யாரோ-7
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
அதிகாலையே காக்கி உடையை அணிந்து சைராவை கூட்டிக் கொண்டு மதிமாறன் கடைக்கு சென்றாள்.
அவனோ இத்தனை சீக்கிரம் எங்கே கிளம்பினாளென அறிந்திடாவிட்டாலும் புன்னகையை உதிர்த்து பரிமாற கூறினான்.
தன் டேபிளின் கீழ் இலையை வைத்து சைராவுக்கும் பரிமாறினாள்.
மதிமாறனோ அருகே வந்து, “நற்பவி சாந்திக்கா அந்த பொண்ணை இங்க வடை போட கூட்டிட்டு வரட்டுமானு கேட்கறாங்க. நீங்க வேண்டுமின்னா உங்களுக்கு பாருங்க. ஓகேனா சம்பளம் பேசிடலாம்.” என்று கூறவும் நற்பவி நெற்றியை கீறி “ஓகே சாப்பிட்டு வர்றேன்” என்று இட்லி வடகறியென சாப்பிட துவங்கினாள்.
“மாறன் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நான் குயிக்கா வேலைக்கு வர்றவங்களை பார்த்துட்டு பேசிட்டா. பெட்டரா இருக்கும்” என்றதும் இதோ வந்திடறேன் நற்பவி” என்று வேலைக்கு இருந்த பழனியை அமர்த்திவிட்டு நற்பவியை அழைத்து சாந்திக்கா வீட்டுக்கு முன் வந்தான். வண்டியை தொடர்ந்து வரவும் நற்பவியும் வந்து சேர்ந்தாள்.
“சாந்திக்கா…. சாந்திக்கா…” என்று கூப்பிட அழுத விழிகளோடு, ஒரு பெண் வந்தாள்.
அதை தொடர்ந்து சாந்தி வந்தாள்.
போலீஸ் உடையோடு வரவும் சாந்தி பயத்தில் விழிக்க, “அக்கா இவங்க தான் நான் சொன்னவங்க.” என்று மதிமாறன் அறிமுகப்படுத்தினான்.
“மதி தம்பி… இந்த பொண்ணு பேரு மீனா. இப்ப தான் திருமணம் முடிச்சிது. வீட்டுக்காரன் எப்பபாரு சந்தேகப்பட்டு அடிக்கிறான். வீட்டுக்கு மூத்த பொண்ணு ஏற்கனவே ஒரு முறை அம்மா வீட்டுக்கு போச்சு.
உன்னோட கூட பிறந்த இரண்டு பேர் இருக்கா இப்படி வந்தா எப்படி அதுங்களுக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்னதும், இது இந்த முறை அங்கயும் போகலை. என்னோட தான் கொஞ்சம் பேசும். அதனால இங்க வந்துடுச்சு. இரண்டு நாளா அப்படியொன்னும் அந்த ஆளு தேடலை” என்று குறைப்பட்டார்.
“ஒன் செகண்ட் உங்க புருஷன் பேரு சுரேஷ் ஆஹ்?” என்று கேட்டு வைத்தாள் நற்பவி.
“ஆ..ஆமா மேடம்” என்று மீனா பயத்தில் வெளிறி நின்றாள்.
“உப்ஸ்… உங்களை காணோம்னு கம்பிளைன் பண்ணிருக்கார். என்னம்மா நீ கணவன் மனைவி சண்டைனா வீட்டை விட்டு வந்துடுவீங்களா. சண்டை ஒருபக்கம் போட்டுக்கிட்டு மறுபக்கம் வேலையை பார்க்க வேண்டாமா? யாருக்கு தான் சண்டையில்லை.” என்றதும் மீனாவோ, “மேடம் அவர் என்னிடம் சாதாரணமா எந்த சண்டை போட்டாலும் பரவாயில்லை பல்லை கடிச்சிட்டு வாழ்வேன்.
ஆனா சந்தேகப்பட்டு தினம் தினம் வார்த்தையால கொள்ளறார். அசிங்கமா கெட்ட வார்த்தையில திட்டறார். கூடவே இருந்தா நான் தப்பு பண்ணினா என்ன என்ற மனநிலைக்கு தள்ளிடுவார். என்னால என் தங்கைகள் வாழ்க்கை பாழுகும். நான் இப்படி ஊருக்கு ஒதுக்கமா ஏதோ வேலை செய்து வயித்தை கழுவிக்கறேன்” என்று மீனா அழவும், நற்பவியோ தலையை உலுக்கினாள்.
“சமாதானம் பண்ணி சேர்த்துவிட்டா வாழ்விங்களா?” என்று கேட்டதும், “சூடுபட்ட மனசு மேடம். வேண்டுமின்னா உங்களுக்காக ஒருமுறை பார்க்கறேன். ஆனா வேலையும் செய்யறேன். யாருக்காகவும் இனி வீட்ல அடைந்து கிடக்க மாட்டேன். ஏதோ சம்பாரிச்சு நாலு காசை சேர்த்து வைக்கணும். இன்னிக்கு பரவாயில்லை கடைசி காலத்துல எங்க போவேன்.” என்று பதில் தந்தாள்.
“மீனா உங்க டிசிஷன் சரி தான். உங்க கணவரிடம் பேசறேன். எனக்கு வேலைனு பெரிய விஷயம் இருக்காது. வீட்டை பெருக்கி, துணி துவைக்கணும், முடிந்தா வீட்ல சமைக்கணும், பாத்திரம் கழுவணும்” என்று அடக்கினாள்.
“அதெல்லாம் ருசியா செய்துடுவேன் மா” என்று கூறி விடைப்பெறும் நேரம் சாந்தியோ “டேய் பசங்களா கீழே இறங்குங்க கண்ணாடி கிண்ணாடி உடைக்க போறிங்க. யார் வண்டியோ இரண்டு நாளா கிடக்குது உங்களுக்கு ஏறி விளையாட சௌகரியமா போச்சா” என்று திட்ட நற்பவி நின்று திரும்பினாள்.
“என்ன சொன்னிங்க யார் வண்டியோவா?” என்று கேட்டாள்.
சாந்தியோ, “ஆமா மா. இந்த வண்டியை இத்தினி நாள் பார்த்தது இல்லை. இப்ப தான் புதுசா இருக்கு. எதையாவது உடைச்சிட்டா அதுக்கு வேற காசு கொடுக்கணும். இந்த புள்ளைங்களோட ஒரே ரோதனை.” என்று அவளின் இரு குழந்தையை இறங்கிவிட்டு கண்டித்தாள்.
நற்பவி மூளையோ யாருமற்ற வண்டி ஏன் நிற்குது? என்று யோசித்தவள் வாசுண்ணாவிற்கு போன் போட்டு அழைத்து அந்த வண்டியை தங்கள் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்ல கூறினாள்.
வண்டியை சில ஜித்து வேலை காட்டி சாவியின்றி ஸ்டார்ட் செய்ய முயன்றாள். ஆனால் முடியவில்லை. பெட்ரோல் முழுக்க இருந்தும் ஸ்டார்ட் ஆகாது சதிசெய்தது.
சில போட்டோ நம்பர் பிளேட்டோடு எடுத்தவள், அட்ரஸை வண்டி எண் காட்டி ஆர்டிஓ அலுவலகத்திடம், சம்மந்தப்பட்டவரிடம் கேட்பதற்கு அனுப்பியும் வைத்தாள்.
“வாசுண்ணா யாராவது வண்டி கேட்டு வந்தா என்ன பார்க்க சொல்லிட்டு கொடுங்க” என்று கூறி “சாந்திக்கா உங்களுக்கும் தான் வண்டி தேடி யாராவது கேட்டா போலீஸ் ஸ்டேஷன் வந்து வாங்கிக்க சொல்லுங்க. கண்ட இடத்துல வண்டியை பார்க் பண்ணிட்டு இர்ரெஸ்பான்ஸிபிளிடியா இருக்கறது.” என்று முனங்கினாள்.
“ஓகே மாறன் தேங்க்ஸ் உங்க ஹெல்ப் இல்லைனா கொஞ்சம் கஷ்டம் தான். இவ்ளோ குயிக்கா இடமும் மனிதரும் பழகியிருக்க மாட்டேன்.” என்றாள் நற்பவி.
“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு நற்பவி. அதெல்லாம் உதவின்னா செய்யாம இருப்பேனா?” என்றவன் அவள் புறப்பட்டிருக்கவும், “என்ன காலையிலயே கிளம்பியாச்சு. இந்தவூர்ல நிறைய கெட்டவங்க இருக்காங்களா என்ன?” என்று கேட்டான். அவனின் சிகை காற்றில் அலைபாய அழகாய் கேட்டு வைத்தான்.
“சேசே அப்படியில்லை. ஷ்யாம்சுந்தரத்தோட காதலி சௌந்தர்யாவை சந்திக்க போறேன். அவங்க அப்பா மாணிக்க விநாயத்திடம் கொஞ்சம் விசாரிக்கணும்.
அப்பறம் கேட்கணும்னு நினைச்சேன் அந்த ஞானவேல் உங்களை எதுக்கு முறைக்கிறார். நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணியதாலா?” என்று கேட்டாள்.
மாறன் தலையை சொரிந்து தெற்றுப்பல் அழகாய் சிரித்தவன் “அப்படியும் வச்சிக்கலாம். ஞானவேல் ஷ்யாமோட பிரெண்ட். கொஞ்சம் உரிமையா பேசிப்பாங்க. நீங்க கேஸை வேற ரூட்ல கொண்டு போனதும் கொஞ்சம் கடுப்பா இருக்காங்க. போதாததற்கு நான் உங்களோட அந்த மாயனத்துல இருந்து கூடவே ஹெல்ப் பண்ணறதா நினைக்கிறாங்க” என்றதும் நற்பவி புன்னகைத்து விடைப் பெற்றாள்.
அங்கிருந்து ஸ்கூட்டியில் வந்து மாணிக்க விநாயகத்தின் வீட்டு கதவை தட்டினாள்.
கதவை திறந்தும் “யாரு?” என்று வந்த சௌந்தர்யா உடையை வைத்தே அது நற்பவி என்று கணித்தாள்.
“வாங்க வாங்க.. அப்பா… இந்த ஊருக்கு புதுசா வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நற்பவி வந்துயிருக்காங்க.” என்று குரல் கொடுத்து உள்ளே அழைத்தாள்.
“பரவாயில்லையே… இந்த ஊர்ல என்னை பற்றி யாருக்கும் தெரிய வராதுனு நினைச்சேன். என்னை பார்க்காதவங்களுக்கே என் பெயர் முதல் தெரிந்துயிருக்கே.” என்று வியந்தாள்.
“இதுல என்ன மேம் அதிசயம். ஷண்முகசுந்தரத்தோட கொலையை இன்வஸ்டிகேஷன் பண்ண ஒரு பொண்ணு வந்தது இங்க ஊருக்கே தெரியும். சம்மந்தப்பட்ட எங்களுக்கு தெரியாதா?” என்றாள் சௌந்தர்யா.
“கொலைக்கு சம்மந்தப்பட்டவங்களா?” என்று நற்பவி கேட்க, “ஏங்க… ஷ்யாம் சொன்னது மாதிரி நீங்க பேசினா கடுப்பா தான் வருது. நான் எங்க மாமனார் என்ற அர்த்தத்துல சொன்னேன்.” என்று சௌந்தர்யா வெடுக்கென கூறிட அவள் தந்தை மாணிக்கம் தாய் அனிதாவும் வந்தனர்.
“வாங்கம்மா… மாப்பிள்ளை சொன்னார். நீங்க வந்தாலும் வருவீங்கனு ஆனா இவ்ளோ குயிக்கா வீடு தேடி வருவீங்கனு எதிர்பார்க்கலை. அனிதா மோர் கொண்டா.” என்று அனுப்பினார்.
“என்ன சார் பண்ணறது. தாமதப்படுத்துற ஒவ்வொரு நொடியும் கொலையாளி தப்பிக்க வாய்ப்பிருக்கு இல்லையா?” என்று கேட்டு வைத்தாள்.
“நிச்சயமா… ஆனா என் மாப்பிள்ளை குற்றவாளியா மதிப்பிடாதிங்க. உங்களுக்கு தான் கால நேரம் விரையமாகும்.
என் மாப்பிள்ளை கடைந்தெடுத்த சொக்க தங்கம். சம்பந்தி வேண்டுமின்னா அப்படியிப்படி தவறானவரா இருக்கலாம்.” என்று கூறும் போது முகம் வெறுப்பை விழுங்கியது.
“மோர்.” என்று அனிதா நீட்டவும் “தேங்க்ஸ் மா” என்றவள் பெற்று கொண்டாள்.
“அப்படியிப்படி தவறானவரா என்றால்?” என்று கேட்டதும் மாணிக்கம் முகம் ஏன் வாயை விட்டோம் என்று மாறியது. ஆனாலும் சமாளிக்க முயன்றார்.
“அரசியல்வாதி அது போதாதா மா. எங்களை பொறுத்தவரை அதுவே ஒரு நெகட்டிவ் தான். நீங்க எந்த காரணத்துல என் மகளை விசாரிக்க வந்திங்கனு தெரிந்துக்கலாமா?” என்று கேட்டார் மாணிக்கம்.
“என்ன மாமா இவளுக்கு உட்கார வச்சி உபசரிப்பு தர்றிங்க. ஏய் என்ன ரொம்ப ஆடுற. எங்கப்பாவை கொன்றது சந்தானம். அவனை விட்டுட்டு எங்களை சுத்திட்டு இருக்க.” என்று ஆவேசமாக ஷ்யாம் வந்தான். அவன் வந்த சுவடே தூக்கத்தில் எழுந்து அரக்கபறக்க வந்த நிலையை சுட்டிக்காட்டியது.
“லுக் மிஸ்டர் ஷ்யாம். வந்ததிலருந்து பார்க்கறேன். வா போ என்று மரியாதை இல்லாம பேசறிங்க. இது சரியில்லை. இதுவரை அமைதியா இருந்தேன் உங்க வீட்ல துஷ்டியா போச்சேனு. இனியும் அப்படியிருக்க மாட்டேன்.
சந்தேகம் ஒருபக்கமா இருந்தா அங்க போய் குடைந்திருப்பேன். உங்க மேலயும் சந்தேகம் வருதே.” என்று பேசினாள் நற்பவி.
“காதலுக்கு ஓகே சொல்லலைனு யாராவது பெற்ற அப்பாவையே கொல்வாங்களா? லூசா நீ” என்று கேட்டான் ஷ்யாம்.
“காதலுக்கு மறுப்பு தெரிவித்தா கொலை செய்ய முயல மாட்டாங்க. ஆனா உங்க காதலியை தரக் குறைவா உங்கப்பா உங்க காதலியோட அப்பா மாணிக்கத்திடம் பேசியிருக்கார். போதாததற்கு பணம் மோட்டிவா எவ்ளோ வேண்டும் எவ்ளோ வேண்டும்னு உங்களோட ஒரு நைட் ஸ்டே பண்ணினாளா அதுயிதுனு பேசியிருக்கார்.
இது உங்களுக்கும் தெரியும். அந்த கோபத்துல தான் கொன்றிருக்கலாம். அதுவுமில்லாம நீங்க படத்துக்கு போகவேயில்லை. டிக்கெட் மட்டும் வாங்கின நீங்க. உங்க காதலி வருத்தப்படவும் இவங்களை பார்க்க வந்துட்டிங்க” என்று கூறினாள்.
சௌந்தர்யா நற்பவியிடம் பேசியபடி ஷ்யாமிற்கு தகவல் தந்திட அவனோ பைக் எடுத்து இங்கு விரைவாய் வந்து சேர்ந்தான். நற்பவி கேள்வியில் ஷ்யாமிற்கு மொட்டு மொட்டாய் வேர்வை துளிர்த்தது.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super narpavi Sema intresting