27
வீரமாகாளி கோயில் அந்த சிறு கிராமத்தின் மையத்தில் இருந்தது. சிறிய ஆனால் பழமையான கோயில். சோழ ராசாவால் கட்டப்பட்டது. அன்று அம்மனுக்கு பச்சையில் புடவை கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். விசேஷ நாள் இல்லாததால் கோயிலினுள் பூசாரியை தவிர ஒன்றிரண்டு வயதானவர்கள் கொடிமரத்தின் அடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
அந்த காலை வேளையில் உள்ளே நுழைந்த நிவியும் ரம்யாவும் நேரே அம்மன் சன்னதிக்கு சென்று கையோடு கொண்டு வந்திருந்த எண்ணை கிண்ணத்திலிருந்த எண்ணையையும் தொடுத்திருந்த ஜவந்தி பூவையும் கருவறை விளக்கில் வார்க்க பூசாரியிடம் கொடுத்து விட்டு கண்களை மூடி பிரார்த்தித்து அவர் காட்டிய தீபாராதனையை கண்களில் ஒற்றி கொண்டு விட்டு இடது புறமாக பிரகாரம் சுற்றி வந்தார்கள். கருவறையின் பின்புறத்தில் ஈசானிய மூலையில் இருந்த நாகலிங்க மரத்தில் இருந்து கீழே உதிர்ந்திருந்த பூக்களை எடுத்து அங்கே இருந்த சிவனுக்கு பாதத்தில் சாற்றி விட்டு வெளியே வந்தார்கள்.
கோயில் முகப்பு, அருகில் அடர்ந்து படர்ந்திருந்த வேப்பமரத்தின் நிழலால் குளுமையாக இருந்தது.
ஒருவேளை கோயிலின் பின்புறம் ஓடும் காவிரியின் பாசன கால்வாய் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.
“அக்கா, வாக்கா. பின்னாடி ஆறு ஓடுது. போய் வரலாம்.”
“ஆத்தில தண்ணி இருக்கா?”
“ஆமாம். ரெண்டு கரையும் தொட்டுக் கொண்டு ஓடுது”
அந்த ஊருக்கு காவிரியின் அந்த பாசன கால்வாய் தான் ஆறு. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது போல. இருவரும் அந்த கால்வாய்க்கு வந்து படித்துறையில் இறங்கி தண்ணீரில் கால்களை நனைத்து கொண்டு அமர்ந்தார்கள். குளித்து கொண்டிருந்த ஒன்றெண்டு பெண்கள் குளித்து முடித்து கிளம்பி போனார்கள். போகும் போது ரம்யாவை குசலம் விசாரித்து சென்றார்கள். பார்வை மட்டும் நிவியிடமே இருந்தது. அவள் யாராக இருக்கும் என்பது அவர்கள் கேள்வி. அது அவர்களின் கண்களில் தொக்கி நின்றது.
ரம்யாவின் கல்லூரியில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று வந்தது அவர்கள் பேச்சு. வழக்கம் போலவே ரம்யா வர்மா சார் புராணம் தான் பாடி கொண்டு இருந்தாள். அப்போது அவள் பாட்டுக்குரிய நாயகனே, அவனை போல பத்து பதினைந்து இளைஞர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தான். அவர்களை பார்த்தால் இவனை போன்றே மெத்த படித்தவர்கள் போன்று தோற்றம் இருந்தது. ஆற்றை கடக்க அவ்விடத்தில் ஆற்றின் குறுக்கே போடபட்டிருந்த பாலத்தினை கடந்து அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
முழங்கால் வரை சுருட்டி விடப்பட்டிருந்த பாட்டியாலா பான்ட் வழவென்று இருந்த கால்களை வஞ்சம் இல்லாமல் முழுமையாக வெளிபடுத்தி இருக்க குனிந்து கைகளால் நீரை துலாவி கொண்டிருந்த நிவியை ஓரக்கண்ணாலும் நேருக்கு நேராகவும் பார்த்தவாறு பாலத்தை கடந்து சென்றார்கள் அந்த வாலிபர்கள்
இவர்களை கண்டதும் அருள் மட்டும் இவர்கள் அமர்ந்திருந்த படித்துறையில் நீருக்குள் இறங்கி முகம் கைகாலை கழுவிய வண்ணம் ரம்யாவிடம் பேச்சு கொடுத்தான். அவளும் அவனை அங்கே அப்போது கண்டதும் உற்சாகமாகி போனாள்.
“சார், குட்மார்னிங் சார்”
“இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் இருவரும்?”
“கோயிலுக்கு வந்தோம். அப்படியே நம் ஊர் ஆற்றை பார்க்கலாம் என்று வந்தோம் சார்”
“சரி, சரி. இது கிராமம். உங்க நாகரீகங்களை எல்லாம் இங்கே காட்ட கூடாது என்று உனக்கு அறிவு இருக்கா இல்லையா?”
“சார்.!”
நிவிக்குமே ஆச்சரியமாக இருந்தது. இவனுக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது? மேலும் தனக்கு எதிரில் நின்று பேச தயங்கும் அருளா இந்த சின்ன பெண்ணை இப்படி விரட்டுகிறான் என்று நினைத்து வியப்பு ஏற்பட்டது. சரியான ஆள் தான். ஆறு மாத காலமும் நம்மிடம் அடக்கி தான் வாசித்திருக்கிறான். அத்தனையும் நடிப்பு. இவன் உண்மையில் முரடன் தான்.
“சார்…அது சார்….இல்லை சார்”
“தனியா இங்கே உக்கார்ந்து என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”
“நம்ம ஊர் தானே சார். என்ன பயம் சார்?”
“பெண்பிள்ளை என்று கொஞ்சமாவது அடக்க ஒடுக்கம் இருக்கணும்”
இவன் என்ன சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் கோபப்படுகிறான் என்று ரம்யாவிற்கு புரியவில்லை. ஆனால் நிவிக்கு புரிந்தது. தான் ஆற்றுக்குள் குனிந்து கால்களை நனைத்து கொண்டு உட்கார்ந்து இருந்ததை அந்த பையன்கள் பார்த்து கொண்டே சென்றதை தான் இவன் சொல்கிறான் என்று. ஆனால் புரியாதது என்னவென்றால் இவனுக்கு அதற்கு ஏன் கோபம் வருகிறது என்பது தான். இவனுக்கும் நமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதை மறந்து இந்த பொறாமை கொள்கிறானே. தான் என்னவோ அவனுக்கு உடைமை பட்டவள் போன்று நினைப்பு. பழைய நினைப்பு தான் பேராண்டி.
“சாரி சார்..”
“ம்..”
“அது சரி சார். நீங்கள் எங்கே போய் விட்டு வருகிறீர்கள்?”
“பக்கத்து ஊருக்கு?”அவனுடைய கோபம் தணிந்து போய் சகஜமான குரலில் பேச தொடங்கினான்.
“அந்த பையன்கள் யார் சார்?”
“ஏய், எதுக்கு கேட்பே?”
“கொஞ்ச பேரை நம்ம ஊர்ல பார்த்தது இல்லை. அதனால் தான் கேட்டேன்”
“அதில் கொஞ்ச பையன்கள் நம் ஊர்காரங்கள். கொஞ்சம் பேர் பக்கத்து கிராமம். எல்லோருமே படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க கூடிய வேலையை விட்டு விட்டு இங்கே விவசாயம் செய்ய வந்து விட்டார்கள்”
“எல்லோருமா எங்கே போயிட்டு வரீங்க?”
“கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டார்கள் இல்லையா, அதை எப்படி இரண்டு ஊருக்கும் சரிசமமாக பிரித்து கொள்வது என்று ஆலோசிக்க வந்தோம். எப்பவும் போல பெரியவர்கள் எங்கள் அனுபவம் பெரியதா உங்கள் படிப்பு பெரியதா என்று விவாதம் தான். இளைஞர்கள் எங்களின் ஒற்றுமையை கண்டு விட்டு கொடுத்தார்கள். மீட்டிங் முடிந்து எல்லோரும் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.”
அவன் பார்வை நிவியிடம் இருந்தது. அவளுக்குமே இந்த ஊரை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. அவன் விளக்கமாக சொல்லி கொண்டு வந்தான். அவனுடைய புத்தக படிப்பு மட்டுமல்ல அனுபவ அறிவு அவனுடைய ஆளுமை! அவளுக்கு வியப்பேற்பட்டது.
“இஸ்ரேலில் நடக்கும் கருத்தரங்கில் என்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை சமர்பிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் நான் இஸ்ரேல் செல்கிறேன்”
கூடுதல் தகவலாக அவன் சொன்ன போது இவனை நாம் ஒருகாலத்தில் தண்டசோறு போடணுமா என்று கேட்டது அவளுக்கு அப்போது அநியாயத்திற்கு நினைவு வந்தது.
Interesting
💜💜💜💜💜
Very interesting