Skip to content
Home » நீயென் காதலாயிரு-6

நீயென் காதலாயிரு-6

அத்தியாயம்-6

    இருபது நாட்களுக்கு மேலாக, இந்திரஜித் தெரிந்தவர் தெரியாதவர் என்று, டிரஸ் டிசைனரை வேலைக்கு அமர்த்தும் இடங்களில் எல்லாம் ஒரு அலசு அலசிவிட்டான்.

   அதிலும் வேலை செய்யும் இடங்களில் சென்று ‘ப்ரியா’ என்ற டிசைனரை இருக்க, ஓடிச்சென்று பார்த்து ஏமாந்தது எல்லாம் ஏமாற்றத்தின் உச்சம்.
  
    பாவம் ப்ரியா என்றால் ஆயிரத்தெட்டு பெயர்களை கொண்டவர்கள் நடமாடுவதை காலதாமதமாய் உணர்ந்து சோர்ந்துப்போனான்.

    இந்திரஜித் இதில் கூடுதலாக சந்தோஷை போனிலேயே தொந்தரவு கொடுத்திருந்தான்.
   அதன் காரணமாக சந்தோஷ் விலாசினி வீட்டிற்கு படையெடுத்து ப்ரியாவின் அலைப்பேசி எண்ணிற்கு அழைக்க வற்புறுத்தினான்.
   பழைய எண் முற்றிலும் தொடர்பில் இல்லையென்றதும், அத்தையிடமோ, 
போன் போட்டு அவளை விசாரிக்க நச்சரித்தான்.

   “ஏன் இப்படி பண்ணறிங்க? என்னாச்சு? அவ உங்களிடம் ரொம்ப க்ளோஸ் ஆச்சே. என்ன சண்டை வந்தது?” என்ற ஏகப்பட்ட கேள்விக்கு “அவளிடம் பேசிட்டு சொல்லறேன் விலாசினி அத்தையிடம் அவ எங்கயிருக்கா? என்ன போன் நம்பர் யூஸ் பண்ணறானு கேட்டு சொல்லு” என்று குடைந்தெடுத்தான்.

    எப்பொழுதும் வீட்டுக்கு வந்தால் சோபாவில் இருந்த இடத்திலிருந்து அசையாத சந்தோஷ், சில நாட்களாக போனில் மகளிடம் பேசுகின்றான். இன்று மகளை அவசரமாக கைபற்றி மாடிக்கு அழைத்து நீண்ட நேரம் கதைப்பது கற்பகத்திற்கு உவப்பானதாகயில்லை.
  
    கீழியிருந்து “விலாசினி விலாசினி விலாசினி” என்று ஏலமிட்டு விட்டார்.

    அவள் “வர்றேன் அம்மா” என்று கத்திவிட்டு சந்தோஷிடமே பேசிக்கொண்டிருக்க கற்பகத்திற்கு சலிப்பு மூட்ட மூட்டுவலியோடு மாடிக்கு படியேறி வந்தார்.

    “ஏன்டி கூப்பிட்டுட்டே இருக்கேன். வந்தா என்ன? இந்த துணி மணி மடிச்சி வைக்கலாம்ல? மாடில தான் பேசணுமா?” என்று நாசூக்காய் திட்டி தொலைத்தார்.

   கற்பகம் அத்தை வந்ததும் சந்தோஷிற்கு ப்ரியதர்ஷினியை பற்றி கேட்க தயக்கம் பிறக்கவும், நழுவியபடி புறப்படுவதாக கீழிறிங்கினான்.

    சந்தோஷ் சென்றதும் கற்பகம் மகளை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்.

  “ஏன்டி அத்தனை முறை கூப்பிடறேன். அவனிடம் என்ன பேச்சு?” என்று திட்ட துவங்கினார்.

   “இல்லைம்மா சந்தோஷ் ப்ரியாவை பத்தி கேட்டார். ப்ரியா நம்பர் சுவிட்ச் ஆப் என்று வருதாம்.” என்று தலைசொரிந்து சொல்லி முடித்தாள்.

  “முன்ன உனக்கு நல்ல நாள் அதுவுமா மட்டும் வாழ்த்து சொல்வான்.
வரவர ரொம்ப நேரம் கால் பண்ணி மணிக்கணக்குல பேசறிங்க,
    பொது இடத்துல பார்த்தா கூட தெரிந்தவங்கன்னு காட்டிக்காம நழுவுவான். இப்ப அப்பா இல்லாத நேரமா பார்த்து மாடிக்கு கைபிடிச்சி இழுத்துட்டு போறான்.
   எனக்கு இதெல்லாம் சரியா தோணலை விலாசினி.

   பானுமதி அண்ணியும் சிங்கமுத்து அண்ணாவும் ப்ரியதர்ஷினியை எந்தளவு தலையில தூக்கி வச்சி ஆடினாங்கன்னு தெரியும் தானே? இப்ப என்ன காரணமோ தலையிலருந்த மண்சட்டி மாதிரி தூர வீசிட்டாங்க. அவளும் மனசொடிந்து போயிருக்கா. என்ன ஏதுனு ஒன்னும் தெரியலை. 
  
   இந்த லட்சணத்துல சந்தோஷ் வந்து இப்படி பழகறான். நாளைக்கு ஊரும் உலகமும் நாக்கு மேல பல்லை போட்டு பேசும்.

   செல்லமா மருமகளா பார்த்து வளர்த்தவளையே என்ன சொன்னாங்களோ? அவ கறிவிருந்துக்கும் மறுவீட்டு அழைப்புக்கும் வரலை.
   நீ எல்லாம் எந்த மூலைக்கு? எதுக்கும் சந்தோஷோட பார்த்து இரு. உங்கப்பாவை சொரிந்து விடாதே. அப்பறம் அந்தாளு தாம்தூம்னு குதிப்பாரு.” என்று அறிவுரைக் கூற விலாசினியோ ‘இப்ப என்ன செய்துட்டாங்க. இந்த அம்மா பக்கம் பக்கமா அறிவுரையை அள்ளி வீசறாங்க. சந்தோஷ் என்னை கண்டாளே ஓடியொளிவாறு. அவர் எதுக்கு என் மேல வேற தாட்ஸோட பழகப்போறார் ‘ என்று அன்னை பேசியதுக்கு தலையாட்டியபடி சிந்தித்தாள்.

         ஒரு மாதம் நிறைவடையும் நேரம் இந்திரஜித் சந்தோஷை துருவி விசாரிக்க, மீண்டும் விலாசினி முன் சந்தோஷ் நின்றான்.

   “விலாசினியிடம் ப்ளிஸ் அத்தை வீட்டுக்கு போய் ப்ரியாவிடம் பேசணும்னு நம்பர் மட்டும் வாங்கிட்டு வா. எவ்ளோ நேரம் உன்னை சந்திக்க வெயிட் பண்ணறேன் தெரியுமா? கொஞ்சம் உதவினா என்னவாம்” என்று உரிமையாக கடிந்தான்.

   “பச் சந்தோஷ் புரிந்துக்கோங்க அம்மா என்னவோ உங்களையும் என்னையும் சம்மந்தப்படுத்தி யாராவது பேசிடுவாங்கன்னு பயப்படறாங்க. நீங்க என்னடானா அடிக்கடி வந்து என்னிடம் ப்ரியாவை பத்தி கேட்கறிங்க.

  ஏன் இதுக்கு முன்ன என்னைக்காவது என்னிடம் இப்படி கால் கடுக்க நின்று காத்திருந்து பேசியிருக்கிங்களா? நான் எப்பவும் சைட் கேரக்டர் தானே. உதவிப்பண்ணுனு வந்து கேட்கறிங்க. என்னதான் உதவிப்பண்ணணும். அவளுக்கும் உங்களுக்கும் என்ன சண்டை? அதையும் சொல்லமாட்டிங்க. நான் என்ன உங்க இரண்டு பேருக்கும் நடுவுல தூதா இருக்கணுமா?” என்று இதுநாள் வரை பேசாதவன், தன்னிடம் பேச ஆசைப்பட்ட விலாசினிக்கு அவன் ப்ரியாவை வைத்தே பேசியதால் சலிப்படைந்தாள்.

 கையை கட்டி விலாசினியின் மூக்கு விடைக்கும் பேச்சை கேட்டவன் “உன்னிடம் தான் உரிமையா கேட்க முடியும் விலாசினி. ஏன்னா எனக்கு உன்னை தான் பிடிக்கும். ப்ரியாவிடம் இருந்தளவு உன்கூட நான் பேசியதில்லை. பேசாம இருக்கறதால உன்னை காதலிக்கலைனும், அவளிடம் ஓயாம பேசியதால அவளை காதலிக்கறேன்னும் அர்த்தமில்லை.  நான் உன்னை விரும்பறேன். அவ நட்பை மதிக்கறேன். ரொம்ப நாளா இதை சொல்லணும்னு இருந்தேன். உன்னை மாதிரியே எனக்கும் தயக்கமிருந்தது. இன்னிக்கு நீ பேசியதுல அது உடைஞ்சிடுச்சு. காதலுக்கு தான் தூது போகணும்னு இல்லை‌. நட்புக்கும் தூது போகலாம்” என்று கூறிவிட்டு அவள் ஸ்தம்பித்து நின்ற மௌன கோலத்தை கலைக்காமல் அவ்விடம் விட்டு பைக்கை உதைத்து கிளம்பிவிட்டான்.

