்ரத்தா அமைதியாக நின்றாள்.
இவனை வெறுக்கணுமா?
கோபப்படணுமா?
நன்றி சொல்லணுமா?
அவளுக்கே புரியவில்லை.
மதியம். கிளாஸ் முடிந்தபின் இடைவெளியில் ஷ்ரத்தா உடனே கனிமொழிக்கு கால் செய்தாள்.
“கனி.. நிரோஷ் உயிர் பிழைச்சிட்டதா சத்ரியன் சொன்னான். நிஜமாவே அவன் எப்படி இருக்கான்?” என்று கேட்டாள்.
“அவன் இப்ப பெட்டர்.” என்றாள்.
ஷ்ரத்தா கண்களை மூடி பெருமூச்சு விட்டாள்.
கனிமொழி சில நொடிகள் மௌனம் காத்தாள். பிறகு,
“ஷ்ரத்தா.. ஜான் உன்னிடம் பேசணும்னு சொல்றான்.” ஷ்ரத்தா உடனே அமைதியானாள்.
“பச்.. எதுக்கு.” என்று ஷ்ரத்தா கேட்க, “தெரியலை” என்றாள். கனி
ஷ்ரத்தாவுக்கு தன்னால் யாரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டாமென தோன்ற, “நான் பேச தயாராகலை கனி. என்னால யாருக்கும் புது பிரச்சனை வேண்டாம் கனி.” என்று மறுத்தாள்.
“ஏன்? ஜான் தான் ஷ்ரத்தா போன் பேசினா சொல்ல சொன்னான். நீயா கூப்பிட்டாலும் நம்பர் தர சொல்லி.” என்று முடிக்கும் முன் “வேண்டாம் கனி.. என்னிடம் யாராவது நெருங்கினா… அவங்க உயிரே ஆபத்தா போகுது.. உன்னிடம் கூட பேச பயமாயிருக்கு. உனக்கு எதுவும் ஆகக்கூடாதுனு வேண்டறேன்..” என்றாள். அதற்கு மேல் பேச முடியவில்லை. ஷ்ரத்தா அழ ஆரம்பித்தாள். கனிமொழி எதுவும் பேசவில்லை.
ஏனெனில்.. முதல் முறையாக…
ஷ்ரத்தா தன்னுடைய பயத்தை விட, தன்னால் மற்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பயப்பட ஆரம்பித்திருந்தாள்.
-தொடரும்

Chathriyana vida periya aal yaru ethukaga shratha kolla pakuranga ivanalaye kandu pidika mudilaye innum yen yar athu matina avlothan
Sema twist. Very intresting. Sis.
👌👌👌👌👌👌