யாரோ-8
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
“எதுவும் தெரியாம நாயை வச்சிட்டு இங்க வரலை மிஸ்டர் ஷ்யாம். எல்லா தரப்பிலும் முன்னவே லேசா தெரிந்துக்கிட்டு தான் வந்தேன். என்ன என்னனு நினைச்சிட்டு இருக்கிங்க.
யாருமே தெரியாத இடத்துல போஸ்ட்டிங் கிடைச்சா துளியூண்டு கூட விசாரிக்காம வருவாங்களா.” என்று பேச, முதல் முறை ஷ்யாம் அவளை கண்டு அஞ்சினான்.
“இங்க பாருங்க மேடம். அப்படியேனாலும் சௌந்தர்யாவுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை.” என்று மேடம் என்ற வார்த்தையை உதிர்த்தான்.
“மச் பெட்டர். சௌந்தர்யா கொலை நடந்த இடத்துல ஏன் போனிங்க?” என்று கேட்டாள்.
“கொலை நடந்த அப்ப இல்லை அதுக்கு முன்னவே போனேன். ஷ்யாம் தான் படம் பார்க்க போனவர் திரும்பி வந்து என்னை கூட்டிட்டு எங்கப்பாவிடம் விட்டுட்டார்.” என்று கோபமாக முகம் வைத்தாள்.
“நீங்களே சொல்லுங்க… என்னோட காதலை கொச்சைப்படுத்தியதும் போதாதுனு, மகன் விரும்பின என்னை என்னலாம் கேவலமா பேசினார். அப்பாவிடம் பணத்தை வச்சி பேரம் பேசியிருக்கார். அதுவும் பணம் தான் மோட்டிவ் என்றால் அவரோட.. அவரோட என்னை..” மேலே பேசாமல் விசும்பினாள்.
“என்னை பார்த்தா எப்படி தோன்றுதா? அதனால தான் கொல்ல போனேன். ஆனா அப்பா அவசரமா படத்துக்கு போன ஷ்யாமிடம் சொல்லி, அவரை அங்க வர வச்சிட்டார்.
சந்தானகிருஷ்ணன் மது குடிச்சிட்டு இருந்தார். நான் பேச போனப்ப சரியா ஷ்யாம் வந்து, அவரை சந்திக்க விடாம, அவரோட ரூமுக்கு அழைச்சிட்டு வந்துட்டார்.” என்று சௌந்தர்யா கூறினாள்.
இடைப்புகுந்த ஷ்யாம் “என்னோட ரூமை களோபரமாக்கியதே இவ தான். கோபத்துல என்னோட அறையை தலைகீழா மாற்றிட்டா. என்னால இவளை சமாதானப்படுத்தி இங்க வந்து விட்டுட்டு போகவே நேரம் கடந்துடுச்சு. எனக்கும் மாமாவோட பேசிட்டு இங்கயே தங்கிட்டேன். காலையில வேலைக்காரங்க போன் பண்ணவும் தான் விழுந்தடித்து ஓடினேன்.
சத்தியமா நான் எங்கப்பாவை கொலைப் பண்ணலை” என்றான் ஷ்யாம்.
நற்பவி நேரத்தை கணக்கிட்டு கேட்டறிந்தாள். போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் நேரத்தில் இறந்த நேரத்திற்கு முன்னாடியே வந்து சென்று உள்ளதாக யூகித்தாள்.
“ஓகே. உங்களோட வாக்குமூலத்தை நான் ஸ்டேஷனில் எழுதிக்கறேன். தேவைப்பட்டா கூப்பிடுவேன்.” என்று அங்கிருந்து கிளம்பினாள்.
சௌந்தர்யா ஷ்யாம் தோளில் சாய்ந்தாள். மாணிக்கமோ “மாப்பிள்ளைக்கு டீ கொடுமா.” என்று கூற ஷ்யாமோ ஞானவேலுக்கு நற்பவி வந்து சென்றதை கூறினான்.
—
இங்கு தரணோ போனை எடுத்து யாசப்பிற்கு அழைக்க எண்ணினான். ஆனால் முருகனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில், “யாசப்பிற்கு போனில் அழைக்காதே இந்த எண்ணில் தொடர்பு கொள். யாசத் வண்டியை பொதுவெளியில் உபயோகிக்காதே.” என்று கூறியிருந்தான்.
தரண் மெதுவாய் முருகனுக்கு தொடர்பு கொண்டான்.
“யோவ் வண்டியை ஷண்முக சுந்தரத்தோட வீட்டுக்கு போற முள்ளு சந்துலயா வைப்ப. இப்ப வண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுச்சு. அய்யா உன் மேல கொலை வெறில இருக்கார்.
கொலையும் பண்ணலை, வண்டியை வேற அங்கயே வச்சிட்டு வந்து இருக்க. போதாதுக்கு இங்க சையத் அய்யா வண்டியை வேற எடுத்துட்டு போயிருக்க. அறிவிருக்கா டா உனக்கு. ஒரு வேலைக்கும் லாய்க்கு இல்லை.” என்று கத்தினார்.
“இங்க பாருங்க சார் கொன்னுட்டு நான் போகலாம்னு வந்தா யாரோ கொன்று போட்டிருக்காங்க. இதுல அந்த நேரத்துல வண்டியும் ஸ்டார்ட் ஆகலை. எங்க அங்கயே இருந்தா மாட்டிப்பேன்னு தான் ஓடி வந்துட்டேன். அப்படியே எப்படி போக முடியும். இங்க இருந்து தொலைவட்டா போக சொந்த கார் இருந்தா தானே முடியும்.” என்று பதில் தந்தான் தரண்.
“டேய்… என்ன வாய் நீளுது. ஒரு இடமா பதுங்கி இரு. வண்டியை வெளியே எடுக்காதே. அப்படியே மாட்டினா என் பெயர் வரக்கூடாது. நான் யாசத் காரை வாட்டர் வாஷ் விட்டுட்டு இன்னும் வீட்டுக்கு டெலிவரி வரலைனு சொல்லிப்பேன். எக்காரணத்து கொண்டும் எங்க பெயர் வரக்கூடாது.” என்று சந்தானகிருஷ்ணன் வில்லனாய் பேசி முடிக்க, தரண் பம்மியபடி “சரிங்கயா” என்று முடித்து கொண்டான்.
சந்தானகிருஷ்ணனோ குறுக்கும் நெடுக்கும் நடந்தவன், எனக்கும் ஷண்முகத்துக்கும் இருக்கற பகையை எவனோ நல்லா தெரிந்துக்கிட்டு சரியா பிளான் போட்டு செய்திருக்கான்.
‘யாரா இருப்பான்?’ என்றும், எப்படி தன் மீது பழியை போட்டால் தப்பிப்பது என்றும் தீவிரமாக யோசனைவயப்பட்டார்.
அவருக்கு உதித்த யோசனை நற்பவியை தீர்த்து கட்டுவது என்று தோன்ற இதில் சொதப்பினாலோ அல்லது மாட்டினாலோ தானாக கூண்டுக்குள் அகப்பட்ட எலியாக மாறலாமென எண்ணி எண்ணியவர் நற்பவியை தீர்த்து கட்ட, ஆட்களை தேடினார். இங்கிருந்து வருபவர்கள் நிச்சயம் காட்டி கொடுக்க வாய்ப்புண்டு என்று நார்த் சென்னையிலிருந்து ஆட்களை இறக்க முடிவெடுத்தார்.
நல்லதம்பி, சாமுவேல் என்ற இருவரை தொடர்பு கொண்டு மாணிக்க விநாயகத்தின் பெயரை கூறி பணத்தொகையை பேசி முடித்து மூச்சு விட்டார்.
“தம்பி பார்த்து செய்யணும். பொண்ணு தனியா தான் இருக்கு. ஒரே வெட்டு போட்டா போதும். ஆனா மாட்டிக்க கூடாது” என்றதும் மொத்த தொகையை இங்கு வந்ததும் தருவதாக பேரம் பேசினார்.
எப்படியும் இதற்காக வாங்கிய எண்ணிலிருந்து இடத்தை கூறி ஒரு இடத்தில் பணத்தை வைத்துவிட்டாள் வருபவர்களுக்கு தன்னை பற்றி எந்த ஒரு அடையாளமும் கூறயியலாது. அவர்களுக்கு தேவை பணம் என்பது மட்டும் சந்தானம் அறிந்திருந்தார்.
அன்றைய இரவு யாருமே வண்டியை தேடி வராது போகவே நற்பவியோ ஆர்.டி.ஓ ஆட்கள் மூலமாக மாலையே அவளுக்கு தகவல் கிட்டியது.
ஏதோ இரண்டு மூன்று பேரிடம் கை மாறிய வண்டி என்பதால் பழைய ஓனர் பெயரே பதிந்து இருந்தது. புதிதாக யார் வாங்கினாரென தெரியவில்லை. எப்படியும் கை மாறி வந்து தற்போது சொந்தமானவரின் பெயரை அறிய இரண்டு நாளாவது ஆகுமென அமைதிகாத்தாள்.
ஆனால் வாசுண்ணா மெக்கானிக் வந்து வண்டியை சோதித்த பொழுது, அந்த தகவலை கூறினார்.
“மேடம்… அந்த வண்டியில பெட்ரோலோட உப்பும் மண்ணும் கலந்திருக்கறதா மெக்கானிக் சொல்லறார். அதனால ஸ்டார்ட் ஆகாதாம். நீங்க கூட ஸ்டார்ட் ஆகலைனு சொன்னிங்களே மேடம்.” என்றதும் நற்பவியோ “ஷண்முகசுந்தரத்தோட இந்த பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு எவ்ளோ தூரம்.” என்று பதில் கேட்டு “பார்த்துக்கறேன் நீங்க அந்த சுரேஷ் என்பவரை கூட்டிட்டு வாங்கண்ணா” என்று அனுப்பினாள்.
அரைமணி நேரத்திற்கு பின் தேடி பிடித்து நற்பவி முன் அழைத்து வந்தவார் வாசு.
“உன் பொண்டாட்டி கிடைச்சிட்டா எங்கயும் போகலை. இங்க தான் என் வீட்ல வேலைக்கு சேர்ந்திருக்கா.
அப்பறம் அந்தப்பொண்ணு ஓடலை ஓட வச்சிருக்க. என்ன வாய்யா உனக்கு.
உங்க புருஷன் பொஞ்சாதி சண்டையை வீட்ல போடுங்க. ஆனா பொம்பள பிள்ளையை சகட்ட மேனிக்கு கெட்ட வார்த்தையில திட்டின வாயிலேயே மிதிப்பேன். உன்னை பெத்து போட்ட பொண்ணும் கூட பிறந்தவளும் மனசுல வச்சிட்டு பேசு. வாயுக்கு வந்த மாதிரி அசிங்கமா பேசினா அடுத்த நாளே போலீஸ் லாக்கப்ல இருப்ப. இதுவொன்னும் என்ன பேசினாலும் சகிச்சிக்கிட்டு போற காலமில்லை.
கெட்ட வார்த்தை பேசினனு புகார் கொடுத்தா உள்ள தள்ளலாம். அது புருஷனா இருந்தாலும் சரி. ரோட்டுல போற எவனா இருந்தாலும் சரி. ஜாக்கிரதை.. போய் தொலை.” என்று கத்தினாள்.
சுரேஷோ தலையாட்டி மெதுவாக முனங்கியபடி சென்றான்.
இதற்கு மேல் இங்கிருந்தால் கண்ணை கட்டும் என்று நற்பவி தனது வீட்டை நோக்கி சென்றாள்.
இரண்டு நாள் போனதே தெரியவில்லை. சந்தானகிருஷ்ணனின் வீட்டில் இருந்தவரையெல்லாம் சந்தேகத்தின் பேரில் விசாரித்து விட்டாயிற்று.
நற்பவிக்கு எங்கு சென்று எப்படி புதிரை தீர்க்க என்று நாக்கு தள்ளியது. சந்தானகிருஷ்ணனை தனியாக கஸ்டடியில் எடுத்தால் உண்மை வெளிவரலாம். ஆனால் ஒரு பதவியில் இருப்பவரை காரணமின்றி சந்தேகத்தில் இழுத்து செல்ல இயலாது இதே யோசனையில் உணவை உண்டு முடிக்க, மீனா பாத்திரம் கழுவி வைத்து விட்டு வீட்டுக்கு செல்ல அனுமதி வேண்டினாள்.
“மீனா சொல்லணும்னு நினைச்சேன். கணவன் வார்த்தையால வதைக்கிறான்னா உடனே பொட்டி படுக்கை எடுத்துட்டு அம்மா வீட்டுக்கு போயிட கூடாது. அவன் இனி வாயே திறக்காத அளவுக்கு மட்டமான வார்த்தை பேசினா கம்பியெண்ணுவ சுட்டி காட்டு.
சட்டத்துல ‘பொருளாத வன்முறை, வார்த்தையால வன்முறை உணர்வுகளால் வன்முறை என்று மூன்று பிரிவு பெண்களுக்காக தான் இருக்கு. அசிங்கமா மனைவியை திட்டினாலோ அல்லது அவள் குடும்பத்தை திட்டி பேசினாலோ அந்த பொண்ணு புகார் கொடுத்தா சட்டம் ஆக்ஷன் எடுக்கும். அதனால பேசறவனை கண்டு ஓடாதே. பேசறவன் வாயை அடைக்கணும். என்ன புரியுதா போ” என்று கூற மீனா தலையாட்டி புறப்பட்டாள்.
மீனா கண்ணில் ஏதோவொரு மிளிர்வு வந்து நம்பிக்கை தந்தது. நற்பவியோ வீட்டு கதவை அடைத்து விட்டு உறங்க சென்றாள்.
நல்லதம்பி மற்றும் சாமுவேல் இருவரும் தனியாக ஒரு காரில் நேற்றே வந்தனர். ஆரணி பக்கம் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தனர்.
இரவு நற்பவியை புணர்ந்து கொன்றிட திட்டம் வகுத்து வந்தனர்.
நாய் இருக்கின்றன என்று கூறியதால் முன் கூட்டியே முன்னே ஒருவன் செல்ல பின்பக்கம் வழியாக மற்றொருவன் வந்து நாயை பிடிக்கும் வலையை வீசி போட்டு பிடித்தான். அதை மீறி சைரா குலைக்க ஆரம்பித்தது.
நற்பவி இமை திறந்தவள் கன்னை எடுத்து கொண்டு, “சைரா..சைரா” என்று கூப்பிட்டபடியே கதவை திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள்.
வெளியே சைரா தன் குடும்பம் போன்றது. அப்படியிருக்க கதவை திறந்தாள்.
சைரா இருக்கும் சப்தமே கேட்கவில்லை. வலையில் பிடித்தவர்கள் அடுத்த நொடியே நாய் மயக்கமுற அதற்கு மருந்தை நாசியில் ஸ்பிரே செய்து விட்டனர்.
சைராவை தூக்கியவன் அங்கிருந்த துணிக்கல்லுக்கு பின்மறைத்து வைத்து வீட்டின் மாடியில் ஏறியிருந்தான்.
நற்பவியோ வீட்டுக்கு பின்னும் மாடியிலும் சப்தம் மெல்லியதாக கேட்கவும் கண்களை சுழல விட்டபடி இருந்தாள்.
ஆனால் மேலிருந்த சாமுவேலோ அவளுக்கு பின்னால் குதித்து கன்னை தட்டி விட்டு மயக்க ஸ்பிரே அடிக்க முயன்றான்.
நற்பவியோ அவனை தடுத்தபடி மூச்சை ஆழ்ந்து இழுத்தாள். சுவாசிக்காது இரண்டு அடியில் தட்டி விட்டாள். அதற்குள் நல்லதம்பி வந்து கைகளை பிடிக்க, அவனையும் மிதித்து வைத்தாள்.
நற்பவி இருவரிடம் தன் பலம் கொண்டு போராடினாள். அவள் வைத்திருந்த கன் இருட்டில் எங்கு போனதென தெரியவில்லை. சைராவும் இருக்குமிடம் தெரியாது அந்த வாசலில் இருக்கும் ஒளியிலேயே அடித்து கொண்டிருந்தனர்.
முகம் மறைக்கவில்லை சிறிதாய் மாஸ்கை மட்டும் அணிந்திருக்க, அதை எடுக்க முயன்றாள்.
சாமுவேல் அடிவாங்கியிருக்க நல்லதம்பியோ சுற்றி முற்றி பார்த்து விட்டு அங்கிருந்த கட்டையால் நற்பவி தலையில் அடித்தான்.
ஒரு நொடி வலி தாங்காது துடித்தவள் அடுத்த நொடி அவன் மீண்டும் அடிக்க முயலும் முன் மதிமாறன் வந்து கட்டையை பிடித்து பிடுங்கி அதை வைத்தே முட்டியால் அடித்தான்.
நல்லதம்பி திடீரென ஒருவன் வரவும் அச்சப்பட சாமுவேலோ கொஞ்சம் கொஞ்சமாய் நற்பவி கழுத்தை நெறுக்கினான்.
நற்பவி அவனின் சிகையை பிடித்து வலிமை கொண்டு இழுத்தாள்.
கண்ணை குத்த முயன்று கொண்டிருக்க சாமுவேலோ மதிமாறன் அடுத்து தன்னை தாக்க ஆரம்பிக்கவும் சுதாரித்து, “பங்கு விட்டு பிடிக்கலாம்” என்றதும் நல்லதம்பி தலையாட்ட நற்பவியை சுழட்டி தள்ளி விட்டு ஒரே நேரத்தில் ஓட ஆரம்பித்தனர்.
நற்பவி விழுந்த இடத்தில் அவளின் கன் இருக்க எடுத்து சுட்டு விட்டாள். சப்தமின்றி ஒரு ஊசி போன்று சென்று நல்லதம்பியை தாக்கியது.
அவன் ஆஹ் என்று அலறி ஊசியை பிய்த்து எரிந்து ஓடினான். அது துப்பாக்கி என்றாலும் ஊசியாய் இருந்தது. குண்டாய் துளைக்கவில்லையேயென குழம்பி ஓடினான்.
நல்லதம்பி மற்றும் சாமுவேல் நிறுத்தி வைத்த காரில் ஏறி பறந்தனர்.
“அவ என்னடா சுட்டா ஊசி மாதிரி இருந்தது. விஷ ஊசியா இருக்குமா. அய்யோ கண்ணை கட்டுதே” என்று நல்லதம்பி புலம்ப சாமுவேலோ காரை எங்கும் நிறுத்தாமல் ஆரணி பக்கம் ஓட்டி சென்றான். இங்கு அப்படியொன்றும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இருப்பார்களா என்று ஐயம் தான். ஆனால் சாமுவேல் ஏற்கனவே தங்கியிருந்த லாட்ஜ் பக்கம் மருத்துவமனையை பார்த்து இருக்க அங்கு செல்ல வேகமெடுத்தான்.
“நீ… நீங்க.. எப்படி வந்திங்க” என்று நற்பவி கேட்டதும் “மீனா அக்கா இரண்டு நாள் செய்த வேலைக்கு பணத்தை கொடுக்க வந்தேன். இங்க வந்தா அதிரடி ஆக்ஷனா இருக்கு. யாருங்க அவங்க? என்னங்க இது. அச்சச்சோ நெற்றியில ரத்தம் நற்பவி என்ன ஆச்சு.” என்று பதறினான்.
அவனின் பதட்டம் அவளுக்குள் மென்னகை விதைத்தது.
“நத்திங் அவன் அடிச்சதுல லைட்டா இப்படி ஆகியிருக்கும்” என்று நெற்றியில் வழிந்த ரத்தத்தினை தொட்டு சகஜமாக முயன்றாள்.
ஆனால் சின்னதாய் மயக்கமும் வர, தள்ளாட மாறனோ அவளை தாங்கி பிடித்து கொண்டான். அவளை தூக்கி கொண்டு அறைக்குள் சென்றான். உடனடியாக அவ்வூரில் இருக்கும் மருத்துவர் ஒருவரை தொடர்புக் கொண்டு அழைத்தான்.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super narpavi. Intresting
Semma interesting 👌👌👌👌👌🔥🔥🔥