34
“நான் மூன்று வருடங்களுக்கு முன்பு முற்றிலுமாக தோற்று போனவனாக இந்த ஊருக்கு வந்தேன். அப்போதைய என் மன நிலையில் ஒரு இடமாற்றத்தை மட்டும் தான் நான் எதிர்பார்த்தது. ஆனால் இங்கு வந்த போது எங்கள் முன்னோர்களின் பண்ணையம் இப்படி வீணில் அழிந்து கொண்டு இருப்பதை காண முடிந்தது. பொன்னியம்மாவின் தம்பியும் அவர் மகனும் இதில் கிடைத்த வருவாயில் நன்கு உண்டு குடித்து ஆண்டு அனுபவித்தார்களே அன்றி இதில் பாடு பட வேண்டும் என்று நினைத்தவர்கள் இல்லை. எனக்கு எங்கள் வீட்டில் விவசாயமும் அது சார்ந்த வேலைகளும் செய்து பழக்கம் உண்டு. எனக்கு அது விருப்பமும் கூட.”
மேற் கொண்டு பேச்சை தொடரும் முன்பு ஒரு நிமிடம் அவளை பார்த்தான். அவளுக்கு அது ஏன் என்று புரியவில்லை. அவனாகவே மேற் கொண்டு தொடர்ந்து சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.
“அப்போது தான் ஒரு விவசாய சங்க கூட்டத்தில் இவர்களை சந்தித்தேன். என் தந்தையின் நண்பர் வரதராஜன். என் தந்தையின் சொத்து இப்படி வீணாக போய் கொண்டிருக்கிறதே என்று மிகுந்த மன வருத்தத்தில் இருந்தவர் நான் இந்த ஊரோடு வந்து விட்டதை அறிந்து சற்றே ஆறுதல் அடைந்தவர் நான் விவசாயமும் செய்ய போகிறேன் என்றதும் உடனே என்னை அவர் சொந்த மகனை போன்று நேசமுடன் ஏற்று கொண்டார்.
என் தந்தையிடம் தொடர்பு கொண்டு பேசினார். பழைய நண்பர்கள் மீண்டும் தங்கள் நட்பை தொடர்ந்தார்கள். ஆனால் அவருக்காக கூட என் தந்தை இங்கே வர தயாரில்லை. வரதராஜனிடம் என்னை கண்காணித்து கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தார் என் தந்தை. என்னையும் என் சொத்தையும் பராமரிப்பதாக சொல்லி வரதராஜன் உறுதி கொடுத்தார்”.
ஆனால்..”
அன்றைய நினைவில் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் சிரிப்பதை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் அவள். இவனுக்கு இப்படி கூட சிரிக்க முடியுமா? தலையை அண்ணாந்து அழகான வரிசை கொண்ட பற்களை காட்டி சரளமாக, கூட இருப்பவரையும் அவன் சிரிப்பில் பங்கு கொள்ள அழைக்கும் வண்ணம் என்ன அழகாக சிரிக்கிறான்.
அவனுடைய சிரிப்பு அவளையும் தொற்றி கொள்ளவும் அவளும் சிரித்து கொண்டே கேட்டாள். “இப்போது எதற்காக இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள்?”
“அதுவா..? உனக்கே தெரியுமே அந்த காலகட்டத்தில் நான் எப்படி இருப்பேன் என்று. நீ கூட சொல்வாயே தொம்மை என்று.”
அவளுக்கு தான் அவனை ஒருகாலத்தில் அப்படி சொன்னது அவனை வருத்தியிருக்க கூடும் என்று ஒரு உறுத்தல் இருந்தது போக இவனானால் அதை ஒரு பெருமைக்குரிய விஷயமாக அடைமொழி கொடுத்து கொள்கிறானே என்று இருந்தது.
“குண்டாக கண்ணாடி போட்டு கொண்டு தொந்தியும் தொப்பையுமாக..! என்னை கண்ட செல்விக்கு முதலில் என்னை பிடிக்கவே இல்லை. நீ வேறு சொல்லி இருந்தாயா என்னை கண்டால் எந்த பெண்ணிற்கும் பிடிக்காது என்று. இவளும் என்னை கண்டு ஒதுங்கி போகவும் எனக்குள் ஒரு வெறியே ஏற்பட்டு போயிற்று.”
“சரி. இப்போ அதுக்கு என்ன?”
“இல்லை. ஒண்ணுமில்லை. சொல்றேன்” என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.
“அட, பார்ரா, சொல்லிட்டு சிரிங்க”
“சாரி சாரி” என்றவன் தொடர்ந்தான். “ஒரே மூச்சாக உழைத்தேன். வயலும் சரி ஆயிற்று. நானும் சரியானேன். என் அனுபவமும் படிப்பும் இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியை கொடுத்தது. என் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை செல்வியின் கண்களில் கண்டேன். அதை காண காண எனக்குள் தன்னம்பிக்கை உண்டாயிற்று. அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது.”
“அப்பா..! ஒரே ஒரு சின்ன கேள்விக்கு எவ்வளவு பெரிய வியாக்கியானம் கொடுக்கிறீர்கள்.”
“உண்மையை தான் சொன்னேன்.”
அதை சொல்லும் போதே அவன் பழைய நாட்களின் நினைவில் குரல் கம்ம சொன்னான். அவன் உணர்ச்சிபிழம்பாக இருப்பதை புரிந்தவள் இவனுக்கு தான் அவளிடம் எத்தகைய உணர்வுகள் இருக்கிறது என்று நினைத்து கொண்டாள். ரொம்பவே தீவிரமாக அவன் பேசவும் பேச்சை இலகுவாக்க எண்ணி கேட்டாள்.
“உங்கள் அறையில் அத்தனை புத்தகங்கள் இருக்கிறதே.!”
“ஆம். என் தாத்தா, அப்பா வாங்கி சேர்த்தது. நானும் கொஞ்சம் வாங்கி சேர்த்து வைத்திருக்கிறேன்”
“ஓ, வாங்கி…சேர்த்து வைத்து இருக்கிறீர்கள். படிப்பது இல்லை போலும்”
“படித்ததை தான் சேர்த்து வைத்திருக்கிறேன்”
“இத்தனை வேலைகளுக்கு இடையில் உங்களால் எப்போது படிக்க முடிகிறது?”
“இரவில்”
“இரவில் தூங்குவது இல்லையா?”
“பொதுவாகவே என் தூக்கம் குறைந்து போய் விட்டது. ஒருமுறை தூங்கி வலிய என் கைகளில் கிடைத்த சொர்கத்தை நழுவ விட்டு விட்டேன். இனி என் வாழ்நாளில் அப்படி தூங்குவது இல்லை என்று முடிவில் இருக்கிறேன்”
“இப்போது தான் நீங்கள் விரும்பிய உயரத்திற்கு வந்து விட்டீர்கள். உங்கள் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு எல்லாம் நீங்கள் தான் ஹீரோ. இன்னும் என்ன? இனிமேலாவது நன்றாக தூங்கலாம் அல்லவா?” என்றாள் அவனை பரிவுடன் பார்த்தவாறு.
ஒரு நிமிடம் நின்று திரும்பி அவளை பார்த்திருந்தால் அவள் கண்களில் அவன் மேல் இருக்கும் பரிவும் காதலும் அவனுக்கு தெரிந்திருக்கும்..
ஆனால் அவன் அண்ணாந்து வானத்தை பார்த்தவாறு சொன்னான். “வானம் இன்னும் வசப்படவில்லை.”
அவன் தன்னை தான் சொல்கிறான் என்பது அவளுக்கு மிகவும் நன்றாகவே புரிந்தது. தொலைவானம் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று அவனுக்கு எப்படி புரிய வைப்பது?. தானாக வலிய போய் சொல்வதற்கும் அவளுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை.
அவனாக புரிந்து கொள்ளட்டும். அதுவரை கண்களில் கனவுகளோடும் காதலோடும் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. இதை தான் அன்றே அருள் சொன்னான். தாலி கயிற்றின் மகிமை நம்மை ஒன்று சேர்த்து விடும் என்று. கதைகளில் தான் அவைகள் நிகழும் என்று தான் சொன்னது பொய்த்து போனது. அருள் எவ்வளவு கெஞ்சினான் கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால் ஒருவர் இல்லாமல் ஒருவரால் வாழவே முடியாது என்றாகி விடும் என்று. இன்றைய நிலையில் அவனுக்கு எப்படியோ? தனக்கு அவன் இல்லாத ஒரு வாழ்வை நினைத்து பார்க்க முடியாமல் போக கூடும் என்று நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது அவள் நிலையை நினைத்து.
💜💜💜💜💜
Interesting😍