அத்தியாயம் – 6
ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் வாரம் நிறைவுற, எல்லாரும் கன்ஃபஷன் அறைக்குச் சென்று யாராவது ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.
இதற்குள் தினமும் சிறு சிறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்க, சரண் எல்லாவற்றிலும் முதலாவதாக வர முயற்சி செய்ய ஆரம்பித்து இருந்தான். தருண் விளையாட்டு வீரன் என்பதால், அவனை வெல்வது எளிதாக இல்லை.
மாணிக்கம், சித்ரா இருவரும் அவர்களின் வயதின் காரணமாக விளையாட்டு மற்றும் டாஸ்க்களில் பின் தங்கியே இருந்தனர்.
டாஸ்க் இல்லாத சமயங்களில் தனித் தனி குழுவாக அமர்ந்து இருந்தனர். எப்போதும் தியா, தருண், விமலன் சேர்ந்து இருக்க, சரண், ராஜி, முருகன், மூவரும் ஒரு குழுவாக பேசிக் கொண்டு இருந்தனர். வைஷி சில சமயம் சரண் குழுவில் இருப்பாள். சில சமயம் தருண் குழுவில் இருப்பாள். அதே போல நகைச்சுவைப் பேச்சாளர் ரூபனும் அவ்வப்போது மாறிக் கொள்வான்.
இதில் அரசியல் விமர்சகர் தமிழ் நிலவன் மட்டும் ஆதித்யாவோடு இருக்கும் பழக்கத்தைக் கொண்டு அவ்வப்போது இரு குழுக்களையும் விமர்சனம் செய்துக் கொண்டிருப்பார். அதில் எல்லாருக்கும் அவரிடத்தில் சற்று எரிச்சல் தான்.
சரண் மாணிக்கம் மேல் அதிருப்தியில் இருந்தான். முதல் நாளே தன்னை பேர் சொல்லிக் கூப்பிட்டது, டாஸ்க்கில் மாணிக்கம் சரண் அணியில் இருக்க, அவரால் இரண்டு முறை தோல்வி என மாணிக்கம் மீது கோபத்தில் இருந்தான். அவரின் வேலை கொண்டு மாணிக்கத்தைக் கீழாகவும் நினைத்தான்.
இவை எல்லாம் சேர்த்து முதல் வார நாமினேஷனில் மாணிக்கம் பெயரும், தமிழ் நிலவன் பெயரும் ஒரே அளவில் வாக்குகள் வந்தது. ஆனால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லையெனக் கூறிவிட, சரண் குழுவினருக்கு ஏமாற்றம் தான்.
வார இறுதியில் நடிகர் ஆதித்யா மற்றும் நேயர்களைக் காண்பதற்கு போட்டியாளராகள் எல்லோரும் தங்களின் தோற்றத்திற்கு மெனக்கெட்டு இருந்தனர்.
அத்தோடு அன்று வரை லேசாக மற்றவர்களுக்குக் காட்டியிருந்த தங்கள் உண்மை முகத்தையும் மறைத்தனர். இதையெல்லாம் விமலன் பார்த்துக் கொண்டிருந்தான். பெரும்பாலும் தருண், தியா, விமல் மூவரும் தங்கள் சுயத்தைத் தொலைக்காதவர்களாகத் தான் இருந்தனர். போட்டி என்று வரும்போது மட்டுமே தங்கள் முழுப் பங்களிப்பைக் கொடுத்தனர். அதன் வெற்றி, தோல்வி பற்றி கவலைப் படாமல் டாஸ்க் முடிந்ததும் தங்கள் சுயத்திற்கு திரும்பி இருந்தனர்.
ஆதித்யா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வரும்போது அந்த வாரத்தின் நிகழ்வுகளை சுருக்கமாகக் கூறி, ஒவ்வொருவரிடத்திலும் கேள்விகள் கேட்டார்.
சரண், மாணிக்கம் இருவருக்கும் நடந்த வயது விவாதம் பற்றி கண்டித்தார். தருண், தியா இருவரின் எதார்த்தமான நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
தமிழ் நிலவனிடம் “உங்கள் சமூக, அரசியல் கருத்துக்கள் எல்லாம் நல்லா இருக்கு ஐயா. அதே சமயம் இது சும்மா வேடிக்கை பார்க்கும் நிகழ்ச்சி மட்டுமில்லை. உங்களுக்குள்ளே இருக்கும் குணங்களை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சியும் கூட. அதனால் நீங்க விமர்சனம் மட்டும் செய்யாமல், பங்களிப்பும் செய்வது முக்கியம்.” என்றார் ஆதித்யா.
விமலனிடம் “சூரிய நமஸ்காரம் பற்றிச் சொன்னது நன்றாகவே இருந்தது. ஆனால் இன்னும் நீங்க உங்களை முழுதாக வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குவதும் தெரிகிறது. தருண், தியா என்ற உங்கள் வட்டத்தை விட்டுக் கொஞ்சம் மற்றவர்களிடமும் நெருங்கலாமே. நான் பார்த்த வரை வைஷி உங்கக் கூட பழக ஆர்வமாவே இருக்காங்க” எனக் கூறும்போது காமெரா வைஷியின் பக்கம் செல்ல, வைஷி சிறு வெட்கப் புன்னகை செய்தாள். விமலனோ அவஸ்தையாக நெளிந்தான்.
இங்கே பார்வையாளர்கள் ஓ என்று கூச்சலிட, போட்டியாளர்கள் சிலர் சிரிக்க, சிலர் கோபத்துடன் பார்த்தனர். அதையும் காமெரா படம் பிடிப்பதை அவர்கள் அறியவில்லை.
—-
முதல் வார இறுதிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி திடுக்கிட, பக்கத்தில் அமர்ந்து இருந்த பங்கஜம் மாமியோ “என்னடி ருக்மணி இது? நம்ம மங்கை தான் விமலனுக்குனு நீங்க பேசி வச்சிருக்கேள். வேறே என்னவோ நடக்கிறது அங்கே?” என்றார்.
ருக்மணி தனக்குள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாலும், பங்கஜத்திடம் “அவாளுக்கு என்ன தெரியும் மன்னி. ஏதோ சொல்லிண்டு இருக்கா. நம்ம நாராயணன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். “ என்றார்.
பங்கஜம் “என்னவோடி மா. இந்த வெற்றி டிவிலே மட்டும் குழந்தை பிறந்தத்தில் ஆரம்பிச்சு, அவன் கடைசி காலம் மட்டும் எல்லாமே அவாளே பாரத்துப்பா. பாட்டு பாட, டான்ஸ் ஆட, இந்த மாதிரி புரோகிராம், கல்யாணம், சீமந்தம், இதோ இந்த மாதிரி சேர்த்து வைக்கிறது. அதோட டிவோர்ஸ் வரை எல்லாம் இங்கே மட்டும் தான் நடக்கும். எதுக்கும் மங்கைய ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு” என, ருக்மணி பயந்து தான் போனார்.
அன்றைய நிகழ்ச்சி முடிந்து பங்கஜம் கிளம்பவும், உடனே மங்கைக்கு ஃபோன் செய்தார் ருக்மணி.
“டீ, மங்கை. நீ என்னவோ முதல் வாரமே அவனை வெளிலே அனுப்பிடுவானு சொன்ன. இங்கே என்ன என்னமோ நடக்கிறதே. பயமா இருக்குடி குழந்தே” எனக் கேட்டார்.
மங்கையோ “அத்தை, அவா சொன்னா நடந்திடுமா என்ன? நம்ம விமல் அத்தான் பத்தி நமக்குத் தெரியும். அவர் அங்கே கூட நம்ம ஆத்தில் எப்படி இருந்தாரோ அப்படித் தான் இருக்கார்.” என்றாள்.
“ஆனால் பங்கஜா மன்னி என்னவோ சொல்லறாடி. இதுக்கு முன்னாடி நடந்த புரோகிராம்லாம் வேறே மாதிரி போயிருக்கு. அப்படினு?”
“அத்தை, அத்தான் அந்த மாதிரி எல்லாம் கிடையாது. உங்க பிள்ளைக்கு வேறே ஒரு நோக்கம் இருக்கு. அதுக்கு இந்த புரோகிராம் ஒரு வாய்ப்பா நினைச்சுருக்கார்” என்றாள் மங்கை.
“அது எப்படி நோக்குத் தெரியும்? உன்கிட்டே சொன்னானா?” என் மங்கை கேட்டார்.
“இல்லை அத்தை. முன்னாடி பேசிண்டு இருந்ததை வச்சு எனக்கா ஒரு எண்ணம். நானும் அந்த புரோகிராம் பாரக்கறேன் தானே. அவர் அந்த பொண்ணு பக்கம் திரும்பக் கூடவில்லை.” என்றாள் மங்கை.
ஆம். விமலனுக்காகவே மங்கையும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்து இருந்தாள். வைஷியின் ஆர்வம் காமெராவில் நன்றாகவே எடுத்துக் காட்டியிருந்தார்கள். விமலனுக்குத் தெரியுமோ, தெரியாதோ அவன் கண்டுக்கொள்ளவில்லை. தற்போது நடிகர் அதையும் வெளிப்படையாகப் பேசியிருக்க விமலன் சங்கடமாக நெளிவதும் தெரிந்தது.
மங்கைக்கும் தன் அத்தை மகனுக்கு இது எல்லாம் தேவையா என்ற எண்ணம் தான். ஆனால் விமலனைப் பற்றி அவன் பெற்றோர்களை விட மங்கை நன்றாகவே அறிவாள்.
மங்கையின் சிறு வயதில் அங்கேயே வளர்ந்தவள். மேலும் விடுமுறை என்றால் அத்தை வீடு தான். வேறு நெருங்கிய சொந்தம் அவள் தந்தை சாரதிக்குக் கிடையாது.
பார்த்தசாரதியின் பெற்றோர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் அவரின் தந்தை நன்றாக வாழ்ந்தவர். ஆனால் திடீர் காய்ச்சல் வந்து இறந்து விட்டார். அப்போது ருக்மணிக்கு இரண்டு வயது தான். சாரதியின் அன்னை அவரின் பிறந்த வீட்டில் அடைக்கலமாகியிருக்க, அங்கும் இரு குழந்தைகளைச் சமாளிப்பதுக் கடினம் என சாரதியை சிறு வயதில் வேத பாட சாலையில் சேர்த்து விட்டனர். அங்கே வேதம் மற்றும் அடிப்படைக் கல்வியும் கற்றுக் கொண்டிருந்தார். இலவசமாக நடக்கும் பாடசாலை என்பதால் இவருக்கு மற்ற செலவுகள் இல்லை. அவர் படித்து முடித்து வரும்போதே சாரதியின் தங்கை ருக்மணிக்கு அவரின் மாமா தூரத்து உறவில் வாசுதேவனைப் பேசி முடித்திருந்தார். சாரதி வந்ததும் அவரின் தங்கை ருக்மணியின் திருமணம் முடித்து விட்டார்.
ருக்மணி திருமணம் முடிந்துச் சென்றதும், தன் அன்னையை அழைத்துக் கொண்டு தனியாகச் சென்று விட்டார் சாரதி. முதலில் எல்லாம் மற்றவர்களோடு ஹோமங்கள் சென்று அங்கே உதவியாக இருந்தார். அதில் ஓரளவு வருமானம் என்றாலும், இந்த கோவில் கைங்கரியம் வாய்ப்புக் கிடைக்க, அது நிரந்தர வருமானம் என்றெண்ணி ஒத்துக் கொண்டார். சில நாட்களில் இவரும் அம்புஜவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள, மங்கை பிறந்தாள். மங்கை பிறந்து மூன்று வயதில் அவளின் அன்னை இறந்து விட, அதிலிருந்து ருக்மணிதான் அவளை வளர்த்தது.
மங்கை தொடக்கக் கல்வி எல்லாம் ருக்மணி வீட்டில் இருந்து தான் படித்தாள். விமலனுக்கும், மங்கைக்கும் ஐந்து வயது வித்தியாசம். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. மங்கை ஆறாவது சேரும்போது தன் தந்தையிடத்தில் சேர்ந்துக் கொண்டாள். இருவரது ஊரும் அரை மணி நேர தொலைவு தான்.
சாரதியால் சிறு குழந்தையைப் பரமாரிப்பது கடினம். எனவே தன் தங்கையிடம் விட்டு வைத்தவர், மங்கை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் வயது வந்ததும் தன்னோடு அழைத்துக் கொண்டார். அவருக்கும் தன் மகளை விட்டால் யாருமில்லையே.
விமலன் மங்கைக்கு நல்ல வழிகாட்டியும் கூட. அவளின் இசை ஆர்வம் உணர்ந்து, இசைக் கல்லூரியில் சேர்க்கும் முடிவை எடுத்தது விமலன் தான். சாரதி கூட வணிகவியல் தொடர்பாக ஏதும் படிக்கட்டும். தேவையென்றால் வேலைக்கும் செல்லலாமே என்று கூற, இதுவும் ஒரு படிப்புதான். பின்னாளில் இசைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என எல்லோரையும் சம்மதிக்க வைத்தான்.
விமலனுக்கு கணினி மென்பொருள் படிக்க இஷ்டம் என்று மங்கைக்குத் தெரிந்தும் அதைப் பற்றி அவளால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. அப்போது மங்கைக்கு அதற்கு வயதும் இல்லை. ஆனால் மெக்கானிக்கல் எடுத்துப் படித்தாலும் விமலன் அதிலும் நல்லமுறையில் தேர்ச்சிப் பெற்று இருந்தான். வீட்டினருக்கு அவனின் விருப்பம் பற்றி எதுவும் தெரியாமல் போக அதுவும் ஒரு காரணம்.
இதை எல்லாம் யோசித்தபடி தன் அத்தையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் மங்கை.
என்னதான் தன் அத்தையைச் சமாதானம் செய்தாலும், மங்கைக்கும் மனதுக்குள் லேசான ஆதங்கம் இருக்கத் தான் செய்தது.
—
தன்னைச் சேர்ந்தவர்களின் வருத்தமோ, ஆதங்கமோ விமல் அறியவில்லை. ஆனால் அதே சமயம் அவனால் இதனை அத்தனை எளிதாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
வார இறுதி நிகழ்வுகள் முடிந்து எல்லோரும் மறுபடி போட்டியாளர்கள் மனநிலைக்குச் சென்றனர். அன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் இரவு உணவு உண்டுவிட்டு குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
சரண், ரூபன், தமிழ் நிலவன் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்க, எப்போதும் போல மாணிக்கம், சித்ரா இருவரும் ஓய்வு அறைக்குச் சென்றிருந்தனர்.
வைஷி, ராஜி இருவரும் தனியாக அமர்ந்து இருந்தனர். ராஜி ஏதோ கூற, முகம் சிவக்கத் தலையாத்திக் கொண்டிருந்தாள் வைஷி. விமலின் பார்வை அவ்வப்போது அந்தப் பக்கம் சென்று வந்தது.
தருண், தியா, விமல் மூவரும் நடிகரின் அன்றைய பேச்சுக்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது தியா “விமலன், ஆதித்யா சர் பேசினது பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? எல்லாரையும் சரியா கவனிச்சு, கண்டிப்பும், பாராட்டும் கொடுத்து நடுநிலையா தானே இருக்கார்” எனக் கேட்டாள்.
“மற்றவங்க கிட்டே அப்படித் தான் இருக்கார் தியா. தமிழ் நிலவன் சர் கிட்டே இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லியிருக்கலாமோனு தோனிச்சு” என்றான் தருண்.
“அவர் கிட்டே அவ்வளவுதான் சொல்ல முடியும் தருண். அரசியல் கட்சி பின்புலம். அதோட சட்டுனு நடிகரோட சமூகப் பார்வை தவறுனு சொல்லிடுவார். அது நடிகரோட இமேஜ் பாதிக்கும். சோ அவரை அப்படித் தான் அடிக்காத மாதிரி அடிக்கணும்” என்றாள் தியா.
விமல் பெரிதாக பாராட்டவும் இல்லை. அதே சமயம் குறையும் கூறவில்லை. ஏதோ யோசனையாக இருந்தான்.
“என்ன ஆச்சு விமல்?” என தருண் கேட்க,
“இல்லை. வைஷி மேடம் பற்றி சர் சொன்னாரே. அதைத் தான் யோசிக்கறேன்” என்றான் விமல்.
உடனே தியா “ம். நானும் நோட் பண்னினேன் விமல். வைஷி பார்வை உங்க பக்கம் அதிகமா இருக்கு. ஆனால் சர் நோட் பண்ணும் அளவு போகும்னு நினைக்கலை” என்றாள்.
தருண் “உங்களுக்கு அவங்களைப் பிடிச்சிருந்தா நீங்க ப்ரோசீட் பண்ணலாமே” என்றான்.
விமல் தருணிடம் “ஒரு வாரத்தில் அவங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்னு இந்த மாதிரி யோசிக்கறாங்க?” எனக் கேட்டான்.
அதற்கு தியா “மே பி பார்த்தவுடனே அட்ராகட் ஆகியிருக்கலாம்” என்றாள்.
“தியா மேடம், சரண் மாதிரி பிரபலமானவங்கக் கிட்டே வேணும்னா நீங்க சொல்றது நடக்கும். நான் சாதரணமானவன். என் கிட்டே என்ன அட்ராக்ஷன் இருக்கப் போகுது அவங்களுக்கு” என்றான் விமல்.
“ம். சீக்கிரம் தெரிய வரும்” என்றவள் “இந்த மேடம் விடமாட்டீங்களா விமல். நான் ஏதோ மிடில் ஏஜ்லே இருக்கிற பீல் வருது.” என்றாள்.
இப்போது தியா முகத்தைப் பார்த்த விமல் “சட்டுன்னு வரலை தியா. போக போக மாத்திக்கறேன்.” என்றான்.
அதைப் பார்த்து தருண், தியா இருவரும் சிரித்தார்கள்.
மூவரும் அறியாத விஷயம் அல்லது மறந்த விஷயம். இவை எல்லாம் இன்னும் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதே.
ஆம். அன்றைய நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திற்கு முன் முடிந்து விட, டைம் ஸ்லாட் முடிய நேரம் இருந்தது. அதனால் சேனல் தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்துக் கொண்டிருந்தது.
விமலின் சிந்தனை செல்லும் திசை தியா, தருண் இருவரும் அறியவில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் காமெரா மூலம் மற்றவர்களுக்குத் தெரிந்தது. அதில் மங்கையும் ஒருத்தி. அவளின் மனதில் லேசான பயம் தோன்றுவதை மங்கையால் தடுக்க இயலவில்லை.
-தொடரும்-
Interesting😍
Direct a program paarkira feel varuthu. Rukmani solvathu pola andha channel ku oruthar poita ,ellam avangale panni vechuduvaanga.
Normal human being ku idhai accept pannikirathu kashtam.
Tv channel indha maathiri match making ellam panna koodathu.
NICE