துஷ்யந்தா-11
பிரகதி தன் போனில் உள்ள விலாசத்துக்கு கார் ஓட்டுனர் அழைத்து செல்வானா என்று தயக்கத்துடன் “இந்த அட்ரஸுக்கு போங்க” என்று உத்தரவிட்டாள்.
மேலே ‘இன்பா’ என்ற பெயரை பார்த்து திரும்பிவிட்ட டிரைவரை கண்டு, இவன் போக மாட்டான். அந்த விதுரன் சொல்லி வச்சிருப்பான். சே… என்று சலித்து கொண்டாள்.
எதற்கும் அடரஸ் வாசித்து கூறுவோமா என்று “நான் வேண்டும்னா அட்ரஸ் வாசிக்கவா?” என்று வார்த்தையில் அழுத்தி கேட்டாள்.
“தேவையில்லை மேம். நான் அங்க போயிருக்கேன். விதுரன் சார் ஒரு முறை அங்க போயிருக்கார். நினைவுயிருக்கு சரியா போயிடுவேன்” என்று சாலையில் கவனம் செலுத்தினான்.
விதுரனா… எப்போ என்று கேட்க வந்த ஆர்வத்தை கட்டுப்படுத்தி கொண்டாள்.
திருமணம் முடித்து நம்மிடம் விதுரனை பற்றி கேட்கின்றாளே என்று இழிவாக எண்ணிட கூடாதே.
“மேடம் இன்பா என்பவரோட வீடு இது தான்.” என்று கார் கதவை திறந்து விட்டு ஓட்டுனர் பவ்யமாய் நின்றான்.
பிரகதிக்கு இந்த மாதிரி முதலாளி தொழிலாளி என்பதில் எல்லாம் அசௌவுகரியம் தான். சற்று அதிக இடைவெளி காண்பதாக தோன்றும்.
பணம் கொடுக்கறேன் வேலை பார்க்கிறான் என்பது இல்லாமல் சின்னதாய் அரட்டை அடித்து பேசி வரும் தோழமையான நட்பை தான் அவள் வீட்டில் தந்தை இருக்கும் பொழுது கவனித்திருக்கின்றாள்.
காலிங் பெல் அடிக்கும் பொழுது அஞ்சலி வந்து விட்டாள். முகத்தை பார்க்காமல் காரை மட்டும் வைத்து தீபிகா என்று முடிவெடுத்து “மறுபடியும் எதுக்கு வந்திங்க. சும்மா அடுத்தவளோட புருஷனை நலம் விசாரிக்கறதை விடுங்களேன்.” என்று கத்தி வந்து நின்றாள்.
வேறு யாரோ என்றதும் முடித்து வைத்த முந்தானையை எடுத்து விட்டு சரி செய்தாள்.
“சாரி.. யார் நீங்க?” என்று கேட்டாள்.
“நான் இன்பாவோட பிரெண்ட். அவர் இருக்காரா? ஆன்டி இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“அவர் வெளியே போயிருக்கார். அத்தை பெரிய அண்ணி வீட்ல இருக்காங்க. உள்ளவாங்க.” என்று வரவேற்றாள்.
பிரகதிக்கு அப்பாடா என்றானது. வரவேற்கின்றாளே… ஆரம்ப அழைப்பு ஏதோ சண்டைக்கு வந்த கோழியாக அல்லவா சிலிர்த்து நின்றாள் என்ற சிரிப்பு வந்தாலும் சூழ்நிலை சிரிக்கும் நிலையில் இல்லாததால் புன்னகை கூட அரும்பவில்லை.
“நீங்க யார் நான் பார்த்தது இல்லையே…?” என்றதும் அஞ்சலி புதிதாய் முறைக்க ஆரம்பிக்க, “சாரி சாரி நான் இன்பாவோட இரண்டு சிஸ்டரையும் பார்த்துயிருக்கேன்.” என்று பிரகதி கேட்டாள்.
“நான் இன்பாவோட ஓய்ப்.” என்று கூறி இருக்கையை காட்டினாள்.
பிரகதி “யா” என்று அமர்ந்தாள்.
அஞ்சலியோ “ஒரு நிமிஷம்” என்று கிச்சன் பக்கம் சென்றிட, இரண்டு நிமிடத்தில் காபி கப்போடு வந்தாள்.
“அய்யோ… காபியா?” என்று பதறினாள். பிரகதிக்கு இப்படி இடைப்பட்ட நேரத்தில் குடிக்கும் வழக்கம் எல்லாமில்லை. அதனால் மறுக்க, அஞ்சலியோ இடைப்பட்ட வர்க்கத்தின் வீட்டில் தீபிகா குடிக்காது தவிர்த்து சென்றது நினைவு வர இவளும் அப்படி தான் என்று எண்ணி அதனை முகத்திலும் காட்டினாள்.
அதை உணராதவளா பிரகதி… “இல்லை… இப்ப தான் ஜூஸ் குடிச்சேன். அதுக்குள்ள காபி என்றால் அதான். பரவாயில்லை கொடுங்க” என்று வாங்கவும் அஞ்சலி நீட்டினாள்.
அஞ்சலிக்கு யாரென தெரியாது என்ன பேச? இன்பாவை தேடி வரும் இரண்டாவது பெண். முதலில் வந்தவள் காதலி. இவள் யாரோ…? என்ற அச்சமே பரவியது.
“இன்பா எப்படியிருக்கான். அவனிடம் பேச வந்தேன். பட் வேலைக்கு போயிருப்பான்னு நினைவே வரலை. எனக்கிருக்கற குழப்பங்களுக்கு அப்படியே வந்துட்டேன்.” என்று பேசினாள்.
“அவர் வேலைக்கு போகலை. வேலை தேடி இன்டர்வியு போயிருக்கார். ஒரு மாசம் ஜாப் போகாததில் வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. நடுவுல அவரோட பி.எப் பணத்துல வீட்டை நிர்வாகம் பண்ணிட்டோம். அவசரமா திருமணம் என்றதில் பணம் பாதி கரைஞ்சிடுச்சு. சில இடத்துல வேலை கிடைச்சது. ஆனா அவருக்கு பழைய அலுவலகம் மாதிரி எதுவும் செட் ஆகலை.” என்று கூறவும் ஓரளவு பிரகதியால் கணிக்க முடிந்தது.
விதுரன் இந்த தீபிகாவை இன்பாவை பிரித்திட, அந்த கவலையில் ஒரு மாதம் பணிக்கு செல்லாமல் பணியை இழந்து, அதன் பின் அஞ்சலியான இவளை ஆன்டியின் தொந்தரவால் இன்பா மணந்திருக்க வேண்டும். பின்னர் இப்படி வேலைக்கு அல்லல்படுகின்றானென’ யூகித்தாள்.
காபி பருகிய பிரகதி நொடியில் குமட்டலாக இருந்தது. “சாரி காபில சர்ககரை கம்மியா இருக்குனு நினைக்கேன்.” என்று பிரகதி வீட்டுக்கு வந்து இப்படி நடந்துக் கொண்டோமே சற்று கசப்பு சுவையை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று மனதிலே தன்னை திட்டிக் கொண்டாள்.
“சாரி… நான் முன்னாடியே சொல்லியிருக்கணும். சர்க்கரை வீட்ல குறைவா தான் இருந்தது. அத்தை வர்றப்ப வாங்கிட்டு வர்றதா தான் சொன்னாங்க. இப்ப இருக்கறதுல கலந்தேன். இனிப்பு பத்தலை போல… கஷ்டப்பட்டு குடிக்க வேண்டாம்.” என்று வாங்க முயன்றாள்.
“இட்ஸ் ஓகே. காபி கசந்தா தானே சுவைக்கும். பரவாயில்லை. இனி குடிச்சிடுவேன்” என்று பருகினாள்.
அஞ்சலியோ கையை பிசைந்து தங்கள் நிலையை அறிந்த தயக்கத்தில் இருந்தாள்.
பிரகதியோ வீட்டை மேற்பார்வையிட்டாள். பார்த்ததும் சொல்லிவிடலாம்.. முன்பு இன்பா இருந்த வீட்டை விட தற்போது மோசமான சூழ்நிலை தானென்று.
“இன்பாவை கடைசியா பார்த்து ஒருவருஷம் இருக்கும். இப்ப தான் இந்தியா வந்தேன். வந்ததும் இன்பாவை பார்த்து அவனோட நலனை தெரிந்துக்க தான். ஆக்சுவலி தீபிகாவோட இன்பாவை மேரேஜ் பண்ணி வச்சிட்டு போனது.” என்று தயங்கினாள்.
எத்தனை தயக்கம் எல்லாம் விதுரனால்… என்ற கோபம் மனதின் அடியில் தேங்கியது.
“ஓ… பிரகதியா… உங்களை பற்றி ஒரு தடவை பேசியிருக்கோம். அவர் பேசியதில்லை… அத்தை தான் அந்த விதுரன் அரக்கனாட்டம் அந்த பிள்ளையை தேடறான். அந்த பிள்ளை இன்பாவோட நம்பருக்கு போனோ மெஸேஜோ அனுப்பிட்டா அது வாழ்க்கை கருகிடுவான்னு சொல்வாங்க…
உங்க பிரெண்ட் இன்பா இன்னமும் என்னிடம் சமமா உட்கார்ந்து பேசற அளவுக்கு கூட எங்களோட பழக்கம் இல்லை. காபி மாதிரி கசப்பு என்றாலும் இதான் உண்மை.” என்று கூறவும் அஞ்சலி கண்கள் நீரை வடித்தது.
“சாரி… தினம் தினம் ஒரேயறையில் முகத்தை கூட பார்க்காம கடனேனு வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னயிருந்தாலும் ஒரு வார்த்தை சக மனுஷியா பார்த்து பேசினா கூட என் மனழுத்தம் குறைஞ்சிருக்கும்.
அவர் பேசாததே… சட்டுனு அழுகை வருது. இதே நீங்க அவரோட ஆண் தோழுனா இருந்தா இப்படி அழுது காட்டியிருக்க மாட்டேன். பெண்ணா இருக்கவும் கட்டுப்படுத்த கட்டுப்பபடுத்த அழுகை உடைப்பெடுக்குது. ஒரு நிமிஷம் வந்திடறேன்.” என்று கிச்சனில் கண்ணீரை மறைக்க முகம் அலம்பினாள்.
பிரகதிக்கு சொல்லயியலாத அளவிற்கு கவலை தாக்கியது. அதே நேரம் வாசலில் நிழலாட இன்பா சோர்ந்து வந்தான்.
“இன்பா…?” என்றதும் நிமிர்ந்தவன் மகிழ்ச்சி கொண்டான். அடுத்த நொடியே பயந்தவனாக மாறினான். இன்பா முதலில் அஞ்சலி தான் அமர்ந்திருக்கின்றாளென முகம் கூட பார்க்காமல் அறைக்குள் செல்ல இருந்தான்.
“பிரகதி… நீ எப்படி இங்க… எப்ப இந்தியா வந்த…? நல்லாயிருக்கியா…?” என்றான்.
“இப்ப தான் இரண்டு நாள் முன்ன. நீ எப்படியிருக்க இருக்க டா.? என்னடா இது எல்லாம் மாறியிருக்கு. நீயும் தீபிகாவும் சேர்ந்து வாழ்விங்கனு பார்த்தா.. அவ அந்த சசியோடும்… நீ இவங்களை மேரேஜ் பண்ணிருக்க? வீடு மாற்றி… வேலையிழந்து… அந்த விதுரனாலயா?” என்று கேட்டாள்.
“நீ ஏன் இங்க வந்த பிரகதி. அந்த விதுரன் கண்ணுல மாட்டினா உன்னை சும்மா விடமாட்டான். உன்னை தேடி என்னை டார்ச்சர் பண்ணிட்டாங்க. ப்ளிஸ் உடனே வெளிநாடு எங்கயாவது போயிடு.” என்றான்.
“எங்க போக… என்னை விடு நான் பார்த்துப்பேன். என்னடா நடந்தது. தலையும் புரியலை வாலும் புரியலை. சொல்லு டா” என்றாள்.
“எல்லாம் மாற்றிட்டான் பிரகதி. திருமணம் நடந்த இடத்தில அந்த தர்மா திரும்ப கூட்டிட்டு போய் நிறுத்திட்டான்.
அங்க என்னை அடிச்சி தீபிகாவை கஷ்டப்படுத்தி அவ கையால நான் அணிவித்த தாலியை கழட்டி, அந்த சசியோட திருமணத்தை நடத்திட்டான்.
என்னை ஒரு மாதம் அடைச்சி வச்சி ட்ரீட்மெண்ட் கொடுத்து இருந்தான். அடிக்கடி உன்னை கேட்பான். எனக்கு நீ ஆஸ்திரேலியா போனது தெரியும். ஆனா எங்க ஏதுனு தெரியாது. ஒரு விஷயம் தெரியும் என்றதற்காக உன்னை மாட்டி விட மனசில்லை. நிச்சயம் ஆஸ்திரேலியானா விதுரன் கண்டுபிடிச்சிடுவான். அவன் கண்ணுக்கு எதுவும் தப்பாது. அதான் எதுவும் தெரியாதுனு சொல்லிட்டேன்…
வீட்டுக்கு வந்தப்ப தான் தீபிகாவுக்கு தெரிந்த இடத்துல நீ இருக்க கூடாதுனு வீட்டை காலி பண்ண சொல்லிட்டான். இங்க வந்துட்டேன்… நடுவுல கூட ஒரு முறை உன்னை தேடி வந்தான். அப்ப தான் நீ மெஸேஜ் பண்ணியோ கால் பண்ணியோ மாட்டிக்கலைனு நிம்மதியா இருந்தேன்.” என்றான்.
“என் போனை அங்க ஒரு சின்ன பையன் ரீசெட் பண்ணிட்டான். நம்பர் எல்லாம் போயிடுச்சு. நான் எதுலயும் கான்டெக் நம்பரை பேக்கப் பண்ணி வைக்கலை. அதனால கால் பண்ணலை இன்பா” என்றாள் பிரகதி.
“தேங்க் காட். அப்படி நடந்ததும் நல்லது தான். இல்லை விதுரனிடம் மாட்டியிருப்ப.” என்றான்.
பிரகதிக்கு என்ன சொல்ல என்பதாய் தவித்தாள்.
அதற்குள் இன்பாவோ “அஞ்சலி பிரகதிக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தியா. இவ என் பிரெண்ட்.” என்று அறிமுகப்படுத்தி “பிரகதி இவ… இவ அஞ்சலி… அம்மாவோட… சொந்தத்துல கட்டிக்கிட்டேன்.” என்றவன் தலைகுனிந்தான்.
“நான் தீபிகாவை பார்த்துட்டு தான் வர்றேன் இன்பா.” என்றதும் இன்பா தலை நிமிர்த்தி ஏறிட்டான்.
“ம்ம்… அவ கன்சீவா இருக்கா அதுவும் நிறை மாசமா… உன்னை இப்ப தான் ஒரு மாதம் முன்ன பார்த்ததா சொன்னா…” என்றாள்.
“பாஸிங் கிளவுட் பிரகதி. இனி அவளை பற்றி பேச வேண்டாம். நான் எதையும் நியாயப்படுத்த விரும்பலை. முடிந்ததை பேசி ஆகப்போறதில்லை. நீ அவ வீட்டுக்கு போனா இந்நேரம் விதுரனுக்கு தெரிந்திருக்கும். உடனே எங்கயாவது போயிடு. என்னையே டார்ச்சர் செய்தவன். நீ பொண்ணு… வேண்டாம்… எதுவும் நடக்ககூடாதது நடந்திடும்.” என்று கூற, அஞ்சலி ஹாலில் அனைத்தும் கேட்டபடி நின்றாள்.
எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு இன்பா…” என்று கூறவும் இன்பா சந்தோஷமாக “யார் அவரு…?” என்றான்.
“நீ யார் வரவும் ஓடிடு ஓடிடுனு சொல்லறியோ அவனோட… நீ எங்கனு தீபிகா விதுரனிடம் கேட்க, அவளுக்கு அவன் உன் இருப்பிடம் கூற, அவன் வைத்த செக் எங்க வீடு எதுனு?
தீபிகா சொன்னதும் வேலைக்காரி பட்டு மூலமா அம்மாவை பிடிச்சி வைச்சி என்னை கண்டுபிடிச்சி நேற்று கல்யாணம் பண்ணிட்டான்.” என்று சலனமின்றி கூறினாள்.
“அவனுக்கு கல்யாணமென்று பத்திரிக்கையில பார்த்தேன். ஆனா அவனை கட்டிக்க போற பெண்ணை அவனை பார்க்க பிடிக்காம பேப்பரை கசக்கி போட்டுட்டேன். தாலி…. தாலியில்லாம?” என்று குழம்பினான்.
ஒருவேளை அவளை அடைந்து விட்டு எச்சியிலையாக தூர எறியும் திட்டமா? என்று திடுக்கிட்டான்.
“தாலியை நேற்றே நைட்டு தூக்கி அவன் மூஞ்சில விட்டெறிஞ்சுட்டேன். மனுஷனா அவன்… எங்கம்மா காலை வெட்டி மருத்துவமனையில வச்சி மிரட்டி என்னை கட்டிக்கிட்டவனுக்கு தாலி வச்சி மரியாதை தர்றது தான் பெரிசானு விட்டெறிஞ்சுட்டேன்.
தீபிகாவை பார்த்துட்டு உன் விலாசம் கேட்டு வந்தேன். சாரி டா…. நீ முதல்லயே அது பெரிய இடம் அவளாவது வாழட்டும்னு சொன்ன.. நான் தான் உனக்கு நம்பிக்கை கொடுத்து கடைசி நிமிடம் தீபிகாவை கட்டி வச்சேன். இப்படி நடக்கும்னு தெரிந்தா… நான் கூடயிருந்து தடுத்திருப்பேன்” என்றாள்.
“அப்பவும் எதுவும் மாறியிருக்காது பிரகதி. விதுரன் நினைச்சதை தான் எப்படியும் நடத்தியிருப்பான்.” என்று கூறினான்.
“பிரகதி ஆனா ஒன்னு… தீபிகா என்னோட இருந்தா… அவள் தேவையை என்னால நிறைவேற்றிருக்க முடியாது. அந்த விதத்துல விதுரன் செய்தது சரியா மாறிடுச்சு.” என்றான் கசந்தவனாக.
“என்னடா பேசற. விதுரன் இல்லைனா… அவள் உன்னோட தான் உனக்கு துணையா இருந்திருப்பா.” என்று ஆறுதலாக மொழிந்தாள். பயனற்ற ஆறுதல் அஞ்சலியை சங்கடப்படுத்தியது.
அதன் பின்னே அஞ்சலியை எண்ணி இன்பாவிடம் “அஞ்சலி.. அஞ்சலியும் ரொம்ப நல்ல பெண் டா. அவளோட வாழ்வை நீ எப்படி வெறுத்து ஒதுக்கறியோ… உன்னால அவ லைப் ஸ்பாயில் பண்ணிடாதே” என்று மொழிந்தாள். பிரகதியின் போன் சிணுங்கியது.
விதுரன் என்றதும் கோபமாக எடுத்தாள். “ஒன் ஹவர் டைம். உன்னோட அம்மாவை இன்னிக்கு பார்க்க… நான் உனக்கு கொடுக்கற டைம் லிமிட். வந்தா… பார்க்கலாம். இல்லை… இதோட நாளைக்கு தான். இந்த ஜம்பம் பேசி என்னை ஹர்ட் பண்ண பார்த்த… அப்பறம் உன் அம்மாவை பார்க்க விடாம பண்ணிடுவேன்.” என்று கூறினான்.
“ஒன் ஹவர்ல எப்படி டா வர? நீ என்ன அலாவுதீன் பூதமா? பறக்கிற பாயில் உட்கார வச்சி சொடக்கிட்டதும் இடத்துல வந்து நிறுத்த.” என்று கத்தினாள்.
“நான் அலாவுதீன் பூதம் இல்லை. கையை கட்டி வேலை செய்ய. என் டிரைவர் கதிர் கொண்டு வருவான். நீ பறக்கிற பாயில் உட்கார மாதிரி ஜம்புனு உட்கார்ந்தா போதும். அப்பறம்… டைம் லிமிட் இரண்டுக்குள்ள வரணும். மணி இப்ப ஒன்றை ஆகுது.” என்றான்.
“அரை மணி நேரத்துல எப்படி வர”
“அந்த கவலை உனக்கு வேண்டாம். கதிர் கூட்டிடடு வருவான்.”
“வந்து தொலையறேன். வை டா” என்று கத்தி இன்பாவிடம் “போன்ல பேசறேன் இன்பா… கிளம்பறேன். அஞ்சலி… இப்ப நான் எது பேசினாலும் உங்களுக்கு பிடிக்காது. ஏன்னா உங்களோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம். விரைவில் உங்க மனசுக்கு ஏற்றவாறு மாறும்.” என்று வாழ்த்தி புறப்பட்டாள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
nice epi
Super