Skip to content
Home » நன்விழி-1

நன்விழி-1

                   நன்விழி

அத்தியாயம்-1

   போலீஸ் வண்டிகள் தொடர்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருந்தது.

    நந்தவனம் குடியிருப்புக்கு தடுப்பு போட்டு சுற்றி பாதுகாப்புக்கு போலீஸ்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தனர்.

     குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செய்தியாளர்களும், வீடியோ பதிவாளர்களும் தங்கள் பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க ஆவலாய் நின்றிருந்தனர்.

    ஒலிப்பெருக்கி கேட்டு உயர் அதிகாரி நெல்சன் காத்திருந்தார்.

    “எந்த இயக்கம் என்று தெரிஞ்சுதா? என்ன கோரிக்கை வைத்திருக்காங்க.” என்று உயர் அதிகாரி நெல்சன் தனக்கு கீழே பணியை மேற்கொள்ளும் விமல் என்ற போலிஸிடம் கேள்வியை கேட்டு முடித்தார்.

     “சார் விமானத்துல இருந்து சில பேர் சந்தேகப்படும் படிய வந்தாங்க. அவர்களை ரமேஷ் பின் தொடர்ந்து வந்தார். ரமேஷ் பின் தொடர்ந்து வந்தது தெரிந்து அந்த ஆறு பேரும் இங்க விழா நடக்கற பில்டிங்ல வந்து மறைய, இப்ப இந்த நந்தவனம் குடியிருப்பு ஆட்களை பிடிச்சி வைத்துக் கொண்டு மிரட்டறாங்க சார். 
    இங்க வந்ததை நம்ம ரமேஷ் டிபார்ட்மெண்டுக்கு அலார்ட் பண்ணிட, வகையா மாட்டியதும் அவங்க தப்பிங்க வழி தேடறாங்க.” என்றான் விமல்.

    “என்னயா… விமானத்துல இருந்து இறங்கறப்பவே பிடிக்க கூடாதா என்று தனது தொப்பையில் சட்டையை நொடிக்கு ஒருமுறை இன்(in) செய்து பேசினார்.

    “அங்க சந்தேகம் ஏற்பட்டதில தான் சார் பின் தொடர்ந்து வந்துயிருக்கார் ரமேஷ்.” என்று விமல் பணிவாய் பதிலளித்தார்.

     “அந்த ஸ்பீக்கரை (ஒலிப்பெருக்கியை) கேட்டேனே ரெடியா..?” என்றதும் “இந்தாங்க சார்” என்று மற்றோரு காவலாளி எடுத்து நீட்டினான்.

     அவர் வாங்கி பேச ஆரம்பிக்கும் முன்னவே, ஸ்பீக்கர் அலறியது. ஆனால் அது நெல்சன் வைத்திருந்தவை அல்ல.

    நந்தவனம் குடியிருப்பு ஆண்டு விழாவிலிருந்து ஒலிப்பெருக்கியில் குழந்தை அழும் சத்தமும், பெண்கள் அலறும் சப்தமும் கேட்டது.

    “என்ன கேட்டுச்சா…? எங்களுக்கு எந்த கோரிக்கையும் இல்லை. நாங்க இங்கிருந்து போகணும். அவ்ளோ தான். அப்படி பண்ணாம எங்களை பிடிக்க முயற்சி செய்தா… இங்க எத்தனை பேர் இருக்காங்கனு இந்நேரம் தெரிஞ்சு வைத்திருப்பிங்க அத்தனை பேர் உயிரும் ஒவ்வொன்றா போகும். இப்ப எங்களை கண்டுபிடிச்சு பின் தொடந்த வந்த ரமேஷ் என்ற போலிஸ் சேம்பிளுக்கு அனுப்பறோம்.” என்று முடித்தான்.

     “ஹலோ… ஹலோ… இங்க பாரு . ஒரு உயிரும் ஆபத்து வரக்கூடாது. இன்க்ளுடிங் ரமேஷ் சேர்த்து தான்.” என்ற பேச்சுக்கு மதிப்பில்லாமல் அந்த குடியிருப்பு வாசிகளில் இருவர் கண்ணீரோடு வெளியே ரமேஷை வைத்து விட்டு, காப்பாற்றாமல் வேடிக்கை பார்க்கறிங்களே என்பது போல பார்த்து சென்றனர்.

     நெல்சனோ “ரமேஷ்கு என்ன ஆச்சுனு பாருங்க.” என்றார்.

     “இந்த குடியிருப்பு பகுதியில எத்தனை குடும்பம் இருக்காங்க? குடும்பத்துக்கு எத்தனை பேர்? அந்த ஆண்டுவிழா நடக்கிற ஹால் ஓட்டி என்னென்ன வழியிருக்கு? இதெல்லாம் தெரியணும். தெரிஞ்சவங்களை வந்து பார்க்க சொல்லு” என்று கட்டளையிட்டவர் ரமேஷை பார்த்தார்.

    உயிர் ஓட்டி உள்ளது. தற்போது அங்கே எப்படிப்பட்ட நிலையென்று கேட்டால் பதிலளிக்கும் நிலையில் ரமேஷ் இல்லை. அதனால் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு செல்ல வெறும் பார்வையாளராக மட்டுமே நெல்சன் இருந்தார்.

     இங்கு நந்தவனம் ஆண்டு விழா நடந்துக் கொண்டிருக்கும் இடமோ அலறல் சத்தம் அதிகமாக கேட்டதும், அதில் தலைவனாக ஸ்டீபனோ, “சத்தம் போட்டிங்க அவங்களை தான் அடுத்து கொன்று வெளியே போடுவேன். அமைதியா இருங்க.” என்றவன் தன் ஆட்களில் மூவரை பாதுகாப்புக்கு துப்பாக்கியோடு வைத்து விட்டு, மற்ற மூவர் தனியாக வந்து “இந்த இடம் விட்டு எப்படி போக?’ என்பதாய் கலந்து ஆலோசித்தனர்.

     ஸ்டீபனோ, “தோராயமா நாற்பது  பேருக்கு மேல இருக்காங்க. அதனால கொஞ்சம் போலீஸ் யோசிக்கும். எப்படியும் வண்டி அரேஞ்ச் பண்ண செய்வாங்க. என்ன இங்கிருக்கறவங்களை பாதிக்கு அனுப்ப சொல்ல வாய்ப்பு இருக்கு.” என்று கூறவும்,

    “சே வகையா மாட்டிக்கிட்டோம். இப்படி சாதாரணமா மாட்டுவோம்னு நம்ப முடியலை.” என்று மதன் என்பவன் கடுப்போடு மொழிந்தான்.

    “ஸ்டீபன் இப்ப நமக்கு வழியில்லை. இந்தபக்கம் தான் தப்பிக்க முடியும். எப்படி தப்பிக்க வழி சொல்லு.” என்றான் முகமது.

    “என்ன பண்ணறது. போன் பண்ணி பாஸிடம் கேட்கணும். எப்படியும் தப்பிக்கணும். முதல்ல நாம யாருனு இவங்களுக்கு தெரியாம மூவ் பண்ணணும்” என்று கண்ணாடி வழியாக மறைந்து நின்று தரை தளத்தில் பார்வை பதித்தான்.

      அங்கிருந்தனரோ துப்பாக்கியின் குறிக்கு பயந்து அஞ்சி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அன்று ஆண்டு விழா என்பதால் இருக்கைகள் வரிசையாக இருக்க அதில் அமர்ந்திருந்தனர்.

    நந்தவன குடியிருப்பு காம்பவுண்டில் இருபது வீடுகள். தனிதனியான லக்ஸரி வீட்டில் வாழ்வதால் எல்லாரும் புழங்கும் விதமாக மூன்று தளம் கொண்ட பில்டிங் நடுநாயமாக இருக்கும்.

முதல் தளம் குழந்தைகள் விளையாடுவதற்கென்று திடல் அமைத்து இருப்பார்கள். அடுத்து அந்த குடியிருப்போர் ஜிம் ஒர்க்அவுட் செய்வதற்காக அமைக்கப்பட்டு இருக்கும்.

  அடுத்த மேலே இருக்கும் தளம் இதோ ஆண்டு விழா கொண்டாடும் இடம். மாதத்தில் கூட்டம் வைத்து பேசவும், பிறந்தா நாள் கொண்டாட்டம் மற்றும் இது போன்ற விழா நடைப்பெறவும் பயன்படுத்துவார்கள்.
 
     இன்று அப்படி விழா கொண்டாட ஆரம்பித்து சாப்பிட்டு பாதி பேர் சென்ற நேரம் இந்த ஆறு பேர் வேகமாக ஓடி வந்து கதவை தாழிட்டு துப்பாக்கி வைத்து மிரட்ட ஆரம்பித்தனர்.

    துரத்தி வந்த ரமேஷ் என்ற போலீஸை கண் எதிரில் ஒருவன் கத்தி வைத்து சில பாகத்தில் கீறி உயிரை மட்டும் விட்டு வெளியே போட்டு விட்டார்கள்.

    நேரில் கண்டும் பயப்படாமல் இருக்க முடியுமா? சப்தமும் ஒடுங்கி அமைதி காத்தனர்.

     “என்னாச்சு நன்விழி?” என்று நித்திஷ் கேட்டு முடித்தான்.

      “ஒன்றுமில்லை நித்திஷ்… நாள் நெருங்குதே… அதான். கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு. தண்ணீர் வேண்டும்.” என்றதும் நித்திஷ் அங்கும் இங்கும் பார்த்தான்.

    “அக்கா அந்த தண்ணீர் பாட்டில் எடுங்களேன்.” என்று நித்திஷ் கேட்க, அவரோ முகத்தை திருப்பிக் கொண்டார்.

    நித்திஷூக்கு புரியாமல் இல்லை… அவனாக எழுந்து நிற்க துப்பாக்கி  ஏந்தியவனோ, “என்ன?” என்று அதட்டல் புரிந்தான்.

     “பிரகனட் லேடி சார். தண்ணீர் கேட்டாங்க” என்றான்.

   துப்பாக்கி வைத்தவனோ நன்விழியை பார்த்து நித்திஷ் நீரை எடுக்க சம்மதித்தான்.

    “காலையிலே இவ முகத்தில முழிச்சேன். அப்பவே இப்படி ஏதாவது நடக்கும்னு நினைத்தேன் நடந்துடுச்சு. அதிர்ஷ்டம் கெட்டவள். இதுல இவன் வேற” என்ற வசவு மொழியை கேட்டு நித்திஷ் கடுப்பானான்.

    நன்விழி எதுவும் பேசாதே என்று கையை பிடித்து நித்திஷை தன்னருகே அமர வைத்தாள்.

6 thoughts on “நன்விழி-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *