துஷ்யந்தா-49
இரண்டு வாரம் சுமூகமாக கடந்திருக்க, இன்பா கோபத்தோடு விதுரன் அலுவலகம் வந்தான்.
நேராக விதுரனின் அறைக்கு வந்தவன் “இப்ப சந்தோஷமா.” என்று கத்தினான்.
விதுரனுக்கு புரியாமல் அமர இருக்கையை காட்டினான்.
“உங்க வரவேற்பு எனக்கு தேவையில்லை. ஏன் சார் இப்படி பண்ணிணீங்க. என் தங்கைக்கு குழந்தை பிறக்காது என்பது உண்மை தான் அதுக்கு தரகரிடம் அதை சொல்லி வைப்பிங்களா? பத்து சதம் வாமய்ப்பு இருக்கே. அது போதாதா?” என்று வெடித்தான்.
“தரகரிடம் நான் சொன்னேனா?” என்று விதுரன் சிந்திக்க ஆரம்பித்தான்.
“நீங்க சொல்லாம வேற எப்படி தெரியும். எப்படியும் உங்களிடம் வந்து நிற்கணும்னு உங்க எண்ணம். நான் தரகரிடம் மாப்பிள்ளை பார்க்க சொன்னா. அந்த தரகரிடமே சௌமியாவுக்கு குழந்தை பிறக்காது பார்க்கறது வேஸ்ட்னு சொல்லி தடுத்திருக்கிங்க.
நேத்து அவரிடம் கேட்டா… மன்னிச்சுடு பா. குழந்தை பிறக்காதுனு தெரிந்தே எப்படி கல்யாணம் பண்ணுவாங்கனு கேட்கறான்.
நீங்க தான் குறையை சுட்டிக் காட்டி அவளுக்கு கல்யாண தடை செய்யறிங்க” என்று கோபமாய் பேசினான்.
“ஷட் அப் இன்பா. யாரோட குறையும் முன் வச்சி ஜெயிக்க எனக்கு பிடிக்காது.
சசி சௌமியா விரும்பறாங்கனு தான் உங்க ஏரியா தரகரிடம் தர்மா மூலமா சொல்லி வச்சேன்.
குழந்தை பிறக்காததை சொல்லி விளம்பரப்படுத்தணும்னு எனக்கு அவசியமில்லை.
என்னோட சசிக்கு திக்கும் என்று கூறி தான் நாங்க பெண் தேடியது. எந்த குறையும் அப்படியே ஏற்று வாழற இணையை தான் தேடினேன். அப்படிப்பட்ட நான் சௌமியாவோட குறையை சுட்டி காட்டி சசிக்கு சௌமியை கட்டிதர கார்னர் பண்ண மாட்டேன்.” என்று விளக்கினான்.
“நான் நம்ப மாட்டேன். என்னை காரணமேயில்லாம ஒரு மாதம் அடைச்சி வச்சி, அடிச்சி காயப்படுத்தி சிறை கைதியா வச்சி அனுப்பினவர் தானே நீங்க” என்றான் இன்பா.
“ஆமா பண்ணினேன்… தீபிகா உன்னோட லவ்வர் எங்க சும்மாவே உன்னை அனுப்பினா திரும்ப வந்து அவளிடம் பேசி பிரச்சனை பண்ணுவனு தான் உன்னை ஒரு மாதம் அடைச்சி வச்சி, அடிச்சி அவ பக்கமே வரக்கூடாதுனு மிரட்டி பயமுறுத்தி அனுப்பியது. அப்ப தான் அவளா வந்தாலும் நீ திரும்பி பார்க்க மாட்டனு பண்ணினேன். ஆனா அது வேற இது வேற.
சௌமியோட குறையை சுட்டி காட்டி சசிக்கு மேரேஜ் பண்ண மாட்டேன். அவளோட குறையை சசியோட குறையை அப்படியே ஏற்று வாழ தான் அவங்களுக்கு நேரம் கொடுத்திருக்கேன்.” என்றான்.
இன்பாவுக்கோ தற்போது குழப்பமாக “அப்படின்னா தரகர் என்னிடம் சொன்னது.” என்று இடிந்து அமர்ந்தான்.
“அம்மா… சொன்னது அண்ணா. அம்மா… அன்னிக்கு மஞ்சரி பிறந்த நாளப்ப வாய் தவறி கஷ்டத்தை பகிரறேன் என்ற பெயரில வம்பு பேசற சொந்தத்துல சொன்னது.” என்று சசியோடு வந்த சௌமியா பதில் தந்து நின்றாள்.
“நீ என்ன இங்க?” என்றான் விதுரன்.
சசி விதுரனை திரும்பி அவனிடம் இருந்த போனை ஆப்பை ஆன் செய்து காட்டினான். அதிலிருந்து ஒலியானது அவன் பேச நினைப்பதை எழுத்து மூலமாக வாங்கி ஒப்புவித்தது.
“என்னடா நினைச்சிட்டு இருக்க. வேலைக்கு வரலைனா ஒரு வருட சம்பளத்தை எடுத்து முன்ன வச்சிட்டு போனு சொன்னியாமே.
மரியாதையா போகணும்னா போகட்டும் ப்ளிஸ் விதுரா. எனக்கு கட்டாயப்படுத்தி எந்த விஷயமும் நடக்க வேண்டாம். எனக்கு செட்டாகாது. சௌமியை இன்பாவை போக விடு. அவங்களுக்கு தொந்தரவு பண்ணாதே.
உனக்கென்ன நான் ஆபிஸை கவனிச்சிக்கணுமா கவனிச்சிக்கறேன். அம்மாவுக்கு கல்யாணம் பண்ணணுமா அவங்க பார்க்கற பொண்ணை கட்டிக்கறேன்.
யுகனை என்னால தைரியமா வளர்க்க முடியாதா. ஒரு பொண்ணு தான் வேண்டுமா. ஏன் பிரகதி உன்னை விட்டு போனா இப்படி யோசிப்பியா. இல்லைல… தனியா நின்று தானே பார்த்துப்ப. நானும் யுகனை தனியா பார்த்துப்பேன்” என்று பேசி முடித்தான்.
விதுரனோ பற்கடித்து “அதான் சொல்லிட்டானே… ஜாலியா வேற வேலை தேடிக்கோங்க.” என்று இன்பாவிடம் கூறிவிட்டு “போதுமா டா… அனுப்பிட்டேன் உன் சௌமியாவை. இனி கஷ்டம் கொடுக்கலை டா. போ.. போய் தனியா முக்கி முக்கி அழு.” என்று சசியிடமும் வெடித்தான்.
சசி அவனை அணைக்க விதுரன் தட்டி விட்டு “இன்னும் என்ன?” என்று உச்சஸ்தாதியில் கத்தினான். இன்பா சௌமி செல்லாமல் நிற்பதை கண்டு
இன்பாவோ அக்கத்தலில் மிரண்டு சௌமியாவை அழைத்து கொண்டு விரைந்தான்.
“சாரி..விதுரா” என்றான் சசெ.
“பேசாதே… கில்ட்டி பீலிங்கா இருக்கு சசி” என்று கூறியவன் “இப்ப எதுக்கு இங்க வந்த? உனக்கெப்படி அந்த ஒரு வருட சம்பளம் எடுத்து வைனு சொன்னது தெரியும்.” என்று கேட்டான்.
கா… காலையில இருந்து சௌமியா அழுதா… எ..என்னனு கேட்…டேன். நே..நேத்து கல்..யாண வீ..ட்ல வச்சி த..த..ரகர் ஏதோ பேசிட்டா…ராம். அதான் குழந்தை பிறக்காது..னு. இ..இ..ன்னிக்கு காலையில அந்த ஆ..ன்ட்டி இ..இ..ன்பாவிடம் சொல்லி புலம்பியிருப்பாங்க போல இன்பா க..க..த்திட்டு இருந்தாராம். வேலைக்கு வந்துட்டு இன்பா அண்ணாவை வி..த்..துர் சாரிடம் ஏதாவது பே..சி இன்பாவை நீ ஏ…தாவது பண்..ண்..ணிடுவியோனு பயந்துட்டு அ..ழுதா..ளாம்.
அப்படி பயம்னா வேலையை விட்டுட வேண்டியது தானேனு சொன்னேன். வேலை கூட உ…ன்னால விட முடியாதுனு ஒரு வருடம் வேலை விட்டு நி..ற்க கூடாதுனு நீ கா..கா..ர்னர் பண்ணியதா சொன்னா. அதனால வந்தேன்.” என்றான் சசிதரன்.
“உடனே காதல் கிளிக்காக வந்துட்ட” என்றான்.
“நான் எங்க காதலிச்சேன். நல்ல பொண்ணை ஏன்டா என்னோட கோத்து விடறனு கேட்டேன்.” என்று பதில் தந்தான்.
“ஓ… அப்ப உன்னை கல்யாணம் பண்ண கெட்ட பொண்ணா பார்க்கணுமா.?” என்றதும் சசிதரன் சட்டென திரும்பி விதுரனை பார்த்து அவனின் கேலியில் சோகமானான்.
“நல்ல பொண்…ணையும் கெட்ட பொண்..ணா மாறிடு..வாங்க டா. சௌமி மாறவும் வேண்டாம். எ…என்னை மணக்கவும் வே…வே..ண்டாம்.” என்றவன் ஜன்னலில் வெறித்து நின்றான்.
கையில் ஏதோவொரு கோப்பு பைலை எடுத்து வந்ததால் அதை மறந்து தன்னோடு எடுத்து சென்ற சௌமியா இன்பாவோடு திரும்ப வந்தவள் இதை கேட்க, விதுரனோ இவர்களை கண்டு கையிலிருந்த கோப்பை வாங்கிக் கொண்டான்.
இன்பாவும் சௌமியாவும் சசிதரனை கண்டு வந்த சுவடேயில்லாமல் திரும்பினார்கள்.
விதுரனும் எதுவும் அதன் பின் சசிதரனிடம் விவாதிக்கவில்லை.
நடந்ததை யுகனை அழைத்து வந்து, தன்வீயை காண வந்த கோமதி சித்தியிடம் கூறினான். கூடவே பிரகதி கேட்டுக் கொண்டாள்.
பிரகதியோ “ஒரு வேளை தீபிகா இன்பாவோட வாழ்ந்தா இந்தளவு பழிவாங்க ஆரம்பிச்சு செத்துயிருக்க மாட்டாளோ?” என்று பிரகதி கேட்டதும் விதுரன் முறைத்து பார்க்க, “டேய் முறைக்காதே உங்க சசி அண்ணா அப்படி தானே பீல் பண்ணறார்.” என்று கேட்டு விட்டாள்.
சசிதரனை பார்த்தும் பிரகதியை பார்த்தும் விதுரன் யூகித்தவையை கூறினான்.
“நிஜமாவே தீபிகா இன்பா வாழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் யெரியுமா. எப்படியும் அவனோடு அவளின் நிலைக்கு ஏற்ப வாழ்ந்திருக்க மாட்டாள்.
விஜயலட்சுமி ஆன்டியை சௌமியாவை இன்னொரு தங்கைய எட்டி நிறுத்தியிருப்பாள்.
அப்பவும் அவளின் தேவைக்கு ஆடம்பர ஆசைக்கும் இன்பாவிடம் முரண்டு பிடித்து சலித்து போய் பெற்றோர் வீட்டுக்கு விவகாரத்து வாங்கி நடையை கட்டியிருப்பாள். பிறகு கடுப்பில் குடிப்பழக்கம் ஏற்பட்டு அடிமையாகி வாழ்வை இதை போலவே சூன்யமாக்கி இருப்பாளெனவும் சசிதரனை போல இன்பா ஒரு கையில் குழந்தை வைத்து புலம்பியிருப்பான்.” என்று கூறவும் சசிதரன் மனம் தீபிகா அப்படிப்பட்டவள் தான் என்று வாழ்ந்து பழகிய நாட்களை வைத்து கணித்தான்.
பிரகதிக்கும் கொல்லும் வரை சென்றவள் மனம் இப்படி தானோ என்று எண்ணியது.
“செத்தவளை பற்றி இனி பேசாதே. யுகன் வளருவதற்கு முன்ன சசிக்கு ஒரு கல்யாணம் பண்ணிடணும்.” என்று கோமதி கூறவும் சசிதரன் அமைதியானான்.
“உ..உங்க இஷ்டப்படி பா..ர்..ருங்க. யாராயிருந்தாலும் எனக்கு ஓகே.” என்றவன் யுகனோடு தன்வீ விளையாடுவதை வேடிக்கை பார்த்தான்.
கோமதி அன்னை ஒர் முடிவெடுத்தவர்களாக திருமணம் செய்ய பெண் பார்த்தார்.
கோமதி தர்மாவை கூட்டிக்கொண்டு மற்ற யாரையும் அழைக்காமல் நேராக இன்பா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அஞ்சலி வீட்டின் முன் காலியாக இருந்த பகுதியில் குழந்தையை இடையில் வைத்து செரலாக் ஊட்டி விட அவள் வீட்டின் முன் கார் வந்து நின்றது.
விலையுயர்ந்த காரை கண்டதும் முதலில் ஆவல் பொங்கியதென்றால் அடுத்து பார்த்த தர்மாவை கண்டு அச்சம் சூழ்ந்தது.
தன்வீ பிறந்த நாளன்று விஜயலட்சுமி அத்தை தர்மாவை காட்டி இவன் தான் அடிச்சி இழுத்துட்டு போனான் என்ற பேச்சில் தற்போது மீண்டும் காணவும் வராமல் இருக்குமா.? இன்பாவை ஒரு மாதம் அடைத்திருந்தனரே.
“அத்தை… அத்தை..” என்று குரல் கொடுத்து “வா…வாங்க ஆன்ட்டி” என்று வரவேற்றாள்.
கோமதியோ “எப்படியிருக்க மா. குழந்தைக்கு மூனு மாதமா… தலை நிற்குதா?” என்று கேட்டுக் கொண்டே தூக்கவும் அஞ்சலி தர்மாவை கண்டு அச்சத்தில் ஆம் என்றாள்.
அதற்குள் விஜயலட்சுமி எட்டிப் பார்க்க, கோமதி வீட்டினுள் நுழைந்தார்.
சௌமி வேலைக்கு செல்லாததால் அறையிலிருந்து எட்டி பார்த்தாள்.
இன்பாவோ வீட்டில் சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கி வந்திட, “நீங்க… நீங்க எங்க இங்க?” என்று தயங்கினான்.
“எப்படியிருக்க மா… வேலை விட்டுட்டியா… அன்னிக்கு பங்ஷன்ல என்னால சட்டுனு பேசமுடியலை. நீங்க பேசியதும் வேடிக்கை தான் பார்க்க முடிஞ்சது.
இப்ப மனசுல என்னவோ உங்களிடம் பேசிட்டு கடைசியா ஒரு முடிவெடுத்திடலாம்னு வந்தேன். நான் வந்தது விதுரனுக்கு தெரியாது.” என்றார்.
இன்பாவோ ‘ஆமா இவன் வந்துட்டான் அப்ப தெரியாதா. இவனும்(தர்மா) அவனும்(விக்னேஷ்) தான் அப்டேட் பண்ணற ஆளாச்சே.’ என்பதாய் தர்மாவை கண்டு மனதில் வெதும்பினான்.
“தர்மாவுக்கு சிலது விதுரன் காதுக்கு போக கூடாதுனா போக விடமாட்டான். அப்படிப்பட்ட விஸ்வாசமான ஆட்களை தான் விதுரன் துணைக்கு வைச்சியிருப்பான்.
இங்க வந்தது சௌமியாவிடமும் உங்களிடமும் என் பையன் சசிக்கு உங்க பொண்ணை தருவீங்களானு கேட்க தான். ஏற்கனவே விதுரன் கேட்டாலும் அவனுக்கும் இந்த தம்பிக்கும் ஆகாதுனு கொஞ்சம் யோசித்து இருப்பிங்க.
தப்பு தான்…
காதலிச்சவளையும் பிடுங்கிட்டு இப்ப இந்த தம்பியோட தங்கையையும் பொண்ணு கேட்டா கொடுக்க விருப்பமிருக்காது தான்.
ஆனா சூழ்நிலை இப்படி அமைந்துடுச்சு. விதுரன் சௌமியாவை ‘ரொம்ப நல்ல பொண்ணு சித்தி. பணத்தை மதிக்கலை. மனுஷங்கலை மதிக்கறா. ஆடம்பரத்தை ஆராயலை. அவசியமானு யோசிக்கறா. சசிக்கு ரைட் சாய்ஸ் இவ தான் சித்தி.’னு சொன்னான்.
உங்க பொண்ணோட உடல்நிலையை காரணம் காட்டி வந்த வரன் தடைப்படுறதா கேள்விப்பட்டேன்.
எங்க சசிக்கு மனைவியா மாறல் சப்போர்ட் பண்ணி மனசை பகிர்ந்துகிட்டா போதும். குழந்தை இருக்கேனு யோசிக்க வேண்டாம். நான் யுகனை தனியா வளர்த்துப்பேன். கொஞ்ச காலம் ஆனா அவனை அவனே பார்த்துப்பான். இல்லைனா போர்டிங் ஸ்கூல் ஹாஸ்டல் காலேஜ் என்று பிற்காலத்துல போட்டுக்கலாம். உங்க பொண்ணை தாங்க.. தங்க தட்டுல வச்சி பார்த்துப்பான்.” என்று கண்ணீர் உகுத்தினார் கோமதி. இடைப்பட்ட நேரத்தில் அஞ்சலி காபி கொடுக்க அதனை கையில் வைத்து பருகி தன்னை ஆசுவசப்படுத்தினார்.
“அம்மா… என்ன பண்ணறிங்க. கெஞ்சினா விதுரன் சாருக்கு பிடிக்காது.” என்று தர்மா கோபமானான்.
“சசிதரன் வாழ்க்கைக்கு ஒரு அம்மாவா நான் கெஞ்சலாம்.” என்று கூறவும் அஞ்சலியோ “என்னத்த நீங்க. பெரிய மனுஷங்க வீடு தேடி வந்து கேட்கறாங்க. எனக்கு என்னவோ சௌமிக்கு நல்ல லைப் காத்திட்டு இருக்குனு மனசுக்கு தோன்றுது அத்தை. அவரை பற்றி யோசிக்காதிங்க. நல்ல முடிவா எடுங்க” என்று கூறவும் இன்பாவோ அவளை முறைக்க ஆரம்பித்தான்.
சௌமியா மெதுவாக அன்னையை காண அவர்களோ வீட்டுக்கு வந்து வயதிலும் சமூகத்திலும் உயர்ந்த பெண்மணி இப்படி கெஞ்சுவது பிடிக்கவில்லை.
தங்கள் நிலை அவர்களுக்கு கீழே, ஆனாலும் தாங்கி வந்து கேட்பதற்கு ஒரு குணம் வேண்டுமே.
விதுரன் கூறியது போல எத்தனையோ பெண்கள் சசியை குறையிருப்பினும் மணக்க தயாராக இருந்தும் அவன் மனம் சௌமியை தகுதியுடையவளாக காட்டினானே.. என்ன இந்த அதிகப்படியான வசதி மிரட்சியை தருவது ஏற்றுக்க தயக்கமாக தோன்றியது.
“அப்பறம் மேரேஜ் நடக்க கேட்டு மட்டும் இங்க வரலை. உங்களுக்கு தனிப்பட்டு விதுரன் மேலயோ சசிதரன் மேலயோ கோபம் இருந்தா அதை மறந்துடுங்க. முடிச்சா மன்னிச்சிடுங்க” என்றதும் தர்மா கொதித்தான்.
“அம்மா… என்னம்மா நீங்க எங்க விதுரன் சார் தப்பு பண்ணலைனு சொல்லறேன். நீங்க மன்னிப்பு கேட்கறிங்க. சாருக்கு தெரிந்தது அவ்ளோ தான்.
டேய் இன்பா… என்ன பழசு மறந்து போச்சா. மகனே தூக்கிட்டு போய் லாடம் கட்டினா அப்போ தெரியும். பொண்ணு கேட்டா கொடுக்க மாட்டியா நீ. விதுரன் சாருக்காக பார்க்கறேன். இல்லை கொன்னு தோலை உறிச்சி தொங்க விட்டுடுவேன்.” என்று மிரட்டினான்.
“தர்மா.. சும்மாயிருக்க மாட்ட.” என்று கோமதி பதறினார்.
“ம்மா… சசிதரன் சாருக்கு வேண்டும்னா மன்னிப்பு கேளுங்க. எங்க விதுரன் சார் எந்த தப்பும் பண்ணலை. தேவையில்லாம அவரை இழுக்காதிங்க. நீங்க இங்க மன்னிப்பு கேட்க வந்ததா இருந்தா விக்னேஷை கூட்டிட்டு வந்திருக்கணும். என் எதிர்ல விதுரன் சாரை குறை சொல்லவே விடமாட்டேன். இன்பா நீ வெளியே வாடி வச்சி செய்யறேன்” என்று வெளியேறியிருந்தான்.
கோமதிக்கு தலைவலியே வராத குறையாக நின்றார்.
ஏற்கனவே மிரண்டு இருக்கும் குடும்பத்தை வீடு தேடி வந்து மிரட்டுவதாக எண்ணி கொள்வார்களோ என்று கோமதி பதறி “நல்ல முடிவா சொல்லுங்க. அவன் பேச்சை மனசுல வச்சிக்காதிங்க” என்று வணக்கம் கூறி வெளியேறினார் கோமதி.
தர்மாவோ போனில் விக்னேஷிடம் பகிர, “ஏன்டா மற்ற நேரத்துல பெரிய இவனாட்டம் பேசுவ. அவனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்க வேண்டாம்.” என்று விக்னேஷ் எகிறினான்.
கோமதி தலையிலடித்து காரில் அந்த பேச்சையும் கேட்டு “உங்களை வச்சிட்டு விதுரன் நல்ல பெயர் வாங்கறது ரொம்ப கஷ்டம் டா.” என்று புலம்பினாலும் விதுரன் கூடவே பக்க பலமாக உண்மையான அன்பான உறவுகள் சூழ்ந்திருப்பதில் மகிழ்ந்தார் கோமதி.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super super. Intresting
Super 😍😍
Interesting