Skip to content
Home » ஆலகால விஷம்-12

ஆலகால விஷம்-12

அத்தியாயம்-12

வருணி இங்கு வரும் முன் அழுது துவண்டு இருப்பதாகவே தோற்றுவித்தது. அந்தளவு கன்னம் வீங்கி கண்ணில் பொட்டு உறக்கமின்றி, நடமாடும் நங்கையென்று அனுமானித்துவிடலாம்.

  “உட்காரும்மா. இந்தா” என்று நீரை தர, மறுக்க தோன்றாமல் வாங்கி பருகினாள்.

   “இங்கப் பாரும்மா…. இது ஸ்டேஷன் இல்லை. உங்கப்பா தான் என்‌ பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள எல்லாம் வர வேண்டாம்னு கெஞ்சினார். சப்போஸ் பேச்சுக்கு எதிரா பேசின இங்கயும் கை நீட்ட தயங்க மாட்டோம்‌. ஏன்னா இங்க இருக்கற டீக்கடை மாஸ்டர் நம்ம ஆளு. புரியுதா” என்றதும் வருணிக்கும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல பயமிருந்தது.

  “உன்னை கல்யாணம் பண்ணிக்க இருந்த மகிழன் காணாம போனதாக சொல்லி அவங்க பெத்தவங்க கம்பிளைன் பண்ணினாங்க. அவர் போன் கடைசியா எண்ணூர் போற இடத்துல பாலத்துக்கு கீழே சிக்னல் கட்டாகியிருக்கு.

  போன்ல வந்த வாட்சப் நார்மல் கால்ஸ் எல்லாம் விலாவரியாக பார்த்தாச்சு.
  வநீஷா என்ற பொண்ணு கூட பேசி பழகியிருக்காப்ள. யாரு என்னனு கேட்டப்ப உங்க அத்தை தம்பி பொண்ணுன்னு சொல்லிட்டாங்க.

   உனக்கு அக்காவாமே…. பதினைந்து வயசுல தொலைந்து போயிட்டான்னு உங்கப்பா கம்பிளைன் பண்ணின சாட்சியை எடுத்து நீட்டறார்.
 
   உங்கத்தை மாமா இரண்டு பேருமே அவங்க பையனை இனி தலைமூழ்கிட்டோம்னு சொல்லிட்டாங்க. கேஸை வாபஸ் வாங்கிட்டாங்க.

   ஆனா நீ மட்டும் இரண்டு பேரையும் கண்டு பிடிச்சி கொடுங்கன்னு கேஸ் பைல் பண்ணிட்டு இருக்க. உங்கப்பா உன்னை இந்த கேஸை வாபஸ் வாங்க சொல்றார்.‌
  வீட்ல நீ சாப்பிடாம கொள்ளாம அடம் பிடிக்கிறியாம்.

  உனக்கு துரோகம் செய்த அக்காவையும், அந்த பையன் மகிழனையும் ஏன் தேடணும்?

  உன் அழகுக்கு வேறயொருத்தனை கட்டிக்கோம்மா. எங்களுக்கும் இந்த கேஸை இழுத்து மூடுவோம்” என்று கிளிப்பிள்ளைக்கு  சொல்வது போல உரைத்தார்.

     கண்ணீரை துடைத்து, “இல்லை சார்… கேஸ் வாபஸ் வாங்கிட்டா யாரும் அவங்களை தேட மாட்டாங்க. என் மகிழ் அத்தான் என்னை விரும்பினார்.‌ என்னை மணக்க பத்திரிக்கை வரை போயிட்டு, ஏன் அக்காவை கட்டிக்க முடிவெடுத்தார்? அக்காவோட தொலைந்து போனது பதினைந்து வயசுல. இப்ப திரும்ப வந்தவ எங்களை எல்லாம் பார்க்காம, அவரோட மட்டும் பேசி பழகி இப்ப காதலிப்பதா கூட்டிட்டு போயிருக்கா. ஏன் எங்களை சந்திக்க என்ன தடுக்குது?

   அம்மா அப்பா சனியன் போய் தொலையுதுனு ஈஸியா சொல்லிட்டாங்க. அக்காவும் மகிழ் அத்தானும் ஏன் இப்படி பண்ணினாங்க? அக்காவுக்கு நான் என்றால் உயிராச்சே. என் வாழ்க்கையில் ஏன் தலையிட்டா? எனக்கான நிறைய கேள்விக்கு அவளும் மகிழ் அந்தானும் பதில் சொல்லணும். நான் எஃப்.ஐ.ஆரை வாபஸ் வாங்க மாட்டேன்” என்று துடித்தாள்.

   “இப்படி தான் சார் சொன்னதையே பைத்தியம் மாதிரி சொல்லிட்டு இருக்கா. அந்த சனியன் ஏன் இத்தனை நாள் கழிச்சு வந்துச்சோ, என் மாப்பிள்ளை மனசை கெடுத்து அவரை இழுத்துட்டு ஓடிட்டா.

   அவ நல்லாவே இருக்க மாட்டா சார்‌. நல்ல சாவே வராது. என் குடும்பத்தை என் தங்கை குடும்பத்தோட உறவை சிதைச்சிட்டு போன ஓடுகாலி சார் அவ. அவயெங்கயிருந்தா இவளுக்கு என்ன சார். இவளை ஒழுங்கா சாப்பிட சொல்லுங்க சார். ஒரு வாரமா சரியா சாப்பிடாம பித்து பிடிச்சவ மாதிரி திரியறா” என்று வருணி தந்தை மகேஸ்வரன் அழுதார் .

   அங்கிருந்த பெண் போலீஸ் மனம் தாளாமல், “ஏம்மா… உனக்கு அறிவிருக்கா. பெத்தவங்களுக்கு இத்தனை கஷ்டம் கொடுத்துட்டு போனா, அந்த மூதேவியை தேடி கண்டுபிடிச்சி என்னத்த கேட்கப்போற? அசிங்கம் புடிச்சதுங்க கடைசியா கோவாவுக்கு போயிருக்குங்க. ஹனிமூன் கொண்டாட. நீ ஏன்மா லூசா இருக்க. இதுல கையெழுத்து போட்டு கிளம்பி போ. உங்கப்பா பார்க்குற நல்ல பையனுக்கு கழுத்தை நீட்டு” என்று கூறினார். இத்தனை கால சர்வீஸ் சற்று குரலை உயர்த்தினாள் அப்பெண் அதிகாரி.

  வருணியோ “முடியாது என்று மறுக்க பார்த்தாள்.‌

  “அடச்சீ… கையெழுத்து போடு. ஊர்ல ஆயிரம் கேஸ் பிடிக்கணும்‌. உனக்கு உடம்பு சுகத்துக்கு ஏங்கின லவ்வர்ஸை நாங்க தேடணுமா? போடுடி கையெழுத்தை” என்று அதட்டினார் பெண் அதிகாரி.

   வருணி இயல்பாக தந்தை வளர்ப்பில் ‘இன்னோசெண்ட்’ பெண்ணாக இருக்க அந்த பெண் அதிகாரி சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு நின்றாள்.

     மகேஸ்வரனோ, “மேடம் என்‌ மகளை துன்புறுத்தாதிங்க. இனி கேட்டுப்பா.” என்று வேண்ட அவளை அழைத்து செல்ல செய்கையில் கூறினார்கள் போலீஸ். 

  அப்பா மறுக்க பெண் புகார் தர என்று இழுப்பறியில் இருந்த புகார் திரும்ப பெறப்பட, தலைவலி நீங்க டீயை பருகி போலீஸ் புறப்பட்டனர்.

இந்த டீ கடையில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற ரீதியில் மற்றவர்கள் இருந்தனர். 

  ஒருவிதத்தில் மகேஸ்வரனுக்கு இந்த நிகழ்வு திருப்தி தான்‌. வநீஷாவை தேடி அழைத்தால் தலைவலி தான். அதற்கு சின்ன மகளை அதட்டி உருட்டினாலும் இனி இவள் இப்படி வந்து காவல்துறையில் படியேறிட மாட்டாள். நல்லவேளை உணவு நேரமென்பதால் டீகடை இடமும் காலியாக இருந்தது.

  எப்படியாவது மனசை மாற்றி சாப்பிட வைத்து மகிழனை மறக்கடிக்க வைக்க வேண்டும் என்று மகளிடம் போராட தயாரானார்.

   வருணி அழுதுக்கொண்டே அந்த சிறு டீக்கடையை விட்டு புறப்பட்டாள்.

  தந்தையின் பைக்கில் ஏறியமர்ந்து சென்றவளை, சாஹிர் ஹூடி அணிந்த உடையால் தலையை மறைத்து கூலிங் கிளாஸ் மாட்டி அவளையே பார்த்தான்.

  அழுதா கூட அவ்ளோ அழகாயிருக்கா. அவ கன்னத்துல வழியற கண்ணீரை என் உதட்டால் ஒற்றியெடுத்து அழாதனு சொல்லணும். அதெல்லாம் நடக்க, காலம் ஆகுமென்று நிலவரம் அறிந்தவனாக ஆர்டர் செய்த டீயை குடித்து முடித்து சென்றான்.

   அவனுக்கென பார்த்து வாங்கிய வீட்டுக்கு வந்ததும், சிசிடிவியில் மகிழனை பார்வையிட்டான்.

   மகிழனை இன்டியூஸ் கோமாவில் கிடத்தியிருந்தான் அல்லவா?
இது ஒரு மயக்க மருந்தின் கட்டுப்படுத்தப்பட்ட டோஸ் மூலம் ஏற்படும். ஒரு தற்காலிக கோமா அல்லது ஆழ்ந்த மயக்க நிலை என்று கூறுவார்கள். எல்லாம் கிரணின் புண்ணியத்தில் அறிந்து வைத்ததிருந்தான்‌. என்ன கிரணையும் கொன்று விட்டான் இதெல்லாம் அறிந்ததே. ஆனால் மகிழனையும் கிரண் போல மயக்கத்தில் கொன்றிருக்கலாம். சாஹிர் நோக்கம் அதுவல்ல. மகிழனை கொன்றே ஆக வேண்டுமென்று இக்கட்டு வந்தால் கொல்ல துணிபவன்.

   இக்கட்டு வரக்கூடாதென்று முனைப்பாய் இருந்தான்.

   ஒருவேளை மகிழன் தானாக மயக்கம் தெளிந்து அந்த இடத்தில் தப்பிக்க வழியின்றி, பேச ஆளின்றி, பைத்தியம் பிடிக்காத குறையாக தூக்கிலிட்டு கொண்டால், அல்லது இந்நேரம் இறந்து இருந்தாலும் அவன் உடலை உருத்தெரியாமல் அகற்ற வேண்டிய காரியத்தில் ஈடுபடுவான்.

   அந்த பரிதாபநிலை மகிழனாக இறக்கும் வரை சாஹிர் வேடிக்கை பார்ப்பான்.‌ மகிழனை தேடி வர வருணி துடிக்கின்றாளே?!

    மகிழனை அந்தளவு விரும்புகின்றாளா?  என்று வியப்பு மேலோங்க அந்த காதலை வருணி தன் மீது காட்டுவதற்கு அடுத்த திட்டம் வகுத்தான்.‌

   வருணி படித்து முடித்ததால் கல்லூரிக்கும் வரமுடியாது . வீட்டிலிருப்பவளை எவ்வாறு தன்னை சந்திக்க வைத்து அறிமுகமாவது என்று சிந்தித்தான்.

   சாஹிர் முகத்தில் அரும்பிய மீசை முடியை தடவியபடி கண்ணாடியில் ஏறிட்டான்.

   மகேஸ்வரன் மூலமாக போவதெல்லாம் கஷ்டமான விஷயம். அவருக்கு தன்னை பிடிக்க வைப்பதற்கு வருணியை லாவகமாக காதலிக்க வைக்கலாம்.

   முதல் அறிமுகத்தை எப்படி துவப்பது? எந்த இடத்தில் சந்திக்க வாய்ப்பு அமையும்?

   இந்த கஷ்டத்தில் அவள் ஏற்பாளா? கஷ்டத்தை தான்டி, அவளை காதலிக்க வைப்பது சாமர்த்தியமா? தனக்கான சவால்.

  சாஹிருக்கு அந்த சவால் பிடித்திருந்தது. மகிழனை போல ஆண்மகனிடம் மனதை பறிக்கொடுத்து, முத்தமிட்டு ஆழத்தில் இருந்தவனை விரட்டி, தன்னை பதிய வைக்க சூழ்நிலைக்காக காத்திருந்தான்.

   இங்கு வீட்டில் வருணிகா, மூக்குறிந்து மூலையில் சென்று அமர்ந்தாள்.

  “என்னங்க ஆச்சி?” என்று ரேணுகா உடல்நிலை தள்ளாட்டதுடன் வந்து கேட்டார்.

    ”என்னத்த ஆகணும். அந்த போலீஸ்காரர் நம்ம வீட்ல கொழுப்பெடுத்து அலைந்தவளுக்காக கண்டுபிடிக்க அலைவாரா? எஃப்.ஐ.ஆர் வாபஸ் வாங்கியாச்சு” என்றதும் ரேணுகா அமைதியானார்.

   மகேஸ்வரன் உடை மாற்ற அறைக்கு சென்றார்.

  “ஏம்மா…  அக்கா இல்லாதப்ப எத்தனை முறை அழுவ. அவ எங்கயிருக்காளோ, நல்லா சாப்பிடறாளோ, பாதுகாப்பா இருக்காளா, நல்லா தூங்குவாளா? இப்படி எத்தனை முறை புலம்பியிருக்கிங்க.

  அவளுக்கு பிடிச்சது செய்தா ஒரு வாய் சாப்பிடுவியா? அப்படி அவயில்லாதப்ப கஷ்டப்பட்ட நீ.

  இப்ப அக்காவே மகிழ் அத்தானை தேடி வந்து பேசி பழகி, காதலிச்சு கையோட கூட்டிட்டு போயிருக்கா. அவளை பார்க்க உனக்கு ஆசையில்லையா? அப்பாவும் நீயும் அக்காவை தலை மூழ்கிட்டிங்களா?
 
   எனக்கு இப்ப வரை அத்தைக்கு அக்காவை ஏன் பிடிக்கலைன்னு தெரியலை. என்னை ஏன் பிடிக்குதுன்னு புரியலை.” என்று கேட்டாள்.

   ”அவளை மட்டும் வெறுக்க எனக்கென்ன பைத்தியமா? உங்கப்பாவுக்கு நான் அவளை பத்தி பேசினா கலங்குவார் அவரால் தான் தொலைஞ்சான்னு குற்றவுணர்வு வரும்னு பேசாம தவிர்ப்பேன்.
இப்ப நேர்ல வந்தா அவளை போடின்னா விரட்டுவேன்? ஏதோ மகிழனை கட்டிக்கிட்டாளேனு சந்தோஷப்படுவேன்.

   என்ன உன்‌ மனசுல  மகிழன் அத்தான்னு பதிய வச்சிட்டு போயிட்டானே” என்று அழுதார்.

   ‘அழாதம்மா… என்னை நேசிக்கிற ஆத்மா எந்த மூலையில் இருந்தாலும் என்னை தேடி வருவார்.” என்று எங்கோ ஆரம்பித்து அன்னைக்கே சமாதானம் செய்தாள்.

ரேணுகாவிற்கு பலநாள் வேதனை அதனால் வருணி பேச்சு ஆறுதலாக அமைந்தது.

   எத்தனை நாளாக அவரும் வலியை மறைத்து சிரித்து நடமாடுவார்.

  கணவர் வரவும் சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்தார்.

  வருணிகா கண்ணீரை துடைத்து முடிக்க, “ஒன்னு மேற்படிப்புக்காக உன் அப்ளிகேஷன் போட்டு படி. இல்லையா மகிழ் அத்தான் பொத்தான்னு பினாத்தாம, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறியா. இரண்டுத்துல ஏதாவது ஒரு முடிவெடு.” என்று மகேஸ்வரன் கூற, வருணிகாவோ‌ பார்வையை தாழ்த்தி ”கல்யாணம் இப்ப வேண்டாம் மேல படிக்க போறேன்… ஆனா இங்க உங்க கூடயில்லை. ஊட்டில போய் படிக்கறேன்” என்றாள்.
  
  “ஏன் ஊட்டி போகணும். இங்க படிக்க என்ன?” என்று அதட்டினார்.

  “அக்காவை தேட எந்த உதவியும் பண்ணலை. எனக்கு உங்க மேல கோபம். நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்பறேன்” என்று தந்தையை எதிர்த்து பேசாமல் வாழ்ந்தவள் எதிர்வாதம் புரிந்தாள். தன் எண்ணத்தை மனதில் உள்ளதை தைரியமாக நிதானமாய் உரைத்தாள்.

  இதற்கு மேல் மகேஸ்வரன் முட்டுக்கட்டை போட்டு யாரை நல்வழிப்படுத்த? எல்லாம் தலைக்கு மேலாக வளர்ந்து விட்டார்கள்.

   வநீஷா தொலைந்து சென்று, தங்களை தேடி வராது, மகிழனை தேடி வந்து அவனை அழைத்து சென்று விட்டாளே.

  இவளை கட்டுப்படுத்தி இனி குடும்ப கௌரவத்தை நிலைநாட்ட மானம் ஒன்று இல்லையே.
 
  “என்னவோ உன் விருப்பம் போல செய்” என்று சென்றார்.

   வருணிக்கு அதன் பின் பெற்றவரின் கூட்டில் இருந்து மெதுவாக சிறகை விரிக்க முயன்றாள்‌.

  இதுக்கு முன் முடக்கப்பட்டு அடக்கப்பட்டு இருந்தது‌ சொல்லி தான் தெரிய வேண்டுமென்பதில்லை‌.

இரண்டு நாள் கழித்து ஊட்டியில் இருக்கும் கல்லூரியின் அப்ளிக்கேஷன் படிவத்தை மகேஸ்வரன் நீட்ட, அவரை நேர்க்கொண்டு பார்த்தாள்.

   ”உன்னிடம் கல்யாணமா? படிப்பானு கேட்கறப்பவே காலேஜ் என்றால் படிக்க இங்கயிருக்க காலேஜ் படிவம் வாங்கி வச்சேன்.

   நீ ஊட்டி என்றதும், அன்னைக்கே அங்க தெரிந்தவர்களிடம் சொல்லி அப்ளிகேஷன் பார்ம் வாங்கி அனுப்ப செல்லிட்டேன்.‌
  கொரியர் இப்ப தான் வந்தது.” என்றார்.‌

   வருணியோ அதனை வாங்கி கொண்டு, “தங்கறதுக்கு இடம் நானே நெட்ல பார்த்துக்கறேன். நீங்க எந்த உதவியும் செய்ய‌வேண்டாம்” என்று படிவத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள்.

  கல்லூரிக்கு அப்படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும் அல்லவா.?!

  வருணி அதனை செய்வதில் மும்முரமாக இருந்தாள்.

   கல்லூரிக்கு அனுப்பும் படிவத்தை தந்தை கூறிய அட்ரஸுக்கு அனுப்பினால் அவர்கள் கைக்கு கிடைத்த அன்றே கல்லூரியில் சேர்த்து விடுவதாக தெரிவித்திருந்தனர்.
 
   அவர் வீட்டில் தான் நண்பன் ஜனார்த்தன் மகன் ஷங்கர் இருந்தான்‌.

  ஷங்கரை வருணிக்கு மணமுடிக்க மகேஸ்வரனின் அடுத்த திட்டம். வருணிக்கு அது தெரியாது. படிக்க போவதாக எண்ணினாள்.

  தந்தை இப்படி படிப்போடு, மகிழன் அத்தானின் நினைப்பை மறந்து, தான் மணமுடிக்க மற்றொருவனை நிறுத்தும் எண்ணமும் இருப்பதை அறியாது கொரியரில் அந்த அட்ரஸிற்கு அனுப்பினாள்.

    இவளையே நோட்டமிட்ட சாஹிருக்கு, வருணி கொரியர் அலுவலகம் வரவும் பின்னாடியே வந்து சேர்ந்தான்.

   அவள் அட்ரஸ் போட்டு அனுப்பவும் கல்லூரி பெயர் ஊர் எல்லாம்  கவனித்தான்.

  வருணி தன்னை ஏறெடுத்து பார்க்க சாஹிர் தவமிருக்க, அவளோ இன்னமும் தந்தை கொட்டி கொட்டி வளர்த்த விதத்தில் ஏறிட்டு ஆண்களை பாராது தலைகுனிந்து இருந்தாள்.

   அவள் சென்றதும் அந்த அட்ரஸ் கவரை மட்டும் மடமடவென தன் போனில் போட்டு சேகரித்தான்.

   “என்ன அண்ணா… வந்துட்டு போறிங்க” என்று கொரியர் பையன் கேட்க, “ஆதார் கார்ட் மறந்துட்டு ஜெராக்ஸ் எடுக்க வந்தேன். வீட்டுக்கு போய் தேடணும்” என்று சாமார்த்தியமாக கூறி நழுவினான். கொரியர் அலுவலகத்தில் ஜெராக்ஸ் பிரிண்டிங் என்று இருந்ததால் இந்த பொய் சாதகமாக அமைந்து விட்டது.

  வருணியை பின் தொடர்ந்து செல்ல சற்று தாமதமாக, அவள் வீட்டிற்கு வரவில்லை. எங்க போயிருப்பா? என்றவன் மனதில், ‘மகிழன் வீட்டுக்கு?’ என்று மனசாட்சி கூற, அங்கு விரைந்தான்.‌

   கார் என்பதால் எளிதாக பறந்து வந்தவன், கணிப்பு பொய்யாகாமல் வருணி இருசக்கர வாகனம் அவ்வீட்டின் முன் இருந்தது.

  இவயெதுக்கு இவன் வீட்டையே சுத்திட்டு இருக்கா? வநீஷா கூட மகிழன் ஓடியதாக கதை கட்டி வஞ்சியிருக்கேன். இவ என் கதையில் தனி அத்தியாயம் பதிவு பண்ணறா? எனக்கு தெரியாம என்ன விஷயமா இருக்கும்?’ என்றவன் அங்கு செல்ல இயலாது வருணி வெளிவர காத்திருந்தான்‌.

‌-தொடரும்.



6 thoughts on “ஆலகால விஷம்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *