Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

தடக்… தடக்… தடக்…

நள்ளிரவின் அமைதியைத் தன்னுடைய தடக்…தடக்… இசையால் தட்டி எழுப்பியபடி சென்று கொண்டிருந்தது அந்த இரயில்…

அதனுடைய நூற்றுக்கணக்கான படுக்கைகளுள் ஒரு மிடில் பெர்த்தில், ‘தையதையதையா… தக்கத்தய்யதய்ய தையா…’ பாடலை ஹெட்செட்டின் வழியே காதுகளுக்குள் பாய்ச்சியவாறு கண்மூடிப் படுத்திருந்தாள் அவள்…

இரயில் பயணத்தின்போது கேட்க அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது… பாடலின் துள்ளலான இசையும் இரயிலின் சீரான குலுங்கலும் இணைந்து இரயிலும் தன்னோடு தாளமிடுவது போல் தோன்றும்… அருமையான வரிகள் அந்தப் பொழுதிற்கு மேலும் அழகூட்ட, எத்தனையாவது முறை கேட்கிறோம் என்று தெரியாமல் அதனை சுகமாக ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்… பாடகரின் இதமான ஆழ்ந்த குரல் அவளது விழிகளை உறக்கத்தில் ஆழ்த்த முயன்று கொண்டிருந்தது…

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்…
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்…

மழை பூமிக்கு வரும் முன்னே மறைந்ததைப் போல் அந்த மாயமகன் இங்கு மறைந்து விட்டான்…

நான் பார்த்து விட்டால் ஒரு வீழ்ச்சி வரும்…
நீ பார்த்து விட்டால் ஒரு மோட்சம் வரும்…
நீ பார்த்து விட்டால் ஒரு மோட்சம் வரும்…
எந்தன் முதலும் முதலும் நீ…
முடிவும் முடிவும் நீ… “

விழிகள் உறக்கத்தில் சொக்கிய நொடி, செவியருகில் கேட்ட பேரிரைச்சலில் அதிர்ந்து விழித்தாள்…

ஏதோ சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போலும்… அதிவேகத்தில் அருகிலிருந்த தண்டவாளத்தை அதிர வைத்தபடி கடந்து கொண்டிருந்தது…
அவள் எழுந்து அமரவும் அது சென்று முடிக்கவும் சரியாக இருந்தது…

காதுகளில் இன்னமும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
முதலும் முதலும் நீ… முடிவும் முடிவும் நீ…” அதனை நிறுத்தி ஹெட்செட்டைக் கழற்றியவாறே வெளியே பார்த்தாள்…

அருகில் அந்த அதிவிரைவு இரயில் போன தண்டவாளம் மறைந்து ஒற்றைத் தண்டவாளத்தில் இவள் இருந்த இரயில் மட்டுமே சென்று கொண்டிருந்தது…வேகம் தான்…இரயிலுடன் போட்டி போட்டுக்கொண்டு எதிர்ப்புறம் பயணம் செய்து கொண்டிருந்த காற்று இவளது முடி கோதி முகம் தடவி விளையாடிச் சென்றது…குளிர்க்காற்று சிலீர்ரென ஊசியாய் முகத்தில் படபட உறக்கம் இருந்த இடம் தெரியாமல் விலகிப்போனது. இந்தக் காற்றுக்காகத் தானே அவளது பணியின் நிமித்தம் அவளுக்கு அளிக்கப்படும் குளிர்சாதன வகுப்பை மறுத்து விட்டு இதில் பயணம் செய்கிறாள்…இயற்கையின் சொகுசு முன்னர் மனிதர்கள் ஏற்படுத்தும் செயற்கை வசதி வாய்ப்புகள் தோற்றுத்தான் போகின்றன என்று எண்ணியவாறே மணியைப் பார்த்தாள்… இரண்டரை என்று காட்டியது… நெட்டில் இரயில் இப்பொழுது சென்று கொண்டிருக்கும் இடத்தையும் சேர வேண்டிய இடத்தையும் சேரும் நேரத்தையும் பார்த்தாள்… இன்னும் முக்கால் மணி நேரமாகுமென அது தெரிவித்தது.

வெளியே கப்பியிருந்த இருள், இரயில் சென்று கொண்டிருந்த இடம் பெரிய நகரமொன்றுமில்லை என்பதை உணர்த்தியது…ஏதாவது நகரமாயிருந்தால் தெருவிளக்குகளின் ஒளி இருக்கும்…இங்கு அது இல்லை…சற்று வெளிச்சம் தந்த நிலவொளியிலும் எந்த வீடுகளும் தென்படவில்லை…தண்டவாளத்தையொட்டி இருபுறமும் முட்செடிகளும் புதர்களும்தான் இருந்தன…

‘முக்கால் மணி நேரம் இருக்கிறது என்று தூங்க முடியாது. சற்று படுத்திருப்போம் என்று படுத்தற்கே உறக்கம் வந்து விட்டதே…இறங்குமிடம் தாண்டிப் போய்விட்டால் கடினமாகி விடும்.இவ்வளவு நேரம் தூங்காமல் கொட்ட கொட்ட கண்விழித்துக் கொண்டு வந்தது வீணாகி விடும்.அத்தோடு அவள் நாளை அவளது பணிப்பொறுப்பேற்றாக வேண்டும்… ‘
எண்ணமிட்டபடி பெர்த்தைத் தாங்கும் கம்பியைப் பற்றிக்கொண்டிருக்கும்படி மாட்டியிருந்த கிளட்சை(கிளிப்) எடுத்து, காற்றில் அலைமோதிய கூந்தலை அடக்கியவள், பிறரின் உறக்கம் கலையாதபடி மெதுவாக இறங்கினாள். அதேபோல் மெதுவாக நடந்துசென்று பெட்டியின் வாயிலருகில் சாய்ந்தபடி வெளியே நோக்கினாள். பின்னே சாய்ந்தபொழுது குத்திய கிளட்சை மீண்டும் எடுத்து கதவில் இருந்த ஜன்னல் கம்பியில் மாட்டியவளின் முகம் எதிரே இருந்த வாஷ்பேசின் கண்ணாடியில் தெரிந்தது.

ஏற்கனவே அடங்கமறுத்து திமிறிக்கொண்டிருந்த அவளது கருங்கூந்தல் இப்பொழுது அடக்குமுறையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் நிலவொளியில் பளபளத்து அலைபாய்ந்தது. அது பிறை நெற்றியில் வந்து விழுந்ததை உணர்ந்த இமைகள் சட்டென அவளது மலர்க்கண்களின் மேல் பட்டாம்பூச்சியாய்க் கவிழ்ந்தன. அவற்றிற்கு ஆறுதலளிப்பது போல வந்த அவளுடைய காந்தள்விரல்கள் நெற்றியில் படிந்த முடியை விலக்கும் போது வடிவான புருவம் வளைந்து வழிவிட்டது. காதோரத்தில் முடியைச் செருகியவள் மாநிறத்தில், அளவெடுத்து செய்தது போல அம்சமாக இருந்தாள். அவளுடைய தீர்க்கமான விழிகளில் தெரிந்த மிடுக்கும் தோற்றத்தில் இருந்த நிமிர்வும் அவளுடைய அழகுக்கு அழகூட்டின.காதோரத்தில் செருகப்பட்ட முடியைக் காற்று மீண்டும் விடுவிக்க இம்முறை அவளது செவ்விதழில் சென்று படிந்தது.’உனக்கெல்லாம் கிளட்ச் தான் சரிப்பட்டு வரும்’ முடிவெடுத்தவள் மீண்டும் கூந்தலை கிளட்சின் பற்களுக்கிடையில் அடக்கினாள்.அத்துமீற வழியின்றி சிறைபட்ட கூந்தல் வேறு வழியின்றி அடங்கியது.

வெளியே பார்த்தாள். அதே இருள்… ‘அதனாலென்ன? அவளுக்கு இருள் பிடிக்கும். இரவு பிடிக்கும். இரவுப் பயணம் பிடிக்கும். இரவின் குளுமை பிடிக்கும். இரவின் அமைதி பிடிக்கும்.’ அந்த இரவின் அமைதிக்குள் அவளைப் பிடிக்க ஒன்று காத்திருந்தது தெரியாமல் தன்னுடைய துறுதுறு விழிகளால் இருளைத் துழாவிக்கொண்டிருந்தாள் அவள்.

மீண்டும் மணியைப் பார்த்தாள். அரை மணி நேரம் இருந்தது. ‘இரு நாள் பயணமாக வந்தது. ஒருமுறை எல்லாப் பொருட்களையும் சரிபார்த்து விடுவது நல்லது’ எண்ணியபடி தன்னுடைய இருக்கையை நோக்கி நகர்ந்தாள். இவளைத் தவிர வேறு யாரும் அந்தப் பெட்டியில் விழித்திருப்பதாகத் தெரியவில்லை.

மெல்ல நடந்து தன்னுடைய இருக்கையை அடைந்தவள் செல்போன், சார்ஜர், ஹெட்செட், ஏடிஎம் கார்டு போன்றவை
கைப்பையிலும் புத்தகங்கள், தண்ணீர் பாட்டில் போன்றவை தோள்பையிலும் உள்ளதா எனச் சரிபார்த்தாள். இனிப் படுக்கைக்கு அடியில் இருக்கும் இருபெட்டிகள் மட்டும் தான்.

அவற்றைத் திறக்கவே இல்லை. எனவே சரிபார்க்கும் அவசியமும் இல்லை. அடியிலிருந்து எடுத்தால் மட்டும் போதுமானது. ஒன்றை எளிதாக இழுத்து நிறுத்தியவள் மற்றொன்றையும் எடுக்க கைகளை நுழைத்தாள். குனிந்தபடியே எடுக்க முடியவில்லை. மண்டியிட்டாள். பெட்டியின் ஜிப் எதிலோ சிக்கியிருப்பது புரிந்தது. மெதுவாக எடுக்க வேண்டும். நம்பர் லாக் வேறு. பின்னர் திறக்கவே முடியாது. ஆடைகளுடன் அவளுடைய பணி அடையாள அட்டை முதலியவையும் அதனுள் இருந்தது. ம்கூம். முடியவில்லை.

முகம் தரையில் பட கிட்டத்தட்ட படுத்துதான் எடுக்க வேண்டும் போல இருந்தது. பலர் செருப்புடன் நடமாடிய இடத்தில் அதைச் செய்ய முடியாது. பெருமூச்சுடன் நிமிர்ந்தவள் சட்டென எழுந்து ஜன்னல் கம்பியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு வில்லாக வளைந்தாள். மறுகையால் துழாவியவளுக்குப் பெட்டியின் ஜிப் தட்டுப்பட்டது.

லோயர் பெர்த்தில் படுத்திருந்த பெரியவர் ஒருவரின் காற்றடைப்பு தலையணையின் கயிற்று முனையுடன் பிணைந்திருந்தது. சற்று சிரமப்பட்டு அதை விடுவித்து வெற்றிகரமாக வெளியே இழுக்க முயன்ற நொடி…ஜன்னலைப் பற்றியிருந்த அவளது கையை எதுவோ இறுக பற்றுவது போல தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்.

பார்த்தவளின் இதயம் ஒருகணம் துடிக்க மறந்தது…

(வருவான்…)

8 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1”

    1. 😍😍😍😍First Thank you sis. gnabham vachurukathuku. Aazhini publishing rights publishers 7 yrs ku ta iruku sis.innum 5 years iruku. 5 yrs kazhichu thaan poda mudiyum. aana appa kandippa poduren.STV Part 2 complete pannitu thaan sis eduthen. atha konjam edit panra Idea la eduthen. inga publish panren. Pratilipi ku Dec ku mela oru new story oda varen sis. athu ingayum varum. neenga enga padichalum ok. Again Thank you very much. Really unga comment paakavum refreshing aa iruku😊😊

    1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Thanks a lot sis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *