Skip to content
Home » கானல் – 4

கானல் – 4


தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.
தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன் வேலையைத் தீவிரமாக காட்டியது. இரவு உணவைக் கொடுத்ததும் மாத்திரை புகட்டி, ஆராதனாவை படுக்கவைத்து விட்டாள்.
இருந்தும் காய்ச்சல் கூடியதே தவிர குறையவில்லை. மருத்துவரை சந்தித்தால் குறையும் என்கிற ரீதியில் காய்ச்சல் அடம்பிடித்தபடி, ஆராதனாவை ஆட்டிப் படைத்ததோடு சைந்தவியையும் சேர்த்து படுத்தியெடுத்தது. முனங்கிக் கொண்டே பாதி உறக்கத்தில் கிடந்தாள் ஆராதனா.
‘ஆராதனாவை மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டும். இன்று கட்டாயம் கல்லூரிக்கும் போக வேண்டும்.’ என்ன செய்வதென்று யோசித்தவள், ஆராதனாவைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலுள்ள கிளினிக்கிற்கு தந்தையுடன் சென்றாள்.
ஏழு மணி அளவில் மருத்துவரும் வந்துவிட, அவளைப் பரிசோதித்து விட்டு ஊசியும் போட்டு மாத்திரையும் கொடுத்தார். இரண்டு ஊசிகளைப் பதக்கங்கள் போல பின்னாடி வாங்கி கொண்ட ஆராதானாவின் கூச்சலும் அழுகையும், அடுத்தடுத்து காத்திருக்கும் குழந்தைகளுக்கு பயம் காட்டிவிட்டன.
செவிலியர் எழுதிக் கொடுத்த மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
ஆராதானவைப் படுக்க வைத்துவிட்டு இவள் கல்லூரிக்கு கிளம்ப எழுந்திட, இவள் கைகளைப் பிடித்துக் கொண்ட ஆராதனா விடவே இல்லை.
“எனக்கு காய்ச்சல் அடிக்குது… நீ எங்க போற? என் பக்கத்திலே இரு…” என்றாள்.
அவள் கேட்டவிதம் நெஞ்சைப் பிசைய, கண்கள் கலங்கிப் போயின.
‘உடன் இருக்க வேண்டும் என்று எண்ணம்தான். ஆனால் கல்லூரி போய் ஆக வேண்டும், என்ன செய்வது?’ சில நேரம் இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க வேண்டுகிற கட்டாயம் உருவாகி விடுகிறது.
“ஆரு, ஏற்கனவே சொல்லிருக்கேன் உன்கிட்ட, இன்னைக்கி முக்கியமான கிளாஸ். நான் போயே ஆகணும். இந்த நாள் விட்டா, அடுத்து காலேஜ் போறது வேஸ்ட். இன்னைக்கி ஒரு நாள் தாத்தா, அப்பாத்தா கூட இரு. நாளைக்கு அத்தை உன்கூட இருக்கேன் ப்ளீஸ்…” எனக் கெஞ்ச,
அவளும் மனமின்றி தன் கைகளை அவளிடமிருந்து பிரித்துக் கொண்டாள். பிடித்த கைகளுக்குள் முத்தம் வைத்த சைந்தவி சீக்கிரம் வந்து விடுவதாகச் சொல்லி கல்லூரிக்கு கிளம்பினாள்.


வெகுநேரம் ஆராதனாவிற்காக காத்திருந்த கீர்த்திக்கு தாமதமாக தான் தெரிந்தது, ஆரு வரமாட்டாளென்று. அவள் வராமல் போனது கீர்த்திக்கு பெரிய ஏமாற்றம் தான்.
‘ஆராதனா தன்னிடம் பேச மாட்டாள்’ என்று புலம்பிய கீர்த்தியை மிதுல்தான், ‘அதெல்லாம் பேசுவா, போய் ஒரு சாரி கேட்டு இந்த சாக்லேட் குடு. சீக்கிரமா சமாதானம் ஆகிடுவா.’ என்று சொல்லி ஆராதனாவை சமாதானம் செய்து, சாக்லேட்களை வாங்கி கீர்த்தியிடம் கொடுத்தான்.
ஆனால் அதற்கு தான் வேலை இல்லாமல் போனது. கீர்த்தி முகம் சோர்வைத் தத்தெடுத்திருந்தது, ஆராதனா இல்லாமல்.


வகுப்பில் மூன்று மணி நேரமாக கண்ணும் கருத்துமாக பாடத்தில் கவனத்தை வைத்தாலும், மூளையின் மூலையில் ஆராதனாவின் எண்ணம்தான் சைந்தவிக்கு
‘என்ன செய்கிறாளோ?’ என்ற நினைப்பு இருக்காமல் இல்லை. அவளால் சிதறும் கவனத்தை ஒன்றுகூட்டி பாடத்தில் நோக்கிச் செலுத்த முயன்று, கொஞ்சம் வெற்றியும் கண்டாள்.
மதிய உணவின் போது வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் சைந்தவியும், அவளது தோழிகள் வந்தனா, ஜனனியும்.
“ஏன்டி முகத்தை சோகமாக வச்சிருக்க?” வந்தனா, சைந்தவியைப் பார்த்து கேட்கவும்,
“மூனு மணி நேரமா எடுத்த பாடத்துக்கு இந்த ரியாக்ஷன் குறைவு தான்… தலைய பிச்சிட்டு வந்திருக்கணும், கொஞ்சம் டீசென்ட்டா இருக்கோம், அவளோதான்டி வித்தியாசம்…” என ஜனனி பதிலுக்கு சொல்ல,
“இவகிட்ட வித்தியாசத்தை பார்க்க முடியாதுடி ஜானு. தலைய ஆட்டி ஆட்டி அந்த அம்மா நம்மளை பார்த்து கிளாஸ் எடுக்கும்படியா வச்சிட்டா, கழுத்த திருப்பகூட முடியலடி. இதுக்குதான் இவ பக்கம் உக்காராதனு சொன்னேன், கேட்டீயா? சாப்பிடலாம்னு வந்த என் நினைப்புல மண்ணள்ளி போட்டு போன் பார்த்துட்டே வர்றா பாரு… எருமை மாடு…” என சைந்தவியைத் திட்ட, அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாது, அமுதாவின் அலைபேசிக்கு அழைத்தாள்.
அழைப்பு எடுத்ததும் சைந்தவி, “அம்மா, ஆரு எப்படி இருக்கா? என்ன பண்றா? சாப்பிட்டாளா? மாத்திரை போட்டாளா?” அவரைப் பேச விடாமல் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க, அமுதா சலித்துப் போனார்.
“ம்… நல்லா இருக்கா, விளையாட்றா, சாப்பிட்டா, மாத்திரை போட்டா…” நான்கு கேள்விகளுக்கும் ஒத்த வார்த்தைகளாக பதில் தந்தார்.
“காய்ச்சல் குறைஞ்சிருக்கா? இல்லையா?”
“குறைஞ்சு இருக்கு.”
“இத ஏன் சொல்லல நீ?”
“காய்ச்சல் இருக்கான்ற கேள்வி நீ கேட்கவே இல்லையேமா?”
“ஏன் கேட்டா தான் சொல்லணுமா?”
“பேச விடாம கேள்வியா கேட்டா? கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் வரும்.” அவரும் நக்கலாக பேச,
“மூனு மணி நேரமா அந்த அம்மா கிளாஸ்ன்ற பேருல கழுத்தறுத்தருச்சி… நீயும் அதே பண்ணாத… வை போன…” என கடுப்பாகி வைத்து விட்டாள்.
கடுகடுவென இருந்தவளின் அருகே வந்த இருவரும் அவள் தோளை அழுத்தி, “என்னடி ஆச்சி? ஏன் கடுகடுன்னு இருக்க?”
அவள் தாயிடம் நடத்திய உரையாடலை சொல்ல, “ஆரு இப்போ எப்படி இருக்கா? நல்லா தானே இருந்தா, திடீர்னு என்ன?” என ஜனனி கேட்கவும் அவள் பள்ளியில் நடந்ததை சொன்னாள்.
“அவங்க பொண்ணு அப்படி சொன்னதுக்கு எப்படி ஆரு காரணமாவா? தன் பொண்ணு மேலே காட்ட முடியாத கோபத்தை, யாரோ பெத்த பொண்ணு மேலே காட்டுவாங்களா? கல்யாணத்தை நிறித்திடுனு சொன்னதும் அந்த அழகன் கல்யாணம் நின்றும் பாரு… அப்படியே நின்னாலும் அதுக்கு காரணம் வேறையா இருக்குமே தவிர, அவங்க பொண்ணு கூட காரணமா இருக்கு முடியாது. பெத்த படிப்பு படிச்சாலும் திருத்த முடியாது இதுங்கள…” என வந்தனா சொல்ல அதை ஆமோதித்த ஜனனி,
“அது இருக்கட்டும், கல்யாணமாக போற மாப்பிள்ளை எப்படி உலகழகனா? இல்ல உள்ளூரழகனா?” என கேட்க,
வந்தனா அவளை ஒருமாதிரி பார்த்தாள். அவள் பார்வையைக் கண்டதும் வழிந்த ஜனனி, “இல்ல… இந்த பிரச்சனைக்கான மெயின்ரோல் எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்…” என்றாள்.
“தெரிஞ்சுக்கலாமே… சைது நீ சொல்லு, என்ன மாப்பிள்ளை வொர்த்து பீஸா?” எனக் கேட்கவும் சைந்தவியிடம் ஏக்கத்துடன் வந்தது மூச்சு.
“என்னடி அனல் பறக்குது உன் மூச்சுல?”
“பின்ன என்னடி… அழகனாவன் எல்லாம் நமக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்மளை யாரு கட்டிப்பா?”
“யாரு கட்டிப்பா? மீதம் மிஞ்சி இருக்க வத்தலும் தொத்தலும் போல ஒருத்தன் வருவான். நமக்கு அவனே ஓவரும்பாய்ங்க…” என வந்தனா சலித்துக் கொள்ள, சைந்தவியோ மிதுலின் முகத்தை நினைத்துப் பார்த்து,
“ம்… ரொம்ப அழகுடி! அதுவும் அந்த சாம்பல் கண்ணு… ப்பா! குடுத்து வச்சவடி அவ…” என்றாள் ஏமாற்றமாக.
“ஆத்தாடி…! அந்த ரணகளத்துலையும் நீ குதூகலமா சைட் அடிச்சிருக்க சைது…”
“கோவமா பேசிட்டு இருக்கும் போதே எண்ட்ரி கொடுத்தான் பாரு… கோபப்படுறதும் அதே நேரம் ரசிக்கிறதும் எவ்வளவு கஷ்டமான டிப்பார்ட்மென்ட் தெரியுமா? வெளியே தெரியாம கஷ்டப்பட்டு மெயின்டெய்ன் பண்னேன்.” என்கவும் இருவரும் காறி துப்பினர்.
“சரி, ஒரு அழகன மிஸ் பண்ண வேதனைய, சோறால ஆத்திப்போம்.” என மூவரும் சென்றனர்.


மாலையில் வீட்டிற்கு வந்ததும் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்த மிதுல், படித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம் சமாதான கதையை கேட்க, அவளோ உதட்டைப் பிதுக்கி ஆராதனா வராததைச் சொல்ல, “சரி விடு, நாளைக்கு வருவால… நாளைக்கு சாரி சொல்லி சாக்லேட் குடு.” என்றான்.
“நாளைக்கும் வரமாட்டா… அவளுக்கு காய்ச்சல், டூ டேஸ் லீவு சொல்லி அவங்க அத்தை மிஸ்கிட்ட சொல்லிட்டாங்க.” என கோபமாக தன் அன்னையைப் பார்த்துச் சொல்ல,
மதுவோ அதை அசட்டையாக எடுத்துக் கொண்டாள். மற்ற மூவரும் அவளை முறைத்தனர்.
அதையும் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் வேலையில் கவனம் செலுத்த, கோபம் கொண்ட ஜோதி, “ஒரு குழந்தைய மிரட்டி, திட்டி காய்ச்சல் வரவச்சிட்டு தன்னால எதுவும் நடக்கல போல இருக்கா பாருங்க…” என்று சத்தம் போட்டார்.
“ஜோதி விடு, இனி எதுவும் பேசி பிரோயஜனம் இல்லை. டென்ஷனாகி உன் பிபியை ஏத்திக்காம உள்ள போ.” என மனைவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாலும், மகள் செய்த காரியம் தவறு. அதை செய்தபின்னும் குற்றவுணர்வு இல்லாது இருப்பது, அவருக்கு அவளது நடவடிக்கை குறித்து வருத்தம் தந்தது.
அக்கா இவ்வாறு மாற காரணம் கண்டுபிடிக்கவே முடியவில்லை மிதுலால். அவளை மாற்ற எண்ணம் இருந்தாலும் தன்னால் காயம் கொண்டு விடுவாளோ என்ற பயம், அவனைத் தள்ளி நிற்க வைக்கிறது இந்த விஷயத்தில் மட்டும்.
அவரவர் தங்கள் வேலையில் மூழ்கி இருக்க, உள்ளே நுழைந்தனர் அவர்கள் வீட்டு சம்மந்தி.
அவர்களைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக உள்ளே வரவேற்றனர்.
திடீரென தான் இருவரும் வந்தார்கள். அவர்களை வரவேற்ற மிதுல் குடும்பம், அவர்கள் தரப்போகும் இடியை எவ்வாறு ஏற்றுக் கொள்ள போகப் போகிறார்களோ?
ஜோதி வந்தவர்களுக்கு காப்பி கலந்து கொடுக்க, அதை சங்கடத்துடன் எடுத்துக் கொண்டனர். தயக்கத்துடன் கையிலே வைத்திருக்க, “குடிங்க சம்மந்தி.” என்றார் மூர்த்தி.
குடித்து முடித்தவர்கள் குவளையை கீழே வைத்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் பெண்ணின் தகப்பனார் தான் ஆரம்பித்தார்.
“எங்களை நீங்க எல்லாரும் மன்னிக்கணும், இந்தக் கல்யாணம் வேண்டாம், நிறுத்திடலாம்.” என்று பெரிய குண்டாகப் போட, மிதுல் குடும்பம் அதிர்ந்து போனது.
“என்னாச்சி சம்மந்தி? ஏன் வேணாம்? ஏன் நிறுத்தணும்? கல்யாணத்துக்கு எல்லா வேலையும் பாத்ததுக்கு அப்புறம் வேணாம் சொன்னா என்ன அர்த்தம் சம்மந்தி? எதுக்காக கல்யாணம் வேணாம் சொல்றீங்க?” என பதறிப் போய் கேட்டார் மூர்த்தி.
பெண்ணின் தாயாரோ வெடித்து அழுது விட்டார். தகப்பனாரோ கண்ணீரை அடக்கிக் கொண்டு இருந்தார். அவர்கள் அழுவதைக் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் பதைபதைக்க, மதுவிற்கு மட்டும் கோபம் வந்தது.
பொறுமை இழந்த மதுவோ, “என்ன, உங்க பொண்ணு எவன்கூடவாது ஓடிப் போயிட்டானு சொல்ல போறீங்களா? உங்க பொண்ணால உங்க மானம் போன கதைய சொல்ல வந்திருக்கீங்க அப்படி தானே?” என அவளாக கணித்து கேட்டாள்.
வேற என்ன காரணம் இருக்கப் போகிறது என்ற ஆதங்கத்திலும் கோபத்திலும் கேட்டு விட்டாள்.
ஜோதி, “வாய மூடு மது… அவங்க இன்னும் காரணத்தை சொல்லல, அதுக்குள்ள ஏன் நீயா ஒன்ன கற்பனை பண்ணிக்கற?”
“வேற என்ன காரணம் இருக்கப் போகுது? அதுவாதான் இருக்கும்…” என்றாள் ஆத்திரத்துடன்,
“இல்ல, அது காரணம் இல்ல… என் பொண்ணு எங்களை எப்பவும் தலை குனிய விடமாட்டா. அப்படி நாங்க அவளை வளர்க்கவும் இல்ல… எப்போமே அவளை நினைச்சி பெருமைதான் படுவோம். ஒருக்காலும் எங்களை அவ தலை குனிய வைக்கமாட்டா…” என்று அழுத்தமாக சொன்னார் பெண்ணைப் பெற்ற தாயார்.
“அப்போ என்ன காரணம்? இப்ப வந்து கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்றீங்க?”
அவரோ கொண்டு வந்த பையிலிருந்து மருத்தவ குறிப்பேட்டை எடுத்து மூர்த்தியிடம் நீட்டினார்.
அவரும், ‘என்ன இது?’ என்பது போல கைகள் நடுங்க வாங்கிக் கொண்டார்.
“என் மகளோட ஹெல்த் ரிப்போர்ட்…” என்றவருக்கு அடுத்த வார்த்தை சொல்ல வரவே இல்லை, தொண்டை அடைத்தது.
“அம்மா தண்ணி எடுத்துட்டு வாங்க.” என்ற மிதுல் வேகமாக அவரது கையைப் பற்றி அழுத்தினான்.
ஜோதியிடம் தண்ணீரை வாங்கி நடுங்கும் அவர் கரங்களில் தினித்தான். அவர் பருகி முடிக்கும் வரை அனைவருக்கும் பதற்ற நிலை. குடித்து முடித்து தன்னை நிலைப்படுத்தினார்.
“தர்ஷினிக்கு என்ன அங்கிள்? எதுக்கு இந்த ரிப்போர்ட்?” என தன்மையாக, பொறுமையாக கேட்டான்.
“அவளுக்கு ப்ளட் கேன்சர் தம்பி…” என்றதுமே அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
“என்ன சம்மந்தி சொல்றீங்க? இது எப்டி?” என்றார் மூர்த்தி.
“என் பொண்ணுக்கு, கொஞ்ச நாள் முன்ன அவள் உடல்ல சில சில மாற்றங்கள் ஏற்பட்டது. நாங்களும் எங்களுக்குள்ள ஏதேதோ நினைச்சிட்டு விட்டுடோம். அந்த நோயோட அறிகுறியும் எங்களுக்கு தெரியல. கடைசியில சமீபமா அவள் உடல்ல ஏற்பட்ட வித்தியாசத்தை வச்சி பயத்துல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனோம்.
அவர் எங்க பொண்ணுக்கு ப்ளட் கேன்சர் இருக்குனு சொல்லிட்டார். கடைசி ஸ்டேஜ்ல உங்க பொண்ணு இருக்காங்கனு சொன்னதும் எங்களுக்கு உசிரே இல்ல சம்மந்தி. அவளை காப்பாத்த முடியாதானு கேட்டோம். கொஞ்ச நாட்களுக்கு சாவை தள்ளிப் போடலாம், ஆனா தடுக்க முடியாது சொல்லிட்டார் சம்மந்தி…” என அவர் வெடித்து அழுக,
அவரது அழுகையில் அனைவரின் மனதும் பிசைந்தது. மதுவிற்கே ஒருமாதிரி ஆனது. அவரை அணைத்துக் கொண்டான் மிதுல். அவர் உடல் குலுங்கிக் கொண்டே இருந்தது, முதுகை தட்டிக் கொடுத்தான்.
அவன் அணைப்பிலிருந்து பிரிந்த அவர், “உண்மை தெரிஞ்சதும் என் பொண்ணு சொன்ன முதல் காரியம், கல்யாணத்தை நிறுத்திடுங்க ப்பா, என்னால இன்னொருத்தர் வாழ்க்கை பாழாகிடக் கூடாது சொல்லி, எங்களுக்கு உண்மை தெரிஞ்ச கையோட அனுப்பி வச்சிட்டா.
இந்த கல்யாணம் வேணாம் சமமந்தி, மாப்பிள்ளைக்கு நல்ல வரனா பாருங்க. எங்களுக்கு குடுத்து வைக்கல…” என ஏக்கத்தோடு மிதுலைப் பார்த்தவர், .
“நாங்க எங்க பொண்ண சென்னைக்கு கூட்டிட்டு போக போறோம் சம்மந்தி. அவளோட சாவை தடுக்க முடியாது, நாட்களை தள்ளிப் போடலாம். ஏதோ ஒரு ஆசையில எங்கப் பொண்ணு எங்களுக்கு திரும்ப கிடைக்க மாட்டாளான்ற ஒரு நம்பிக்கையில போறோம் தம்பி.” என மீண்டும் அழுதார்.
“எங்களுக்கு என்ன சொல்றதுனு தெரியல சம்மந்தி. என் பையன் கல்யாணம் நிக்குதேன்றதே எங்களுக்கு பெரிய வலியா தெரியும் போது, உங்க பொண்ணு சாகப்போறான்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் எவ்வளவு வலி இருக்கும் உங்களுக்கு? உங்க வலி பெருசு சம்மந்தி…” அவர் கைகளைப் பற்றி சொல்ல,
“என் பொண்ணு கல்யாணத்துக்கு செலவு பண்ணணும்னு ஆசை ஆசையா சேமிச்ச பணமும் நகையும், அவ உயிர கொஞ்ச நாள் காப்பாத்தி வைக்க தான்னு நினைக்கும் போதே, நெஞ்சில பாறாங்கல்லை போட்டது போல இருக்கு சம்மந்தி.
எவ்வளவு ஆசையும் கனவுகளுமா திரிஞ்சா என் பொண்ணு… கல்யாண நாளை எண்ணிட்டு இருப்பா நினைச்சேன், சாவுக்கு நாளை எண்ண வச்சிட்டார் அந்த கடவுள்… கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சதுனால கல்யாணத்தை நிறுத்த சொல்லி வந்துட்டோம் சம்மந்தி… எங்களை மன்னிச்சிடுங்க… எல்லா வேலையும் பார்த்திட்டு கல்யாணம் நின்னுபோறது கஷ்டம்தான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சு ரெண்டு பேரோட வாழ்க்கை வீணாக போறதுக்கு, இது சரினு தோனுச்சு சம்மந்தி. முடிஞ்சா என் பொண்ண வந்து பாருங்க, நாங்க வர்றோம் சம்மந்தி.” என இருவரும் எழுந்து சென்றுவிட்டனர்.
இடி விழுந்த வீடு போல ஆளுக்கொரு திசையில் அமர்ந்து விட்டனர். கல்யாணம் நின்று விட்டது என வருந்தவா? இல்லை, அங்கே ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை நினைத்து வருந்துவதா என்று தவித்தனர்.


“இதுதான்மா மாப்பிள்ளை…” என்று மிதுலின் போட்டோவை காட்ட, “இவரா?” என அதிர்ந்து விட்டாள் சைந்தவி

4 thoughts on “கானல் – 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *