☆நீயென் காதலாயிரு☆
அத்தியாயம்-1
மூன்றடுக்கு கொண்ட திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வரவேற்பிற்கென்று, ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைக்க, வாசனை திரவியமான பன்னிர்ரோஸை ஊற்றினார். கூடுதலாக சந்தனத்தில் ஜவ்வாதும் கலந்து சிறுவிரலால் எடுத்து நெற்றியில் வைக்கும் பதத்திற்கு கலந்து கொண்டிருந்தார் பானுமதி.
பானுமதி-சிங்கமுத்து இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வம். முதலில் பிறந்தவன் சந்தோஷ். இரண்டாமானவள் சந்திரா. மூன்றாவது பெண் சந்தியா.
பானுமதியின் பெரிய மகள் சந்திராவுக்கு தான் திருமணம். அத்திருமணத்திற்கு தான் மண்டபமே உறவுகளால் களைகட்டியது.
எதிரே கண்ணாடியில் தன் முத்து பல்வரிசையின் இடையில் பூக்குத்தும் ஊசியை வைத்து, மல்லிப்பூவை சூடியவளாக ப்ரியதர்ஷினி தன்னிரு தோளிலும் சரிப்பாதியாக சூடி அழகுப்பார்த்து “அத்தை நான் எப்படியிருக்கேன்?” என்று பானுமதியிடம் கேட்டாள்.
பானுமதி கணவர் சிங்கமுத்துவின் ஒன்றுவிட்ட தங்கை கவிதாவின் மகளான ப்ரியதர்ஷினியை இந்த அவசரத்திலும் நின்று நிதானமாக அளவிட்டார்.
“உனக்கென்னடி எதுனாலும் அழகு தான். என் பையன் எடுத்து தந்த பட்டுசேலையில கூடுதலா அழகா தெரியுற” என்று வாய்நிறைய மருமகளாக பாவித்தே பானுமதி கூறினார்.
பானுமதிக்கு கவிதாவின் மகள் ப்ரியதர்ஷினியை தன் மகன் சந்தோஷிற்கு மணக்க விருப்பம் இருக்கின்றது. அதனாலேயே ப்ரியதர்ஷினி மீது தனி ப்ரியமுண்டு.
ப்ரியதர்ஷினிக்கு அப்படி எதுவும் எண்ணத்தை வைத்து ஆசை வளர்க்க விருப்பமில்லை. அம்மா கவிதா தந்தையை இழந்தப்பின் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதை கண்கூடாக பார்ப்பதால் சின்ன சின்ன ஆசைகளோ, பேராசையோ எதையும் அவளிடம் அணுகவிடுவதில்லை.
“என்னடி உங்க அக்கா மாமா எப்ப வர்றாங்க? நேத்து ரிஷப்னுக்கு வந்துட்டு, தங்கிட்டு போகாம பைக்ல புருஷனோட கிளம்பிட்டா. ஆரத்தி எடுக்க அவளும் வரவேண்டாமா?” என்று ப்ரியதர்ஷினியின் அக்கா யமுனாவை பற்றி கேட்டார்.
யமுனாவிற்கு ஆறுமாதத்திற்கு முன் தான் ராஜா என்பவரோடு திருமணம் முடித்து வைத்தார் கவிதா.
அதனால் ரிஷப்ஷனுக்கு வந்த யமுனா இங்கு தங்காமல் இரவே கணவரோடு சென்றுவிட்டாள். திருமணத்திற்கு அவளை இன்னமும் காணவில்லை.
ப்ரியாவோ “போன் போட்டு எங்கிருக்கானு கேட்கறேன் அத்தை.” என்று பதில் தந்தவளிடம், “ஒரு நிமிஷம் டி. இந்த சந்தனத்தை வரவேற்பில் வச்சி, வந்தவங்களை வாங்கன்னு வாய்நிறைய கூப்பிடு. நான் இந்த புடவை கொசுவத்தை சரிபண்ணிட்டு வந்துடறேன்.” என்றதும் சந்தன கிண்ணத்தை எடுத்தவள், கண்ணாடியில் மோதிரவிரலில் சிறிதளவு எடுத்து அளவாய் நெற்றியில் சந்தனத்தை கோடியிழுத்து முடித்தாள்.
சடுதியில் “ஆ.” என்று கண்ணாடி டிரஸிங் டேபிளில் இடித்து கொண்டாள். “ஏன்டி கண்ணை மூடிட்டு ஐ-லைனர் வச்சிட்டு இருக்கறது என் பொண்ணு. நீ என்ன இடிச்சிட்டு இருக்க, சேலைக்கட்டிட்டு பூவச்சிட்டு அழாகாயிருக்க. கண்ணுப்பட்டுடப் போகுது ஒருயிடமா உட்காரு.” என்று உரிமையாய் அதட்டும் போட்டார்.
“அத்தமகளுக்கு கல்யாணம், உட்காரணுமாமே… போங்கத்தை” என்று சந்தன கிண்ணத்தை எடுத்து கொண்டு மண்டப வாசலுக்கு சென்றாள்.
”நான் போய் இந்த சந்தனத்தை வச்சிட்டு ஷோகேஸ் பொம்மையா உட்கார்ந்துக்கறேன்.” என்று செல்லும் போது முனங்கினாள்.
அங்கிருந்த கற்பகமோ “அம்மாடி விலாசினி அங்க தான் இருப்பா. அவளையும் இழுத்துட்டு போ” என்று கூறினார்.
“கண்டிப்பா சித்தி.” என்று ப்ரியதர்ஷனி சிட்டாய் பதிலுரைத்துவிட்டு பறந்திருந்தாள்.
கற்பகமும் சிங்கமுத்துவின் சித்தி மகள் ஒன்றுவிட்ட தங்கையே.
கற்பகத்திற்கும் மகள் விலாசினி, மகன் கண்ணன் உண்டு. தங்கை கணவர் ஆறுமுகம் என்றால் சிங்கமுத்துவிற்கு ப்ரியம். கவிதாவின் கணவர் தான் இறைவனடி சேர்ந்தாரே! அதனால் கற்பகத்தின் கணவர் ஆறுமுகம் சற்று நெருக்கமனவர்.
“கண்ணை திறக்கட்டுமா?” என்று ப்யூட்டிஷனிடம் கேட்டாள் சந்திரா.
“சேலை கட்டிட்டலாம் பிறகு நகையை போடலாம்” என்று அலங்காரம் செய்ய வந்தவர்கள் தங்கள் பணியை தொடர்ந்தார்கள்.
சந்தனத்தை ரோஜா, கல்கண்டு இருக்கும் இடத்தில் வைத்தவள் வந்தவர்களை ‘வாங்க சித்தப்பா வாங்க மாமா, வாங்கத்தை, வாங்க பெரிம்மா, வாங்க மதினி, என்று வாய்நிறைய தன் அத்தை சொல்லித் தந்தது போலவே அழைத்தாள்.
சிங்கமுத்துவோ “சந்தோஷை பார்த்தியா ப்ரியா?” என்று தன் பருத்த உருவத்தோடு வந்தார்.
“இல்லிங்களே மாமா.” என்றாள் பணிவாக.
அங்கே சந்தியா நின்றிருக்க “அப்பா அண்ணன் இந்திரஜித் அண்ணாவை கூட்டிட்டு வர பஸ் ஸ்டாப் போயிருக்கார்.” என்றுரைத்தாள்.
“அட ஆமால… இந்திரஜித் வர்றானோ, சரிம்மா வந்ததும் உங்கண்ணாவை என்னை வந்து பார்க்க சொல்லு” என்று மற்ற பணியை கவனிக்க ஓடினார்.
முகூர்த்தம் ஒன்பது-பத்து, தற்போது மணி ஆறுமுப்பது என்பதால் ஆளாளுக்கு பம்பரமாய், பட்டாடை உடுத்தி உறவுகளில் கேலி, கிண்டல், பேச்சு என்று ஒவ்வொருத்தராய் வந்து மண்டபத்தின் இருக்கையை நிறைத்தார்கள்.
“அய்யா… அண்ணன் வந்துடுச்சு” என்றாள் சந்தியா. வாசல் பக்கம் எட்டிபார்த்த ப்ரியதர்ஷினியோ “சந்தோஷ் வந்துட்டாரா?” என்று விழியை உருட்டினாள். பெரிய தங்கை திருமணம் இந்த நேரத்திலும் நண்பனை அழைத்து வர போயிருக்கின்றாரே என்று யாரை அழைத்து வந்தார் என ஆவலாய் தேடினாள்.
அவள் தேடலை வீணாக்காமல் சந்தோஷ் ஒருவனை கைப்பிடித்து அழைத்து வந்தான்.
பார்க்க மலையாள நடிகர் போல ஜம்மென்று இருந்தான் அவன். மூக்கும் முழியும் அளவாய் ரசிக்க தூண்டும் விதமாக இருந்தவனை, “இந்திரஜித் இது தான் என் குட்டி தங்கை சந்தியா. இவ என்னோட அத்தை பொண்ணு ப்ரியா. அவ விலாசினி” என்று மூவரையும் வரிசையாக அறிமுகம் செய்தான்.
“ஆங்.. ப்ரியா இல்லை ப்ரியதர்ஷினி” என்று மாமன் மகனிடம் தன் பெயரை நீட்டி முழக்கினாள்.
இந்திரஜித் என்பவனோ “ஹலோ ப்ரியா, ஹாய் விலாசனி” என்றான் வேண்டுமென்றே.
“டேய் விலாசினிடா.” என்று சந்தோஷ் காதை கடித்தவனாக இந்தரிடம் கிசுகிசுத்தான்.
“ஏதோவொன்னு விடுடா. ஏங்க சந்தனம் நீட்டணும், பன்னீர் தெளிங்க” என்று கேட்டு பெறவும், விலாசினி பன்னீரை தெளித்தாள்.
ப்ரியாவோ ‘ஆளைப்பாரு ஏதோவொன்னு விடுனு கலாய்க்கறதை. இவன் பெயரை தப்பு தப்பா உச்சரித்திருக்கணும்’ என்று பொறுமியபடி சந்தனத்தை முன் நகர்த்தினாள்.
“அதென்ன வந்தவங்களை எல்லாம் வாய்நிறைய முறை வச்சி அன்பா கூப்பிட்டு, சந்தனத்தை நீட்டி அழகா சிரிச்சிங்க. எனக்கு மட்டும் உற்றுனு வச்சிட்டு சந்தன கிண்ணத்தை முன்ன நகர்த்தறிங்க. அன்பா சிரிச்சிட்டே எடுத்துக்க சொல்லுங்க” என்று ப்ரியாவிடம் எவ்வாறு வரவேற்பது என்று பாடம் நடத்தினான்.
சந்தோஷ் அடிக்கடி தன் தோழன் இந்திரஜித்தை பற்றி வீட்டில் குறிப்பிடுவான். கல்லூரி நண்பன் நெருங்கி பழகும் ஒரே ஆள் என்று. அவன் இப்படியொருவனா?! என்ற அதிருப்தியை காட்டினாள் ப்ரியதர்ஷினி.
ப்ரியதர்ஷினியோ இந்திரஜித்தையும் சந்தோஷையும் மாறிமாறி பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
“என்னடா இப்படி பண்ணிட்ட. அவ இப்படி வரவேற்க நிற்கறதே அபூர்வம் இதுல ஓடவச்சிட்டியே.” என்று சந்தோஷ் கவலைக் கொண்டான்.
“அய்யோ அண்ணா அவ யமுனா மதினி, ராஜா அண்ணாவை வரவேற்க ஓடறா” என்று சந்தியா சுட்டிக்காட்டி கூறியதும் நிம்மதியடைந்தான்.
“ஓகேடா இதான் மாடில இருக்கற ரூமோட கீ. அங்க போய் தயாராகிட்டு வா.” என்று சாவியை கையில் கொடுத்துவிட்டு சென்றான் சந்தோஷ்.
இந்திரஜித் கையிலிருந்த சாவியை பேண்ட் பேக்கெட்டில் போட்டு ப்ரியதர்ஷினியை கவனித்தான்.
“என்ன அக்கா நீயே லேட்டா வந்தா எப்படி? அத்தை பீல் பண்ணாது.” என்று இழுத்து இவனை கடந்து சென்றாள்.
அவள் கடந்திடும் போது ஒரு வித பூவாசம் அவனை ஆட்டுவித்தது.
பெண்ணவளின் நளினமாய் கட்டிய சேலை, நகை, பூ என்று சேர்ந்து புன்னகையும் உதட்டில் விரிய, அவளை பார்த்துக் கொண்டேயிருக்கும் பேராவல் இதயத்திற்குள் இனித்தது.
திருமணம் என்றாலே கண்ணுக்கு அழகான மங்கைகளை கண்டு ரசிக்கும் காளையர்கள் கூட்டம் இல்லாமலா?
தேவலோகத்தின் மங்கைகள் எல்லாம் உலா வருவது இது போன்ற விழாக்களில் தானே.!? மற்ற நேரங்களை விட அதென்னவோ திருமணக்கூட்டம், ஊர் கோவில் திருவிழாக்கூட்டம், என்று இத்யாதியான நாட்களில் பெண்கள் பேரழகு தான்.
அதனால் தான் என்னவோ பெரும்பாலான குடும்பங்களில் பெண் பார்க்கும் வைபோகம் திருமண மண்டபத்தில் பெண்ணுக்கு தெரியாமலேயே அமைத்துக் கொள்கின்றனர் பெற்றோர்கள்.
இரு குடும்பங்கள் பேசி முடித்து அதன் பின்னரே சம்மந்தப்பட்டவர்களான மாப்பிள்ளை, பெண்ணை இருவரையும் பெண்பார்க்கும் நிகழ்வில் சந்திக்க வைக்கின்றனர்.
அப்படி தான் சந்திரா திருமணத்திற்கு வந்தவர்களில், தூரத்து உறவில் இருந்த மதினி ஒருவர், ப்ரியதர்ஷினியை சுட்டிக்காட்டி, “இந்த பொண்ணு என்ன படிச்சிருக்கா? அப்பா அம்மா யாரு? எப்படி சொந்தம்? என்று ஆரம்பித்து என் நாத்தனார் மகனுக்கு பொண்ணு பார்க்கறாங்க இந்த பொண்ணை கேட்டா கட்டி வைப்பாங்களா? கட்டிக்கற முறை தானா?” என்று நேரங்காலமில்லாம் பானுமதியிடமே கேட்டார்.
வேறு யாரிடமாவது கேட்டிருக்கலாம். மணப்பெண் தாயாருக்கு ஆயிரம் வேலையிருந்தது. ஆனாலும் பானுமதியிடமே கேட்டதும், “அய்யோ மதினி அவளை சந்தோஷுக்கு பேசி வச்சிருக்கு. சந்திரா கல்யாணத்துக்கு பிறகு சந்தோஷுக்கு முடிக்கணும்.” என்று இந்த ஆயிரவேலைகளுக்கும் இடையில் பதில் கூறினார்.
பானுமதி இப்படி கூறவும் கற்பகம் அதனை கேட்டவராக, “ஏங்கண்ணி சந்தியாவுக்கு கல்யாணம் முடிச்சிட்டு தானே சந்தோஷுக்கு கல்யாணம் பண்ணப்போறதா நினைச்சேன்” என்று தன் ஐயத்தை கேட்டார்.
“அட ஆமாங்க அண்ணி. இப்ப பேசினவங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. நாம பிறவு பார்க்கறதா பேசினா அவங்க முந்திப்பாங்க. அதான் சொல்லி வச்சேன். யாருகண்டா சந்தியா படிப்பு முடிய நேரமிருக்கு. பையன் கல்யாணம் முடிச்சாலும் நல்லா தான் இருக்கும். கவிதாவுக்கும் இரண்டு மகளை கரையேத்தி விட்ட திருப்தியடைவா?” என்று போகின்ற போக்கில் உரைத்துவிட்டு வந்தவர்களை கவனிக்க ஓடினார்.
மேடையில் ஆளுயறத்துக்கு இருந்த விளக்கை சந்தியா ப்ரியதர்ஷினி ஆளுக்கு ஒன்றை ஏற்றியபடி இருந்தார்கள்.
இந்திரஜித் தலைகேசத்தை அடக்கி பின்னங்கழுத்தை கோதியபடி, இருவரையும் நெருங்கும் சமயம், “சந்தியா நான் சந்திரா அண்ணியை பார்க்க போறேன். விலாசினி நீ இந்த திரியை ஏத்திடு” என்று ஓடவும் இந்திரஜித்திற்கு காற்று பிடுங்கிய பலூனாக முகம் சோர்ந்தது.
சந்திராவை அலங்கரித்து சேலையும் கட்டிவிட்டு தேவதையாக ஏசிக்கு பக்கத்திலேய மெத்தையில் வீற்றிருக்க வைத்தார்கள்.
“ப்ரியா உங்க வீட்லயிருந்து உங்க அம்மா, அக்கா, மாமா வந்துட்டாங்களா?” என்று கேட்டார் பானுமதி.
“வந்துட்டாங்க அத்தை. அம்மா அக்கா கூடயிருக்கு. இங்க வரச்சொன்னேன். நான் வரலைடி தீர்க்க சுமங்கலி யாராவது கூடயிருக்கட்டும். நான் வந்து ஏதாவதுன்னா மனசு சங்கடமாயிடும். அதோட அக்கா-மாமா தனியா இருக்க நான் பேசிட்டுயிருப்பேன்னு சொல்லிட்டாங்க.” என்று சந்திரா மதினிக்கு திருஷ்டி பொட்டுயிட்டு ரசித்தாள்.
“அதுசரி இன்னமும் உங்கம்மா திருந்தமாட்டா. நாம சொன்னா வாதம் பண்ணுவா. அவளை விட்டு தள்ளு.
இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரத்தி தட்டு எடுக்கணும்.
அப்பறம் அது முடியவும், சந்திராவை மேடைக்கு கூப்பிட்டா கைப்பிடிச்சி கூட்டிட்டு வாடி கண்ணு” என்று பானுமதி ப்ரியதர்ஷினி தாடை பிடித்து கொஞ்சி சென்றார்.
“ஆகட்டும் ஆகட்டும். எல்லாரும் வெளியே போங்க. கசகசன்னு பொண்ணு ரூம்ல” என்று அங்கே ஓடிவிளையாடிய நண்டு சிண்டையெல்லாம் விரட்டினாள்.
ஏசியறையில் ஒளிந்துக்கொண்டு சுகமாய் ரசித்த பொடிசுகளோ வேறுவழியின்றி வெளியேறினார்கள்.
ப்யூட்டிஷன்களும் பணத்தை வாங்கிவிட்டு வெளியேற மணப்பெண்ணும் ப்ரியதர்ஷினியும் இருந்தார்கள்.
மண்டபத்தின் ஒலிப்பெருக்கி உதவியால் மத்தளம் நாதஸ்வரம் என்று செவியை தாக்கியது.
ஆரத்தி எடுக்கும் நேரம் சந்தியா அழைக்க, மணமகளை விட்டுவிட்டு சிட்டாய் ஓடினாள் ப்ரியா. தன் அக்கா யமுனாவையும் கூடவேயிழுத்து, செய்து வைத்த அலங்கார தட்டு ஒன்றை மாப்பிள்ளையின் முன் சுற்றப்பட்டு பரிசும் பெற்று திரும்பினார்கள்.
ஆரத்தி எடுத்த தட்டை ஒரு கையில் வைத்தபடி, மறுகையில் பரிசு பெட்டியை பிரிக்க, பரிசுப்பெட்டியோ கீழே விழப்போனது.
“என்ன அவசரம்? மெதுவா ரூமுக்கு போய் பிரிக்கலாம். தங்கமா கொட்டி கொடுத்திருக்க போறார்.” என்றது இந்திரஜித் குரல்.
“தங்கத்தை நானே எடுத்துப்பேன். உங்க வேலையை பாருங்க” என்று நொடித்தாள் தர்ஷினி.
தர்ஷினி முகம் கடுகடுக்க, ஏனோ அதுகூட அழகானதாக இந்திரஜித் பார்வைக்கு தெரிந்தது.
மணமகள் அறைக்கு வந்த ப்ரியதர்ஷினியோ “இன்னும் சிலநேரத்தில சந்திரா சிங்கமுத்து, சந்திரா மகேஷ்வரன்னா மாறப்போறிங்க” என்றதும் சந்திரா வெட்கம் கொள்ளவும், பரிசை காட்டினாள். சின்னதாய் அழகான மேக்கப் கிட் கிடைத்தது.
அதனை பார்த்து பேசிக்கொண்டிருக்க ‘பொண்ணை கூட்டிட்டு வாங்க’ என்ற வசனம் மூலைக்கு ஒன்றாக வரவும், அதேகணம் “அம்மா அக்காவை கூட்டிட்டு வரச்சொன்னாங்க.” என்று சந்தியா வந்தாள்.
சந்தியா ப்ரியதர்ஷினி இருவரின் கைபற்றி சந்திரா மெதுவாய் தலைகவிழ்ந்து நடந்துவந்தாள்.
கெட்டிமேளத்தாளமும் நாதஸ்வர ஒலியையும் மீறி ஆங்காங்கே கூட்டங்களின் பேச்சும் சலசலத்தது.
“சேலை நல்லாயிருக்கு?”
“தலையலங்காரம் பரவாயில்லை.”
கொஞ்சம் பொண்ணு உப்பசமா இருக்கோ?”
மாப்பிள்ளைக்கு கலரான பொண்ணு தான் அமைஞ்சிருக்கு”
சீக்கிரம் தாலிகட்டுங்கப்பா பந்திக்கு போகணுமா வேண்டாமா?”
“முகூர்த்த நேரம் நெருங்குது.” என்ற இத்யாதியான வார்த்தை மொழிகளை கடந்து அக்னியருகே மணமகன் அருகே அமர்ந்தாள் சந்திரா.
ஐயர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து கொடுக்க, பூமழைத்தூவ, மகேஷ்வரன் கரங்களால், உறவுகளின் ஆர்ப்பாட்ட சத்தத்தில், கெட்டிமேளம் கெட்டிமேளமென்ற குரல் கொடுத்த அடுத்த நிமிடம் மத்தளம் பெரிசா நாதஸ்வரம் பெரிசா என்று வெளுத்து வாங்கியபடி சத்தத்திற்கு நடுவே, பொன் மாங்கல்யத்தை சந்திராவிற்கு அணிவித்து முடித்தார் மகேஷ்வரன்.
ஒரு வழியாக முதல் கடமை முடிந்த நிம்மதியில் பானுமதி-சிங்கமுத்து மகளை கண்ணுற்று பூரித்து மகிழ்ந்தனர்.
இந்திரஜித் பூக்களை தூவியவன் எதிரே மலர்ந்த புன்னகையோடு ப்ரியதர்ஷனியை ஏறிட்டான்.
அவள் காணும் நேரம் பார்வையை சடுதியில் மாற்றி நண்பனை காண அவனோ மாப்பிள்ளையின் தலையிலிருந்த மஞ்சளரிசியை தட்டிவிட்டு நின்றான்.
திருமணம் முடிந்ததும் மற்றொரு மேடை தயாராகியிருக்க, அங்கே மணமகன் மணப்பெண்ணை கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அங்கு தான் இனி போட்டோஷூட் நடைப்பெறும் மேலும் வந்தவர்கள் குடும்ப சகிதம் புகைப்படம் எடுக்கவும் பந்திக்கு செல்லவும் கூட்டம் அலைமோதியது.
அதன் பின் ஏகப்பட்ட இனிய கலாட்டாக்கள், சற்று நேரத்திற்கெல்லாம் பால்பழம் புகட்ட, மணமகள் அறைக்கு புதுமண தம்பதிகளை அழைத்தார்கள்.
மகேஷ்வரனும் சந்திராவும் பால் பழம் அருந்தும் நேரம் பானுமதி மகளின் கழுத்தில் இருந்த நகையை கவனித்தார்.
“ஏன் சந்திரா அண்ணன் வாங்கிக்கொடுத்த ஆரம் போடலையா?” என்று மகளின் கழுத்தில் இல்லாததால் பார்த்து கேட்டார். சந்தோஷ் தங்கை திருமணத்திற்கு என்று அவனாக சேர்த்து வைத்து வாங்கிய ஆரம்.
“ப்யூட்டிஷன் தான் இந்த நகை போடச் சொன்னாங்கம்மா. அந்த நகையை அப்பவே பாக்ஸில போட்டு வச்சிட்டேன்.” என்று குறிப்பிட்டாள்.
பானுமதிக்கு பகீரென்ற உணர்வு மூன்று சவரன் நகை. “எங்கடி வச்ச?” என்று பதறியவர் மருமகன் இருக்க கண்டு இயல்பானார்.
சந்திரா சொன்னா இடத்தில் நகைப்பெட்டியை தேட அந்த கப்போர்ட் காலியாக வரவேற்றது.
மகளை தனியாக அழைத்து “நகையை எங்கடி வச்ச?” என்று மெதுவாக கிசுகிசுத்தார்.
“இந்த கப்போர்ட்ல தான் அம்மா வச்சேன்.” என்று கூறி அந்த கப்போர்ட்டை துழாவினாள்.
வெற்றிடமாக காட்சியளிக்க அன்னையை கண்டு அதிர்வுற்று நின்றாள்.
பானுமதியோ “நீ டென்ஷன் ஆகாத, நான் தேடறேன்.” என்று அனுப்ப சந்திரா தயங்கி கவலையோடு மகேஷ்வரனோடு மேடைக்கு நடந்தாள்.
பானுமதி அறையில் ஒவ்வொரு கப்போர்டும், ஷெல்பும் தங்கள் கொண்டு வந்த உடைமைகளையும், பெட்டியையும் அலசினார்.
சந்தியா வரவும் அவளிடம் நகையை தேடக்கூறினாள். எந்தயிடத்திலும் கிடைக்காமல் போகவும், அந்த அறையிலிருந்தவர்களுக்கு கதிகலங்கியது.
ப்யூட்டிஷன் எடுத்து சென்றனரோ என்ற ஐயம் துளிர்த்தது. நகை காணாமல் இருக்க அவ்விஷயம் ஒவ்வொருத்தராக பரவ ஆரம்பித்தது.
ப்ரியதர்ஷினிக்கு தெரியவந்ததும், தன் அத்தையிடம் “சத்தமில்லாம தேடுங்க அத்தை. யாராவது அபசகுணமா நினைக்கப்போறாங்க. அதோட மகேஷ்வரன் அண்ணா வீட்டு ஆட்கள் காதுல விழுந்திடப்போகுது” என்று கூறவும் சத்தமில்லாமல் அறையில் பத்து பதினைந்து முறைக்கு மேலாக தேடிவிட்டார்கள்.
‘இங்க யார்யாரு இருந்தா?’ என்ற கணக்கெடுப்பில் அன்னியர்கள் பக்கமே கவனம் சென்றது.
-தொடரும்.
-Praveena Thangaraj
கோடான கோடி நன்றிகள் பிரவீணாம்மா…
என்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை….
அவ்வளவு மகிழ்ச்சி…
அருமையான பதிவு
ஆரம்பமே அசத்தல் தான்