யாரோ-5
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
“நாம தான் கொலை செய்ய தரணை அனுப்பினோம். இப்ப அவனே நான் கொலை பண்ணலைனு சொல்லறான். அப்ப அந்த பொண்ணு சொன்னது மாதிரி ஷண்முகசுந்தரத்தோட பையன் ஷ்யாம்சுந்தர் கொன்னுட்டு இருப்பானா ஐயா?” என்று சையத் கேட்க, சந்தான கிருஷ்ணனோ துண்டை உதறி மேலே போட்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
“யோவ் யார் கொன்னா என்ன? அந்தாள் போயிட்டான். பழி நம்ம மேல வராம இருக்கணுமே. நம்ம தான் தேவையில்லாத ஆணியை புடுங்க தரணை அனுப்பிட்டோமே. போதாத குறைக்கு அந்த செழியன் லைவ்ல போட்ட என்னோட வீடியோ வேற. எந்த முட்டாளை அவனை கட்சில சேர்த்தது.” என்று எரிந்து விழுந்தார்.
அங்கு எடுபிடியாக இருந்த முருகனோ, “ஐயா கட்சிக்கு இளைஞனா ஒருத்தர் துருதுருனு வேலை பார்க்க இருக்கட்டும்னு நீங்க தான்யா அவனை இளைஞர் அணில சேர்த்து விட்டிங்க.” என்று கூறவும் தன்னையே நொந்தார்.
“நமக்கு இந்த ட்விட்டரு, முகநூல்ல எல்லாம் பழக்கமில்லை. அதுலயும் கட்சி பற்றி பரப்பவோ, கருத்து தெரிவிக்கவோ அவனை வச்சிக்க இருந்தேன். என்னை பற்றியே சமூகத்தளத்துல போட்டு மாட்டி விடுவான்னு கனவா கண்டேன்.” என்று அங்கலாய்த்தார்.
“தலைவரே… இப்ப அது பிரச்சனையில்லை. குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டாலும் ஆதாரம் வேண்டும். நீங்க போதையில பேசியது அதையெல்லாம் ஆதாரமானு நான் கோர்ட்டுல பேசிப்பேன். இப்ப தரண் போயிட்டு வந்ததுல ஏதாவது ஆதாரம் சிக்கிட்டா தான் உங்க பாடு திண்டாட்டம்.
அதுவுமில்லாம கொலை செய்தது அவங்க பையனாவே இருந்துட்டா உங்க பக்கம் எந்த கரும்புள்ளியும் இல்லாம இந்த ஊர்ல உங்க கட்சி கொடியை பறக்க விடலாம்.” என்று சந்தானகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் வாங்கிய வழக்கறிஞர் பழனி கூறவும் சரி தான் என்று நிதானம் காட்டினார்.
“அப்ப பரவாயில்லை.” என்று சந்தானம் மகிழ்ந்திட, “ஐயா… அந்த தரண் அங்கிருந்து நேரா நம்ம வீட்டுக்கு வந்துட்டு சையத் ஐயாவோட காரை எடுத்துட்டு போயிருக்கான்.” என்று முருகன் இவர்களிடம் சுட்டி காட்டவும் சையத் ஆடிப்போனார்.
“யோவ் என்னய்யா சொல்ற. என் கார் சர்வீஸுக்கு போனதுனு தானே சொன்ன” என்று பயந்தார்.
“சர்வீஸுக்கு போனது நிஜம் தான்யா. ஆனா தரண் அங்கிருந்து ஓடி வந்ததும் அவனோட பைக்கை ஸ்டார்ட் செய்தும் அது ஸ்டார்ட் ஆகலையாம். அதனால அங்கிருந்து குறுக்கால ஓடியாந்து சாயந்திரம் சர்வீஸுக்கு போயிட்டு வந்த வண்டி நம்ம கம்போவுண்ட் முனையில இருக்கவும் அவனோட கைவரிசையை காட்டி காரை எடுத்துட்டு ஊரை விட்டு ஓடிட்டான்.” என்று தரண் கூறியதாக முருகன் எடுத்துரைத்தார்.
“உங்களுக்கு போன் பண்ணினானாம் நீங்க எடுக்கலையென்றதும் விஷயத்தை சொன்னான்.” என்று முருகன் கூறவும், சையத் மிதமிஞ்சிய பயத்தில் துவண்டார்.
சந்தானகிருஷ்ணனோ “அப்ப அவன் போன வண்டி என்னாச்சு? எங்க நிற்குது?” என்று கேட்டதும் முருகன் விழித்தான்.
வக்கீல் பழனியோ “தலைவரே சனியன் பனியன்ல இருக்கு. முதல்ல அந்த வண்டியை கண்டுபிடிச்சி மறைவா வையுங்க. அப்பறம் உங்க வண்டியை கண்ட இடத்துல பார்க்கற மாதிரி அவனை தங்க வேண்டாம்னு ஒரு போனை போட்டு சொல்லுங்க
இந்த பொண்ணு வரலைனா எப்பவோ இந்த லைவ் டெலிகாஸ்ட் வச்சி உங்களை கைது செய்து இருப்பாங்க. இப்ப ஷ்யாம் பக்கமும் சந்தேகம் திரும்பறதால நீங்க தப்பிச்சிங்க. அதுவுமில்லாம தரண் போறதுக்கு முன்னவே கொன்று இருக்காங்கனா இந்நேரம் கொலைக்காரன் தான் பயப்படணும்.
என்ன நாம கொலையை முயற்சி செய்தததால நம்ம பக்கம் திரும்பினா செய்தது நாம தான்னு முடிவாகிடும். அப்பறம் கட்சியும் பதவியும் போய் களியும் கேப்பையும் தான். நீங்க விஐபி கறிவிருந்து வரும்.” என்று பழனி கூறவும், சந்தானமோ “ஏலேய்… முருகா. உன் போன்ல இருந்து அந்த தரணுக்கு போன் போட்டு பைக்கை எங்க நிறுத்திருக்கானு கேளு. சையத் போனுக்கு இனி கால் பண்ண வேண்டாம்னு சொல்லிடு.” என்று முன்னெச்சரிக்கை ஆனார்கள்.
கால் செய்யவும் சுவிட்ஆப் என்று வரவும் “ஐயா அவன் சார்ஜரே இனி தான் வாங்கணும்னு சொன்னான். அதனால போன் சுவிட்ஆப்னு வருது.” என்று சையத் கூறவும் எல்லாம் டென்ஷன் ஆக்கவே பதிலை சொல்லுங்கடா.
இந்த செழியன் லைவ்ல போட்டதால எனக்கு தான் பிபி ஏறுது. சோஷியல் மீடியால பாஸிடிவா வலம் வர பார்த்தா இவன் நெகட்டிவா வலம் வர சுத்தல்ல விடறான்.” என்று முனுமுனுத்தார்.
நற்பவி போலீ ஸ்டேஷனில் அமர்ந்து பழைய தீர்க்கப்படாத கேஸ் பைல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அக்கா நன்விழியிடமிருந்து போன் அழைப்பு வரவும் அதனை எடுத்து நலம் விசாரித்தாள்.
நன்விழி மசக்கை என்பதாலும், நற்பவி புதுயிடம் வந்ததாலும், மாறிமாறி அக்கா தங்கை மற்றவர் நலனை விசாரித்து முடித்தனர். அதன் பின்,
“நற்பவி உன்னோட ஸ்டேஷனுக்கு கிப்ட் பார்சல் அனுப்பியிருக்கேன். வந்ததும் பிரிச்சி பார்த்துட்டு போன் ஆர் மெஸேஜ் பண்ணு. ஓகே ஓகே இங்க உங்க மாமா சூட்டிங் கிளம்பறார் அப்பறம் பேசறேன்” என்று அணைத்து விட்டாள்.
நற்பவியோ வாசலையே விழியை செலுத்தி அடிக்கடி பைலை புரட்டி என்று இருக்க, ஒரு டெம்போ அங்கு வந்து சேர்ந்தது.
அதில் நற்பவியின் பிங்க் நிற ஸ்கூட்டியும், ஒரு நாயும் கட்டி இருந்தது.
ஸ்டேஷனிலிருந்து வேகமாக வெளியே வந்தவள் தனது உடைமையை கண்டு மகிழ்ந்தாள். அதனை இறக்கி விட்டு நாய் குட்டியை ஏந்தி பணத்தை கொடுக்க “ஆல்ரெடி புல் செட்டில்டு மேடம்” என்று சென்றனர்.
பிங்க் நிற ஸ்கூட்டி நன்விழி தங்கை நற்பவிக்காக அனுப்பியது. நாய்குட்டியோ அக்கா வீட்டில் வளர்ப்பது. அடிக்கடி ‘சைரா’வை கொஞ்சி பேசி அதனிடம் விளையாடுவாள்.
அப்பொழுது எல்லாம் அக்கா நன்விழியிடம் ‘ஏய் சைராவை எனக்கு கொடுத்துட்டு உனக்கு மாமாவை வேற வாங்கி தர சொல்லேன்’ என்று சைராவை கேட்டு அடம்பிடிப்பாள். இன்று தான் தனியாக இருப்பதை அறிந்து தனது பாதுகாப்பிற்காக சைராவை அனுப்பி உள்ளாளென புரியவும் அக்காவின் நேசம் அதிகரித்தது.
உடனே போன் செய்து “எனக்கு ஸ்கூட்டியை விட சைராவை தந்தது தான் ரொம்ப பிடிச்சிருக்கு லவ் யூ அக்கா” என்று கூறி உடலை கவனமாக பார்த்துக்க கூறினாள்.
சைராவை தூக்கி கொண்டு கொஞ்சியபடி தனது டேபிளில் வைத்து, “ஏதாவது சாப்பிட்டியா சைரா? லாங் டிராவல் பண்ணிருக்க சமர்த்தா உட்கார்ந்துட்டு வந்தியா ” என்று கேட்டாள்.
அது அந்த ஸ்டேஷனையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு குலைத்தது.
“உஸ்… இது வீடு இல்லை. ஸ்டெஷன்.. நாம நைட்டு பேசலாம். இப்ப பாலை குடிக்கிறியா?” என்று கேட்டு வாசுண்ணாவை பால் வாங்கி வர அனுப்பினாள்.
“ஸ்டேஷனில் பாலை குடித்து விட்டு நற்பவி காலருகே அமைதியாய் உட்கார்ந்தது.
பழைய குற்றவாளிகள் இதில் சம்மந்தப்படுத்தும் வகையில் தோன்றுகிறதாயென ஆராய்ந்தவளுக்கு எதுவும் சரியாய் கிடைக்கவில்லை.
ஸ்டேஷனிலேயே உணவு வந்துவிட, அதனை சாப்பிட ஆரம்பித்தாள். ஏற்கனவே இரண்டு பொட்டலம் என்று மதிமாறனிடம் சாம்பார் சாதம், சிக்கன் பிரியாணி என்று போனில் சொல்லியதால் அவனும் அப்படியே அனுப்ப, சைராவுக்கு சிக்கன் பிரியாணியை தட்டில் போட்டு சாப்பிட கூறினாள்.
திவாகரோ ‘என்னடா இது நாயுக்கு பிரியாணி இந்தம்மா சாம்பார் சாதம் சாப்பிடுது. நாயுக்கு வந்த வாழ்வை பார்த்தியா?.’ என்பது போல எண்ணினான்.
மாலை நேரம் சற்றே மூன்று மணிக்கு மேல் சைராவை அழைத்து கொண்டு தனது போலீஸ் வண்டி முன்னால் அமர வைத்து கொலையான ஷண்முக சுந்தரத்தின் வீட்டை தேடி சென்றாள்.
சைரா இயற்கை குணமாக வீட்டுக்குள் மோப்பம் பிடித்தபடி வந்தது.
நேராக ஷண்முகசுந்தரம் இறந்த இடத்துக்கு வந்து குலைத்து விட்டு, ஒவ்வொரு பணியாட்களை தாண்டி சென்று ஷ்யாம் அறைக்குள் வந்து குலைத்தது.
ஷ்யாமோ எச்சிலை கூட்டி விழுங்கியவன், “என்ன நாயை வச்சி என் ரூமுக்கு வந்தும் என்னை குற்றவாளியா பார்க்கற? இந்த நாய் என்ன போலீஸ் நாயா? சாதரண கிப்டா வந்தது தானே.” என்று பயத்தில் உலறினான்.
நற்பவிக்கோ எனக்கு கிப்ட் வந்தது இவனுக்கு வரை தெரிந்திருக்கு? என்று சிந்தனையில் சுழல, சைராவோ நற்பவியை இழுத்து கொண்டு ஓடியது.
சைராவின் பெல்டை விடுவித்துவிட்டு போலீஸ் வண்டியில் பின் தொடர்ந்தாள்.
அதுவோ குறுக்கு சந்தில் ஓடி நேராக சந்தான கிருஷ்ணனின் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் குதித்து வந்து தோட்டத்து பக்கம் குலைத்தது.
சைரா குலைக்க மேலிருந்து சந்தானகிருஷ்ணனுக்கு கிலியை தர, அவரோ படிகளில் வேகமாக இறங்கி வந்தார்.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super.super. intresting