Skip to content
Home » தீரனின் தென்றல்-46

தீரனின் தென்றல்-46

தீரனின் தென்றல் – 46

Thank you for reading this post, don't forget to subscribe!

பொன்னி தான் இப்படி பேசிவிட்டு சென்றதா? என்ற ஆச்சரியத்தில் ரூபாவும் சித்ராவும் அவர் இருந்த அறையை எட்டிப் பார்க்க “ஏய் இங்க வாடி…” என்று மெல்லிய குரலில் பொன்னி ரூபாவை அழைக்க ரூபாவும் சித்ராவும் ஒன்றாக உள்ளே சென்றனர்.

“அடியே… இவகிட்ட இம்புட்டு நேரம் பேசுனது தொண்டை வறண்டு போச்சு கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வா சித்ரா…” என்று அதே மெல்லிய குரலில் பொன்னி சொல்ல சித்ரா கிச்சன் செல்ல ரூபா ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் பொன்னியை..

தண்ணீரை குடித்து விட்டு “ஏன்டி ரூபா.. நான் வந்த அப்பறம் அவ என்னடி பண்றா?” என்றிட

“நீ வந்து என்ன மணிக்கணக்கா ஆவுது.. இன்னும் அப்படியே தான் உட்கார்ந்து இருக்கா அத்த… ஆனாலும் நீ இப்படி பட்டாசா வெடிப்ப னு எதிர்பாக்கலை அத்தை…” என்று இன்னும் வியப்பகலா குரலில் ரூபா சொல்ல

“பின்ன என்ன டி? எம்புட்டு நாள் தான் அவகிட்ட பொறுமையா பேசுறது.. எதுக்காவது மசியுறாளா? நாம கெஞ்சுனா அவ மிஞ்ச தான் செய்வா… அதான் நான் இப்போ மிஞ்சிட்டு வந்திருக்கேன்… இனி அவ நம்ம வசத்துக்கு வருவா…” என்று பொன்னி கூற

“கரெக்ட் அம்மா… ஆமா ரூபா அம்மா சொல்றது தான் சரி…” சித்ரா ஆமோதித்தாள்.

“சரி எதுவும் புரியாமல் வெளியே மூணு ஜீவன்கள் காத்திட்டு இருக்கு… நான் அவங்க என்ன செய்றாங்க னு பாக்குறேன்…” என்று ரூபா மதன் குமார் ஆதீரன் இருந்த ஹாலுக்கு வர

“ரூபா அத்தை ஏன் இவ்வளவு கோபமா பேசுனாங்க… தென்றல் ஏற்கனவே வருத்தமா இருக்கா அத்தை வேற இப்படி பேசிட்டாங்க… கொஞ்சம் அவ கூட இருமா..” என்று அவளுக்காக நினைத்து பேச

“அண்ணே முதல்ல அவளை நினைச்சு இப்படி உருகுறதை விடு…” என்று பொன்னி கோபப்பட்ட காரணத்தை கூறி “இவகிட்ட இப்படி பேசுனா தான் அண்ணே வேலைக்கு ஆகும். வேலு இப்போ இதே சூட்டோட நல்ல நாள் பாருங்க… சிம்பிளா ஒரு கோவில் ல வச்சு இவங்க கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம்… தென்றல் யோசிக்கவோ இல்ல அவளை பேசவோ விட்டோம் வைங்க எல்லாமே சொதப்பிடும்.. நியாபகம் வைச்சுக்கோங்க..” என்று ரூபி சொல்ல

“மச்சான் உன் தங்கச்சிக்கு இம்புட்டு அறிவு எங்க இருந்துடா வந்துச்சு?” என்று நேரங்கெட்ட நேரத்தில் ரூபாவை கலாய்த்து ஆதீரனிடமும் ரூபாவிடமும் முறைப்பை பெற்றுக் கொண்டான் குமார்.

தென்றல் அதன் பின்னர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை… பொன்னி வந்து இரவு சமையலுக்கு தயார் செய்து எடுத்து வந்து குழந்தைகளுக்கு பரிமாறியபடியே படியே “குமாரு… அந்த காலண்டர் எடுப்பா… இன்னைக்கு புதன்கிழமை இனி அடுத்து முகூர்த்தம் என்னைக்கு னு பாரு இன்னும் ஒரு வாரத்துக்கு வளர்பிறை தான் அதுக்குள்ள நல்ல முகூர்த்தம் பாரு…” என்று சொல்ல

பக்கத்தில் இருந்த காலண்டரில் தேதியை புரட்டி பார்த்த குமார் “அம்மா… நாளைன்னைக்கு வெள்ளிக்கிழமை முகூர்த்தம் தான்…” என்று சொல்ல

“இடையில ஒரு நாள் தானே இருக்கு வேலு… சிம்பிளா கல்யாணம் பண்ணனும்னாலும் ஒரு நாலு நாளாவது வேணும்ல எல்லா ஏற்பாடும் பண்ண…” என்று ரூபா சொல்ல

“அப்போ ஞாயித்துக்கிழமை… அன்னைக்கும் முகூர்த்தம் தான் மா…” என்று குமார் சொல்ல

“அப்போ அன்னைக்கே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டா போச்சு… என்ன அண்ணே ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் ரெடி தானே..” ரூபி கேலியாக கேட்ட நேரம் சரியாக அறையை விட்டு வெளியே வந்தாள் தென்றல்.

முகம் கழுவி தலை வாரி இருந்தாள்… “பார்ரா… கல்யாணத்தை பத்தி பேசுனதும் பொண்ணுக்கு கல்யாண கலை வந்திடுச்சே… வா தென்றல் வர ஞாயித்துகிழமை நல்ல நாள் முகூர்த்தம் பிக்ஸ் பண்ணியாச்சு.. அத்தை வழக்கமா போற அதே அம்மன் கோயில்ல தான் அதனால ஐயர் கிட்ட அத்தை பேசிக்கும்…” ரூபி சொல்ல

“தென்றல் உனக்கு புதுசா புடவை வாங்கனும் ல நாளைக்கே போய் எடுத்து ப்ளவுஸ் தைக்க கொடுத்துடுவோம்… அப்போ தான் எல்லாம் சரியா வரும்..” என்று சித்ரா சொல்ல

“எல்லாமே நீங்களா முடிவு பண்ணிடுவீங்களா? கல்யாணத்துக்கு என் சம்மதம் தேவையே இல்லையா என்ன?” கை கட்டி நின்று அமர்த்தலாக தென்றல் கேட்க

“என்னடி திரும்ப ஆரம்பிக்க போறியா?” என்று பொன்னி துவங்க

“அத்தை… அவ சொல்லட்டும்… அவ சம்மதம் இல்லாம நான் எப்படி தென்றல் கழுத்துல தாலி கட்றது?” ஆதீரன் சொல்ல

“சொல்லு தென்றல்… என்ன முடிவு பண்ணிருக்க?” ரூபா கேட்க

“ம்ம்.. பசிக்குது… சாப்பிட்டு என் முடிவை சொல்லட்டுமா?” என்று டைனிங் டேபிள் முன்பு சேரில் தென்றல் அமர

“சரி… சாப்பிடு தென்றல்..” என்று சொல்லி தட்டில் சப்பாத்தி எடுத்து வைத்து பரிமாறினாள் சித்ரா.

“எனக்கு மட்டும் இல்ல சித்ரா..‌ எல்லாருக்கும் சர்வ் பண்ணுங்க அப்படியே நீங்களும் சாப்பிடுங்க…” என்று தென்றல் கூற

“பரவாயில்லை டி நீ சாப்பிடு” என்று ரூபி சொன்னதற்கு

“நான் என் முடிவை சொன்ன அப்பறம் எல்லாத்துக்கும் பசிக்குமா தெரியாது. சோ இப்போவே சாப்பிடுங்க…” என்று அனைவர் வயிற்றிலும் புளியை கரைத்த தென்றல் தன் தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து உண்ண துவங்க அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து சாப்பிட துவங்கினர்.

இரண்டு சப்பாத்தியை விழுங்கி வயிற்றை நிறைத்து கொண்ட தென்றல் கை கழுவி வர

“ஏய் என்னனு சொல்லுடி… சஸ்பென்ஸ் தாங்க முடியலை.‌…” என்று ரூபா கேட்க

“கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க… ஆனா எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு..” என்று சொல்ல

“என்ன கண்டிஷன் தென்றல்.. எதுவா இருந்தாலும் சொல்லு பாஸ் அதை செய்வாரு..” என்று முந்திக் கொண்டு பதில் சொன்னான் மதன்.

அவனை பார்த்து சிரித்த தென்றல, “இதை செய்ய உங்க பாஸ் வேண்டாம் மதன் அண்ணா… கல்யாணத்துக்கு எனக்கு ஓகே தான் ஆனா ஏற்பாடு பண்ணும் போது இரண்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்றிட

“ரெண்டு கல்யாணமா? இன்னொரு ஜோடி யாருடி?” பொன்னி கேட்க

“இதோ உட்காந்திருக்காங்களே… மதன் அண்ணா சித்ரா… இவங்க ரெண்டு பேருக்கும் தான்..‌” கூலாக தென்றல் முடிக்க மதன் சித்ரா இருவருக்கும் ஒரே நேரத்தில் விக்கியது.

“அட… பார்த்து ப்பா.. குமார் அண்ணா தண்ணீ எடுத்து கொடு விக்குது பாரு…” என்று தென்றல் சொல்ல

“தென்றல்… உங்க கல்யாணத்தை பத்தி பேசுனா எங்களுக்கு கல்யாணம் நடத்தி வைக்கிறேனு சொல்ற… வேண்டாம் மா…” மதன் மறுக்க சித்ரா எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“ஏன் வேண்டாம்… இவ்வளவு நாள் நான் உங்க பாஸை ஏத்துக்க எவ்வளவு பேசுனீங்க… இப்போ உங்களை நீங்க லவ் பண்ற பொண்ணை மேரேஜ் பண்ண சொன்னா என்ன கஷ்டம்?” தென்றல் கேட்க

“இல்ல தென்றல்… புரியாம பேசாத…” சித்ரா சொல்ல

“எல்லாமே புரியுது சித்ரா.. நான் உங்க ஆதீ சாரை மறுக்க கூட ஒரு காரணம் இருக்கு… நீங்க மதன் அண்ணாவை மறுக்க என்ன சித்ரா காரணம் சொல்லுங்க… எப்போவோ உங்க வாழ்க்கையில நடந்த ஒரு நாளோட கசப்பை நியாபகம் வைச்சுட்டு உங்களுக்காக காத்திருக்க நல்ல வாழ்க்கையை இழந்துடாதீங்க சித்ரா…” என்று பொறுமையாக கூறிய தென்றல்

“அம்மா… மதனுக்கும் சித்ராக்கும் எங்களுக்கு கல்யாணம் நடக்குற அதே நாள்ல இவங்களுக்கும் கல்யாணம் நடந்தா ஓகே… இல்லாட்டி எந்த ஏற்பாடும் பண்ணாதே… நான் அந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்…” என்று சொல்லிவிட்டு தென்றல் எழுந்து சென்று விட அனைவர் பார்வையும் இப்போது சித்ரா மற்றும் மதன் மீது விழுந்திருந்தது…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-46”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *