அத்தியாயம்-47
“என் சத்ரியன் அந்த குழந்தையை மீட்டுக் கொண்டு வருவார்…” அந்த வார்த்தையை சொல்லிவிட்டு ஷ்ரத்தா அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.
ஆனால் அவள் சொன்ன அந்த ஒரு வரி மட்டும் சத்ரியனின் காதுகளை விட்டு வெளியேறவில்லை.
ஹாலில் கனமான அமைதி நிலவியது. யோகேஷ் கூட பேசத் தயங்கினான்.
சத்ரியனோ சிகரெட்டை பற்றவைத்து மெதுவாக புகையை வெளியேற்றினான்.
அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. கோபமுமில்லை. பதற்றமுமில்லை. வெளியில் பார்க்கும் யாருக்கும் அவன் வழக்கம்போல தான் தோன்றினான்.
ஆனால்… அவன் உள்ளே நடந்த போராட்டத்தை அவனுக்கே சமாளிக்க முடியவில்லை. தன்னை நம்பி ஒருத்தி ஜம்பமாக பேசும் போது ஒரு ஆண்மகனுக்கு ஜிவ்வென்று இருக்கும்.
ஆனால் அந்த செயலை செய்து முடிக்க வேண்டுமே.
இந்த பெண்களே இப்படி தான். சில பெண்கள் பெரும்வாரியாக கணவனிடம் கார் வேண்டும், வீடு வேண்டும், நகை வேண்டுமென்று நச்சரிப்பார்கள். அதையே வாங்க இயலாத ஆண்களுக்கு கடுப்பு கூடும். ஏதோ தன்னால் தன் மனைவிக்கு எதையும் கேட்டதை வாங்கி தரயியலவில்லை என்று மனம் சோகமாகும்.
இங்கு ஷ்ரத்தாவும் அப்படி தான். ஆனால் என்ன… அவள் நச்சரிப்பது தன்னால் முடியுமா இல்லையா என்ற எண்ணத்திற்கு தள்ளிவிட்டாள். இதுவரை கிங்பிங் என்று சொல்லிக் கொள்ளும் கொட்டம், இந்த விஷயத்தில் ‘முடித்து காட்டு’ என்று உந்தியது. ஆனால் மோதினால் உயிருக்கு ஆபத்து உண்டு. ‘உயிருக்கு பயப்படும் ரகமா நீ’ என்று மனசாட்சி கேலிப் பேசியது.
அதற்காக கண்ணை கட்டி குதிக்கவும் சத்ரியன் தயாராகவில்லை. ஒன்றில் கால் பதிக்க வேண்டுமாயின் ஆழம் தெரிந்து கொண்டு நுழைய வேண்டும். சத்ரியனுக்கு ஆழமெல்லாம் தெரியும். இந்த முயற்சியில் கால் பதித்து தோல்வி அடைந்தால் அவன் படைத்த வரலாறு சரிந்திடும். இதை தான் அவன் சிந்தித்தான். அத்துடன் தன்னால் ஷ்ரத்தா ஆபத்தில் மாட்டவும் வாய்ப்புண்டு.
‘இதுக்கு தான் எவளையும் மனசுக்குள்ள நுழையவே விடக்கூடாது’ என்று முனங்கினான்.
“பாஸ்…” என்று யோகேஷ் அழைக்க, “வாட்… தகவல் சொல்லிட்டல்ல.. கிளம்பு” என்று ஒரே வரியில் முடித்துவிட்டான்.
யோகேஷ் மேலும் எதுவும் பேசாமல் வெளியேறினான். இரவெல்லாம் சத்ரியன் ஷ்ரத்தா வேறுவேறு அறையில் உறங்க முயன்றனர். ஆனால் உறங்க முடியாது தவித்தனர். சத்ரியன் உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையை மதுவை சரித்தான்.
ஷ்ரத்தாவோ சத்ரியன் உறங்காமல் நடையிடுவதை கண்டு அவனது அறைக்கு வந்து படுத்தாள். சத்ரியன் அவள் அறைக்கு வந்து தனது மெத்தையில் படுக்கவும், திரும்பி பார்க்காது நிலவை தான் வெறித்தான்.
அடுத்த நாள் காலை கல்லூரிக்கு செல்ல தயாரானாள். யோகேஷுக்கு பதிலாக, பீட்டர் என்பவன் துணைக்கு வந்தான். அவனுக்கு கீழும் நான்கு ஆட்கள் கூடவே வந்தனர். கல்லூரி விடவும், நான் ஸ்டெல்லா வீட்டுக்கு போகணும்” என்றாள்.
பீட்டர் அதற்கான அனுமதியை சத்ரியனிடம் பெற்று, ஸ்டெல்லாவின் வீட்டிற்கு அழைத்து சொன்றான்.
கண்ணீர் வற்றிப்போன முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தாள் ஸ்டெல்லா.
அவள் கைகளில் ஐரினின் புகைப்படம். அந்த புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள்.
அப்போது கதவு திறந்து ஷ்ரத்தா உள்ளே வந்தாள். “ஷ்ரத்தா” என்று ஸ்டெல்லா எழுந்து நிற்க, அவள் அருகில் அமர்ந்தாள்.
”சத்ரியன் சார் என்ன சொன்னார்? குழந்தை எப்ப கிடைக்கும்?” என்றார்.
ஷ்ரத்தாவோ, சத்ரியன் கூறியதில் சிலதை மறைத்து கூறி, “கொஞ்சம் கஷ்டமான பிளேஸ்.. உடனடியா அந்த குழந்தை கிடைக்காது. ஆனா சத்ரியன் கொஞ்சம் அவகாசம் விடுத்து குழந்தையை கண்டுப்பிடிப்பார்” என்றதும் ஸ்டெல்லா உயிரற்ற ஜடமாக “இல்லம்மா… எனக்கு நம்பிக்கை போயிடுச்சு…” என்று அழுதார்.
“இல்ல. சத்ரியன் செய்வார்” என்று ஷ்ரத்தா உறுதியாக தலையசைத்தாள்.
ஷ்ரத்தாவின் கண்களில் மட்டும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
“நீ சொன்ன நெட்வொர்க்கை கேட்டதுக்கு என் உயிர் இன்னும் போகலை. அதான் குறை. மத்தபடி என் ஐரின் வாழ்க்கையை அந்த கர்த்தர் கைவிட்டுட்டார்.” என்று புலம்பினார்.
“கர்த்தர் கைவிடமாட்டார் ஆன்ட்டி. சத்ரியன் ஏதாவது முடியாதுன்னு சொன்னா அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும். ஆனா… ஒரு விஷயத்தை மனசுல எடுத்துக்கிட்டா அதை முடிக்காம விடமாட்டார். உங்க ஐரின் திரும்ப வருவா.” அவள் சொன்னாலும்… அந்த வார்த்தை ஸ்டெல்லாவுக்கு உயிர்ப்பை தரவில்லை.
ஏனோ புத்தி பேதலித்தவளாக ஸ்டெல்லா அழுது கரைந்து நிற்க, “மேடம் புறப்படலாம்” என்று பீட்டர் தான் வற்புறுத்தி இடத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
காலை மாலை இரவென பொழுதுகள் மாறியது. நாட்கள் மாதங்கள் கரைந்தது.
சத்ரியனால் கண்களை மூட முடியவில்லை.
பெரிய அறையின் பால்கனியில் தனியாக நின்றிருந்தான். கடிகாரம் இரவு இரண்டு மணியை தாண்டியிருந்தது. மூன்றாவது சிகரெட் அவன் விரல்களுக்கு இடையில் கருகிக் கொண்டிருந்தது.
காற்று வேகமாக வீசியது. ஆனால் அவன் நெஞ்சில் இருந்த அழுத்தம் மட்டும் குறையவில்லை.
அவனது கண்களுக்கு முன்னால் மீண்டும் மீண்டும் ஷ்ரத்தாவின் முகம் தான் வந்தது. “என் சத்ரியன் அந்த குழந்தையை கூட்டிட்டு வருவார்.” அந்த நம்பிக்கை… அந்த கர்வம்… அந்த உரிமை… அது தான் அவனை கொன்றது. சாதாரணமாக யாராவது வந்து உதவி கேட்டிருந்தால்?
ஒரு நொடி கூட யோசித்திருக்க மாட்டான். ஏன் முகம் தெரியாத ஸ்டெல்லாவை எல்லாம் விரட்டி அடிக்க கூறியிருக்கலாம்.
“முடியாது.” என்று சொல்லி அனுப்பியிருப்பான். ஆனால்… இப்போது முடியவில்லை.
சத்ரியன் கண்களை மூடினான்.. நான் கெட்டவனா வாழ்ந்தேன்.. எத்தனை பேரை கொன்றேன்… எத்தனை விதமான டீலிங் பண்ணேன்… எத்தனை பாவம் பண்ணேன்.. இந்த ஒரு குழந்தையை விட்டுட்டா… ஷ்ரத்தா கண்களில் நான் தோற்றுடுவேன்.’ என்று முதல் முறையாக… தோல்விக்கு பயந்தான்.
மரணத்திற்கு கூட அஞ்சவில்லை. ஷ்ரத்தாவின் பார்வைக்கு. முடிவு எடுத்தவனாக விழித்தெழுந்தான்.
விடியல் சூரியன் இன்னும் முழுமையாக உதிக்கவில்லை.
யோகேஷ் வீட்டில் இருந்தபோது அவனது அலைபேசி ஒலித்தது.
திரையில் வந்த பெயரை பார்த்ததும் பதறி எழுந்தான்.
“பாஸ்.” உடனே அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க பாஸ்.” அந்த குரல் வழக்கத்தை விட இன்னும் பவ்யமாக இருந்தது.
“யோகேஷ் கிரவுண்ட் வொர்க் தேவைப்படுது.” என்றான். “பாஸ் மோதினா உயிருக்கு ஆபத்து நேரும்” என்று எடுத்துக்கூற முயன்றான். “அந்த குழந்தை… வேண்டும் யோகேஷ். தட்ஸ் இட் வேற எதை பத்தியும் யோசிக்க முடியாது” என்றான். “ஓ..ஓகே பாஸ்…” என்று மொழிந்தான்.
“கன்டெய்னர் எந்த போர்ட்டில ஏறுச்சு?” என்று கேட்க யோகேஷ் அதிர்ந்தான்.
அவன் அப்படியே அமைதியாக நின்றுவிட்டான். ஏனெனில்… இந்த கேள்வி வந்துவிட்டாதால் அதற்கு அர்த்தம் ஒன்று தான். சத்ரியன் பாஸ் இனி பின் வாங்க மாட்டார்.
“பாஸ்… நிஜமாவே இதுல இறங்கப் போறீங்களா?” என்று மெதுவாக கேட்டான்.
அதற்கு மறுபக்கம் இருந்து வந்த பதில்… யோகேஷின் முதுகெலும்பையே சிலிர்க்க வைத்தது. “நேத்து வரைக்கும் மோதனுமானு நினைச்சேன். இப்ப அந்த குழந்தையை கூட்டிட்டு வரணும்னு தோணுது. உனக்கு உயிர் பயம் இருந்தா தனஞ்செயனிடம் சேர்த்து விடறேன்” என்றான்.
“ஏன் பாஸ்? சிங்கத்தோட இருந்துட்டு, நரிக்கிட்ட வேலைக்கு போக முடியாது பாஸ். நான் உங்க விசுவாசி. வாழ்வோ சாவோ உங்க காலடியில் இருப்பதே எனக்கு பெருமை.” என்று அந்த வார்த்தையுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
சத்ரியன் பால்கனியில் நின்றபடி தொலைவில் எழுந்து கொண்டிருந்த சூரியனை பார்த்து மென்னகைத்தான்.
சத்ரியன் கண்களில் முதல் முறையாக வேறொரு தீ எரிந்தது.
‘ஷ்ரத்தா என்னை நம்பியிருக்க நான் அதை நடத்திக் காட்டுவேன். ஒரு ராட்சசனோட மனசாட்சியை எழுப்பி விட்டுட்ட ஐரின். நீ எங்கிருந்தாலும் உன்னை ஸ்டெல்லாவிடம் ஒப்படைப்பேன்.’ என்று சத்ரியன் உறுதியெடுத்தான்.
தான் காலூன்றி தொடப்போகும் இடத்தால், தன்னால் தன் கூடயிருக்கும் ஷ்ரத்தா, பாடிகார்ட்ஸ் அனைவருக்கும் மரணம் பரிசாக கூட கிடைக்குமென்று தோன்றியது. அதை தலையில் ஏற்றிக்காமல், தன் பாதையில் பயணித்தான்.
நாட்கள் வாரங்களானது…
பல பாதைகளும் படுத்தேல்வியில் முடிந்தது.
“பாஸ்… இந்த ரூட்டும் கிளோஸ்.” யோகேஷ் கோப்பை மூடிப் போட்டான். சத்ரியன் எதுவும் பேசவில்லை.
அவன் முன் மேசை முழுவதும் வரைபடங்கள், துறைமுக விவரங்கள், சரக்கு கப்பல் பதிவுகள், புகைப்படங்கள், சில பெயர்கள் என்று சிதறிக் கிடந்தன.
ஐரின் காணாமல் போய் பல வாரம் ஆகியிருந்தது. ஷ்ரத்தா இன்னும் நம்பிக்கையுடன் இருந்தாள்.
சத்ரியனோ… இந்த உலகத்தின் மறுபக்கத்தை அறிந்தவன். அவசரம் எதையும் சாதிக்காது என்று தெரிந்தவன். அடுத்த இரண்டு வாரங்களில் அவன் வாழ்வே மாறியது.
பகலில் கூட்டங்கள். இரவில் தேடல்கள். தனக்கு கீழே இருந்த ஆட்களை மட்டும் நம்பவில்லை.
பழைய தொடர்புகள், துறைமுக ஏஜென்ட்கள், கப்பல் பதிவாளர்கள், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்கள், கள்ள நோட்டு வட்டாரங்கள், ஆயுத கடத்தல் நெட்வொர்க்குகள், போதைப்பொருள் பாதைகள் எங்கெல்லாம் தகவல் கிடைக்குமோ அங்கெல்லாம் இலைமறையாக விஷயத்தை வாங்கினான்.
ஆனால் ஐரின் பெயர் மட்டும் காற்றில் கரைந்து போனது.
ஒரு மாதம்… இரண்டு மாதம்… காலம் நகர்ந்தது. ஐரின் கிடைக்கவில்லை.
ஒரு காணாமல் போன குழந்தையை தேடுவது கடினம். அதிலும் உலகளாவிய மனிதக் கடத்தல் வலையமைப்புக்குள் சென்ற குழந்தையை தேடுவது அசாத்தியமானது.
கடலில் விழுந்த ஒரு துளி தண்ணீரை மீண்டும் கண்டுபிடிப்பது போன்றது. மீட்டெடுக்க முடியுமா?!
ஒரு நாள் இரவு சத்ரியன் வீடு திரும்பிய போது மணி பதினொன்றை கடந்திருந்தது.
அவன் கண்களில் பொட்டு தூக்கம் இல்லை. முகத்தில் சோர்வு மட்டும் இருந்தது. ஷ்ரத்தா அமைதியாக அவனை பார்த்தாள்.
இந்த இரண்டு மாதங்களில் அவன் அவளோடு கூட சரியாக பேசவில்லை. சில நேரம் உணவருந்தும் போது. சில நேரம் இரவு வந்து படுக்கும் போது. அதுவும் இரண்டு வார்த்தைகள்
அதற்கு மேல் இல்லை.
அவன் எப்போதும் ஏதோ கோப்புகளோடு இருந்தான். அல்லது யாரோடு போனில் பேசிக் கொண்டிருந்தான். ஷ்ரத்தாவுக்கு பொறுமையில்லாமல் அவனிடம் பேச வந்தாள்.
“சத்ரியா…” என்று அழைத்தாள்.
“ம்ம்ம்… சொல்லு” என்றான்.
“ஸ்டெல்லாவை பார்த்தேன். அவங்க ரொம்ப துவண்டு போயிட்டாங்க. சொல்லப் போனா ஐரின் கிடைக்கமாட்டானு அழறாங்க. ஐரினை இன்னும் கண்டுபிடிக்க முடியலையா?” என்று வருத்தமாக கேட்டாள்.
அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கை நின்றது. மெதுவாக தண்ணீர் குடித்தான். பிறகு நாற்காலியில் சாய்ந்தான்.
“உடனடியா கண்டுபிடிக்க முடியாதானு கேட்கற? இந்த சினிமா படத்துல வர்ற மாதிரி எண்ணி ஒருவாரத்துல கண்டுப்பிடிச்சி நிறுத்துவேன்னு நினைச்சியா? இது ரியலிட்டி ஷ்ரத்தா. இங்க சினிமா மேஜிக் வேலை செய்யாது.” என்று நிஜத்தை கூறினான்.
ஷ்ரத்தா சோகமாகவும் அவளுக்கு விளக்கும் விதமாக “இப்ப என்னை உடனடியா ஒருத்தன் ரோட்ல போறவன் வந்து சந்திக்க முடியுமா?” என்று கேட்டான்.
“இல்ல.” என்பது போல தலையாட்டினாள்.
“ஏன்? என்னை கொல்ல கூட ஆட்கள் உண்டு. என்னை சந்திக்கணும்னா ஏதாவது டீலிங் விஷயமா தான் பார்க்க முடியும். அப்ப கூட சாமானியர்கள் சந்திக்க வாய்ப்பில்லை” என்றவன் மேசையில் விரல்களை தட்டினான்.
“அதே மாதிரி தான் அங்கயும். ஒரு குழந்தையை தேடறேன்னு நான் போய் கேட்டா என்னாகும்? சந்தேகம் வரும். அந்த நெட்வொர்க்குல யாரும் முட்டாள்கள் இல்லை. நாம இதுக்கு தான் காப்பாற்ற வர்றோம்னாலே செத்துடுவோம்.
ஐரின் எங்க இருக்கா? யார் கையில இருக்கா? எந்த ரூட்டுல போனா எந்த போர்ட்ல இறங்கினா? அதுக்கப்புறம் யார் வாங்கினா? எல்லாம் தெரிஞ்சாகணும். அதுக்கு அப்புறம் தான்… இப்ப எங்க இருப்பானு தேடி போக முடியும்.” என்றவன் மூச்சை இழுத்தான்.
“அப்பறம் கூட அங்க போற ரூட் போடணும். உயிரோட போய் உயிரோட வரணும். யாரை நம்பலாம்? யாரை நம்பக்கூடாது? யார் உதவுவான்? யார் விலை போயிடுவான்? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்.” என்றதும் அவன் நேராக அவளை பார்த்தான்.
“கண்மூடித்தனமா எவனிடமாவது உதவி கேட்டா… ஐரினோட சேர்த்து நாமளும் போயிடுவோம்.” ஷ்ரத்தாவின் இதயம் சுருங்கியது.
“அப்ப எவ்வளவு நாள் ஆகும்?” என்று கேட்டாள்.
சத்ரியனோ “மினிமம் ஆறு மாசம் ஆகும். ஆமா.. என் உயிர் பத்தி உனக்கு கவலை இல்லையா” என்றான்
“என்ன ஆறு மாசமா?” என்றவள் அதிர்ச்சியடைந்தாள். பிறகு “என் சத்ரியனுக்கு ஒன்னும் ஆகாது” என்றாள் திடமாக.
“மினிமம் ஆறு மாசமா?” என்ற அதிர்ச்சியுடன் ஷ்ரத்தா எழுந்து நின்றாள்.
“அதுக்குள்ள குழந்தைக்கு ஏதாவது நடந்துட்டா?” அந்த கேள்விக்கு சத்ரியன் உடனே பதில் சொல்லவில்லை.
சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
பிறகு… கல் நெஞ்சாக மாறி, உண்மையை சொன்னான். “குழந்தைக்கு ஏதாவது நடந்திருக்கலாம்.” என்றதும் ஷ்ரத்தா உறைந்தாள்.
“சத்ரியா…” என்று அதிர, “நான் பொய் சொல்ல மாட்டேன்.” அவன் பார்வையில் எதையும் மறைக்கவில்லை.
“அந்த இடம் சாதாரண இடம் இல்லை. நாம நினைக்கிற மாதிரி குழந்தைகளை பூட்டி வைக்கற இடமில்லை. போன இடம் அப்படின்னா… ஏதாவது நடந்து சின்னாபின்னமா ஆகியிருப்பா.” அவன் வார்த்தையை நிறுத்தினான்.
ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“அந்த குழ-ந்தை… பி-சிக்கலா அப்ரோச் பண்ணப்பட்டிருக்கலாம். காயப்படுத்தப்பட்டிருக்கலாம். இல்ல… உயிரோட கூட இருக்காம இருக்கலாம்.” அந்த வார்த்தை ஷ்ரத்தாவை உடைத்தது.
அவள் முகத்தை மூடி அழுதாள். சத்ரியன் மெதுவாக சொன்னான்.
“ஆனா… அந்த கூட்டம் உடனே கொல்ல மாட்டாங்க. உயிரோட வச்சி தான் கொடுமை பண்ணுவாங்க. சோ…” அவன் குரல் கரகரத்தது. “ஐரின் உயிரோட வந்தா போதும் என்ற மனநிலையில தான் இப்ப இருக்கணும்.”
அறை முழுக்க அமைதி நிலவியது. ஷ்ரத்தாவால் அதை கேட்டு உறங்கவும் முடியவில்லை. ஏதோ அவளது குழந்தைக்கே அந்நிலை என்ற ரீதியில் துடித்தாள்.
அடுத்தடுத்த நாட்களில்… ஷ்ரத்தாவால் அந்த விஷயத்தை மறக்க முடியவில்லை.
கல்லூரிக்கு சென்றாள், வகுப்பில் அமர்ந்தாள், புத்தகம் திறந்தாள். ஆனால் ஐரினின் முகம் மட்டும் கண்முன் வந்தது. ஒரு சின்ன குழந்தை யாரோ ஒருத்தரின் கொடுமையால் அழுது கொண்டிருக்கும்.
பயம், இருள், அறியாத இடத்தில் எட்டு வயது பெண், அதுவே மனதை நசுக்கியது. “என்னடி ஆச்சு?” என்றொரு நாள் கனிமொழி கேட்டாள்.
“ஒன்னுமில்லை.” என்று பெய்யுரைத்தாள்.
“பொய். நீ பழைய ஷ்ரத்தா இல்லை. நீ ஏதோ மாதிரி இருக்க. மனிஷா கூடவும் பேசறதுயில்லையாம்.” என்று கேட்க ஷ்ரத்தா அமைதியாக சிரிக்க முயன்றாள். ஆனால் சொல்ல முடியவில்லை. ஐரினின் விஷயம் ரகசியம் அல்லவா! அதனால் மனதுக்குள் வைத்துக் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன…
மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தன. முதல் முறையாக ஷ்ரத்தாவின் முன்னேற்றம் சரிந்தது.
ஒருநாள் மதிப்பெண்ணை பார்த்த சத்ரியன் கோபமடைந்தான்.
“இது என்ன மார்க்?” அவள் அமைதியாக நின்றாள்.
“பதில் சொல்லு டி” என்றான்.
“சத்ரியா… என்னால படிக்க முடியலை” என்றாள்.
“உங்கப்பா உயிரை விட்டது எதுக்குனு தெரியுமா? நீ டாக்டர் ஆகணும்னு. டாக்டர் ஆகறது உன் கனவு மட்டும் இல்லை. உங்கப்பாவோட கனவும். சாகறப்ப கூட அந்த மனுஷன் உனக்காக தான் யோசித்தார். உன்னை பாதுகாப்பா பார்த்துக்க தான், சாகற நேரத்துல கூட உன்னிடம் பேசாம என்னிடம் பேசியிருக்கார்.
உன்னால சில உயிரும் போயிருக்கு. இங்க பாரு.. இந்த சீட் எப்படி கிடைச்சதுனு நினைவிருக்குல்ல.
நாளைக்கு உன்னால சில உயிர் காப்பாத்தப்படலாம். அதை மறந்துட்டு உட்கார்ந்தா எப்படி?மனசுல வச்சிக்கிட்டு படி. கஷ்டமா இருந்தாலும் படி. அழுது முடிச்சுட்டு படி. ஐரின் கிடைக்காட்டியும் படி. ஏன் நானே செத்தாலும் நீ டாக்டருக்கு படிக்கணும்.” என்று கத்தினான்
முதல் முறையாக அவன் அவளை அதிகபட்சமாக திட்டினான்.
ஆனால் அந்த திட்டலில் அக்கறை இருந்தது. அதனால் கண்ணீரை மறைத்து சரியென்றாள்.
மறுபுறம் ஸ்டெல்லா.
அவள் மெதுவாக நடைப்பிணமாக மாறிக் கொண்டிருந்தாள். உணவு இல்லை, தூக்கம் இல்லை, சிரிப்பு இல்லை. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஐரினின் நினைவுகள்.
சிறிய செருப்பு, ஐரினின் உடை, அழுதழுது அவள் அடம்பிடித்து வாங்கிய பொம்மை, கிறுக்கி வரைந்த ஓவியங்கள், எல்லாவற்றையும் பார்த்து ஸ்டெல்லா அழுதாள்.
ஸ்டெல்லாவை பார்க்க வந்து, வெளியேயிருந்தே பார்த்துவிட்டு, பேச முடியாது ஷ்ரத்தா காரில் அமைதியாக அமர்ந்தாள்.
கண்ணீர் தானாக வந்தது. முதல் நாள் இருந்த நம்பிக்கை… இப்போது மெதுவாக கரைந்து கொண்டிருந்தது.
“ஒருவேளை… சத்ரியனால ஐரினை மீட்க முடியாதோ? ஐரின் திரும்ப வரமாட்டாளோ…” அந்த எண்ணமே அவளது நெஞ்சை நொறுக்கியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
