இருளில் ஒளியானவன் 24
வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும் போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை.
வேகமாக எழுந்து விஷ்ணு அவளை தேட, குளியல் அறையில் சத்தம் கேடடது. அவள் குளித்து வருவதற்கு முன்பு, தான் குளித்து வந்துவிடலாம் என்று வேகமாக பக்கத்து அறைக்கு குளிக்கச் சென்று விட்டான். வைஷ்ணவி குளித்து, சங்கீதா கொடுத்த புடவையை கட்டிக் கொண்டாள்.
குளித்து முடித்து அறைக்கு வந்த விஷ்ணு, ஈரமான தலையை காய வைக்க, துணி வைத்து துடைத்து கொண்டு இருந்த வைஷ்ணவியை கண்டு அப்படியே நின்றுவிட்டான்.
அவளின் முதுகில் இருந்த நீர் துளிகளை கண்டு, அதை துடைத்து விட அருகில் செல்ல, அவனையும் அறியாமல் அவளின் பின்னங்கழுத்தில் லேசாக இதழ் பதித்து, “ஹேப்பி பெர்த்டே பொண்டாட்டி” என்று அவன் கூறி முடிக்கும் முன்பே, அவனிடம் இருந்து விலகி, அவனை ஓங்கி அறைந்து விட்டாள் வைஷ்ணவி.
அவள் தள்ளியதில் சற்று தடுமாறிய விஷ்ணு, அவள் அறைந்ததில் அதிர்ந்து, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, அவளை விழி விரித்து பார்த்தான்.
அவள் அறைந்ததில் அவனுக்கு அவள் மீது கோபமும், தன்னை தவறாக நினைத்து விட்டாளே என்ற கவலையும் தோன்ற, தன் உணர்வை அவளிடம் பிரதிபலித்து விடுவோம் என்று, தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அறையை விட்டு வேகமாக வெளியேறி விட்டான் விஷ்ணு.
விஷ்ணு தன் அருகில் வந்ததும், தான் அவனை அடித்தது எல்லாம் ஒரு நொடியில் வைஷ்ணவியின் கண் முன் தோன்ற, அப்படியே சுவரில் சாய்ந்தபடி முட்டியை கட்டிக்கொண்டு அமர்ந்து, அழ ஆரம்பித்து விட்டாள்.
அவள் உயிருக்கு உயிராக காதலித்தவனை கன்னத்தில் அடித்து விட்டோமே என்று கதறி அழுதாள்.
கோபத்தில் வைஷ்ணவியை ஏதாவது சொல்லி விடுவோமோ? என்று அங்கிருந்து வெளியே சென்றவன், வைஷ்ணவியின் அழுகை சத்தத்தில் தன்னிலை மறந்து விட்டான். உடனே வேகமாக உள்ளே வந்து, அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்து “வைஷு” என்றான் கலங்கியபடி.
அவனது குரலில், கண்ணீர் வழிந்த கண்களோடு நிமிர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி.
அவளது பார்வை, அவனது உயிர் வரை வலிக்க, “அது.. சாரி வைஷு” என்று தயங்கியபடி மன்னிப்பு கேட்டான்.
அவளோ அவன் கைகளை பற்றி கொண்டு, “நீங்க ஏன் சாரி கேட்குறீங்க? நான்தான்..” என்று சொல்லி “நான் அப்படி செய்திருக்கக் கூடாது. என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.
அவனுக்கு அவளை அப்படியே அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்கு அவள் அனுமதிப்பாளோ என்று தெரியாமல், அவன் கைகள் அவளை அணைக்கும் படி நெருங்கி அப்படியே நிற்பதை கண்டு, மேலும் கலங்கிய வைஷ்ணவி, அவளாகவே அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவள் அவனது மார்பில் சாய்ந்ததும், ஒரு கையால் லேசாக அணைத்து அவளது முதுகை தடவி விட்டு, “உண்மையில் என்னால் என்னை, கொஞ்சம் கட்டுப்படுத்த முடியவில்லை வைஷு. அதனால் தான்” என்று தயங்கியபடி கூற,
அவனின் விட்டு விலகாமல் அப்படியே நிமிர்ந்து பார்த்த வைஷ்ணவி, “அதில் ஒன்றும் தவறில்லை. நான் உங்கள் மனைவிதானே? இத்தனை நாள் உங்களை காக்க வைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி “ஐ லவ் யூ” என்று சொல்லி அவன் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
உண்மையில் இதை அவனால் நம்பவே முடியவில்லை? அவளின் பிறந்தநாளுக்கு அவனுக்கு பரிசு கிடைத்தது போல் இருந்தது. அதே மகிழ்ச்சியுடன் “சரியா கேட்கல, ப்ளீஸ் இன்னொரு தடவை சொல்லேன்” என்று அவள் முகத்தை பார்க்க முயன்றான்.
அவள் தன் முகத்தை அவனின் மார்பிலேயே மறைத்துக் கொண்டே இல்லை என்று மறுப்பாக தலையாட்டினாள்.
பின்னர், “வைஷூ.. உண்மையாகவா? என்னை அடித்ததற்காக சும்மா சொல்ல வில்லையே? எப்பொழுது இருந்து? என்றான் ஆர்வமாக.
பதில் சொல்வதற்காக அவள் அவனை விட்டு சற்று விலக,
பதறிய விஷ்ணு, “இல்லை, இப்படி இருந்தே சொல்லு” என்றான்.
அவன் சொன்ன பாவனையில் வெட்கமடைந்த வைஷ்ணவி, தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு, வேகமாக எழுந்து கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளின் செயலில் சிரித்துக்கொண்ட விஷ்ணு, அவனும் எழுந்து அவள் அருகில் அமர்ந்து, அவள் கையை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு,
“உண்மையாகவே என்னை நீ விரும்புகிறாயா? வைஷு” என்றான் ஏக்கமாக.
அவளோ ஆமாம் என்று தலையாட்டினாள்.
“எப்பொழுதில் இருந்து” என்றான் மீண்டும்.
“அது.. எனக்கு தெரியாது. ஆனால் உங்களை ரொம்பவும் தேடினேன், எனது மு.. மு..” என்று தயங்கி “முதல் திருமணத்திற்கு முன்பே” என்றாள்.
அவனுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருக்க, அவள் கையில் சிறிது அழுத்தம் கொடுத்து, “கல்யாணம் என்றால், அது என்னுடன் மட்டும் தான் வைஷு. மற்றதை தயவு செய்து மறந்துவிடு” என்று சொல்லிவிட்டு “உண்மையாகவா!” என்றான்.
அவளும் ஆமாம் என்று தலையாட்டி விட்டு, “எனக்கு உங்கள் மீது இருந்தது காதலா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அப்பா கல்யாணத்தைப் பற்றி கேட்கும் பொழுது, எனக்கு உங்கள் நினைவு மட்டும் தான் முதலில் வந்தது. ஆனால் நீங்கள் எப்பொழுதும் என்னை கலாட்டா செய்து கொண்டே தானே இருப்பீர்கள், அதனால் உங்களுக்கு என்னை பிடிக்காதோ என்று நினைத்தேன்.
அது மட்டுமல்ல நீங்கள் மும்பை சென்ற பிறகு என்னுடன் பேசவே இல்லை. சென்னைக்கு வந்தாலும் என்னை பார்ப்பதை தவிர்த்து விட்டீர்கள்தானே? அப்பா அம்மாவை மட்டும் பார்த்துச் செல்வீர்கள். அதனால் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நினைத்து விட்டேன். உங்களுக்கு பிடிக்காமல். நீங்க என்னை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்து, அப்பா பார்க்கும் மாப்பிள்ளை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
ஆனாலும் தாலி கட்டும் வரையில் நீங்கள் வந்து தடுத்து விட மாட்டீர்களா? என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதை நினைத்து ‘இது என்ன சினிமாவா? என்று கூட நினைத்து சிரித்து கொள்வேன்’ என்றாள் முகத்தில் புன்னகையுடன்.
அவள் கூறுயது அனைத்தையும் கேட்ட விஷ்ணுவிற்கு, அது இன்ப அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. தான் கொஞ்சம் வெளிப்படையாக பேசி இருக்கலாம் என்று, இப்பொழுது வருந்தினான். அவளை பார்த்தால் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்து, காதலை சொல்லி, அவளது படிப்பையும் கெடுத்து
அவன் முகத்தில் இருந்த சோகத்தை கண்ட வைஷ்ணவி, “எல்லாம் என் தலையெழுத்து போல. அப்பாவிடம் சொல்லி இருந்தால், உங்களை வற்புறுத்தியாவது எனக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார் என்று தெரியும். ஆனால் உங்களை கஷ்டப்படுத்த கூடாது என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக, நிறைய கஷ்டத்தை உங்களுக்கும் கொடுத்தேன், நானும் அனுபவித்தேன்” என்றாள் சோகமாக.
அவள் முழுமையாக சொல்லி முடிக்கட்டும் என்று, அவள் முகத்தை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
“தாலி கட்டும் வரை, எனக்கு உங்கள் நினைவு இருந்து கொண்டு தான் இருந்தது. தவறு என்று தோன்றினாலும் வந்தது உண்மைதான். ஆனால் தாலி கட்டிய அடுத்த நொடியே இனிமேல் உங்களைப் பற்றி நினைக்க கூடாது என்று அந்த நினைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த வீட்டின் மருமகளாக வாழ தொடங்கினேன்.
ஆனால் தாலி கட்டிய அரை மணி நேரத்திற்குள்ளேயே எனது வாழ்க்கையின் மீது ஒரு வித பயம் வந்தது. என்றைக்கும் கம்பீரமாக பார்த்த எனது தந்தை, அன்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டு நின்றதை பார்க்கும் பொழுது அவர்களுக்கு நான் பெண்ணாகப் பிறந்து இவ்வளவு துன்பத்தை கொடுக்கிறேனே என்று வருந்தினேன்” என்று கவலையாக கூறினாள் வைஷ்ணவி.
- தொடரும்..
Twist thaaàa ponga