35
அன்று திவ்யாவின் திருமண வரவேற்பு. நாளை கல்யாணம். திருச்சியின் புறநகர் பகுதியில் இருந்தது அந்த திருமண மண்டபம். மதிய உணவிற்கே அவர்கள் வந்து விட்டார்கள். வரவேற்பு தொடங்கிய நேரத்தில் இருந்து நிவேதிதா வாயிலையே பார்த்தவாறு இருந்தாள். அருளை இன்னும் காணவில்லை. ஒருவேளை அவனுக்கு அழைப்பு இல்லையோ? அப்படி இருக்காது. திவ்யாவின் அம்மாவிற்கு பொன்னியம்மா ஒருவகையில் உறவும் கூட. அதற்காகவேனும் அழைத்திருப்பார்கள். இவனை தான் இன்னும் காணவில்லை.
பாட்டு கச்சேரி காதை பிளந்து கொண்டிருந்தது.
“யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன்,
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்”.
பாட்டு பாடுபவர்கள் உருகி உருகி தான் பாடி கொண்டிருந்தார்கள். ஆனால் இவளுக்கு தான் அதில் நாட்டம் இல்லாமல் இருந்தது. விருந்தினர்கள் மணமக்களுக்கு திருமண பரிசினை கொடுத்திட நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
மிகவும் நெருங்கிய உறவின் முறையினர் மட்டும் நிதானமாக பரிசளித்து கொள்ளலாம் என்று அமைதியாக பாட்டு கச்சேரியை ரசித்து கொண்டும் வந்தவர்களை வேடிக்கை பார்த்து கொண்டும் அமர்ந்திருந்தார்கள். இவளுக்கு தான் எதிலும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது.
அப்போது தான் வாயிலில் அருள் தென்பட்டான். அவனை கண்ட மாத்திரத்தில் ஆயிரம் வாட் பல்ப் போட்டது போல பளிச்சென்று மலர்ந்தாள் நிவி. அவனுக்காகவே பார்த்து பார்த்து செய்திருந்த அலங்காரங்கள் வீணாகி போகுமோ என்று மிகவும் டென்சனாக இருந்தவள் அவனுடன் செல்வியும் உள்ளே வருவதை கண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.
உள்ளே விரைந்து வந்த அருள் எட்டத்தில் வரும் போதே அவளை பார்த்து விட்டிருந்தான். ஆனால் அருகில் வந்து ஒரு வார்த்தை கூட பேச முற்படவில்லை. செல்வியையும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. அவள் புறம் திரும்பி கூட பார்க்காமல் நேரே பெரியவர்களிடம் போய் வணக்கம் வைத்து விட்டு செல்வியை அழைத்து கொண்டு வரிசையில் போய் நின்று கொண்டான். வரிசையும் குறைந்திருந்தது. அதனால் விரைவாகவே பரிசினை அளித்து விட்டு உணவு கூடத்திற்கு போய் விட்டான்.
உள்ளூர நிவிக்கு பொருமலாக தான் இருந்தது. நின்று ஒரு வார்த்தை. ம். ஊஹூம். வேண்டாம். ஒரு பார்வை பார்த்து செல்ல கூட தோன்றவில்லையே என்று. ரம்யா தான் அவர்கள் இருவரையும் வரவேற்று உணவு கூடத்திற்கு அழைத்து கொண்டு சென்றாள். எங்கே ரம்யா அவர்களை தன்னிடம் அழைத்து வந்து விடுவாளோ என்று நிவிக்கு கொஞ்சம் பதைபதைப்பு இருக்க தான் செய்தது. நல்லவேளை அவள் அப்படி ஒன்றும் செய்யவில்லை. நிம்மதி பெருமூச்சு விட்டாள் நிவி. அவளுக்கு செல்வியை பார்க்கும் எண்ணம் இல்லை. அவளோடு அருள் சேர்ந்து வருவதை பார்க்க விருப்பமும் இல்லை.
மறுநாள் காலை முகூர்த்தத்திற்கு அருள் பொன்னியுடன் வந்திருந்தான். இவன் எங்கே வரப் போகிறான் என்று நினைத்து அசிரத்தையாக இருந்த நிவி அருளை பார்த்தாள். மயில்கண் வேட்டி கட்டி பார்டருக்கு ஜதையாக சட்டை போட்டு கழுத்தில் தங்க சங்கிலி கையில் ப்ரேஸ்லெட் போட்டு நெற்றியில் சன்னமாக விபூதி வைத்து உயரமாக தெளிவாக அழகாக ஸ்மார்டாக ஸ்டைலாக அவன் வந்து அவளருகில் நின்ற போது அவளுக்கு அப்படியே அவன் நெஞ்சிற்குள் புதைந்து கொள்ள மாட்டோமா என்று உணர்வேற்பட்டது. கண்ணிமைத்தால் கணநேரம் அவனை காணும் வாய்ப்பு குறைந்து விடும் என்று கண்ணிமைக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் நிவியின் அம்மா அப்பா மற்றும் அனைவரிடமும் நன்றாக பேசி கொண்டிருந்தான். கடந்த மூன்று வருட காலங்கள் இடையில் இல்லவே இல்லாதது போல அவர்களால் அவனுடன் சகஜமாக பேசி கொள்ள முடிந்தது. மேலும் பேசி சிரிக்கவும் முடிந்தது அவளை தவிர. அவர்களும் நிவியிடம் அருளை பற்றி எத்தகைய பிரஸ்தாபமும் செய்தார்களில்லை.
அக்கா மணிமாலாவின் கணவன் சந்திரனை போன்று சிடுசிடுவென்று எந்நேரமும் ஏதேனும் குறை கண்டு பிடித்து வம்பு சண்டைக்கு இழுக்காமல் சாருவின் கணவன் சொந்த அத்தையின் மகன் இந்நாள் வரை இவர்களோடு வளராதவன் இவர்களை பற்றி அறியாதவன் இப்போதும் எட்டி நின்றே பழகுபவன். இவர்கள் இருவரையும் போலன்றி அருள் நிவியின் வீட்டாருடன் சகஜமாக சந்தோஷமாக அவர்களை தன் மனிதர்கள் என்ற உணர்வை கொடுக்க கூடிய வகையில் இணைந்து பேசி சிரித்து கொண்டிரிந்ததை பார்க்கும் போது இத்தகைய அரிய மனிதனை வீணில் இழந்து விட்டோமே என்ற அவளுடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாக இருந்தது.
அவர்கள் அனைவரும் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்த போது இவள் மட்டும் தனித்து அங்கே
கிடந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவர்களுடன் போய் சேர்ந்து கொள்ள அவளுக்கு கூச்சமாக இருந்தது. அதே நேரத்தில் மனதிற்குள் அவன் என் மனிதன். என்னால் தான் அவன் உங்களுக்கு சொந்தம் என்னை தவிர நீங்கள் அனைவரும் அவனோடு உறவாடுகிறீர்கள் என்று செல்லமாக கறுவி கொண்டே இருந்தாள்.
திருமணம் முடிந்து எல்லோரும் சாப்பிட்டு கிளம்பிய போது அருள் பொன்னியை வீட்டுக்கு போக அழைத்தான். ஆனால் அவளோ சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கல்யாணத்திற்கு வந்தோம் சாப்பிட்டோம் போனோம் என்று இல்லாமல் கல்யாண பொண்னும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பும் வரை இருந்து வழியனுப்பி விட்டு போவோம் என்று உட்கார்ந்து விட்டாள்.
திருமணம் முடிந்து எல்லோரும் மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பினார்கள். எல்லோரும் ஜோடி ஜோடியாக கிளம்பிய போது ரம்யா எல்லோருக்கும் முன்பு கிளம்பினாள். அவளை மாப்பிள்ளை வீட்டிற்கு எதற்கும் அழைத்து சென்றது இல்லை. அதனால் பிடிவாதமாக நானும் வருவேன் என்று நின்று விட்டாள். நிவியை யாரும் அழைக்கவும் இல்லை. அவளுக்குமே போகும் விருப்பமும் இல்லை. நிவியின் அம்மாவிற்கு அவளை எப்படி தனியாக விட்டு போவது என்று சின்ன தயக்கம். வீட்டிற்கு பெரியவர்களாக அம்மாவும் அப்பாவும் போய் தான் ஆக வேண்டும். மற்றவர்களுக்கோ போகாமல் இருக்க விருப்பம் இல்லை. என்ன செய்வது?
💜💜💜💜💜💜