Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

“சாரி மிஸ்டர் கோஸ்ட்… மணி பார்த்தேன்… கரெக்டா 12.01… அப்ப இன்னைக்கு… இந்த ரோஸஸ்ல ரெண்டு எடுத்துக்கட்டுமா?”

“ம்ம்…”

அவற்றை எடுத்தவள் ஒன்றை, “ஹேப்பி டெத் டே மிஸ்டர் கோஸ்ட”; என்று அவனிடம் நீட்டினாள்… புன்னகையுடன் அதை வாங்கியவன் “தேங்க் யூ” என்றான்…

மற்றொன்றையும் அவனிடம் நீட்ட “:ஹேப்பி பெர்த் டே” என்று சொல்லப்போகிறாள் என்று எதிர்பார்த்தபடி புன்னகையுடன் கைநீட்டினான்…

ஆனால் அவளுடைய இதழ்கள் “ஐ லவ் யூ மிஸ்டர் கோஸ்ட்” என்று உச்சரித்தன…

இதமான தென்றல் அங்கு வீச, வழக்கம்போல அவள் தனது கிளட்சில் அடக்கியிருந்த அவளது முடி அழகாய் அலைபாய்ந்தது…
அழகான கருப்பு நிறச்சுடிதாரில் தேவதையாய் அமர்ந்திருந்தவள், கண்ணும் இதழும் புன்னகையில் மின்ன, அந்த ஆரஞ்சு வண்ண ரோஜாவை அவனை நோக்கி நீட்டினாள்.
அவள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போகிறாள் என்று கைநீட்டியவனின் கையில் ஏற்கனவே அவள் கொடுத்த மலர் இருந்தது…
இளம் தென்றலின் இதமான தென்றலின் வருடலில் அவர்கள் கையிலிருந்த ரோஜாக்கள் இரண்டும் அழகாய் இதழசைக்க,
“அருள் இங்க பாருங்களேன்… இந்தப் பூ ரெண்டும் எவ்வளவு அழகா அசையுதுன்னு… தென்றலோட தீண்டலுக்கு வெட்கப்பட்டு சிணுங்குற மாதிரி இருக்குல்ல… சோ க்யூட்…” என்று காட்டினாள்.

அவன் பார்த்தபொழுதும் அந்த மலர்கள் இரண்டும் அசைந்து காட்டின மீண்டும்… அழகாகத்தான் இருந்தன… ஆனால் அவளளவு அல்ல…
அவன் தன்னை மறந்து அவளை ரசித்துக்கொண்டிருக்கும்போதே அவனது கையிலிருந்த மலரையும் அவள் வாங்கினாள்.
அவன் கேள்வியாகப் பார்க்க,
“இது ரெண்டையும் எனக்கு ரொம்பப்பிடிச்சுருச்சு மிஸ்டர்கோஸ்ட் நான் இதைப் பத்திரமா வச்சுக்கப்போறேன்…” என்றபடி மீண்டும் இரண்டையும் கையில் வைத்து ரசிக்க ஆரம்பித்தாள்.

“ஆனா இதை எப்படி பத்திரமா வச்சுப்ப? வாடி போயிருச்சு…”

“மிஸ்டர் கோஸ்ட்… வாடிப்போன பூவைத்தான் பத்திரமா வச்சுக்க முடியும்… இதை அப்படியேவோ இல்ல இதழ்களை மட்டுமோ நோட்புக் எதுக்குள்ளயாவது வச்சா எவ்வளவுநல்லா இருக்கும் தெரியுமா?”

“எல்லாரும் பிரஷ்ஷா இருக்கற பூவைத்தான் ரசிப்பாங்க நீ என்னப்பா  வாடிப்போனதை ரசிக்கிற…”

“ஏன் இதுக்கென்ன குறைச்சல்.. அங்கங்க லைட்டா வாடிருக்கு… ஆனா அதுவும் ஒரு அழகா இருக்கு… தொட்டுப் பார்க்கறப்ப, புல்லா சாப்டா இருக்கற ரோஸோட வெல்வெட்தன்மை எனக்குப் பிடிக்காது… ஆனா அங்கங்க லைட்டா காஞ்சு போயிருக்கறப்ப அதைத்தொட்டுப்பார்க்க எனக்கு ரொம்பப்பிடிக்கும்… வாடினா மட்டும் இதுல இருக்கற மணம் போயிருச்சா என்ன? செடியில இருக்கறப்ப எல்லாப்பூவும் சிரிக்கும்… ஆனா வாடுனதுக்கப்பறமும் சிரிக்கிற இதுதான் பெஸ்ட்…” என்றபடி இடக்கையால் இரண்டு பூக்களையும் இணைத்துப் பிடித்திருந்தவள் ஒற்றைவிரலால் சிரித்தபடி அவளது மொழியில் சிரித்துக்கொண்டிருந்த அந்த பூக்களின் இதழ்களை வருடிவிட்டாள்.

அவளது முகத்திலிருந்த குதூகலத்தைக் கண்டவனுக்கு உயிரோடிருக்கும் பொழுது எப்பொழுதாவது தோன்றும் திருமண எதிர்ப்பார்ப்புகளில் சின்னசின்ன இன்பங்களைக் கடந்துபோக விடாமல் ரசிக்கவைப்பவளும் பெரியபெரிய துன்பங்களை எளிதாகக் கடந்துபோக வைப்பவளுமாக ஒருத்தி வேண்டும் என்று எப்போதோ எண்ணியது இப்போது ஞாபகம் வந்தது…
இதோ இப்போது இவளிருக்கிறாள்… ஆனால்… அவனில்லை அதுதான் உண்மை…
கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதன் பொருள் அவனுக்கு முழுமையாய்ப் புரிந்தது…
இந்தத் தேவதை தனக்குக் கிடைக்குமளவு அவன் எதையும் கொடுத்து வைத்திருக்கவில்லை போலும்… அவன் கொடுத்து வைத்திருந்ததென்னவோ அவனது உயிர்தான்…
ஆனால் அதற்கு இந்த தேவதையின் மதிப்பு கிடையாதுதானே…
அவனுக்கு வலித்தது… ஆம்…ஒன்றை மிகவும் விரும்பி, அது தானாகக் கையில் கிடைக்கும்போது அதை மறுப்பது மிகப்பெரிய வலி…
அந்த வலியை அவன் இப்பொழுது அனுபவித்தாக வேண்டும்…
அதை விட குழந்தையின் குதூகலத்துடன் அந்த மலர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தவளின் மலர்ப்புன்னகையைக் கொன்றாக வேண்டும் என்றெண்ணியபோது இன்னும் வலித்தது…

“அமிம்மா…” மென்மையாக அழைத்தான்…
மலர்களிடமிருந்து பார்வையை எடுக்காமலே “என்ன அருள்?” என்றாள்.

“அமி…” குரலில் சற்று அழுத்தம் கூடியது…
அதில் திரும்பி அவனைப் பார்த்தவள், “என்ன மிஸ்டர் கோஸ்ட”; என்றாள்.

“நீ என்ன சொன்னன்னு உணர்ந்துதான் சொன்னியா?

“ஆமா அருள்… சின்ன வயசுல இருந்தே எனக்கு வாடிப்போன பூ…

“ப்ச்…நான் பூவைப் பத்தி சொன்னதைக் கேக்கல அமி…என்கிட்ட பூவைக் கொடுத்து என்ன சொன்னியோ அதைப் பத்தி கேக்குறேன்…

“ஓ… அதுவா… மனித வாழ்க்கை வேணும்ன்னா பிறப்பில இருந்து தொடங்கியிருக்கலாம்.. ஆனா உங்களோட ஆத்மா வாழ்க்கை இறப்புல இருந்துதான தொடங்குது… அதனால தான் ஹேப்பி டெத் டேன்னு சொன்னேன்…

“அதில்ல… அமி… அதுக்கடுத்து சொன்னது?

“அதுக்கடுத்து என்ன சொன்னேன்?

என்ன கேட்கிறான் என்பதைப் புரிந்துகொண்டே வெறுப்பேற்றுகிறாள் என்று தோன்றியது… அப்பாவியாக வைத்திருந்த அவளது முகம் அதனை உணர்த்தியது… இருந்தாலும்… என அந்த முகத்தில் அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது ஒருவேளை நாம்தான் தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று… கண்ணை மூடி மீண்டும் நடந்ததைப் பார்த்தான்… ஐ லவ் யூ மிஸ்டர் கோஸ்ட் என்றவார்த்தைகள் தெளிவாக இருந்தன…

“ஐ லவ் யூ மிஸ்டர் கோஸ்ட்ன்னு சொன்னியா இல்லையா? நேரடியாகவே கேட்டு விட்டான்.

“சொன்னேன்… அவளும் நேரடியாகவே சொல்லிவிட்டாள்.

“எதுக்குச் சொன்ன?

“சொல்லணும்ன்னு தோணுச்சு… சொன்னேன்… என்னால சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்னு மனசுக்குள்ளயே வச்சிக்கிட்டுலாம் இருக்க முடியாதுப்பா… அதெல்லாம் சுகம் கிடையாது… மரண வேதனை… அதைத் தாங்கற அளவு எனக்குச் சிலரை மாதிரி கல்நெஞ்சும் கிடையாது… பிஞ்சு இதயம்… அதான்… சரி… கிளம்பலாமா?

அவனுக்கு அவளிடம் சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தது… ஆனால் அவளை வெகுநேரம் அங்கு அமர வைக்கவும் பிடிக்கவில்லை… கூட்டி வந்தது போலவே மென்மையாக அவளது கைப்பற்றி, அந்த இடுகாட்டிற்கு வெளியே அழைத்து வந்தான்… ஆளரவமும் ஆவியரவமும் அற்ற சாலையில் வரும்போது அவளிடம் பேச்சுக் கொடுத்தான். சற்றுப் பலமான காற்று வீசும்போது ரோஜா இதழ்கள் விழுந்து விடாமல் கையை அணைவாக வைத்து நடந்தபடி வந்தவளிடம் “அமி” என்றான்.

“என்ன அருள்?

“நீ நார்மலா தான இருக்க? மறைகிறை கழறலயே…

அவன் கேட்டதில் என்ன? என்று நிமிர்ந்தவள், “என்னைப் பார்த்து ஏன்டா அப்படி கேட்குற?” என்றாள் அவனை ஆங்கிரிபேர்ட் போல முறைத்துக்கொண்டே…

“அப்பறம்… பேயோட கல்லறைல உட்கார்ந்து பேய்க்கே பிரபோஸ் பண்ண ஒரே ஜீவராசி நீயா மட்டும் தான் இருப்ப…விளையாடுறதுக்குன்னு சில விஷயங்கள் இருக்கு… எல்லா விஷயத்துலயும் எல்லார்ட்டயும் விளையாடக்கூடாது…”
அவன் தீவிரமான குரலில் கூற,
“நான் உங்கிட்ட விளையாடாம வேற யார்க்கிட்ட விளையாடப்போறேன்… ஆனா… இந்த விஷயத்துல நான் விளையாடல அருள்… நான் சீரியஸாதான் சொல்றேன்… ஐம் இன் லவ் வித் யூ. நான் விவேகன் சந்தனா கிட்ட சொன்னதெல்லாமே கூட சம்பவங்கள் பொய்யா இருக்கலாம். ஆனா என்னுடைய உணர்வுகள் உண்மை அருள்… எனக்கு உங்களை ரொம்பப்; பிடிக்கும்…” என்றபொழுது மீண்டும் காற்று சற்று பலமாக வீச, மீண்டும் ரோஜாக்களிடம் கவனத்தைச் செலுத்தினாள்.

“ஆனா எனக்கு உன்னைப் பிடிக்கணுமே அமி…

தோள்களைக் குலுக்கியவள், ரோஜாக்களிடம் கவனத்தைச் செலுத்தியபடி, “பிடிக்கலன்னா போ… உனக்குப் பிடிக்குதான்னு நான் கேட்டனா? எனக்குப் பிடிச்சிருக்குன்னு தானே சொன்னேன்… ஆனா ஒண்ணு… உனக்கு உன்னோட அருணாவை மட்டும்தான் பிடிக்கும்ன்னு நினைச்சேன்… ஆனா அவர் செட்டப் பண்ணி விடுற அடியாள் முதல்கொண்டு பிடிக்கும்ன்னு இப்பத்தான் தெரியுது…

“புரியல…

“இல்ல… வர்றப்ப… என் மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு ஏதாவது ஆபத்து வருதான்னு நான் பார்த்துட்டே இருப்பேன்னு சொன்ன… இன்னைக்கு அந்த பெட்ரோல் இன்சிடன்ட் அப்ப உங்க அப்பன்கிட்ட காசு வாங்கிட்டு நடிச்ச அந்த அல்லக்கை மேல நெருப்புப் பத்திரக்கூடாதுன்னு தான சூசைட் அட்டம்ட் பண்ண தம்பியை விட்டுட்டு ஓடோடி வந்துக் காப்பாத்துன்ன… என்ன ஒரு பாசம்… என்ன ஒரு நேசம்… என்றாள் நக்கலாக…
இதற்கு அவள் நேரடியாக என்னைப் பிடிக்காமலா காப்பாற்ற வந்தாய் என்று கேட்டுருக்கலாம்…

“சரி… அதெல்லாம் இருக்கட்டும்… நான் உங்களைச் சுடுகாட்டுக்குத் தான கூட்டிட்டுப் போகச்சொன்னேன்… என்னை பிரெய்ன்வாஷ் பண்ணி இடுகாட்டுக்குக் கூட்டிட்டு வந்து ஏமாத்துறீங்க…. இதெல்லாம் கள்ளாட்ட…

“ஏன் அங்கயும் போய் இங்க பண்ணமாதிரி ஏதாவது பண்ணப்போறியா?

“ஐ ஆசையைப்பாரு… இங்க ப்ரபோஸ் பண்ணதுக்கே ஒழுங்கான ரெஸ்பான்ஸ் வரலையாம்… இதுல அங்கையும் வேற போய்ப் பண்ணனுமாக்கும்…

ஒழுங்கான ரெஸ்பான்ஸா? அதை எப்படி கொடுப்பது? அவனுக்கு நிஜமாகவே தெரியவில்லை… உயிரோடிருப்பவனிடம் காதல் சொன்னால் அவளைத் திருமணம் செய்வதாய்ச் சொல்லலாம்… அவளது வீட்டில் சென்று பெண் கேட்கலாம்… பேயிடம் வந்து காதல் சொன்னதுமில்லாமல் ரெஸ்பான்ஸ் வேறு கேட்கிறாளே என்று இருந்தது…

“சரி போலாமா?

“எங்க?

“சுடுகாட்டுக்கு…

“உன்னை… அவன் அருகில் வர,

“ஐயோம்மா பயமா இருக்கு… அடச்சை அப்பறமா அங்கிட்டுப் போய் விளையாடுங்க…

“சரி… வந்துத் தொலை… கூட்டிட்டுப் போய்த் தொலையறேன்…

“அருள்… அருள்…” சற்று தூரம் நடந்ததும் திடீரென அழைத்தாள்.

“என்ன?

“இந்தப் பூ காத்துக்கு விழுந்துருமோன்னு பயமா இருக்கு… இதைப் பத்திரமா வைக்க ஏதாவது பண்ணித்தாங்களேன்…

அவன் அவளை முறைக்க, தன் டிரேட்மார்க் அப்பாவி முகத்தைக் கொண்டு வந்து ப்ளீஸ் என்றாள்.

சுற்றும் முற்றும் பார்த்தான்… வேப்பமரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தார்கள், கீழே கிடந்த சில காய்ந்த வேப்பங்குச்சிகளை எடுத்தான்… சற்று அருகில் ஒரு அரசமரம் இருந்தது… அதன் அருகில் சென்றான்… கீழே சில பசுமையான இலைகள் விழுந்து கிடந்தன.தன்னைப்போல இளமையில் உதிர்ந்தவை என்று நினைத்தவாறே அவற்றை எடுத்தான்.  அமிழ்தா அதற்குள் சாலையோரமாகக் கிடந்த பெரியகல் ஒன்றில் அமர்ந்து அந்த ரோஜாப்பூக்களைக் கவனமாகத் தன் மடியில் வைத்திருந்தாள்.

“லூசு இங்க எதுக்கு உட்கார்ந்த… கல்லுக்கு அடியில ஏதாவது இருந்தா என்ன பண்ணுவ?

“காத்து ரொம்ப அடிக்குது… கையிலயே வச்சுருந்தா உதிர்ந்;துரும்… அதான்… கல்லைச் சுத்தி ஒண்ணுமில்லன்னு செல்போன் டார்ச் அடிச்சு பார்த்துட்டுத்தான் உட்கார்ந்தேன்… அதுக்கு மீறி ஏதாவது இருந்தா என்ன பண்ண முடியும்? போய்த்தான் சேரணும்…

அவளை முறைத்தவாறே அந்த இடத்தைச் சோதித்துவிட்டு, அவளருகில் அமர்ந்தான். பெரிய பெரிய அரச இலைகளைக் கூம்பு வடிவில் சுற்றி, வேப்பங்குச்சிகளைச் சிறிது சிறிதாக உடைத்து அதனைத் தைத்தான்.
அவனது கலைநயத்தைச் சிறிது நேரம் ரசித்தவள், அவனிடம் கேட்டாள்.

“ஏன் மிஸ்டர் கோஸ்ட்? இந்தப் கதையில படத்துலலாம் பேய்ங்களால மத்த விஷயங்களைத் தொட முடியாது… பேய்ங்களை மத்தவங்களால தொட முடியாதுன்னு சொல்வாங்க… அப்பறம் பேய்க்குக் கால் இருக்காது… வெள்ளைக்கலர் டிரஸ்தான் போட்டுருக்கும்… பொம்பளைப்பேய்ங்க எல்லாம்…முடியை விரிச்சு விட்டுட்டு இருக்கும்… திடீர் திடீர்ன்னு மறைஞ்சுருந்து ஆட்டம் காட்டும்… பயமுறுத்தும்… மனுசங்களைக் கொல்லும்… பழங்காலக் கதைகளா இருந்தாத் தின்னும்… பேய் எல்லாமே கொடூரமா இருக்கும்… எல்லாப்பேயும் ஒரு பொம்மைலதான் குடியிருக்கும்… முருங்கைமரத்துல குடியிருக்கும்… இப்படியெல்லாம் சொல்லிருக்காங்க… ஆனா உங்களை நிஜத்துல பார்க்குறப்ப அப்படிலாம் தெரியலையே…”

“மரணம்ங்கறது மனுஷன் உயிரோட இருக்கறப்பவே தெரிஞ்சுக்க ஆசைப்படுற ஒரு… க்யூரியாசிட்டியான சப்ஜெக்ட் அமி… அதனால அதைப்பத்தி பல கதைகள், கற்பனைகள்…ஒவ்வொருத்தரோட கற்பனையும் ஒவ்வொரு விதமா இருக்கும்…அதுக்கேத்தாப்பல சொன்னதுதான் அதெல்லாம்… அவங்க கதையில பேய் ஒரு பொருளை எடுக்க முடியாம அழுகணும்… அதுக்கு அதால எடுக்க முடியாதுன்னு கதையை செட் பண்ணிருப்பாங்க… அதேது இன்னொரு கதையில பேய் ஒருத்தவங்களைத் தொட்டு பயமுறுத்திட்டுப் போகணும்ன்னா அதுக்கேத்தாப்பல கற்பனை பண்ணிருப்பாங்க… எல்லாக் கற்பனைகளையுமே ரசிக்கலாம். ஆனா அதையெல்லாம் உண்மைன்னு நினைச்சுரக் கூடாது… உண்மைல நாங்க கரையணும்ன்னா நாங்க ஒரு சக்தியைப் பிரயோகப்படுத்தணும்… தெரியணும்ன்னா இன்னொன்னு…”

“மிஸ்டர் கோஸ்ட்… பேயா மாறின உடனே இந்த சக்தி யூஸ் பண்றதுக்கெல்லாம் டிரைனிங் அந்த மாதிரி எடுப்பீங்களா என்ன?

“இது என்ன ஐ.ஏ.எஸ் போஸ்டிங்கா? டிரைனிங் எடுக்க… ஏற்கனவே செத்துப் பேயா சுத்திட்டு இருக்கறவங்கட்ட கேட்டுக்க வேண்டியதுதான்… என்றபடி இலைகளைத் தைத்து முடித்து அந்தப் பூக்களை வாங்கி அவனே அதனுள் அழகாக வைத்து அவளிடம் கொடுத்தான்… கன்னத்தில் கை வைத்து கதைகேட்டபடி அமர்ந்திருந்தவள், அவன் கொடுக்கவும் முகம் மலர வாங்கியபடி எழுந்தாள்…

“போகலாம் அருள்…
சற்று தூரம் நடந்திருக்க, மிஸ்டர் கோஸ்ட் என்று மீண்டும் அழைத்தாள்.

“என்ன அமி?

“சுடுகாட்டுக்கா போறோம்?

“நீ அங்கதான போகணும்ன்னு சொன்ன?
“சொன்னேன்… ஆனா…

“பயமா இருக்கா? வா வீட்டுக்குப் போகலாம்…

“ம்கூம்… பயமாலாம் இல்ல… கண்டிப்பா போகணும்… ஆனா அதுக்கு முன்னாடி…
“அதுக்கு முன்னாடி?

“இப்படியே கொஞ்ச நேரம் ஊர்முழுக்க காலாற நடந்துட்டுப்போவோமா?

“கொஞ்சநேரம்ன்னா? மணி இப்பவே ஒண்ணு… இப்படியே விடியவிடிய ஊர்சுத்திட்டு நாளைக்கு எப்படி போய் வேலை பார்ப்ப?

“மிஸ்டர் கோஸ்ட் மணி தெரிஞ்ச உங்களுக்கு கிழமை தெரியலையே…நாளைக்கு அதாவது இன்னைக்கு ஞாயித்துக்கிழமைப்பா… நான் காலையில போய்த் தூங்கிக்குவேன்…ப்ளீஸ்…

“பிராடு பிராடு இப்படியே குழந்தை மாதிரியே முகத்தை வச்சு காரியத்தைச் சாதிச்சுரு… ஆனா பண்ணுறதெல்லாம் விஷம்… விஷம்… மழை வேற வரும்போல இருக்கு… நீ நனைஞ்சுரக்கூடாதே…

“அதெல்லாம் நனைஞ்சா பரவால்ல… வாங்க…

அவளது விருப்பப்படி மெல்ல நடந்தார்கள், சிறிது நேரம் அந்த அமைதியை ரசித்தபடி மௌனமாக, சிறிது நேரம் ஒருவரையொருவர் வாரிக்கொண்டு கலகலப்பாக… அவன் சொன்னது போலவே சற்று நேரத்தில் மழை பெய்தது… ஆனால் ஆளைத் தூக்கும் அடை மழையாக இல்லாமல் தென்றலுக்குத் தூது வந்த சாரலாகப்பெய்தது… அது இன்னும் அந்தப் பொழுதை அழகூட்ட… இருவரும் அந்த இரவின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து ரசித்துத் தங்கள் மனப்பெட்டகத்தில் சேர்த்தனர்.

இருள்வானம் வண்ணம் பிரியத் தொடங்கியவுடன் “அமி மணி நாலு… கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் இந்த ஊரை நடந்தே சுத்திருக்கோம்… வா இனியாவது போய்த் தூங்கு…

“மிஸ்டர் கோஸ்ட்… சுடுகாடு…

தலையிலடித்தவன் கூட்டிச்சென்றான்… தகன மேடையில் ஓர் உடல்எரிந்துகொண்டிருந்தது. ஒரு வெட்டியான் போதையில் படுத்திருந்தார். சற்று தூரத்தில் இருந்து தான் காட்டினான்…. திடீரென எரிந்துகொண்டிருந்த உடல் நிமிர்ந்து உட்கார அமிழ்தா சட்டென்று பயந்துவிட்டாள். “அது ஒண்ணுமில்ல… வெப்பத்துக்கு உடல் இப்படிதான் எரியும். நீ வா..”. என்று அவளை அழைத்துச் சென்றான்…

“சரி வீட்டுக்குப் போலாமா?

“வீட்டுக்கா? போகவேண்டுமா? என்றிருந்தது அவளுக்கு…

“அருள்…இது சின்ன சுடுகாடாதான இருக்கு… கொஞ்சம் பெரிசா கூட்டிட்டுப் போங்க…

அவளை முறைத்தான்…

“பிளீஸ்யா…

“சரிவா…என்றபடி அவளை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான்… அங்கே எதுவும் எரியவில்லை… எந்தக்கல்லறைகளும் இல்லை…
ஆனால்… ஆனால்… கல்லிடுக்குகளில் அங்கங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கிடந்தன…

அவற்றைப் பார்த்துத் திகைத்தவள், “அருள் இது என்னது? இது எந்த மயானம்? ஏன் இப்படி இருக்கு?” எனக் கேட்டாள்.

“இது எந்த மயானமும் இல்ல அமிழ்தா…. நீ திறக்கப்போறேன்… திறக்கப்போறேன்னு சொல்லிட்டு இருக்கக் கல்குவாரிகள்ல ஒண்ணு…”
அவ்வளவு நேரம் இருந்த மோனநிலை மாறி சில்லென்ற தண்ணீரைச் சிலீரென முகத்தில் அடித்தது போல விறைத்தாள் அமிழ்தா.
                                                     (தொடரும்)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *