முத்துராமன் தன் மகளுக்கு சீர் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தார். பணமும் கொடுக்க அதை மரகதமும் ஜீவானந்தம் வேண்டாம் என்று மறுத்தனர். பின்னர் உமாவிடம் கொடுத்து விடும் படி சொல்லிவிட்டான் ஜீவானந்த்.
இந்த பணத்திற்காக தன் தந்தையை சித்தி திட்டுவார்களோ என்று பயந்து வாங்க மறுத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் வற்புறுத்தலையும் அவள் மறுப்பதையும் ஃபோனை பார்த்த வாறே வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவானந்த்.
சற்று நேரத்திற்கெல்லாம் மதிய உணவு தயாராகி விட்டது என்று அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் மரகதம்.
உமா பாரதி உறங்கிக் கொண்டிருந்த அஞ்சலியையும் மெதுவாக எழுப்பி சாப்பிட அழைத்து வந்தாள். அவளின் செய்கையை மெச்சியபடி பார்த்தார் மரகதம். உமா பாரதியை ஜீவா ஆனந்த் பக்கம் அமரும்படி சொன்னார் மரகதம்.
உமா பாரதியும் அஞ்சலியை அவனது அருகில் அமர வைத்துவிட்டு அஞ்சலியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அவளின் அருகில் அமர்ந்த சரசு என்னடி இது என்று பார்வையால் கேட்டாள்.
உமா பாரதியும் புன்னகைத்துக் கொண்டே “இந்த பக்கம் அவள் அமர்ந்தால் தான் அக்கா அவளுக்கு ஊட்டி விட எனக்கு வசதியாக இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே, பரிமாறிய உணவுகளை அஞ்சலிக்கு ஊட்டி விட்டுக்கொண்டே தானும் உண்டாள்.
அவளின் ஒவ்வொரு செய்கையிலும் மரகதம் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஜீவானந்த் பார்வை உமா பாரதியை சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருந்தது.
உணவு வேலை முடிந்ததும் முத்துராமன் தாம் கிளம்புவதாக கூற, மரகதம் இருந்து இரவு உணவை முடித்துவிட்டு உமாவை இரவு சடங்கு அனுப்பிய பிறகு செல்லலாமே என்று கேட்டார். ஏனென்றால் முத்துராமன் இருந்தால் ஜீவானந்த் இரவு சடங்கிற்கு அனுமதிப்பான் என்ற எண்ணத்தில்.
முத்துராமன், “இல்லை… நான் கல்யாணம் முடிந்ததும் நேராக இங்கு வந்து விட்டேன். வீட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு ஜீவானந்தை பார்த்து, “என் மகள் இதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டுதான் வாழ்ந்திருந்தாள். என்னால் கூட அவளை அங்கிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இனி உங்களுடன் அவள் மகிழ்வாக இருப்பாள் என்று நம்புகிறேன் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கண்ணீர் மல்க ஜீவானந்தின் கையை பிடித்துக் கொண்டு கேட்டார்.
ஜீவானந்திற்கு இது வேண்டாத திருமணமாக இருந்தாலும் ஒரு தந்தையின் உணர்வை புரிந்து கொண்டு, “நீங்கள் கவலைப்படாதீர்கள். அத்தை தன் மகள் போல் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்” என்று கூறினான்.
மகளுக்கும் அறிவுரைகள் கூறி மகிழ்வாக வாழும் படி ஆசீர்வதித்துவிட்டு வீட்டில் கலந்து பேசிய பிறகு மறு வீடு அழைத்துச் செல்வது பற்றி ஃபோன் செய்கிறேன். நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும்” என்று வேண்டி கேட்டுக் கொண்டார்.
சரசுவும் உமாவிடம் எல்லாவற்றையும் நன்றாக கவனித்துக் கொள் என்று சொல்லிவிட்டு ஜீவானந்திடம் வந்து அவளை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கூறினாள்.
பின்னர் மரகதரத்திடம் வந்து “அவள் எதையும் வாய் திறந்து கேட்க மாட்டாள். நீங்கள் கொஞ்சம் அவளை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்
மரகதமும் “நீங்கள் இருவரும் கவலைப்பட அவசியமே இல்லை இங்கு உமா மிகவும் சந்தோஷமாக வாழ்வாள் கவலைப்படாமல் சென்று வாருங்கள்” என்று ஆறுதல் கூறி வழி அனுப்பி வைத்தார்.
அஞ்சலியை தூக்கிய முத்துராமன் சமத்து பிள்ளை என்று அவளின் கன்னம் பிடித்துக் கொஞ்சி, “அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் சரியா?” என்று சொல்லிவிட்டு, “தாத்தா வீட்டுக்கு போனதும் ஃபோன் செய்கிறேன். நீங்கள் இந்த தாத்தாவின் வீட்டிற்கு வரவேண்டும் சரியா?” என்று கேட்டார். எதுவும் புரியாவிட்டாலும் சரி என்று தலையை ஆட்டி வைத்தாள் அஞ்சலி.
தந்தை கிளம்பும்பொழுது தன்னையும் அறியாமல் வடிந்த கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தாள் உமா பாரதி.
உமாவின் தந்தை கிளம்பியதும் ஜீவானந்த் நானும் வயல் வரை சென்று வருகிறேன் அத்தை என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
“இன்று தான் திருமணம் நடந்தது இருக்கிறது. இன்று ஒரு நாளாவது வீட்டில் இருக்களாம் அல்லவா?” என்று கேட்டார்.
பதில் சொல்லாமல் தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான் ஜீவானந்த்.
“சரி… சாயங்காலம் சீக்கிரம் வந்து விடு” என்ற மரகதத்தின் கூற்று காற்றில் கரைந்தது.
அவன் சென்றதும் உமாவை சற்று உறங்குமாறு கூறினார் மரகதம். வழக்கமாக மதியம் உறங்கும் பழக்கம் இல்லை என்றாலும் இன்று ஏனோ உமாவிற்கு சிறிது படபடப்பாக இருந்ததால் சிறிது நேரம் படுக்கலாம் என்று தோன்றியது.
அஞ்சலி உறங்கிய அறை தான் ஜீவானந்தின் அறை என்று நினைத்து முன்னால் இருந்த சிறிய அறையில் சென்று படுக்கலாம் என்று சென்றாள். தந்தை கொண்டுவந்த தன் உடைமையில் இருந்து மாற்று புடவை எடுத்து உடுத்திக் கொண்டு, அங்கிருந்த பாயை விரித்து படுத்துக் கொண்டாள்.
இன்று காலையில் இருந்து நடந்தவற்றை நினைத்துக் கொண்டே படுத்திருந்த உமா தன்னையும் அறியாமல் அப்படியே உறங்கி விட்டாள்.
அஞ்சலி ஏற்கனவே நன்கு உறங்கி விட்டதால், கன்றுக்குட்டியுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.
மரகதமும் சற்று நேரம் ஓய்வு எடுக்க படுத்துவிட்டார். அப்படியே நேரம் கடக்க, சட்டென்று விழிப்பு தட்டி எழுந்தாள் உமா. மணியை பார்க்க ஐந்தரை ஆகி இருந்தது. வேகமாக எழுந்து முகம் கை கால் கழுவி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அஞ்சலியையும் குளிப்பாட்டி, வேறு உடை அணிவித்து அலங்காரம் செய்து விட்டாள்.
பின்னர் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றினாள். சற்று அசந்து தூங்கி விட்டேன் என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்தார் மரகதம். அவர் வரவும் அவருக்கும் தனக்கும் காஃபி கலந்து கொண்டு, அஞ்சலிக்கு பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
ஜீவானந்தின் மனைவியை பார்க்க என்று அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். வருபவர்களை அன்புடன் வரவேற்று, உபசரித்த உமாவை அனைவருக்கும் மிகவும் பிடித்தது.
உமாவை பாராட்டி பலர் பேச, சிலர் ஆரம்பத்தில் நல்லாதான் இருப்பா. அவளுக்கு என்று ஒரு குழந்தை வரும் போது தான் இவளின் சுயரூபம் தெரியும் என்று அவளின் காது படவே சொல்ல, அதை கேட்டதும் கலங்கி நின்ற உமாவை மரகதம் தவிப்புடன் பார்க்க, சரியாக அந்நேரம் வீட்டிற்கு வந்த ஜீவானந்த் காதுகளிலும் அவ்வார்த்தைகள் தெளிவாக விழுந்தது.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Nice epi
Nice