Skip to content
Home » தீரனின் தென்றல்-65 (முடிவுற்றது)

தீரனின் தென்றல்-65 (முடிவுற்றது)

தீரனின் தென்றல் – 65

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

ஒருபுறம் மலர்க்கரங்களை கழுத்தில் மாலையாக கட்டிக் கொண்டு உறங்கும் மகள் மறுபுறம் மலர் குவியலாக மனைவி… உறக்கம் வரவில்லை தீரனுக்கு.. “க்க்கும்…” என்று தொண்டையை செரும

“என்ன தீரா தூங்கலையா?” எதார்த்தமாக தென்றல் கேட்க

“தூங்க விடமாட்டேங்குதே மலரும் நினைவுகள் தென்னுக்குட்டி…” என்று ஒருமாதிரி குரலில் ஆதீரன் சொல்ல அவனை திரும்பி முறைத்தாள் தென்றல்.

“இவ்வளவு நேரம் உன் பொண்ணு துருவி துருவி கேள்வி கேட்டா… இப்போ நீயா? பேசாம தூங்கு தீரா…” தென்றல் மழுப்ப பார்க்க

“ஏய் தென்னு இந்த வீட்ல உள்ள எல்லா மெமரீசும் ஷேர் பண்ண இந்த ரூமோட மெமரீஸ்… நமக்கு மட்டுமே பர்சனலான மெமரீ… அதை நான் ஷேர் பண்ணக்கூடாதா?” அப்பாவி போல கேட்க

“எதே? தீரா உன் குரலே சரியில்லை அமைதியா இரு” வெட்கத்தை மறைக்க கோபம் போல பேச

“ச்ச்… தென்னுக்குட்டி… உன்கிட்ட ஒன்னு கேட்கனும் டி…” அவன் கெஞ்சலாக கேட்க

“ம்ம்… இன்னும் என்ன தெரியனும் உனக்கு?

“ஏய் தென்னு… அன்னைக்கு சொன்னல்ல… தாலி கட்டும் போதே கோபம் குறைஞ்சிடுச்சு னு சொன்ன… ஆனா எப்படி என்ன எதுவுமே சொல்லலையே?” ஒருமாதிரி குரலில் இழுவையாக கேட்க லேசான வெட்கம் பூசிக் கொண்டாள் தென்றல்.

“தீரா.. உண்மையை சொல்லனும்னா உன் மேல எனக்கு வெறுப்புனு எதுவுமே இல்லை… உன்னை எப்படி தீரா நான் வெறுக்க முடியும்?” அவன் விழிகளை பார்த்து கேட்க தன் தோளோடு இறுக்கிக் கொண்டான் ஆதீரன்.

“அன்னைக்கு அப்பாவை நீ அவமதிச்சு பேசின கோபம் இருந்தது… அதோட அதுக்கும் மேல எங்க அப்பாவை பழிவாங்க நீ என் காதலை பயன்படுத்திக்கிட்டியோ னு தோணுச்சு… ஏன்னா நான் தானே உன்கிட்ட காதலை சொன்னேன். நீ மலைக்கோவில்ல வைச்சு என்னை பிடிக்கும் னு சொன்ன… வேற எதுவுமே சொல்லலையே… இதெல்லாம் நினைச்சு ரொம்ப குழம்பிட்டேன். அதான் ஒருவேளை நாம சேர்ந்திருந்ததை வைச்சு நீ எங்கப்பாவை இன்னும் அவமானப் படுத்துவனு பயந்துதான் ஊரைவிட்டு போகனும் னு சொன்னேன்…

அப்பறம் நான் கன்சீவா இருக்கும் போது அப்பா என்னை சமாதானப் படுத்தி உன்னை பார்க்க வரேன்னு கிளம்புனாரு… அப்பா எங்களை விட்டு மொத்தமா போய்ட்டாரு‌. அதுக்கு அவர் என்னை நினைச்சு வருத்தப்பட்டது தான் காரணம் னு நினைச்சு குற்றவுணர்ச்சி… அடுத்து அத்தை எங்களை கண்டுபிடிச்சு பார்க்க வந்தாங்க..

அத்தை கூட அப்படியே அவங்களோட சேர்ந்து உன்கிட்டயே வரனும் னு தான் நினைச்சேன். ஆனா நீ என்னை காதலிக்கலை… என்னதான் நீ என்னை காதலிக்கலைன்னாலும் அத்தை சொல்றதுக்காகவும் என் வயித்துல இருக்க குழந்தைக்காகவும் நீ என்னை ஏத்துப்ப… ஆனா… எனக்கு அதுல விருப்பம் இல்லை தீரா அதான் அத்தைகூட வரலை….

அதுக்கப்புறம் அத்தை உடம்பு சரியில்லாம இருந்தப்போ எல்லாத்தையும் மீறி எனக்கு ஊருக்கு வரனும் னு தான் தோணுச்சு… நானும் கிளம்ப தயாரானப்போ எனக்கு பெய்ன் வந்திடுச்சு டாக்டர்கிட்ட போனப்போ ட்ராவல் பண்ணக்கூடாது னு சொல்லிட்டாங்க… அப்பறம் அத்தை இறந்தது குமார் அண்ணா வந்து சொன்ன அப்பறமா தான் தெரியும்… அதுக்கும் நான் தான் காரணம் னு அழுதப்போ தான் வலி வந்து புவிக்குட்டி பிறந்தா…

அப்படியே அத்தாச்சி ஜாடைனு அம்மா சொல்லிட்டே இருக்கும் அந்த நியாபகம் தான் அபூர்வா னு பெயர் வைச்சேன்…” என்று தென்றல் சொல்லிக் கொண்டு இருக்க தீரனின் கண்ணீர் தென்றல் உச்சந்தலையில் விழ விசுக்கென்று நிமிர்ந்தாள் தென்றல்.

“தீரா அழறியா? என்ன தீரா இது? போ..‌ இதுக்கு தானே நான் சொல்ல மாட்டேன் னு சொன்னேன்… பாரு சொல்லு சொல்லு னு கேட்டு இப்போ அழற… போ தீரா நான் இனி உன்கிட்ட பேசமாட்டேன்.” என்று கோபம் கொள்ள

“ஏய் ஏய் சாரி தென்னு சரி அழல நீ மேல சொல்லு…” என்றபடி கண்ணீரை துடைத்து கொண்டான் ஆதீரன்.

அப்போதும் அவள் கோபம் குறையவில்லை என்பது போல பார்க்க “சரி தென்னு நீ அழலை… ஆமா நீ யூஜி மட்டும் தான முடிச்சிருந்த இப்போ பிஜி படிக்க அதுவும் பாப்பாவை வைச்சுட்டு ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும்ல?” என்று கேள்வி எழுப்ப

“தனியா இருந்திருந்தா கண்டிப்பா கஷ்டமா இருந்திருக்கும் தீரா… அம்மா பாப்பாவை பார்த்துட்டே இந்த அப்பளம் மசலாப்பொடி எல்லாம் வீட்ல தயார் பண்ணி விப்பாங்க அத்தோட ரூபி குமார் அண்ணா மட்டும் இல்லைனா பாப்பாவை என்னால இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது…

என்னதான் அம்மா அண்ணன் எல்லாம் ஊட்டமா சாப்பாடு கொடுத்தாலும் மனசுல இருந்த கவலைகள் எனக்கு சரியா பால்கூட சுரக்கலை தீரா..‌ நானே பவுடர் பால் கலந்து கொடுக்க நினைப்பேன். ஆனா ரூபி தான் அப்பப்போ அபூர்வாக்கும் பால் கொடுப்பா.. அதுமட்டும் இல்ல உனக்கு தெரியுமே படிச்சாலும் எனக்கு சரியா வேலை அமையவே இல்லை..

அப்போ எல்லாம் குமார் அண்ணா தான் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தாரு.. இந்த ரூபி சொல்லவே வேண்டாம் உனக்கே தெரியுமே அவளோட சேவிங்க்ஸ்… சக்திக்கு என்னென்ன செய்றாளோ அதே மாதிரி அபூர்வா பெயர்லயும் எல்லா சேமிப்பும் பண்ணி வைச்சிடுவா..” என்று சொல்லி விட்டு லேசாக சிரிக்க ஆதீரனும் வாஞ்சையாக அவளின் தலையை கோதியபடி சிரிப்பில் கலந்து கொண்டான்.

“ம்ம் தென்னு… என் மேல இருந்த கோபம் எப்போ போச்சு?” காரியத்தில் கண்ணாக ஆதீரன் கேட்க

“ச்ச்… உன்னை பார்க்கும் முன்னவே அம்மா அடிக்கடி அபூர்வாவுக்கு அப்பா வேணாமா அதுக்காகவாவது யோசி னு சொல்லிட்டே இருப்பாங்க.. நானா நினைச்சுப்பேன் ஆதீரனை நான் ஏத்துக்கிட்டா அபூர்வாக்கு அப்பா கிடைப்பாரு.. ஆனா என் தீரா எப்போவும் கிடைக்கப் போறதில்லை னு..

அப்பறம் நான் உன்னை நேர்ல பார்ப்பேன் னு நினைக்கவே இல்ல..‌ திடீர்னு உன்னை பார்த்து எதுவுமே புரியல அதோட பாப்பா நீதான் வேணும் னு கேட்டதும் அவளும் உன்னோட வந்தா எனக்குனு யாரும் இல்லை னு நினைச்சு தான் அப்படி வீட்டை விட்டு போக நினைச்சேன்.

அப்பறம் நம்ம கல்யாணம்… அப்பா அத்தை அம்மா எல்லாரும் என்னால கஷ்டப் பட்டிருக்காங்க னு குற்றவுணர்ச்சி ல தான் கல்யாணம் வேணாம்னு தவிர்த்தேன். ஆனா அம்மா அதை பேசி தெளிவு பண்ணினதும் ஏன் பழசுலயே மனசை சுழல விடனும்… புதுசா ஒரு வாழ்க்கை தொடங்கலாம்.. இதுக்கு முன்னால நீ என்னை காதலிச்சியோ இல்லையோ ஆனா, இப்போ உன் கண்ல உண்மையான காதலை பார்த்திருக்கிறேன். அதுவே என் கோபத்தை குறைச்சது.

அப்பறம் என்னோட நீ இருந்த ஒவ்வொரு நாளும் உன்னோட காதலை உணர்த்திட்டே இருந்த… ஆனாலும் நீ என்னை ஆரம்பத்துல இருந்து காதலிக்கல உனக்கு என்னை பிடிக்காம பாப்பாவுக்காக தான் என்னை ஏத்துக்கிட்ட னு நினைச்சு வருத்தப்படுவேன்.

ஆனா… நாம பார்ட்டிக்கு போனோம்ல.. தர்மலிங்கம் சார் அப்போ சொன்னாரே நீயும் சின்ன வயசுல இருந்து என்னை காதலிச்சனு சொன்னதா… அப்போ உன் முகத்துல வெட்கம் வந்துட்டு போச்சு.. அந்த வெட்கம் தான் எனக்கு எல்லாத்தையும் முழுசா புரிய வைச்சது…

நம்ம ஊருக்கு வந்து உன்கிட்ட என் மனசை சொல்லி புரிய வைக்க நினைச்சேன். குமார் அண்ணாகிட்ட அந்த ஆக்ஸிடென்ட்க்கு ரெண்டு நாள் முன்னாடி தான் ஊருக்கு போகனும் னு பேசுனேன் ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு..‌” என்று தென்றல் முடிக்க

ஆச்சரியமாக அவளை பார்த்திருந்த தீரன் தன் நெஞ்சோடு அவளை அணைத்துக் கொண்டான்.

அதன் பின்னர் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டே தென்றல் அவன் நெஞ்சில் அப்படியே துயில் கொள்ள ஆதீரன் உறங்கும் தென்றல் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவன் விடியும் சமயம் தான் உறங்கி இருந்தான்.

காலை விடிந்து பல மணி நேரங்கள் ஆகியும் எழாத தந்தையை தன் பிஞ்சு கரங்களால் நெஞ்சில் அடித்து எழுப்பிக் கொண்டு இருந்தாள் அபூர்வா.

“அப்பா… எந்திரி நான் குளுச்சு சாப்புத்தேன் இன்னும் நீ எழவே இல்ல பேட் டாடி எந்திரி டாடி..” என்று எழுப்ப சக்தியும் உடன் சேர்ந்து “ஜிந்தாக்தா ஜிந்தா” என்று தோள்பட்டையில் தட்டி விளையாடி கொண்டு இருக்க

“சக்தி குட்டி.. கொஞ்சம் இறக்கி மசாஜ் பண்ணுடா…” என்று கோரிக்கை வைத்துவிட்டு திரும்பி வாகாக படுத்து கொள்ள

“என்னது மசாஜா? டேய் பூஜை இருக்கு அது இதுன்னு சொல்லி காலையில நாலு மணிக்கே என்னையும் மதனையும் அடிச்சு எழுப்பி விட்டாங்க.. எட்டு மணி ஆகியும் அசையாம படுத்திருக்க… எழுந்திரு டா” என்று தட்டி எழுப்பினான் குமார்.

அவன் திட்டி தீர்க்க இவனோ பித்துப் பிடித்தது போல சிரித்துக் கொண்டே எழுந்தான் ஆதீரன். போதாக்குறைக்கு கண்கள் எல்லாம் சிவந்து இரவெல்லாம் அவன் உறங்கவில்லை என்று காட்டிக் கொடுக்க

“டேய் கண்ணெல்லாம் என்னடா சிவந்து இருக்கு? நீயும் மந்திரிச்சு விட்ட மாதிரி சிரிச்சிட்டு இருக்க? என்னடா ஆச்சு? மச்சான் எனி சீக்ரெட்ஸ்… என்கிட்ட இருந்து நீ எதையும் மறைக்கிறியா?” என்று கேள்வியை அடுக்கிக் கொண்டே போக சிரிப்பு மறைய குமாரை முறைத்த ஆதீரன்

“அதெல்லாம் உங்கிட்ட சொல்றதுக்கு இல்ல… நீ நகரு” என்று சொல்லி விட்டு எழப்போக

“அதெல்லாம் முடியாது… என்ன சீக்ரெட் சொல்லித்தான் ஆகனும் இல்ல விடமாட்டேன்.. வேணும்னா குழந்தைங்களை வெளியே அனுப்பி விடுறேன்.” என்று பிடிவாதமாக கூற இடுப்பில் கை ஊன்றி காற்றை உள்ளிழுத்து ஊதிய ஆதீரன்

“நீ இப்படி சொன்னா கேட்க மாட்ட… இரு..‌ ரூபி மா இங்க பாரு உன் புருஷன் என்னை குளிக்க விடாம தொந்தரவு பண்ணிட்டே இருக்கான்.” என்று சத்தமாக சொல்ல

“அடேய்… யார்க்கிட்ட டா கோர்த்து விடுற? ரூபி மா நான் படையலுக்கு இலை அறுக்க கொல்லைப் பக்கம் இருக்கேன் மா..” என்று கத்திவிட்டு பின்பக்கம் ஓடினான்.

அவனை பார்த்து சிரித்த ஆதீரன் குளித்து வர படையல் போட எல்லாம் தயாராக இருந்தது.. நடுக்கூடத்தில் ரங்கநாதன் அன்னபூரணியின் புகைப்படங்கள் வைத்து மலர் மாலை சூட்டி இருக்க தென்றலும் ஆதீரனும் முதலில் வந்து நின்று தென்றல் விளக்கேற்ற இருவரும் ஜோடியாக விழுந்து வணங்க அபூர்வாவும் சேர்ந்து கொண்டாள்.

நல்லபடியாக படையல் போட்டு அருகில் இருந்த கோவிலுக்கு சென்றவர்கள் “குமாரு… எல்லாரையும் பத்திரமா கூட்டிட்டு வீட்டுக்கு போய்டு எனக்கும் தென்றலுக்கும் ஒரு வேலை இருக்கு” ஆதீரன் என்று சொல்ல அவனை ஏற இறங்க பார்த்து வைத்தனர் குமாரும் தென்றலும்…

“அப்பா நானும் வரேன்” என்று வந்த அபூர்வாவை “பூர்வி மா இப்போ நீங்க மாமா கூட வீட்டுக்கு போங்க உங்களை சாப்பிட வைச்சு அப்பறமா உன்னையும் சக்தியையும் உன் மாமாங்களும் அத்தைகளும் மாந்தோப்பு வயலுனு கூட்டிட்டு போய் சுத்தி காட்டுவாங்க சக்தியும் நீயும் ஜாலியா விளையாடலாம்…” என்று கொஞ்சலாக சொல்ல

“அப்பா நான் உன் கூட வரேன்” அடம் பிடிக்க

“பூர்வி மா… அது அம்மாக்கும் எனக்கும் ஒரு வேண்டுதல் இருக்கு… குழந்தைங்க அங்கெல்லாம் வரக்கூடாது.. நீங்க போனா அப்பறம் அப்பா உன்னை கூட்டிட்டு வெளியே போறேன்…” என்று சொல்ல சரி என்று கிளம்பி சென்றாள் அபூர்வா.

“தீரா.. இன்னும் நீ சரியா குணமாகலை எங்க கூட்டிட்டு போற?” என்று கேட்க கொண்டே அவனோடு சேர்ந்து நடக்க

“ஏன் தென்னு இதெல்லாம் ஒரு தூரமா அதான் கூட நீ இருக்கல்ல” என்று சற்று தூரம் நடந்தவன் தனக்கு ரங்கநாதன் வாங்கி தந்தை பைக்கை கொண்டு வந்து அருகில் நிறுத்திய இன்னொரு நண்பனுக்கு நன்றி நவில்ந்து அவனை அனுப்பி வைத்தான்.

“ஹேய் தீரா… இந்த பைக்..‌ அப்பா.. அப்பா வாங்கி தந்தது தானே” என்று ஆசையாக வருடினாள் தென்றல்.

“ம்ம் ஏறி உட்காரு தென்னு…” என்று அவளை பின்னால் அமர்த்தி மெதுவாக வண்டியை இயக்கியவன் கொண்டு நிறுத்தியது தன் காதலை தனக்கே உணர்த்திய அந்த மலைக்கோவில் முன்னிலையில்…

“தீரா..” என்று தென்றல் விழி விரிக்க

“ம்ம் வா..‌” என்று அவளோடு சேர்ந்து கை கோர்த்த படி மேலே அழைத்துச் சென்றான். அங்கிருந்த கோவிலில் தென்றல் விளக்கேற்றி சாமி கும்பிட்டு கண்ணை திறந்து பார்க்க தீரனை காணவில்லை…

“தீரா தீரா… தீரா எங்கே போன? தீரா தனியா எங்கடா போன?” என்று கத்தி அழைத்தாள் தென்றல். கோவிலை சுற்றி வர அதன் பின்புறம் நின்றிருந்தான் ஆதீரன்.

“லூசு லூசு… இப்படி தான் கண்ணை மூடிட்டு இருக்கும் போது காணாம போவியா? இன்னும் உனக்கு உடம்பு கூட சரியாகல” என்று அவனை கடிந்து கொண்டபடியே அருகில் வர மந்தகாச புன்னகை ஒன்றை சிந்திய ஆதீரன்

“தென்னுக்குட்டி… உன்கிட்ட ஒன்னு சொல்லனும்…” என்றிட

“ம்கூம் அதுக்கு தான் என்னை இங்க கடத்திட்டு வந்தியா? என்ன தீரா?” அவள் சாதாரணமாக கேட்க

ஒரு கால் முட்டியை தரையில் ஊன்றி இன்னொரு காலை மடக்கி அமர்ந்த ஆதீரன் அங்கு கிடைத்த பூக்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து பூங்கொத்து போல நீட்டினான் பூவையிடம்..‌

“தீரா… ஆச்சரியமாக அழைக்க அவனோ வாங்கிக்கோ” என்று கண்ஜாடை செய்து அவள் வாங்கியதும் எழுந்தவன் அவள் விழியோடு தன் விழி கலக்க உதிர்த்திருந்தான் அந்த வார்த்தைகளை…

“தென்னுக்குட்டி… இதை நான் இதுவரை நேர்ல உன்கிட்ட சொன்னதில்லை தான் ஆனா நிமிஷத்துக்கு நூறுமுறை எனக்குள்ள உன்கிட்ட சொல்லிட்டே இருக்கேன் டி…

தென்னுக்குட்டி ஐ லவ் யூ…” அவன் உரைத்திருக்க உறைந்து போனாள் தென்றல்.

எத்தனை ஆண்டுகள் இவள் எதிர் பார்த்த வார்த்தை இது… இதை முதலிலேயே கூறி இருந்தால் தேவையில்லாத மனக்கசப்புகள் நீங்கி போயிருக்குமே… இப்போது அந்த வார்த்தையே தேவையில்லை வாழ்க்கை முழுக்க காதலை வாழ்ந்து காட்டுவோம் என்று நினைத்த போது அவளே எதிர்பாராமல் அவள் எதிர் பார்த்த வார்த்தையை உதிர்த்து விட்டான் இந்த தென்றலின் தீரன்…

“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா?” என்று இம்முறை ஆதீரன் பாட்டை துவங்க

“என்ன தீரா? அன்னைக்கு நான் பாடினப்போ படம் பார்த்தியா க்ளைமாக்ஸ் என்னனு எல்லாம் கேட்ட? இப்போ நீ பாடுற..” தென்றல் கேட்க

“ம்ம்.. பாட்டு நம்ம வாழ்க்கை சூழலுக்கு ஏத்தமாதிரி இருந்தா போதும் படமோ க்ளைமாக்ஸோ தேவையில்லை னு என் தேவதை சொல்லிருக்கா..” என்று ஆட்காட்டி விரலை கொண்டு அவள் மூக்கை உரசிட சிணுங்கிய தென்றல் அவன் கையை கட்டி கொண்டு தோள் மீது சாய்ந்து கொள்ள பத்திரமாக இறங்கி வந்தனர் இருவரும்..

பைக்கில் ஏறி அமர்ந்தவள் அன்று பாட ஆதீரன் தடை விதித்த பாடல்களையும் சேர்த்து பாட அதை அனுபவித்த படியே சற்றே வேகம் பிடிக்க வண்டியை ஓட்டினான் ஆதீரன்.

இந்த பயணம் போல இவர்களின் வாழ்க்கை பயணமும் மிதமிஞ்சிய காதலோடு வேகத்தடைகளாக செல்ல சண்டைகளோடு என்று கடக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்…

  • முற்றும்…
    இத்தனை நாட்கள் தீரனின் தென்றல் கதைக்கு ஆதரவு தந்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே…

என்னோட சேர்ந்து கதையோடு பயணித்த அன்பர்கள் உங்க கருத்துகளை சொல்லிட்டு போங்க

  • நன்றியுடன் DP ✍️

4 thoughts on “தீரனின் தென்றல்-65 (முடிவுற்றது)”

  1. Priyarajan

    👌👌👌👌👌👌👌 happy ending….. Sila miss understanding tha elllarum kashta padara maathiri ahidichi……spruuuuuu..,💕💕💕💕😊😊😊😊💕💕💕💕💕💕💕💕

  2. Kalidevi

    Superb ending nice story love family understanding Venum husband and wife kulla illana intha mathiri sila problems varum kandipa . Nice nice 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *