Skip to content
Home » அகலாதே ஆருயிரே 4

அகலாதே ஆருயிரே 4

💗அகலாதே ஆருயிரே💗

💗4💗”டேய்.. இவனே.. பாரு டா அவ என்னை பைத்தியம்ன்னு சொல்லிட்டு போறா. அவளுக்கு எதுக்கு டா உக்கார இடம் குடுத்த.. டேய்.. பேசிட்டே இருக்கேன். என்ன டா பாக்கற?”, என்று அவன் பார்த்துக்கொண்டு இருந்த போஸ்ட்டரை ஹர்ஷாவும் பார்த்தான்.அது ஒரு பகுதி நேர வேலைக்கான விளம்பரம். “என்ன டா இதை போய் பார்த்துட்டு இருக்க?””இல்ல ஹர்ஷா, நேரம் சரியா இருக்குமான்னு கணக்கு போடறேன்.””டேய் லூசாடா நீ. நாம டிவெல்த் டா. பப்ளிக் எக்ஸாம் இருக்கு. நீ ஏதோ பார்ட் டயம் ஜாப் போறேன்னு சொல்ற?”

“ஹர்ஷா, அப்பா பிரைவேட் கம்பெனில சாதாரண கிளார்க் டா. அவருக்கு வர்ற வருமானம் எங்க அஞ்சு பேர் சாப்பாடு,பள்ளிக்கே செலவாச்சு. பெரிய அக்கா கல்யாணத்துக்கு அப்பா கடன் வாங்கி கண்டதையும் செஞ்சுட்டார். இப்போ அதுக்கு வட்டி கட்ட முடியாம அம்மா பிதுங்கிட்டு இருக்காங்க. இதுல சின்ன அக்காவுக்கும் அதே போல செஞ்சு கல்யாணம்னு பேசி முடிச்சாச்சு. நானும் செலவுக்கு வீட்டை எதிர்பார்த்தா அம்மா பாவம் டா. நான் ஏதாவது கொஞ்சம் சம்பாதிச்சு கொடுத்தா, அவங்க மூச்சு விட முடியும் டா.”

“நீ சொல்ற நியாய வெங்காயம் எல்லாம் எனக்கும் புரியுது. ஆனா படிக்க வேண்டாமா?””அது எப்படி படிக்காம போவேன். நான் சமாளிப்பேன்”, என்று உறுதியாக சொன்னான் அபினவ்.

இருவரும் பேசியபடி சென்று, பின் அவரரவர் பாதையில் பிரிந்தனர்.ஹர்ஷா வீட்டினுள் நுழைய, “இந்த மாசம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ஆசாரி நான் அடுத்த மாசம் சேர்த்து தர்றேன். எனக்கு தெரியும் இப்படி தவணை சொல்லக்கூடாது தான். ஆனா பாருங்க, இந்த மாசம் கொஞ்சம் எதிர்பாராத மருத்துவ செலவு. அதுனால”, என்று நகை வாங்கிய ஆசாரியிடம் தவணை சொல்லிக்கொண்டு இருந்தாள் லதா.

காதில் வாங்கினாலும், எவ்வித அலட்டலும் இல்லாமல்,” அம்மா பூஸ்ட் கொடு”, என்று ஹாலில் சாக்ஸை கழட்டியபடி அமர்ந்தான் ஹர்ஷா.மென்று முழுங்கி பேசி முடித்து, பூஸ்டுடன் கொறிக்க சில ஐட்டங்களும் அவன் முன்னால் அடுக்க, அதை அழுக்கு கையுடன் மென்றபடி பூஸ்ட்டை உள்ளே தள்ளினான்.

“என்னம்மா அப்பா எங்க? இன்னும் வரலையா?””வந்துட்டு வெளில போய்ட்டார். நீ ஏம்பா லேட்..””நான் டியூஷன் போய்ட்டு வரேன் மா. “”சரிப்பா, போய் படி.””இப்போ தான் ஸ்கூல் விட்டு, டியூஷன் போய்ட்டு டயர்டா வரேன். அதுக்குள்ள படிக்க போக சொல்ற. நான் போய் பக்கத்து வீட்டு குணா கூட கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடிட்டு வர்றேன். “,என்று மட்டையை தூக்கிக்கொண்டு வெளியில் போய்விட்டான்.

அவன் போன சிறிது நேரத்தில் உள்ளே வந்த சோமு, “எங்க அவன் பேக், பைக்லயே இருக்கு. வாசல்ல ஷு தாறுமாறா இருக்கு, இப்படி நடு வீட்ல சாக்ஸ் கிடக்கு. எங்க அவன்? “,என்று சத்தமாக கேட்க,”ஏன் இப்போ கத்துறீங்க? அவனே பாவம். காலைல இருந்து பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டு, டியூஷன் போய்ட்டு இப்போதான் வந்து பக்கத்து வீட்டு பையன் கூட விளையாட போறான்.”, என்று அவனுக்கு பரிந்து பேச,

“அறிவு இருக்கா லதா உனக்கு. அவன் பப்ளிக் எக்ஸாம்க்கு தயாராகணும். சும்மா என்ஜினீயரிங் பண்ணனும்னு சொன்னா பத்தாது. படிக்கணும். என்னால மேனேஜ்மெண்ட் சீட் வாங்க முடியாது லதா. நான் சாதாரணமானவன் மா. நீ என் நிலைமையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ.””ஓ அதான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு காசு அனுப்பினீங்களோ? எனக்கும் என் பையனுக்கும் செய்ய மட்டும் கணக்கு பாக்குறீங்களா??””ஏன் லதா இப்படி பேசுற? நான் என்ன மாசம் மாசம் அவங்களுக்கு பைசா அனுப்புறேனா? அவங்களே அவங்க தேவைகளை பார்த்துக்கறாங்க. வீடு மராமத்து வேலைக்கு தான் நான் பைசா கொடுத்தேன்.

நாளைக்கு அது நமக்கும் நம்ம பையனுக்கும் தானே.”, என்று மனைவி குணம் அறிந்து எங்கே அடித்தால் அவளை நிறுத்தலாம் என்று தெரிந்து இந்த வார்த்தைகளை சொன்னார்.”நீங்க சொல்றதும் சரி தான் நான் இல்லன்னு சொல்லல.. ஆனா முன்னாடியே சொல்லிருந்தா நான் வேறு ஏற்பாடு பண்ணிருப்பேன்.”, என்று சுருதி இறங்கி வந்தார் லதா.”அவனை கொஞ்சம் கண்டிச்சு வை லதா. சின்ன பையன்னு செல்லம் குடுக்கற, நல்ல மார்க் வாங்கினா தான் நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கும் லதா.”, என்று கொஞ்சம் தன்மையாக சொல்ல,

“சரிங்க. நான் அவன் வந்ததும் சொல்றேன்.”, என்று சமாதானம் ஆனார்.பாவம் சோமு, மனைவியை சரிகட்டிவிட்டதாக நினைக்கிறார்,இவர் சொன்ன வார்த்தைகளே இவருக்கு எதிராக திரும்பப்போவதை அறியாமல்.ஆருஷி வீட்டிற்கு வந்து உடை மாற்றி படிக்க அமர்ந்தாள், இரண்டு மணி நேரம் சென்றும், தாய் தந்தை வராமல் போக, அவர்களுக்கு போன் செய்தாள்.

“ஆருமா.. இன்னிக்கு நாகர்கோவில்ல ஜோதிர்மயி மேடம் ஷூட்டிங். நான் தான் அவங்களுக்கு டயடிசியன், திடீர்னு செட்டியூல் ஆயிடுச்சு. மாலா கிட்ட சொல்லிருக்கேன். அவ பார்த்துக்குவா.. எனக்கு பேச நேரமில்ல. அப்பறம் கால் பண்ணறேன்.”ஆருஷியின் பதிலை எதிர்பார்க்காது வைத்து விட்டாள் வேணி.கடுப்பான ஆருஷி தந்தைக்கு அழைக்க, போன் சுவிட்ச் ஆஃப் என்று வர, எரிச்சலானாள்.

மணி ஏழை நெருங்க, கீழே உணவுக்கு சென்றாள். மாலா அனைத்தையும் டேபிளில் வைத்து விட்டு,”என் பொண்ணு வீட்ல தனியா இருக்கும் பாப்பா. நான் கிளம்புறேன். நீங்க பசிக்கும் போது சாப்பிடுங்க. மதியம் மீந்த சாதத்தை வீட்டுக்கு எடுத்துட்டு போறேன். “,என்று கிளம்ப, ஆருஷி கண் கலங்கி நின்றாள்.வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு மகள் மேல் இருக்கும் அக்கறை தன் பெற்றோருக்கு இல்லயே என்று கடுப்பானவள்,

கலங்கிய விழிகளோடு ரிதுவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்.”என்ன டி இப்போ சொல்ற. எதுக்கு ஆரூ இவ்வளவு நேரம் தனியா இருந்த? இரு வர்றேன்.”, என்று தந்தையை அழைத்துக்கொண்டு வந்தாள்.நாராயணன் தொடர்ந்து கேசவனை அழைத்துக்கொண்டே இருந்தார். பயனில்லாமல் போகவும், ஆருஷியை தங்களோடு கிளம்ப சொல்லி, வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினர்.

***

அபி மனம் அந்த வேலை கிடைக்க வேண்டுமே என்று துடித்தது, யோசித்தபடி வீட்டுக்கு வர, வாசலில் கிடந்த செருப்பை வைத்தே பெரிய அக்கா வந்திருக்கிறாள் என்று உணர்ந்து உள்ளே சென்றான்.உள்ளே அவள் அம்மாவோடு காரசாரமான விவாதத்தில் இருந்தாள்.”அதெல்லாம் தெரியாது, எனக்கும் வேணும். அவ்ளோ தான்.”

“பார்த்து பேசுடி. நீ மட்டும் எனக்கு பிள்ளை இல்ல. உனக்கடுத்து உன் தங்கச்சி கல்யாணத்துக்கு தயாரா இருக்கா, அம்மா கல்யாண செலவுக்கு என்ன செய்வேன்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”

“மா. அன்னைக்கு அவங்க கிட்ட என்னம்மா சொன்னிங்க? பெரிய பொண்ணுக்கு செஞ்சதை சின்னவளுக்கும் செய்யிறேன்னு தானே. இப்போ அவளுக்கு மட்டும் வண்டி வாங்கி தந்தா என்ன நியாயம்?”சங்கரி அவளை கசந்த பார்வை பார்த்துவிட்டு, “உனக்கும் தான் மறுவீடு வந்தப்போ வண்டி கொடுத்தேன்.””அதொன்னும் புதுசு இல்லயே. தம்பியோடது தானே.””ஆமாம். ஆனா அன்னைக்கு நின்ன நிலையில் வேணும்னு வாங்கிட்டு போனது நீ தானே”

“அம்மா.. சும்மா சொல்லிக்காட்டதே, எனக்கு தானே செஞ்ச”, என்று சப்பை கட்டு கட்ட பார்த்த ரேகாவை கண்டவர்”என் கிட்ட பணம் இல்ல ரேகா. “

“எனக்கும் புது வண்டி வேணும்.”, என்று ரேகா நிற்க, உள்ளே வந்த அபி,”அம்மா நான் மாமா கிட்ட பேசி பாக்கறேன் மா. கல்யாண செலவு பாதியை அவர் ஏத்துக்குவார்.”, என்று ரேகாவின் கணவன் விக்னேஷை பேச்சுக்கள் இழுக்க,கணவன் குணம் தெரிந்த ரேகா,”அம்மா எனக்கு பார்லர் போகணும். நாளைக்கு வரேன்.”, என்று கிளம்பினாள்.

ரேகாவின் கணவன் விக்னேஷ் வித்தியாசமானவன். மனைவி ஆசையை புறம் தள்ள மாட்டான். அதே நேரம் யாரையும் தொல்லை செய்யவும் மாட்டான். ரேகா தான் அது வேண்டும்,இது வேண்டும் என்று அம்மாவிடம் வந்து நிற்பாள். அவனுக்கு தெரிந்தால் அதை அவனே வாங்கி தந்து விடுவான். இதை புரிந்த அபி, ரேகாவை அழகாக விக்னேஷின் பெயரை சொல்லி அப்புறப்படுத்தினான்.சங்கரி நமுட்டு சிரிப்புடன், “உங்க மாமா கிட்ட நீ கேட்க போறியாக்கும்..” என்று அபியை கிண்டல் செய்ய,”நாம ஏன்மா அவரை கேட்க போறோம். அவர் பொண்டாட்டி இங்க அள்ளிட்டு போகாம இருந்தா சரி”, என்று சிரித்தவன்,”அம்மா உன்னோட பேசணும். எப்போ பேசலாம்?”

“நீ படி தம்பி. நான் வேலை முடிஞ்சதும், ப்ளவுஸ் ஊக்கு வைக்க வரேன், அப்படியே பேசுவோம்.””சரிம்மா.”, என்று படிக்க போனான் அபினவ்.**ஆருஷியுடன் உள்ளே நுழைந்த ரிதுவை கேள்வியாக பார்த்த சசி, “என்ன ஆரூ ஏன் முகம் வாட்டமா இருக்கு”, என்று அவளை அணைத்து கேட்க,அவர் தோளில் சாய்ந்து ஆருஷி கண்ணீரோடு, “நீங்க என்னையும் உங்க மகளா பெத்துருக்கலாம் ஆன்ட்டி. எனக்கு எங்க வீடு பிடிக்கவே இல்ல. அம்மா அப்பாவை சுத்தம்.”, என்றாள் அழுகையோடு.

“அட அழுமூஞ்சி அங்கம்மா..”, என்று அவள் முன்னால் குதித்தான் ரிஷி..”டேய் என்னை அப்படி சொல்லாதே டா “,என்று அவனை ஆருஷி கண்ணீரை துடைத்தபடி அதட்ட,”நீ பெரிய புன்னகை அரசியா.. போம்மா புழுங்கல் அரிசி”, என்று அவளுக்கு அவன் மேலும் பழிப்பு காட்ட, கடுப்பானவள்,”அடேய் குட்டை பயலே, உனக்கு எவ்வளவு திமிரு.. “,என்று அவனை துரத்த, அதை சிரித்தபடி பார்த்தாள் ரிது.”சில நேரம் ரொம்ப சின்னப் பிள்ளையா இருக்கா அப்பா. சில நேரம் பெரிய மனுஷி போல நடக்கறா.”, என்று அவளை தந்தையிடம் சிலாகிக்க,

“எப்படியோ அழுத அவளை நம்ம வீட்டு அறுந்த வாலு சிரிக்க வச்சிட்டான்.”, என்று மகனை பெருமையாக சொல்ல,”ஐயோ நைனா இந்த ரத்தக்காட்டேரி கிட்ட இருந்து என்னை காப்பாத்து. கடிக்கிறா.. “,என்று தந்தை பின்னால் ஒளிய,”என்னை எப்படி டா நீ அப்படி சொல்லுவ?”, என்று தான் உடன்பிறவா சகோதரனை தலை முடியை பிடித்து ஆட்டினாள் ஆரூ.

சசி, இரவு உணவை தயார் செய்ததும், வீட்டின் மாடியில் அனைவரையும் வட்டமாக அமர்த்தி தங்களின் சந்தோஷமான தருணங்களை குழந்தைகளுக்கு சொல்லியபடி உணவை உருட்டி கையில் கொடுக்க,சிரிக்க சிரிக்க அனைவரும் சாப்பிட்டு முடிக்கவே நெடு நேரம் ஆனது. ஆருஷியின் மடியில் ரிஷி தூங்கி விட, அவன் தலை முடியை கொதிவிட்டு,”இவன் எனக்கு தம்பியா பிறந்திருக்கலாம், நான் இந்த வீட்டில் பிறந்திருக்கலாம்.

இப்படி நிறைய ..லாம் இருக்கு ஆன்ட்டி “,என்று சசியின் தோளில் ஆரூ சாய,”உனக்காக தான் கண்ணா அவங்க அப்டி ஓடி ஓடி உழைக்கிறாங்க. ஆனா அதை உன்கிட்ட அவங்களுக்கு வெளிப்படுத்தத் தெரியல. இதுக்கெல்லாம் நீ இப்படி பேச கூடாது. கொஞ்ச நாளில் அவங்களே புரிஞ்சுப்பாங்க.””நீங்க என் அம்மாப்பாட்ட சொல்ல வேண்டியதை என்கிட்ட சொல்றிங்கனு நினைக்கிறேன் ஆன்ட்டி”, என்று கண்ணை உருட்டினாள் ஆருஷி.

“வாலு.. “,என்று அவளை அணைத்த சசி இன்னொரு தோளில் சேர்ந்த ரிதுவையும் அணைத்துக்கொண்டாள்.அன்றைய இரவு ஆருவுக்கு நிம்மதியான பாதுகாப்பான இரவாக இருந்தது.

தொடரும்.

4 thoughts on “அகலாதே ஆருயிரே 4”

  1. CRVS 3797

    பாவம் ஆருஷி ! அன்புக்காக ஏங்குறா… பட் அது வேறொரு இடத்துல இருந்து தான் கிடைக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *