25
தொழிற்சாலையின் முகப்பில் இருந்தது இவள் வேலை செய்த நிர்வாகப் பிரிவு. இவளுடைய முக்கிய வேலைகளில் ஒன்று இந்த கம்பனியின் பலதரப்பட்ட டிபார்ட்மென்ட் அத்தனையும் இணைத்து தொழில் முறை கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது அதை முன்னின்று நடத்துவது தான். நந்தினி அவள் வயது ஒத்தவள் ஆதலால் இவளுடன் இணைந்து அதே வேகத்தில் பணியாற்றுவாள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. அது அவர்களுக்குள் தோழமையை உண்டாக்கியிருந்தது.
இண்டர்காம் அடித்தது. எடுத்து பேசிய நந்தினி சொன்னாள்.
“சாரு. உன்னை பெரியவர் கூப்பிடுகிறார்”
உள்ளே நுழைந்தவளை கொஞ்சம் பதட்டமாகவே அழைத்தது பெரியவர் என்று சொல்லப்படுகின்ற ராஜசேகரின் குரல்.
“வாம்மா சாருலதா. உனக்கு முக்கியமான வேலை வந்திருக்கு. செய்வாயா?”
“கண்டிப்பா சார். சொல்லுங்க. என்ன செய்யணும்?”
“இன்று ஜெர்மனிலிருந்து டெலிகேட்ஸ் வந்திருக்காங்க. அவர்களை நம் பாக்டரியில் கொண்டு போய் நம் புரடக்சன் பகுதியை காட்டி விளக்கி கூட்டி வர வேண்டும்”
“சரிங்க சார்”
“அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சம் விளக்கமாகவே பதில் சொல் சாரு.”
“சரிங்க”
அவர் சொல்லியது போல ஜெர்மன் டெலிகேட்ஸ் ஆறு பேரை அழைத்து கொண்டு சின்ன பேட்டரிகாரில் ஏறி பாக்டரியை அடைந்தாள் சாரு.
முகப்பில் இறங்கி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தார்கள். உள்ளே நுழையும் இடத்தில் இருந்த பேக்கிங் செக்சனை பார்த்தி விட்டு அப்படியே ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே புரடக்சன்
பகுதிக்கு வந்தார்கள்.
உள்ளே நுழைந்தவர்களை அந்த பிரிவு பணியாளர்கள் தான் வரவேற்றார்கள். பொறுப்பாளரை காணவில்லை. எங்கே என்று விசாரித்தவளுக்கு அங்கே பழுது ஏற்பட்டிருந்த ஒரு மிசினை காண்பித்தார்கள்.
அருகில் நெருங்கி அந்த பொறுப்பாளரின் பெயரை சொல்லி கூப்பிட வாயை திறக்கும் முன்பு மிசினின் அடியில் இருந்து அவர் வெளியே வந்தார். வந்தவர் சாருவையும் மற்றவர்களையும் பார்த்து முகமன் சொல்லியவர், சாரு கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த மிசினின் உபயோகம் அதன் உற்பத்தி செயல்திறன் எல்லாவற்றையும் விளக்கி சொன்னார்.
“பழுது சரியாகி விட்டதா சார்?”
“சார் பார்த்து கொண்டிருக்கிறார். முடிந்து விடும்”
“சாரா.? யார் அது?”
“அது தான் மேடம் நம்ம ஆர். அண்ட்.டி சார்”
ஆர்.அண்ட் டி. ரிசெர்ச் அண்ட் டெவலப்மென்ட். மிகவும் முக்கியமான பிரிவு. அவர்களுடைய ஆராய்ச்சியின் அடிப்படையில் தான் புது உற்பத்தி இருக்கும். அன்றைய சந்தை நிலவரப்படி என்ன தேவையோ அதன் அடிப்படையில் உற்பத்தி பொருள் தீர்மானிக்கப்படும். சிறிய முதலீட்டில் அனாவசிய சேதாரம் இல்லாமல் உற்பத்தியை டிசைன் செய்வது இந்த பிரிவு தான்.
அதன் தலைவர் மிகவும் முக்கியமானவராகத் தானே இருப்பார். இவர் என்னடா என்றால் பழுதடைந்திருக்கும் மிசினிக்கு கீழே என்ன செய்கிறார்?
அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே பழுதடைந்திருந்த மிசினின் அடியில் இருந்து அழுக்கு பேண்ட்டில் செருகியிருந்த அழுக்கு சட்டையுடன் வெளியே வந்தவன் வேறு யாரும் அல்ல.
கௌதம் சேகர்.
######
“உலகம் ரொம்ப சின்னது இல்லையா கௌதம்?”
“இல்லையா பின்னே? ஜெர்மனியிலிருந்து நானும் லண்டனில் இருந்து நீயும் இங்கே சந்திப்பது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.”
“லண்டனா இருந்தால் என்ன? ஜெர்மனியா இருந்தால் என்ன? நம்முடைய வேர் இது தானே?”
“நீ இன்னும் விடலையா இந்த வேரையும் ஊரையும்?”
“நீங்கள் இன்னும் அதை மறக்கலையா?”
“மறக்க கூடிய டைலாகா அது?”
“நான் படித்த மு.மேத்தாவின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது”
“இதுக்கு கவிதை வேறு இருக்கிறதா?”
“கிண்டல் பண்ணாதீங்க கௌதம்”
“ச்சே, ச்சே,இல்லை. இல்லை, நீ சொல்லு”
“கண்கள் என்னவோ வானத்தில்.
கைகள் என்னவோ ஜன்னல் கம்பியில்”
“அப்படினா.?”
“நம் பார்வை எங்கோ தொலைவை பார்த்தாலும் நம் கால்கள் தரையில் தானே படிந்திருக்கிறது. அது போல நாம் எந்த ஊருக்கு எந்த நாட்டிற்கு பிழைக்க போனாலும் நம் மண் இது தானே. அதைத் தான் சொன்னேன்”.
“அது உண்மை தான். நம்முடைய சொந்தபந்தம் எல்லாமே இங்கே தானே”
“அது தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது”
“சரியாக சொன்னாய். . அப்புறம்..! சொல்லு சாரு?”
“நான் சொல்வது இருக்கட்டும். முதலில் நீங்கள் சொல்லுங்கள்”
“நான் என்ன சொல்ல வேண்டும்?”
“நீங்கள் அந்த ஜெர்மன் கம்பனியில் வேலை கிடைத்து ஒரு மாதத்தில் சேரப் போகிறேன் என்று
தானே கடைசியாக சொல்லி சென்றீர்கள்”
“ஆமாம்.”
“அப்புறம் எப்படி இந்த கம்பனியில்?”
“நீ சொன்னது போல ஜெர்மனியில் ஒரு வருடம் வேலை செய்தேன் சாரு. அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அங்கே வேலை செய்ய முடியவில்லை”
“அதைத் தான் கேட்கிறேன்”
“என் வீட்டில் ஒரே போராட்டம்.. அங்கே வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விடச் சொல்லி தொந்திரவு. அதற்கேற்றார் போல என்னுடைய அம்மாவிற்கும் உடம்பு சரியில்லை. அதை விட மனசு சரியில்லை. என்னை பிரிந்து இருக்க முடியாது என்று தீர்மானம். அதை மீற யாரால் ஆகும்? அது தான் இங்கேயே வேலைக்கு வந்து விட்டேன்”
“இந்த கம்பனியை எப்படி செலக்ட் பண்ணினீர்கள்?”
“ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் என்றதும் எனக்கும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. அரைத்த மாவை திரும்ப அரைக்காமல் புதுசு புதுசா ஏதாவது முயற்சி செய்யலாமே என்று தான் இதில் சேர்ந்தேன்”
“அதுவும் சரி தான்”
“என்னை கேட்டாயே. நீ எப்படி லண்டனை விட்டு இங்கே வேலைக்கு வந்தே?”
“வேறு என்ன? உங்களை போலத் தான்”
“ஏன் என்ன ஆச்சு?”
“என்னுடைய பாட்டி”
“ஓ, உன் பெற்றோர்கள் ஒன்றும் சொல்லவில்லையா?”
“எனக்கு பெற்றோர்கள் கிடையாது கௌதம்”
“சாரி”
“இதில் நீங்கள் இவ்வளவு வருத்தப்பட என்ன இருக்கிறது? என் துரதிர்ஷ்டம். சிறுவயதிலேயே இருவரும் இறந்து போய் விட்டார்கள்”
“பாட்டி தான் வளர்த்ததா?”
“ஆம். பாட்டியும் தாத்தாவும்”
“ரொம்பவும் வயதானவர்களோ?”
“ஆமாம். என்னுடைய வருமானம் மட்டுமல்ல நான் தான் அவர்களின் ஒரே ஊன்றுகோல். பாவம் அவர்கள்.”
“இங்கே உன்னுடன் தான் இருக்கிறார்களா?”
“ம்.ஹூம். ஊரில் கிராமத்தில்”
“உன்னுடன் பிறந்தவர்கள்?”
“யாருமில்லை. நான் மட்டும் தான்”
“என் வீட்டிலும் நான் மட்டும் தான். நமக்குள் தான் எத்தனை ஒற்றுமை”
“ஆமாம். இதில் மட்டும் தான்”
“நீ எப்படி இந்த கம்பனியை தேர்வு செய்தாய்?”
26
“நூறு வருட பழமையான கம்பனி. நல்ல சந்தை மதிப்பு இருக்கிறது. மிகப் பெரியதும் கூட. நல்ல சம்பளம். வேலையில் சுதந்திரம். நன்றாக இருக்கிறது இங்கே வேலை செய்வதற்கு”
“அதுசரி. இதே கம்பனியில் ஆறுமாதமாக இருக்கிறாய். ஒருநாள் கூட கண்ணில் அகப்படவே இல்லையே? எப்படி?”
“அதைத் தான் நானும் யோசித்தேன். நான் தானே எல்லா டிபார்ட்மென்ட் ஆபிசர்ஸ் மீட்டிங் ஒழுங்குபடுத்துவது. எப்படி என் கவனத்திற்கு வரவில்லை?”
“அப்படியும் சொல்ல முடியாதே. ரெண்டு மீட்டிங்கின் போது நான் விடுப்பில் இருந்தேன்.”
“போன மாத மீட்டிங்கில் கூட காணலையே?”
“டிரைனிங் போய் இருந்தேன்”
“ஓஹோ. அது தானே பார்த்தேன். இனி நாம் அடிக்கடி சந்திக்கலாம்”
“ஏன் அலுவலகத்தில் தான் சந்திக்க வேண்டுமா என்ன?”
“பின்னே?”
“தனிப்பட்ட முறையிலும் கூடத் தான் சந்திக்கலாம்”
“அது தானே பார்த்தேன். இன்னும் என்னடா..?”
“என்னையா என்னடா என்கிறாய்?”
“நீங்கள் கொஞ்சம் கூட மாறவே இல்லை கௌதம்”
“ஏன் மாறனும்?”
“அது சரி. வெளிநாட்டிலேயே மாறலை. உள்ளூரிலா மாறப்போகிறீர்கள்?”
“பேச்சை மாற்றாதே. என்னுடன் வெளியே வரப் போகிறாயா? இல்லையா?”
“எப்பவாவது”
“ஓ.கே. அது போதும். சரி, கேட்க மறந்துட்டேனே. உன்னுடைய ராகவன் என்ன ஆனான்?”
“என்னுடைய ராகவனா? இது என்ன புதுக்கதை?”
“அவன் உன்னுடைய ராகவன் இல்லையா?”
“எப்போதுமே அப்படி இல்லை”
“சரி சரி. உன் நண்பன் ராகவன் என்ன ஆனான்?”
“ம். அது………!. இப்போது அவன் என் நண்பனும் இல்லை”
“அம்மா தாயே. தெரியாமல் கேட்டு விட்டேன்.”
“அவனுக்கும் ரேணுவிற்கும் கல்யாணம் ஆயிற்று. இருவரும் லண்டனில் தான் இருக்கிறார்கள்”
“ரேணுவும் ராகவனுமா? எப்படி? அவன் உன் பின்னால் அல்லவா சுற்றி கொண்டிருந்தான்”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“ஏன் தெரியாது? ரொம்ப சமத்து பையனா உன்னிடம் எதையாவது என்னை பற்றி கொளுத்தி போட்டு கொண்டிருப்பானே”
“ச்சே. ச்சே. பாவம். அவன் ஒன்றும் உங்களைப் பற்றி சொன்னதில்லை.”
“அது போகட்டும். உன்னை கட்டாமல் எப்படி ரேணுவை கட்டினான்?”
“அவளும் அவனும் ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள் இல்லையா? அதனால் இருக்கும்”
“என்னடா இது? ஒரே இடத்தில் வேலை செய்வதால் மட்டும் ஒருத்தரை கல்யாணம் செய்து கொண்டு விட முடியுமா?”
“ஏன் முடியாதா?” அவனை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.
“மனதிற்கு பிடிக்க வேண்டாமா?”
தன்னைப் போலவே அவனும் யோசித்தது அவளுக்கு மனநிறைவை கொடுத்தது. தான் ஒன்றும் தப்பான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கவில்லை.
“அவனுக்கு அது போதும்”
“ச்சே, என்ன மனுஷன்?”
“ஏன் அவனை கறுவுகிறீர்கள்?”
“நானாக இருந்திருந்தால் மனதிற்கு பிடித்த பெண்ணைத் தான் கல்யாணம் செய்திருப்பேன்”
“எல்லோரும் உங்களைப் போல இருப்பார்களா?”
“நீ எப்படி சாரு? மனதிற்கு பிடித்திருக்கனுமா? அல்லது ஒரே இடத்தில் வேலை செய்தால் போதுமா?”
அவனுடைய பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக பதில் சொன்னவள் அதை அவனுக்கு புரியும்படியாகவே சொன்னாள்.
“என்ன கேள்வி? மனதிற்கு பிடித்தம் என்று ஒன்று இருக்கிறதே”
“அப்படா. நல்லவேளையாக ஊரு வேருன்னு லெக்சர் கொடுக்காமல் இதிலாவது தெளிவாக இருக்கிறாயே”
“நான் எல்லாவற்றிலும் தெளிவாகத் தான் இருக்கிறேன். நான் இப்படி சொன்னது உங்களுக்கு ஒத்து போனதால் வித்தியாசமாக இருக்கிறது உங்களுக்கு”
“உனக்கு மனதிற்கு பிடித்தவனாக கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்”
“என்ன பெரிய நூத்து கிழவனாட்டம் வாழ்த்துகிறீர்கள்?”
“வீட்டில் பார்க்கும் எவனாவது சோணகிரியைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லாமல் மனதிற்கு பிடித்தவனைத் தான் கட்டிக்குவேன்னு சொன்னியே. போகட்டும் அந்த மட்டும் கடவுள் உனக்கு நல்ல புத்தியை கொடுத்திருக்கிறாரே. அதனால் அப்படி வாழ்த்தினேன்”
“நன்றி. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்”
“சரி. வாழ்த்துக்கு நன்றி” எழுந்து நின்று இரு கரம் கூப்பினான்.
ஆசீர்வதிப்பவளைப் போன்று அவளும் வலது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் போல ஜாடை செய்தாள்.
சிரித்துக் கொண்டே “வருகிறேன்” என்றான்.
“உம்”
“இனி நாம் அடிக்கடி சந்திக்கலாம்”
“ஊஹூம்”
“சந்திக்கிறோம்” என்று உரிமையுடன் சொல்லி விட்டு கையை அசைத்து விடை பெற்று கொண்டு போனவனை தீர்க்கமாக பார்த்து கொண்டு நின்றிருந்தாள் சாரு.
இரண்டு வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறாள். நடுவில் இந்த இடைப்பட்ட காலங்கள் இல்லாதது போல நேற்று விட்டு சென்ற பேச்சை இன்று தொடர்வது போல எப்படி யதார்த்தமாக இயல்பாக இருக்கிறது இவனுடன் பேசி கொண்டிருப்பது.
ஆள் மட்டும் மாறி இருக்கிறான். அந்த பழைய துறுதுறுப்பும் சேட்டையும் ஸ்டைலும் நிதானித்திருக்கிறது. பதிலுக்கு மிகவும் பொறுப்பானவனாக தென்படுகிறான். அடுத்தவர்கள் பேசுவதை கேட்க கூடிய பொறுமை இருக்கிறது.
பையனைப் போன்ற தோற்றம் போய் வாலிபத்தின் வனப்போடு, வாளிப்பான ஆணாக, முகத்தில் இன்னும் களை கூடியவனாக வசீகரமாக இருந்தான்.
இங்கேயும் பெண் நண்பர்கள் கூட்டம் இருக்குமா? மனதிற்குள் எழுந்த கேள்வியை தலையை தட்டி சரி செய்து கொண்டாள் சாரு. அவன் யாருடன் சுற்றி கொண்டிருந்தால் நமக்கென்ன?
###
“ஹாய் நந்தினி, சாரு இல்லையா?” மூடியிருந்த கதவை பாதி திறந்து சாருவின் கேபினிற்குள் எட்டிப் பார்த்தான் கௌதம்.
“பாக்டரி வரைக்கும் போய் இருக்கிறார்கள். இப்போது வந்து விடுவார்கள்”
“ம். அப்படியா?”
“வாங்களேன் கௌதம். உட்காருங்கள். இப்போது வந்து விடுவார்கள்”
“இல்லை. நான் போய் விட்டு….” சொல்லிக் கொண்டிருக்கும் போதே வராந்தாவில் சாரு வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான்.
“அடடே. சாரு வந்திட்டியா?”
“வாங்க கௌதம்”
தன்னுடன் அறையின் உள்ளே நுழைந்தவனை எதிரில் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னாள்.
“ஏது இவ்வளவு தூரம்?”
“பெரியவரைப் பார்க்க வந்திருந்தேன்”
“நான் கேட்கணும் என்று நினைத்தேன்.”
அவள் சொல்லி முடிக்கும் முன்பு”கேளு, கேளு” என்றான் உற்சாகமாக.
“அடடா” என்றாள் புன்னகையுடன் அவன் சேட்டைக்கு.
அவனும் பதிலுக்கு புன்னகைத்தான். சேட்டையை விட்டு அலுவலக குரலில் கேட்டான்.”என்ன சாரு?”
🧡🧡🧡🧡🧡🧡