ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு அவள் புறப்பட, அவனும் ஒருமுறை அவருக்கு நன்றி கூறிவிட்டு, வானதியுடன் காரில் அமர்ந்தான்.
வாய் வரை வந்துவிட்ட கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனத் தவித்தான் அவன். அவன் எதையோ மென்று விழுங்குவதைப் பார்த்தவள் ‘என்ன’ என்பதுபோல் புருவத்தைத் தூக்க, “இல்ல… எப்படி… இந்த.. கிரிமினல் விஷயமெல்லாம்… அதாவது… ஆக்சிடெண்ட் இல்லை, மர்டர்னு கண்டுபிடிச்சது எல்லாம்…?” எனக் கேட்டான் திவாகர்.
ஏளனமான புன்னகையுடன், “உலகத்திலயே நீ மட்டும் தான் அறிவாளின்னு நீ நெனைச்சிட்டு இருந்தா, அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது..” என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு, ஓட்டுனரிடம் சத்தமாக, “வேம்பத்தூர் போங்க அண்ணே!” என்றாள் அவள்.
ஓட்டுனர் சரிங்கம்மா என்றுவிட்டு காரை வேம்பத்தூர் வழியில் செலுத்தினார்.
“இப்ப ஏன்? வேம்பத்தூருக்கு..?”
மீண்டும் திவாகர் கேட்க, அவள் சலித்து உச்சுக்கொட்டினாள்.
“நான் கண்டுபுடிச்சதை, எந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வேணாலும் கண்டுபிடிச்சிருக்கலாம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், எஃப் ஐ ஆர்- ரெண்டையும் கம்பேர் பண்ணிப் பாத்தாலே, இது விபத்து இல்லைனு புரிஞ்சிருக்கும். ஆனா, பனையூர் இன்ஸ்பெக்டரும் சரி, சிவகங்கை இன்ஸ்பெக்டரும் சரி, எதையுமே பாக்கறதுக்கு முன்னவே கேசை மூடி வைக்க நினைச்சாங்க. அதிலயே தெரியலையா..? இந்த குற்றத்துல, கண்டிப்பா போலீஸ் டிபார்ட்மெண்ட்டில இருக்கறவங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம். அவங்கிகிட்ட இருந்து முழு சப்போர்ட்டையும் நாம எதிர்பாக்க முடியாது. நாமளா இறங்கி வேலை செஞ்சா தான், உண்மைய கண்டுபிடிக்க முடியும்.”
“ஓ.. அப்போ, உண்மையை தெரிஞ்சுக்கறதுக்கு வேம்பத்தூர்ல என்ன இருக்கு?”
“அங்கதான் இன்னும் என் குடும்பத்தோட ஞாபகங்கள்… அவங்க வாழ்ந்த வாழ்க்கை, விட்டுட்டுப்போன நினைவுகள்… எல்லாமே இருக்கு. எனக்கு எங்க வீட்டைப் பாக்கணும்”
பேசப் பேசவே குரல் நடுங்கியது அவளுக்கு. கண்ணீரை அவன் பார்க்காமல் மறைத்தபடி, முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு வானத்தைப் பார்த்தபடி வந்தாள் அவள்.
நினைவுகள் அப்பாவையும் அண்ணனையும் அம்மாவையும் சுற்றி வந்தன.
‘ஊருக்குள் அனைவரிடமும் நட்புப் பாராட்டும் நல்ல உள்ளங்கள் மூவரும். அம்மாவுக்கு வீதியில் இருக்கும் அனைத்துப் பெண்களுமே சகோதரிகள் தான். யாரிடமும் அதிர்ந்து ஒருவார்த்தை பேசும் குணமில்லை அப்பாவுக்கு. ஊருக்காகப் பாடுபடும் உண்மை உழைப்பாளி அவர். விக்கியைப் பிடிக்காதவர்கள் ஊரிலேயே கிடையாது. அவனது கனிவான கண்களும் வசீகரச் சிரிப்புமே அவனை ஊர்ப்பெண்கள் கண்ணிலெல்லாம் விழச்செய்யும்…
இத்துணை நல்ல மனிதர்களுக்கு யார் எதிரி? எதற்காக எந்தப் பாவமும் அறியாத என் குடும்பத்தைக் கொல்ல நினைக்க வேண்டும்? இதன்பின்னால் இருப்பது யார்? என்னால் கண்டறிய முடியுமா? ஒருவேளை அது எனக்குத் தெரிந்தவராய் இருந்தால்? எனக்கு… எனக்குமே எதிரிகள் யாரும் இல்லையே… அதேபோல் எனக்குத் துணையும் யாரும் இல்லை. எந்த முனைப்பில் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தவனை நான் தனியே தேடிச் செல்லுகிறேன்? அப்படியே இதைச் செய்தவனைக் கண்டுபிடித்தாலும், இறந்த என் குடும்பத்தை மீட்க முடியுமா?’
வேம்பத்தூருக்கு வந்ததும் வீட்டின் முன் அவள் இறங்க, கார் சத்தம் கேட்டு அண்டை வீட்டார் வெளியே வந்தனர். அந்தப் பாட்டியம்மாள் அவளது முகத்தைக் கையால் வழித்து திருஷ்டியெடுத்தார்.
“என் கண்ணு… நூறாயுசும்மா உனக்கு. நாளெல்லாம் ஒன்னை நெனைச்சிட்டே இருந்தேன் கண்ணு!! சுகமா இருக்கியாம்மா? மாமா வீட்டுல நல்லாப் பாத்துக்கிறாகளா? நாளைக்கு மூணாம் நாள் கருமாதி செய்யணுமே… ஏற்பாடெல்லாம் பண்ணனுமே கண்ணு..”
ஆமோதிப்பாகத் தலையை மட்டும் அசைத்துவிட்டு, வீட்டைத் திறந்து உள்ளே சென்றாள் அவள். அவள் வந்திருந்த செய்தியறிந்து நிறைய வாண்டுகள் அவளைத் தேடி வீட்டுக்குள் வந்துவிட்டனர்.
திவாகர் ஒரு ஆச்சரியப் பார்வையோடு பார்த்திருந்தான்.
“வானதிக்கா!! வானி அக்கா!!”
ஆளாளுக்குக் கத்த, அவள் புன்முறுவலோடு அவர்கள் அனைவரையும் நலம் விசாரித்தாள். படிப்புப் பற்றிக் கேட்டாள்; வீட்டைப் பற்றி விசாரித்தாள்; சிலரை இளைத்துவிட்டாய் என்றாள்; இன்னும் பலரை வளர்ந்துவிட்டாயே என்று உச்சிமுகர்ந்தாள்; அனைவரையும் அமரச் சொன்னாள்.
இவனைத் திரும்பிப் பார்த்த ஓரிரு சிறுவர்கள், “வானி அக்கா.. இது யாரு?” எனக் கேட்க, அவள் என்ன சொல்வாள் என எதிர்பார்த்து அவளை ஏறிட்டான் அவனும்.
அவளோ அலட்சியமாக, “நீங்களே கேளுங்க” என்றுவிட்டு வீட்டைத் தூய்மைப்படுத்தும் வேலையில் மும்முரமானாள். சிறுவர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டனர்.
“நீங்க யாரு?”
“வானதிக்கா ஃப்ரெண்டா? சென்னைல இருந்து வாரீகளா?”
“விக்கியண்ணா ஃப்ரெண்ட்டா? அவரைத் தேடிட்டு வந்தீகளா?”
“வானதி அக்காவை நீங்க தான் கூட்டிட்டு போனீகளா?”
“எங்கிருந்து வந்தீக ரெண்டு பேரும்?”
அவன் திருதிருவென முழித்துவிட்டு, “ம்ம்.. அது.. நான் வானதியோட.. ஹஸ்பண்ட்… ” என இழுத்தான்.
பாதிப்பேர் புரிந்தும், பாதிப்பேர் புரியாமலும் பார்த்தனர் அவனை.
“அப்டின்னா?” என ஒருவன் கேட்க, “டேய், அக்காவைக் கட்டிக்கிட்டவர்டா” என விளக்கமளித்தாள் ஒருத்தி.
“ஓஹோ.. அப்ப அக்கா உங்க வீட்டுலதான் இருக்காங்களா? அக்காவை எதுக்காக கட்டிக்கிட்டீங்க? அக்காவை ஒழுங்கா பாத்துக்கிடுவீகளா?”
ஏனோ தானோவென்று தலையை மட்டும் அசைத்துவிட்டு, வானதியைத் தேடி வீட்டுக்குள் நகர்ந்தான் அவன். இவர்களிடமிருந்து தப்பித்தால் போதுமென்று இருந்தது அவனுக்கு.
“யப்பா… எப்படி உனக்கு இவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் இங்கே?”
சமையலறை மேடையைத் துடைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று அவன் வினவ, வானதி கிண்டலாகச் சிரித்தாள்.
“யாரும் உன்னைய கடிச்சுத் தின்னுட மாட்டாங்க! இதுக்கு முன்ன குழந்தைக கூட பேசினதே இல்லையோ?”
அவன் தீவிரமான முகத்துடன், “ஸ்கூல் படிப்பு முழுக்கவே கொச்சின்ல ஒரு போர்டிங் ஸ்கூல்ல தான். வருஷம் ஒருதடவை வீட்டுக்கு வருவேன், அப்பவும் அஸைண்மெண்ட், ப்ராஜெக்ட்னு நிறைய வேலை இருக்கும். வெளியே எங்கயுமே போனதில்லை. பெருசா சொந்தக்காரங்கனு யார்கிட்டவும் பழகுனதில்ல. ஸ்கூல்ல இருந்த கொஞ்ச ஃப்ரெண்ட்ஸும் அப்டியே காணாமப் போயிட்டாங்க. காலேஜ், வேலை எல்லாமே அமெரிக்கா தான். அதுனால, இது எல்லாமே எனக்குப் புதுசாத் தான் இருக்கு” என்றிட, வானதியின் முகமும் சிரிப்பை இழந்தது.
“சாரி..” என உதட்டுக்குள் முணுமுணுத்துவிட்டு, வந்த குழந்தைகளுக்கு பழரசம் கொடுக்கச் சென்றாள் அவள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட, வானதி தந்தையின் அறைக்குள் நுழைந்து அலசி ஆராயத் தொடங்கினாள். திவாகர் புரியாத முகத்துடன் பார்த்திருந்தான்.
“என்ன பண்ற?”
“நடந்தது ஒரு கொலையா இருந்தா, அதுக்கு மூணு விஷயம் முக்கியமா இருக்கணும். Motive, opportunity, evidence. அதாவது, இந்த மூணையும் தெளிவாக் கண்டுபிடிச்சா மட்டும்தான், கோர்ட்ல இந்த கேஸ் நிக்கும்.
மூணு கேள்விகளை நம்மளை நாமே கேட்கணும்: ஏன், எப்போது, எப்படி?
முதல் கேள்விக்கான பதிலைத் தெரிஞ்சுக்கறதுக்குத் தான் இங்க வந்திருக்கோம். என்னோட குடும்பத்துக்கு யார் எதிரின்னு கண்டுபிடிக்கணும். அம்மாவுக்கு கண்டிப்பா யாரும் எதிரி இல்ல. அப்பா தான் ஊருல கொஞ்சம் தெரிஞ்சவர். எங்கப்பா ஒரு சாதாரண விவசாயி. அவர் மேல யாருக்கு என்ன பகை இருந்திட முடியும்? அதைத் தேடத் தான் அவரோட ரூம்ல எதாவது கிடைக்குதான்னு பாக்கறேன்”
“ம்ம்.. இதெல்லாம்.. எப்டி… நீ..?”
அவன் தயங்கித் தயங்கிக் கேட்க, அவள் இம்முறை கோபப்படாமல் நிமிர்ந்தாள்.
“நான் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு படிக்கறேன். Polity, Criminology, Forensics, Law.. எல்லாமே என்னோட பாடத்துல இருக்கு. இதைக் கூட உபயோகிக்கத் தெரியலைன்னா, நானெல்லாம் என்ன ஐஏஎஸ்? என்ன க்ராஜுவெட்?”
அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் அவன்.
“உனக்கு இன்னும் என்னவெல்லாம் தெரியும்?”
“உன்னால கற்பனை பண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு நிறையத் தெரியும். நீ நினைச்ச மாதிரி நான் ஒண்ணும் பட்டிக்காடு கிடையாது. Bsc graduate. ரெண்டு வருஷமா சென்னைல சிவில் சர்வீசுக்கு படிக்கறேன். மாவட்ட அளவுல செஸ் சாம்பியன். டெல்லி வரைக்கும் போயி விளையாடிட்டு வந்திருக்கேன்.
அண்ணனுக்கும் எனக்கும் அஞ்சு வயசுல இருந்தே தமிழ்ல இருக்க எல்லா இலக்கியங்களையும் எங்கப்பா படிக்கப் பழக்கியிருக்கார். எங்க அண்ணன் அக்ரி படிப்பு முடிச்சிட்டு, எங்க காட்டுலயே பயிர் ஒட்டு ரகங்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தான். எங்க அப்பாவையும் அண்ணனையும் ‘விவசாய விஞ்ஞானிகள்’னு ஒருதடவை பசுமை விகடன்லயே பேட்டி எடுத்திருக்காங்க, தெரியுமா?”
அவள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, திவாகரின் திகைப்பும் அதிர்ச்சியும் பன்மடங்காகின. தான் அவளை எவ்வளவு மட்டமாக நினைத்துவிட்டோம் என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டான் அவன். மன்னிப்புக் கேட்க அவன் வாயெடுக்க, அதற்குள் மீண்டும் வானதியே தொடர்ந்தாள்.
“நான் UPSC preliminaries க்ளியர் பண்ணிட்டேன். அந்த சந்தோஷமான விஷயத்தை அப்பா கிட்ட நேர்ல சொல்லணும்னு தான் ஊருக்குக் கிளம்பி வந்தேன்… ஆனா அதுக்குள்ளார… “
தரையில் அப்படியே அமர்ந்து அவள் கண்ணீர் விட, அவளைத் தேற்றும் வழி தெரியாமல் நின்றான் திவாகர்.
💜💜💜💜💜
nice ithu ipo vera mari thirumbuthe papom ipo ava theramaiyanava ninachi pesi palaguvana nu