Skip to content
Home » அகலாதே ஆருயிரே 2

அகலாதே ஆருயிரே 2

💗அகலாதே ஆருயிரே💗

💗2💗

“டேய் அபி, அந்த லாஸ்ட் பெஞ்ச்ல இருப்பாளே சந்திரா அவ இன்னிக்கு வரல போல டா.”

“அவ வந்தா உனக்கென்ன வரலன்னா உனக்கென்ன ஒழுங்கா கெமிஸ்ட்ரி கிளாஸ் கவனி, இல்ல பத்தாவதுல பாதி மார்காவது வாங்கின, பன்னிரெண்டுல புட்டுக்கும் மகனே..”

“நீ ஏன் டா இப்படி படிப்ஸா இருக்க?”, தன் அதிமுக்கிய கேள்வியைக் கேட்டவன் வேறு யாரும் இல்லை நம்ம ஆணழகன் ஹர்ஷா தான்.

அவனை முறைத்து பார்த்த பேரழகனான அபினவ், “படிப்பு தான் டா கெத்து. நம்ம அழகுக்கும் பணத்துக்கும் பின்னால வர்ற பொண்ணுலாம் பொண்ணே இல்ல பங்கு. நம்மள மனசை பிடிச்சு, நம்ம அறிவை வியந்து வர்ற பொண்ணு தான் வாழ்க்கைல ரசிச்சு வாழ முடியும்.”

“அடப்பாவி அபி, நான் என்னமோ அந்த சந்திராவை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ண போறது மாதிரி அட்வைஸ் பண்ற. பாக்க அழகா இருக்கா, அடிக்கடி என்னை பார்த்து பல்லை பல்லை காட்டறா. சரி நாமளும் பார்த்து வைப்போம்னு நெனச்சா.. என்னமோ நாளைக்கே அவளோட நான் ஓடிப்போக பிளான் போட்ட மாதிரி பேசுறியே பங்கு.. இதெல்லாம் நியாயமா??”, என்று இல்லாத கண்ணீரை ஹர்ஷா துடைக்க,

“அங்க என்ன பாய்ஸ் சத்தம்”, என்று கேட்டார் அந்த வேதியியல் ஆசிரியர்.

“ஐயோ கப் சிப்”, என்று வாயை மூடிக்கொண்டான் ஹர்ஷா.. அவனின் செய்கையை பார்த்து சிரித்த அபினவ்,

“பங்கு நீ பயப்படுற அளவுக்கெல்லாம் நம்ம வேதா ஒர்த் இல்லயே.”, என்று அவன் காதில் முணுமுணுக்க..

“உனக்கென்னப்பா நீ படிப்பாளி, உன்னை பார்த்தா அவருக்கு மாம்பழமா இனிக்கும். நானெல்லாம் சராசரி.. என்னை கண்டா அவருக்கு வேப்பங்காயா கசக்கும்.”, என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“ஹர்ஷா.. கெட் அவுட் அப் தி கிளாஸ்.” என்று கத்தியவர், “அபினவ் அவனோட சேராதப்பா.. நீ நல்லா படிக்கிற பையன். அவனோட சேர்ந்து நீயும் கெட்டுப்போய்டாதே.”, என்றார்.

அவரை ஆழமாக பார்த்த அபினவ்,”சரி சார்”, என்று அமர்ந்துகொண்டான். வகுப்பு முடிந்து எல்லாரும் போனதும்,” சார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, அவன் என் நண்பன், அவன் படிக்கிறானா இல்லையான்னு பார்த்து வந்தது இல்ல எங்க நட்பு, அவன் நல்லவனான்னு பார்த்து வந்தது. அதனால அவன் ஆவரேஜ் ஸ்டுடெண்ட்னா அது உங்களுக்கு. ஆனா அவன் எனக்கு பெஸ்ட் பிரென்ட் சார்.”,என்றான் அவரிடம் .

அவர் கோபம் கொள்வார் என்று அவன் நினைக்க, அதற்கு எதிர்மாறாக, “சூப்பர் அபினவ். அவன் நல்ல பையன் அதுல எனக்கு சந்தேகமே இல்லப்பா. ஆனா இன்னும் கொஞ்சம் கவனமும் சிரத்தையும் வேணும். எனக்கு உன்னை நினைச்சு பெருமையா இருக்கு. நண்பனுக்காக பேசுற.. “,என்று அவன் முதுகில் தட்டிக்கொடுக்க, சிரித்தபடி தன் நண்பனை தேடிச்சென்றான் அபி.

“ஏய்.. என்னடா பண்ணிட்டு இருக்க”, என்று அவனை பார்த்ததும் கோபமாக கேட்க, ஹர்ஷா வேகமாக எழுந்தவன்.

“நீ வர வரைக்கும் அந்த ராஜேஷ் கூட பேசிட்டு இருந்தேன். “,என்றான் மென்னு முழுங்கி..

“டேய்.. சரி இல்ல. அவன் சேர்க்கை சுத்தமா சரி இல்ல. காலேஜ் பசங்க கூட சேர்ந்து அவன் இல்லாத வேலை செய்யறான். இப்போ நீயும் அவனும் சும்மாவா நின்னிங்க? அங்க போற கேர்ள்ஸ்க்கு மார்க் போடல? வேணாம் ஹர்ஷா.. இது நல்லா இல்ல.”

“சும்மா விளையாட்டுக்கு தான் அபி.. விடேன்.”, என்று கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி அபியை சமாதானம் செய்ய பார்த்தான் ஹர்ஷா.

“இல்ல ஹர்ஷா, எனக்கு ரெண்டு அக்கா இருக்காங்க. ஒரு நாள் சின்ன அக்கா ரோடுல ஒருத்தன் வம்பு பண்றன்னு அப்பா கிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்பா, அவங்கல்லாம் வீணா போன பசங்க. நீ கண்டுக்காதே, காதுல வாங்காதன்னு சொன்னார். இப்போ சொல்லு, நீ வீணா போனவனா?? புரியுதா உனக்கு?”

“சாரி அபி, நான் இந்த ஆங்கிள்ல யோசிக்கவே இல்ல.”, என்றான் தலை கவிழ்ந்தபடி.

“இனிமே யோசி.”, என்றான் கடுப்பாக.

அடுத்த வகுப்புக்கு கூட்டம் சேரவே, இருவரும் தங்கள் வாகனம் நோக்கி போக, அபி ஒரு பழைய சைக்கிளிலும்,ஹர்ஷா புதிய பல்சரிலும் கிளம்பி அவரவர் வீடு சென்றனர்.

ஹர்ஷா வாசலில் வண்டியை நிறுத்தும்போதே வீட்டில் சண்டை பறந்து கொண்டு இருந்தது.

“அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு அந்த நெக்லஸ் வேணும்.”, கத்திக்கொண்டு இருந்தார் ஹர்ஷாவின் அம்மா லதா.

“புரிஞ்சுக்கோ லதா, இந்த வருஷம் இன்கிரிமெண்ட்ல எனக்கு கொஞ்சம் செலவு இருக்கு. நான் கொஞ்ச நாளில் உனக்கு செஞ்சு தரேன். டயம் கொடு.”, என்று தன்மையாக சொல்லிக்கொண்டு நின்றார் சோமநாதன்.

“அம்மா கேக்குறாங்க அதை விட என்ன செலவு உங்களுக்கு”, என்று கேட்டபடி உள்ளே வந்த ஹர்ஷாவை, ஏற இறங்க பார்த்தவர், பதில் பேசாது போய் விட்டார்.

“என்னம்மா, என்ன? அவருக்கு என்ன செலவாம்?”, என்றுபொறுமையாக தாயை கேட்க,

“அதைத்தான் சொல்லாம போறார். எங்க போய்ட போறார். நாளைக்கு பேசிக்கிறேன். நீ வா ராஜா.. உனக்காக கடைல நல்ல உளுந்து போண்டா வாங்கி வச்சிருக்கேன். காபி போட்டு தரேன்.”

“அம்மா இன்னிக்கு கிளாஸ்ல”, என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்ல,

“இனிமே அந்த டியூஷன் சென்டர் வேணாம். நீ வேற இடத்துக்கு போ. எவ்வளவு திமிரு இருந்தா உன்னை வெளிய போக சொல்லுவான் அந்த ஆளு.”, என்று மகனை நன்றாக தட்டிக்கொடுத்து வளர்த்தார் அந்த தாய்.

“இல்லம்மா அபி அங்க தான் படிக்கிறான். எனக்கு அபி கூட இருக்கணும். நானே அவன் ஸ்கூல்ல இந்த வருஷம் உன்னை அட்மிஷன் வாங்க சொல்ல தான் வந்தேன்.”

“நான் கேட்டுப்பார்க்கறேன் ஹர்ஷா..”, என்ற லதாவின் குரல் உள்ளே போயிருந்தது.

அவளுக்கு தெரியும் அந்த பள்ளியில் இடையில் இடம் வேண்டும் என்றால் டொனேஷன் கொட்டிக்கொடுக்க வேண்டும். இப்போது தான் ஹர்ஷா கேட்டான் என்று புதிய பைக் வாங்கிக் கொடுத்தாள்..

அதனால் தான் இன்று கணவரிடம் நகைக்கு மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறாள். அவள் நகையை வாங்கிவிட்டாள், பணத்தை செலுத்த வேண்டும் ஆசாரியிடம், ஹர்ஷாவுக்கு கொடுத்தது போக அவள் தேவைக்கு வைத்திருக்கிறாள், பத்தாமல் தான் கணவனிடம் கேட்டது. இப்போது மீண்டும் டொனேஷன் என்று கேட்டால் என்ன செய்ய என்று யோசித்தபடி மகனை அனுப்பி வைத்தாள்.

சோமு கொஞ்சம் மனவருத்தம் அடைந்தார். அவர் பெற்றோர் இருவரும் சொந்த கிராமத்தில் இருக்கின்றனர். அவர்கள் நிலங்களில் வரும் வருமானம் வைத்தே இன்றும் வாழ்கின்றனர். வீடு கொஞ்சம் சரி இல்லாமல் இருக்க, இந்த பணத்தை கொண்டு வீட்டை சீரமைக்க நினைத்தார், ஆனால் லதாவின் செய்கையில் மிகவும் நொந்து போனார். எவ்வளவு சம்பாதித்து கொடுத்தாலும் பற்றாக்குறை பத்திரம் வாசிக்கிறாள். செலவினங்கள் வெட்டியாய் அதிகரிக்க, வேண்டிய செலவுக்கு கையை கடிக்கிறது. ஹர்ஷாவும் இந்த பதினேழு வயதில் தாயின் நகலாக நிற்க, உள்ளம் உடைந்து போனார்.

அபி தன் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்த, வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக்கொண்டது, உள்ளே நுழையும் போதே, “இன்னிக்கு அந்த டியூஷன்க்கு போகாட்டா என்ன டா ?”,என்று கடிந்தார் தந்தை. அவரை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாது உள்ளே போக,

“வா டா அந்த பாத்திரம் பரண்ல இருக்கு. கொஞ்சம் எடுத்துக்கொடு”, என்ற பெரிய அக்காவின் பேச்சில் எரிச்சல் வந்தாலும், வெளிக்காட்டாமல் ஏறி எடுத்துக்கொடுத்துவிட்டு தாயை தேட, அவரோ அடுப்படியில் பஜ்ஜி போட்டுக்கொண்டு இருந்தார்.

“அம்மா”, என்ற அழைப்பில் இருந்த கோபமே அவன் நிலையை சொல்லிவிட, என்ன சொல்வது என்ற யோசனையோடு, “அபி நான் சொல்றதை கேளேன்..”, என்று அம்மா தயங்க,

“ஒன்னும் வேண்டாம். நான் சொல்லி நீங்க கேட்கவா போறீங்க.”,என்றான் கோவமாக.

“அப்படி இல்ல அபி,அப்பா திடீர்னு வந்து தெரிஞ்ச இடம் உடனே வராங்கன்னு சொல்லிட்டார். அதான். “

“நானும் அதான் சொல்றேன். எத்தனை தெரிஞ்ச இடம். எல்லாத்துக்கும் இதே பரபரப்பும்,ஆர்ப்பாட்டமும் தேவையா?” என்றான் கண்கள் சிவக்க,

“அபி “, என்ற தாயின் குரலில் ஜீவனே இல்லை.

“இப்போ எதுக்கு பெரிய அக்கா வந்தா? எல்லாத்துக்கும் அவளை ஏன் கூப்பிடுறிங்க. உதவியா இருந்தா கூட பரவால்ல.. “,என்று கடிக்கும் போதே அவள் சயலறைக்கு வந்து ,

“என்னமா எல்லாம் ரெடியா? அவங்க கிளம்பிடங்களாம். அப்பா சொன்னார்.”, என்று அம்மாவிடம் பேச்சு கொடுத்தாலும், கண்ணும் கையும் கழுத்தில் இருந்த தங்க நகையில் இருக்க,

“அக்கா ஏது இந்த நகை?”

“பக்கத்து வீட்ல வாங்கிட்டு வந்தேன்.”, என்றாள் பெரியவள் ரேகா.

“எதுக்கு? பொண்ணு பார்க்க போறது சின்ன அக்கா ஸ்வாதிக்கு உணக்கெதுக்கு நகை. ஒருவேளை இதை பார்த்து மாப்ள வீட்டுல நெறய செய்ய சொன்னா அப்பா என்ன பண்ணுவாரு. ஏற்கனவே உன் கல்யாண கடனே தீரல..”

“என்ன டா சொல்லிகாட்டுறியா? “,என்று ரேகா எகிறிக்கொண்டு வர, அபியின் கோவம் அறிந்த தாய் சங்கரி அவனை இழுத்துக்கொண்டு மாடிக்கு விரைந்தார்.

“அம்மா என்னை விடு”, என்று அபி திமிர, “இரு டா தங்கம். உன் வார்த்தையில் உள்ள நியாயம் தெரியுது, ஆனா இப்போ ஒன்னும் செய்ய முடியாது விடு.”

“அம்மா நம்ம ரெண்டு பேர் மட்டும் எங்கயாச்சும் போய்டலாமா? ஏன் இவ்ளோ சுயநலம் பிடிச்சவங்களா எல்லாரும் இருக்காங்க?”, வெறுத்துப்போன குரலில் கேட்டான் அபி.

“எங்க போனாலும் இப்படிப்பட்டவங்களோட தான் வாழனும், அதுக்கு நம்ம ரத்த சொந்தங்கள் கூடவே வாழலாம் அபி. யார் யாரோ முகம் தெரியாத, பழகாத ஆட்களை அட்ஜஸ்ட் பண்ணி வாழரதை விட, உன் அப்பா அக்காக்கள் மாதிரி ஆட்கள் கூடவே அட்ஜஸ்ட் பணிக்கலாம்.”

“போங்கம்மா எனக்கு கஷ்டமா இருக்கு” என்ற அபியை, “நான் இருக்கேன் அபி என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த குடும்ப வண்டியை ஓட்டுவேன்.”, என்றார் சிரிப்புடன்.

“எப்படி மா இப்போ கூட சிரிச்ச முகமா இருக்க??”

“அழுதா, கோவமா இருந்தா, கத்தினா இவங்க மாறப்போறாங்களா அபி?? எனக்கு தான் என் சக்தியெல்லலாம் வீணா போகும். உடம்பு கெட்டுப்போகும். நான் நல்லா இருக்கணும் அபி, உன்னை கரை சேர்க்கற வரைக்கும்.”

“என்னமா நான் என்ன பொண்ணா? கரை சேர்க்க”, என்று அபி சிரித்துக்கொண்டு கேட்க,

“இவ்ளோ கோவக்காரனை நல்ல பொண்ணு கிட்ட ஒப்படைக்க வேண்டாமா?”, என்றார்.

“மா நான் பன்னிரண்டாவது தான் படிக்கிறேன். “, என்றான் நமட்டு சிரிப்புடன்.

“அது அது உன் வயசுல, ஹேர்ஸ்டைல் பண்ணிட்டு பொண்ணுங்க பின்னாடி சுத்துது.. என் நேரம் என் பின்னாடியே சுத்துற நீ”, என்று சங்கரி கிண்டல் செய்ய,

“அட அந்த மொட்டை மாடில நிக்கிற பொண்ணு அழகா இருக்கா உனக்கு மருமகளா வந்தா ஒகேவான்னு பாரு”, என்று சொல்ல,

“டேய்.. நில்லு டா. ஒரு வாய் வார்த்தைக்கு சொன்னா உடனே சைட் அடிக்க கிளம்பிடுவியா?”,என்று அவர் துரத்த, கீழே மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட, இருவரும் சத்தம் காட்டாமல் இறங்கினார்கள்.

பெரிய மகளுக்கு என்ன செய்தாரோ அதே செய்யட்டும் என்ற முடிவோடு அன்றே ஒப்புக்கு நிச்சயம் செய்து விட்டு சென்றது மாப்பிள்ளை வீடு.

அப்பா கடன் வாங்க ஆட்கள் பட்டியல் போட, அம்மா என்ன செய்ய வேண்டும் எப்படி என்று திட்டமிட, இனி தன் படிப்பு மட்டுமே தனக்கும் தன் குடும்பத்துக்கும் கை கொடுக்கும் என்ற எண்ணத்தோடு அன்றைய இரவு படுக்கையில் விழுந்தான் அபி.

7 thoughts on “அகலாதே ஆருயிரே 2”

  1. CRVS2797

    ஆக மொத்தம் ஒண்ணு நீரு, இன்னொன்னு நெருப்பு…!
    ஒண்ணு மழை…
    இன்னொன்னு புயல்…!
    ஒண்ணு கிழக்கு…
    இன்னொன்னு மேற்கு..!

    அப்படித்தான் இருக்கு இந்த அபி & ஹர்ஷா குடும்பங்கள்.
    இதுல ரிது & ஆருஷி…
    இணைப்பு யார் யாருக்கோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *