Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-9

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-9

இன்று ஸ்ரீதர் சுஜாவிடம் செல்லில் சொன்னான்.
“நிமிடத்துக்கு நிமிடம் உணர்வுகள் மாறும் தன்மையுடையவன் மனிதன் என்று கலைக்கு
எப்படித் தெரியும்.? அந்த நேரத்து உணர்வை அது தத்ரூபமாக காட்டியது. ஏமாந்து போனேன்.
சுஜா.”
“ஆச்சரியமா இருக்கு….அப்புறம் என்ன ஆயிற்று? எபபடி தர்ஷினி ரமேஷிடம் வந்தாள்? அந்த
ஓவியம் எப்படி என் வீட்டு மர பீரோவில்.? குழப்பமா இருக்கே ஸ்ரீதர்.”
“தர்ஷினி இறைவனிடம் வேண்டுதல் விடுத்து, இரெண்டு மனம் வரமாக பெற்று விட்டாள்
போலும். என்னை நினைத்து காதல் கொண்ட ஒரு மனம். அவள் போட்ட நிபந்தனைக்கு நான்
ஒப்புக் கொள்ளாததால்,. மறந்து வாழ இன்னொரு மனம். நான் அதை லேட்டாக தான் புரிந்து
கொண்டேன்.”
“இது ஒரு டிராஜிக்காண காமெடியா இருக்கு. சரி என்ன நிபந்தனை போட்டாள்.? உங்களுக்கு
பிடிக்காம போனது எதனால்.?’”
“சொல்றேன்……காமெடியான டிராஜிடி அது. கல்யாண தேதி குறிக்கப்படு விட்டது. அதன்
பிறகு……”
அன்று நடந்ததெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது ஸ்ரீதருக்கு.
“என்ன சொல்றே தர்ஷினி.?”
“ஸ்ரீ……துபாய் போக அப்பா எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டார். கல்யாணத்துக் அப்புறம் நாம்
துபாய் வாசி ஆகப் போறோம்.”
“இப்படி ஒரு ஏற்பாடு உள்ளதாக என்னிடம் நீ சொல்லவே இல்லையே.?”
“கரும்பு தின்ன கூலியா.? எங்கப்பா அங்க ஒரு ஹோட்டல் திறக்கப் போறார் ஸ்ரீ. அதுக்கு
முழு பொறுப்பு நீங்க தான். ‘ஸ்ரீதர்ஷினி பவன்’ என்று பேர் கூட வச்சாச்சு. பிரபல
ஹோட்டல்கள் இடையே நம் ஹோட்டல் தான் சிறப்பா அமையணும்னு எல்லா ஏற்பாடும்
அப்பா செஞ்சிருக்கார். அங்கே உள்ள இந்தியர்களுக்கு நம் பக்கத்து உணவு மேல் மோகம்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்க தலைமை ஆச்சே.! பயப்பட ஒன்னுமில்லே ஸ்ரீ. நான்
வேறு கூட இருந்து கைட் பண்ணுவேன்.” சொல்லிவிட்டு தர்ஷினி தன் மயக்கும் சிரிப்பை
உதிர்த்து கிறக்கமாக பார்த்தாள். அவள் கண்ணில் தூண்டில் தெரிந்தது.
ஸ்ரீதர் திடுமென தனக்கு விரித்திருக்கும் வலையை புரிந்து கொண்டான்.
அவள் கண்களில் தெரிந்த அதிகார மமதை கண்டு திடுக்கிட்டான். அழகர் கோவிலில் பார்த்த
கண்கள் இல்லை இவை.

Thank you for reading this post, don't forget to subscribe!

“ஸாரி தர்ஷினி. எனக்கு ஹோட்டல் பிசினஸ்சிலெல்லாம் அனுபவம் இல்லை. ஹோட்டலை
மூட வேண்டி வரும். என்னை நம்பி இதையெல்லாம் செய்ய வேண்டாம். இங்கு என்னுடய
பணியே திருப்தியா போயிட்டு இருக்கு. நான் அங்கெல்லாம் வர முடியாது. மேக் இட் கிளியர்
டு யுவர் டாட்……”
“டோன்ட் பீ சில்லி ஸ்ரீ. சும்மா பெருக்கு நீங்க பார்த்தா போதும். மற்றதெல்லாம் பிரபாத்
பாரத்துக்குவார். துபாய்யில் ஹோட்டல் என்றாள் சும்மாவா.? கோடியில் புரளலாம். யூ ஆர்
கம்மிங்க.” என்றாள்.
“கோடி முக்கியம்னா அந்த பிரபாத்தையே கல்யாணம் பண்ணிக்கோ.”
“அவருக்கு வயசு அம்பது.”
“அதனால் என்ன. கோடிகள் தானே முக்கியம்.?”
“விளையாடாதேங்க ஸ்ரீ. இன்விடே ஷன் எல்லாம் அடிச்சாச்சு.”
“ஸோ வாட்.? டிராப் திஸ் ஐடியா தர்ஷினி. இது பற்றி நம் கல்யாண தேதி முடிவு பண்ணும்
முன் என் கிட்டே சொல்லியிருக்கணும். இப்ப டூ லேட்.”
“அப்படியா.? ஸாரி ஸ்ரீ.. ஐ டிராப் திஸ் மேரேஜ்.”
ஸ்ரீதர் திடுக்கிட்டுப் பார்த்தான். சொந்தங்களுக்கு எல்லாம் சோனான் பிறகு?
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தர்ஷினி? ஆறு மாசம் ஒண்ணா சுத்தியிருக்கோம். ஒரு
வார்த்தை இது பற்றி என் கிட்டே சொல்லலை. கருத்து வேறுபாடுகளை பேசி தீர்ப்போம்.
அதுக்காக கல்யாணமே வேண்டாமுன்னு சொல்றது நல்லாயில்லை. நீ என்னை
காதலிச்சேன்னு சொன்னது எவ்வளவு பெரிய பொய்.? என்னை கார்னர் பண்ணறே.”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே தர்ஷினி விருட்டென்று போய் விட்டாள். முகத்தில்
அறைந்தது போல் இருந்தது.
கல்யாணத்திற்கு ஒரு வாரம் தான் இருந்தது. ஸ்ரீதர் தர்ஷினியின் அப்பாவிடம் ஃபோன் செய்து
சொன்னான்.
“துபாய் போக விருப்பமில்லைன்னு தர்ஷனிக்கிட்டே சொன்னேன், அதுக்காக கல்யாணத்தை
நிறுத்தணும்னு சொன்னா, அதுக்கப்புறம் அவ பேசலை…..வாட்ஸ் கோயுங் ஆன்?
தெருஞ்சுகிகிட்டா நல்லாயிருக்கும்.”
“மாப்பிள்ளை ஸாரி. அவ அப்படித்தான். கல்யாணம் கண்டிப்பா நடக்கும். துபாய் வருவதும்
வராததும் உங்க விருப்பம். ஓட்டல் திறப்பு விழாவிற்கு வாங்க. மற்றபடி யு கோ ஆன் வித் யுவர்
ஒர்க்.”
“தேங்க்ஸ்….ஸாரி என்னாலே வரமுடியாததுக்கு.”
“இட்ஸ் ஓ. கே தர்ஷினி சார்பிலே மன்னிப்பு கேட்டுக்கிறேன்.”
இந்தமட்டில் பிரச்சனை சுமுகமாக முடிந்ததே என்று ஸ்ரீதர் திருப்திபட்டான். ஆடிப்
போயிருந்த அவன் பெற்றோர் இது கேட்டு நிம்மதி அடைந்தனர். வீடு “ஜே..ஜே? என்று
கல்யாண களை கட்டியிருந்தது.

திங்கட்கிழமை கல்யாணம். முந்திய நாள் நல்ல நேரம் பார்த்து மாலை மாப்பிள்ளை அழைப்பு
நடப்பதாக இருந்தது. பெண் வீட்டார் சார்பாக பெண்ணின் ஒன்றுவிட்ட தம்பி மற்றும் பலர்
வந்து மண்டபத்துக்கு மாப்பிள்ளையை மாலை மரியாதையோடு அலங்கரிக்கப்பட்ட காரில்
அழைத்து சென்றனர். இவர்கள் போய் இறங்கினால்….மண்டபம் காலியாக காட்சி அளித்தது.
“மன்னிக்கனும்….தர்ஷினி அப்பாவிற்கு சிவியர் ஹார்ட் அட்டாக். ஆஸ்பத்திரியில்
சேர்த்திருக்கு.”
“எந்த ஆஸ்பிடல்?” என்று ஸ்ரீதர் அப்பா கேட்டார்.
“அது வந்து….கல்யாணத்தைத் தள்ளிப் போடச் சொல்லி மச்சான் போன் பண்ணார்..” என்றார்
தர்ஷினியின் தாய் மாமன். அவர் குடும்பம் மட்டுமே இருந்தது. மேள வாத்தியம், வாழைமரம்
அலங்காரம் எதுவுமில்லை. அவர்கள் கல்யாணம் நடத்த வேண்டும் என்று எண்ணியதாகவே
தெரியவில்லை. ஸ்ரீதரின் உறவினர்கள் இரெண்டு வேன் நிறைய வந்து இறங்கினார்கள்.
“தள்ளிப் போடறதை பத்தி ஒண்ணுமில்லே. எந்த ஆஸ்பிடல்.?”
“துபாய் ஆஸ்பிடல். அங்கே தான் தர்ஷினியும் அவ அப்பாவும் முக்கிய விஷயமா நேத்து இரவு
கிளம்பிப் போனாங்க…..”
ஸ்ரீதர் உள்பட மொத்த உறவினர்களும் அவமானப்பட்டு நின்றனர்.
“கல்யாணத்தை நிறுத்த இப்படியொரு கேவலமான வழிதானா கிடச்சுது.?” ஸ்ரீதர் கொதித்து
போய் கேட்டான். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்? அடுத்தவர் மன நிலை பற்றியோ.
கொடுத்த வாக்கு பற்றியோ, கவலைப்படாத சுயநல மனிதர்கள். மனசாட்சி இல்லாம நடந்து
கொள்ள தயங்காதவர்கள். தர்ஷினியின் இனிய சொல்லில் மயங்கியது தவறு தான்.

இன்று ஸ்ரீதர் சுஜாவிடம் செல்லில் சொன்னான்.
“தப்பு பண்ணிட்டோம் டா. என்னை மன்னிச்சிடு டான்னு அப்பா உடைந்து போய் அழுதார்
சுஜா. அம்மா துடிச்சுப் போயிட்டாங்க. அது ஒரு கரிய நாள் என் வாழ்க்கையில் என்று தான்
சொல்ல வேண்டும்.”
சுஜாவால் இந்த அதிரிச்சி திருப்பத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. பணமிருந்தால் எப்படி
வேண்டுமானாலும் நடக்கலாம்னு சிலர் கணக்கு போட்டு திமிராக நடந்து கொள்கிறார்களே
எப்படி முடிகிறது அவர்களால்.?
“கண்டிப்பாக இதுக்கு தண்டனை உண்டு ஸ்ரீதர். தெய்வம் நின்று கொல்லும்.”
“இல்லே சுஜா….அவர்கள் மேலும் மேலும் அநியாயம் பண்ண வழி வகுத்திருக்கு. அது தான்
உண்மை.”
“என்ன ஸ்ரீதர் சொல்றீங்க.?”
“என்னை அவமானப்பாடுத்தினதை கூட மன்னிக்கலாம் சுஜா. உங்க வாழ்க்கையையும்
அல்லாவா கெடுத்திருக்காங்க……எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடச்சிருக்கு உனக்கு, உன்
முட்டாள்தனத்தால் நழுவ விட்டிட்டியே, தர்ஷினி மட்டும் என்னைக் கேட்டிருந்தால் பேசாமல்
அவளை ரெண்டாம் தாரமாக ஏத்துப்பேன்….என்றான் என்னிடம் உன் அருமை புருஷன்.”

சுஜா இதை உள் வாங்கியதும் ரமேஷின் முகத்திரை கிழிந்தது போல் உணர்ந்தாள். தட
தடவென்று துடித்த இதயத்தை சமன் செய்ய படாதபாடு பட்டாள். போலி உணர்வுகளின்
துரோகம் மனசை அறுத்தது.
“ஸ்ரீதர்….கடவுள் இருக்கார் என்பது உண்மை தான். அவள் சுயரூபம் முன்மையே தெரிந்ததால்
நீங்க தப்பினீங்க. ஐ ஆம் ஹாப்பி ஃபார் யூ.”
“இல்லே சுஜா. துபாய் வர சம்மதமுன்னு சொல்லி கல்யாணம் பண்ணியிருந்தா, அவ உங்க
வாழ்க்கையை நாசமக்கி இருக்க மாட்டா இல்லயா.?”
“ஓ ஸ்ரீதர்……டோன்ட் பீ சில்லி. தர்ஷினி இல்லாட்டி இன்னொரு வர்ஷினி வந்திருப்பாள்.
ஈஸி…. பணத்தை எதிர்பார்க்கும் குணமுடையவர் ரெண்டாவது என்ன மூன்றாவது கல்யாணம்
கூட பண்ணுவார்.”
“இருந்தாலும் உங்க நிலைமைக்கு மறைமுகமாக நானும் ஒரு காரணம்.”
“ஸ்ரீதர்….நிஜமா சொல்றேன், எல்லாம் தெரிந்த பிறகு நானும் இந்தப் போலி மனிதரிடமிருந்து
தப்பித்துக் கொண்டேன் என்று தான் தோணுது.”
ஸ்ரீதர் இது கேட்டு மன அமைது அடைந்தான்.
“ஸ்ரீதர்…. வசதியும் வாய்ப்பும் கருதி வருவதில்லை காதல். காதலை அவமானப்படுத்தி
இரேந்தயவதாக மணந்த ரமேஷ், தர்ஷினியை காதலிக்கிறார் என்று என்னால் நம்பவே
முடியவில்லை. அவளால் கிடைக்கப் போகும் மிக வசதியான வாழ்க்கையை காதலிக்கிறார்.”
“உண்மை தான் சுஜா. அதற்காகவே ஒரு மனிதாபிமானமற்ற சியலை செய்தான் என்று
சொல்லப்படுகிறது. மாதம் மாறி ஆவாலி ரிஜிஸ்தர் திருமணம் பண்ணி, துபாய்
சென்றுவிட்டான். உங்களிடம் தேனொழுக பேசியிருப்பான். அப்பாவியான நீங்க இது ஏதும்
அறியாமல் இருந்தது தான் கொடுமை. ரமேஷ் என்னிடம் வந்து தர்ஷினி என் மனைவியாகப்
போகிறாள்……அந்த ஓவியத்தை என்னிடம் கொடுத்து விடு என்றான். தூக்கி எறிந்தேன்.
பொறுக்கிக் கொண்டு போனான். போகும் பொழுது கேட்டேன். சுஜாவுக்கு நீங்க என்ன பதில்
சொல்லப் போறீங்கன்னு?……தட் இஸ் னந ஆப் யுவர் பிஸினஸ் என்றுவிட்டான்.”
துபாயிலிருந்து அவளிடமும் குழந்தையிடமும் பிரியமாக அவன் பேசியதெல்லாம், தன் குற்றம்
மறைக்கத்தான் என்று புரிந்து போயிற்று.
“சுஜா….உங்களுக்கு போய் அவன் துரோகம் செய்ததை என்னால் தாங்க முடியவில்லை.
அதனால் தான் ‘நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி’ என்ற வரி என் மனசில்
திரும்பத் திரும்ப இடைவிடாமல் ஓடியது. நீங்க துடிச்சு போனது பார்த்து, என் மனசில் உதிரம்
கொட்டியது நிஜம்.”
“ஸ்ரீதர்….போலிச் சாமியார், போலி டாக்டர் எல்லாம் கேள்விப் பாட்டிருக்கோம், அந்த
லிஸ்டிலே இப்ப சேர்க்கக் வேண்டியது போலி புருஷன் என்கிற கேடக்கிரி தான். ஹெட்டிங் த
லிஸ்ட். இஸ் ரமேஷ். என் மனசு இப்ப நிர்மலமா இருக்கு. இது ஒரு அர்த்தமுள்ள விவாகரத்து.
தாங்க்ஸ் ஸ்ரீதர். “
“எதுக்கு?”
உண்மை நிலையை விளக்கியதுக்கு.”

“நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்.”
“எதுக்கு.?’
“என்னை நம்பினதுக்கு. வில்லன் சொல்றதுதானேன்னு புறக்கணிச்சிருந்தா?
சுஜா அவளையும் அறியாமல் வாய் விடட்டு சிரித்தாள். அன்றிரவு இருவரும் சஞ்சலமற்று
தூங்கினார்கள்.
அதற்கு பிறகு வந்த நாட்கள் மிக மிக இனிமையானவை. சுஜா நட்பு என்ற பொக்கிஷத்தை
பெற்றாள். ஸ்ரீதர் பேச்சில் எபபவும் உண்மையும் கண்ணியமும் இருந்தது. தனக்கு ரமேஷ்
வேலை வாங்கிக் கொடுத்ததே தன்னை அவள் பணத்துக்கு எதிர்பார்க்கக் கூடாது என்பதால்
தான் என்று கூடுதலாக ஒரு தகவல் சொன்னான் ஸ்ரீதர்.
“சுதா..எனக்கு ஏதோ லாட்டரியிலே பரிசு விழுந்த மாதிரி இருக்கு ஸ்ரீதரோட நட்பு….” என்று
தங்கையிடம் அரை மணி பேசினாள் சுஜா.
“அக்கா….நட்பு காதலாகணும் எனபது தான் எங்க எல்லோர் ஆசையும்.” என்று சொல்லிவிட்டு
டக்கென்று போனை வைத்துவிட்டாள் சுதா. எங்கே அக்கா லட்ச்சார்சணையை ஆரம்பித்து
விடுவாளோ என்று பயம்.

மாதக் கார்த்திகை. சுஜா திருப்பரங்குன்றம் கிளம்பினாள். காலை ஐந்து மணிக்கே எழுந்து
தலைக்கு குளித்து சந்தன நிற காட்டன் பட்டும் சிவப்பு சட்டையுமாக அவள் தேவதை போல்
கிளம்பிப் போனாள். தரிசனம் பண்ணிவிட்டு அவள் திரும்பும் போது ஒரு பழக் கடையில்
ஸ்ரீதர் பூவும் பழமும் வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். விரைவாக அவனருக்கே நடந்து
வந்து “ஹலோ..” என்றாள்.
“அட நீங்களா? சிறப்பு தரிசனம் கிடச்சாச்சு.” என்றான்.
கடைக்காரன் இவர்களை கணவன் மனைவி என்று எண்ணி
“சார்… பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுங்க.” என்றான். ஸ்ரீதர் பூ வாங்கினான். கடையை
விட்டு நகர்ந்தபடி..
“சுஜா…. தலையிலே பூ வைக்க மறந்திட்டீங்க. இந்தாங்க வச்சுக்கங்க.” என்றான். பூவை
வேண்டாம் என்று சொல்வானேன்.? வாங்கி வைத்துக் கொண்டாள் சுஜா. மலர்ந்த பூ அழகா?
அவள் முகம் அழகா? என்று சுவாரஸ்யமாக தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்
கொண்டிருந்தான் அவன். இந்த எதிர்பாராத சந்திப்பில் இருவருக்கும் ஒரு நிறைவு ஏற்பட்டது.
“வாங்க….. கோவிலுக்குள் போலாம். “ என்றாள் சுஜா.
“நீங்க தான் தரிசனம் பண்ணியாச்சே.?”
“பரவாயில்லை….உங்களுக்காக உங்களுடன்.”
அவர்கள் அதிகமாக பேசவில்லை. முருகனை சேவித்துவிட்டு வெளியே வந்தார்கள். அவள்
நின்றிருந்த ஆட்டோவை நோக்கிச் சென்றாள்.
“சுஜா…. என் பைக்கில் வரலாமே, உங்க காருக்கு என்னாச்சு.?’

“சர்வீஸ்சுக்கு விட்டிருக்கேன். பரவாயில்லை ஆட்டோவில் போயிடறேன்.”
“பிளீஸ் சுஜா. என் கூட வாங்க டிராப் பண்ணிட்டு போறேன். இந்த சின்ன சந்தோஷத்தை கூட
எனக்குக் கொடுக்க கூடாதா.?” என்றான் அவன் கண்களில் ஏக்கம் தெரிந்தது. ஒரு சின்ன
வலியும் தென்பட்டது. நேசிக்கும் பெண்ணை வெறும் நட்புடன் பழகு என்று தடுத்து
விட்டிருப்பது, அவனுக்கு எவ்வளவு பெரிய வழியாக இருக்கும் என்று சுஜா முதல் முதலாக
யோசித்தாள். அவனை தண்டிக்கிறோமோ? தன் சுயநலம் பெரிது என்று இவனை சித்திரவதை
செய்கிறோமோ? சுஜா கண்கள் கலங்கின.
“அய்யோ…. சும்மா தான் கூப்பிட்டேன். இதுக்காக எதுக்கு அழணும்? உன் கண்ணிலே
இனிமே கண்ணீரே வரக் கூடாது. ஆட்டோ கூப்பிடவா.?? அவன் கை தட்டி கூப்பிட்டான்.
அவள் ஏறிக் கொண்டாள்.
“பை சுஜா. “
“பை..”
ஆட்டோ கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தான்.

சனிக்கிழமை காலை ஆப்பம் பரிமாறிக் கொண்டே ஆயா சொன்னாள்.
“சுஜாம்மா. நாளைக்கு ஒரு கிரகபிரவேசம் விழா இருக்கு. போகணும். மறந்திடாதீங்க.”
நினைவு படுத்தினாள்.
ஓ….அவள் மறந்து தான் போனாள். அலுவலகத்தில் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த சங்கர்
போன வாரமே பத்திரிகை வைத்து, அவசியம் வரணும்
என்று அழைத்திருந்தான். சுஜா கடைக்குப் போய் ஒரு அழகான வெள்ளிப் பிள்ளையார்
வாங்கி பேக் பண்ணிக் கொண்டு வந்திருந்தாள். ஆயாவுக்கு நன்றி சொல்லிவிட்டு, எந்த
புடவை அணிந்து கொள்ளலாம் என்று பீரோவை திறந்து பார்த்தாள். காப்பர் சல்வேட் கலரில்,
வெள்ளி சரிகை இழையோடிய ஆர்கண்டி அணிந்து முத்து செட் அணிந்து கொள்ளலாம் என்று
முடிவு பண்ணினாள்.
அவள் கிளம்பியது ஆயா கன்னம் வழித்து திருஷ்டி கழித்தாள். “டாக்கர் மா.” என்றாள் ஆர்த்தி.
“நீ என்ன போட்டுக்கப் போறே ஆர்த்தி.?” ஆர்த்தி ஓடிப் போய், ஜரிகை வேலைப்பாடமைந்த
ரெட் கலர் சூடி எடுத்து வந்தாள்.
“இது ஏது.? நான் வாங்கித் தரலையே.?” என்றாள் சுஜா.
“ஸ்ரீதர் அங்கிள் வாங்கித் தந்தார் மா.” என்றாள் குழந்தை பயத்துடன்.
சுஜா மென்மையாக புன்னகைத்து “போட்டுக்கோ.” என்றாள். குழந்தை துள்ளளுடன் உடை
மாற்றச் சென்றாள். அந்த உடை ஆர்த்திக்கு ரொம்ப அழகாக இருந்தது.
“இந்த இந்த சின்ன முத்து மாலையை போட்டுக்க. நாம மேட்ச்சா போட்டா மாதிரி இருக்கும்.”
ரெண்டு சீட்டுக் குருவிகள் போல் குதூகாலமாக கிளம்பினார்கள்.
அதிகாலையிலேயே ஹோமம் வளர்த்து பூஜையை முடித்து விட்டிருந்தார்கள். எல்லோருக்கும்
வெல்ல பால் அளித்தார்கள். வீடு கச்சிதமாக இருந்தது. எவ்வளவு செலவாயிற்று? யார்

இஞ்சீனியர்.? பெயிண்டிங் மட்டும் என்ன செலவாயிற்று?….இப்படி பல கேள்விகளுக்கு சங்கர்
பதிலளித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் வாழ்த்தி பரிசு கொடுக்கும் நேரம் வந்தது. சுஜாவும் பரிசு பார்சலை எடுத்துக்
வைத்துக் கொண்டாள். அப்பொழுது ஒரு அம்மாள் விரைந்து வந்து அவளை ஒரு ஓரமாக
தள்ளிக் கொண்டு வந்தாள். அந்தம்மாள் முகம் சுருங்கினாள். என்னாச்சு?
“ஏம்மா…. உன் நிலை அறிஞ்சு நடந்துக்க மாட்டியா.? நான் ரேணுவோட அம்மா. ஏன்
பொண்ணுக்குக் கல்யாணமாகி மூணு வருஷம் தான் ஆவுது. ஏதோ கடவுள் புண்ணியத்தில்
வீடு வாங்கிட்டா. இனிமெ தான் குழந்தை குட்டின்னு பெத்து அவ வம்சம் தழைத்து நல்லா
வாழணும். நீ வந்து வாழ்த்தினா உருப்படுமா.? போய் பின்னாலே என்னிக்காவது
வா..”என்றாள்
நிர்தாட்சண்யமாக முகத்திலடித்தாற் போல் அறையப்பட்ட இந்த அவமானத்தை
திக்பிரமையுடன் செவி மாடுத்தாள் சுஜா. கதறி த் துடித்த மனதை ரண வேதனையுடன்
அடக்கி, துடிக்கும் உதடுகளுடன் விருட்டேன்று மகளுடன் வெளியேறினாள்.
சங்கர் பின்னாடியே ஓடி வந்து “ஸாரி மேடம். பிளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. அவங்க
பழங்காலம்……ஏதோ தெரியாம….” என்று வருந்தி வருந்தி மன்னிப்பு கேட்டான்.
சுஜாவின் கார் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் காம்பவுண்ட் தாண்டி எகிறிற்று. ஆர்த்தி
அம்மாவின் மடியில் தாலி புதைத்து விசும்பினாள்.
வீட்டுக்கு வந்து அப்படியே குப்புறப் படுத்து அழ ஆரம்பித்தாள் சுஜா. அவ்வளவு சாஸ்திரம்
பார்ப்பவர்கள் எதற்கு அவளை அழைத்து அவமானப்படுத்த வேண்டும்.? வீழ்ந்து
விட்டவர்களை தூக்கி விடுவதை விடுத்து மமதையுடன் கல் போன்ற சொற்களால் மனசை
அடிப்பது என்ன நாகரீகமோ.? சுஜா மெல்ல தன்னை சேகரம் பண்ணிக் கொண்டு அழுது
கொண்டிருடன்கா ஆரத்தியை அணைத்து “இட்ஸ் ஓ. கே.” என்றாள்.
சிறிது நேரத்தில் ஸ்ரீதர் போன் செய்தான்.
“சுஜா….நான் இப்ப பிஸி. அவசரமா ஒரு விஷயம் சொல்லணும். வீட்டை சீக்கிரம் காலி
பண்ணிடு சுஜா. இல்லே தர்ஷினி விரட்டி விடுவாள். ஏன்னா அது அவ பேரில் இருக்கு..”
என்றான்.
இந்த இடி கிரகபிரவேச வீட்டில் நடந்ததை விட பன்மடங்கு வலித்தது.

1 thought on “கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *