Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-8

உன்னில் தொலைந்தேன்-8

   💟8

                                    லத்திகா வீட்டின் முன் அந்த கார் வந்து நின்றது. ஜெயராஜனை கண்டதும் ஜீவானந்தம் ஓரளவு அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார்.

      ”வாங்க சார் எப்படி இருக்கீங்க”

      ”நல்லா இருக்கேன் . இது என் மனைவி பவானி” என்று அறிமுகம் செய்து வைத்தார். 

      ”இவங்க தான் ஹாஸ்பிடலில் அன்னிக்கு இருந்தாங்க?” என்று கேட்டு வரவேற்றார். 

      ”ஆமா சார் அவங்க தான்” 

      ” இப்ப உடல் நிலை எல்லாம் பரவாயில்லையா? உட்காருங்க சார்” என்று ஜீவானந்தம் கூறி “சகுந்தலா இங்க வா இவங்க தான் லத்திகா வேலை பார்க்குறா கம்பெனி MD. இது அவங்க மனைவி. சார் இது என் மனைவி சகுந்தலா” என்று இவரும் தன் துணையை அறிமுகம் செய்து வைத்தார். 

       ”வீட்ல வேற யாரும் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டார். 

       ”எங்களுக்கு லத்திகா மட்டும் தான் சார். வேற உறவு இல்லை. தூரத்து தம்பி ஒருத்தர் இருக்கார் அப்பறம் அக்கா ஒருத்தங்க இருக்காங்க அவ்ளோ தான். சகு போய் குடிக்க ஏதாச்சும்”என மனைவிக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு,
     ”சார் லத்திகா ஆபிஸ்ல இருப்பாளே என்ன விஷயமா?” என்று தயக்கமாய் கேட்டார். இவ்வளவு பெரிய மனிதர்கள் தங்கள் வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லையே.
     ”முதலில் சார் விடுங்க ஜெயராஜன்னு பேர் சொல்லி கூப்பிடுங்க இல்லையா ராஜன் சொல்லுங்க” என்றார். 
      ”அது எப்படி …. ” என தயங்க, சகுந்தலா குடிக்க ஆரஞ்சு பழச்சாறை நீட்ட பெற்று கொண்டு ராஜனே பேச ஆரம்பித்தார்.
      ”லத்திகாவிற்கு வேற மாப்பிள்ளை ஏதாவது பார்த்து இருக்கீங்களா?” என்று நேராக விஷயத்திற்கு வந்தார். 
      ”எங்க சார், அவ போடுற கண்டிஷன் கேட்டா வருபவர்கள் தலைத்தெறிக்க ஓடுவாங்க. சொன்னா கேட்கவும் மாட்டா ஏதாவது கன்வீஸ் பண்ணனும்” என்று கொஞ்சம் வருத்தம் கலந்து சொன்னார். 
       ”அவ பேசறது சரி தானே ஜீவா” என்று ஒரு தோழனாக பதிலளித்தார்.
      ”இந்த காலத்துல அப்படி யாரும் இருக்க வாய்ப்பு இல்லை சார்” 
      ”நீங்க இந்த சாரை விடுங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான் நீங்க சரின்னா மேல் கொண்டு அவனை பற்றி சொல்றோம்” என்று தன் பையன் என்று கூறாமல் கேட்டார். 
      ”அது… யாருனு பார்க்காம எப்படி….?” என சகுந்தலாவும் ஜீவானந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,
       ”பையன் போட்டோ இந்தாங்க பாருங்க பிடிக்கும் என்று நம்பறேன்” என்றவாறு பிருத்வி புகைப்படத்தை நீட்ட, ஜீவானந்தம் சகுந்தலா இருவருமே ஆவலாக வாங்கி பார்த்தனர். அவர்கள் முகத்தில் நிறைவு தளும்பி இருந்தன.
ஜீவானந்தம் ”இந்த பையனை எங்கயோ பார்த்து இருக்கேன்” என யோசிக்க துவங்கினர்.
     ”ஆங் நினைவு வந்துடுச்சு. சகுந்தலா மன்திலி செக் அப்பிற்கு போனப்ப ஒரு பேஷண்டுக்கு ரத்தம் தேவை பட்டுச்சு பிளட் பேங்க்ல ரத்தம் இல்லைனு ரிசப்ஷன்ல சொல்லிக்கிட்டு இருந்ததை கேட்டுட்டு பில்பே பண்ண நின்று கொண்டு இருந்தவன். உடனே நான் பிளட் டோனட் பண்றேன்னு தானா முன்வந்து ரத்தம் கொடுத்தான் என்று சொன்னேனே அது இந்த பையன் தான். ரொம்ப நல்ல பையன்” என முடிக்க, ஜெயராஜன்-பவானி இருவரும் மாறிமாறி பார்த்துக் கொண்டனர். 

ஜெயராஜனோ பவானியிடம்,
     ”நம்மகிட்ட ஒரு வார்த்தை சொன்னானா? எல்லாம் நீ கொடுக்கற செல்லம்” என கடிந்திட,
     ”எனக்கு மட்டும் தெரியுமா? சரி சரி விடுங்க வந்த விஷயத்தை பற்றி பேசுவோம்”
      ” அதுவும் சரி தான் . ஜீவா உங்களுக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா ? ” என பவானியிடம் ஆரம்பித்து ஜீவனந்தனிடம் கேள்வி எழுப்பினார்.
     ”ம் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு சார்” என்று மகிழ்ச்சியை தெரிவித்தார். 
     ”அப்ப எப்ப கல்யாணம் என்று பேசுவோமா?”
     ”சார் அவங்க அப்பா அம்மா?” என்று தயங்கினார். 
     ”ஜீவா நாங்க தான் அவனோட அப்பா அம்மா. இப்ப கல்யாணம் பற்றி பேசுவோமா?” என்று விளையாட்டை மூட்டை கட்டி கேட்டார்கள். 
      ”சார் நீ.. நீங்க போய்…. எங்க குடும்பத்துல விளையாடாதீங்க சார்”
      ”மிஸ்டர் ஜீவா, எங்களுக்கு உங்க லத்திகா கண்டிஷன் ஓகே. எங்களுக்கு வேற எதிர்பார்ப்பு இல்லை. எங்களுக்கு அவன் ஒரே பையன்” என்று நேரிடையாக கேட்டார்கள். 

                         ஜீவனந்தனும் சகுந்தலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே கலக்கம் கொண்டு இருந்தனர். ஜீவானந்தம் சுதாரித்து பேச்சினை எடுத்தார்.
      ”சார் எங்களுக்கு என்ன சொல்றது என்று தெரியலை”
      ”சார் என்று சொல்றதை முதலில் நிப்பாட்டுங்க சம்பந்தி என்று சொல்லுங்க போதும், நைட் லத்திகாகிட்ட பேசிட்டு முடிவு சொல்லுங்க நாளை இதே நேரத்துல போன் பண்றேன் ஜீவா, வர்றேன் தங்கச்சி” என்று சகுந்தலாவை பார்த்து ஜெயராஜன் கிளம்ப, ”அப்ப வர்றேன் அண்ணா…  வர்றேன் அண்ணி….” என பவானியும் விடை பெற்று கிளம்பிய பின்னர் அங்கே ஊசி விழும் சப்தம் கேட்கும் மௌனம் மட்டுமே.
     சிறிது நேரம் கழித்து ”என்னங்க நம்ம லத்திகா சிடுமூஞ்சி முசுடு அப்படினு சொல்றது எல்லாம் இந்த பையனையா?” என சகுந்தலா விசாரிக்க ,
      ”ம் …. ஆனா அந்த பையன் அப்படியில்லை சகு. ரொம்ப நல்ல குணம். லத்திகாகிட்ட நைட் வந்ததும் பேசலாம்.” என்று பணிக்கு கிளம்பினார் ஜீவா.
                                           அன்று இரவு வந்த லத்திகாவிடம் பேச எண்ணி அறைக்கு செல்ல, அவளோ ”அம்மா இந்த டிரஸ் ஓகேவா.. ”
       ”எங்க கிளம்பிகிட்டு இருக்க ?”என்றாள் சகுந்தலா.
      ”ம்மா மறந்துட்டியா என் ஸ்கூல் பிரென்ட் ரெஜிக்கு இன்னிக்கு என்கேஜ்மென்ட்”
    ”லத்திகா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
    ”வந்து பேசிக்கலாம் நான் இப்பவே லேட்ம்மா பை பை” என துப்பட்டாவை எடுத்து கொண்டு ஸ்கூட்டி எடுத்து பறந்தாள்.
      ”ஏய் முக்கியமான விஷயம் … பேசணும்” என்பதை காதில் எட்டி கூட இருந்திருந்துக்காது.

                       அங்கு பிருத்வியிடம் பவானியும் ஜெயராஜனும் பேசினார்கள்.
       ”டேய் பிருத்வி உனக்கு பொண்ணு பார்த்தாச்சு அவங்க பெற்றோருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்”
      ”ம்மா யாரை கேட்டு எனக்கு பொண்ணு பார்த்தீங்க?” என்று குதித்தான்
      ”டேய் யாரை கேட்கணும். நீ தானே காட்டுக்கு போறேன்னு குதிச்சுக்கிட்டு இருந்தப்ப சொன்ன, இந்த வீட்டுக்கு மருமக எங்க இஷ்டப்படி யாரை செலெக்ட் பண்ணினாலும் தாலி கட்டுவேன்னு சொன்ன”
       ‘ஒ நான் தான் சொன்னேனா ‘ பிருத்வி உனக்கு நீயே ஆப்பு வச்சிகிட்டேயே டா ஆமா நானே சொன்னேன் இப்ப மட்டும் ஓகே சொல்ல என்ன தயக்கம்’ என்று யோசித்தவனால் என்னவென்று அறியமுடியவில்லை.
     ”டேய் என்ன யோசிக்கற எப்படி தப்பிக்கலாம் என்றா?”
     ”ம்மா அப்படியெல்லாம் இல்லை.. எனக்கு உங்க விருப்பம் முக்கியம் தான் ஆனா வரப்போறவ அப்படி இருக்கமாட்டா ம்மா”

       ”இந்த கதை எல்லாம் விடாத, லத்திகா அவ அப்பா அம்மா மாதிரியே என்னையும் கவனிச்சுப்பா எனக்கு அதுல சந்தேகமே இல்லை”
       ”என்னது  ராட்சஷியா?” என்று வாய்விட்டு கத்தினவன் பின்னரே
     ”போச்சு போச்சு அவ நாளைக்கு நேரா என் ஆபிஸ் அறைக்கு வந்து நின்று என்னவோ அவளை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட மாதிரி ஓவரா ரியாக்ஷன் கொடுப்பா, ஸ்டாப் முன்னாடி என்னை மரியாதை இல்லாம பேசி அறைய போறா, இந்த விளையாட்டுக்கு நான் வரவே இல்லை. நான் ஆபிஸ்கே போகலை. பேசாம காட்டுக்கே போறேன். தனியா கூட ரிசர்ச் பண்ணிக்கறேன்” என குண்டை தூக்கி போட பவானி மீண்டும் ரிசெர்ச் ஆஹ் என்று ராஜனை காண, பொறு என செய்கை செய்துவிட்டு
     ” லத்திகாவோட ரியாக்ஷன் என்ன என்று தெரியாம நீயா உலராத . அவ எப்பவும் நல்லா  சிந்திச்சு செயல்படும் ரகம். அதுவும் இல்லாம சண்டைக்கு வந்தா தான் திரும்ப பதிலடி கொடுப்பா, மற்றதுப்படி இந்த மாதிரி விஷயம் எப்படி கையாளனும் அவளுக்கு தெரியும். ஆபிஸ்ல அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டாள்”
      ”உங்களுக்கு சொன்னா புரியாது. ம்ம் பாருங்க அவ என்ன சொல்லறான்னு அதுக்கு பிறகு நான் பேசறது புரியும்” என படிகளில் ஏறியபடி சொல்லி செல்ல பவானி,
     ”என்னங்க எல்லாத்துலயும் அவன் முடிவு தான் முக்கியம் அப்படினு வாதாடுவான். இப்ப என்னனா லத்திகா என்ன சொல்ல போறான்னு பார்க்கறேன்னு சொல்றான் இப்போ புரியுதா…?” என்று மகனின் செய்கையில் மாற்றம் கொண்டவன் கேட்டு விட்டான். 
       ”உன் மகன் பலா பழம் வேற என்ன?”
      ”என்ன சொல்லவரீங்க..”
      ”நேரம் வரும் போது சொல்றேன் போய் தூங்கு” என தூங்க சென்றார்கள்.
                                                                    லத்திகா நாளை ஆபிஸில் என்ன செய்வாளோ என்ற மனநிலையில் யோசித்தானே தவிர தன் மனநிலை என்னயென யோசிக்கவில்லை.
                                லத்திகா மணி பத்துக்கு மேல் வந்து சேர்ந்தாள்.
      ”என்னடி இது நேரத்துக்கு வந்து இருக்கலாம்ல… ” என சகுந்தலா கேட்க,
     ”ம்மா எனக்கு அக்கா தங்கச்சி தான் இல்லை, ப்ரெண்ட்ஸ் கூடவாது நேரத்தை செலவழிக்க விடேன்” என கொட்டாவி விடுத்து நைட்டி மாற்றி அப்படியே படுக்கச் சென்றாள்.
                 சகுந்தலா கிச்சன் அறைக்கு சென்று லைட் கதவு சாற்றி வர
      ”உன்கிட்ட பேசணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நீ என்னடானா இப்படி …. ” என சொல்லிக்கிட்டு வந்து நிற்க லத்திகா அரைஉறக்கத்திற்கு சென்று இருந்தாள்.
       ”தூங்கிட்டாளா… சரி காலையில் பேசிக்கலாம் விடு சகு” என ஜீவா உறங்க சென்றார். ‘சுடிதாரை கூட மடிச்சு வைக்கலை அதுக்குள்ள தூக்கம்’ என முனங்கியபடி மடித்து கயிற்றில் காயா வைத்து விட்டு சகுந்தலாவும் உறங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *