38
“நிவி நான் சென்னை வரை வந்து உன்னை வழியனுப்பி வைக்கிறேன்.” அண்ணன் கெஞ்சி கொண்டிருந்தான்.
இங்கு வருவதற்கு முன்பு அப்படி தான் ஏற்பாடாகி இருந்தது. ஆனால் திடீரென்று நிவி தனியே கிளம்பவும் காரணம் புரியாமல் கெஞ்சி கொண்டிருந்தான் கலையரசன். ஆனால் பயணத்தை தீர்மானித்து விட்டவள் பிறகு யோசிக்கவே இல்லை. திருச்சியில் பஸ் ஏற்றி விட்டான் கலையரசன். பஸ் புறப்பட்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த போது அவசர அவசரமாக வந்து ஏறினாள் செல்வி. நிவியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள் தன்னை அவளிடம் செல்வி என்று அறிமுகபடுத்தி கொண்டாள். இவளுக்கு தான் அவள் யார் என்பது தெரியுமே.
“ம். தெரியும். நீங்கள் ரம்யாவின் டீச்சர் என்று”
“ரம்யாவிற்கு டீச்சர் மட்டுமல்ல…..”
“பிறகு.?”
“அருளை திருமணம் செய்ய போகிறவளும் கூட.”
“அதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?”
“நிவேதிதா எனக்கு தெரியும் அருள் உங்கள் முன்னாள் கணவர் என்று”
முன்னாள் என்று குறிப்பிட்டு சொல்வதன் மூலம் நீ இன்னாள் மனைவி இல்லை என்று சொல்கிறாளாமாம். இருக்கட்டும். செல்வி எதிர்பார்த்த ரியாக்சன் நிவியிடம் இல்லாமல் போகவும் அவளே மேல்கொண்டு தொடர்ந்தாள்.
“நிவேதிதா உங்களிடமிருந்து மணவிலக்கு பெற்று இந்த ஊருக்கு வந்த போது அருள் மிகவும் மனம் ஒடிந்த நிலையில் இருந்தார். உங்கள் கையில் கூழாங்கல்லாக இருந்தவரை நானும் என் அப்பாவும் தான் இதோ இன்றைய நிலையில் நீங்கள் பார்க்கிறீர்களே அத்தகைய வைரக் கல்லாக மாறினோம்”
“ஓ, அப்படியா, நான் பார்ப்பது இருக்கட்டும். நீங்கள் சரியாக பாருங்கள். இப்போதும் கூழாங்கல்லாக தான் இருக்க போகிறார்.”
அவள் தன்னை கேலி செய்கிறாள் என்று புரிந்து சற்றே மனதிற்குள் மூண்ட சினத்தை ஒன்றுமே நடக்காதது போன்று முகபாவனையில் மறைத்தாள் செல்வி.
“ஆம் நிவேதிதா, அவரையும் அவருடைய இந்த பெரிய சொத்தையும் நாங்கள் தான் காப்பாற்றினோம்.”
“அப்படியானால் அருளின் முயற்சியும் படிப்பும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லுங்கள்”
அருளின் மீது இருந்த எரிச்சலுக்கு இவள் வந்து மாட்டி கொண்டது போலாயிற்று நிவிக்கு. செல்வி சொல்ல வந்த விஷயமே வேறு. நிவி எக்காரணத்தை கொண்டும் திரும்ப இங்கே வந்து விடக் கூடாது என்பது தான். நிவி வேண்டாம் என்று தூக்கி எறிந்து சென்ற அருள் இன்று தனக்கே தனக்கானவன் என்பதை வலியுறுத்த தான் செல்வி வேலை மெனக்கெட்டு இத்தனை தூரம் நிவியை சந்திக்க வந்திருக்கிறாள். இந்த அரிய சந்தர்பத்தை அறிந்து கொள்ள எவ்வாறெல்லாம் ரம்யாவிடம் தூண்டில் போட்டாள் என்று அவளுக்கு அல்லவோ தெரியும்.
“ஏன் பிரயோஜனம் இல்லாமல்? இங்கு வந்த புதிதில் நீங்கள் எவ்வாறெல்லாம் அவரை அவமானப்படுத்திநீர்கள் என்று சொல்லி சொல்லி வேதனை படுவார். அதை எல்லாம் மறக்கவே அவருக்கு நிறைய நாட்கள் ஆயிற்று.”
“மறந்து விட்டார் தானே. பின்னும் ஏன் அதையே பேசி கொண்டு இருக்கிறீர்கள்?”
“மறந்து விட்டது மட்டுமல்ல இப்போது என்னை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறார்”
“அப்படியா?” குரலில் வலிய வரவழைத்து கொண்ட கேலி இருந்தாலும் இவளுடன் திருமணத்தை நிச்சயித்து கொண்டு அதே நேரத்தில் தன்னுடன் உருகி உருகி அவன் சரசமாடியது ஏன் என்ற கேள்விக்கு அவளே பதிலும் சொன்னாள் நம்மை பழி வாங்கத்தான் என்று. அவனிடம் சொன்னது போல அப்பாடி நல்லவேளையாக நாம் தப்பினோம் என்று இதோ இந்த நிமிடம் கூட நினைத்தாள்.
“எப்போது உங்கள் திருமணம்?”
“வருகிற தை மாதம் ஆறாம் தேதி. அதாவது ஜனவரி மாதம் இருபதாம் தேதி காலை முதல் முகூர்த்தம்”
ஆனாலும் உள்ளுக்குள் அறுத்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள் நிவேதிதா. நூற்றில் ஒரு பங்காக தான் அவனை தப்பாக நினைத்திருந்தால்..! அவனே சொன்னது போல் தன்னிடம் அவன் நடந்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க கூடுமோ?
“இந்த திருமணத்தில் அருளிற்கு சம்மதமா?”
“சம்மதித்து தான் ஆக வேண்டும்”
“ஏன் அப்படி என்ன நிர்பந்தம்”
‘”நிர்பந்தம் தான். அருளின் தந்தை வழியில் நாங்கள் உறவினர்கள். இந்த பக்கத்தில் பண்ணையார் குடும்பங்கள் நாங்கள் இரண்டு குடும்பமும் தான். எனவே பன்னெடுங்காலமாக இந்த இரு குடும்பத்திற்குள் தான் பெண் கொடுப்பதும் எடுப்பதும். ஆனால் அருளின் தாத்தாவும் தந்தையும் மட்டும் தான் இத்தனை நூறாண்டில் வெளியே பெண் எடுத்தது. அதனால் தாத்தாவின் மனைவி பாட்டி சிறு வயதிலேயே இறந்து போனார்கள். அருளின் தகப்பனோ ஊரை விட்டே போய் விட்டார். அருளோ மனைவியை விவாகரத்து செய்யும் படி ஆயிற்று. அதனால் இந்த தடவையாவது அருளுக்கு பழைய காலம் போல எங்கள் வீட்டில் அதாவது என்னை திருமணம் முடிப்பது என்று பெரியவர்களால் ஏற்பாடாயிற்று.”
“என்னவோ சினிமாவில் வருவது போல ஒரு கதை சொல்கிறீகள்.”
“இது தான் உண்மை. சினிமா கதை எல்லாம் இல்லை.”
அவள் சொல்வது உண்மை தான். செல்வியின் தந்தை இந்த மாதிரி சொல்வது வழக்கமான ஒன்று தான். அருளிடம் கூட நேரிடையாகவே சொல்லி இருக்கிறார். இரு வீட்டாருக்கும் இடையில் இத்தகைய உறவு இருப்பது உண்மை தான். ஆனால் ஊருடன் எந்தவிதமான ஓட்டும் உறவும் இல்லாத மாணிக்கம் அதை மறந்து போனதும் நிஜம் தான். அதனால் தான் நிவியை அருளுக்கு மணம் முடித்தது. ஒருவேளை செல்வி சொல்வது போல செல்வியை அருளுக்கு மணம் முடித்து வைத்தால் இனியேனும் அருள் நல்லபடியாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்று அருளின் பெற்றோருக்குமே ஒரு எண்ணம் இருப்பதும் உண்மை தான். அருளை பற்றி அறிந்த செல்விக்கு நிவேதிதாவை பற்றி ஒன்று தெரிய வேண்டியது இருந்தது. எனவே யாசிக்கும் குரலில் நிவியை கேட்டாள்.