18
விஜயன் பரபரப்பு அடைந்தான். “கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?”
கருணாகரன் அவனிடமிருந்து பார்வையை திருப்பி விஜயனை பார்த்தான். கருணாகரனின்
கண்களில் குழப்பமே ஓங்கியிருந்தது. அது ரோகிணியின் கண்களில் தெரிந்தது.
‘சொல்லு கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?”
“ஆம்.”
“யார்?”
“கதிரவன்.”
“கதிரவனா……………..?”
அவன் குரலில் பயம் தென்பட்டது. “ஆம். இவன் பாக்கியம் அக்காவின் உடன் பிறந்த தம்பி.
கதிரவன்.”
“என்னது.ரோகிணியின் தாயார் ராணி பாக்கியலட்சுமியின் தம்பியா?”
“ஆம்”
அவையே ஸ்தம்பித்தது. சட்டென்று தன்னை மீட்டு கொண்டது. ஆ…..! ஆ….!என்று
அங்கலாய்த்தது. இப்படியும் கூட நடக்குமா? சொந்த அக்காவின் மகளை மணந்தவனை சொந்த
தாய்மாமனே கொல்ல துணிய கூடுமோ?எப்படி இவன் இத்தனை கட்டுக்காவலை மீறி உள்ளே
வந்தான். அந்த லட்சணத்தில் திவானின் பராமரிப்பு இருந்திருக்கிறது. என்னடா கலிகாலம் இது
என்று தங்களுக்குள் பேசி கொண்டும் அலமலந்து கொண்டும் நின்றிருந்தார்கள்.
இத்தனைக்கும் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் கண்களில் புலியை ஒத்த
பார்வையுடன் விஜயனை வெறித்து பார்த்து கொண்டு நின்றான் கதிரவன்.
விஜயன் கதிரவனை நேருக்கு நேர் பார்த்தான்.நல்ல திடகாத்திரமாக வாலிப வயதில் இருந்தான்.
அவனை பிடித்து கொண்டு நின்றிருந்த வீரர்கள் இடையே திமிறி கொண்டு இருந்தான்.
இவனுக்கு நம்மை கொல்ல வேண்டிய முகாந்திரம் என்னவாக இருக்கும்?
“சொல்லு கதிரவா.ஏன் என்னை கொல்ல நினைத்தாய்? உன் காரணம் தான் என்ன?’
“காரணம்…………..!”புலியை போல உறுமினான்.
“காரணம் தான். இத்தனை கட்டுகாவலையும் தாண்டி மாட்டி கொள்வோம் என்று தெரிந்தும்
இங்கே வந்து என்னை கொல்ல உனக்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா? அதை தான்
கேட்கிறேன். சொல்லு”
“அது ஒரு கதை”
“பரவாயில்லை. உன் கதையை சொல்”
“அது ஒரு நாள் கதை அல்ல”
“அது ஒரு நாள் கதை அல்ல என்பது எனக்கும் புரிந்திருக்கிறது. நெடுநாள் பகையினால் தான்
ஒருவன் இந்த அளவிற்கு துணிவான்.”
மெளனமாக அவனையே பார்த்து கொண்டிருந்தான் கதிரவன்.
“கதிரவா. உன் காரணத்தை சொல்லு. என் பொறுமையை நீயும் நீண்ட நேரமாக சோதித்து
கொண்டிருக்கிறாய். சொல்லு.”
கதிரவன் சொல்ல ஆரம்பித்தான் தன் கதையை. அது இன்று விஜயனுடன் சம்பந்தம் உடையது
அல்ல. பாஸ்கருக்கு சம்பந்தப்பட்டது. அதுவும் இன்றைய தினத்தை போலவே இந்த அவையுடன்
சம்பந்தப்பட்டது.
“நாங்கள் வேட்டையன் புதூர் நாட்டுக்கு உட்பட்ட மலை கிராமத்தை சார்ந்தவர்கள். எங்கள்
தகப்பனுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். என் சித்தப்பாவின் மகன் தான் இந்த கருணாகரன்.
எங்கள் ஐந்து வீட்டிலும் நாங்கள் ஆண்மக்கள் தான். ஒரே ஒரு பெண் என் உடன் பிறந்த அக்கா
பாக்கியலட்சுமி. அவ்வளவு பேரழகு. எங்கள் வன கிராமத்தின் வன தேவதை. அவளை மணக்க
எங்கள் இனத்தில் எத்தனை ஆண்மக்கள் போட்டி இட்டார்கள் தெரியுமா?அத்தனை பேரில்
யாருக்கு கொடுப்பது என்று எத்தனை விதமான போட்டிகள் வைத்து ஆளை தேர்ந்தெடுப்போம்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுக்கும் கொடுப்பதா வேண்ட்டாமா என்று எங்கள் வனகாளிக்கு
பொங்கல் வைத்து படையல் இட்டு குறி கேட்டு தான் முடிவெடுப்போம்.
வேட்டைக்கு வந்த இடத்தில் பாஸ்கர் என் அக்காவின் தலையை காயப்படுத்தி அவளை குத்து
உயிரும் குலை உயிருமாய் ஆக்கிய போதே நான் அவனை வெறுத்தேன்”
பாஸ்கரை அவன் இவன் என்று ஏகவசனத்தில் கதிரவன் குறிப்பிடும் போதே தர்பார் மண்டபத்தில்
குழுமி இருந்த கூட்டம் அவன் வாயிலே போடு என்றும், என்ன தையிரியம் மன்னரை பெயர்
சொல்லி அழைக்கிறான் என்றும் ஒரே கூப்பாடு போட்டது. கதிரவனின் வெறுப்பின் அளவை
விஜயனால் புரிந்து கொள்ள முடிந்தது. கூட்டத்தை பார்த்து விஜயன் கையை காட்டவும்
அமைதியாயிற்று. மேல்கொண்டு தொர்ந்தான் கதிரவன்.
“அக்காவை பெண் கேட்டு பாஸ்கர் வந்த போது கண்டிப்பாக தர மறுத்தேன். எங்கள்
பெரியவர்களும் என் எதிர்ப்புக்கு மரியாதை கொடுத்து பாஸ்கருக்கு பெண் கொடுப்பதில்லை
என்றே முடிவெடுத்தார்கள். ஆனால் எங்கள் நாட்டின் அரசரே நேரில் வந்து பாஸ்கருக்கு
அக்காவை கேட்ட போது எங்கள் பெரியவர்கள் தர இயலாது என்று தான் சொன்னார்கள்.
அதற்கு எங்கள் அரசர் எங்கள் அனைவரையும் பூண்டோடு அழித்து விடுவதாக சொன்னதால்
அரசருக்கு பயந்து பெண் கொடுக்க ஒப்பு கொண்டார்கள்.
எங்களுக்கு என்று சடங்குகள் சம்பிரதாயங்கள் உண்டு. நாங்கள் பாஸ்கரை போல அரசர்கள்
இல்லாவிட்டாலும் நாங்களும் ஐம்பது தலைக்கட்டு உள்ள குடும்பம் தான். நாங்கள் ஏழைகள்
தான். ஆனால் யாரிடமும் போய் நாங்கள் கை ஏந்தி நின்றதில்லையே. அப்படி இருக்க பெண்
கொடுத்த பாஸ்கரிடமா வந்து விட போகிறோம்?.”
சரி. போகட்டும் என்று மனதை தேற்றி கொண்டோம். ஆனால் பெண் வீட்டார் சார்பாக
வேட்டையன் புதூர் அரசரே முன் நின்று கலியாணத்தை நடத்திய போது பெற்றவர்கள் இருந்தும்
அக்காவை யாரோ கை பிடித்து கொடுக்கிறார்களே என்று அவமான பட்டோம்.
அதற்கு பிறகும் கொடுமை குறையவில்லை. எங்கள் நல்லது கெட்டது என்று எதற்கும் அக்கா
வரவில்லை. எங்கள் வீட்டு மாப்பிள்ளையாக பாஸ்கர் எங்களை மதித்து இருந்தால் நல்லது
கெட்டதிற்கு வந்து போய் இருந்தால், ஓரளவிற்கு நாங்கள் சமாதானம் ஆகி இருப்போம். சரி
எங்கள் வீட்டுக்கு அவர் தான் வரவேண்டாம். அக்காவையாவது அனுப்பி இருந்திருக்கலாம்.
அதுவும் இல்லை. எங்களையும் அக்காவை பார்க்க அனுமதிக்கவில்லை. இரண்டு வருடம் கழித்து
பிறந்தாள் இந்த ரோகிணி. அதற்கு மட்டும் பேறு காலத்திற்கு எங்கள் அம்மாவை அனுமதித்தார்.
எத்தனை திருமணங்கள் எத்தனை இறப்புகள் எத்தனை கொண்டாட்டங்கள் எதற்குமே அக்கா
வரவில்லை”
உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கிய நிலையில் கண்ணீர் வழிந்தோட மூக்கை உறிஞ்சியவாறு
தன் சோகத்தை மறைத்தவாறு தன் பழி வாங்கும் படலத்தை மேலும் தொடர்ந்தான். ஜனங்களே
இந்த கதையை கேட்டு கண் கலங்கினார்கள். பெண்கள் முந்தானையால் வாயை மூடி கொண்டு
விம்மினார்கள். ஆண்களும் கூட கண்ணோரத்தில் கசிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து
கொண்டார்கள்.
“எங்கள் அக்காவை எங்களிடம் இருந்து பிரித்து அவளை எங்கள் கண்ணால் கூட பார்க்க
அனுமதிக்காத பாஸ்கரை கொல்ல வேண்டும் என்று எனக்குள் உறுதி ஏற்பட்டது அப்போது
தான்.”
மறுபடியும் ஜனக்கூட்டம் ஆரவராம் செய்தது.
“அடப்பாவி, நீ தானா எங்கள் மன்னரையும் உன் சொந்த அக்காவையும் கொன்றது.”
கதிரவனின் கதையை கேட்டு கொண்டு வந்த ரோகிணிக்கு கதிரவன் தன் தாயின் உடன்
பிறந்தவன் என்றதும் ஒரு சிறு அன்பு ஏற்பட்டது. அவன் தன் தமக்கையை பிரிந்து பட்ட
துயரத்தையும் அவமானத்தையும் சொல்லி கொண்டு வந்த போது அவன் மேல் ஒரு இரக்கம்
ஏற்பட்டது. அவன் தன் பெற்றோரை கொல்ல முயன்றவன் என்று அறிந்ததும் அவன் தன்னை
சிறு வயதில் திவானிடம் கொடுமை பட காரணமாகி விட்டானே என்று கோபம் ஏற்பட்டது.
“அப்போ நீ தான் பாஸ்கரர் அவர் மனைவியையும் கொன்றதா?”
“ஆம்”
“இவ்வளவு நேரமும் உன் அக்காவை பற்றி இப்படி உருகி உருகி சொன்னாய். எப்படி அவர்களை
கொல்ல உனக்கு மனம் வந்தது?”
“நான் எங்கே அவர்களை கொன்றேன்?”
“இப்போது நீ தானே அவர்களை கொன்றதாக சொன்னாய்?”
“நான் தான் கொன்றேன். ஆனால் நானாக கொல்லவில்லையே?’
“என்ன குழப்புகிறாய்?”
“வனகாளியின் உத்திரவு படி அல்லவா கொன்றேன்”
“அது யார் வனகாளி? அவள் எங்கே இருக்கிறாள்? அவளுக்கும் இந்த கொலைக்கும் என்ன
சம்பந்தம்?”
“எங்கள் வனத்தின் குலதெய்வம் தான் வனகாளி”
யாரோ ஒருவர் இந்த சதித்திட்டத்தில் இருக்கிறார்கள்.அது யாராக இருக்கும்? நமக்கு தெரிந்த
ஒரே எதிரி திவான் வில்வநாதன் மட்டும் தானே. இவனுடன் வேறு யார் இருக்க கூடும் என்று ஒரு
நிமிடத்தில் உலகையே சுற்றி வந்த மனதின் எண்ணத்தை நல்லவேளையாக ஏதோ ஒரு
தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு நிம்மதியாக்கி விட்டான் இந்த கதிரவன்.
“திருமணத்தை ஒட்டி செய்ய வேண்டிய எந்த சடங்கையும் செய்யாமல் கலியாணம் செய்து
கொண்டார்கள் அல்லவா? அது தான் காளி அவர்களை பழி வாங்கி விட்டாள்.” என்று
உக்கிரமாகிப் போனான் கதிரவன்.
“அதற்காக உன் சொந்த அக்காவையே கொல்லுவாயோ?”
சற்று நேரம் அமைதியாக இருந்தான். அக்காவும் இறக்கும்படி ஆயிற்றே என்று வேதனை
பட்டான் போலும். பின் தலை துலுக்கி கொண்டு சொன்னான்.
“என்ன செய்ய.? பாஸ்கர் தான் எப்போதும் வேட்டைக்கு வருவான். அவன் வரும் வழியில் பெரிய
மரத்தை அடியில் அறுத்து வைத்து விட்டு தொலைவில் ஒளிந்திருந்தேன். அவனுடைய
குதிரையின் குளம்பொலி கேட்டதும் மரத்தை இழுத்து விடுவது என்று ஏற்பாடு செய்திருந்தேன்.
அப்படி செய்யவும் செய்தேன்.ஆனால்…”
அன்றைய நாளின் கொடூரத்தில் தன்னுடைய உடன் பிறந்தவளை எதிர்பாராமல் பறி கொடுத்து
விட்ட வேதனையில் தொண்டை அடைத்தது.
“ஆனால், எதிர்பாராமல் அன்று என் அக்காவும் அவனுடன் வருவாள் என்றோ பாஸ்கரை கொல்ல
அறுத்து வைத்திருந்த மரத்தின் அடியில் இவளும் மாட்டி கொள்வாள் என்றோ நான் சற்றும்
எதிர்பார்க்கவில்லை.”
“சரி அவர்கள் உன்னை அவமானபடுதினார்கள்.நீ கொன்றாய். நான் என்ன செய்தேன் என்னை
கொல்ல?”
சற்று நேரம் அவனும் அமைதியாக இருந்தான். பிறகு தொடர்ந்தான். “என் அக்காவும் பாஸ்கரும்
இறந்த போது இதே தர்பார் மண்டபத்தில் பாஸ்கரின் சாசனம் என்றெல்லாம் என்ன என்னவோ
படித்தார் சுந்தர ராஜா. அதெல்லாம் அங்கே நின்றிருந்த எனக்கும் என் அப்பாவுக்கும் ஒன்றும்
புரியவில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் என் அக்காவின் மகள் ரோகிணியை எங்களிடம்
தந்து விட வேண்டும் என்பதே. என் அப்பா மண்டியிட்டு கெஞ்சினார்.”
திரும்பி சுந்தரரை பார்த்தான் கதிரவன். அவன் அடிபட்ட பார்வையின் தீவிரத்தை பார்த்து
மன்னராக இருந்து தானும் இவன் வேதனைக்கு ஒரு காரனாமாகி விட்டோம் என்பது புரிந்தது.
பாஸ்கர் இவனை ஏழை என்று அவமானபடுதியதற்கு தானும் உடந்தை ஆகிவிட்டோம் என்ற
குற்ற உணர்வில் தலையை குனிந்து கொண்டார் சுந்தரர்.
“நாங்கள் எழைகளாம். எங்களால் ரோகிணியை அவள் தகுதிக்கு ஏற்ப வளர்க்க
முடியாதாம்……………..ம்………!”
உறுமினான். திமிறினான்.
“அந்த அவமானம் தாங்காமல் என் தந்தை இறந்து போனார். ஏற்கனவே மகளை பறி கொடுத்த
சோகத்தில் இருந்த என் தாயும் என் தந்தை இறந்த அதிர்ச்சியில் கூடவே இறந்து போனார்கள்.
நானும் அநாதை ஆகி போனேன்.”
நிமிர்ந்தான். விஜயனை பார்த்தான்.
”அப்போது தீர்மானித்தேன். என் வீட்டில் பெண் வாசனையே இல்லாமல் செய்து என்னை
அனாதையாக்கிய பாஸ்கரின் ராஜியத்தை ஆள ஆண்வாசனையே இல்லாமல் செய்து
விடுகிறேன் என்று சபதமெடுத்தேன்.”
“அதனால் தான் இந்த காளாமுக சாமியார் வேடம் தரித்து வந்து ரோகிணியை திருமணம் செய்து
கொள்ளாமல் தடுக்க முனைந்தேன்.. அதுவும் கை கூடவில்லை. நான் என்ன செய்ய? அன்றே
அம்பை எறிந்தேன். விஜயன் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டான்.”
நீண்ட நாட்கள் சுமந்து வந்த பாரம் நீங்கியவனாக அமைதியானான் கதிரவன். இன்னும்
விசாரணை முடியவில்லை ஆதலால் கதிரவனை காத்திருக்க வைத்திருந்தார்கள்.
அப்போது திவானின் கொடுமைகள் பற்றி ரோகிணியை அவையோருக்கு விளக்கிக் கூறும் படி
விஜயன் சொல்லவும் ரோகிணி எழுந்து தன்னுடைய பத்தாவது வயதிலிருந்து விஜயனை
திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னது வரை கூறினாள்.
தொடர்ச்சியாக உணர்சிகள் துடைத்த குரலில் ரோகிணி சொல்லி முடித்த போது சபையோரும்
சுந்தரரும் மட்டுமன்றி ரகுநாதரும் லக்ஷ்மியும் கூட கண்ணீர் சிந்தினார்கள்.
“திவானை தூக்கில் தொங்க விட வேண்டும்” என்று ஒரு சேர சபையோர் கூக்கிரலிட்டார்கள்.
சுந்தரரும் ரெகுநாதரும் ரோகிணியும் விஜயனுடன் சேர்ந்து ஆலோசனை செய்தார்கள்.
இவர்களுக்கு என்ன தீர்ப்பு சொல்வது என்று.
மீண்டும் அவை கூடியது. ரோகிணி சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள். எல்லோரும் அவளையே
பார்த்து கொண்டிருந்தார்கள்.
“இது என் பட்டாபிஷேகத்தின் நாள். இன்றே ஒரு வழக்கு. இரண்டும் என்னுடன்
தொடர்புடையது. முதல் வழக்கும் கூட. முதலில் திவான் வழக்கு. அதில் நான் நேரடியாக
பாதிக்கபட்டிருக்கிறேன். மிக கடுமையாக. அதனால் திவானை தீவாந்திரம் கடத்தி விட
வேண்டும். திவான் தன் வாழ்நாள் முழுவதும் தீவில் தான் இருக்க வேண்டும். என்றேனும் அவன்
இந்த வேட்டுவமங்கலத்தின் எல்லையில் காணபட்டால் அவனுக்கு சிரசேதம் தான். திவானின்
சொத்துக்கள் அத்தனையும் பறிமுதல் செய்து விட்டு அவன் மகன் மணிபல்லவனை நாடு கடத்தி
விட வேண்டும்.”
மக்கள் கூட்டம் கரங்களை தட்டி ஆரவாரித்து மிக சரியான தீர்ப்பு என்று கூச்சலிட்டார்கள்.
“அடுத்தது கதிரவன்….!
அவள் குரல் தனக்கிருக்கும் ஒரே சொந்தமான அவனை நினைத்து நெகிழ்ந்தது. ஆனாலும் நீதி
என்று ஒன்று இருக்கிறதே.
“கதிரவனை இரண்டு வருடங்கள் நாடு கடத்தி விடலாம். அந்த காலகட்டத்தில் அவர் நம் நாட்டு
இளைஞர்களுக்கு போர் பயிற்சி தர வேண்டியது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்
இந்நாட்டின் கோட்டைகாவல் படையின் உபதளபதியாக பணியாற்றுவார். ஏனெனில் அவர் மிக
சிறந்தவில்வீரர். தைரியசாலியும் கூட.”
மக்கள் அமைதியாக இருந்தார்கள். ரோகிணி அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டு
சொன்னாள்.
“உங்களை போலவே நம் மன்னரையும் ராணியையும் இவர் கொன்றிருக்கிறார் என்பது உண்மை
தான். உங்களை விட எனக்கு தான் கதிரவனை தண்டிக்க அதிக காரணம் இருக்கிறது.”
“ஆனால்………………..!”
“சற்று சிந்தித்து பாருங்கள். அவர் பட்ட வேதனைகளும் அவமானங்களும் தானே அவரை
இத்தகைய கொலை முயற்சிகளை செய்ய தூண்டி இருக்கிறது. மன்னர் பாஸ்கரர் தன்னை
அறியாமலே இவருக்கும் இவர் குடும்பத்திற்கும் மிக பெரிய கெடுதல் செய்திருக்கிறாரே. அதையும்
நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தாய் தகப்பன் சொத்தில் மட்டுமல்ல பாவத்திலும்
பிள்ளைகளுக்கு பங்கு உள்ளதே. என் தந்தை செய்த பாவத்திற்கு நான் பரிகாரம் செய்கிறேன்.”
மக்களும் குறுநில மன்னர்களும் எழுந்து நின்று “ராணி ரோகிணி தேவியார் வாழ்க “ என்று
கோஷமிட்டார்கள். அவை கலைந்தது. மக்கள் ரோகிணியின் தீர்ப்பை சிலாகித்து கொண்டே
கலைந்து சென்றார்கள்.
இந்த தீர்ப்பை சற்றும் எதிர்பாராத கதிரவன் முகத்தை மூடி அழுதான். நெடுநாளைய அவமானம்
போராட்டம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து இனி அவன் சுதந்திரமாக எத்தகைய அசூசைகளும்
இன்றி வாழ போகிறான்.
விஜயனுடன் ரோகிணி அவன் அருகில் வந்தாள்.அவனை மிக நெருக்கத்தில் நேருக்கு நேர்
பார்த்தாள். தன் தாயின் சாயல் இருக்கும் அவனிடம் மிக பெரிய ஒரு இரக்கம் அடி வயிற்றில்இருந்து கிளம்பி நெஞ்சை நிரப்பியது.
“மாமா போய் வாருங்கள். உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கருணாகரன் மாமா செய்வார்.
இரண்டு வருடங்கள் சென்று அவரை போலவே நீங்களும் ஒரு உப தலைவராக இங்கே
இருப்பீர்கள். என் தாய் செய்ய தவறியதை நான் உங்களுக்கு செய்து விட்டேன். சரி தானே.”
கண்களை கண்ணீர் திரை மறைக்க கையெடுத்து கும்பிட்டு சரி என்பதாக தலையை ஆட்டினான்
கதிரவன்.
விஜயனும் ரோகிணியும் நீண்ட நெடும் வருடங்கள் இந்த வேட்டுவமங்கலம் அரண்மனையில்
நிறைய பிள்ளை குட்டிகளை பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் பிள்ளைகளை
வளர்க்கும் முக்கிய பொறுப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வந்தான் கதிரவன்.
வாசக அன்பர்களே, உங்கள் கண்ணாடியை கழட்டி விடுங்கள். இனி உங்கள் நவீன
கண்ணாடியை மாட்டி கொள்ளலாம். ஏனெனில் இன்றைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில்
வேட்டுவமங்கலம் என்னும் சிற்றூரில் சிதிலடைந்து காணப்படும் அரண்மனையில் தரையின்
அடியில் காணப்படும் பாதாள அறையை காணலாம்.
இந்த அரண்மனையில் அடிமைப்பட்டு கிடந்த ராணி ரோகிணி தேவியார் விஜயனை திருமணம்
முடித்து விடுதலைப் பெற்று நீண்ட வருடங்கள் இந்த பிரதேசத்தை சிறப்புற ஆட்சி செய்து வந்தாள் என்ற கல்வெட்டும் காணக் கிடைக்கும்.
.முற்றும்.
நன்றி.
ஷியாமளா கோபு
கதையினை தொடர்ந்து வாசித்து ஆதரவு அளித்தவர்கள், ஓரிரு வார்த்தையால் உங்கள் கருத்தை எடுத்து இயம்பினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.