அத்தியாயம் – 7
அடுத்த வாரத்தின் முதல் நாள். எப்போதும் போல அதிகாலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு விமலன் திரும்ப, அங்கே வைஷி நின்று இருந்தாள். கண்டு கொள்ளதாவன் போல சென்று விட்டான்.
விமலன் அந்த இல்லத்திற்கு வந்த முதல் நாள் மட்டுமே ஏழு மணி வரை உடற்பயிற்சி செய்தான். எல்லோரும் அந்த நேரத்திற்கு எழுந்து வருவதை அறிந்தபின் அதற்கும் முன்னதாகவே உடற்பயிற்சி முடித்துவிட்டு, பிராணாயாமம் செய்து கொண்டிருப்பான். அல்லது கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்து இருப்பான்.
நேற்றைய வார இறுதியில் நடிகரே சப்போர்ட் செய்திருக்க, வைஷிக்குச் சற்றுத் தைரியம் வந்திருந்தது. அதோடு ராஜி, வைஷி இருவரும் பேசிக் கொண்டிருந்ததும் நினைவில் வந்தது.
ராஜி வைஷியிடம் “உனக்குப் பிடிச்சுருக்குனு நீ சொன்னாதானே அவருக்குத் தெரியும். விமலனைப் பார்த்தால் உன்னோட எண்ணம் தெரிஞ்ச மாதிரியில்லை. அதோட” என்று நிறுத்தினாள்.
வைஷி என்னவென்று பார்க்க, ராஜி “தியா கூடத் தான் விமலன் நல்லா பேசறார். அவங்களுக்குள்ளே எதுவும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆகுமுன் சட்டுனு சொல்லிடு” எனக் கூறினாள்.
அதைக் கேட்டதும் வைஷிக்கும லேசான பயம் வந்திருந்தது.
அதனால் அன்று சற்று முன்னதாக எழுந்து வந்திருந்தாள். விமலன் எக்சர்சைஸ் முடித்துவிட்டு அந்த லான் போன்ற இடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தான்.
இந்த இல்லத்தில் அலைப்பேசி உபயோகிக்க முடியாது என்பதால் சில புத்தகங்கள் எடுத்து வந்திருந்தான். வேகமாகப் படிக்கும் திறமையுள்ளவன் தான். விமலனுக்கு வரலாற்றுக் கதைகள் மிகவும் பிடிக்கும். அன்றைக்கு பொன்னியின் செல்வன் ஆரம்பித்து இருந்தான். வீராணம் எரியைப் பற்றி கல்கியின் எழுத்துக்களை ரசித்துப் படித்துக் கொண்டிருந்தான்.
புத்தகத்தின் அட்டையைப் பார்த்த வைஷிக்கு, இதைக் கொண்டே விமலனிடம் பேச ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.
மெதுவாக விமலன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்து அமர்ந்தவள், “குட் மார்னிங் விமலன்” என்றாள்.
புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கியவன், வைஷியைப் பார்த்து யோசனை வந்தாலும், முகத்தில் காட்டவில்லை. “குட்மார்னிங் மேடம்” என்றான்.
“என்ன விமல்? உங்களை விட எப்படியும் நாலு வயசு குறைவா இருக்கிற என்னை மேடம் சொல்றீங்க. பேர் சொல்லிக் கூப்பிடுங்க” என்றாள். விமலனுக்கு அந்தக் குரலில் சிறு உரிமை அல்லது எதிர்பார்ப்பு இருப்பதாகத் தோன்றியது.
இதுவரை டாஸ்க் சமயங்கள் தவிர மற்ற நேரத்தில் வைஷியிடத்தில் நேரடியாகப் பேசியதில்லை. இங்கே வந்து ஒரு வாரம் செந்திருக்க, மேடம் என்பது ரொம்பவே வித்தியாசமாக இருப்பதும் புரிந்தது.
லேசாகப் புன்னகைத்தபடி “சொல்லுங்க வைஷி” என்றான்.
அதில் வைஷிக்குக் குஷியாக “பொன்னியின் செல்வன் படிக்கறீங்க போலிருக்கு” என்றாள். விமல் சிறு சிரிப்புடன் தலையாட்டினான்.
“எனக்கும் ரொம்பவே பிடிக்கும். கல்கியின் வர்ணனை எல்லாம் சான்ஸே இல்லை. இப்போ எந்த அத்தியாயம் படிக்கறீங்க?” எனக் கேட்டாள்.
“இங்கே வந்ததும் ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனால் பைதான் பற்றி நியூ எடிஷன் புக் படிச்சிட்டு இருந்தேன். அதை முடிச்சிட்டு இன்னிக்குதான் ஸ்டார்ட் பண்னினேன்.” என்றான்.
“ஓ. அப்போ நம்ம ஹீரோ வந்தியத்தேவன் என்ட்ரியா?” என வைஷி கேட்க, “நான் ஆழ்வார்கடியான் ஃபேன்.” என்றான் விமல்.
விமலுக்கு எப்போதுமே புத்தகங்கள் பற்றிப் பேசப் பிடிக்கும். அதனால் அதைப் பற்றி பேசிய வைஷியிடத்தில் ஒரு இலகுத் தன்மை ஏற்பட ஆரம்பித்தது. என்றாலும் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
“பைதான் பற்றி எல்லாம் படிக்கறீங்க. ஆனால் நீங்க சாஃப்ட்வேர்லே வேலை செய்யற மாதிரி சொல்லலையே.” எனக் கேட்டாள் வைஷி.
“சாஃப்ட்வேர்லே வேலை செய்யலை. அதில் இண்டரெஸ்ட் ஜாஸ்தி. அதனால் பிரைவேட்டா சில வேலைகள் செய்யறேன்” என்றான் விமல்.
“ஓ. க்ரேட். ரெண்டு டிஃபரெண்ட் லைன்லே எப்படி கான்சன்ட்ரேட் பண்ண முடியுது?”
வைஷியின் கேள்விகள் விமலனுக்கு இன்னுமே உற்சாகமாக்கி விட்டது. அவனின் இலட்சியமே கணினி மென்பொருள் துறையில் தனியாகத் தான் தெரிய வேண்டும் என்பது தான். ஆனால் அவன் அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றவர்கள் மேம்பாட்டிற்கு தான் பயன்பட்டது. விமலன் பெரிதாக கண்டுக் கொள்ளப்படவில்லை.
இதுவரை தருண் அனாவசியமாக விமலின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுக் கொண்டதில்லை. எதிலும் அடி வரை தேடிப் பார்க்கும் தியாவும் ஏனோ விமலனின் படிப்பு, வேலை சம்பந்தமாக அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை. ஏற்கனவே தான் ஒரு பொறியாளன் என்று கூறி இருப்பதால் தியாவிற்கு மேலும் கேட்கத் தோன்றவில்லை போல் என்று நினைத்தான்.
வைஷி கேட்கவும் விமலனுக்குத் தன்னைப் பற்றி சொல்லும் வேகம் வந்தது. ஆனால் இன்றைக்குப் பேசுவது இங்கேயே கடந்துப் போய்விடக் கூடும் என்று கணக்கிட்டான். அதனால் வைஷியின் கேள்வியைச் சிரிப்பில் கடந்தான்.
அந்த நேரம் காலை துள்ளலிசை ஒலிக்க, எல்லோரும் வெளியே வர ஆரம்பித்தனர். தருண், தியா இருவரும் வைஷி, விமலன் பேசிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அதே நேரம் சித்ரா, மாணிக்கம் எதுவும் கண்டு கொள்ளவில்லை. ராஜி வைஷியிடம் லேசாகக் கண் சிமிட்டிச் சென்று விட, சரண் ஆத்திரத்தோடு பார்த்தான். ரூபன் ஆராய்ச்சியாய்ப் பார்த்துவிட்டுச் சென்றான். தமிழ் நிலவன், முருகன் இருவரும் ஒரு நக்கல் பார்வை செலுத்திவிட்டுச் சென்றனர். வைஷியும் காமிரா முன் நடனமாடச் சென்றாள்.
இசை ஒலிப்பது நிற்கவும், எல்லாரும் உள்ளே செல்ல, வைஷி விமலிடம் சிரித்துக் கையாட்டிச் சென்றாள். தருண், தியா அவர்களின் உடற்பயிற்சி ஆரம்பித்தனர். விமல் தன் கையில் இருந்த பொன்னியின் செல்வனைத் தொடர்ந்தான்.
அன்றைய நாளில் வேறு எதுவும் பெரிதாக டாஸ்க் கொடுக்கப்படவில்லை. அந்த வாரத்தின் வீட்டின் தலைவர் யார் எனத் தேர்வு செய்வது மட்டுமே நடந்தது.
மாணிக்கத்திற்கு அடுத்து சித்ரா அல்லது தமிழ் நிலவன் இருவரில் ஒருவர் தலைவர் என நிகழ்ச்சியின் குரல் கூறியது. அதை வோடிங்க் மூலம் தேர்வு செய்யலாம் எனவும், அதை நடத்தும் பொறுப்பு மாணிக்கத்திடமே கொடுக்கப்பட்டது. மதிய உணவு நேரம் முடித்து வோடிங்க் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் மற்ற வேலைகளைப் பார்த்தனர்.
சமையல் மற்றும் வீடு சுத்தம் செய்யும் பணியும் ஒரு புறம் நடக்க, யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற அலசல்களும் இன்னொரு புறம் நடந்தது.
தியா, தருண், விமல் மூவரும் சித்ராவைத் தலைமை ஏற்கச் சொல்லலாம் என்று எண்ணினர். முதல் வாரம் வயதைக் கொண்டு மாணிக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்க, இந்த வாரம் பெண்களுக்கான முன்னுரிமையாக சித்ராவை தேர்ந்தெடுக்க விரும்பினார்கள். தியா வைஷி, ராஜி இருவரிடமும் பேச அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.
தமிழ் நிலவன் சரணிடத்தில் தான் தலைவராக விரும்புவதாகக் கூற, சரண் சற்று யோசித்தாலும் சரி என்றான். சரண் மூலம் முருகன், ரூபன் இருவரிடமும் பேசிவிட்டு, பெண்களிடம் பேசும் பொறுப்பை சரணிடம் கொடுத்தார்.
இது நமக்குத் தேவையில்லாதது என்று நினைத்தாலும், ஏனோ வைஷி, விமல் காலையில் பேசிக் கொண்டது சரணுக்கு நினைவில் வந்தது. சட்டென்று ஒருவித வன்மம் வர, மெதுவாக வைஷி, ராஜி இருவரையும் தன்னோடு அழைத்து, தமிழ் நிலவனுக்கு ஆதரவாக இருக்குமாறு கேட்டான். ராஜி உடனே சரியென, வைஷி யோசித்தாள்.
தியா பேசியத்தைப் பற்றி வைஷி கூற, சரணுக்குக் கோபம் வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், வேறு சில விஷயங்கள் கூறி சரண் வைஷியின் மனதையும் மாற்றினான்.
மதிய உணவிற்கு பின் வோடிங்க் நடக்க, தியா கூட்டணி தவிர மற்ற யாரும் சித்ராவிற்கு வாக்களிக்கவில்லை. தியா திகைக்க, தருண், விமல் இருவரும் தோளை குலுக்கிக் கொண்டனர்.
பின் இவர்கள் மூவரும் சென்று சித்ராவிடம் தங்கள் நிலைப்பாடுகளைக் கூற, அவர் அதை பெரித்துபடுத்த வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
தியா பெண்கள் இருவரையும் கோபமாகப் பார்க்க, ராஜி கண்டுகொள்ளவில்லை. வைஷி மட்டும் அவ்வப்போது தயக்கமாகப் பார்த்தாள்.
—
விமல், வைஷி காட்சிகளோடு அன்றைய நாள் சுருக்கம் முழுதும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப் பட, மங்கையும், ருக்மணியும் கண்டு மறுகினர்.
மங்கையின் கண்களில் முதல் முதலாகக் கண்ணீர் வந்தது. அவளின் அன்னையின் இறப்பு மங்கை அறியாத வயதில் நடந்தது. அதற்கு பின் ருக்மணியின் பாசத்தில், அன்னைக்காக மங்கை ஏங்கியதே கிடையாது.
தந்தை சாரதியிடம் வந்த போது அவரும் மங்கையைத் தாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். விடுமுறைகளில் இருக்கவே இருக்கிறது அத்தை வீடு. உடல் நலக் குறைவு என்றால் கூட அத்தையின் கணவர் முதற்கொண்டு எல்லோருமே பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள். இளநீர், ஜூஸ், பழங்கள் என்று வாங்கிக் கொடுப்பது அவர்தான்.
ருக்மணியின் கைவைத்தியம் பலிக்காத நேரத்தில், மருத்துவரிடம் செல்லும்போது உடன் வருவது அவளின் அத்தான் விமலன் தான். இருவரையும் பத்திரமாக அழைத்துப் போவது, மருந்துகள் வாங்கிக் கொடுப்பது எல்லாமே அவன் தான். அத்தோடு நேரத்திற்கு மாத்திரை பிரித்துக் கொடுப்பது, மங்கையிடம் சீக்கிரம் சரியாகிவிடும் என ஆறுதல் சொல்வது என விமலன் செய்வான்.
அது மட்டுமில்லை, மங்கையிடம் உலக நடப்புகள் குறித்தும், தன் ஆசை, இலட்சியங்கள் குறித்தும் விமலன் நிறையப் பேசியிருக்கிறான். விமலன் படித்தக் கதைகள், பார்த்தத் திரைப்படங்கள் எல்லாம் பகிர்ந்து இருக்கிறான்.
மங்கையும் இசையின் மீதான ஆர்வம், தோழிகள், பள்ளி, கல்லூரிகளின் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் விமலனிடம் தான் பகிர்ந்து கொள்வது.
ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் விருப்பத்தைக் கூட விமலன் மங்கையோடு பேசியிருக்கிறான். மங்கை அதை மறுத்துப் பேசினாலும், அவன் சமாதானப் படுத்தியிருந்தான். ஆனால் ஆடிஷனில் கலந்து கொண்டு வந்தது எல்லாம் சொல்லவில்லை.
மங்கை அறிந்த வரையில் பெரிதான நட்பு வட்டமில்லாத விமலன், தன்னிடத்தில் நல்ல நட்புடன் பழகுகிறான். அவனின் வாழ்க்கையில் தான் முக்கிய இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம்.
இருவரின் பெற்றவர்கள் எண்ணங்கள் புரிந்தாலும், இருவருக்கும் அது நடக்கும்போது பார்த்துக் கொள்வோம் என்ற எண்ணமே.
இன்று தன்னைத் தாண்டி இன்னும் ஒருவரிடம் விமலன் பேசுவது மங்கைக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இத்தனைக்கும் விமலன் அன்று தான் வைஷியிடம் பேசவே செய்திருக்கிறான். தியாவிடம் ஆரம்பத்திலிருந்தே நன்றாகப் பழகுகிறான். அது எல்லாம் மங்கையைப் பாதிக்கவில்லை. வைஷியிடம் பேசுவது ஏனோ அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
ஆனால் இதைத் தடுக்கவோ, குறைந்தப் பட்சம் நிகழ்ச்சி முடிந்து வந்த பின் கேள்விக் கேக்கவோ தனக்கு என்ன உரிமை இருக்கிறது என மங்கை வேதனைப்பட்டாள்.
அப்போது அத்தையின் ஃபோன் வர, ஏனோ மங்கையால் எடுத்துப் பேச முடியவில்லை. தன்னால் சாதாரண குரலில் பேசமுடியுமா என்ற சந்தேகம் ஒருபுறம். ருக்மணியின் வருத்தங்கள் கேட்டால் சட்டென்று விமலனைப் பற்றிக் கோபத்தில் பேசிவிட வாய்ப்பு உண்டு. அதில் இன்னும் தான் அத்தையின் வருத்தம் அதிகமாகும். அதனால் அழைப்பை எடுக்கவில்லை.
மங்கையின் வாழ்நாளில் தன் அத்தையின் அழைப்பைத் தவிர்ப்பது இதுவே முதல் முறை. அதற்கே அவளின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அந்த நேரம் அவளின் தந்தை வரும் அரவம் கேட்க, சட்டென்று கண்ணீரைத் துடைத்தாள்.
சாரதியும் தன் மகளைப் பார்த்து “ஏன் மங்கை ஒரு மாதிரி இருக்க? கண்ணு எல்லம் சிவந்து இருக்கு. குரல் கூட சரியில்லை” எனக் கேட்டார்.
“ஒண்ணுமில்லை பா. இன்னிலர்ந்து ஸ்கூலில் ஆண்டு விழா பிராக்டிஸ் ஆரம்பம். பிரேயர் தவிர, மூணு கிளாஸ் பாட்டு புரோகிராம் எடுத்துண்டு இருக்கா. அதனால் எல்லாருக்கும் கோச்சிங் கொடுக்கறதில் தொண்டை கட்டியிருக்கு” எனும்போதே மீண்டும் மங்கையின் ஃபோன் அடித்தது.
மங்கை சட்டென்று “அப்பா, நீங்க அத்தை கிட்டேப் பேசுங்கோ. நான் பேசினால் குரலைக் கேட்டுப் பதறிண்டு ஓடி வருவா. இந்த மாதிரி தொண்டை கட்டிண்டு இருக்குனு சொல்லிடுங்கோ” என்றாள்.
மங்கை சொல்லி சாரதி என்றைக்கு மறுத்து இருக்கிறார். தன் தங்கையின் ஃபோன் எடுத்துப் பேசி, மங்கை சொன்னபடி சொல்லும்போதே, அவரின் கண்கள் தன் மகளை ஆராய்ந்தது.
ருக்மணி என்ன சொன்னாரோ “அது எல்லாம் ஒண்ணுமில்லை ருக்கு. ஸ்கூல் வேலையால் அப்படி இருக்கு. ஆண்டு விழானு சொல்றா. எப்படியும் பத்து, பதினைஞ்சு நாள் அவ வேலை இப்படித் தான் இருக்கும். தினம் சுக்கு வெந்நீர் சாப்பிடச் சொல்றேன். சரியானதும் அவளே பேசிடுவா. உன்னிட்டா இல்லாம வேறே யார் கிட்டே என்னப் பேசுவா?” எனக் கூறவும், தன் அத்தையின் பதற்றம் மங்கைக்குப் புரிந்தது.
பின் தானே போனை வாங்கி “அத்தை, எனக்கு ஒண்ணுமில்லை. இந்த குரலில் நான் பேசினா நீ பயந்துடுவனு தான் அப்பாவை பேசச் சொன்னேன். எனக்கு தொண்டை வலிக்கிறது. இன்னும் ரெண்டு, மூணு நாள் ஆனா இது பழகிடும். அப்புறம் உன்கிட்டே பேசறேன். நீயும் பதறி, அத்திம்பேரையும் பதட்டப்பட வைக்காதே” என்றாள் மங்கை.
“சரிடா தங்கம். ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ. இந்த பனி வேறே நோக்கு ஒத்துக்கலையோ என்னவோ. எதுக்கும் தலையில் மப்ளர் கட்டிண்டு கார்த்தால கோவிலுக்குப் போ. அப்பா கிட்டேயும் சொல்லு.” என்று ஃபோன் வைத்தார் ருக்மணி. மங்கையோ பெருமூச்சு விட்டபடி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
-தொடரும்-
Reality shows la reality a illai.
Ellorum morning elunthathum ippadithan dance aadataangala?
Potti,poramai vera. Aduthavangalai influence panrathu, ellam romba thapu.
Mangai paavam.
Interesting
NICE