Skip to content
Home » சித்தி – 12

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள். 

அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த ஜீவானந்தை கண்டதும் அவர்களது பேச்சு சட்டென்று நின்றது. 

வந்தவர்களை அழுத்தமாக பார்த்தான் ஜீவானந்த். இதுவரை தவறாக பேசியவர்கள் ஒவ்வொருவராக சரி நாங்கள் பிறகு வருகிறோம் என்று வெளியேற சிலர் உமாவிடம் ஆறுதலாக பார்வை செலுத்தி விட்டு வெளியேறினார்கள். 

வீட்டைச் சுற்றி தன் மகளை தேடினான் ஜீவானந்த். இவர்கள் பேச்சு எதிலும் தலையிடாமல் சுட்டி டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அஞ்சலி. 

பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் அத்தையையும் அவள் அருகில் நின்று உமாவையும் பார்த்தான் ஜீவானந்த். 

உமாவின் கண்களில் கண்ணீர் துளிகள் இப்பொழுது வரலாமா பிறகு வரலாமா என்று தயாராக கண்களில் கோர்த்து நின்றது கலங்கிய கண்ணுடன் நிற்கும் உமாவை பார்த்து இருபுறமும் தலையே அசைத்து விட்டு தன் மகளின் அருகில் சென்று அமர்ந்தான். 

அவன் சென்று அமர்ந்ததும் மரகதம் உமாவிடம் வந்து “அவர்கள் பேசியது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே மா. இப்படித்தான் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வார்கள். அதை எல்லாம் நாம் கேட்டால் நமக்குத்தான் மனது கவலையடையும். ஆகையால் எதையும் நீ கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடு. உன்னை பற்றி எனக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. நீ நிச்சயம் அவர்கள் சொல்லுவது போல் சித்தி ஆக இருக்க மாட்டாய். அஞ்சலிக்கு ஒரு நல்ல தாயாக தான் இருப்பாய் என்று எனக்கு தெரிகிறது. அதேபோல் உன்னை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே. நீ நீயாகவே இரு!” என்று அவளை ஆறுதல் படுத்தினார்.

உமா பாரதியும் மரகதத்தின் பேச்சு சற்று தெளிந்தாள். அவள் வாழ்நாளில் இதுவரை ஒருவர் கூட அவளிடம் இவ்வளவு தன்மையாக பேசியது கிடையாது.

அவளின் தந்தை கூட தங்கையின் திருமணத்திற்கு பிறகு தான் அவளுடன் சற்று அதிகம் பேச ஆரம்பித்தார். அதில் முக்காவாசி அவரது இயலாமை பற்றியே இருக்கும் முதல் முறையாக ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து மரகதம் அவளுக்கு ஆறுதல் கூறியது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு “நிச்சயம் நான் ஒரு நல்ல தாயாக அஞ்சலிக்கு இருப்பேன் அம்மா” என்றாள். 

“சரி நேரமாகிவிட்டது” என்று கூறிவிட்டு ஜீவானந்தையும் அஞ்சலியையும்  உணவு உண்ண அழைத்தார் மரகதம். இருவரும் சாப்பிட வர, உமாவையும் அமர வைத்து நால்வரும் உணவு உண்டார்கள். 

பின்னர் அஞ்சலியும் ஜீவானந்தும் டிவி பார்க்க அமர்ந்து விட, மரகதம் பாத்திரங்களை எடுத்து வைக்க முயல, உமா “நான் பார்த்துக் கொள்கிறேன் அம்மா. நீங்கள் போய் சற்று உட்காருங்கள்” என்று அவளை அனுப்பிவிட்டு சமையல் அறையை ஒதுங்க வைத்து வேலையெல்லாம் அரை மணி நேரத்தில் முடித்து விட்டாள். 

நேரம் ஆவதை உணர்ந்து அஞ்சலியை  உறங்க  அழைத்தார் மரகதம். அவளோ நான் என் அப்பாவுடன் தான் படுப்பேன் என்று அவனது மடியில் அமர்ந்து கொண்டாள். 

“எப்பொழுதும் என்னுடன் தானே படுப்ப. வா ரெண்டு பேரும் படுப்போம்” என்று மீண்டும் அவளை கையைப் பிடித்து அழைத்தார். 

அவளோ தன் தந்தையுடன் ஒன்றிக்கொண்டு, “நான் இன்று அப்பாவுடன் தான் தூங்குவேன்” என்று பிடிவாதமாக கூறினாள். 

மரகதம் சற்று கோபமாக, “இப்பொழுது வரப்போகிறாயா இல்லையா” என்று அவளது கையை பற்றி வேகமாக இழுத்தார். 

உடனே அஞ்சலியோ அழ ஆரம்பித்து விட்டாள். “அத்தை அவள் என்னுடனேயே படுக்கட்டும். நீங்க போயி தூங்குங்க” என்று தன் மகளின் கையை அத்தையின் கையில் இருந்து உருவிக்கொண்டு கூறினான் ஜீவானந்த். 

மரகதம் அவனை சங்கடமாக பார்த்து, “இல்லை ஆனந்த்…  அவள் என்னுடனே…” என்று பேசும் முன் அவர் பேச்சை தடுப்பது போல் கையை காண்பித்து நிறுத்தினான். 

“நீங்க போய் தூங்குங்க. அவள் என்னுடனேயே தூங்குவாள். நான் உறங்க வைத்துக் கொள்கிறேன் என்று சற்று அழுத்தமாக கூறினான். 

இதற்கு மேல் வற்புறுத்த தோன்றாமல் “சரி” என்று சொல்லிவிட்டு அவரது வீட்டிற்கு செல்ல பார்த்தார். 

“இப்போ நீங்க எங்க போறீங்க? என்றான் ஜீவானந்த். 

“நான் அங்கு போய் படுத்து கொள்கிறேன்” என்று மீண்டும் வெளியே செல்ல பார்த்தார் மரகதம். 

“ஏன் இந்த புதிய பழக்கம்? எப்பொழுதும் படுக்கும் இடத்திலேயே படுங்கள்” என்று கதவை மூடிவிட்டு தன் மகளை தூக்கிக்கொண்டு தான் படுக்கும் அறைக்கு சென்று விட்டான். 

மரகதமும் எதுவும் சொல்ல முடியாமல் எப்போதும் படுக்கும் பெரிய அறையில் சென்று கட்டிலில் படுத்து விட்டார். வேலைகளை முடித்து விட்ட வந்த உமா இருவரும் இரு அறைக்குச் சென்றதை பார்த்துவிட்டு தான் எங்கே படுப்பது என்று தெரியாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள்.

ஜீவானந்த் இப்போது சென்ற சின்ன அறையில் தான் மதியம் உமா படுத்து இருந்தாள். அங்கு தான் அவளது மாற்று உடைகள் இருந்தது. இப்பொழுது எப்படி சென்று அதை எடுப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் அப்படியே யோசித்துக்கொண்டு இருந்தாள். 

பின்னர் எப்படியும் இங்குதானே இனிமேல் நாம் வாழ வேண்டும். வீட்டில் இருக்கும் மூவருடனும் பேசித்தானே ஆக வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே, மெதுவாக கதவை தொட்டாள். 

தாள் போடாத கதவு தொட்டதும் திறந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஜீவானந்த் திரும்பிப் பார்க்க, அமைதியாக உள்ளே வந்த உமா, அங்குள்ள தன் உடமையையும் பாயையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டாள். 

ஹாலில் பாய் விரித்து அங்கேயே படுத்து விட்டாள். அசதியில் படுத்ததும் உறங்கியும் விட்டாள். 

காலை வழக்கம் போல் சீக்கிரம் எழுந்த மரகதம் ஹாலில் படுத்து உறங்கும் உமாவை கண்டு அதிருந்தார். இந்த பிள்ளை என்ன எங்க படுத்து இருக்கு. அவன் கூட அறையில் சென்று படுக்கவில்லையா? என்று நினைத்துக் கொண்டு தன் காலை வேலைகளை செய்ய ஆரம்பித்தார் மரகதம். 

பின்னர் பின் கதவை திறந்ததும் பால் கறப்பதற்கு கோனார் வருவதற்கும் சரியாக இருந்தது. பால் கறக்க பாத்திரம் எடுத்து வைத்துவிட்டு வாசல் பெருக செல்லலாம் என்று நினைக்கும் பொழுது உமா எழுந்து வந்து விட்டாள்.  

அதன் பிறகு மடமடவென்று காலை வேலைகளை உமா செய்ய தொடங்கி விட்டாள். அவள் வேலை செய்யும் வேகத்தை பார்த்து மரகதமே வியந்து விட்டார். அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டு வாசலும் மாட்டு கொட்டகையும் சுத்தமாக பெருக்கி தெளித்து கோலம் போட்டு அழகாக இருந்தது. 

தன் மகள் ஒரு நாள் கூட இவ்வளவு காலையில் எழுந்தது இல்லை. அதுவும் இல்லாமல் வீட்டு வேலை ஒன்று கூட செய்ததும் கிடையாது. ஜீவானந்தோ கடின உழைப்பாளி. அவனுக்கு கூடமாட ஒத்தாசை செய்யும் படி எப்பொழுதும் மரகதம் சொல்லிக் கொண்டே இருப்பார். 

அவளே ஒரு நாள் பொறுப்பாக எல்லாம் செய்வாள். சும்மா சும்மா அவளை திட்டாதீங்க அத்தை என்று மரகதத்தின் வாயை அடைத்து விடுவான். இதை எல்லாம் நினைத்து பார்த்த மரகதத்திற்கு ஒருவேளை உமா தான் ஆனந்துக்கு பொருத்தமானவளோ என்று எண்ணியபடியே, உமாவின் கன்னத்தைப் பிடித்து திருஷ்டி கழித்து “இப்பொழுதுதான் இந்த வீடு,  வீடு போல் இருக்கிறது” என்று மகிழ்ச்சியாக கூறினார் மரகதம்.

தொடரும்… 

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *