10
இப்போதேல்லாம் தினசரி விஜயன் ரோகிணி முத்தம்மா மூவரும் மாலை வேளைகளில்
வேட்டீஸ்வரன் கோயிலுக்கு போவது அன்றாட பழக்கமாயிற்று.காலை வேளைகளில்
ஆசிரியர்கள் வந்து தமிழும் பாட்டும் நடனமும் சொல்லி கொடுக்க தொடங்கி இருந்தார்கள்.
வறண்ட நிலத்தில் விழும் மழை துளியை பூமி ஈர்த்து கொள்வது போல் ரோகிணி வெகு
வேகமாகவும் நேர்த்தியாகவும் கற்று கொள்ள தொடங்கி இருந்தாள்.ஆசிரியர்களே
ஆச்சர்யபடுமளவிற்கு இருந்தது ரோகிணியின் கற்று கொள்ளும் வேகம். விஜயன் சொல்லியது
போல் குதிரை ஏற்றம் கற்று கொள்ள தொடங்கவில்லை.
தினம் ஒரு திசையில் அவர்களை கோவிலுக்கு அழைத்து செல்வான். முத்தம்மா தான் வாய்
ஓயாமல் ஏதேனும் தொண தொண என்று பேசிக்கொண்டே வருவாள். சாலையில் செல்லும் போது
எதிரே தென்படும் மனிதர்கள் ஆகட்டும் பொருளாகட்டும் எதுவாக இருந்தாலும் அதை பற்றி
ரோகிணியிடம் சொல்வதற்கு அவளுக்கு ஏதேனும் கதை இருக்கும்.
அன்றும் அப்படி தான் சாவடியில் உள்ள சுமைதாங்கி கல்லை கண்டதும் கதையை தொடங்கி
விட்டாள் முத்தம்மா. “தாயி, இந்த சுமைதாங்கி கல் இங்கே இருக்கே அது உங்க அப்பாரு வெச்சது
தான். ஒரு தடவை அந்த வருஷம் மழையே இல்லாம வெள்ளாம நின்னுபோச்சு. ஜனங்க
கெடச்சதை வெச்சி சாப்ட்டு காலத்தை ஓட்டிகிட்டு இருந்தாங்க. மன்னர் சுந்தர மகாராஜா
கொடுத்த அரிசி மூட்டையை கொண்டுட்டு வந்த மாடுங்க எப்படியோ இந்த சாவடி வரை வந்து
கீழ விழுந்து செத்து போச்சு…. பார்த்தாரு நம்ம மகராஜா……இதோ இந்த சுமைதாங்கி கல்லு
மாதிரி ராஜபாட்டை முச்சூடும் நட்டு வெச்சாரு.”
சாதாரண சுமைதாங்கி கல்லுக்கும் ஒரு கதை…ரோகிணி அவளுடன் பேசுவதற்கு விஜயன் ஒன்றும்
சொல்வதில்லை. அடித்தட்டு மக்களின் பேச்சு, பழக்க வழக்கங்கள் நாட்டு நடப்பு எல்லாம்
தெரிந்து கொள்ளட்டும். எந்த ஆசிரியரும் சொல்லி தர இயலாத அனுபவம் ஆயிற்றே. .கற்று
கொள்ளட்டும்.
அன்று மேற்கு திசையில் நடக்க தொடங்கி இருந்தார்கள். மேலை படை வீtடை கடந்து
சென்றார்கள். வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்து கொண்டு நின்றிருந்த
ஒரு வீரன் முத்தம்மாவை கண்டதும், “ஏ….. முத்தம்மா ! என்ன பாத்துட்டு பாக்காத மாதிரி
போறே?”என்று அவளைக் கண்ட சந்தோஷ மிகுதியில் கூவினான்.
அவளுக்கோ அவனை கண்டதும் ஒரே மகிழ்ச்சி. ஆனால் விஜயன் அவர்களை பார்ப்பதை
கண்டதும் நின்று பேச பயம். ஒன்றும் பதில் சொல்லாமல் ஒரே ஓட்டமாக நடந்து வந்து
அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
அவனும் பின்னாடியே வந்தான். ஆனால் இப்போது அவன் பார்வை முத்தம்மாவிடம் இல்லை.
ரோகிணியை தான் விழுங்கி விடுவது போல பார்த்தான். முதலில் ரோகிணியை கண்டதும்
ஏற்பட்ட குழப்பம் தீர்ந்து அவன் கண்களில் ஒரு பவ்யம் குடிகொண்டது.
“ராணியம்மா.”உடம்பு முன்னால் குனிந்து ரெண்டாக வளைந்து நின்றது. ரோகிணிக்கு அவனை
சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.
ஆனால் அவனோ அங்கிருந்து நகருவதாக இல்லை. “அம்மா….ராணியம்மா, என்னை
தெரியலையா?”
எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ரொம்பவும் வேண்டியவர் போலவும் இருக்கிறது. ஆனால்
தெரியவில்லை. ரோகிணி முயற்சி செய்தும் ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
அவனுடைய பரிதவிப்பை கண்டு தன்னையறியாமல் அவனுக்கு உதவ விஜயன் முன்வந்தான்.
“உனக்கு இவர்களை தெரியுமா?”
“நல்லா கேட்டீங்க யஜமான். என் மாரிலும் தோளிலும் தூக்கி வளர்த்த இளவரசியை எனக்கு
அடையாளம் தெரியாமல் போகுமா?”
“ராணியம்மா என்று அழைத்தாயே?”
“ஆமாம் மகாராஜா, ஒரு நிமிடம் குழப்பமாகி தான் போச்சு. தேவி அப்படியே அச்சு அசலாக
ராணியார் மாதிரியே இருக்கிறார்கள்.”
“உன் பேரென்ன? நீ யார்?”
“என் பெயர் கருணாகரன். மகாராஜாவின் மெய்காப்பாளனாக இருந்தேன்,”
“ஏன் இப்போது இல்லை?”
“பழைய ஆட்களை கண்டால் இளவரசி பெற்றோரை நினைத்து ஏக்கம் கொள்ளக்கூடும் என்று
என்னையும் இன்னும் கொஞ்சம் பேரையும் அனுப்பி விட்டார்கள். முத்தம்மா கூட போயிருச்சு”
“ம்….. நாளை நீ வந்து என்னை பார்”
வாயை காது வரை இழுத்து சிரித்து வணங்கி நின்றான் கருணாகரன்.
மறுநாள் மாலை தன் எதிரே நின்றிருந்த கருணாகரனை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான்
விஜயன்.
கருணாகரனுக்கு வயது முப்பது இருக்கும். நல்ல திடகாத்திரமான ஆள். மாநிறம். குட்டையாக
இருந்தான்.
“உனக்கு ஊர் எது?”
“வேட்டையன்புதூர் நாடுங்க யஜமான்”
“கல்யாணம்ஆயிருச்சா?”
“ஆமாம். பாக்கியம் அக்கா தான் பண்ணி வெச்சது.”
“என்னது, பாக்கியம் அக்காவா…..?”
சட்டென்று சுதாரித்து கொண்ட கருணாகரன்,“மன்னிக்க வேண்டும் யஜமான்”
“சரியாக காதில் விழவில்லை. ராணி பாக்கியலெட்சுமி உனக்கு அக்காவா?”
“அது…….”
“கருணாகரன், எப்பவுமே உண்மைகள் சட்டென்று வாய் தவறி தான் வெளியே வந்து விடும்.
அதனால் உண்மையை மட்டும் பேசுவது உனக்கு நல்லது.”
“இத்தனை வருஷம் வெளியே சொன்னதில்லை. வாய் தவறி வந்திருச்சு. மனசுல வெச்சிக்கங்க
யஜமான்.”
“சரி,சொல்லு”
கருணாகரன் சொல்ல தொடங்கினான். “என் அப்பாவின் சொந்த அண்ணன் மகள் தான்
பாக்கியம் அக்கா. எங்க அப்பன்கள் அண்ணன் தம்பி ஐந்து பேர். இந்த ஐந்து குடும்பத்திற்கும்
ஒரே ஒரு பெண் அக்கா தான். ரொம்ப அழகா இருக்கும். எங்க மலை கிராம வன தேவதை
மாதிரியே இருக்கும். வீட்டுக்கு மூத்தவள் அக்கா தான். அதனால் அண்ணன் தம்பிகளிடமும்
சொந்தம் அன்னியம்னு வேத்துமை இல்லாம அன்பா இருக்கும். அதோட சொந்த தம்பி கதிரவனும்
நானும் அதுக்கு ஒன்னு தான்.
அப்போ தான் மகாராஜா பாஸ்கரர் வேட்டைக்கு வந்த போது அவர் எய்த அம்பு காட்டில்
தோழிகளுடன் சுற்றி கொண்டிருந்த அக்காவின் தலையை நன்றாக பதம் பார்த்து விட்டதால்
உயிருக்கே ஆபத்தாகி போனது.. பதறி போன மகாராஜா அக்காவுக்கு தேவையான
வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்து அடிக்கடி வந்தும் பார்த்து சென்றார்.
அக்காவின் அழகும் பழகும் தன்மையும் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. அக்காவை திருமணம்
செய்ய பெரியப்பாவிடம் கேட்டார். முதலில் மறுத்து விட்ட பெரியப்பா, வேட்டையன்புதூர்
அரசரே நேரில் வந்து கேட்கவும் திருமணத்திற்கு ஒப்பு கொண்டார்.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அக்காவை கரம் பிடித்தார் மன்னர்.. ஆனால் பெண்வீட்டார் சார்பாக
முன் நின்று திருமணத்தை முடித்தது பெரியப்பா இல்லை. வேட்டையன்புதூர் அரசர் தான்.
இந்த திருமணத்தை அப்படியாவது நடத்த வேண்டிய அவசியம் நமக்கு என்ன? பெரிய
சமஸ்தானத்தின் ராணி என்கின்ற பதவி வெறியும் அந்தஸ்து மயக்கமும் பெரியப்பாவை
பாஸ்கரரின் சகல நிபந்தனைக்கும் ஒப்பு கொள்ள வைத்து விட்டதே என்று சகோதரர்கள் நாங்கள்
மிகுந்த ஆவேசபட்டோம். ஆனால் பெரியவர்கள் எங்களை ஒன்றும் பேச விடாமல் வாயை
அடக்கி விட்டார்கள்.
திருமணம் முடிந்து அக்கா அரண்மனைவாசி ஆகிட்டாள். எங்களை எல்லாம் மறந்து அவள்
சந்தோஷமாக இருந்தாள். இரண்டு வருடம் கழித்து ரோகிணி பிறக்கும் போது கூட தாய் வீட்டுக்கு
மன்னர் அனுப்பவில்லை. ராணிக்கு அங்கு போஷாக்கு இருக்காது என்று.
மேலும் குழந்தை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் தாய் மாமனுக்கு ஆகாது. அங்கோ எல்லா
பங்காளிகள் வீட்டிலும் நாங்கள் தாய்மாமன்களாக தானே இருக்கிறோம்.
ரோகிணி நட்சத்திரத்தில் ஆண் குழந்தை தான் பிறக்க கூடாது. கிருஷ்ணர் பிறந்ததும் கம்சனுக்கு
சாவு வந்திச்சே. ஆனால் பிறந்திருப்பது பெண் குழந்தை தானே என்று எங்கள் வீட்டில் சொல்லி
பார்த்தார்கள். அக்காவை அவர்கள் தகுதிக்கு குறைவான எங்களிடம் உறவு வைத்துக் கொள்ள
விடாமல் செய்வதற்கு இது ஒரு சாக்கு.
அதனால் பெரியவர்களாலும் மறுத்து பேச முடியவில்லை. பெரியம்மா தான் அக்காவின் பேரு
காலத்திற்காக இங்கே வந்து இருந்தார்கள். அக்கா கதிரவனிடம் விட என்னிடம் மிகுந்த பாசமா
இருக்கும். எனக்கும் அக்கா இல்லாமல் அங்கு இருக்க பிடிக்காமல் நான் இங்கே வந்து
விட்டேன்.அக்கா என் கண் முன்னே மன்னரிடம் இவன் இங்கு நம் பிள்ளையை பார்த்து
கொள்ளட்டும் என்றாள்.
இவன் தாய்மாமன் என்கின்ற உரிமையை நிலைநாட்டுவான் வேண்டாம் என்றார் மன்னர்.அப்படி
இல்லை இவன் தாய்மாமனாக இங்கே இருக்க வேண்டாம். நம் குழந்தையின்
மெய்க்காப்பாளனாக இருக்கட்டும் என்றாள். சரி என்று அரை மனதோடு சம்மதித்தார்.
நான் தான் அக்காவிடம் வாக்குவாதம் செய்தேன். “நீ ஏன் அப்படியாவது இவரை கல்யாணம்
கட்டிகிட்டே. அப்ப, எல்லாரும் சொல்ற மாதிரி உனக்கு ராணிங்கற பதவி அதிகாரம் தானே
எங்களை விட பெருசா போச்சு” என்று.
“அப்படியில்லைடா தம்பி, இவர் நெனசிருந்தால் என்னை பெண்டாள விட்டு கை கழு விட்டு
போயிருக்கலாம். இல்லாட்டி என்னை தூக்கி வர செய்து நாசம் பண்ணிட்டு போயிருக்கலாம். ஒரு
அரசகுமாரனுக்கு இதெல்லாம் சகஜம் தானே. ஆனால் இவர் அப்படி இல்லையே”.
“ஒரு பெரிய நாட்டின் ராஜாங்கற மமதை இல்லாம என் மேல அளவுகடந்த பிரியம் வெச்சிட்டாரு.
எனக்கும் அவரை நெனச்ச மனசாலே வேற யாரையும் எதையும் நெனைக்க முடியாது. அவரை
தவிர எனக்கு வேற உலகம் இல்லடா தம்பி. அதை அப்பாவிடம் சொல்லவும் தான் இந்த
கல்யாணத்தை அப்பா முடிச்சி வெச்சாரு”.
“சரி கலியாணம் கட்டிக்கிட்டு நல்ல மகராசியா சந்தோசமாயிரு. நாங்க வேண்டாங்கலை.
அதுக்காக எங்களை எதுக்கு ஒதுக்கி வைக்கணும்”.
“என்னை கலியாணம் கட்ட கூடாது என்று அவங்க சம்பந்தகாரவ முறையில ரொம்ப எதிர்ப்பு.
பெரிய ராஜாவும் ராணியும் கூட ரொம்ப எதிதாங்க. இவரு தான் என்னை கட்டி வைக்கலனா
தேசாந்திரம் போய்டுவேன் ன்னு ஒத்தக்காலில் நின்னாரு”.
“ஒத்தை மகனை தேசாந்திரம் போக விட முடியுமா? மேலும், என் அழகையும் பாத்துட்டு தான்
இந்த கலியாணத்துக்கு ஒத்துகிட்டாங்க. அவங்க அந்தஸ்துக்கு தகுதி இல்லாதவன்னு ரொம்ப
கொற தான் அவியளுக்கு. அவங்க தான் எங்களை இப்படி திட்டம் பண்ணி வெச்சிருக்காங்க.”
“அதுக்காக எத்தனை நாள் அக்கா உன்னை பிரிந்து இருக்க முடியும்?”
“கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. எல்லாத்துக்கும் ஒரு காலம் வரும். இதெல்லாம் மாறி போகும்.
நீங்களும் எல்லோரும் இங்கே என்கூடவே இருக்கற நாள் சீக்கிரம் வரும்” என்று ஆறுதல்
சொல்லுவாள்.
அதை வீட்ல போய் சொன்னேன். பெரியவர்கள் அழுது புலம்பினாலும் அக்கா சொன்னது சரி
தானே ன்னு மனசை தேதிகிட்டோம். அக்காவுக்கு துணையா என்னை மட்டும் இங்கேயே இருக்க
சொல்லிட்டாங்க. கதிரவன் தான் கருவிகிட்டே இருப்பான். நான் திரும்ப அரண்மனைக்கே வந்து
இங்கேயே அக்காவுக்கு துணையா தங்கிட்டேன். அதுவரைக்கும் நான் அவள் தம்பி என்பதை
யாருக்கும் நான் சொன்னதும் இல்லை. எந்த சலுகையும் எடுத்து கொண்டதில்லை. இதை கால
போக்கில் பார்த்து புரிந்து கொண்ட மன்னரும் முன்பு போல இல்லாமல் என்னை பார்க்கும் போது
நின்று ஒன்றிரண்டு வார்த்தை பேசி செல்லுவார். குழந்தை ரோகிணியும் என்னோடு ரொம்ப ஒட்டி
கொண்டாள்.அக்கா சொன்னது போல எங்களுக்கு ஒரு நல்ல காலம் வரக்கூடிய நேரத்தில்
இருவரும் இப்படி மரணம் அடைந்து விட்டார்கள்.”
மூச்சு விடாமல் ரொம்ப நாளாக தன மனதில் இருந்த பாரத்தை தன்னையறியாமல் விஜயனிடம்
சொல்லி முடித்தான் கருணாகரன்.
பேரழகியான பாக்கியத்தின் கதை இத்தனை சோகம் நிறைந்தது. ஆனாலும் கணவருடன்
அன்னியோனியமான காதல் வாழ்க்கை. அழகான குழந்தை. வீட்டாருடன் ஓட்டும் இல்லாமல்
உறவும் இல்லாமல் ஒரு வாழ்க்கை. அதுவும் நிலைக்காமல் அல்பாயுசில் மரணம். இன்னும்
என்னென்ன புதிர்கள் இருக்கிறதோ இந்த வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தில். பெருமூசெரிந்தான்
விஜயன்.
தொடரும்
ஷியாமளா கோபு
Nichayamaga Rohini petror kolai seyya patirkirargal. Vibuthu alla. Paavam Rohini avaluku Ella ragasiyamum terium.
Vijayan kaapatra vendum. Super story 👍👍
Eagerly waiting for next update.