     விலாசினிக்கோ ‘நான் இப்படி பண்ணிருக்க கூடாது. ப்ரியாவை சந்தோஷ் விரும்பாதப்போது நான் இப்படி பண்ணிருக்கவே கூடாது.
   சந்தோஷ் என்னை விரும்பறார் என்னை… ஆஹ் என்னை தான் விரும்பறார்’ என்று அவள் மனம் மெதுமெதுவாய் அந்த ஆனந்தத்தை உள்வாங்கி மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் சமயம் சந்தோஷ் இருசக்கரவாகனத்தில் பறந்துவிட்டதை தாமதமாக புத்திக்கு தெரிந்தது.

     இன்னிக்கு எப்படியாவது சித்தி வீட்டுக்கு போய் ப்ரியா எங்கன்னு கேட்டு பார்க்கணும்.

   ஒரு வேளை இவர் என்னை விரும்பறதா சொன்னதும் ப்ரியாவுக்கு கோபமாகி இவரிடம் பேசாம ஓடிட்டாளா? என்ற எண்ணம் தோன்றவும் ப்ரியதர்ஷினியை காண வேண்டும் என்ற உந்துதல் மனதை ஆக்கிரமித்தது.

   நேராக வீட்டிற்கு சென்று அன்னையிடம் சித்தி வீட்டுக்கு போக வேண்டி உள்ளது ப்ரியாவிடம் தன் கல்லூரி புத்தகம் ஒன்று கொடுத்திருப்பதாக கூறினாள்.

    கற்பகமோ முதலில் போக வேண்டாமென்று முடிவெடுக்க, கவிதா என்றாவது ஏன் விருந்துக்கு வரலை என்று கேட்டார்களா? என்று நொடித்து கொள்வாரோயென மகளோடு புறப்பட்டார்.

   ஒரு பக்கம் சந்தோஷ் காதலை உரைத்திருக்க, அதனை மனதிற்குள் எடுத்து செல்லாமல் ப்ரியதர்ஷினிக்கும் சந்தோஷிற்கும் சண்டையென்ன அறிந்தப்பின் எந்த விஷயமானாலும் மனதிற்குள் எடுத்து செல்வோமென முடிவுடன் இருந்தாள் விலாசினி.

   சந்தோஷிற்கு ஊரிலேயே வேலை. அதனால் போனில் இந்திரஜித்திடம் ”இன்னிக்கு ப்ரியதர்ஷினியை பத்தி பேசறப்ப விலாசினியிடம் என் காதலை சொல்லிட்டேன் இந்தர். ஆனா அவ கண்ணுல சந்தோஷம் பொங்கினாலும் அடுத்த செகண்ட் மறைச்சிட்டா.

    என்னவோ நானும் அங்க நிற்காம வந்துட்டேன். இப்ப விலாசினி என்ன மைண்ட் செட்ல இருக்கானு தெரியலை. இதுல ப்ரியாவை பத்தி அத்தையிடம் கேட்பானு உறுதியா சொல்ல முடியலைடா.

    இந்த லட்சணத்துல நீ அவளை விரும்பறதை சொன்னா ப்ரியா அக்சப்ட் பண்ணுவாளா? டவுட் தானடா. அதோட உங்க வீட்ல இந்த நகை விஷயத்தை எப்படி சொல்வ?” என்று எதிர்மறையான பதிலாக கூறினான் சந்தோஷ்.

  அனைத்தும் கேட்ட இந்தரோ, “சந்தோஷ் எதுக்கு இப்படி எதிர்மறையா பேசற? எங்கப்பா அம்மாவிடம் தர்ஷினியை பத்தி க்ளியரா பேசிட்டேன். அவங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. அவங்களுக்கு நான் விரும்பற விஷயமும் தெரியும். என் தேர்வு என்னைக்கும் தவறானதா இருக்காதுனு எங்கம்மா நம்பறாங்க.
  
  உன் லவ்வர் விலாசினி தர்ஷினியோட அம்மாவிடம் அவ எங்கயிருக்க என்ன பண்ணறா எதுனாலும் சொல்லாட்டி பரவாயில்லை. எனக்கானவள் ப்ரியதர்ஷினினு நான் நம்பறேன்.
 
   ப்ரியதர்ஷினி என் காதலை உடனே ஓகே சொல்லமாட்டா. அதுவும் உன் பிரெண்ட் என்றதால என்னை அலைய வைப்பா. அக்சப்ட் பண்ணற வரை படுத்தி எடுப்பா.

  எதுனாலும் முடிவுல தர்ஷினி பாஸிடிவ் பதில் தருவா. என்ன இந்த பிராஸஸ் எல்லாம் நடக்க நேரமெடுக்குது. அதான் கவலையாயிருக்கு. மத்தபடி இந்த நகை மேட்டர் பத்தி எனக்கு எந்த ஒபீனியனும் இல்லை.

    இந்த நகையை யாரோ வேண்டுமென்றே ப்ரியதர்ஷினி சூட்கேஸ்ல வச்சிருக்காங்க. அது யாருனு ஏதாவது யோசித்து பாரு. ப்ரியதர்ஷினியை பிடிக்காதவங்க உங்க வீட்ல யாராவது இருக்காங்களா? உங்க கற்பகம் அத்தை முதல் விலாசினி வரை   ப்ரியாவிடம் பேசறப்ப எல்லாம் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டாங்க.” என்றுரைக்க, ”அத்தையா? விலாசினியா” என்று சந்தோஷ் ஒருபக்கம் அதிர்ச்சியாக உச்சரித்தான்.

    “நான் யார் மேலயும் கன்பார்ம் பண்ணி பழியை போடலைடா  அதிருப்தியா இருந்தது போல தெரிந்தது. அவ்ளோ தான்.
   பழியை களைந்துட்டா ப்ரியதர்ஷினி கொஞ்சம் பெட்டரா இருப்பா. எதுக்கும் யார் அவ சூட்கேஸ்ல போட்டதுனு யோசிடா.” என்று இந்திரஜித் கூறவும் சந்தோஷிற்கு இந்த சந்தேகம் சிலர் மீது திரும்பியது.

    இந்திரஜித் போனை அணைத்து விட்டு, “தர்ஷினி எங்கடி போன?” என்று உச்சஸ்தாதியில் அந்த தெருவே திரும்பி பார்க்க கத்தினான். சிலர் திரும்பி பார்த்து நடையை காட்டினார்கள். அதெல்லாம் இந்திரஜித் கண்டுக்கவேயில்லை. 

    அப்பொழுது தான் அதே தெருவுக்கு வலது பக்கமிருந்த தெருவில் தள்ளுவண்டி கடையில் உணவை வாங்கிவிட்டு பணத்தை தந்த தர்ஷினியோ தன்னை சுற்றி அங்குமிங்கும் பார்வையால் அலசினாள்.
  
      தன்னுடன் வேலை பார்க்கும் சுதாவோ “என்ன ப்ரியா” என்றதும், “இல்லை சுதா யாரோ என்னை கூப்பிட்டது போல இருக்கு” என்றுரைத்தாள்.

     “யாரு கூப்பிடுவா? நீயே சென்னைக்கு புதுசு. கடைக்கும் இப்ப தான் வேலையில சேர்ந்த. உன்னை யாருக்கு தெரியும்.” என்றாள் கூட வந்த சுதா.

   “இல்லை சுதா கேட்டுச்சு. யாரோ ரொம்ப நெருக்கமானவங்க கூப்பிடற மாதிரி” என்று எட்டு திசையிலும் பார்வையை செலுத்தினாள்.

  “யாரும் இல்லை. எல்லாம் அவங்கவங்க வேலையில இருக்காங்க. வா சீக்கிரம் சாப்பிட்டு கடைக்கு போகணும். சின்ன கடை ஆனா சாப்பிட கூட நேரம் போதாது. ஆளுங்க துணி வாங்கறாங்களோ இல்லையோ இந்த துணி இருக்கா?அந்த துணி இருக்கானு அலப்பறை கிளப்புவாங்க.
   கடைசில இந்த டிஸைன்ல அந்த கலர் வேண்டும். அந்த கலர்ல இந்த டிஸைன் கிடைக்குமானு கேட்டு நம்ம வாயால இல்லனு சொல்ல வச்சி ஓடிடுவாங்க. நம்ம வேலையை பார்ப்போம் ப்ரியதர்ஷினி.” என்றதும் பணியில் தனக்கு சீனியர் என்றதில் வருத்தம் கலந்த சுதா பேச்சானாலும்  சகித்து கொண்டாள்.

   ப்ரியா சகித்து தான் வாழவேண்டும். இன்னும் அவளுக்கு நல்ல சம்பளம் வேலை என்று கிடைக்கவில்லையே.

    தனக்கான விடியலை தேடி தடையை உடைக்கும் பிம்பத்தில் தர்ஷினி தவித்திருந்தாள்.

-தொடரும்
Praveena Thangaraj
 

1 thought on “நீயென் காதலாயிரு-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *