Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-22

அந்த வானம் எந்தன் வசம்-22

22

“வாம்மா நிவி.”

“எப்படி இருக்கீங்க அப்பா”

“எல்லோரும் நலம் அம்மா”

“என்னப்பா திடீர்னு உங்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டீங்க?”

“உன் சித்தாப்பா பொண்ணு திவ்யாவிற்கு கல்யாணம் அம்மா”

“நீங்க எப்போது உங்க தம்பியுடன் சேர்ந்தீர்கள்?”

“சேருவதற்கு என்னம்மா, என்ன இருந்தாலும் கூட பிறந்தவன் இல்லையா? ஒரே ரத்தம். சொந்தம் எப்படி விட்டு போகும்?”

“அவருக்கும் உங்களுக்கும் சண்டை என்று சொல்வீர்களே?” 

“எல்லோர் வீட்டிலும் உண்டானது தானே. அதுமட்டுமல்லாமல் நீர் அடித்து நீர் விலகுமா?”

“எல்லாவற்றுக்கும் கைவசம் எப்போதும் ஒரு பழமொழி வெச்சிரிக்கீங்க”

“அது அப்படி தான்”

“எப்படி சேர்ந்தீங்க?”

“அவனையும் என்னையும் எப்பவுமே உங்க அத்தை தானே பிரித்து வைத்திருந்தாள். இப்போ அவள் மகனுக்கு நம் சாருவை கொடுத்ததில் ரொம்பவே மாறி போய் இருக்கிறாள். அவள் மாறினது மட்டுமல்லாமல் தம்பியையும் சரி செய்திருக்கிறாள்.”

“உங்களுக்கு எப்போதுமே உங்கள் தங்கையிடம் அத்தனை பிடித்தம் கிடையாதே?”

“கிடையாது தான். ஆனால் அவள் புருஷனால் தான் அவள் அப்படி இருந்தாள். சின்ன வயதில் என் பின்னாடியே சுற்றி கொண்டு இருந்தவள் தானே. எல்லாம் விதி. வேறு என்ன சொல்ல? இப்போது அவள் புருஷன் இறந்து போகவும் பழைய மாதிரி எங்களிடம் மிகவும் அன்பாகவே இருக்கிறாள். மேலும் சாரு அவளை நல்லா கவனிப்பதில் இன்னா செய்தாரை ஒருத்தல் அவள் நாண நன்னயம் செய்த மாதிரி ஆகி விட்டது. சரி எல்லாம் நல்லா ஆகி விட்டது. பாவம் அவளுக்கும் நம்மை விட்டால் வேறு யார் இருக்கா?”

“சித்தப்பாவிற்கு இரண்டு பெண்கள் இல்லையா?”

“ஆமாம். கல்யாண பொண்ணு திவ்யா, சின்னது ரம்யா”

“எதற்கு பதினைந்து நாட்கள் முன்பே வர சொன்னிர்கள்?”

“நம் வீட்டு திருமணங்களில் குல தெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைப்பது மேலும் வீட்டு சடங்குகள் என்று எதுவுமே செய்ததில்லை. அதனால் தானோ என்னவோ என் குழந்தைகள் எல்லோரும் கஷ்டபட்டீர்கள். அதிலும் நீ,,,, சரி, அதை விடு. இனி இந்த ரெண்டு கல்யாணத்தையாவது சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து முறைப்படி செய்யணும் என்று தீர்மானித்து எல்லோருமே பதினைந்து நாட்களுக்கு முன்பே வந்து விட்டோம்.”

மேலும் அவள் தலையை  மிகுந்த வாஞ்சையுடன் தடவி சொன்னார். “நீ சரியாகவே வீட்டில் 

இருப்பது இல்லை. இந்த மூன்று வருடத்தில் கிட்டத்தட்ட அஞ்ஞான வாசம் செய்திருக்கிறாய். உன்னை நினைத்து உன் அம்மா மிகவும் வேதனை படுகிறாள்.”

“நான் நல்லா தான் இருக்கிறேன். பதவி பணம் வசதி எதிலும் எந்த குறைச்சலும் இல்லை. என்னை பற்றி ஏன் கவலைபடனும்?”

“உன்னை இப்படியே விட்டு விட முடியுமா?”

“அதற்கு?”

“ஏதாவது நல்ல பையனை பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டாமா?”

“ஏன்பா, அம்மா மீண்டும் ஏதாவது சதி திட்டமிட்டிருக்கிறார்களா?” 

அவளுடைய கேலிக்கு சிரித்தார். “இல்லைம்மா. எங்களுடைய ஆற்றாமையை சொன்னேன்”

“போதும் அப்பா. ஒரு தடவை பட்டதே போதும்”

“எங்களை குற்ற உணர்வில் காலாகாலத்துக்கும் வைப்பதாக எண்ணமா?”

“நீங்கள் என்ன செய்தீர்கள்?”

“நாங்கள் பார்த்து செய்தது சரிபடலை. இனி நீயாக எது பார்த்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்”

“நீங்கள் முன்பு மட்டும் காதலை எதிர்க்கவா செய்தீர்கள்?. எனக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லைப்பா”

“ஏனம்மா இந்த காலத்து பெண்கள் போல பேசமாட்டேங்கரே?”

“அது என்னவோ எனக்கு தெரியவில்லை”

“ஒருவேளை நீ காதலிக்கும்படியான  ஆளை நீ இன்னும் சந்திக்கவில்லை போலும்”

“இருக்கலாம்.”

மனதிற்குள் அருள் வந்து போனான். அவனை பார்க்கும் போது மட்டுமல்ல பொதுவாகவே எந்த ஆணை பார்க்கும் போதும் தனக்குள் எத்தகைய கிளர்ச்சியும் ஏற்பட்டதில்லை.

ஆனால் ஒருவிஷயத்தில் அருளை பாராட்டனும். தன்  வாழ்வில் இருந்து வெளியேறியவன் அதற்கு பிறகு அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்தான் இல்லை. விவாகரத்துக்கு முயன்ற போதும் அவன்   நீதிமன்றத்திற்கே வராததால் எக்ஸ் பார்ட்டியாக கொண்டு மிகவும் சுலபமாகவே அவள் விடுதலை பெற்றாள்.

அவர்கள் வந்த வண்டி திருச்சி கரூர் சாலையில் குளித்தலை பக்கம் இடதுபுறம் திரும்பி  ஊரின் உள்ளே சென்றது. அவள் பிறந்து வளர்ந்த சேலம் எப்போதுமே ஒருவித வெப்பமாக இருக்கும். நேர்மாறாக இந்த பகுதி குளுமையாக இருந்தது. சாலையின் வலது புறம் காவிரி ஆறு ஓடி கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம். அறுவடைக்கு காத்திருக்கும் முதிர்ந்த நெல்மணம் மூக்கின் வழியாக நெஞ்சை நிறைத்தது.தில்லியின் பரபரப்பு இன்றி அமைதியாக இருந்தது அந்த பிரதேசம். 

முக்கூட்டு  சாலையில் இடது புறம் திரும்பி சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது புதுக்குடி கிராமம். அந்த பகுதியே அமைதியாக இருந்ததென்றால் உள்ளாக இருக்கும் அந்த கிராமம் அதைவிட அமைதியாகவே இருந்தது.  கிராமத்தின் மண் சாலையில் இடது புறம் ஒரு தனியார் கலைக் கல்லூரி இருந்தது. மிகப்பெரிய வளாகம். மரங்கள் சூழ்ந்து இருந்தது. பொதுவாக இது போல பெரிய கட்டிடங்களில் முகப்பில் குரோட்டன்ஸ் செடிகள் தானே வளர்க்கபட்டிருக்கும். ஆனால் இங்கு வித்யாசமாக மரங்கள் இருபுறமும் குடைபோல பறந்து விரிந்திருந்தது. பொதுவாக தில்லி சாலைகளில் குல்மோகர் மரங்கள் செக்கச்செவேல் என்று பூக்களை பரப்பி நிற்கும். அதை பார்த்து ஏன் நம் ஊர்களில் இது போல் சாலைகளில் மரங்களை வளர்ப்பதில்லை என்று நினைப்பாள். வழக்கத்திற்கு மாறாக இங்கே இவ்வளவு மரங்களை காணவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதை தாண்டி ஒரு வண்டி போகுமளவு மண் சாலை ஓடியது. ஒரு ஓட்டு வீட்டின் முன் வந்து நின்ற போது உள்ளே இருந்து அவள் மக்கள் மனுஷர்கள் அத்துணை பெரும் வெளியே வந்து அவளை வரவேற்றது அவளுக்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. ஏனோ இத்தனை வருடங்கள் இதை எல்லாம் இழந்து எங்கோ தொலை தூரத்தில் மனமும் உடலும் வறண்டு போய் இருந்ததை நினைத்து கண்கள் கசிந்தது.

பிறகு நேரம் ரெக்கை கட்டி பறந்தது. கல்யாண பையனின் போட்டோ காண்பித்தார்கள். பரவாயில்லாமல் இருந்தான். அவனுக்காக இவள் மிகுந்த ஆசையுடன் தான் காத்து கொண்டிருக்கிறாள், கண்களில் மையலுடனும் மயக்கத்துடனும். இது தான் இயற்கை. தான் தான் இயற்கைக்கு புறம்பாக இருந்து விட்டோம். இன்னும் இருக்கிறோம்.

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *