Skip to content
Home » அழகே, அருகில் வர வேண்டும்-1-2

அழகே, அருகில் வர வேண்டும்-1-2

அழகே, அருகில் வர வேண்டும்.

1

அன்பு வாசகர்களுக்கு

ஒரு காதல் கதையாக தொடங்கும் இந்த கதை முன் ஜன்ம பாவம் அதைத் தொடர்ந்த சாபம் பரிகாரம் இன்றைய நிலை என்று தொடர்ந்து இறுதியில் காதலர்கள் இருவரும் ஒன்று சேரும் ஃபீல் குட் ஸ்டோரியாக முடியும். படிக்கும் உங்களுக்கு ஒரு நேர்மறை எனர்ஜியாக அமையும். படித்து விமர்சிக்கவும்.

G. சியாமளா கோபு

இன்னும் சில துளி மணி நேரங்களில் புது வருடம் பிறக்கப் போகிறது. எல்லோரும் ஒரு புதிய உற்சாகத்துடன் புது வருட பிறப்பை வரவேற்பதற்கு தயாராக காத்து கொண்டிருந்தார்கள். ஜோடி ஜோடியாக தென்பட்டவர்களும் குழந்தை குட்டி குடும்பத்தாருடன் காணப்பட்டவர்களுமாக அந்த நதிக்கரையோரம் ஜன நெருக்கமாக இருந்தது.

லண்டன் மாநகரின் தேம்ஸ் நதிக்கரையின் இருகரையிலும் மக்கள் கூட்டம் நெருக்கி அடித்து கொண்டிருந்தது. எப்போதும் இலவசமாக அனுமதிக்கப்படும் பயர் வர்க்ஸ் எனப்படும் பட்டாசு திருவிழாவிற்கு போன வருடம் முதல் கணிசமான தொகை கட்டணமாக வசூலிக்கபட்டாலும், செலவையும் பொருட்படுத்தாது வருடாவருடம் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருந்தது.

தேம்ஸ் நதியின் புகழ்பெற்ற தெற்கு கரையில் டிசம்பர் மாத குளிரில் நிச்சலமான, நட்சத்திரங்கள் அற்ற, தெள்ளிய பனிகால வானத்தின், மை இருட்டில் பிரகாசமான வெளிச்சத்தையும் வானின் உயரத்தில் வண்ண வண்ண நெருப்பு கோலங்களையும் வாரி இறைத்த அந்த அற்புத காட்சி காண்போருக்கு ஒரு வாழ்நாள் அனுபவமாக என்றென்றும் மனதில் பதிந்து  விடக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக, கண்களில் இருந்து மறைந்து விடாத காட்சியாக நின்று விடக்கூடியது.

எப்போதும் இது போன்ற பனிக்காலத்தில் மிகவும் அமைதியாக இருக்கும் தேம்ஸ் நதி கிறிஸ்தமஸ் தொடங்கி புது வருட பிறப்பு வரை அதகளப்படும். நகரம் முழுவதும் மின் விளக்குகள் தோரணமாக வீடுகள் கடைகள் மட்டுமல்லாது மரங்களிலும் கூட அலங்கரிக்கபட்டிருந்தது.

உள்நாட்டினர் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருந்த அந்த பகுதியில் அதீத குளிருக்கு பொருத்தமாக உடை அணிந்திருந்த போதும் எலும்பை குத்தும் பனிக்காற்றிற்கு கதகதப்பாக கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டியவாறு அமர்ந்திருந்தாள் சாருலதா தேவி. கண்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு இருந்தது.

இந்த உலகையே ஒரு குடையின் கீழ் ஆண்டவர்கள் என்ற பாரம்பரியம் உடையவர்கள் இந்த இங்கிலாந்து நாட்டினர்..ஆனால் இவர்களுக்கே அரை ஆடை உடுத்திய மகாத்மா, ஆன்மாவின் பலம் எத்தகையது என்பதை உணர்த்திய பாரம்பரியம் உடையவர்கள் நாங்கள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

நம் முன்னோர்களில் எத்தனை பேர் இந்த ஊருக்கு வந்திருப்பார்கள்?. சாருலதா தேவியின் வீட்டின் நடு ஹாலில் புகை படிந்த சித்திரம் ஒரு நிமிடம் கண்முன் வந்து மறைந்தது. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஒரு காலையும் தரையில் ஒரு காலையும் வைத்தவாறு நெடிய ஒரு மனிதரின் வெள்ளிச்சரிகை வைத்த தலைப்பாகையும் அதில் பக்கவாட்டில் தொங்கிய முத்துச்சரமும், அவர் உடல் முழுதும் அணிந்திருந்த ஆபரணங்களும் அவர் நின்றிருந்த தோரணையும்  …………..!

எத்தனை மனிதர்கள், நம் நாட்டிற்காக எத்தகைய பாடுபட்டிருப்பார்கள்?. ஆனாலும் கத்தி இன்றி

ரத்தமின்றி ஒரு யுத்தம் செய்து இவர்களை நாம் வெற்றி கொண்டோம் என்று நினைத்து கொண்டாள் அவள்.

“ஹே சாரு. இந்தா சீக்கிரம் பிடி. கை சுடுது”

இருகைகளிலும் சுடச்சுட காப்பி டம்ளரை பிடித்தவளாக சாருவின் முன் பரபரத்து கொண்டிருந்தாள் ரேணுகா. பாவம் தனக்காகவும் அவளே போய் காப்பி வாங்கி கொண்டு வந்ததால் ஒரு சின்ன நன்றியுடன் அவளிடமிருந்து பெற்று கொண்டாள். சாருவின் கையில் கோப்பையை கொடுத்து விட்டு அவள் அருகிலேயே அமர்ந்து கொண்ட ரேணு மீதம் சில்லறையை அவளிடம் தந்தாள்.

“ஏ, மீதம் சில்லறையை உடனே தந்தாகனுமா ரேணு?”

“அப்புறம் மறந்து விடும் சாரு. ஞாபகம் இருக்கும் போதே கொடுத்து விட வேண்டும்”

“அப்படி என்ன அவசியம்? மீதம் உன்னிடம் இருந்தா தான் இருந்து விட்டு போகட்டுமே?”   

“இந்த ஊரில் படிக்க வந்திருக்கிறோம் ரெண்டு பேருமே. அதுவும் ஸ்காலர்ஷிப்பில். ரெண்டு பேருக்குமே நம் வருமானத்தில் படித்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்புறம் கணக்கு பார்க்காமல் இருக்க முடியுமா?”

“அதுவும் சரி தான்.”

“ஒப்பு கொண்டதற்கு நன்றி”

“அதில்லை ரேணு. ஒரு கப் காப்பிக்கு கூட கணக்கு பார்க்க வேண்டுமா?”

“அதனால் தான் நாம் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம்”

“உண்மை தான்”

“கூடிய விரைவில் நான் இருவரும் ஒரே அறையில் தங்கும்படி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் சாரு”

“நானும் அதை பற்றி நினைத்து கொள்வேன். என் அறையில் என்னுடன் தங்கி இருக்கும் நைஜிரிய பெண் நிகோசியின் அக்கப்போர் தாங்கவில்லை ரேணு. எந்நேரமும் அவளுடைய பாய் பிரண்ட்சை அழைத்து கொண்டு வந்து  ரூமில் ஒரே ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களம் தான். நடு நடுவே சாரி என்பாள். அல்லது என்னையும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பாள். எந்நேரமும் மறுப்பது என்பது எனக்கே கொஞ்சம் அன் ஈசியாக தான் இருக்கிறது”

2

“அதே போன்ற பிரச்சினை தான் எனக்கும். கல்சுரல் ஷாக் தான். என்ன செய்ய? நமக்கு இவர்களுடன் ஒத்து வராது. அவர்களுக்கும் நான் இடைஞ்சல் தான்”

“ராகவனிடம் சொல்லி வைக்கிறேன். வேறு இடம் கிடைத்தால் உடனே நாம் மாறிவிடுவோம்”

“ஹேய், ஹாப்பி நியு இயர் பிரன்ஸ்”

“தின்க் ஆப் தி ஏஞ்சல், தி ஏஞ்சல் இஸ் கியர்.”

“என்னையா ஏஞ்சல் என்று சொல்கிறாய்?”

“அதில் என்ன சந்தேகம்? நீ எப்போதுமே எங்களுக்கு கார்டியன் ஏஞ்சல் தான்”

“ஓ.கே.நீ இப்படி சொல்லி விட்டதால் அடுத்து நான் இப்படித் தானே கேட்கணும்.”

“எப்படி?”

“இப்போது நீ என்னை எதற்காக நினைத்தாய்? கேள்வி சரியா?”

“ஆஹாஹா, ரொம்ப சரி”

“இல்லே, அளவுக்கு மேலே ஐஸ் வைக்கிறீங்களே அதற்காக தான் கேட்டேன்”

“ராகவா, நாங்கள் ஏன் உனக்கு ஐஸ் வைக்க போகிறோம்?”

“அதானே. எப்போதும் எங்களுக்கு உதவி செய்வதற்கு என்றே மிக சரியாக அந்த இடத்தில் ஆஜர் ஆகி விடுகிறாய் என்று சொன்னால் ரொம்ப தான் பிகு செய்து கொள்கிறாய்”

“அம்மா தாய்களா, ஆளை விடுங்கள். சின்ன பையன் தெரியாமல் சொல்லி விட்டேன். சரி எதற்கு என்னை தேடினீர்கள் என்று இன்னும் சொல்லவே இல்லையே?”

“சின்ன பையன்……..? யாரு…? நீ?”

“சரிப்பா விடுங்கப்பா. புது வருடமும் அதுவுமாக எதற்கு என்னை வீணே வம்புக்கு இழுக்குறீர்கள்?”

“அதுவா..? எங்கள் இருவருக்கும் வேறு அறை வேண்டும்.”

“ஏன் நீங்கள் இப்போது தங்கி இருக்கும் அறைக்கு என்ன ஆயிற்று?”

“தாங்க முடியவில்லை ராகவா”

ரேணு சொன்னவிதத்தில் அவள் சொல்லாமல் விட்டதை புரிந்து கொண்டவனாக தோளை குலுக்கினான். “சரி. நான் பார்த்து விட்டு சொல்கிறேன். என் அருகாமையிலேயே ஒரு அறை கிடைக்கும் என்று தான் நினைக்கிறேன். பார்ப்போம். கொஞ்சம் வாடகை தான் அதிக்கப்படியாக இருக்கும்”

“பரவாயில்லை ராகவா. நாங்கள் சமாளித்து கொள்கிறோம்”

இருவரும் ஒரே குரலில் கோரஸாக அவசர அவசரமாக சொல்லவும் அவர்களுடைய தேவை எத்தனை அத்தியாவசியமானது என்பது புரிந்தவனாக அவர்களை பார்த்து வலது கட்டை விரலை உயர்த்தி காண்பித்து சிநேகமாக புன்னகைத்தான் ராகவன்.

மணி.11.58.

இன்னும் இரண்டு நிமிடத்தில் புது வருடம் பிறக்கப் போகிறது. திடீரென்று அந்த பிராந்தியமே அமைதலாயிற்று. எல்லோரும் மூச்சை இழுத்து பிடித்து கொண்டு நின்றிருந்தார்கள். அவ்வளவு பெரிய ஜனத்தொகையும் ஒரே நேரத்தில் அத்துணை அமைதியாக இருந்தது அதிசயம் தான்.

அப்போது வானத்தில் உயரத்தில் நெருப்பு பூக்கள் வர்ணஜாலத்தை அள்ளி வீசி புது வருடத்தை வரவேற்றது. திடீரென்று ஒரே நேரத்தில் கூடி இருந்த மக்கள் அனைவரும் அருகில் இருந்த முன் பின் தெரியாதவர்களையும் கரங்களை குலுக்கி புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள். ஜோடியாக வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் சற்றே அணைத்தும் கன்னத்தில் முத்தமிட்டும் வாழ்த்து பரிமாறி கொண்ட அந்த நிமிடம் உலகமே ஆனந்தமான அன்புமயமாக இருந்தது.

அந்த சூழல் முழுதும் மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் வியாபித்து இருந்தது. தேம்ஸ் நதியில் மிதந்து கொண்டிருந்த சுற்றுலா படகுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தண்ணீரில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அந்த படகுகளில் மெல்லிதாக இசைத்து கொண்டிருந்த பாடல்கள் அந்த பகுதியை நிரப்பி கொண்டிருந்தது.

விழா முடிந்து கூட்டத்திலிருந்து வெளியே வந்தார்கள் மூவரும். அப்போது நிகோசி அவளுடைய நண்பர்களுடன் அவர்களை கடந்து சென்றவள் இவர்களை பார்த்து விட்டு கையை அசைத்து ஹாய், ஹாப்பி நியு இயர் என்று வாழ்த்து சொல்லி விட்டு போனாள். சாருவும் பதிலுக்கு கையை அசைத்தாள். இவர்கள் மிகவும் சிநேகமாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் தனக்கு தான் அவர்களுடைய உல்லாசம் ஒப்பு கொள்ள கூடியதாக இல்லை. என்ன செய்வது? ஒதுங்கி கொள்வது தான் உத்தமம்.

அவளை மாதிரி பலதரப்பட்ட நாட்டிலிருந்தும் லண்டன் யுனிவர்சிடியில் உயர்கல்விக்கென்று நிறைய மாணவர்கள் படித்து கொண்டிருந்தார்கள். இவள் வகுப்பிலே கூட வட இந்திய மாணவர்கள் உண்டு. இவர்களுடைய சீனியர் மாணவர்களில் தமிழர்களும் உண்டு.

அதிலும் குறிப்பாக கௌதம் சேகர்..!

தமிழர்களின் சராசரி உயரத்திற்கும் சற்றே அதிக்கபடியான உயரத்தில் அகன்ற தோள்களும் சிறுத்த இடையுமாக தமிழர்களுக்கே உரிய நிறத்தில், கண்களில் எப்போதும் ஒருவித உல்லாசத்துடன், எதிரே இருப்பவர்களை அவனை கண்ட மாத்திரத்தில் உடனே அவனுடைய சந்தோஷத்தில் பங்கு பெற தூண்டும் புன்னகையுடன் வசீகரமானவனாக இருப்பவன்.

இப்போது ஏன் குறிப்பாக இவனை மட்டும் நினைத்தோம்? என்ற சாருவின் கேள்விக்கு பதில் கிடைப்பதற்கு முன் இன்று என்ன அதிசயமாக இருக்கிறது? நினைப்பவர்கள் எல்லோருமே உடனே கண்ணில் அகப்பட்டு கொள்கிறார்களே?

எதிரில் கெளதம் ஒரு பெரிய பட்டாளத்துடன் வந்து கொண்டிருந்தான். இந்த நாட்டு பெண்கள் தான்

என்று ஒரு வரைமுறை எல்லாம் இல்லை அவனுக்கு. ஏகதேசம் உலகின் எல்லா நாட்டு பெண்களும் அவனுடன் தான் இருந்தார்கள்.

“நாம என்னடா என்றால் ஒரு காப்பிக்கு கணக்கு பார்க்கிறோம். ஆனால் இவன் எப்போதும் ஒரு பெரிய கூட்டத்துடனே தான் சுற்றி கொண்டிருக்கிறான். இவனுக்கு எப்படித் தான் செலவு கட்டுபடி ஆகிறதோ?”

“சும்மா இரு ரேணு. அவன் காதில் விழுந்து விடப்போகிறது”

“நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது இவனால் எப்படி பணத்தை தண்ணீர் போல செலவு செய்ய முடிகிறது என்று?”

“ஒருவேளை ஊரிலிருந்து அவனுக்கு பணம் வருகிறதோ என்னவோ?”

“ஓரளவிற்கு வசதியானவன் என்று தான் நினைக்கிறேன்”

“உனக்கு எப்படித் தெரியும் ராகவா?”

“பொதுவாக சின்ன லீவு கிடைத்தால் கூட யூரோப் டூருக்கு கிளம்பி விடுவான் அதுவும் தனியாக இல்லை. ஒரு பெரிய கூட்டத்துடன் தான். எப்படித் தான் கட்டுபடி ஆகுமோ என்று நானுமே நினைத்து கொள்வேன். இன்று நீங்களும் என்னைப் போலவே ஆச்சரியப்படுவதனால் தான், நான் இதை சொல்கிறேன். நம்மை போல படிக்க வந்திருப்பவர்களால் நினைத்து பார்க்க முடியுமா?”

“ஹாய் ராகவா, என்ன நீ கூட அதிசயமாக வெளியே கிளம்பிட்டே? அதுவும் பிரெண்ஸ்சுடன்”  கௌதம் இவர்கள் எதிரே வந்து நின்று ராகவனிடம் கையை நீட்டினான்.

-G. ஷியாமளா கோபு

1 thought on “அழகே, அருகில் வர வேண்டும்-1-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *