செலவு!
“என்னங்க” என்று மூன்றாவது முறையாக அழைத்தாள் கல்யாணி.
கையில் இருந்த செய்தித்தாளை எரிச்சலுடன் டீபாயில் எறிந்தான் விமலன்.
“என்ன டி வேணும் உனக்கு? நிம்மதியா காலைல பேப்பர் கூட பார்க்க விடாம…” என்று அவன் குரல் உயரும்போதே,
“இல்லங்க வீட்டு செலவுக்கு… பணம்…” என்று இழுத்தாள்.
“அதானே பார்த்தேன். தேதி நாலாகுதே இன்னும் பணம் கேட்டு வரலையேன்னு! வட்டிக்காரன் கூட இத்தனை சரியா வந்து கேட்க மாட்டான்” என்று இரைந்தான்.
“என்னங்க இப்படி பேசுறீங்க?” என்று கண்களில் நீர் வரக் கேட்டாள் கல்யாணி.
“பின்ன என்ன? நான் என்ன கலெக்டர் வேகைக்கா போறேன்? மாச சம்பளம் வந்ததும் வாரி இறைக்க! சும்மா இல்லாம சொந்த வீடு இருந்தா தான் மதிப்புன்னு பேங்க் லோன் போட்டு வீட்டை கட்டியாச்சு. இப்ப வீட்டு செலவுக்குன்னு ‘டான்’னு காசு வைக்க சொன்னா நான் என்ன செய்ய?” என்று கோபத்தில் கொதித்தான்.
“மாசம் ஆறாயிரம் வீட்டு வாடகை போகுது, இன்னும் கொஞ்சம் கூட போட்டா வீடு நமக்கு சொந்தமா இருக்கும்ன்னு நம்ம நல்லதுக்கு தானேங்க சொன்னேன்…” என்று கண்ணீரைத் துடைத்தபடி கூறிய மனைவியை முறைத்தான் விமலன்.
“கொஞ்சம் கூட… ம்ம்? மாசம் முப்பதாயிரம் கட்டுறேன் டி. முப்பது லட்சம் லோன் வாங்கி கடைசில அவனுக்கு கொடுத்து முடிக்கும் போது எழுபத்தி நாலு லட்சம் கட்டி இருப்பேன். உனக்கெங்க அதெல்லாம் புரியப் போகுது! மாசம் முதல் தேதி வந்ததும் பணத்தை உன் கிட்ட கொடுத்தா, சேலை, நைட்டி எல்லாம் வாங்கிட்டு வீட்டு செலவுன்னு கணக்கு சொல்லுவ. என்று குத்தலாக அவன் உரைக்க,
நீங்க போன மாசம் நான் தவணைல நைட்டி எடுத்ததை தானே சொல்றீங்க? இருந்த நாலு நைட்டில ஒன்னு கிழிஞ்சு போச்சு அதான் ஒன்னு எடுத்தேன். அதை ஏன் இப்படி சொல்லிக் காட்டுறீங்க? வீட்டுக்கு செலவு செய்ய வாங்குற பணத்தையும் மிச்சம் பிடிச்சு தானே அப்பப்ப நீங்க சில்லறை கொடுன்னு கேட்கும் போது கொடுக்கிறேன்? என்று அவளும் லேசாக கோபம் கொண்டவளாக பதிலளித்தாள்.
இந்த வக்கணை பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. என் கையில காசு இல்ல. இருக்கிறத வச்சு சமாளி என்று அவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க கிளம்பினான்.
என்னங்க இப்பவே பணம் இல்லன்னு சொல்றீங்க? என்று அதிர்வுடன் கல்யாணி வினவ,
அப்பறம் வேற என்ன சொல்றது? நேத்து பிள்ளைகளுக்கு சுளையா ஆளுக்கு பத்தாயிரம் ஃபீஸ் கட்டிட்டு வந்திருக்கேன். இன்னும் ரெண்டு மாசத்துல மறுபடி அடுத்த டேர்ம் வந்துடும். என்று தலையில் அடித்துக் கொண்டான்.
பிள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டிங்களா? என் கிட்ட சொல்லவே இல்லையே! என்று ஆதங்கத்துடன் அவள் முகத்தை தூக்கிக் கொண்டாள்.
ஆமா மகாராணிக்கு வீட்டுக்கு வந்ததும் செலவு கணக்கு சொல்லிடணும். அப்படியே அடிச்சேன்னு வை… என்று அவளை நோக்கி வந்தான் விமலன்.
நான் கணக்கு கேட்கலங்க. தகவல் சொல்லலையே! அதைத்தான் என்று அவள் முடிப்பதற்குள்,
கையில சம்பளம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. இந்த மாசம் ஆபிஸ் போக பெட்ரோலுக்கு என்ன பண்றதுன்னு ராத்திரியெல்லாம் தூக்கம் கூட வரல. நேத்து இருபதாயிரம் டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு ரசீது கேட்டா அந்த ஸ்கூல்ல என்னை ஒரு மாதிரி பார்க்கறான். இதெல்லாம் ஒரு பணமான்னு. பிள்ளைங்க அது பாட்டுக்கு பக்கத்துல இருந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூலயே படிச்சிட்டு இருந்திருக்கும். அந்த ஸ்கூல் அப்படி, அங்க படிச்சா பிள்ளைங்க வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்ன்னு என்னென்னவோ சொல்லி நான் வேண்டாம்னு சொன்னதை கேட்காம, செலவை இழுத்து விட்டுட்டு இப்ப வந்து அது இதுன்னு ஏதாவது பேசினனு வை டி. என்று கோபமாக விரல் நீட்டி எச்சரித்தான்.
நான் என்ன எனக்காக ஏதாவது கேட்டேனா? பிள்ளைங்க பெரிய ஸ்கூல்ல படிச்சா அவங்க வாழ்க்கைக்கு நல்லதுன்னு என்று அவள் முடிப்பதற்குள் அவள் முன் படாரென கையெடுத்து கும்பிட்டான்.
தாயே நீ சுயநலமே இல்லாம பிள்ளைங்களுக்காக, எனக்காக தான் வாழுற, நான் தான் குடிச்சிட்டு, சீட்டாடிட்டு வீட்டுக்கு பணம் தராம உன்னை கெஞ்ச விடுறேன் என்று கூறிவிட்டு வேகமாக குளியலறை சென்று கதவடைத்தான்.
கல்யாணிக்கு மிகவும் வருத்தமாக போய் விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை விமலன் இப்படி இருந்ததில்லை. அவளுக்கே அவன் அதிக சுமை சுமப்பது புரியத்தான் செய்கிறது. ஆனால் அதற்காக அவளிடம் பண விஷயமாக எதுவுமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவளுக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது.
அவன் அலுவலகம் சென்றதும் தான் வேறு ஏதாவது வழியில் வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க முடியுமா என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
மாலை வீட்டிற்கு வந்த கணவனிடம் அன்பாக பேசி அவனுக்கு உணவை கொடுத்துவிட்டு,
நான் வேணா எங்கேயாவது வேலைக்கு போகவா? என்று கேட்க, சட்டைப் பையில் இருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்தான் விமலன்.
காலைல பணம் கேட்டப்ப ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் கல்யாணி. கரண்ட் பில், பால் செலவு, பேப்பர் எல்லாத்துக்கும் கொடுக்கணுமே யோசிக்கும் போது தான் நீ வந்து பணம் கேட்ட, அந்த கோபத்துல கத்திட்டேன்.
நீ நகைச்சீட்டுக்கு பணம் கேட்டு வந்தா இந்த மாசம் இன்னும் துண்டு விழுமே என்ன பண்றதுன்னு தான் கத்திட்டேன். என்று அவளை சமாதானம் செய்தான்.
அதுக்கு இன்னும் நாள் இருக்கு. நான் ஏதாவது சமாளிச்சு வீட்டு செலவு பணத்தில் இருந்தே கட்டிடுவேன். அதுக்கு தான் காலைல பணம் கேட்டேன். என்று கூறினாள் கல்யாணி.
சுத்தமா கையில் பணமே இல்லாம இருக்க விட மாட்டேன் ஆனா அதே நேரம் செலவு செஞ்சுக்கிட்டே இருக்கவும் கூடாது கல்யாணி. போன மாசம் தவணையில் நைட்டி, அதுக்கு முன்ன தவணையில் அதோ அந்த மிக்ஸி என்று கைகாட்ட,
கவர்மென்ட் மிக்ஸி சரியில்லைன்னு தானே வாங்கினேன் என்று குரல் உள்ளே போக வினவினாள்.
புரியுது. ஆனா எல்லாமே சின்ன சின்ன செலவா தெரியும். அடுத்து அடுத்து செய்யும்போது அப்பறம் வழிச்சு செலவு செய்யும் நிலை வந்துடும். அதான் இப்பல்லாம் உன்கிட்ட பணம் விஷயமா பேசுறதோ, இல்ல பகிர்ந்துக்கறதோ இல்ல. என்றான்.
ஏன் சொன்னா என்னவாம்? சலுகையாக கணவன் தோளில் இடித்தாள்.
ம்ம், சரி பத்தாயிரம் கையில் இருக்கு. இப்ப என்ன செய்ய போற என்று அவளை கூர்ந்து பார்க்க,
நல்ல தண்ணி தூக்க பக்கத்து தெரு போக வேண்டியதா இருக்கு. ஒரு ஆர். ஓ வாங்கிடலாமா என்று கண்கள் விரியக் கேட்டாள்.
அவளை முறைத்தவன், இதான் நீ! இதுக்கு தான் பணத்தை பத்தி சொல்றது இல்ல. இப்ப அந்த பத்தாயிரத்தை செலவு செஞ்சுட்டா, ரெண்டு மாசத்துல மறுபடி ஸ்கூல் ஃபீஸ் கட்ட அந்த மாச சம்பளத்தில் இருந்து தான் முழுசா எடுத்துக் கொடுக்கணும். அப்ப சோத்துக்கு என்ன டி பண்றது? என்றதும் தவறு செய்துவிட்டவளாக தலை கவிழ்ந்து நின்றாள்.
எனக்கு புரியுது கல்யாணி, வீட்டு தேவைக்கு தான் கேட்கற, பிள்ளைங்க படிப்புக்கு தான் கேட்கற, நம்ம பொண்ணுக்கு சேர்ந்து வைக்க தான் நகை சீட்டுக்கு கேட்கற, தீபாவளி சீட்டு போட கேட்கற… எனக்கு புரியுது. ஆனா எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டா, நாளைக்கு ரொம்ப கஷ்டப்படுவோம். நீ நான் கொடுக்கற பணத்தில் என்ன செய்ய முடியுமோ செய். ஆனா எனக்கு எவ்வளவு வருது? நான் என்ன செலவு பண்றேன்னு கேட்காத.
நீ எந்த கணக்கும் போட வேண்டாம். நானே பார்த்துக்கறேன். ஏதாவது வேணும்ன்னா சொல்லு, முடியும்போது செய்து தர்றேன் என்று தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை தொட்டியில் போட்டு விட்டு உள்ளே சென்று விட்டான்.
அவன் குழந்தைகளுடன் விளையாடுவதை துணி மடித்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்தவளுக்கு அவன் சொல்ல வருவதன் சாராம்சம் புரியத் தான் செய்தது. ஆனாலும் ‘என்கிட்ட கூட எதையும் சொல்றதில்ல!’ என்ற ஆதங்கம் மட்டும் போகவில்லை.
அதன் பின் எல்லாம் நல்ப்படியாக சென்று கொண்டிருந்தது. அன்று மாலை பிள்ளைகளுடன் அமர்ந்து வீட்டுப்பாடம் படிக்க வைத்துக் கொண்டிருந்த கல்யாணியின் கைபேசி ஒலித்தது.
தெரியாத எண்ணைக் கண்டு சற்று நேர யோசனைக்குப் பின் அழைப்பை ஏற்றாள்.
சொல்லப்பட்ட செய்தியில் துடித்துப் போனவள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வேகமாக ஆட்டோ பிடித்து விரைந்தாள்.
தனியார் மருத்துவமனையின் வரவேற்பில் விமலன் என்று அவர் பெயர் சொல்லி விசாரிக்க,
ஐ.சி. யூ என்று வந்த பதிலில் அவள் உள்ளம் துடிப்பை நிறுத்தி உறையப் பார்த்தது.
மகள் அன்னையை இழுக்க சுயஉணர்வுக்கு வந்தவள், வேகமாக சென்று அங்கே இருந்த செவிலியரை அணுகினாள்.
நீங்க தான் அந்த பேஷண்ட் வெய்ஃபா? இந்தாங்க மேடம் ஃபார்ம். இதை ஃபில் அப் பண்ணுங்க. வண்டி ஸ்கிட் ஆகி விழுந்ததில் தலையிலும் கையிலும் அடிபட்டு இருக்கு. கான்ஷியஸ் இல்ல. டாக்டர் எம்.ஆர்.ஐ எடுக்க சொல்லி எழுதி கொடுத்து இருக்காரு. என்று அவள் முடிப்பதற்குள் கல்யாணி வாய்விட்டு அழுதாள்.
கையில ஃப்ராக்சர் வேற. எக்ஸ்ரே எடுத்த பின்னாடி தான் டாக்டர் என்ன பண்ணனும்ன்னு சொல்லுவார். முதல்ல அதை ஃபில் அப் பண்ணி இனிஷியல் பேமென்ட் கட்டுங்க. ஸ்கேன் சென்டருக்கு அழைச்சுட்டு போக ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்றோம், அங்க ரெண்டுக்கும் பீஸ் கட்டிடுங்க என்று கூறியதும் கல்யாணிக்கு தலை சுற்றியது.
அவர்கள் கொடுத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு, கைபேசியில் தன் தம்பியை அழைத்து விஷயத்தைக் கூறினாள். விண்ணப்பத்தை முன்னே சென்று கொடுக்க, ஆரம்ப கட்டணமாக பத்தாயிரம் கட்டச் சொன்னது மருத்துவமனை நிர்வாகம்.
கையில் வீட்டு செலவுக்கு அவன் கொடுத்த இரண்டாயிரம் தான் மீதமிருக்கின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து நின்ற வேளையில் அங்கு வந்து சேர்ந்தான் அவளது தம்பி கபிலன்.
என்னாச்சுக்கா மாமாவுக்கு என்று பதறியபடி வந்தவனிடம் மூவாயிரம் வாங்கி ஆரம்ப கட்டணமாக வைத்துக் கொண்டு சிகிச்சையை துவங்கச் சொல்லிக் கேட்டாள்.
அந்த பெண் தயங்க, கையில் பணம் கொண்டு வரலம்மா. இதோ வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்துடுவேன். என்று கூறி அவள் தலையசைத்து ஐசியூவுக்கு தகவல் தந்த பின்னே தான் அங்கிருந்து நகர்ந்தாள் கல்யாணி.
அவள் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்தும், அக்கா நான் பிள்ளைகளை பார்த்துக்கறேன். நீ வேகமா வீட்டுக்கு போய் பணத்தை எடுத்துட்டு வா என்ற கபிலனை வெறுமையாக நோக்கினாள்.
அங்க எங்க பணம் இருக்கு? உன் மாமா கிட்ட தான் இருக்கு. அவருக்கு சுயநினைவு இல்லையாம். இப்ப பணத்துக்கு என்ன பண்றது டா என்று கண்ணீர் நிற்காமல் வழிந்த கண்களை துடைத்தபடி வினவினாள்.
மாமா திங்ஸ் எல்லாம் இங்க தானே இருக்கும். ஏ.டி.எம் கார்டு எடுத்துட்டு போய் பணத்தை எடுத்துட்டு வா அக்கா. என்று ஆறுதலாக கூறிய கபிலனைக் கண்டு விரக்தியாக புன்னகைத்தாள்.
அதோட பின் எனக்கு தெரியாது டா. என்றதும்,
என்னக்கா சொல்ற? உன் புருஷன் அக்கவுண்ட் தானே அது? அதோட பின் தெரியலன்னு சொல்ற! என்று ஆச்சரியம் அடைய,
பேசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. நீ பசங்களை பார்த்துக்க என்று கூறியவள் வீட்டை நோக்கி நடந்தாள்.
மீண்டும் ஆட்டோவில் செல்லும் அளவுக்கு அவளிடம் பணமில்லை.
வீட்டில் பீரோவில், சமையலறை டப்பாக்களில், எங்கெங்கு பணத்தை சில்லறையாக வைத்திருந்தாளோ அனைத்தையும் எடுத்து எண்ணிப் பார்க்க, ஆயிரத்து ஐநூறுக்கு மேல் தேறவில்லை.
உடனடியாக தான் பழகும் வட்டம், தோழிகள், விமலனின் தோழர்கள், சக ஊழியர்கள் என்று தயங்காமல் அழைத்து உதவி கேட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.
கபிலன் இன்னொரு மூவாயிரம் பணத்தை தன் தோழர்களிடம் கடன் வாங்கியதாக கொடுக்க, பக்கத்து வீட்டில் கொடுத்த பணம், தான் கொண்டு வந்தது என்று ஆரம்பத் தொகையை கட்டிவிட்டு ஐ.சி. யூ வாசலுக்கு ஓடினாள்.
எங்க மேடம் போனீங்க? அவருக்கு எக்ஸ்ரே எடுத்துட்டோம். கையில் பிளேட் வைத்து ஆபரேஷன் பண்ணனும். இப்போதைக்கு கட்டு போட்டு இருக்கோம். டாக்டர் உங்களை வந்து பார்க்க சொன்னார் என்று செவிலியர் சொல்ல,
அவரை சந்தித்தால் அவரும் அதையே கூறி அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் பணம் கட்டச் சொல்ல கல்யாணி துவண்டு போனாள்.
வெளியே வந்ததும் கபிலன் அவளை தேற்றும் நோக்குடன், அக்கா கவலைப்படாத. நகை இருக்குல்ல அடகு வச்சு கட்டிட்லாம் என்று தந்தை அக்கா திருமணத்துக்கு போட்ட முப்பது சவரனை மனதில் வைத்து சொல்ல,
பதினஞ்சு சவரனை வீடு கட்டும்போது முன் பணத்துக்காகவும் இன்டீரியர்காகவும் ஏற்கனவே அடகு வச்சாச்சு டா என்று கண்ணீர் சிந்திய தமக்கையை வருத்தமாக நோக்கியவன், பரவாயில்ல கா. மீதியை வைப்போம் என்று கூற, அது பேங்க் லாக்கர்ல இருக்கு டா அதோட விவரம் எல்லாம் உன் மாமாவுக்கு தான் தெரியும் என்றதும் அவனுக்கு எரிச்சல் வந்தது.
வீட்டுப்பத்திரம், நகை எல்லாம் லாக்கரில் இருக்க, அதன் விபரம் தெரியாத அக்காவை நினைக்க எரிச்சல் வந்ததென்றால். எந்த தகவலும் சொல்லாத தன் மாமனை நினைக்க ஆத்திரம் பிறந்தது.
ஆனால் இது அதற்கான நேரமில்லையே! எங்கெங்கோ அலைந்து திரிந்து இருவரும் பணத்தை ஓரளவு ஏற்பாடு செய்ய, நண்பர்களும் சக ஊழியர்களும் உதவிக்கு வந்தனர்.
அடுத்தநாள் அறுவை சிகிச்சை முடிந்து, ஸ்கேன் எடுத்த பின் தான் கண் விழித்தான் விமலன். நடந்தவை புரியவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
தன் மனைவி எப்படி இதையெல்லாம் சமாளித்தாள் என்று அவன் வியக்க, கபிலன் அவனை நலம் விசாரித்த பின் மாமனிடம் கோபத்தில் கொந்தளித்து விட்டான்.
தன் தவறை உணர்ந்து மனைவியிடம் விமலன் மன்னிப்பு கேட்க, கல்யாணியும்,
அடுத்த வருஷம் பசங்க பக்கத்துல உள்ள ஸ்கூலுக்கே போகட்டும்ங்க. அங்கேயும் நல்லா தான் சொல்லித் தராங்க. நான் தான் புத்தி கெட்டு.. என்று வருத்தமாக பேசினாள்.
அவன் தன் டெபிட் கார்டை அவளிடம் கொடுத்து அவளது பிறந்தநாள் தான் அதன் பின் என்று சொன்னதும் அவள் முகம் மலர்ந்தது. வாங்கிய கடனில் சிறிதளவு திருப்பிக் கொடுத்துவிட்டு இனி கணவனுடன் சேர்ந்து செலவு கணக்குகளை தானும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி மேற்கொண்டாள்.
வாவ்…! ஒவ்வொரு கணவனும் மனைவி கிட்டேயும், மனைவி கணவன் கிட்டேயும் வரவு செலவுகளை மட்டுமில்லை, எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கிட்டாத்தான்..
வாழ்க்கை வண்டியை சிரமமில்லாமல் தள்ளிக் கொண்டு போக முடியும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
அருமை கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் குடும்பத்தின் பொருளாதார நிலையை பகிர்ந்து கொண்டு வாழ்வது அத்தியாவசிய நேரங்களில் கை கொடுக்கும் என்பதை உணர்த்தும் சிறுகதை
நன்றி ma🌹
Fact dan
கணவன் மனைவி கங்கு இடையே எந்த ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தா தான் வாழ்க்கை சுமுகமாக போகும் …. கணவன் வருமானத்தை அறிந்து சேமிச்சு செலவு பண்ணினா அந்த குடும்பத்துக்கு ஒருநாளும் பணக்கஷ்டம் இல்ல….இதுல டீச்சர்ஸ் குடும்பம் உதாரணமா சொல்ல லாம் பட்ஜெட் போட்டு பண்ணுவாங்க……நானும் அப்படிதான் இருந்தேன்…திருத்திக் கிட்டேன்…கதை செம சூப்பரா இருந்துச்சு 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💖
Super super👍👍👍 Middle class budget life and husband &wife eppadi supportive’a irukanum nu story super sis😍😍😍