Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16

அத்தியாயம்-16

துகிரா சார்லஸுடன் பேச தோட்டத்தில் வீற்றிருந்தார்கள். “மெர்ஸி என்னை மன்னிக்க மாட்டா” என்று துகிரா ஆரம்பித்தாள்.

  சார்லஸ் சத்தமாய் சிரித்து, “மெர்ஸி என்றாலே கருணை துகிரா. மன்னிப்பா.” என்று கூறியவன், “அப்ப… இஷானை மணக்க உனக்கு சம்மதமா?” என்று கேட்டுவிட, மறுப்பாய் தலையசைத்து, “அமுல்யாவுக்கு நிரந்தர அம்மாவா கூடவேயிருக்கற வாய்ப்பு அமைந்தா மறுக்க மாட்டேன். ஏன்னா… அம்மு என் உயிர்.
   சப்போஸ் இந்த வீட்ல ஒன் ஆஃப் தி கேர்டேக்கர் மாதிரி என்னை இருக்க கூறினாலும் இருந்துப்பேன்.” என்று கூறினாள்.

  “நைஸ்… இதை தான் எதிர்பார்த்தேன். ஆனா கேர்டேக்கர் எல்லாம் வேண்டாம். இஷானோட முடிவு பொறுத்து அவர் மேரேஜ் பண்ணினா பண்ணிக்கோ. அது தான் கௌரவம். நிரந்தரமா அமுல்யா உனக்கு பொண்ணாவா” என்று கூறியவன், “ஓகே… மார்னிங் பிரேக்பஸ்ட் முடிச்சிட்டு கிளம்பறேன். மெர்ஸியிடம் இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். எதுனாலும் நானே பக்குவமா சொல்லறேன். நீ ஏதாவது சொன்னா, அவ ஏதாவது பேசிடுவா.” என்று கூற, துகிரா காரில் அலுவலகத்திற்கு செல்லும் இஷானை வெறித்தாள்.
 
  இத்தனை நாள் அலுவலகமாவது மண்ணாவது என்று அமுல்யா கூடவே ஒட்டிக்கொண்டு திரிந்தான். இன்று அலுவலகம் செல்வதால், அவனது முடிவு வேறாக தான் இருக்குமென்று முடிவெடுத்து மெர்ஸியிடம் எதற்கு இந்த பேச்சை பேசி கஷ்டப்படுத்த வேண்டாமென நினைத்தாள்‌.

   காலை உணவை முடித்து அமுல்யாவிடம் சொல்லிவிட்டு பைரவியிடமும், “எந்த முடிவெடுத்தாலும் சொல்லுங்க. வர்றேன் அம்மா” என்று புறப்பட்டான்.

  வாசல்வரை சென்றவன் நின்று நிதானமாக துகிராவை பார்க்க, அமுல்யாவோடு அவள் நின்ற கோலம், நெஞ்சில் நிறைத்தவனாக, புன்னகை தூவி சென்றான்.

  “அம்மா… இனி என் கூடவே இருப்பிங்க தானோ?” என்றதும் ஆமென்றாள்.

  “இஷான் அப்பாவோட கல்யாணம் பண்ணிப்பிங்க தானே?” என்று கேட்க, அதற்கு மட்டும் பதில் பேசவில்லை.

  அமுல்யா முகம் வாடிவிட, பைரவியோ இதற்கு மேல் இருவரிடம் எப்படி பேச, அதுதான் தெளிவாக பேசிவிட்டாயிற்றே.
  ஒருவேளை துகிரா தங்களோடு ஒரே வீட்டில் இருந்து அமுல்யாவை வளர்க்க முடிவெடுத்து விட்டானா? என்ற கலக்கம் உண்டானது. இஷானிடம் நேரிடையாக எதுவும் கேட்கவும் முடியாத பயத்தில் இருந்தனர்.
  துகிராவோ என் மகளை விட்டு இனி செல்ல மாட்டேன். என் வாழ்க்கை எப்படி அமையுமோ அது படி பார்ப்போம் என்று இஷான் வீட்டில் நடமாடினாள்.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்….

    பைரவியோ மனம் தாளாமல் “வயசு பொண்ணு எந்த உரிமையும் இல்லாம இரண்டு ஆம்பளை பசங்க இருக்கற வீட்ல தங்கறது சரியில்லை இஷான்.” என்று பொரிந்திட, “அவளே சும்மாயிருக்கா. உங்களுக்கு என்ன?” என்றான் சுயநலமாக. அவன் அம்மாவிடம் பிடிக்கொடுத்து பேசினால் தான் அவளை மணக்க அல்லவா திட்டம் போடுவது.

“அவளுக்கு அப்பா அம்மா அக்கானு யாருமில்லை இஷான். அதனால் அக்கா குழந்தை எக்கேடு கெட்டா உனக்கென்ன? உன் வேலையை பாருன்னு சுயநலமா சொல்ல ஒருத்தரும் இல்லையே.
  அக்கா குழந்தைக்காக தன் வாழ்க்கை எப்படி போகும்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா‌.
    ஒரு பொண்ணை நானும் பெத்துவச்சியிருக்கேன் இஷான். அவளுக்கு இதே மாதிரி நடந்தா என்ன செய்வதுன்னு யோசித்தா என்ன முடிவெடுப்பேனோ, அதை தான் துகிரா விஷயத்தில் முடிவெடுத்து, உன்னிடம் பேசறேன்.” என்றார் பைரவி. நீ சுயநலமாக எண்ணினாலும் நான் அவளுக்காக பேசுகின்றேன் என்ற ரீதியில்.

  “ப்ளிஸ்… துர்கா இடத்துல வேற எவளையும் என்னால நினைச்சு பார்க்க முடியாது.” என்றான்.

    பைரவியோ, “உன் மக அம்மாவா துகிராவை தானே நினைச்சி பார்க்கறா.” என்றார்.

  “ஏன்மா… அவ தான் இந்த வீட்ல ஒரு ஆளா இருந்து கவனிக்கட்டும். இப்ப என்ன இருக்க கூடாதுன்னா சொன்னேன். பக்கத்து ரூம்ல எல்லா வசதியும் இருக்கு. காலத்துக்கு இருக்க சொல்லுங்க. அமுல்யாவை பார்த்துக்கிட்டு” என்று தோளைக் குலுக்கினான்.‌

  “நல்லாயிருக்குடா நியாயம். எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது. அவளுக்கு சின்ன வயசு. அவளை ரொம்ப அதிகமா காதலிக்கிறவன் இருக்கான். அவ இளமையை உன் பொண்ணுக்கு ஆயாவா இருந்து எதுக்கு வேஸ்ட் பண்ணணும்.
  அவ சுயநலமா அன்னைக்கே சார்லஸோட அனுப்பி வச்சியிருக்கலாமே. அவங்க வீட்ல அப்பா அம்மா அவ பிரெண்ட் மெர்ஸி துகிராவை தங்க தட்ல தாங்க தயாரா இருக்காங்க.
  உன் குழந்தையை பார்த்துக்கிட்டு அவ இளமை ஏன் கழியணும்.” என்றார்.

“அதுக்கு… நான் அவளை கல்யாணம் செய்துக்கணுமா? அவன் ஓரு படிச்ச  லூசு. காதலை தியாகம் செய்துட்டு போறான். காதல்னா எந்த நேரத்திலும் பிடிச்சவளை யாருக்காகவும் விட்டுதர கூடாது.” என்று கூறினான்.

“அப்ப அவளை கேரளாவுக்கு திரும்ப அனுப்பு. உன்‌ மக அமுல்யாவிடம் யாரோ ஒரு சார்லஸ் கூட அவளுக்காக அவன் காதலை தூக்கி எறிந்துட்டு போனான். ஆனா பெத்த அப்பா என்னால உன் துகிரா அம்மாவை ஏற்க முடியாது. என் ஈகோ இடம் கொடுக்காதுனு அவளிடம் புரியவை. ” என்று கூற, இஷான் பேச்சிழந்து நின்றான்.‌

  மாடியில் துகிரா எல்லாவற்றையும் கேட்டு நின்றவளுக்கு, அப்பொழுதும் என்ன முடிவெடுப்பதென்ற தெளிவு வரவில்லை.
  அவளால் அமுல்யாவை தாண்டி சார்லஸை மணக்க செல்வது பிடிக்காது. அதே நேரம் கீழே தன்னால் ஏற்படும் குழப்பத்திற்கு தீர்வும் கூற முடியவில்லை. அமுல்யாவின் அப்பாவே எந்த முடிவென்றாலும் எடுக்கட்டும் என்று எண்ண, இஷானோ தன்னை காணும் அமுல்யாவை நெருங்கினான்.‌

“அம்மு… உனக்கு அம்மா கண்டிப்பா வேண்டுமா டா? அப்பாவே அம்மாவா இருக்கறேன்னே” என்று கேட்க, “இல்லைப்பா… நீங்க இல்லாம கூட நான் இதுவரை வளர்ந்துட்டேன். துகிரா அம்மா இல்லாம நான் ஒரு நாளும் இருந்ததில்லை‌. எனக்கு அம்மா வேண்டும் அப்பா. அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோப்பா‌. ப்ளிஸ்ப்பா.” என்று இஷானின் தாடைபிடித்து கெஞ்ச, இஷான் கண்கள் கலங்கி தவித்து, “சரி… உங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கறேன். உனக்காக மட்டும் தான்.” என்று பைரவியிடம் திரும்பி, “என் அமுலுக்காக மட்டும் தான். அந்த பொண்ணிடம் கல்யாணத்தை பற்றி கேட்டுட்டு சொல்லுங்க. ஆனா இந்த பத்திரிக்கை, ஊரை கூட்டி விமர்சனம் இதெல்லாம் வேண்டாம்… ம்ம்ம முதல்ல அந்த பொண்ணு ஓகே சொல்லறாளா பாருங்க” என்று அமுல்யாவிடம் “அப்பா உனக்காக சம்மதிச்சிட்டேன். உனக்காக.” என்று அணைத்து அழுதான்.

  துகிராவுக்கு மேலே கண்ணீர் வந்தது, இனி பைரவி அத்தை தன்னிடம் கேட்பார்களோ? என்று பயந்தாள்.
  ஆனால் அமுல்யாவுக்காக அவள் அம்மா என்ற அழைப்பிற்காக எதையும் ஏற்க தானே முடிவெடுத்து இந்த வீட்டில் வந்தது.

  பைரவியோ அறைக்கு வர, சிலையாக நின்ற துகிராவிடம், “கீழே பேசியதை கேட்டியா?” என்றதும் கண்ணீரை சட்டென துடைத்து ஆமோதிப்பாய் நின்றாள்.

  “உனக்கு சம்மதமா? அமுல்யாவுக்கு அம்மாவா, இஷானுக்கு மனைவியாக போறது?” என்று கேட்டாளர்.

  துகிராவோ “நான் இப்பவும் அமுல்யாவுக்கு அம்மா தான். அமுல்யா பிறந்தது முதல் என் கையில அவளை வாங்கியதிலருந்தே.. நான் அம்மா தான்.” என்றாள்.

“இஷானை மேரேஜ் பண்ணிக்க சம்மதமாமா? இல்லை… சார்லஸை விரும்பி அவர் தான் வேண்டுமின்னாலும் நீ போகலாம். ஏன்னா… இப்ப சம்மதிச்சிட்டு அப்பறம் அந்த நெருடலும் இருக்கக்கூடாது‌ பாரு. அமுல்யாவுக்கு ஆரம்பத்திலயே அம்மாவா நீ இல்லையென்றதை கூட தாங்கிக்க வைப்போம்‌” என்று கூற, துகிரா பைரவியை பார்த்து, “நான் சார்லஸை விரும்பலை. சார்லஸ் தான் என்னை விரும்பினார். அவரே அமுல்யாவுக்காக விட்டுக்கொடுத்துட்டு போயிட்டார். நான் என் பிரெண்ட் மெர்ஸிக்காக அவ அண்ணாவோட பிரப்போஸை மதிச்சேன். அதுக்கூட அமுல்யாவுக்கு அப்பாவா இருப்பார் என்ற ரீசனுக்காக. அமுல்யாவுக்கு அவ அப்பாவை தவிர யாரும் அப்பாவா வரமுடியாது. அமுல்யா அப்பாவை கல்யாணம் செய்துக்கறேன். அவர் சொன்னது போல… ஊர்கூட்டி, விழாவா எதுவும் வேண்டாம். ஏதாவது கோவில்ல… இல்லை ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டா போதும்.” என்று முடித்துகொண்டாள்.

  பைரவி துகிராவை கட்டியணைத்து சென்றார். அவர் அமுல்யாவிடமும் கீழே உள்ளவர்களிடமும் இஷான்-துகிரா இருவரும் திருமணத்திற்கு சம்மதித்ததை உரைத்திருக்க, அமுல்யா ஓடிவந்தாள்.
  ஏற்கனவே தந்தை தனக்காக துகிரா அம்மாவை கல்யாணம் செய்ய சம்மதித்ததில் ஆனந்தமாக இருந்தவள், துகிராவும் சம்மதித்திருக்க, “லவ் யூ அம்மா” என்று கன்னத்தை எச்சிப்படுத்தி முத்தங்களை பொழிந்தாள்.

  துகிராவோ, கண்ணீரை மறைத்து, மகளின் சந்தோஷத்தை ரசித்தாள்.

   பைரவி உடனடியாக சார்லஸிற்கு போனில் அழைத்து, நடந்ததை தெரிவித்தார்.
சார்லஸோ, “ஆண்டவரே… ஸ்தேத்திரம். ரொம்ப சந்தோஷம் அம்மா. அம்மா… இந்த விஷயம் மெர்ஸிக்கு இப்ப தெரிய வேண்டாம். துகிரா மேரேஜ் முடிந்ததும் சொல்ல சொல்லுங்க. பிகாஸ்… பிரெண்ட் மேலயும், அண்ணகாரன் என் மேலயுமா மெர்ஸிக்கு பாசம் அதிகம்.
   நடுவுல ஏதாவது பேசி ஏதாவது தடை ஏற்படுத்த போறா. கல்யாணம் விமர்சையா வைப்பிங்களா?” என்று கேட்டான்.‌

“இல்லை தம்பி… இரண்டு பேருமே சிம்பிளா கோவிலில் இல்லை ரெஜிஸ்டர் ஆபிஸ்ல முடிச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க.
  என் பையன் இஷான், இது தேவையா என்ற எண்ணத்தில இருக்கான்.  துகிராவுக்கு அமுல்யாவை விட மனமில்லாம சம்மதிச்சிட்டா‌” என்றதும், சார்லஸோ இடைப்புகுந்து, “அம்மா… துகிரா என்னை விரும்பலாம் செய்யலை‌. மெர்ஸியோட போர்ஸாலயும் அமுல்யாவுக்காகவும் தான் சம்மதிச்சா. அதனால் அவளுக்கு என்னை மறக்கறது ரொம்ப ஈஸி. இதையும் இஷானிடம் சொல்லிடுங்க. நான் கல்யாணத்துக்கு வரமுடியாது. ஆனா என்னைக்கு மேரேஜ்னு சொல்லுங்க. இங்க சர்ச்ல ப்ரே பண்ணிப்பேன்.” என்று கோரிக்கை வைத்தான்.

  பைரவி பேசி முடித்து அடுத்தடுத்த காரியத்தை ரிஷி மூலமாக விரைவுப்படுத்தினார்.

  கோவிலிலும் ரெஜிஸ்டர் ஆபிஸிலும் திருமணத்தை முடித்திட எண்ணி, எந்த கோவிலில் திருமண செய்யலாமென்று பிரதன்யா பைரவி கலந்தாலோசித்தார்கள்.

  அமுல்யாவின் அப்பா இஷானும், அம்மா துகிராவும் இணையும் திருமண நாளும் வந்தது.

  இஷான் மனமேயின்றி ரெஜிஸ்டர் ஆபிஸில் கையெழுத்து போட்டான். துகிராவோ அவளுமே கடைமைக்காக போட்டுவிட்டாள்.

    வெள்ளை சட்டை ப்ளு பேண்ட் அலுவலக்ததில் மீட்டிங் செல்ல தயாரானவன் போல இருந்தான்.
  துகிராவோ யாரோ தூரத்து கல்யாணத்திற்கு  சிம்பிளான பார்டர் அணிந்த பெண்ணாக வந்திருந்தாள்.
 
   “மாலை இருந்தா மாத்திக்கோங்க” என்று கூற, இஷானோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.” என்று நகர்வதில் குறியாக இருந்தான்.
 
  அவனுக்குள் இதயம் வலித்தது. துர்காவை இதே அலுவலகத்தில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தவன். அப்பொழுது தம்பி தங்கைகள் வயதில் சிறியவர்கள். அம்மாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் துர்காவை மணந்தான். துர்கா அன்று ஆகாய வண்ணப்புடவை அணிந்திருந்தாள்.

   இன்றோ… “அப்பா.” என்று மகள் கூப்பிட, திரும்பியவன் பார்வையில் துர்கா உருவத்தில் இருந்த துகிராவும், அமுல்யா பிங்க் நிற கவுன் அணிந்திருக்க, துகிராவும் இளஞ்சிவப்பு சேலை அணிந்திருந்தாள். துர்காவை போலவே தோற்றம் இருந்தாலும், இஷானை கண்டு துர்கா உதிர்க்கும் புன்னகை தனித்துவமானது. 
  இங்கே துகிரா இஷானை நிமிர்ந்து பார்ப்பதும் இல்லை. அதோடு அவனை கண்டால், புன்னகை என்ன விலை என்ற ரீதியில் நிற்பாள்.

இருவரும் ரெஜிஸ்டர் அலுவலகம் முடித்து, கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
   ரிஷி, பிரதன்யா பைரவி கூடவே அமுல்யா தவிர்த்து யாரும் இல்லைமல், ஏதோ திருமண நாளிற்கு அர்ச்சனை செய்ய வந்தவன் போல, நிற்க, ரிஷி தான், ஏற்கனவே திருமணம் செய்வதற்கு கேட்டு முடித்திருந்தான்.‌

   ஐயரும் கொஞ்சம் போல சிலரும் கோவிலுக்கும் வந்திருக்க, தட்டில் பூ, மாலை, பழம், தாலி என்று சாமி காலடியில் வைத்து எடுத்து வந்தனர்.
  மாலை அணிவித்திட கூற, இஷானோ துகிரா கழுத்தில் அவசரமாய் வினாடிக்குள் அணிவித்து திரும்ப, துகிராவோ மெதுவாக விழிநிமிற்றி இஷானை கண்டு மாலை அணிவித்தாள்.

   இரண்டாம் முறை சற்று மெதுவாக மாலை போட, அவளும் அதே நேரத்தை எடுத்துக்கொண்டாள். மூன்றாம் முறை தான் நிதானமாக துகிராவை கண்டான்.
  எப்பவும் விட பிரதன்யா சற்று அலங்காரம் செய்திருக்க வேண்டும். அதோடு நீண்ட சிகையில் அலங்கரித்த மல்லிப்பூ, கருவிழியால் கடத்திடும் அழகில் இருந்தாள்.

  துகிராவுக்கு இஷான் முதல் முதலில் பார்த்த நினைவெல்லாம் வந்து சென்றது. முரட்டுத்தனமாக முத்தம் கொய்த நிமிடத்தில் நெஞ்சுக்கூடு வேகமெடுத்தது.

  அவள் உணரும் நொடிக்குள் தாலியை அணிவிக்க அவன் கரங்கள் முன்னே வர, இஷானும், பார்வைகளை கடத்தி தடுமாறினான்.

   இஷான் உடனோ சுதாரித்து அமுல்யாவை தூக்கி கொண்டான். துகிரா கீழே விழுந்து இறைவனை வேண்டி பைரவியிடம் ஆசி வாங்கினாள்.
“என்னம்மா… முதல்ல ஜோடியா யாரிடமாவது ஆசி வாங்கலாமே” என்று திரும்ப, அவர்களை தவிர யாருண்டு.
  “பரவாயில்லை அத்தை வாழ்த்த மனசு தான் முக்கியம்.” என்றாள் துகிரா.

  பிரதன்யாவோ “ஹாப்பி மேரீட் லைப் அண்ணி” என்று கட்டிப்பிடிக்க, ரிஷியும் “ஹார்டி கங்கிராஜுலேஷன் அண்ணி” என்று கை கொடுத்து வாழ்த்தினார்கள்.

  அண்ணனுக்கு வாழ்த்தவே அஞ்சி நடுங்க, அத்தை சித்தாவை பார்த்த குழந்தை அமுல்யாவோ, “ஹாப்பி மேரீட் லைஃப் மம்மி.” என்று கன்னத்து முத்தம் தந்தாள்‌. துகிராவும் “தேங்க்யூ டா அம்மு” என்று கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
 
   தந்தை இஷானுக்கும் முத்தம் வைத்து “ஹாப்பி மேரீட் டேடி” என்றாள்.

அவனும் துகிரா போலவே “தேங்க்யூ அமுலு” என்றவன் அமுல்யா கன்னத்தில் முத்தமிட்டான். முத்தமிட்டப்பிறகே துகிராவின் உதட்டு சாயம் அமுல்யா கன்னத்தில் ஒட்டியிருப்பதை கவனித்தான்.
  அமுல்யாவுக்கு முத்தமிட்டோமே என்று உதட்டை கைக்குட்டையால் துடைத்து பார்க்க வெள்ளை கர்ச்சீப் இளஞ்சிவப்பு உதட்டு சாயம் துடைக்கப்பட்டிருந்தது.

இஷானோ வெடுக்கென துகிராவை காண, அவளோ மற்றவர் பார்த்துவிட்டார்களா என்று இஷானின் அன்னை தங்கை தம்பியை பார்க்க, கோவிலில் இருந்த   மற்றவர்களுக்கு பணத்தை வழங்குவதை கண்டு, இஷானை மீண்டும் பார்வையிட, அவனோ கர்ச்சீப்பை மறைத்து பேண்டில் திணித்தான்.‌

  -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

8 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 16)

    அப்பா டா..! ஒருவழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான். கல்யாணத்துக்கு முன்னாடியே ரெண்டு பேரும் எலியும் பூனையுமா இருப்பாங்க, இனி கல்யாணத்துக்கப்புறம் எப்படி இருக்கப் போறாங்களோ தெரியலை.
    சார்லஸ் உண்மையிலயே ரொம்ப நல்லவன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    EPPADIYO SAMATHICHI RENDU PERKUM MRG MUDINJIDUCHI . ava life waste aga kudathunu solli mrg pani vachitanga aan sernthu vazhznume rendu perum manasu othu poi eo nadakum ithu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!